ஸ்ரீவடாரண்யத்தின் மகிமையைச் சிவபிரானாற் சொல்லக் கேட்ட சுநந்த முநிவர், பெருமான் அதுக்கிரகித்தவண்ணந் தாண்டவதரிசனத்தை விரும்பி ஆங்கடைத்து தவத்திருந்தனர். அவ்வாறிருக்கையிற் கண்லுதல் கைவிரலணியாகிய கார்க்கோடகன், திருவிரலில் விஷத்தைக்கக்க, விடையூர்தி ''நம்மை மனத்திற் கரு தாது மமதையோடு நீ செய்த தீமைக்கத் திருக்கைலையை நீங்குக” என, நாகம் நடுங்கிப்பணிய, நாதன் "வடாரண்யத்தலத்திற் பல வாண்டுகளிருந்து அருந்தவம் புரியுஞ் சுசந்தருடன் சண்டதாண்டவத்தைத் தரிசித்துப் பிறகுவருதி'' என, கட்செவி கருடனுக் கஞ்சி முறையிட, இறைவர் ''இத்தீர்த்தத்தில் மூழ்கி ஆண்டுள்ள முத்திதீர்த்தத்தில் முளைக்க'' என, அரவு அவ்வாறே ஆலவன மடைந்து அருந்தவஞ் செய்யுஞ் சுநந்தரைக்கண்டு தொழுது தனது வரலாற்றைச் சொல்ல, சுநந்தமுநிவர் மகிழ்ந்து தன்பக்கலிற் றவமியற்றப்பணித்து, பழையபடி நெடுங்காலந் தவத்திருப்ப, முநிவரைப் புற்றுமூடி முடிமேல் முஞ்சிப்புல் முளைத்தமையால், அவர் முஞ்சிகேச முநிவரெனப் பெயர்பெற்றனர். இதுநிற்க:
நிசும்பன் சும்பன் என்னும் நிசாசாரிருவர் செய்துவருந் தீமையைப்பொறாத தேவர்கள், பார்வதியாரை நோக்கிப் பலகால் அருந்தவஞ்செய்ய, இறைவி இமையவர் முன் தோன்றி, "அமரரே! நீங்களவாவிய அடைவே அவர்களை யழிப்பேன்'' என்றருளிச்செய்து மலைச்சாரலை யடைந்து தவவடிவேற்று வசித்திருக்கையில், சண்டன் முண்டன் என்னுந் தானவரிருவர் சாம்பவியைச் சார்ந்து, "தார்குழலே! தனித்திருப்பானேன்; சாற்றற்கரிய வலியுடைய சும்பனிடஞ்சேர்க” எனச் சொல்ல, அம்பிகை "அருந்தவமாற்றும் யான் ஆடவரோடுரையாடேன். அரைக்கணத் தகலுமின்" என்றறைய, அவர்கள் சும்பாசுரன்பால், தேவியின் பொலிவை வியந்து செப்பி, அவனேவலாற் சில படையுடன் மீட்டுஞ் சென்றழைத்தும் வாராமை நோக்கி வலிதிற் கைபற்றி யீர்க்கக் கருதுகையில், விமலை வெகுளிகொள்ள, அம்மையார் தோளிலிருந்து அனேகஞ் சேனையும் ஒருசத்தியும் அவதரித்து, அவ்விருவரையுஞ் சேனையுடன் சங்கரித்தனர். ''சண்டனையு முண்டனையுஞ் சங்கரித்தமையாற் சாமுண்டியெனப் பெயர்பெற்றுத் தரணியோர் தொழவாழுதி'' என அச்சத்திக்கருளினர். அவற்றை யறிந்த நிசும்பன் - சும்பன் என்போர் அநேக அசுரருடன் ஆர்ப்பரித்து வந்து அம்மையை யெதிர்த்து அஸ்திரமாரி சொரிய, உமாதேவியார் தமதுடலினின்று ஸப்தமாதர்களையுஞ் சிவதூதியரையும் உதிப்பித்து யுத்தத்திற்கனுப்பி அவர்களால் அசுரச்சேனையை யழிப்பித்து, தாமே முதலில் நிசும்பனையும் பிறகு சும்பனையு மாய்த்தனர்.
ஆற்றலுடைய அவ்விரண்டு அசுரர்கட்கும் இளையாளாகிய குரோதி யென்பவள் பெற்ற இரத்தபீசன் தனதுடற்சோரியில் ஒரு துளி தரைமேல் விழுந்தால் அத்துளி தன்னைப்போலத் தானவனாமாறு வரம் பெற்றனன். அவன் இச்செய்தியறிந்து இமைப்பொழுதி லெதிர்த்தனன். அந்நிருதனுடன் ஸப்தமாதர்கள் சமர்கெய்கையில் உதிரத்துளிகட்கு ஒவ்வோர் உருவேற்றதுகண்டு ஓடிவந்து உமையம்மையோடுரைப்ப, தேவியார் சினமிகத் திருத்தோளினின்றுங் காளி தோன்றினள். ''பெண்ணே யான்! இரத்தபீசனைச் சங்கரிக்கையில் உதிரத்துளி யொன்றும் பூமியில் விழாமல் உன் கைக்கபாலத்தேந்தி யுண்ணக்கடவாய்" என்று பணித்து, அவளுதிரபானஞ் செய்துவர, இறைவியார் இரத்தபீசனை இமைப்பிலழித்து இமையவரை அவரவர் நாட்டிற்கேக விசைத்து, காளியைக் களிப்பித்து அவளுக்குச் சண்டியென்று பெயரும் தெய்வீகமும் சிவபெருமானிடம் நிருத்தஞ்செய்து அவர் பக்கலில் வசித்தலும் ஆகிய இவற்றை அநுக்கிரகித்து, ஸப்தமாதர்கட்கருள்செய்து, அந்தர்த்தானமாயினர். காளி அசுரருதிரமருந்திய ஆற்றலாலும், இறைவியாரிடம் பெற்ற வரத்தாலு இறுமாந்து மாமிசம் நிண முதலியவற்றைப் புசித்து, மோகினி இடாகினி பசாசு பூதங்கள் புடைசூழ ஒரு வனத்திலிருந்து மற்றொரு வனத்திற்குப் போய் உலக முழுவது முலவிவடாரண்யத் தருகில் வந்து யாவரையுந் துன்புறுத்தி வாழ்ந்திருந்தனள். இஃதிவ்வாறிருக்க,
ஒருநாள் திருவாலங்காடு சென்ற நாரதமுநிவருக்குக் காளியின் தீச்செயல்களைக் கார்க்கோடகமுநிவர் கூற, நாரதர் கேட்டுச் செல்லுமளவில், காளி விழுங்கவர, அவர் கரந்து சென்று விண்டுவைக்கண்டு விஷயத்தை வாய்விண்டனர். திருமால் சிவபிரான்பால் திருவிண்ணப்பஞ்செய்ய, இறைவர் ''இப்பொழுதே அக்காளியின் வன்மைகுன்ற வடவனமடைவோம்'' என்று கூறி, சுநந்த முநிவர் கார்க்கோடக முநிவர்கட்குக் கருணை செய்யக் கருதி ஆலவனமடைந்தனர்.
மாதேவன் வயிரவவடிவு கொண்டமையின், உடன்வந்த பூதகணங்களுடன் காளியின் சேனை எதிர்த்து ஆற்றாது, காளிக்கறைய, அவள் அமர்க்கோலங் கொண்டுவந்து ஐயனைக்கண்டு பயந்து “நிருத்த யுத்தஞ்செய்வோம்" என நிகழ்த்த, முன்னோனிசைந்து முஞ்சிகேச கார்க்கோடகர்கட்குத் தரிசனந்தந்து திருநடனத்துக் குத் தேவருடன் வந்தனர். அக்காலத்து அமரர் அவரவர்கட்கிசைந்த பல வாத்தியங்களை வாசித்தனர். அநவரதம் - அற்புதம் - இரௌத்ரம் - கருணை – குற்சை – சாந்தம் - சிருங்காரம் – பயம் – பெருநகை - வீரியமென்னும் நவரசங்களும் அபிநயமும் விளங்க வாத்தியங்கட்கொப்பப் பாண்டரங்கமாகிய சண்டதாண்டவத் தைக் காளியுடன் செய்கையில், கருணாநிதியின் திருச்செவியிலிருந்த குண்டலமா னது நிருத்தவேகத்தால் நிலத்தில் நழுவ, அதை இறைவரே திருவடி யொன்றினா லெடுத்துத்தரித்துத் திருத்தாண்டவஞ் செய்து காளியைத் தோல்வியடையச் செய்தனர். அவள் செயலற்று நாணிப் பணிந்தனள். அருள்வல்லல் "ஈண்டோர் சத்தியா யிருத்தி" என அநுக்கிரகித்து இருமுநிவரும் எண்ணில்லா அடியார்களும் தமது தாண்டவக்கோலத்தைச் சர்வகாலமுந் தரிசிக்கும்படி ஆண்டு வீற்றிருக்கின்ற னர்.
இக்காரணத்தா லிறைவர் சண்டதாண்டவமூர்த்தி யெனப் பெயரெய்தினர்.
“இன்சுவை பொழியுஞ் சாய லபிநய மிலங்கச் செவ்வாய்
புன்சிறு முறுவல் பூப்பப் புரணவா னந்தம் பூரித்
தன்புறு மவையோ ருள்ள மயர்தர வியங்கட் கேற்ப
வின்படு நடனங் காளி யோடரன் விளைத்த வேலை.
மடிதரு முலக மென்ன வயங்கரு ணல்கி மெல்ல
வடிபெயர்த் தாடல் செய்ய வருகுறுங் காளி நோக்கி
யொடிவுறு நாணின் மேவி யொளிமுக மிறைஞ்சி யொல்கி
வடிவுறு பாவை போலச் செயலற மயங்கி நின்றாள்.’’
சண்டதாண்டவமூர்த்தயே நம: