logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-bramma-sirachedha-murthi

ப்ரம்மசிரச்சேத மூர்த்தி

ப்ரம்ம சிரச்சேத மூர்த்தி
ப்ரம்ம சிரச்சேதமூர்த்தி

முன்னொருநாளிற் பொன்மலையாகிய மேருகிரியின் மேலுள்ள ஒருசிகரத் திற் பிரமதேவனும் விஷ்ணுமூர்த்தியும் வீற்றிருக்கையில், கணக்கில்லாத தேவரும் முனிவரும் வந்து வணங்கிக் கைகுவித்து "திரிமூர்த்திகளில் முதன்மையுற்றோரும், ஆதிமத்தியாந்த மற்றவரும், சமஸ்த ஜீவான்மாக்களிடத்தும் அந்தரியாமியா யுள்ள வரும் யாவர்? நீங்களிருவருமாக இயம்புங்கள்'' எனப் பிரார்த்திக்க, ஆதிதேவனருளா லன்றிப் போதலில்லாத மாயையின் பிணிப்புற்று வருந்தும் பசுக்களாகிய பிரம விஷ்ணுக்கள் இருவருங் கன்மவசத்தால் இறுமாப்புற்றனர். அப்பொழுது அயன் "அத்தகைய பிரமம் யான்” என, நாரணன் ''நானேயுனைப் பெற்றேனாதலின் நான் தான் பிரமம்'' என, ஒருவரோடொருவர் உரைத்து எண்ணில் காலம் இகல்மொழிபேசி எரிசித்தவிழித்துத் தருக்கஞ்செய்யக் கண்டதேவர் முநிவர் "நம்மாலிவர் இத்தகைய பகைமை கொள்வானேன்” என்று தத்தமிடஞ்சார்த்தனர்.

தேவர் முதலியோர் சென்ற பின்னும் இருவரும் மமதை மாறாதவராய் வழக்கிட்டுச் சண்டை செய்கையில் வேதமும் பிரணவமும் வெவ்வேறுருக்கொண்டு வந்து ''பிரமவிஷ்ணுக்களே! வீண்வாதெற்றுக்கு சர்வபரிபூரணராகிய சிவபெருமானே பரம்" எனத் தனித்தனிசாற்றவுங் கேளாதவர்களாய் மீண்டுஞ் சண்டைசெய்கையில், ஆண்டவர் அவர்கள் வழக்கையொழிக்கச் சோதியுருவாய் நிற்க, இருவரும் ஏதோ சுடரென்றிருக்க, எம்பிரான் அதன் நடுவே உமாதேவியாருடன் திருக்கைலாயத்தில் வீற்றிருப்பதாக வடிவுகாட்ட, விண்டுகண்டு விடையூர்தியென் றுட்கொண்டு நில மிசைத்தாழ்ந்து துதித்து நின்றனன். மலரோன் மலமுதிர்ச்சியால் மதியாமல் நடுச்சிரத்தால் நக்கனை யிகழ்ந்து பேசினன். எல்லாவுலகங்களும் இமைப்பில் எரியுமேயென்றுகருதி, சிவபெருமான் சிறிதுஞ் சினங்கொண்டிலர். எண்கண்ணன் இறுமாப்பொழியவும் மற்றைய வானவர் மதர்ப்பு நீங்கவும் மகாதேவன் மனதிற் சிந்திக்க வைரவக்கடவுள் தோன்றினர். ''சிறுவனாகிய பிரமன் சிரங்களைந்தில் நம்மையிகழ்ந்த நடுச்சிரத்தை நகநுதியாற்கொய்து கரத்திலேந்தி அவனுக்கு உயிர்ப்பிச்சையளித்து, தேவர் முநிவர் நகரங்கடோறுஞ்சென்று, உதிரப்பலியேற்று இரத்தப்போக்கா லிறந்தோரையெழுப்பி யாவரகந்தையையு மழித்து அண்டகடாகத் தின் மேலடைந்திரு” வென்று ஆஜ்ஞாபித்து பரமன் சோதியிற்கூடிப் பண்டுபோல் வீற்றிருந்தனர்.

மங்கைபாக னருள் பெற்ற வைரவக்கடவுள் வருதல் நோக்கிய மாதவன், வடுகதேவன் மலரடிவணங்கி வைகுந்தமடைந்தனன்; பிரமன் மரம்போல்நிற்க, வைரவர்சினந்து தமதுநகத்தினால் நாதன் கட்டளைப்படி அவனது நடுச்சிரங் கொய்தனர். உதிரவெள்ளம் உலகெலாம் பரத்தலின் உயிர்ப்புநீங்கி மலரோன் மாய்ந்தனன். மேருவைச்சுற்றிய சோரிநீரை நுதல்விழியானுலர்த்திப் பிரமனை யெழுப்ப, நித்திரை தெளிந்தோன் போல நிலத்தினின்றெழுந்து நின்மலராகிய வைரவரைவணங்கி "மலைவில்லிக்கு யான்செய்த அபராதம் வரையறைவில்லை, என் பேதைமையைப் பொறுத்தி; பெருமானே!'' என்று திருவடியில் வணங்கி "என் சிரசைத் தேவரீர் திருக்கரத்திலேயே வைத்திருக்க வேண்டுகிறேன்; தேவரீரால் அஞ்ஞானமொழியப்பெற்றேன்'' என்று பிரார்த்தித்தனன். வைரவர் "இனி நான்முக னென்ன நானிலத்துறைதி'' என விடுத்து, மேருமலையினின்றிறங்கித் திருவுள்ளக்குறிப்பின்படி சென்றனர். தலையிழந்த பிரமன் சதுர்முகத்தோடு சத்திய லோகஞ் சார்ந்தனன்.

தானே பிரமமெனத் தருக்குற்றபதுமனது ஐந்தாவது தலையை நக நுதியா லரிந்தமையின் சங்கரருக்குப் ப்ரஹ்மஶிரச்சேதமூர்த்தியென வோர்பெயர் வழங்குகின்றது.

ப்ரஹ்மாண்ட புராணம்.

ஸஸர்ஜஸ்வாத்மந:கிஞ்சித் பைரவம்லோகதாஹகங்
ஸ்வயம்ஸாக்ஷாந்மஹாதேவ: க்ஷணாத்வைகாலபைரவ:
சகர்தகரஜாக்ரேண ப்ரஹ்மண: பஞ்சமம்ஶிர:

வாமநபுராணம்.

தச்ருத்வாக்ரோதயுக்தேந ஶங்கரேணமஹாத்மநா
நகாக்ரேணஶிரஶ்சிந்நம் ப்ராஹ்மம்பருஷவாதியத்
தச்சிந்ந0ஶங்கரஸ்யைவ ஸவ்யேகரதலேபவத்
பதிதேநகதாசித்து தச்சங்கரகராச்சிர: || இத்யாதி
ஸக்ருத்வாஸுமஹத்புத்தம் ப்ரஹ்மண:காலபைரவ:
சகர்ததஸ்யவதநம் விரிஞ்சஸ்யாதபஞ்சமம்.

ப்ரஹ்மஶிரச்சேதமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்                        
 

Related Content

புராணம் - மண்டையோட்டை ஏந்தியது (பைரவர்)

பைரவ மூர்த்தி

ஆபதோத்தாரண மூர்த்தி

வடுக மூர்த்தி

க்ஷேத்திரபாலக மூர்த்தி