logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-bhujanga-trasa-murthi

புஜங்கத்ராஸ மூர்த்தி

புஜங்கத்ராஸ மூர்த்தி
புஜங்கத்ராஸ மூர்த்தி

 தாருவநத்து முநிவர்கள் தவமே சிறந்ததென்றும், அவர் பன்னியர் கற்பே மிகுந்ததென்றுங் கருதிக் கடவுளர் பெருமானாகிய கண்ணுதலைப் பரம்பொருளென மதியாது மமதை கொண்டு வாழ்ந்திருக்கு நாளில், சிவபெருமான் திகம்பரமாய்ப் பிக்ஷாடனத் திருக்கோலங் கொண்டும், திருமால் மோகினி வடிவேற்றுஞ் சென்று அம்முநிபத்தினிகள் கற்பையும் அம்முனிவர் மழித்தனர். அக்காலத்தில் அரிவையர் முயக்கி லவாவுற்றுத் தமதிருக்கை நாடிய அவ்வந்தணர் தத்தம் வீதியிற் கற்பழிந் துழலுங் காரிகையரைப்பார்த்துத் தமது ஞானத்தால் 'நம்தவத்தையழித்து நமது மனைவியர் கற்பை யொழித்தவன் சிவனே; அவனேவலால் ஆயிழையா யடைந்தவன் அச்சுதனே" என்றறிந்து விஷவிருக்ஷங்களைச் சமிதையாக்கி வேம்பு முதலியவற்றின் நெய்யினால் அபிசார வேள்வி செய்து அதினின்றெழுந்த பல பொருள்களையும் பரமபதியின்பேரிற் பிரயோகிக்க, சிவபிரான் அவற்றை எண்ணிய வகையெலாம் உடை, பாதச்சிலம்பு, ஆயுதம், சிரோமாலை, சேனை முதலியவாகச் செய்து கொண்டனர்.

தாம் பிரயோகித்தவை பிரயோசனப்படாதது கண்ட தாருவநமுநிவர் யாகாக்கிநியினின்றெழுந்த சர்ப்பங்களையுஞ் சங்கரன் மேல்விட, அவை அச்சமின்றி அவனி யழியும் வண்ணம் அதிவேகமாகத் தமது காளி - காளாஸ்திரி - யமன் யமதூதன் என்னும் நான்கு நச்சுப்பற்களிலுள்ள தொளைவழி விஷஞ்சிந்திக்கொண்டு நாதனை நண்ண, அண்ணல் ஆதிநாளையில் விண்டுவின் வாகனமாகிய கருடனுக் கஞ்சித் தம்பால் சரண்புகுந்த சர்ப்பங்களைத் தமதுடலிற்றாங்கி யிருந்ததுடன் இப்பாம்புகளையும் ஏற்று “உமது குலத்தாருடன் ஒன்றுகூடி வாழுங்கள்” என்று திருவுள்ளஞ்செய்து அப்பாம்புகஞ்சும்படி திருக்கரத்தாற்பற்றிச் சிறிது பொழுது நடித்து, திருக்கரம் திருவடி அரை முதலியவிடங்களிற் கங்கணம் – காலணி – அரை நாண் - கடிசூத்திரமுதலியவாகப் பிணித்தருளினர்.

[இச்சரிதத்தின் ஏனைய விஷயங்கள் பிக்ஷாடநம் சார்த்தூலஹத மிவற்றில் விளக்கப்பட்டுள்ளன. ஆங்குக் கண்டுகொள்க.]
தாருவநத்து முநிவர் செலுத்திய சர்ப்பங்களை அச்சுறுத்தினமையால், சிவபெருமான் புஜங்கத்ராஸமூர்த்தியெனத் திருநாமமெய்தினர்.

கந்தபுராணம்


''ஏந்திய பின்னர் வேள்வி யெரியதற் கிடையே யெண்ணில்
பாந்தளங் கொழுந்து தீயோர் பணியினாற் சீற்றங் கொண்டு
 போந்தன வவற்றை மாயோன் புள்ளினுக் கஞ்சித் தன்பால்
சேர்ந்ததோர் பணிகளோடு செவ்விதிற் புனைந்தா னெங்கோன்.”

புஜங்கத்ராஸமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

புஜங்கலளித மூர்த்தி