காசிபன் மனைவியர் பதின்மூவரில் கற்பின் மேம்பட்ட கத்துரு விநதை யென்னுங் காரிகையரிருவர் தாம் அழகிற் சிறந்தவரென ஒருவரோடொருவர் வாதிட்டுத் தமது நாதனை வினாவி, அவர் தீர்மானித்தவண்ணந் தோற்றவள் சிறையிருப்பதாக ஏற்படுத்திக்கொண்டு, முநிவரை யணுகிக்கேட்க, கத்துரு சிறந்தவளென, மற்றவள் சிறையிலகப்பட்டனள்: சிறையிலிருக்கும் விநதை தன்மாற்றவளை நோக்கித் தன்னை விடும்படி வேண்ட, “தேவலோகத்துள்ள அமிர்தமளித்தாற் சிறை நீக்குவேன்' என, விநதை தன் குமாரனாகிய கருடனுக்கறிவிக்க, கருடன் தேவலோகஞ் சேர்ந்து அமுதகலசத்தைக் காத்திருந்த அந்தரத்தவரைச் சயித்துக் கையிற் கொண்டு வருகையில் திருமால் எதிர்த்துச் செருச்செய்து செயிக்க மாட்டாமல் ''பக்ஷிராசனே! உன் பராக்கிரமத்தை மெச்சினேன்; வேண்டிய ஒரு வரத்தைக்கேள்'' என, கருடன் சிரித்து "கமலாக்ஷ! உன் வலிமைக்குக் களித்தேன். நீ விரும்பிய இரண்டுவரங்களைக்கேள்'' என, விண்டு இதுதான் சமயமென் றுட்கொண்டு ''சர்ப்பங்கட்.கமுதூட்டாதிருக்க வொருவரமும், நீ எனக்கு வாகனமாகித் தாங்க மற்றொருவரமும் வேண்டும்'' என கருடன் அவ்வாறே யியைந்து அமுதகலசத்தைத் தாயினிடஞ் சேர்த்து, சர்ப்பங்கட் கமுதூட்டாவகையாகக் கூறிச் சிறைவிடுவித்து, சிவலிங்க பூஜை செய்யப் பெருமான்களித்துப் பிரசன்னமாய்ப் பல வரமளித்து "விட்டுணு நமதடியாரிற் சிறந்தோன். நீ யவனுக்கு வாகனமாதல் பற்றிக் களித்தோம்." என்று திருவாய்மலர்ந்தருளக் கருடன் மனம்பூரித்து மாலுக்கு வாகனமாயினன்.
"கலுழ னாற்றிய காமரு தவத்தினை வியந்து
நிலவு தூங்கிளம் பிறையணி நீள்சடைக் கடவு
ளலகி னல்வர மளித்து நம் மடியரிற் சிறந்தோ
னுலகு பூத்தசெந் தாமரை யுந்தியங் கடவுள்.
ஆங்க வற்குநீ யூர்தியா யடைதுமென் றறைந்த
தீங்கி னல்வர முவந்தனஞ் செல்லெனக் கலுழன்
வீங்கி னான்றடம் புயமுளங் குளிர்ப்புற விழிநீர்
தூங்க மெய்ம்மயிர் சிலிர்ப்புறத் தொழுதிவை சொல்வான்.”
கருடன் சிவார்ச்சனை செய்து பெற்ற வல்லமையால், தன் மாற்றாந்தாயாகிய கத்துருவென்பாள் பெற்ற கட்செவிகளைக் கடுங் கோபத்துடன் கொன்று துன்புறுத்தி வருதல்கண்டு, நாகங்கள் “நாமும் சிவபிரானைப் பூசித்து வைநதேயனால் மாயாத வரமுறல் வேண்டும்'' என்றாலோசித்துக்கொண்டு ஓர் சிவலிங்கக்குறியைத் தாபித்து, விதிமுறையே சிவார்ச்சனை செய்து நேர்நின்று "ஆதி மத்தியாந்தரகி தராகிய அருட்பெருங்கடலே! தேவரீரது பூஜா பலத்தாலும், திருமாலுக்கு வாகனமா யிருத்தலாலும், மாற்றாந்தாய் மைந்தனாதலாலும், கருடன் எங்களைக் கொல்கின்றான். அவனா லிறவாவண்ணம் அருள்புரிய வேண்டும்" என்று பிரார்த்தித்தன. சிவபிரான் அச்சர்ப்பங்கட்குத் திருவுளமிரங்கித் தமதருமைத் திருமேனியி லாபரணமாக அவைகளை அழகுறும்படி அணிந்துகொண்டனர். இது நிற்க.
பின்னொரு காலத்தில் விஷ்ணு சிவதரிசனார்த்தமாக வந்த பொழுது அச்சர்ப்பங்கள் அச்சமின்றிக் கருடனை நோக்கி "ஏன் கருடா சுகமா'' என வினாவின. இதனை உலகத்தா ரோர் வழக்கச் சொல்லாகக் கூறுகின்றனர். அஃதெற்றுக்கெனில் சிறியோரைச் சேர்தலினும் பெரியோரைக் கூடுதல் சிறந்ததென் றுணர்த்தற்கென வறிக.
புஜங்கம் - பாம்பு, லளிதம் - அழகு செய்தல். இக்காரணத்தால் இறைவர் புஜங்கலளிதமூர்த்தி எனப் பெயரெய்தினர்.
புஜங்கலளிதமூர்த்தயே நம: