அமரர்கள் அஞ்சத்தக்க அந்தகன் போன்ற அந்தகன் என்னும் அசுரன் கரியமேகம் போன்ற பெரிய உடலும், சுருண்டு நெரிந்து செந்திறம்வாய்ந்த தலைமயிரும், யானைத்து திக்கை யனையகளும், தீயைச்சொரியுஞ் செவ்விய கண்களும், பிறைச்சந்திரன் போன்ற வக்ரதந்தங்களும், கண்டோரது கண் கூசத்தக்க காட்சியுமுள்ளவன். அவன் சிவபெருமானைத் தியானித்து, பஞ்சாக்கினிமத்தியிற் பலகாலங் கடுந்தவஞ்செய்தனன். அவ்வசுரனது அன்பின் முதிர்ச்சிக்கு அகமகிழ்ந்த அம்பிகைபாகர் இடபாரூடராய் இறைவியாருடன் காட்சியளித்து "யாது வரம்வேண்டும்? ஒதுக" எனத் திருவாய்மலர்ந்தருள, அசுரன் "அருள்வள்ளலே அரி அயன் முதலிய அமரர்களால் ஆவிசோராமையும், அகற்றவொண்ணாத ஆற்றலும் அடியேனுக்கு அருள வேண்டும்” என வரம் வேண்ட, பக்திவலையிற் படுவோராகிய பரமபதி ''அவ்வாறே யாகுக” என அவனுக்குப் பிரசாதித்து அந்தர்த்தானமாயினர்.
கந்தரங்கறுத்த கண்ணுதலளித்த இந்தநல்வரத்தால் எவரையுமதியாது, அந்தமில்லாத அகந்தைபெற்ற அகந்தகாசுரன், அம்புயத்தவனையும், ஐம்படைக் கிறையையும், மகபதிமுதலிய வானவர்குழுவையும், அநவரதம் அல்லல்படுத்தி அமர்செய்து துன்புறுத்தி வந்தான். அத்தீயோனைச் செருச்செய்து செயித்தோர் தேவாசுரரி லொருவருமிலர். இவ்வசுரனால் இடையறாது எய்தும் இடருக்கு என்செய்வோமென் றேங்கி மனமிளைத்த வானவர் மானமற்று மாலை முன்செல்ல விடுத்து, தாம் யாவருங் குழுமிப் பின் சென்று அந்தகனையணுகி, "அரசே! உன்னை யன்றி உம்பரைப் பாப்போர் உலகத்தி லொருவருளரோ? இனி நீபணித்த கட்டளையைச் சிரமேற்கொண்டு நீ அறைந்தவண்ணமே தொழிலாற்றுவோம்; எங்களைக் காக்கவேண்டும்” எனக்கூறினர். அதுகேட்ட அந்தகாசுரன் தனது தலையையசைத்து, தடம்புயத்தை நோக்கி, புன்முறுவல் கண்ணிணையார் பண்ணவர்களைப்பார்த்து, ''ஆகாயவாசிகளே! ஆர்ப்பரிக்கின்ற போர்ச்செயலில் ஆண்சிங்கத்தை யனையவன் யானொருவனே; ஆதலின் நீங்கள் இது முதல் நேரிழையாரை நிகரவடிவுற்றிருங்கள். கண்களில் மைதீட்டி, சேடியர்போலச் சேலை தரித்து, மாதர்கட்குரிய மணிபணியணிந்து, வாழ்நாள் கழிக்கக்கடவீர்; அவ்வாறன்றி உங்களில் யாவராயினும் ஆடவ டியாய் என் கண்முன் அகப்படின் அன்றேயழிந்து பெயரொழிவீர்; அதிதூரதேசத்திற் ககலுமின்'' எனச்சொல்ல, அந்தரர் அந்தகன்பால் அத்தகைய உத்தரவு பெற்றதே சாலுமென்று அகமகிழ்ந்து நாணற்று நங்கையருரு வேற்றனர்.
வானவர் வனிதையர் வடிவமேற்றபின், மானமற்றவரென மதித்துமவர்களை, அல்லற்படுத்தும் அந்தகன் செயலுக்கு ஆற்றகில்லாது ஸ்ரீ மந்தரமலையை யடைந்து, மஹாதேவரைப் பணிந்து மால் - மலரோன் - மகபதி முதலிய யாவரும் மாதர்வடிவுடன் வளையணிந்த கையால் மலர்கொண்டு சிவலிங்கார்ச்சனை யியற்றினர். அவ்வந்தரத்தோரது அன்பின் மிகுதிக்கு அகங்களி துளும்பிய அரவாபரணர் அறவிடையூர்ந்து அன்னையாருடன் காட்சி தந்தருளினர். அதுகண்ட அச்சுதன் - அலரோன் - அயிராணிகேள் வனாதி யமரர்கள் உள்ளத்திலானந்த வெள்ள முதித்து, ''பரமபதியே! பாவியாகிய அந்தகன் படுத்திய பாட்டிற்குப் பதறிப் பரிதவித்திருந்தோம். பின்னொருதினத்தில் அன்னவற்பணிய, பண்ணவரே நீர் பாவையர் வடிவாயாவருமிருப்பின் இன்னல் செய்கிலேனென்றனன். அன்னது மேற்கொண் டரிவைய ருருவமாகியும், அநவரதம் அல்லல் புரிகின்றனன்; ஆதலின் அடியேங்களுயிர்க்கிரங்கி அவனது உயிரை யொழித்து, எங்கள் முதுகிலெய்திய புண்ணைப்போக்கி யருள்வேண்டும். அவ்வாறு தேவரீர் திருவுள்ளமிரங்காவிடின் யாக்கள் துன்பக்கடலினின்று கரையேறுத லில்லையாகும்" என்று பல்வகையாகப் பணிந்து துதித்தனர்.
சிவபெருமான் தம்மை யாசித்த தேவர்கட்குத் திருவருள்புரியத் திருவள்ளங்கொண்டு, 'இமையவரே! இனி நீங்கள் நண்ணிய பெண்ணுருவுடனே இமயவல்லியின் தோழியர்களாகிய கணங்களோடு வாழ்ந்திருங்கள். உங்களை எதிர்ப்பானாகில் ஓரிமைப்பொழுதில் அவனாற்றலைப்பாற்றுவதும்; அஞ்சன்மின்” என்றருளிச்செய்து அவர்கட்கருளுந் ததியிலிருந்தனர். அதனை யறியா அந்தகன் அவ்வானவரைப் பண்டுபோற் போர்செய்தொறுக்கும்படி வெள்ளமாகிய சேனையுடன் மேவித் துன்புறுத்தினன். அவன் துன்பிற்குச் சகியாத சேஷசயனன் முதலிய தேவர்கள் இமைப்பொழுதில் மந்தரமலையை யகன்று திருக்கைலாயகிரியை யடைந்து, திருச்சந்நிதானத்தின் திருவாயிலுட் பிரவேசித்துச் சிவத்தியானஞ்செய்து
முறையிட்டனர். அருட்பெருங்கடலாகிய அண்ணல் தம்முன் நின்ற பைரவக் கடவுளுக்குத் தேவர் துயர் தீர்க்கும்படி அவ்வந்தகன துவலியையும், அவனை யுயிர்போக்கும் வழியையும், திருவாய்மலர்ந்தருளினர். இறைவரிசைத்தவற்றைச் செவிசாற்றிய எமது பைரவப்பெருமான் கோபாக்கிரசித்தமுடையவராய் வாள் போலும் பற்களையுடைய அந்தகாசுரனது ஆவியை யருந்தும்படி, நெருப்புப் பொறிளைச்சொரிந்து சுழல்கின்ற கண்களையுடைய கணங்களோடுங் கணமொன்றில் யுத்தசன்னத்தராய்ப் புறம்போந்தனர்.
தேவாசுரர்கட்குக்காலன் போன்ற கடியோன், அண்ணல் வருவதுகண்டு, அளவில்லாச் சினங்கொண்டு, கண்ணில் நெருப்பு விண்டு, கையிற்கொண்ட தண்டுடன் வலசாரி யிடசாரி சுற்றி எதிரேவா, இருவர் சேனையுஞ் செருவேற்றன. அமரரும் அசுரரும் அநந்தவகையாகப் போர்செய்தனர். அதில் அந்தகன் சேனை முறி பட்டது. தண்டு – சக்கிரம் – பிண்டி – பாலம் - வாள் - பல்லயம் – தோமரம் - ஈட்டி முதலிய எண்ணில்லா ஆயுதங்கள் பொடிப்பட்டன. மண்படுதூளி விண்ணிடையலவித் தினகரன் தேரிற்பூட்டிய எழு புரவி கண்களை மறைத்தன. கடலெனச்சோரி நீர்பரவியது. திசைகள் மயங்கின. நக்ஷத்திரங்களுதிர்ந்தன. உலக மதிர்ந்தது. அண்டகடாகம் பிளந்தது. இவ்வாறு பைரவக்கடவுளும் அந்தகனும் போர் புரிகையில், அசுரகுருவாகிய வெள்ளி செபித்த அமுத சஞ்சீவி மந்திரத்தால் அசுரச்சேனை ஆருயிர்பெற்று மீண்டும் வெகுளிகொண்டு சமர் செய்யத் தலை யெடுத்தது. அஃதுணர்ந்த சிவபெருமான் அவ்வெள்ளியை விழுங்கினர். கண்ணுதல் விடுத்த வயிரப்பெருமானது கணங்கள் கணமொன்றில் அந்தகன் சேனையை யழித்தன.
உலகிலுள்ள உயிர்களெல்லாம் நடுங்க, ஊழிக்காலத்தி லுதித்த ஸப்தசாகரம் போல இரைந்து வந்து, வடவாமுகாக்கினியைச்சிந்தும் வலியோனாகிய அந்தகாசுரனை ஐயன் தமது அருமைத் திருக்கரத்தேந்திய முத்தலைவேலின் முனையிற்குத்தி, மேலே தூக்கியெடுத்தனர். பத்தாயிரகோடி வருடமளவும் இரத்தவெள்ளமொழுகியது. பிறகு பைரவக்கடவுள் அந்தகனைக் கழுவேற்றியது போலச் சூலத்துடன் திருக்கரத்திற்றாங்கி, கருணாமூர்த்தியின் திருச்சந்நிதி யடைந்தனர். அந்தகன் அகந்தை நீங்கி, அநந்தவகையாகத் துதி புரிந்தனன்.
சோமசூரியாக்கினைகளையே திரி நேத்திரங்களாகவுடைய சயஞ்சோதி "யாது வேண்டும் என அந்தகனை வினாவ, அந்தகன் "பூதகணங்கட்கு நாதனாகவேண்டும்'' என வேண்டினன். கருணாமூர்த்தியாதலின் பெருமான் அவனுக்கும் மனமிரங்கி. பைரவக்கடவுளது சூலப்படையினின் றிறக்கியருளி. பூதகணங்கட்கோர் தலைவனாக நியமித்தருளினர். பரமன் வயிற்றிலகப்பட்ட பார்க்கவன் சக்கிலத்துடன் தரணிமேற்றோன்றிச் சுக்கிரன் எனப் பெயரெய்தினன். தேவர்கள் தங்கட்குற்ற துயர்தொலைத்துச் சேயிழை வடிவையொழித்துத் தமது புத்திர மித்திரருடன் சகலசுகமும்பெற்று விழைந்தவகையே சிவார்ச்சனை முதலியன செய்து தத்தம் பதவிசார்ந்து குறைவின்றி வாழ்ந்திருந்தனர்.
ஹிரண்யாக்ஷன் குமாரனாகிய அந்தகாசுரனைச் சங்கரித்துத் தேவர் துன்பகற்ற எழுந்தருளிய அவசரம் பைரவமூர்த்தமெனப் பகரப்படும்.
''பத்தா யிரகோடி யெனும்பரு வங்கடக்க
முத்தா ரையயிற் படைகொண்டனன் மொய்த்த சோரி
நெய்த்தா யுணங்கி யொழுக்குற நின்ற நீதி
பொய்த்தானை யுணக்கினன் பூதநாதன்.
முதலிக்கனை நெற்றி விழிக்கனன் மூட்டிவென்ற
குதலைக்கொடி பங்க னிடத்தெதிர் கொண்டு சென்றான்
விதலைப்படு வெந்திற லந்தக வெய்ய னைக்கார்க்
கதலிக்கொடியா மென முன்னரிற் காட்டினானால்.
கைகா லிடைதூங் குறவீங்கு கடற்கடுங்கார்
மைகான் மணிகண்டனை யந்தகன் வாய்வ ழுத்த
நெய்கா னெடுமுச் சிகைச்சூற்படை நீக்கிநோக்கி
யுய்கா ரணம்வேண்டுவ யாகொ லுரைத்தி யென்றான்.
மாதுக் கொருபங்கனை யங்கன் வணங்கி யைய
பூதர்க் கொருநா யகனாகுதல் போற்றி நின்றே
னீதக்க தெனப்பணி யென்று நிகழ்த்தி னானப்
போதத் தலைவன் னவற்காது புரிந்து நின்றான்.
பைரவமூர்த்தயே நம: