மாளிகை சேர்ந்த மணிவாசகருக்குப் பந்துவர்க்கமும், நட்புமாயினார் நானா வகையாக மதிகூறக் கருதி, அரசகாரியத்திற் சிறந்துள்ளாராயிருத்தலின், மன்னனுக் குறுதியும் உறவினருக் கூன்றுகோலுமாக விருந்திலீரெனத் தமக்குத் தோன்றிய வழியெல்லாஞ் சொல்லக் கேட்டு ''எமக்கு யாதுவரினும் வருக. எம்பெருமானை மறவேன். ஊழாகிய தீவினைவிளைந்தால் விலக்கற்பாருளரோ?'' எனக் கேட்டகன்ற னர். அரசன் அமைச்சர் நாயகரை வருவித்து "குதிரைகள் வந்திலவே'' என, “இன்னும் மூன்று தினங்களில் இவுளிகள் வரும்” எனப்புகல, அப்போதும் குதிரைக்கூட்டம் வராமைகண்டு கொற்றவன் சினந்து , தண்டலாளராற் பலவகையாகத் துன்புறுத்திச் சிறையிலிருத்தினன். மணிவாசகர் தமதுடலுயிர்கட் குரியராகிய பரமபதியைப் பலவகைப் பாமாலைகளாற் றுதிசெய்ய, அடியார்பாடலுக் ககமகிழும் ஆனந்தக் கடலாகிய ஆலவாயுடையார் அவரிடுக்கண்களையத் திருவுள்ளங்கொண்டு, திருநந்திதேவர் முதலிய சிவகணத் தலைவர்களைவிளித்து "பாண்டியனுக்குப் பரிமா
செலுத்த வேண்டுதலின் வனத்திலுள்ள நரிகளைப்பற்றி வந்து பரிகளாக்கி அவற்றை நடத்துஞ் சேவகராக நீங்களுருக்கொள்ளவேண்டும்” என்று கட்டளையிட, அவர்கள் அவ்வாறே சித்தப்படுத்திப் பலவகையாகிய ஆடைமுதலியவற்றில் வேறுபாடுற்ற சிறந்த வடிவேற்றனர்.
தொண்டர் துன்பங்களைக்களையுஞ் சோதிஸ்வரூபியாகிய சிவபிரான், தருமார்த்த காம மோக்ஷமென்னும் நாற்புருஷார்த்தங்களே நான்கு கால்கள் - ஞானகாண்ட கருமகாண்டங்களே இருசெவிகள் - பர அபரவுணர்ச்சியே விழிகள் – விதிமுகம் - நிஷேதவால் - தந்திரங்கள் புறவணி - ஸப்தகோடி மந்திரங்கள் சதங்கைமாலை – சூரிய சந்திரர் பாதம்வைக்கு மிடங்கள் - தாரகப்பிரம மந்திரமே கடிவாளமாகக்கொண்டு இவற்றைப்போன்ற பிற அங்கங்களு மமைந்த ஓர் சிறந்த புரவிமேலேறித் தாமே அவற்றிற் கிறைவராய் எழுந்தருளி வர, பாண்டி மன்னன் பரிமா வரவறிந்து அவற்றின் சிறப்பையும் தலைவனது சிறப்பையும் அன்போடு கண்டுகளித்து, பரிசு பலசெய்தனுப்பிப் பழையமந்துறையிற் கட்டப்பணித்தனன். அப்பரிகளும் பாதியிரவிற் பண்டைய நரியுறுவேற்றுப் பல குதிரைகளை யூறுசெய்து, வனத்திற்கேக, பூழியன் கேள்வியுற்று மனம்புழுங்கி அமாத்தியரையழைத்துத் தண்டலாளர்வச மொப்புவித்து "அப்பண்டாரப் பொருள் முழுதுங் கொண்டுவிடுக'” என, அவர்கள் ஐயரைச்சிறைப்படுத்தி வைகையாற்றிற் கடுங்கோடையில் வருத்தஞ்செய்ய, வஞ்சமில்லார் வள்ளலார்திருவடியில் மனஞ்செலுத்த அருட் பெருந்தகை அவ்வைகையைப் பெருகச்செய்ய, மதுரை முற்றும் வெள்ளமாக அரசனாணையால் மண்ணடைப்பாராயினர். மந்திரியார் ஆலயஞ்சேர்ந்தனர்.
அச்சமயத்து வந்தியென்னும் மூதாட்டி தனக்கு விடுத்த கரை அடைப்பின்றி வருந்த, பெருமான் கூலியாளாய் வந்து பிட்டுண்டு, கட்டுண்ட அயற்கரையிடிய நீர் விடுத்துத் துயில் புரிவார்போ லிருக்கக்கண்ட பாண்டியன் பிரம்பாலோச்ச * அஃது யாவர் மேலும் படச்செய்து அடைப்பாரின்றி யடைகரையாக்கி மறைந்து ஆகாய வாணியால், "அமைச்சரைத்தேறுதி" எனக் கூறுவித்தருளினர்.
* சிவபெருமான் சர்வ வியாபியாதலின் அவரை அரிமர்த்தனன் பிரம்பாலடித்த பொழுது அவ்வடி யாவர்க்கும்பட்டது.
வேந்தன் வெருண்டோடி ஐயரைக்கண்டு "வாதவூரரசே! என் பிழைபொறுத்தி இத்திருவையெல்லாம் வேண்டியவாறு செய்தருள்க” என ஐயர் "வழுதியர் கோவே! திருவருள் வழிநிற்க'' என்று நிறுத்திப் புறப்பட்டுத் திருப்பெருந்துறையடைந்து பதிகமோதித்துதித்து, பல திருப்பதிகளையுஞ்சென்று பணிந்து, தில்லையைச்சேர்ந்து ஈழத்தினின்று வந்த புத்தரைத் தில்லைவாழ்ந்தனர் விருப்பின்படி வாதில் வென்று, அவர்கட்குச் சிவசின்னமளித்து, வளவர் மகளை வாய் திறப்பித்து, திருவாசகமும் திருக்கோவையாரும் மன்றுடையாரே யெழுதிக் கைச்சாத்திட்டருளும்படி மணிவாய் மலர்ந்தருளினர். ஆமாத்தியகுல தீபத்தை அவ்வேதியர்நோக்கி "திருவாசகத்தின் திருவுள்ளக்கிடையைத் திருவருள் செய்யவேண்டும்" என்றிரப்ப, அடிகள் முறுவல் செய்து அவ்வந்தணரொடு பொன்னம்பலஞ்சேர்ந்து "இவ்வாசகப் பொருளாவார். இவரே'' என்று திருவாய்மலர்ந்து திருச்சிற்றம்பல முடையாரைக் குறியாது குறிப்பித்து, எம்பெருமானிடத்தி ரண்டறக் கலந்தனர்.
"பாண்டியன் முதுகிற் பட்டது செழியன்
பன்னிய ருடம்பினிற் பட்ட
தாண்டகை யமைச்சர் மேனிமேற் பட்ட
தரசிளங் குமரர்மேற் பட்ட
தீண்டிய கழற்கால் வீரர்மேற் பட்ட
திவுளிமேற் பட்டது பருமம்
பூண்டவெங் கரிமேற் பட்டதெவ் வுயிர்க்கும்
போதன்மேற் பட்டவத் தழும்பு.
பருதியு மதியும் பாம்புமைங் கோளும்
பன்னிறம் படைத்தநாண் மீனு
மிருநிலம் புனல்கா லெரிகடுங் கனல்வா
னென்னுமைம் பூதமுங் காருஞ்
சுருதியுமாறு சமயவா னவருஞ்
சுரர்களு முநிவருந் தொண்டின்
மருவிய முனிவர் கணங்களும் பட்ட
மதுரைநா யகனடித் தழும்பு.
மானவர் மனிதர் நாகர்புள் விலங்கு
மாசுணஞ் சிதலெறும் பாதி
யானபல் சரமு மலைமரங் கொடிபுல்
லாதியா மசரமும் பட்ட
வூனடை கருவும் பட்டன தழும்போ
டுதித்தன வுயிரிலோ வியமும்
தானடி பட்ட சராசர சடங்க
டமக்குயி ராயினோன் றழும்பு.
துண்ணெனமாயோன் விழித்தனன் கமலச்
சோதியும் யாதென வியந்தாள் ***''
சிவபெருமான், அரிமர்த்தனனது அளவில்லாப் பொருளைச் சிவபணிவிடை யிற்செலவுசெய்த மணிவாசகர் நிமித்தமாய் நரிகளைப் பரிகளாக்கித் தாமேபரித் தலைவராய்ச் சென்று புரவிகள் ஒப்புவித்தமையால் அசுவாரூடமூர்த்தி யென்பதோர் திருநாமமெய்தினர்.
அசுவாரூடமூர்த்தயே நம: