திருக்கயிலாயகிரியிற் பக்தாநுக்ரஹ காரணமாகச் சிவபிரான் திருவோலக்க முற்றிருந்தனர். திருமால் - பிரமன் - இந்திராதி திக்குப்பாலகர் - அஷ்டவசுக்கள் ஸப்தருஷிகள் - நவசித்தர்கள் கிந்நர கிம்புருஷ யக்ஷ வித்யாதராதி அஷ்டாதச கணங்கள் - துவாதசாதித்தர் முதலிய கிரகங்கள் - இன்னும் இமையவர் யாவரும் சிவபிரானைத் தரிசிக்கும்படி திருக்கயிலாய கிரியையடைந்து, ஆங்கு முதற்பெருங்காவலாயுள்ள திருநந்திதேவரைப் பணிந்து, அவர் திருவருள் பெற்றவராய் முறைமுறையே அவர் விடுப்ப மகாசந்நிதானத்தினுட் சென்று இருகண்களார எம்பெருமானையும் இறைவியாரையுந் தரிசித்து அஷ்டாங்க பஞ்சாங்கமாகப் பணிந்து இருவரையும் பிரதக்ஷிணஞ் செய்து தமது குறைகளைச் சொல்லி யாசித்து, அவ்விருவராலும் அநுக்கிரகித்த வரங்களைப் பெற்று வருகையில், ருஷி சிரேஷ்டர்களிலொருவராகிய ப்ருங்கி ருஷியானவர் பார்வதி தேவியாரைப் பணியாமற் சிவபெருமானை மாத்திரம் பணிந்து பலவகையாகப் பாடிப் புகழ்ந்து நிற்பது கண்ட இமையவல்லி, இம்முனிவன் யாவன்? எம்மைச் சிறிதும் மதித்திலன்? என்று முனிந்து, சக்தியாகிய தனது கூறாகவுள்ள உதிரமாம்சங்களை அவருடலிற் சிறிதுமின்றி ஆக்ராணித்துக் கொள்ள, அவர் சிவகூறாகவுள்ள என்பையும் நரம்பையுமே உட்கொண்ட தோற் பதுமை போலத் தள்ளாடி நின்று தம்மைப் பிரார்த்தித்தது கண்ட தாணு மனந்தரியாராகி ஓர் காலையுதவ, ப்ருங்கி முநி களித்து மூன்று காலுடன் முன்னின்று கூத்தாடிப் பல வகையாகப் பாடிச் சென்றனர்.
கவுரியம்மையார், கன வருத்தமுற்றுக் கடுகியெழுந்து கணவராகிய கண்ணுதலை நமஸ்கரித்து ''எம்பெருமானே! எளியேன் தவமிழைக்க எண்ணினேன். ஏழையேற்கு இன்னருள்புரிய வேண்டும்” என்று விண்ணப்பித்து விடைபெற்றுத் திருக்கயிலையை நீங்கி ஐங்கரக்கடவுள் அறுமுகக்கடவுள் ஸப்தமாதர் முதலானோர் தம்மைப் புடைசூழ்ந்து நிற்க, ஓர் மலைச்சாரலில், எழுத்தூணின் மேல் நின்று எண்ணற்குமருந் தவத்தை எண்ணில்லாக் காலமியற்றினர்.
சிவபெருமான் உமாதேவியார் தவத்திற்கிரங்கித் திருவருள் புரியத் திருவுளங் கொண்டு இடபவாகனரூடராய், சமஸ்த தேவர்களுந் தம்மைப் புடைசூழ்ந்து வரவும், சர்வ வாத்தியங்களு மொலிக்கவும், வேதங்கள் கோஷிக்கவும், மலைச்சாரலை யடைந்து எமதன்னையாகிய ஈசுவரியின் தவச்செயலைக் கண்டு சந்தோஷித்துக் காட்சி தர, தேவியார் திருக்கண்களாற் றரிசித்து விழியினின்றும் ஆனந்த பாஷ்பஞ் சிந்த அடியற்ற மரம் போலச் சாஷ்டாங்கமாகத் தரைமேல் விழுந்து பணிந்தனர். மாதேவர் மனக்களிப்பு மிக்கவராய் "மாதே! யாது வரம் வேண்டும்?' என வினாவ, மலைமகள் மணவாளனை வணங்கி "வள்ளலே! தேவரீர் வேறும் அடியேன் வேறுமாகவிருப்பதில் விருப்பற்றேன். வாமபாகத்தில் அடியாள் கலந்திருக்க வேண்டும்” என சிவபெருமான் அவ்வாறே தமது திருமேனியில் வாமபாகத்தை அம்மையாருக்கருள் செய்து இடபாரூடராகித் தேவியாருடன் திருக்கயிலாய கிரியை யடைந்தனர். பாதி சரீரம் வாமபாகத்திற் பார்வதியாரும், பாதிசரீரம் வலப்பாகத்திற் சிவபெருமானுமாக வீற்றிருக்குந் திருக்கோலமே அர்த்தநாரீசுவர மெனப்படும்.
“உமையுந் தானும் வேறன்மை யுருவி னிடத்துத் தெளிப்பான்போல்
இமைய மயிலை யொருபாதி வடிவி னிறுவி நாற்கரத்து
மமைய வனசந் திரிசூல மபய வரத மிவைதாங்கி
நமையு முய்யக் கொண்டருளு நாரி பாகன் றிருவுருவம்.”
அர்த்தநாரீஸ்வரமூர்த்தயே நம: