சர்வமங்கள தேஜோமயமாகிய சிவபெருமானே சகல ஜீவான்மாக்களுக்கும் ஆங்காங்கு நேர்ந்த இடுக்கண்களைக் களைவாரன்றி வேறொருவர் துணையாதற் குரியரல்லர்.
ராஜாதிராஜாஸர்வேஷாம்த்ரியம்பகஸ்த்ரிபுராந்தக:
தஸ்யைவாமசராஸ்ஸர்வேப்ரஹ்மவிஷ்ண்வாதயாஸ்ஸுர:
அத்தகைய அருள்வடிவாகிய அண்ணல் அநவரதம் அளவில்லாத அமரர்கள் தம்மை நாற்புறமும் புடைசூழ்ந்து நிற்கவும், அமரர் – சித்தர் – அசுரர் – தைத்தியர் – கருடர் - கிந்நரர் - நிருதர் – கிம்புருடர் – கந்தருவர் – யக்ஷர் - விஞ்சையர் – பூதர் -பைசாசர் – அந்தரர் – முரிவர் – உரகர் - ஆகாயவாசிகள் - போக பூமியரென்னும்பதினெண்கணங்களும், பரஞானம் அபரஞானமாகிய இருவகை மதங்களையும் அருவியாறுபோற் சொரியும் ஐந்து திருக்கரங்களையும், யானை முகத்தையுமுடைய விநாயக மூர்த்தியும், அசுரர் பயமொழித்து அயிற்படையேந்திய அமரர் சேனாபதியாகிய அறுமுகப்பெருமானும், அபிராமி – மாயேஶ்வரி - கௌமாரி - நாராயணி - வராகி - இந்திராணி - காளி யென்னுந் திருநாமங்களை யுடைய ஸப்தமாதர்களும், சங்கு - சக்கிரம் – கதை – கட்கம் - கோதண்டமாகிய பஞ்சாயுதங்களைத் தாங்கிய பதுமநாபனும் கமலாசனத்திருந்து ஜீவான்மாக்களை யெல்லாஞ் சிருட்டிசெய்யும் பிரமதேவனும் எண்ணில்லாத தெய்வநங்கையர் குழாமும், சூரியன் -சந்திரன் - அங்காரகன் புதன் – பிருஹஸ்பதி - சுக்கிரன் - சனி -
இராகு - கேதுவென்னும் நவக்கிரகங்களும் முப்பான் மூன்று கோடி தேவர்களும் அகஸ்தியர் – ஆங்கீரசர் – கௌதமர் – காசிபர் – புலத்தியர் - மார்க்கண்டேயர் - வசிஷ்டராகிய ஸப்தருஷிகளும் நாற்பத்தெண்ணாயிரவரான முநிவர்களும், பக்கங்களில் கும்பல் கும்பலாகக் கூடிப்பணிந்து தங்களுக்கு இடையூறு சம்பவித்த காலத்தில் திருவருட் சகாயம்பெறக் கருதித்துதித்து நிற்கவும் நவரத்தினங்களி ழைத்த பொற்சிங்காதனத்திற் சர்வாடம்பர ஸம்பந்நராய் வீற்றிருந்தருளி அமரர்க ளாற் கூறக்கேட்ட குறைகளைக் களைந்தருளுவர்.
அவர்கள் விரும்பியவண்ணம் துயர்தொலைக்கத் திகுவுள்ளங் கொண்டு மாநுடச்சட்டை சாத்தி இரண்டு திருக்கரங்களோடு தண்டமுங் கபாலமுமேற்று வீற்றிருப்பினும், அவ்வச் சமயங்கட்கேற்ப நானாவகையாகிய திருவுருவங்கள் கொண்டு அவரவர்கள் அவாவிய அடைவே இடுக்கண்களைந்து இஷ்டசித்திகளைப் பெறும்படி அநுக்கிரகஞ் செய்யாநிற்பர். அவரது பலவகைத் திருவுருவங்களையும் இத்தன்மையவென விளக்குதற்கு முடியா.
''மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் மாசொன் றில்லா
னொப்புடைய னல்ல னொருவ னல்ல
னோரூர னல்லனோ ருவம னில்லி
அப்படியு மந்நிறமு மவ்வண்ணமு
மவனருளே கண்ணாகக் காணி னல்லா
லிப்படிய னிந்நிறந்த ஒவ்வண்ணத்த
னிவனிறைவ னென்றெழுதிக் காட்டொ ணாதே.'”
அம்முநிவர் முதலானார் ஆபத்துக்காலத்தில், தமது துயர் கூறியாசிக்க, அவர்கள் துன்பத்தைத் தொலைத்துச் சகாயஞ்செய்யும்படி எழுந்தருளியுள்ள திருக்கோலமே ஆபதோத்தாரணமூர்த்த மெனக்கூறப்படும்.
''கணங்கள்கலுழிமதக்கடவுள்கதிர்வேற்குரிசிலெழுமாதர்
நிணங்கொடிகிரிப்படையேந்தனிலவெண்டோட்டுமலர்ப்புத்தே
ளணங்குநவக்கோண்முனிவரர்சூழ்ந்தணுக்கராகப்பொலந்தவிசி
னிணங்குமாவற்சகாயனெனுமிறைமைப்பெருமான் றிருவுருவாம்."
ஆபதோத்தாரணமூர்த்தயே நம: