logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

kandhapuranam-of-kachchiyappa-chivachariyar-maayai-padalam

கந்தபுராணம் - அசுர காண்டம் - மாயைப் படலம்

கச்சியப்ப சிவாச்சாரியர் அருளிய

அசுர காண்டம் - மாயைப் படலம்


செந்திலாண்டவன் துணை

திருச்சிற்றம்பலம்

 

2. அசுர காண்டம்

 

1. மாயைப் படலம்

 

ஊரி லான்குணங் குறியிலான் செயலிலான் உரைக்கும்

பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோன்

சாரி லான்வரல் போக்கிலன் மேலிலான் தனக்கு

நேரி லான்உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்.                1

 

வீறு காசிபன் சிறார்களாய் மேவிய அறுபான்

ஆறு கோடிய தாகிய அவுணருக் கரசன்

மாறில் மங்கல கேசியாம் அரக்கியை மணந்து

பேற தாகவே சுரசையென் றொருமகட் பெற்றான்.                2

 

தூய அம்மகள் வளர்ந்தபின் புகன்எனுந் தொல்லோன்

தீய மாயையின் கல்விகள் யாவையுந் தெருட்டி

ஆய விஞ்சையின் வல்லபம் நோக்கியே அவட்கு

மாயை என்றுபேர் கூறினன் மனத்திவை மதிப்பான்.                      3

 

இன்ன லெய்திய அவுணர்கள் சிறுமையும் இமையோர்

மன்ன னாதியர் பெருமையும் வானநாட் டுறைவோர்

நன்ன லந்தொலைந் தசுரரால் மலிந்திட நந்தி

சொன்ன வாய்மையுங் கருதினன் புகரெனுந் தூயோன்.             4

 

கருதி இன்னண மேல்வருந் தன்மையுங் கண்டு

குருதி தோயும்வேல் அவுணர்கோன் பயந்தகோற் றொடியை

வருதி என்றுகூற் வரம்பறு பேரருள் வழங்கி

ஒருதி றந்தனைக் கேளெனத் தேசிகன் உரைப்பான்.                       5

 

வனச மங்கைதன் கணவனால் வாசவன் தன்னால்

முனிவர் தேவரால் அளப்பிலா அவுணர்கள் முடிந்தார்

அனையர் மேன்மையை யாவரும் உணர்குவர் அதனால்

உனது தந்தையும் வலியிழந் தேயொடுங் குற்றான்.                       6

 

மின்பொ ருட்டினால் கேதகை மலர்ந்திடும் விளங்கும்

என்பொ ருட்டினால் மாமழை சொரிந்திடும் ஈட்டும்

பொன்பொ ருட்டினால் யாவுமுண் டாமதுபோல

உன்பொ ருட்டினால் அவுணர்க்கு மேன்மைய துளதாம்.            7

 

வாச மாமலர் மடந்தையும் வந்தடி வணங்கப்

பேசொ ணாததோர் பேரழ குருக்கொடு பெயர்ந்து

காசி பன்றனை அடைந்துநின் வல்லபங் காட்டி

ஆசை பூட்டியே அவனொடும் புணருதி அல்லில்.                  8

 

அல்லி டைப்புணர்ந் தசுரர்கள் தம்மையுண் டாக்கி

மெல்ல அங்கவர் தங்கட்கு நாமமும் விளம்பி

எல்லை யில்வளம் பெற்றிட அவுணருக் கியலுந்

தொல்லை வேள்வியும் விரதமும் உணர்த்துதி தோகாய்.          9

 

இன்ன தன்மைகள் முடிந்தபின் நின்சிறார் எவரும்

நன்ன லந்தனை அடையவும் நண்ணல ரெல்லாம்

பன்ன ரும்பழி மூழ்கவும் அருந்தவம் பயில

அன்னை மீளுதி என்றனன் புகரெனும் ஆசான்.                   10

 

குரவன் வாய்மையை வினவியே கோதில்சீர் அவுணர்

மரபு மேம்படு தன்மையான் மற்றிவை யெல்லாம்

அருளு கின்றனை ஆதலால் இப்பணி யடியேன்

புரிகு வேனென அவனடி வணங்கியே போனாள்.                  11

 

மயிலை அன்னவள் அவுணர்தம் மன்னற்கும் இனைய

செயலை யோதியே அவன்விடை யுங்கொடு சென்று 

கயிலை என்னநீ றாடியே காசிபன் இருந்து

பயிலும் நோன்புடை எல்லையை நாடியே படர்ந்தாள்.                    12

 

திருவும் மாரவேள் இரதிவேள் இரதியுந் திலோத்தமை யென்ன

மருவு தையலும் மோகினி யென்பதோர் மாதும்

ஒருத னித்திரு வடிவுகொண் டாலென உலகில்

பொருவில் மாயவன் பேரழ குருக்கொடு போனாள்.                       13

 

மண்ணுற் றோர்களும் மாதிரத் தோர்களும் மதிதோய்

விண்ணுற் றோர்களும் அன்னவள் எழில்நலம் விரைவில்

கண்ணுற் றோர்கிலர் அணுகினர் காமவேள் கணையின்

புண்ணுற் றோர்விளக் கழலுறு பறவையிற் புலர்ந்தார்.                    14

 

மதியும் ஞாயிறுஞ் சூழ்தரு மேருவின் வடபால்

விதிம கன்தவம் புரிதரும் வியனிலை மருங்கின்

அதிர்சி லம்பொடு மேகலை புலம்புற அனையாள்

திதிகொல் என்றெலாத் தேவரும் ஐயுறச் சென்றாள்.                      15

 

சென்ற மாயைஅக் காசிபன் இருக்கையில் திருவாழ்

மன்றல் லாவியுந் தடங்களுஞ் சோலையும் மணிசெய்

குன்று மாமலர்ப் பள்ளியும் மண்டபக் குழாமுந்

தன்றன் ஆணையால் துண்ணெனச் சூழ்தரச் சமைத்தாள்.          16

 

இனைத்தெ லாமவண் வருதலும் எந்தைதன் னடியை

மனத்தி னிற்கொடு பொறியினை உரத்தினால் வாட்டித்

தனித்து நோற்றிடுங் காசிபன் புகுந்தஅத் தகைமை

அனைத்தும் நோக்கியீ தென்கொலென் றதிசய மடைந்தான்.                17

 

முற்று மாங்கவை ஆசையின் நெடிதுபன் முறையால்

உற்று நாடியே மாயைதன் செயலென உணரான்

இற்றெ லாமிவண் இயற்றினர் யாரென எண்ணிச்

சுற்று நோக்கினன் யாரையுங் காண்கிலன் தூயோன்.                      18

 

வேறு

 

மெய்த்தவ வுணர்ச்சியை விடுத்து மேலையோன்

அத்தன தருளினால் அணங்கு மாயையால்

வைத்தன கண்ணுறா மனங்கொள் காதலாற்

சித்திர மெனவெரீஇ யினைய செப்புவான்.                               19

 

வானநா டிழிந்ததோ மகத்தின் வேந்துறை

தானநா டிழிந்ததோ தனதன் ஆதியோர்

ஏனைநா டிழிந்ததோ இதுவன் றேல்இவை

ஆனவா றுணர்கிலேன் அழுங்கு சிந்தையேன்.                    20

 

ஆரணன் செய்கையோ அகில முண்டுமிழ்

நாரணன் செய்கையோ அவர்க்கு நாடொணாப்

பூரணன் செய்கையோ பிறர்பு ரிந்ததோ

காரணந் தேர்கிலேன் கவலும் நெஞ்சினேன்.                              21

 

புன்னெறிக் கானிடைப் புகுந்த இத்திரு

நன்னெறிக் கேதுவோ நலந்த விர்ந்திடுந்

துன்னெறிக் கேதுவோ தொல்லை ஞாலமேல்

எந்நெறிக் கேதுவென் றிதுவுந் தேர்கிலேன்.                               22

 

என்றிவை சொற்றிவண் யாவ தாயினும்

நன்றதன் இயற்கையும் நமக்கு முன்னரே

ஒன்றறத் தெரிவுறும் உணர்ச்சி இங்ஙனஞ்

சென்றது பழுதெனச் சிந்தித் தானரோ.                           23

 

தெற்றெனத் தன்மனந் தேற்றித் தொன்மைபோல்

நற்றவம் இயற்றுவான் நணுகும் வேலையில்

மற்றது தெரிந்திடு மாயை தூமணிப்

பொற்றையில் தமியளாய்ப் பொலிந்து தோன்றினாள்.                     24

 

தோன்றினள் நிற்றலுந் தொல்லை நான்முகற்

கான்றதொர் காதலன் அவளை நோக்கினான்

வான்றிகழ் கற்பக வல்லி செய்தவத்

தீன்றதொர் கொடிஇவண் எய்திற் றோவென்றான்.                 25

 

நாற்றலை யான்மகன் நம்முன் இக்கொடி

தோற்றிய தற்புதச் சூழ்ச்சிக் கேதுவென்

றாற்றுறு தவத்றின் அகற்றி யாயிடை

வீற்றிருந் திடுவது விடுத்துப் போயினான்.                       26

 

கண்ணகல் வரைமிசைக் கடிது போயுறீஇ

அண்ணிய னாதலும் அரிவை யாய்உறப்

பெண்ணுரு வேகொல்இப் பெற்றித் தாலென

எண்ணினன் மையலுக் கெல்லை காண்கிலான்.                   27

 

புண்டரி கத்திகொல் பொன்னம் பாவைகொல்

அண்டர்தம் அணங்குகொல் என்னின் அன்னரைக்

கண்டறி வேன்எனைக் காதல் பூட்டிய

ஒண்டொடி இனையள்என் றுணர்கி லேனரோ.                    28

 

சேயிருங் கமலமேற் செம்மல் செய்கையால்

ஆயவள் என்னில்இவ் வழகு பெற்றிடான்

கூயது தேறினன் எல்லை இல்லதோர்

மாயையே பெண்ணென வந்த வாறென்பான்.                             29

 

புகன்றிவை பற்பல பொருவில் நான்முகன்

மகன்றன தருந்தவ வலியும் போதமும்

அகன்றனன் புணர்ச்சிவேட் டழுங்கி நைவதோர்

மகன்றிலின் பரிசென வருத்த மெய்தினான்.                              30

 

உண்ணிகழ் ஊன்பொருட் டுயிர்கொல் வேட்டுவர்

கண்ணியுட் பட்டதோர் கலையின் மாழ்குவான்

பெண்ணர சாயவிப் பேதைக் கென்கொலோ

எண்ணமென் றிடருழந் திரங்கி ஏங்கினான்.                               31

 

அதுபொழு தவுணரை அளிக்க வந்திடுந்

திதிநிகர் மடமகள் சிறந்த கண்களால்

பொதுவியல் நோக்கொடு புணர்ச்சி நோக்கினைக்

கதுமெனக் காட்டினள் முனிவன் காணுற.                        32

 

கண்டனன் முனிவரன் கலங்கி னான்பொதுக்

கொண்டதோர் நோக்கியல் குறித்துக் கூடுதல்

எண்டரு நோக்கினால் இவளை யெய்துமா

றுண்டென நினைந்தனன் உவப்பின் உம்பரான்.                   33

 

பெருந்துயர் உதவுவெம் பிணியுந் தீர்ப்பதேர்

மருந்துமற் றாதலும் மையல் மேதகும்

அருந்தவ முனிவரன் அனைய மாதுதன்

திருந்திய நோக்கியல் தௌ¤ந்து செப்புவான்.                             34

 

கற்பனை முதலிய கடந்த கண்ணுதற்

சிற்பரன் யாவையுஞ் சிதைய ஈறுசெய்

அற்புத மும்மவன் அருளும் போன்றதால்

பொற்புறு கின்றஇப் பூவை நாட்டமே.                                   35

 

மாயையுங் கொலையுமே மருவி வைகலும்

ஆயதோர் உலகினை அளிக்கும் நீர்மையாற்

பாயிருந் திரைக்கடல் நடுவட் பள்ளிகொள்

தூயனை நிகர்த்ததித் தொகை நோக்கமே.                        36

 

இயலிருள் மேனியால் இடியின் ஆர்ப்பினால்

வியனுயிர் முழுவதும் வெருவச் செய்துடன்

பயனுறு தீம்புனல் பரிவின் ஈதரு

புயலையும் நிகர்த்தன பூவை பார்வையே.                        37

 

என்பன பலபல எண்ணி அன்னவள்

தன்படி வத்துரத் தகைமை காணுறீஇ

அன்பினில் வியந்துநின் றழுங்கு நெஞ்சொடு

நன்பெரு நயப்பினால் நவிறல் மேயினான்.                              38

 

வேறு

 

வானுறு புயலின் தோற்றம் வரம்பில்சீர்க் கங்குல் வண்ணம்

ஏனைய கருமை யெல்லாம் இலக்கணத் தொருங்கே ஈண்டி

மீனுறழ் தடங்க ணாள்பால் மேவிய என்ப தல்லால்

நானமார் கூந்தற் கம்மா நாம்புகல் உவமை யாதோ.                             39

 

கோட்டுடைக் கு£வித் திங்கள் குனிசிலை இரண்டு மானின்

சூட்டுடை நுதற்கொவ் வாது தொலைந்துபோய்¢ தொல்லை வான

நாட்டிடைக் கரந்துந் தோன்ற நணுகியுந் திரியு மென்னின்

மீட்டிதற் குரைக்க லாகும் உவமைகள் வேறு முண்டோ.                  40

 

அருவத்தில் திகழுங் காமன் ஆடலஞ் சிலையும் நெற்றி

உருவத்துக் குடைந்து வான்புக் கொதுங்கிய மகவான் வில்லும்

மருவத்தந் துரைத்தும் என்னின் மற்றவை யிரண்டும் மாதின்

புருவத்தைப் போலா தம்மின் மீமிசைப் பொருந்து மன்றே.                41

 

வண்ணமா வடுக்கோல் நீலம் வாளயில் கயல்சேல் என்றே

எண்ணின அவற்றி லொன்றும் யாவது மியல்புற் றன்றாற்

கண்ணிணைக் கிணையே தென்னிற் காமர்பாற் கடலுள் எங்கோன்

உண்ணிய எழுநஞ் சென்னில் ஒருசிறி தொப்ப தம்மா.                    42

 

எள்ளென்றும் ஒத்தியென்றும் ஏர்கொள்சம் பகப்போ தென்றுந்

தள்ளருங் குமிழ தென்றுஞ் சாற்றினர் அவைகள் நாடில்

தௌ¢ளிறு மன்று வேறு செப்பவோர் பொருளு மில்லை

உள்ளதொன் றுரைக்க வேண்டுந் துண்டத்துக் குவமை தேரின்.             43

 

கெண்டையந் தடங்கட் பாவை கேழ்கிளர் இதழ்க்கொப் புன்னில்

தொண்டையங் கனியுண் டென்று சொல்வனேல் அதுவுந் துப்பால்

உண்டிடும் விருப்பி னோருக் குலப்புறா அமிர்தம் நல்கிக்

கொண்டிருந் திடினே ஒப்பாம் இல்லையேற் கூடா தன்றே.                 44

 

முகையுறு தளவும் புள்ளின் முருந்தமுங் குருந்து முத்தும்

அகையுறு முடுவுஞ் சாற்றின் அணியெயி றதற்கொவ் வாவால்

நகையது தெரிந்தோர் வெ•க நன்னலம் புரியும் நீரால்

நிகர்பிறி தில்லை திங்கள் நிலாவெனில் ஆகு மன்றே.                            45

 

மயிரெறி கருவி வள்ளை தோரண மணிப்பொன் னூசல்

பெயர்வன நிகர்க்கு மென்று பேசுதல் பேதை நீர்த்தாஞ்

செயிரற வுலோக மாக்குந திசைமுகக் கொல்லன் செய்த

உயிரெறி கருவி போலும் ஒண்குழைக் காது மாதோ.                             46

 

கொங்குறு கூந்த லாள்தன் கோலவாள் முகத்துக் கொப்பாம்

திங்களென் றுரைக்கில் தேயும் வளர்வுறுஞ் சிறப்ப தன்றால்

பங்கய மெனினும் உண்டோர் பழுதுமற் றதற்கும் என்னில்

அங்கதற் கதுவே யலலால் அறையலாம் படிமற் றுண்டோ.                47

 

சரந்தெறு விழியி னாள்தன் களத்தின தெழிலைச் சங்கங்

கரந்தன கமுகும் அற்றே அன்னது கண்டு நேரா

வரந்தரு புலவர் சொற்றார் மற்றவர் அதற்கோ நாளும்

இரந்திடு தொழில ராகி இழுக்கமுற் றார்கள் அன்றே.                             48

 

மாயவன் அதரஞ் சேர்த்தி வரன்முறை இசைத்த பச்சை

வேயெனும் வதுவும் யான்செய் மெய்த்தவம் அனைய நீராள்

தூயபொற் றோள்கண் டஞ்சித் தோற்றதால் என்னில் அன்னான்

சேயவன் வணக்கா தேந்துஞ் சிலைகொலோ நிகர்ப்ப தம்மா.                      49

 

பூந்தள வனைய மூரற் பொற்கொடி கரத்துக் கொவ்வா

காந்தளும் நறிய செய்ய கமலமா மலரும் என்னில்

மாந்தளிர் பொருவ துண்டோ வள்ளுகிர் கிள்ளை நாசி

ஏய்ந்தள வற்றுக் காமர் இலைச்சினை யாய தன்றே.                             50

 

பொருப்பென எழுந்து வல்லின் பொற்பெனத் திரண்டு தென்னந்

தருப்பயில் இளநீ ரென்னத் தண்ணெனா அமுதுட் கொண்டு

மருப்பெனக் கூர்த்து மாரன் மகுடத்தில் வனப்பு மெய்தி

இருப்பதோர் பொருளுண் டாமேல் இணைமுலைக் குவமை யாமே.        51

 

அந்திரு வன்னாள் மேனி அமைத்துவெம் முலைக்கண் செய்வான்

சுந்தர வள்ளம் நீலுண் டுகிலிகை விதிகொள் போழ்திற்

சிந்திய துள்ளி யொன்றின் ஒழுக்கங்கொல் சிறப்பின் மிக்க

உந்தியின் மீது போய உரோமத்தின் ஒழுக்க மன்றே.                             52

 

மாசடை யாத நீல மணியுறழ் வண்ண மாலோன்

காசடை அகலந் தாங்குங் கனங்குழைத் திருவும் போற்றுந்

தேசுடை மாதி னுந்திச் சீரினுக் கனையன் துஞ்சும்

பாசடை நேர்வ தாமோ பகரினும் பழிய தன்றோ.                        53

 

கண்டுழி மாயும் அன்றே மின்னெனில் ககன மாகக்

கொண்டிடின் உருவின் றாகுங் கொடியெனில் துடிய தென்னில்

திண்டிறல் நாக மென்னில் சீரிதன் றணங்கின் நாப்பண்

உண்டிலை யென்று மானும் ண்மைக்கோ ருவமை யுண்டோ.                     54

 

மயலுடைப் பணியும் ஆல வட்டமும் வனப்புச் செய்த

வியலுடைத் தேரும் அச்சுற் றிரங்கியே உயிர்க்கு மென்றாற்

கயலுடைக் கண்ணாள் அல்குற் கொப்பவோ காமர் வீடவ்

வியலுறுப் பென்பர் யாரும் மேலது காண்டும் அன்றே.                           55

 

கோழிலை அரம்பை யீனுங் குருமணித் தண்டை வேழத்

தாழிருந் தடக்கை தன்னை நிகரெனில் தகுவ அன்றால்

மாழையுண் கருங்கண் மாதின் மகரிகை வயங்கு பொற்பூண்

சூழுறு கவானே போலும் அவையெனிற் சொல்ல லாமோ.                 56

 

அலவனாம் ஞெண்டை அன்னாள் அணிகெழு முழந்தாட் கொப்பாப்

புலவர்கள் புகலா நின்ற வழக்கலாற் பொருந்திற் றன்றால்

திலகநன் மணியே போல்வாள் தெய்வத வடிவுக் கிந்த

உலகினுள் இழிந்த தொன்றை உரைக்கின• துவமை யாமோ.              57

 

தமனியத் தியன்ற பொற்பில் தாவிலா ஆவந் தானுஞ்

சிமையநேர் கொங்கை மாதின் திகழ்கணைக் காலுந் தூக்கிற்

சமமிது பொருளி தேன்றே தமியனேன் றுணிந்து சிந்தை

அமைவுற அறிதல் தேற்றேன் ஐயமுற் றிடுவன் யானே.                  58

 

அரும்புறு காலைக் கொங்கைக் கழிவுற்று முகமொவ் வாது

சுரும்புற மலர்ந்த பின்னுந் தொலைந்துகை யினுக்குந் தோற்றுத்

திரும்பவும் அடிக்கும் அஞ்சிச் சிதைந்தது கமல மென்றால்

பெரும்பயம் உற்று நோற்றும் பிழைத்தது போலு மன்றே.                 59

 

மேக்குயர் கூனல் ஆமை விரைசெறி குவளைத் தோடு

தாக்குறு பந்து பிண்டித் தண்டளிர் சார்பு கூறில்

தூக்குறு துலையின் தட்டுத் தொகுத்தொரு வடிவில் வேதா

ஆக்குறின் மாதின் தாளுக் கதுநிக ராகும் போலும்.                       60

 

ஆவியின் நொய்ய பஞ்சும் அனிச்சமா மலரும் அன்னத்

தூவிய மிதிக்கிற் சேந்து துளங்குறும் அடிகள் என்றால்

நாவியங் குழலின் மாது நடந்திட ஞாலம் ஆங்கோர்

பூவதோ அதுபூ அன்றேல் பொன்னடி பொருந்து மோதான்.                 61

 

கயலுறழ் கருங்கட் செவ்வாய்க் காரிகை தனது சாயல்

மயிலெனக் கூறின் அல்லால்¢ மற்றதற் குவமை யில்லை

இயலுறு வடிவிற் கொப்ப தேதுள திவளே போலச்

செயலுறுத் தெழுதிற் றுண்டேல் சித்திரம் அ•தே போலும்.                 62

 

ஆனனம் நான்கு செய்தாட் காயிர மடங்கேர் கொண்ட

மானினி தன்னை வேதா வகுத்திலன் கொல்லே அன்னான்

தானமைத் துளனே என்னில் தலைபல தாங்கி இந்தத்

தூநிலா நகையி னாளைத் தொடர்ந்துபின் திரிவன் அன்றே.                       63

 

மையறு புவியில் வந்த மாதிவள் அடியி லுள்ள

துய்யதோர் குறிகள் வானில் தொல்பெருந் திருவில் வைகுஞ்

செய்யவன் றனதுதேவி சிரத்தினும் இல்லை யென்றால்

மெய்யுறு குறிகளெல்லாம் இனைத்தென விளம்பற் பாற்றோ.                      64

 

வேறு

 

என்று முன்னிஅவ் வேந்திழை தன்முனஞ்

சென்று காமர் திருவினுஞ் சீரியோய்

நன்று நன்றுநின் நல்வர வேயெனா

நின்று பின்னும் நெறிப்பட ஓதுவான்.                            65

 

யாது நின்குலம் யாதுநின் வாழ்பதி

யாது நின்பெயர் யாருனைத் தந்தவர்

ஓது வாயென் றுரைத்தனன் உள்ளுறு

காத லான்மிகு காசிபன் என்பவே.                               66

 

வனிதை கூறுவள் மாதவ நீயிது

வினவி நிற்றல் விழுமிதன் றென்னிடைத்

தனிய னாகியுஞ் சார்ந்தனை நோற்பவர்க்

கினிய வேகொல் இனையதோர் நீர்மையே.                       67

 

ஏதில் நோன்பை இகந்துணர் வில்லதோர்

பேதை மாந்தரில் பேசியெற் சார்வது

நீதி யேயன்று நின்கடன் ஆற்றிடப்

போதி யென்ன முனிவன் புகலுவான்.                            68

 

மங்கை கேட்டி வரம்பறு பற்பகல்

அங்கம் வெம்ப அகமெலி வுற்றிடச்

சங்கை யின்றித் தவம்பல செய்திடல்

இங்கு வேண்டிய தெய்துதற் கேயன்றோ.                 69

 

பொன்னை வேண்டிக்கொ லோபொன்னின் மாநகர்

தன்னை வேண்டிக்கொ லோசசி யாம்பெயர்

மின்னை வேண்டியே அல்லது வேறுமற்

றென்னை வேண்டிஅவ் விந்திரன் நோற்றதே.                    70

 

ஐயதின் மேனி அலசுற யான்தவஞ்

செய்த திங்குனைச் சேருதற் கித்திறம்

நெய்தின் மேவினை நோற்றதற் குப்பயன்

எய்தி யுற்ற தினித்தவம் வேண்டுமோ.                           71

 

பேரும் ஊரும் பிறவும் வினவினேற்

கோர வொன்றும் உரைத்திலை ஆயினுஞ்

சேர வேபின் தௌ¤குவன் காமநோய்

ஈர கின்ற திரங்குதி நீயென்றான்.                        72

 

மாயை கேட்டு வறிது நகையளாய்

நீயிவ் வாறு நெடுந்தவஞ் செய்ததும்

ஆயில் என்பொருட் டோஅ• தன்றரோ

தூயை வஞ்சஞ் சொலன்முறை யோவென்றாள்.          73

 

மற்றிவ் வண்ண மயில்புரை சாயலாள்

சொற்ற காலை யனையவள் சூழ்ச்சியை

முற்று மோர்ந்து முதிர்கலை யாவையுங்

கற்று ணர்ந்திடு காசிபன் கூறுவான்.                             74

 

பொய்ம்மை யாதும் புகல்கிலன் நான்முகன்

செம்மல் யான்அது தேருதி போலுமால்

இம்மை யேபர மீந்திடு வோய்இவண்

மெய்ம்மை யேயுரைத் தேன்உள வேட்கையால்.          75

 

பன்னெ டுந்தவம் பற்பகல் ஆற்றியான்

முன்னி நின்றது முத்திபெற் றுய்ந்திட

அன்ன தேயெற் கருள்செய வந்தனை

ளுன்னை மேவலன் றோஉயர் முத்தியே.                 76

 

ஈத லான்மற் றெனக்கொரு பேறிலை

ஆத லாலுனை யேயடைந் தேனெனக்

காதன் மாதும்அக் காசிபற் கண்ணுறீஇ

ஓத லாம்பரி சொன்றை யுணர்த்துவாள்.                 77

 

வேறு

 

மங்கலம் இயைந்திடு வடாதுபுல முள்ளேன்

செங்கனக மேருவரை சேர்ந்ததொரு தென்பால்

கங்கைநதி யின்கரை கலந்திட நினைந்தேன்

அங்கணுறு கின்றதொ ரரும்பயன் விழைந்தே.                    78

 

வல்லையவண் ஏகுறுவன் மாதவ வலத்தோய்

நில்லிவண் எனப்பகர நீனிறம தாகுஞ்

செல்லுறழு மேனிதரு செம்மல்அருள் மைந்தன்

ஒல்லையிது கேண்மென உரைக்கலுறு கின்றான்.         79

 

கங்கைநதி யாதிய கவின்கொள்நதி யேழும்

அங்கணுல கந்தனில் அரன்பதிகள் யாவும்

மங்குல்தவழ் மேனியவன் வாழ்பதியு மற்றும்

இங்குற வழைப்பனொ ரிமைப்பொழுது தன்னில்.          80

 

பொன்னுலகும் விஞ்சையர்கள் போதுலகும் ஏனோர்

மன்னுலகும் மாதிரவர் வாழுலகும் அங்கண்

துன்னியதொர் தேவரொடு சூழ்திருவி னோடும்

இன்னபொழு தேவிரைவின் ஈண்டுதர வல்லேன்.          81

 

மூவகைய தேவரையும் முச்சகம துள்ளோர்

யாவரையு நீதெரிய எண்ணுகினும் இங்ஙன்

மேவரவி யற்றிடுவன் வெ•கல்புரி வாயேல்

காவலுறு பேரமிர்த முங்கடிதின் ஈவேன்.                 82

 

எப்பொருளை வேண்டினும் இமைப்பிலுன வாக

அப்பொருளி யாவையும் அளிப்பன்அ• தல்லால்

மெய்ப்புதல்வர் வெ•கினும் விதிப்பன்அவர் தம்மை

ஒப்பிலை இவர்க்கெனவும் உம்பரிடை உய்ப்பேன்.        83

 

அந்தமிகு மேனகை அரம்பைமுத லானோர்

வந்துனடி யேவல்செய வல்லைபுரி கிற்பேன்

சிந்தைநனி மால்கொடு தியங்குமென தாவி

உய்ந்திட நினைந்தருடி ஒல்லைதனில் என்றான்.          84

 

வேறு

 

முனியிது புகற லோடு முற்றிழை முறுவல் எய்தித்

தனியினள் என்று கொல்லோ சாற்றினை இனைய நீர்மை

இனியது தவிர்தி மேலோர்க் கிசையுமோ யானும் முன்னம்

நினைவுழிச் செல்வல் நோற்று நீயிவண் இருத்தி என்றே.          85

 

கங்கையின் திசையை முன்னிக் கடிதவட் செல்வாள் என்ன

அங்கவள் போத லோடும் அருந்தவன் தொடர்ந்து செல்ல

மங்கையும் அருவ மெய்தி மாயையிற் கரந்து நிற்ப

எங்கணும் நோக்கிக் காணான் இடருழந் திரங்கி நைவான்.          86

 

ஆகத் திருவிருத்தம் - 86

    - - -

 

 

2. காசிபன் புலம்புறு படலம்

 

தேனீர் மையெனப் புகல்வாள் சிறிதுந்

தானீ ரமிலாள் தனிமா யவளே

மானீர் உமதாம் வயின்உற் றனளோ

ஏனீர் மொழியா திரிகின் றதுவே.                        1

 

சிலைவா ணுதலாள் திறன்மா யையெனும்

வலைவீ சியெனா ருயிர்வவ் வினளால்

கலையீர் இவண்நீர் அதுகண் டனிரோ

நிலையீர் வெருளா நெடிதோ டுதிரால்.                           2

 

கடிதேர் களிறே கழிகா தலையாய்ப்

பிடிதேர் பரிசாற் பெயர்வாய் தமியேன்

நொடிதே தளரா நெறிநே டினையக்

கொடியாள் தலையுங் கொணராய் கொணராய்.            3

 

அருளால் உனையே அளியென் றனரால்

பெரியார் அவர்சொற் பிழையா குவதோ

தரியா அரியே தமியேன் உயிரைத்

தெரிவான் நினைவோ திரிகின் றனேயே.                 4

 

மேவிப் பிரிவாள் விழிபோல் அடுவாய்

ஆவிக் குறவோ அலைமன் மதனப்

பாவிக் கும்இனிப் படையாய் வருவாய்

வாவிக் குவளாய் எனைவாட் டுதியோ.                  5

 

செந்தா மரைமேல் திருவாம் எனவே

வந்தாள் தணியா மயல்செய் தகல்வாள்

அந்தோ வினவா அவளைக் கொணர்வான்

சந்தா கிலையென் சந்தே உரையாய்.                            6

 

பொன்னிற் பொலிவுற் றிடுபூங் கமலந்

தன்னில் துணையோ டுதழீஇத் தணவா

அன்னப் பெடைகாள் அறனோ புகலீர்

என்னைத் தனிவைத் தவளே கியதே.                            7

 

தணியா வகைமால் தமியேற் கருளித்

துணியா அகல்வாள் படர்தொல் நெறியைக்

குணியா வுரைசெய் குதியென் றிடினுங்

கணியாய் இதுவோ கணிதன் இயல்பே.                  8

 

படைவேள் கணையே பரிதிக் குறவே

படவார் முகமே மதியின் பகையே

விடமே புரையும் விழிமெல் லியல்நின்

னிடமே வருவாள் ஔ¤யா திசையாய்.                          9

 

நின்றீர் மிகவுந் நெடியீர் பெரியீர்

இன்றீ ரமிலா தெனைநீங் கினள்முன்

சென்றீ ரவள்போஞ் செயல்கா ணுதிர்செய்

குன்றீர் மொழியீர் குறைசெய் துளனோ.                  10

 

மயிலே ரியலாள் ஒருமா யவளே

இயலே தறியேன் இவண்நின் றனளோ

பயிலே சிலநீ பகர்வாய் அதனால்

குயிலே எனதா ருயிர்கொள் ளுதியோ.                   11

 

நின்பால் வரவே நினைவாய் மொழிவாள்

என்பால் இலையிவ் வழியே கினளால்

மென்பா லெனமே வியமா ருதமே

தென்பால் வருவாய் செயல்கூ றுதிநீ.                           12

 

ஆரத் தடமே அருள்நீ ரினைஉன்

ளீரத் தினையென் றெவரும் புகல்வார்

சாரிற் சுடுவாய் தளரேல் எனவே

சோர்வுற் றிடுமென் துயர்தீர்க் கிலையே.                 13

 

களிசேர் மயிலே கவிரா கியவாய்க்

கிளியே குயிலே கிளைதான் அலவோ

தளரா வகைநீர் தகவே மொழியா

அளியேன் உயிருக் கரணா குதிரால்.                             14

 

அறவே துயர்செய் தணுகா திகலித்

துறவே துணிவாள் தொடர்புந் தொடர்போ

உறவே யினிநீர் உவள்போம் நெறியைப்

புறவே தமியேன் பெறவே புகல்வீர்.                             15

 

எனவே பலவும் இயல்சேர் முனிவன்

மனமால் கொடுசொற் றிடமற் றதனை

வினவா மகிழா வியன்மெய்ம் மறையா

அனமே யனையாள் அவணுற் றிடலும்.                  16

 

வேறு

 

நோற்குறு முனிவன் தன்பால் நொய்தென மாயை யெய்தித்

தீர்க்கலா மையல் பூட்டிச் செய்தவம் அழித்தாள் அந்தோ

பார்க்கிலன் இதனை யென்னாப் பரிவுசெய் தகன்றான் போலக்

கார்க்கடல் வரைப்பின் ஏகிக் கதிரவன் கரந்தான் அன்றே.          17

 

தந்தைகா சிபன்என் றோதுந் தவமுனி யவன்பாற் சார

வந்துளாள் யாயே அன்றோ மற்றியவர் தலைப்பெய் கின்ற

முந்துறு புணர்ச்சி காண்டல்முறைகொலோ புதல்வற் கென்னாச்

சிந்தைசெய் தகன்றான் போன்று தினகரக் கடவுள் சென்றான்.      18

 

அந்தமில் நிருதர் என்னும் அளவைதீர் பானாட் கங்குல்

வந்திடு மின்னே யென்னா வல்லையின் மதித்து வானத்

திந்திரன் ஆணை போற்றும் இலங்கெழில் நேமிப் புத்தேள்

சிந்துவிற் கரத்தல் போன்று செங்கதிர்ச் செல்வன் போனான்.               19

 

வேலையின் இரவி செல்ல விண்ணவர் யாருங் கொண்ட

வாலிய திருவுஞ் சீரும் வன்மையும் அகல மாயை

பாலுறும் அவுணர் தானைப் பல்குழுப் பரவிற் றென்ன

மாலையும் இருளின் சூழ்வும் வல்லைவந் திறுத்த வன்றே.               20

 

மாகமேல் நிமிர்ந்த செக்கர் மாலையம் பொழுது நல்கூர்ந்

திகெனா இரக்கும் நீரார்க் கிம்மியின் துணைய தேனும்

ஓகையால் வழங்கா நீதி ஒன்னலான் ஒருவன் செல்வம்

போகுமா றென்ன வாளா பொள்ளெனப் போயிற் றாமால்.         21

 

இரும்பிறை உருவின் எ•கார் கூர்ங்குயத் தினுமீர்க் கல்லா

வரம்பறும் இருளின் கற்றை கணங்களும் மருளு நிராற்

பரம்பிய தியாண்டு மாகிப் பாரெனப் பட்ட மாது

கரும்படாம் ஒன்று மேற்கோள் காட்சியைப் போன்ற தன்றே.               22

 

வண்டுழாய் மோலி மைந்தன் மாலிருட் கங்குல் வேழத்

தெண்டரு வதனம் பட்ட இரும்புகர்ப் புள்ளி யென்ன

அண்டர்தந் தருக்கள் சிந்தும் அணிமல ரென்ன வான்றோய்

கொண்டலிற் படுமுத் தென்னத் தாரகை குலவிற் றன்றே.         23

 

துண்ணென உலக முற்றுஞ் சூழ்ந்தபே ரிருளா நஞ்சைத்

தெண்ணில வாகி யுள்ள செங்கையால் வாரி நுங்கி

விண்ணவர் புகழ நீல வியன்நிறந் தன்பாற் காட்டுங்

கண்ணுதல் போன்று முந்நீர்த் தோன்றினன் கதிர்வெண் டிங்கள்.    24

 

அழுந்துறு பாலின் வேலை அமரர்கள் கடைந்த காலைச்

செழுந்துளி மணிக ளடுந் தெறித்தென உடுக்கள் தோன்றக்

கழுந்துறும் அவுணர் என்னுங் காரிருள் தொலைய அங்கண்

எழுந்ததோ ரமுதம் போன்றும் இலங்கினன் இந்து வென்பான்.      25

 

இரவெனும் வல்லோன் ஞால மென்பதோர் உலையில் வேலைக்

கரியுறு வடவைத் தீயில் களங்கொடு வெண்பொன் சேர்த்தி

விரைவொடு செம்மை செய்து மீட்டுமோர் மருந்தால் தொல்லை

உருவுசெய் தென்னச் செங்கேழ் ஔ¤மதி வௌ¤ய னானான்.              26

 

அண்டருங் ககன மென்னும் அகலிருந் தடத்திற் பூத்த

விண்டதோர் குவளை ஆம்பல் போலுமால் மீன்கள் வௌ¢ளைப்

புண்டரீ கத்தைப் போலும் புதுமதி அதன்கட் டேனார்

வண்டினம் ஒப்ப தன்றே மாசுதோய் களங்க மாதோ.                      27

 

அலைதரு நேமி என்னும் ஆன்றதோர் தடத்தின் பாலாம்

நிலவெனும் வலையை யோச்சி நிழல்மதிப் பரதன் ஈர்த்துப்

பலநிறங் கொண்ட மீன்கள் பன்முறை கவர்ந்து வான்மேற்

புலருற விரித்த தேபோற் பொலிந்தன உடுவின் பொம்மல்.        28

 

கழிதரும் உவரி நீத்தங் கையகப் படுத்து மாந்தி

எழிலிகள் வான மீப்போய் இருநிலத் துதவல் காணூஉப்

பழிதவிர் மதியப் புத்தேள் பாற்கடல் பருகி யாண்டும்

பொழிதரும் அமிர்தம் என்னப் புதுநிலாப் பூத்த தன்றே.            29

 

மலர்ந்திடுங் கடவுட் டிங்கள் வாணிலாக் கற்றை எங்குங்

கலந்தன உலகில் யாருங் களித்தனர் குமுத மாதி

அலர்ந்தன தளிர்த்த சோலை அம்புயப் போது செல்வி

புலர்ந்தன ஒடுங்கு கின்ற புகைந்தன பிரிந்தோர் புந்தி.             30

 

அல்லவை புரியா ரேனும் அறிவினிற் பெரியா ரேனும்

எல்லவர் தமக்கு நண்பாய் இனியவே புரிதற் பாற்றோ

பல்லுயிர்த் தொகைக்கும் இன்பம் பயந்திடு மதிகண் டன்றோ

புல்லிய கமல மெல்லாம் பொலிவழிந் திட்ட வன்றே.                     31

 

திங்களின் மலர்ந்த செல்வித் தேன்முரல் குமுதம் எங்கோன்

பங்கமுற் றார்கண் மேவான் பதுமம்ஏன் ஒடுங்கிற் றென்னாத்

தங்களில் உரைத்தல் போலாஞ்சசிக்கது உண்மை எம்பால்

இங்கிலை யென்ப போன்ற இசையளி பொதிந்த கஞ்சம்.           32

 

கங்குல்வந் திறுத்த காலைக் கடிமனைக் கதவம் பூட்டிச்

செங்கண்மால் தன்னைப் புல்லித் திருமகள் இருந்தா ளென்னக்

கொங்கவிழ் கின்ற செங்கேழ்க் கோகன தங்கள் எல்லாம்

பொங்கிசை மணிவண் டோடும் பொதிந்தன பொய்கை யெங்கும்.   33

 

வேறு

 

ஆனதோர் காலையில் அமரர் தம்மையுந்

தானவர் தம்மையுந் தந்த காசிபன்

வானகம் எழுதரும் மதியின் தெண்ணிலா

மேனிய தடைதலும் வெதும்பி னானரோ.                34

 

குலைந்தனன் தன்னுளங் குறைந்த வன்மையன்

அலந்தனன் ஒடுங்கினன் புலம்பி அங்கண்வான்

ரூ¤லந்தனில் எழுதரு விலவை நோக்கினான்.                    35

 

காலையில் எழுந்தசெங் கதிரின் நாயகன்

மாலையம் பொழுதினில் மறைந்து கீழ்த்திசை

வேலையில் விரைவுடன் மீண்டும் வந்துளான்

போலும்அந் தோவிது புதுமையோ வென்பான்.            36

 

ஞாயிறும் அன்றெனில் நடுவ ணாகியே

பாயிரும் புணரியுட் பயின்று தோன்றலால்

ஏயென உலகட எண்ணி யாண்டுறுந்

தீயெனுங் கடவுளே திங்கள்அன் றென்பான்.                      37

 

இந்துவென் றுலகெலாம் இசைப்ப நின்றதோர்

செந்தழற் கடவுள்இத் திசையிற் செல்வுழி

வந்ததோர் சோதிகொல் வானம் எங்கணும்

அந்தியஞ் செக்கரென் றடைந்தவா றென்பான்.            38

 

காண்டகு மதியெனக் கழறுஞ் செந்தழல்

மூண்டிடு புகைகொலோ முன்னம் வானமும்

ஈண்டுறு தரணியுந் திசையும் எங்குமாய்

நீண்டதோர் இருளென நிமிர்ந்தவா றென்பான்.            39

 

தெண்டிசைப் பிறந்திடுந் திங்கட் செந்தழல்

கொண்டது வாலிதாங் கோலங் காரிடைக்

கண்டனன் இத்திறங் கரையில் ஆவிகள்

உண்டதிற் பெற்றதிவ் வுருவமே யென்பான்.                      40

 

ஊனமில் செக்கராய் உதித்துப் பின்னரே

வானிற னாகிய மதியத் தீத்தரத்

தானிறை புலிங்கமே அலது தாரகை

மீனெனப் படுவது வேறுண் டோவென்பான்.                      41

 

மால்கடல் அதனிடை வந்த பான்மையால்

ஆலமி தாகுமால் அமரர்க் கன்றெழு

நீலமெய் யுருவினை நீத்துத் திங்களின்

கோலமொ டின்றிவட் குறுகிற் றோவென்பான்.            42

 

இங்கிவை யாவுமன் றேர்கொள் வேலையில்

வெங்கனல் முழுவதும் விடமும் ஆர்ந்தெழீஇ

மங்குலிற் சிதறிட வானிற் புக்கனன்

திங்களே யாமிது திண்ணம்என் கின்றான்.                43

 

இனையன மருட்கையால் இசைத்த காசிப

முனிவரன் என்பவன் முன்னை மாயையை

நினைபவ னாகியே நெடிது காதலால்

அனையவள் தனைவிளித் தரற்றல் மேயினான்.          44

 

வேறு

 

கொங்குண் கோதைத் தாழ்குழல் நல்லீர் கொடியேன்முன்

எங்கு மெங்குங் காணுறு கின்றீர் எழின்மின்னின்

பொங்குஞ் சோதி போலெதிர் புல்லும் படிநில்லீர்

மங்கும் போதோ சேருதிர் நெஞ்சம் வலியீரே.                            45

 

முன்னஞ் செய்தீர் காதலை நோன்பை முதஅ லாடும்

பின்னஞ் செய்தீர் மாரனை ஏவிப் பிழைசெய்தீர்

சின்னஞ் செய்தீர் நல்லுணர் வெல்லாஞ் சிறியேனுக்

கின்னஞ் செய்யும் பெற்றியும் உண்டேல் இசையீரே.                      46

 

வாகாய் நின்ற குன்றமும் யாவும் வருவித்தீர்

ஏகா நின்றீர் இவ்விடை தன்னில் ஏனைநீங்கிப்

போகா நின்றீர் வல்லையின் மீண்டும் புவியெங்கும்

ஆகா நின்றீர் நுஞ்செயல் யாரே அறிகிற்பார்.                             47

 

பற்றே நும்பால் ஆயினன் முன்னம் பயில்செய்கை

அற்றேன் வேளால் ஆற்றவும் நொந்தேன் அ•தொயும்

உற்றேன் அல்லேன் உம்மொடும் இன்னும் உழல்கின்றேன்

பெற்றேன் வாளா மாய்ந்தனன் என்னும் பிழையொன்றே.          48

 

நேயங் கொண்டீ ராமென வந்தீர் நெறிநில்லா

மாயங் கொண்டீர் வன்றிறல் கொண்டீர் மயல்செய்யுங்

காயங் கொண்டீர் ஆருயிர் நிற்கக் கருதீரேல்

தாயம் கொண்டீர் கூற்றொடு போலுந் தனிவந்தீர்.                 49

 

வேண்டேன் வேறோர் மாதரை நும்பால் வியன்மோகம்

பூண்டேன் உம்மை மாயவ ரென்னும் பொருள்கண்டேன்

ஈண்டே சென்றீர் போல்கர வுற்றீர் எய்தீரேல்

மாண்டேன் இன்னே ஆருயிர் நிற்பான் வருவீரே.                 50

 

ஒன்றே யாகும் மாயம தால்நீ ருலகெல்லாம்

வென்றே செல்வீர் என்னுயிர் கொள்வான் விழைவீரேல்

நன்றே நன்றே நல்குவன் யானே நனிநண்பால்

சென்றே யோர்கால் மாமயல் தீரச் சேர்வீரே.                             51

 

என்னா வென்னா இத்தகை பன்னி இடராழித்

துன்னா மாழ்கிச் சோர்தரும் எல்லைத் துகடீரும்

மின்னா கின்ற மாயவள் அன்னான் விழிகாண

முன்னாய் நின்றாள் எவ்வினை கட்கு முதலானாள்.                      52

 

ஆகத் திருவிருத்தம் - 138.

     - - - 

 

 

3.  அ சு ர ர்  தோ ற் று  ப ட ல ம்

 

கந்தார் மொய்ம்பிற் காசிபன் என்போன் கடிதங்கண்

வந்தாள் செய்கை காணுத லோடு மகிழ்வெய்தி

அந்தா உய்ந்தேன் யானென மின்கண் டலர்கின்ற

கொந்தார் கண்டல் போல்நகை யோடுங் குலவுற்றான்.             1

 

ஆடா நின்றான் குப்புற லுற்றான் அவள்தன்மேல்

பாடா நின்றான் யாக்கைபொ டிப்பிற் படர்போர்வை

மூடா நின்றான் அன்னதொர் மாயை முன்சென்றான்

வீடா நின்ற தன்னுயிர் காக்கும் விதிகொண்டான்.                 2

 

வேறு

 

என்னேசெய வேண்டிற்றவை எல்லாமிசை வாலே

முன்னேபுரி கிற்பேன்இவண் முனிகின்றதை ஒருவி

நன்னேயமொ டெனையாளுதிர் நனிவல்லையில் என்னாப்

பொன்னேர்அடி மிசைதாழ்தலும் அவள்இன்னது புகல்வாள்.        3

 

வெருவுற்றிடல் இவணின்றஅன் வியன்மெய்யினுக் கியையுந்

திருமிக்குறு தகவாகிய திறன்மேனியும் மேற்கொள்

உருவொப்பதொர் வடிவும்முடன் உடனெய்திடு வாயேல்

மருவுற்றிடு கின்றேனென மயில்சொற்றனள் அன்றே.                     4

 

ஏமுற்றிடு முனிவர்க்கிறை இதுகேட்டலும் முன்னங்

காமக்கடல் படிகின்றவன் களிசேர்தரும் உவகை

நாமக்கட லிடை ஆழ்ந்தனன் நன்றால்இ• தென்றான்

சேமத்திரு நிதிபெற்றிடும் இரவோன்எனத் திகழ்வான்.             5

 

அற்றேமொழி தருதன்மையில் ஆர்வத்தொடு தமியேன்

குற்றேவல்செய் கிற்பேன்இளங் கொடியோரிடை யென்னாச்

சொற்றேதவ முயல்வன்மையில் துகடீர்தரும் அனிலப்

பொற்றேரவற் கிலதென்பதொர் புத்தேள்உருக் கொண்டான்.         6

 

அன்றாயதொ ருருவெய்திய அறிவன்றனை வியவா

நன்றாலுன தியல்பாமென நகையாக்கரம் பற்றாக்

குன்றாகிய முலையாள்அவற் கொடுபோந்தனள் அங்கட்

பொன்றாழ்கிரி யெனவோங்மொர் பொலன்மண்டபம் புகுந்தான்.     7

 

வேறு

 

கற்பனை இன்றியே கடிதின் முன்னுறம்

அற்புத மண்டபத் தாணை யால்வரும்

பொற்புறு சேக்கையிற் பொருந்தி னாரரோ

எற்படு கங்குலின் முதலி யாமத்தில்.                            8

 

சூருறு வெம்பசி தொலைப்ப வைகலும்

ஆரஞர் எய்தினோன் அரிதின் வந்திடு

பேரமு துண்குறு பெற்றி போலவக்

காரிகை தனைமுனி கடிதிற் புல்லினான்.                 9

 

புல்லலும் எதிர்தழீஇப் புகரில் காசிபன்

தொல்லையில் உணர்வொடு தொலைவில் செய்தவம்

வல்லையில் வாங்குறு மரபில் அன்னவன்

மெல்லிதழ் அமிர்தினை மிசைதல் மேயினாள்.                   10

 

பின்னுற மாயவள் பெரிதுங் காமுறும்

அன்னவன் புணர்தர அறிவ தொன்றையுந்

தொன்னெறி அளித்தெனத் தொண்டைச் சேயிதழ்

முன்னுறும் அமிர்தினை முனிக்கு நல்கினாள்.                    11

 

உட்டௌ¤ வின்றியே யுலப்பின் றோடிய

மட்டறு காமமாம் வாரி யுற்றுளான்

அட்டொளிர் பொன்னனாள் அல்கு லாஞ்சுழிப்

பட்டனன் இன்பமாம் பரவை நண்ணுவான்.                       12

 

தோமறு முனிவரன் சுரதத் தாற்றினாற்

காமரு மதனநூல் கருத்திற் சிந்தியாத்

தேமொழி மயிலொடு செறிந்து போகமார்

பூமியி னேரெனப் புணர்தல் மேயினான்.                  13

 

செம்மயி லன்னஇத் தெரிவை தன்னிடை

எம்மையும் இல்லதோர் இன்பம் இங்ஙனம்

மெய்ம்மையின் நல்கிய விதியி னார்க்கியான்

அம்மசெய் கின்றதோர் அளவுண் டோவென்றான்.         14

 

ஆறறி முனிவரன் அநங்க நூன்முறை

வீறொடு புணர்தலும் வெய்ய மாயவள்

கீறினள் நகத்தினாற் கீண்ட பால்தொறும்

ஊறிய காமநீர் ஒழுகிற் றென்பவே.                              15

 

உணர்வுடை முனிவரன் உயர்ந்த விஞ்சையர்

மணமுறை அதுவென மாயை தன்னொடு

புணர்தொழில் புரிந்தனன் போக முற்றினான்

துணையறும் இன்பெனுங் கடலில் தோய்ந்துளான்.        16

 

வேறு

 

அந்த வேலையில் முகுந்தனும் அன்புயத் தவனும்

இந்தி ராதியர் யாவரும் முனிவரர் எவருந்

தந்தம் உள்ளமேல் நடுக்குற மாயவள் தன்பால்

வந்து தோன்றினன் சூரபன் மாஎனும் வலியோன்.                 17

 

துயக்கம் இல்லதோர் சூரன்வந் திடுதலுந் தொல்லை

முயக்க வேலையில் இருவர்பால் முறைமுறை இழிந்த

வியப்பில் வந்தனர் முன்னபதி னாயிர வௌ¢ளம்

வயக்க டுந்திறல் தானவர் யாரினும் வலியோர்.                  18

 

அன்னர் தம்மையும் முதலவன் தன்னையும் அங்கண்

நின்மி மீரென நிறுவியே ஆயிடை நீங்கி

மின்னு நூலணி முனியொடு மாயவள் வேறோர்

பொன்னின் மாமணி மண்டபம் அதனிடைப் புகுந்தாள்.            19

 

மானை நேர்பவள் ஆயிடைத் தொல்லுரு மாற்றி

மேன சூரரிப் பிணாவுருக் கௌ¢ளலும் விரைவில்

தானு மோர்திறல் மடங்கலே றாமெனச் சமைந்தான்

மோன மாய்முனம் அருந்தவம் இயற்றிய முதல்வன்.                     20

 

மங்கை யோடவன் மடங்கலாய் மகிழ்வுடன்புணரக்

               கங்குல் வாயிரண் டாகிய யாமமேற் கடிதே

அங்கை ஓரிரண் டாயிரம் ஆயிர முகமாய்ச்

சிங்க மாமுகன் தோன்றினன் திடுக்கிடத் திசைகள்.                21

 

இத்தி றத்திவர் இருவரும் புணர்வுழி யாக்கை

மெத்தி வீழ்தரும் வியர்ப்பினில் விறல்அரி முகராய்ப்

பத்து நால்வகை ஆயிர வௌ¢ளமாம் படைஞர்

கொத்தி னோடுவந் துதித்தனர் கூற்றுயிர் குடிப்பார்.                       22

 

மற்றும் அத்தொகை யோரையும் மாமகன் றனையும்

நிற்றிர் ஈண்டென மாயவள் வீற்றொரு நிலயந்

தெற்றெ னப்புகுந் தோர்பிடி உருக்கொடு சேரக்

கொற்ற மால்களிற் றுருவினை முனிவனுங் கொண்டான்.         23

 

பேரு மும்மத மால்களிற் றுருக்கொடு பிடிமேல்

சேரு கின்றுழி மூன்றெனச் செல்லும்யா மத்தில்

ஈரி ரண்டுவாள் எயிற்றுடன் யானைமா முகத்துத்

தார காசுரன் தோன்றினன் அவுணர்கள் தழைப்ப.                  24

 

ஏலும் அங்கவர் மெய்ப்படு வியர்ப்பினும் இபத்தின்

கோல மானவர் தோன்றினர் அவர்குழுக் குணிக்கின்

நாலு பத்தின்மேல் ஆயிர வௌ¢ளமா நவின்றார்

மூல நாடியே இப்பரி சுணர்த்திய முனிவர்.                              25

 

ஆண்டு தாரகன் தன்னையும் அவுணர்கள் தமையும்

ஈண்டு நிற்றிரென் றோர்மணி மண்டபத் திறுத்து

மாண்ட யாமமேல் தகர்ப்பிணா உருக்கொள மாயை

பூண்ட அன்பினான் செச்சையின் உருக்கொடு புணர்ந்தான்.         26

 

புணர்ந்த காலையில் அசமுகி தோன்றினள் புவியோர்க்

கணங்கு செய்தகர் முகவராய் அங்கவர் வியர்ப்பில்

கணங்கொள் முப்பதி னாயிர ¦ளிளமாங் கணிதத்

திணங்கு தானவர் உதித்தனர் இமையவர் கலங்க.                 27

 

மீள மற்றவர் தம்மையும் நிறுவிவே றுள்ள

சூளி கைப்பெரு மண்டபந் தொறுந்தொறும் ஏகி

வாளி வல்லியம் புரவிமான் ஒரிஎண் கேனங்

கூளி ஆதியாம் விலங்கின துருவெலாங் கொண்டார்.                     28

 

இறுதி யில்லதோர் விலங்கின துருவுகொண் டிரவின்

புறம தாகிய புலரிசேர் வைகறைப் பொழுதின்

முறையின் மாயையும் முனிவனும் ஆகியே முயங்கி

அறுப தாயிர வௌ¢ளமாம் அவுணரை அளித்தார்.                29

 

மிகுதி கொண்டிடும் இரண்டுநூ றாயிர வௌ¢ளந்

தகுவர் தம்மையுஞ் சூரனே மதலினோர் தமையும்

புகலும் ஓரிராப் பொழுதினில் அளித்ததற் புதமோ

அகில மும்வல மாயவட் கிச்செயல் அரிதோ.                            30

 

ஆங்க வெல்லையின் அண்டமா யிரத்தெட்டின் உள்ளுந்

தீங்கு கொண்டிடுங் குறிகளுள் ளனவெலாஞ் செறிந்து

நீங்க லின்றியே நிகழ்வன நீர்மைகண் டெவரும்

ஏங்கு கின்றனர் விளைவதென் னோவென இரங்கி.                31

 

அல்லெ னும்பொழு திறத்தலும் மாயவ ளரிவைத்

தொல்லை நல்லுருக் கோடலும் முனியும்அத் துணையே

வல்லை தன்னுரு முன்னையிற் கொண்டனன் மறறவ்

வெல்லை தன்னிடை உதயவாய் அணுகினன் இரவி.                      32

 

நிட்டைக் கேற்றிடு முனிவனை மாயவள் நிசியில்

விட்டுப் போந்திலள் அற்புதம் என்விளைந் ததுவோ

கிட்டிக் காண்பன்என் றுதயமாங் கிரிப்புறத் தணுகி

எட்டிப் பார்த்தனன் என்னவஅ உதித்தனன் இரவி.                 33

 

வேறு

 

எல்லைவந் திடுதலும் ஈன்ற மாயவள்

செல்லுறும் அப்புவி செறிந்து சேணினுஞ்

சொல்லிய திசையினுந் துவன்றி யார்த்திடும்

ஒல்லெனுஞ் சனத்தினை உவந்து நோக்கினாள்.           34

 

விண்டுறு தானவர் வௌ¢ளம் யாவையும்

கண்டனன் எந்தைதன் கருமம் இச்செயல்

கொண்டிலம் மாயையிற் கூடிற் றீதெனா

அண்டரும் அற்புதம் அடைகுற் றான்முனி.                       35

 

பற்பகல் அருந்தவம் பயின்ற தூயனும்

பொற்புறு மாயையும் புதல்வர் தந்தொகை

அற்புத மோடுகண் டன்பின் நீரராய்

நிற்புழித் தெரிந்தனன் நேரில் சூரனே.                            36

 

இருமுது குரவரும் ஈண்டுற் றரவர்

திருவடி வணங்கியாஞ் செய்தி றத்தினை

மரபொடு வினவுதும் வம்மின் நீரெனா

அரிமுகன் தாரகன் அறியக் கூறினான்.                   37

 

அறைகழல் இளையவர் அதனைத் தேர்வுறீஇ

உறுதியி தாமென வுரைத்துப் பின்வரத்

துறுமல்கொண் டிருந்ததன் தொல்ப தாகியை

நிறுவினன் அவ்விடை நின்று நீங்கினான்.                38

 

ஆகத் திருவிருத்தம் - 176

    - - - 

 

 

4.  கா சி ப னு ப தே ச ப்  ப ட ல ம்

 

நீங்கிய சூர்முதல் நெறியின் ஏகியே

யாங்கவர் அடிதொழு தருள்செய் மேலையீர்

யாங்கள்செய் கின்றதென் இசைமின் நீரென

ஓங்கிய காசிபன் உரைத்தல் மேயினான்.                 1

 

உறுதிய தொன்றினை உணர்த்து கின்றனன்

அறைகழல் மைந்தர்காள் அரிய மாதவ

நெறிதனில் மூவிரும் நிற்றிர் அன்னதன்

முறைதனை வாய்மையான் மொழிவன் கேண்மினோ.             2

 

சான்றவர் ஆய்ந்திடத் தக்க வாம்பொருள்

மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன

ஆன்றதோர் தொல்பதி ஆரு யிர்த்தொகை

வான்றிகழ் தளையென வகுப்பர் அன்னவே.                      3

 

அளித்திடல் காத்திடல் அடுதல் மெய்யுணர்

ஔ¤த்திடல் பேரருள் உதவ மேயெனக்

கிளத்திடு செயல்புரி கின்ற நீலமார்

களத்தினன் பதியது கழறும் வேதமே.                           4

 

பற்றிகல் இல்லதோர் பரமன் நீர்மையை

இற்றென உரைப்பரி தெவர்க்கும் என்பரால்

சொற்றிடும் வேதமுந் துணிதி லாஅவன்

பெற்றியை இனைத்தெனப் பேச வல்லமோ.                      5

 

மூவகை யெனுந்தளை மூழ்கி யுற்றிடும்

ஆவிகள் உலப்பில அநாதி யுள்ளன

தீவினை நல்வினைத் திறத்தின் வன்மையால்

ஓவற முறைமுறை உதித்து மாயுமே.                           6

 

பாரிடை உதித்திடும் பாரைச் சூழ்தரு

நீரிடை யுதித்திடும் நெருப்பில் வாயுவில்

சீருடை விசும்பிடைச் சேரும் அன்னவைக்

கோரிடை நிலையென உரைக்கற் பாலதோ.                      7

 

மக்களாம் விலங்குமாம் மாசில் வானிடைப்

புக்குலாம் பறவையாம் புல்லு மாம்அதில்

மிக்கதா வரமுமாம் விலங்கல் தானுமாந்

திக்கெலாம் இறைபுரி தேவும் யாவுமாம்.                 8

 

பிறந்திடு முன்செலும் பிறந்த பின்னர்மெய்

துறந்திடுஞ் சிலபகல் இருந்து துஞ்சுமால்

சிறந்திடு காளையில் தேயும் மூப்பினில்

இறந்திடும் அதன்பரி சியம்ப லாகுமோ.                  9

 

சுற்றுறு கதிரெழு துகளி னும்பல

பெற்றுள என்பதும் பேதை நீரதால்

கொற்றம துடையதோர் கூற்றங் கைக்கொள

இற்றவும் பிறந்தவும் எண்ணற் பாலவோ.                10

 

கலைபடும் உணர்ச்சியுங் கற்பும் வீரமும்

மலைபடு வெறுக்கையும் வலியும் மற்றது

மலைபடு புற்புத மாகும் அன்னவை

நிலைபடு பொருளென நினைக்க லாகுமோ.                      11

 

தருமமென் றொருபொருள் உளது தாவிலா

இருமையின் இன்பமும் எளிதின் ஆக்குமால்

அருமையில் வரும்பொரு ளாகும் அன்னதும்

ஒருமையி னோர்க்கலால் உணர்தற் கொண்ணுமோ.               12

 

தருமமே போற்றிடின் அன்பு சார்ந்திடும்

அருளெனுங் குழவியும் அணையும் ஆங்கவை

வருவழித் தவமெனும் மாட்சி எய்துமேல்

தெருளுறும் அவ்வுயிர் சிவனைச் சேருமால்.                     13

 

சேர்ந்துழிப் பிறவியுந் தீருந் தொன்மையாய்ச்

சார்ந்திடு மூவகைத் தளையும் நீங்கிடும்

பேர்ந்திடல் அரியதோர் பேரின் பந்தனை

ஆர்ந்திடும் அதன்பரி சறைதற் கேயுமோ.                14

 

ஆற்றலை யுளதுமா தவம தன்றியே

வீற்றுமொன் றுளதென விளம்ப லாகுமா

சாற்றருஞ் சிவகதி தனையும் நல்குமால்

போற்றிடின் அனையதே போற்றல் வேண்டுமால்.         15

 

அத்தவம் பிறவியை அகற்றி மேதகு

முத்தியை நல்கியே முதன்மை யாக்குறும்

இத்துணை யன்றியே யிம்மை இன்பமும்

உய்த்திடும் உளந்தளில் உன்னுந் தன்மையே.                     16

 

ஆதலிற் பற்பகல் அருமை யால்புரி

மாதவம் இம்மையும் மறுமை யுந்தரும்

ஏதுவ தாகுமால் இருமை யும்பெறல்

ஆதியம் பகவன தருளின் வண்ணமே.                   17

 

ஒருமைகொள் மாதவம் உழந்து பின்முறை

அருமைகொள் வீடுபே றடைந்து ளோர்சிலர்

திருமைகொள் இன்பினிற் சேர்கின் றோர்சிலர்

இருமையும் ஒருவரே எய்தி னோர்சிலர்.                 18

 

ஆற்றலில் தம்முடல் அலசப் பற்பகல்

நோற்றவர் அல்லரோ நுவலல் வேண்டுமோ

தேற்றுகி லீர்கொலோ தேவ ராகியே

மேற்றிகழ் பதந்தொறும் மேவுற் றோர்எலாம்.                    19

 

பத்திமை நெறியொடு பயிற்றி மாதவ

முத்திபெற் றரனடி முன்னுற் றோர்தமை

இத்துணை யெனல்அரி திருமை யும்பெறு

மெய்த்தவர் மாலொடு விரிஞ்ச னாதியோர்.                      20

 

பல்லுயிர் தன்னையும் மாய்த்துப் பாரினுக்

கல்லல்செய் தருந்தவம் ஆற்றி டாதவர்க்

கில்லையே இருமையும் இன்பம் ஆங்கவர்

சொல்லரும் பிறவியுள் துன்பத் தாழுவார்.                       21

 

அறிந்திவை உரைப்பினும் அவனி மாக்கள்தாம்

மறங்கொலை களவொடு மயக்கம் நீங்கலர்

துறந்திடு கின்றிலர் துன்பம் அற்றிலர்

பிறந்தனர் இறந்தனர் முத்தி பெற்றிலார்.                 22

 

தவந்தனின் மிக்கதொன் றில்லை தாவில்சீர்த்

தவந்தனை நேர்வது தானும் இல்லையால்

தவந்தனின் அரியதொன் றில்லை சாற்றிடில்

தவந்தனக் கொப்பது தவம தாகுமே.                            23

 

ஆதலின் மைந்தர்காள் அறத்தை ஆற்றுதிர்

தீதினை விலக்குதிர் சிவனை உன்னியே

மாதவம் புரிகுதிர் மற்ற தன்றியே

ஏதுள தொருசெயல் இயற்றத் தக்கதே.                   24

 

வேறு

 

உடம்பினை ஒறுத்த நோற்பார் உலகெலாம் வியப்ப வாழ்வர்

அடைந்தவர்க் காப்பர் ஒல்லார்க் கழிவுசெய் திடுவர் வெ•கும்

நெடும்பொருள் பலவுங் கொள்வர் நித்தராய் உறைவர் ஈது

திடம்பட உமக்கோர் காதை செப்புவன் என்று சொல்வான்.         25

 

ஆகத் திருவிருத்தம் - 201

    - - -

 

 

5. மார்க்கண்டேயப் படலம்

 

நச்சகம் அமிர்தம் அன்ன நங்கையர் நாட்ட வைவேல்

தைச்சக மயக்கல் செய்யாத் தடுப்பருந் தவத்தின் மிக்கான்

இச்சகம் புகழு கின்ற இருபிறப் பாளர் கோமான்

குச்சகன் என்னும் பேரோன் கொடிமதிற் கடகம் வாழ்வோன்.               1

 

அவற்கொரு புதல்வன் உண்டால் அருமறை பயின்ற நாவான்

கவுச்சிகன் என்னும் பேரோன் கரையொரு சிறிதுங் காணாப்

பவக்கடல் கடக்கும் ஆற்றாற் பராபர முதல்வற் போற்றித்

தவத்தினை இழைப்ப ஆங்கோர் தண்புனல் தடாகஞ் சார்ந்தான்.    2

 

அத்தலை ஒருசார் எய்தி ஆனினந் தீண்டு குற்றி

ஒத்தென அசைத லின்றி உயிர்ப்பொரீஇ உலக மெல்லாம்

பித்தென உன்னி மாயாப் பேரின்ப அளக்கர் மூழ்கி

நித்தன்ஐ யெழுத்தும் அன்னான் நிலைமையும் நினைந்து நோற்றான்.       3

 

ஓவிய மவுன முற்றாங் குணவொடும் உறக்கம் நீங்கித்

தாவற நோற்கும் வேலைத் தடமரை கடமை யாதி

மேவிய விலங்கு தத்தம் மெய்யகண் டூயம் யாவும்

போவது கருதி அன்னான் புரத்திடை உரைத்துப் போமால்.         4

 

இப்பரி சியன்ற போழ்தும் யாவதும் உணரா னகி

ஒப்பற நோற்கும் வேலை ஒல்லையில் அதனை நாடி

முப்புரஞ் சிதைய மோனாள் முனிந்தவன் அருளி தென்னாத்

செப்பினன் இமையோர் சூழச் சேணிடைத் திருமால் சேர்ந்தான்.    5

 

அற்புதம் எய்தி மைந்தன் அருந்தவம் புகழ்ந்து முன்போய்

எற்படும் அவன்றன் மேனி எழின்மலர்க் கரத்தால் நீவி

வெற்பன மனிவ நின்பேர் மிருககண் டூயன் என்னார்

சொற்பயில் நாமஞ் சாத்த ஏழுந்துகை தொழுது நின்றான்.         6

 

தொழுதெழு முனியை நோக்கித் தூமதிச் சென்னி யோன்றன்

முழுதுறு கருணை நின்பால் முற்றுக முன்னஞ் செய்த

பழுதவை நீங்க வென்னாப் பரிவுசெய் தருளி வானோர்

குழுவுடன் உவண வூர்தி கொம்மென மறைந்து போனான்.         7

 

போனபின் முனிவர் மேலோன் புரமெரி படுத்த முக்கண்

வானவன் அருளி னாலே வல்விரைந் தேகித் தாதை

யானவன் முன்னர் எய்தி அடிமுறை வணங்க அன்னான்

தானுள மகிழ்ந்து கண்டாங் கெடுத்தனன் தழுவிக் கொண்டான்.     8

 

தவத்திடை யுற்ற தன்மை மொழிகெனத் தனயன் தானும்

உவப்புறு தாதை கேட்ப உள்ளவா றுரைத்த லோடும்

நிவப்புறு முவகை மிக்கு நின்குலத் தவர்க்குள் நின்போல்

எவர்க்குள தினைய நோன்மை யாதுநிற் கரிய தொன்றே.          9

 

பாருளார் விசும்பின் பாலார் பயனுகர் துறக்க மென்னும்

ஊருளார் அல்லா ஏனை உலகுறு முனிவர் தம்மில்

ஆருளார் நின்னை ஒப்பார் ஐயநீ புரிந்த நோன்மை

காருளார் கண்டத் தெந்தை யன்றிமற் றெவரே காண்பார்.          10

 

எனப்பல புகழ்த லோடும் இவன்வழி மரபு தன்னில்

மனப்படும் ஒருசேய் பின்னாள் மறலியைக் கடக்குங் கூற்றால்

வினைப்பகை இயல்பு நீக்கும் விமலன தருளால் வேறோர்

நினைப்பது வரலுந் தாதை நெடுமகற் குரைக்கல் உற்றான்.        11

 

கிளத்துவ துனக்கொன் றுண்டால் கேண்மதி ஐய மேனாள்

அளப்பரு மறைக ளாதி அறைந்தன யாவ ரேனுந்

தளத்தகு பரிசு மன்றால் சால்புடை அந்த ணாளர்

கொளப்படு கடனே யாகும் நாற்பெருங் கூற்ற தன்றே.             12

 

உனற்கரும் பிரமந் தன்னில் ஒழுகல்இல் லறத்தில் நிற்றல்

வனத்திடைச் சேறல் பின்னர் மாதவத் துறவில் வாழ்தல்

எனப்படும் அவற்றி னாதி இயற்றினை யின்று காறும்

நினக்கது புகல்வ தென்னோ நீயவை அறிதி யன்றே.                      13

 

பின்னவை இரண்டும் பின்னர்ப் பேணுதல் பேச வொண்ணா

முன்னதும் இயற்ற லாலே முற்றிய திடையின் வைத்துச்

சொன்னதோர் கடன்இஞ் ஞான்று தொடங்கிய வேண்டுந் தூயோய்

அன்னதன் நிலைமை தன்னை ஆற்றினை கோடி யென்றான்.       14

 

முனிவரன் இதனை ஆங்கண் மொழிதலும் இதனைக் கேளா

இனியதோர் உறுதி சொற்றார் எந்தையார் எனக்கீண் டென்னா

மனமுற முறுவல் செய்து மதலையாம் ஒருவற் கீது

வினையறு தவத்தின் நீரும் விளம்புதல் மரபோ வென்றான்.               15

 

வேறு

 

        பேதைப் படுக்கும் பிறவிக் கடல்நீந்தும்

ஓதித் திறத்தை உணர்ந்துடையோன் ஆதலினால்

காதற் புதல்வன் கவுச்சிகனென் போன்தனது

தாதைக் கினைய பரிசுதனைச் சாற்று கின்றான்.          16

 

முன்னருள பாச முயக்கறுக்க வேண்டியநான்

பின்னுமொரு பாசம் பிணிக்கப் படுவேனேல்

தன்னிகரில் ஈசன் றனையெவ்வா றெய்துவன்யான்

இன்னலெனும் ஆழி யிடைப்பட் டுலைவேனே.           17

 

மொய்யான தில்லா முடவன்ஒரு வன்தனது

கையா னவையிரண்டுங் கந்தாத் தவழ்தருவான்

ஐயா அதற்கும் அரும்பிணியொன் றெய்தியக்கால்

உய்யானே யானும் உவன்போல் தளர்வேனோ.            18

 

மொய்யுற் றிடவே முயலுந் தவத்தினன்றிப்

பொய்யுற்ற இல்லொழுக்கம் பூண்டுவினை போக்குவது

மெய்யுற் றிடுதுகளை மிக்க புனலிருக்கச்

செய்யற்சின் னீரிடத்துத் தீர்க்குஞ் செயலன்றோ.          19

 

மண்ணுலகி லுள்ள வரம்பில் பெரும்பவத்தைப்

பெண்ணுருவ மாகப் பிரமன் படைத்தனனால்

அண்ணல் அ•துணர்தி அன்னவரைச் சிந்தைதனில்

எண்ண வரும்பாவம் எழுமையினும் நீங்குவதோ.         20

 

ஆதரவு கொண்டே அலமந்த ஐம்புலமாம்

பூதவகை யீர்க்கப் புலம்புற்ற புன்மையினேன்

மாதரெனுங் கணமும் வந்தென்னைப் பற்றியக்கால்

ஏதுசெய்கேன் அந்தோ எனக்கோ இதுவருமே.             21

 

பன்னாளும் பாரிற் பரவரலின் மூழ்குவிக்கும்

பின்னாள் நிரயப் பெரும்பிலத்தி னூடுய்க்கும்

எந்நாளில் ஆண்டகையோர்க் கின்பம் பயந்திடுமோ

மின்னார்கள் தம்மை விழையுற்ற வேட்கையதே.         22

 

துன்பம் நுகரும் வினையின் தொடர்ச்சியினோர்

இன்பம் நுகர்வார்போல் ஏந்திழையார் கட்பட்டார்

தன்பல் மிகநடுங்க ஞாளி தசையில்லா

என்பு கறித்திட்டால் இருஞ்சுவையும் பெற்றிடுமோ.               23

 

அஞ்சன வைவேற்கண் அரிவையர்தம் பேராசை

நெஞ்சு புகின்ஒருவர் நீங்கும் நிலைமைத்தோ

எஞ்சல்புரி யாதுயிரை எந்நாளும் ஈர்ந்திடுமால்

நஞ்சம் இனிதம்ம ஓர்நாளும் நலியாதே.                 24

 

கள்ளுற்ற கூந்தல் கனங்குழைநல் லார்கருத்தில்

கொள்ளப் படமெண் குணிக்குந் தகைமையதோ

தள்ளற் கரிதாகித் தம்மொடுபன் னாட்பழகி

உள்ளுற்ற தேவும் உணர்தற் கரிதன்றோ.                 25

 

ஓதலும் ஒன்றா உளமொன்றாச் செய்கையொன்றாப்

பேதை நிலைமை பிடித்துப் பெரும்பவஞ்செய்

மாதர் வலைப்பட்டு மயக்குற்றார் அல்லரோ

சாதல் பிறப்பில் தடுமாறு கின்றாரே.                            26

 

ஆனால் உலகில் அருங்கற் பினையுடைய

மானார் இலரோ எனவே வகுப்பீரேல்

கோனான தங்கள் கொழுநன் இயல்வழுவாத்

தேனார் மொழியாரும் உண்டு சிலர்தாமே.                27

 

உற்ற வுலவையிடை ஓர்புலிங்கம் ஊட்டியக்கால்

கற்றை விடுசுடர்மீக் கான்று கனல்மிக்குப்

பற்றுதல் செல்லாத பலவினும்போய்ப் பற்றிடுமால்

அற்றெனலாம் ஈங்கோர் அரிவைமுயங் காதரமே.         28

 

சந்திரற்கு நேருவமை சாலுந் திருமுகத்துப்

பைந்தொடிக்கை நல்லார் பலரும் புடைசூழக்

குந்தமொத்த நாட்டத்துக் கோதமனார் பன்னியினால்

இந்திரற்கு நீங்கா இடர்ப்பழிஒன் றெய்தியதே.                     29

 

வேறு

 

கூன்முகத் திங்கள் நெற்றிக் கோதையர் குழுவுக் கெல்லாந்

தான்முதல் இறைவி யாகத் தன்கையாற் சமைக்கப் பட்ட

மான்முக நோக்கி முன்னோர் மலரயன் மையல் எய்தி

நான்முகன் ஆனான் என்ப நாமுண ராத தன்றே.                  30

 

மற்றுள முனிவர் தேவர் மாயமாங் காமந் தன்னால்

உற்றிடு செயற்கை யெல்லாம் உரைப்பினும் உலப்பின் றாமால்

அற்றெலா நிற்க யான்அவ் வாயிழை மடந்தை கூட்டம்

பெற்றிடும் ஒழுக்கந் தன்னைப் பேணலன் பிறப்பு நீப்பேன்.         31

 

பூண்டகு விலங்கல் திண்டோட் புரந்தரன் முதலோர் சீரும்

வேண்டலன் இல்வாழ் வென்னும் வெஞ்சிறை அகத்தும் வீழேன்

மாண்டகு புலத்தின் மாயும் மயக்கொரீஇத் தவமென் றோதும்

ஈண்டிய வெறுக்கை மேவி இன்பமுற் றிருப்ப னென்றான்.         32

 

இவைபல உரைத்த லோடும் இருந்தகுச் சகன்தான் இந்தக்

குவலய மதிக்கு மாற்றாற் கூறும்இல் லொழுக்கந் தன்னை

நவையென இகழா நின்றான் நான்மறைத் துணிவுங் கொள்ளான்

தவமயல் பூண்டான் என்னாத் துயர்கொடு சாற்ற லுற்றான்.        33

 

புலத்தியன் போலு மேலோய் பொருவின்மங் கலஞ்சேர்பொன்னின்

கலத்தியல் வதுவை பூண்டோர் கன்னியைக் கலத்தல் செய்து

குலத்தியல் மரபின் ஓம்பக் குமரரைப் பயந்தே அன்றோ

நலத்தியல் தவத்தை ஆற்றி நண்ணருங் கதியிற் சேரல்.           34

 

மன்பதை உலக மேபோல் மாலுறா மயங்கு காம

இன்பநீ நுகர்தற் கேயோ இசைத்தனன் இறந்த மேலோர்

துன்பமும் நிரயஞ் சேர்வுந் துடைத்திடுந் தொன்மை நோக்கி

அன்புறு புதல்வர்க் காக அரிவையைக் கோடி ஐயா.                       35

 

சித்திரம் இலகு செவ்வாய்ச் சீறடிச் சிறுவர் தம்மைப்

புத்திர ரென்னுஞ் சொற்குப் பொருணிலை அயர்த்தி போலாம்

இத்தக வதனை நாடி இல்லறம் பூண்டு நிற்றல்

உத்தம நெறியே யாகும் தவத்தின தொழுக்கும் அ•தே.            36

 

குவவுறு நிவப்பின் மிக்க கோடுயிர் குடுமிக் குன்றின்

இவர்வுறு காத லாளர் இயற்படு சார லெய்தித்

திவவொடு போத லன்றிச் சேணுற உகளுந் தன்மைக்

குவமைய தாகும் இன்னே உயர்தவத் தொழுக உன்னல்.           37

 

தருவினில் விலங்கில் அன்ன தகையன பிறவிற் சால

வருபயன் கோடற் கன்றோ மற்றவை வரைதல் செய்யார்

பெருகும்இல் லறத்தி னோடும் பெருமகப் பொருட்டால் நீயும்

அரிவையை மணந்து பின்னாள் அருந்தவம் புரிதி அன்றே.        38

 

இந்தநன் னிலைமே னாளே எண்ணிலை இந்நாள் காறும்

முந்துசெய் கடன தாற்றி முற்றினை முறையே பன்னாட்

சிந்தனை செய்த வானோர்க் கவிமுதற் சிறப்புச் செய்யாய்

மைந்தநீ இன்னே நோற்கும் வண்ணமே எண்ணற் பாற்றே.        39

 

இந்திரர் புகழுந் தொல்சீர் இல்லறம் புரிந்து ளோர்க்குத்

தந்தம தொழுக்கந் தன்னில் தகுமுறை தவற்றிற் றேனுஞ்

சிந்திடுந் தீர்வும் உண்டால் செய்தவர்க் கனைய சேரின்

உய்ந்திடல் அரிதால் வெற்பின் உச்சியின் தவற லொப்ப.          40

 

சுழிதரு பிறவி யென்னுஞ் சூழ்திரைப் பட்டுச் சோர்வுற்

றழிதரு துயர நேமி அகன்றிடல் வேண்ட மேனுங்

கழிதரு நாளான் அல்லாற் கதுமெனத் துறக்க லாமோ

வழிமுறை நும்மு னோரின் மற்றது புரிதி மன்னோ.                      41

 

தேவரும் முனிவர் தாமுஞ் செங்கண்மா லயனும் மற்றும்

யாவரு மடந்தை மாரோ டில்லறத் தொழுகுந் தன்மை

மேவரப் பணித்தான் அன்றே விமலையோட டணுகி மேனாள்

தாவரும் புவன மாதி சராசரம் பயந்த தாணு.                            42

 

மறுக்கலை அவன்றான் செய்த வரம்பினை வழியை வேண்டி

வெறுக்கலை எனது கூற்றை விலக்கலை உலகின் செய்கை

செறுக்கலை இகலு மாற்றாற் செப்பலை சிறிது மாற்றந்

துறக்கலை எமரை இன்னே தொன்முறை உணர்ந்த தூயோய்.      43

 

வேறு

 

ஆடக வனப்புடை அருந்ததியை நீங்கான்

மாடுற இருத்தியும் வசிட்டமுனி யென்போன்

நீடுதவ நோன்மைகொடு நின்றனன் அதன்றிப்

பீடுகெழு ஞாலமிசை பெற்றபழி யுண்டோ.                       44

 

துயக்குறு பவத்திடை தொடர்ச்சியறு தூயோர்

நயப்பொடு வெறுப்பகலின் நாளுமட மானார்

முயக்குறினும் மாதவ முயன் றிடினும் அன்னோர்

வியத்தகு மனத்துணர்வு வேறுபடு மோதான்.                     45

 

மேனவியல் பான்வரையும் மெல்லியலை மேவில்

தானமுள தாகும்அரி தானதவ மாகும்

வானமுள தாகுமிவண் மண்ணு முளதாகும்

ஊனமில தாகும்அரி தொன்றுமிலை யன்றே.                     46

 

காண்டகைய தங்கணவ ரைக்கடவு ளார்போல்

வேண்டலுறு கற்பினர்தம் மெய்யுரையில் நிற்கும்

ஈண்டையுள தெய்வதமும் மாமுகிலு மென்றால்

ஆண்டகைமை யோர்களும் அவர்க்குநிக ரன்றே.          47

 

ஆயிழையொ டின்புறும் அறத்தைமுத லாற்றாய்

தூயதவ நன்னெறி தொடங்கல்புரி வாயேல்

மாயமிகு காமவிடம் வந்தணுகின் அம்மா

மேயவிதி காக்கினும் விலக்கியிட லாமோ.                       48

 

துறந்தவர்கள் வேண்டியதொர் துப்புரவு நல்கி

இறந்தவர்கள் காமுறும் இருங்கடன இயற்றி

அறம்பலவும் ஆற்றிவிருந் தோம்புமுறை யல்லால்

பிறந்தநெறி யாலுளதொர் பேருதவி யாதோ.                     49

 

மெத்துதிறல் ஆடவரும் மெல்லியல்நல் லாருஞ்

சித்தமுற நன்கினொடு தீதுசெயல் ஊழே

உய்த்தபடி யல்லதிலை யாம்உழவர் ஒண்செய்

வித்துபய னேயலது வேறுபெற லாமோ.                 50

 

நற்றவம தாகுமில றந்தனை நடாத்திச்

சுற்றமற நீங்குதுற வேதுறவ தம்மா

மற்றது புரிந்திடின் உனக்குநவை வாரா

அற்றது மறுத்துரையல் ஆணைநம தென்றான்.           51

 

அன்னபல மாமுனி யறைந்திடலும் ஓரா

முன்னமறை யாதிய மொழிந்ததுணி வென்றார்

பன்னகம் அணிந்திடு பரன்பணியும் என்றார்

என்னினி உரைப்பதென எண்ணிஇனை கின்றான்.          52

 

தத்தமத ருட்குரவர் தாவில்வளம் நீங்கி

அத்தியிடை யாழ்கெனினும் அன்பினது செய்கை

புத்திரர்கள் தங்கள்கட னாம்புதுமை யன்றே

இத்திறம் மறுக்கலன் இசைந்திடுவன் யானும்.            53

 

தந்தைசொல் மறுப்பவர்கள் தாயுரை தடுப்போர்

அந்தமறு தேசிகர்தம் ஆணையை இகந்தோர்

வந்தனைசெய் வேதநெறி மாற்றினர்கள் மாறாச்

செந்தழல வாயநிர யத்தினிடை சேர்வார்.                54

 

ஆதலின் விலக்கல்முறை அன்றென வலித்துக்

கோதறு குணத்தின்மிகு குச்சகர்தம் அம்பொற்

பாதம திறைஞ்சிமுனி யேல்பணியில் நிற்பன்

ஓதுவ துனக்குள தெனக்கழறல் உற்றான்.                55

 

தன்னுரைகொ ளாதமனை வாழ்க்கையது தன்னில்

வெந்நிரயம் வீழும்வகை யேவிழுமி தம்மா

அன்னரொடு மேவியமர் ஆடவர் தமக்குப்

பின்னுமொரு கூற்றுமுள தோபிணியும் உண்டோ.        56

 

என்னுரையி னிற்சிறிதும் எஞ்சலில வாகி

மன்னுமியல் பெற்றிடு மடந்தையுள ளேல்அக்

கன்னிதனை யான்வரைவல் காயெரிமுன் என்னாச்

சொன்னமொழி கேட்டுமகிழ் வுற்றுமுனி சொல்லும்.               57

 

வேறு

 

யானும் உய்ந்தனன் என்கிளை யுய்ந்தன இனையதால் நினையீன்றாள், 

தானும் உய்ந்தனள் தவங்களும் உய்ந்தன தண்ணளி யது மற்றால், 

வானும் உய்ந்தன மண்ணுல குய்ந்தன வாசவ னெனவாழுங்,

கோனும் உய்ந்தனன் என்னுரை மறாமலுட் கொண்டனை அதனாலே.  58

 

வேண்டும் வேட்கையை உரைத்தியால் மைந்தநீ விளம்பிய இயல்பெல்லாம், 

பூண்டு குற்றமோர் சிறிதுமில் லாததோர் பூவையைப் புவியின்பாற், 

தேண்டி நின்வயிற் புணர்க்குவன் அங்கது செய்கலா தொழிவேனேல், 

மாண்டி றந்திடுங் குறைமதிக் கதிரென மாய்கஎன் தவமென்றான்.   59

 

இனைய பான்மையிற் குச்சகன் சூளுரை இயம்பலுந் திருமால் முன், 

புனையும் மெய்ப்பெயர் தரித்தசேய் ஆங்கவன் பொலங்கழல் தனைப்பூண்டோர்,

தனயன் உய்பொருட் டாலிது புகன்றனை தவத்தினில் தலையான, 

முனிவ நீயுனக் கரியதாய் ஒருபொருள் முச்சகந் தனிலுண்டோ.    60

 

ஆவ தேனும்யான் உரைப்பதுண் டத்தனை யற்றவர் அருளும்யாய், 

சாவ தாயினர் தன்னையர் இல்லவர் தங்கையர் இலரானோர், 

காவ லாடவர் தம்முடன் உதித்திடார் காசினி தனிலன்னோர், 

வீவதாயினர் பெருங்கிளை இல்லவர் வியத்தகு திருவற்றோர்.     61

 

குடிப்பி றந்திலர் பிணியுறும் இருமுது குரவர்பாற் குறுகுற்றோர், 

கடுத்த யங்கிய மிடற்றிறை யாதியாங் கடவுளர் பெயர்கொள்ளா, 

தடுத்த மாக்கடம் பெயர்பெறு பீடிலர் அலகைதன் நாமத்தோர்,

படித்த லந்தனில் புன்னெறிச் சமயமாம் படுகுழிப் பட்டுள்ளோர்.    62

பிணியர் மூங்கையர் பங்கினர் வெதிரினர் பிறர்மனை தனிற் செல்வோர்,

கணிகை மாதரின் விழிப்பவர் பன்முறை காளையர் தமை நோக்கி, 

நயிண காதலான் முன்கடை நிற்பவர் நலம்பெறப் புனைகின்றோர், 

தணிவில் துயில்மிகும் இயல்பினர் தன்னினும் மூப்புற்றோர்.       63

 

ஒருமை தங்கிய கோத்திர மரபினர் உயாந்தவர் குறளானோர், 

பருமை தங்கிய யாக்கையர் மெல்லுருப் படைத்தவர் பயனில்லாக்,

கருமை தங்கிய வடிவினர் பொன்னெனக் கவின்றெழு காயத்தோர்,

இருமை தங்கிய பசப்பினர் விளர்ப்பினர் எருவையின் உருமிக்கோர்.  64

 

நாணி லாதவர் ஆடவர் புணர்ச்சியில் நணியவர் நகைக்கின்றோர், 

ஏணி லாதவர் பெருமிடல் சான்றவர் இருமுது குரவோர்தம், 

ஆணை நீங்கினர் சினத்தினர் இகலினர் அடுதிறம் முயல்கின்றோர்,

காண வேணடினர் நடமுத லாயின காமனாற் கவல்கின்றோர்.      65

 

ஈசன் அன்பிலர் பெருந்தகை முனிவரை இகழ்பவர் உயிர்மீது, 

நேசமென்பன இல்லவர் தங்குல நெறிதனில் நில்லாதோர், 

மாசு தங்கிய குணத்தினர் நிறையிலார் மனமெனுங் காப்பில்லோர், 

தேசி கன்றனை மனிதனென் றுன்னினர் தேவரைச் சிலையென்றோர்.               66

 

பத்தின் மேற்படும் ஆண்டினர் பூத்திடு பருவம்வந் தணுகுற்றோர், 

ஒத்த பண்பிலர் அச்சமில் மனத்தினர் உருமென வுரை செய்வோர், 

அத்தன் அன்னையீந் தருளுமுன் ஒருவர்பால் ஆர்வமுற்றவர்சேர,

வைத்த சிந்தையர் பெருமிதம் உற்றுளோர் மடமொடு பயிர்ப்பில்லோர்.   67

 

பிறப்பின் எல்லையில் விழியிலார் தோற்றிய பின்றையே இழக்கின்றோர், 

மறுப்ப யின்றிடுங் கண்ணினர் படலிகை வயங்கிய நோக்கத்தார்,

குறிப்பின் மெல்லென வெ•கியே விழித்திடுங் குருடர்சாய் நயனத்தோர், 

சிறப்பில் பூஞையின் நாட்டத்தர் கணத்தினில் திரிதரு செங்கண்ணோர்.     68

 

தூறு சென்னியர் நரைமுதிர் கூந்தலர் துகளுறும் ஐம்பாலார், 

வீறு கோதையர் சின்னமார் குழலினர் விரிதரும் அளகத்தோர்,

ஈறில் செம்மயிர்ப் பங்கியர் நிலனிடை இறக்கிய கேசத்தோர், 

ஊறு சேர்தரும் ஓதியர் விலங்கென உரமிகு குரலுள்ளோர். 69

 

சிறுகு கண்ணினர் மிகநெடுந் துண்டத்தர் சேர்ந்திடு புருவத்தோர், 

குறிய காதினர் உயர்தரும் எயிற்றினர் கோணுறு கண்டத்தோர், 

மறுவி ராவிய முகத்தினர் சுணங்குறா மணிமுலை மார்பத்தோர், 

வெறிய தாகிய நுசுப்பிலர் சிலையென வியன்மிகு வயினுள்ளோர்.  70

         

காய நூல்முறை உரைத்திடும் இயல்பிலாக் கடிதட நிதம்பத்தோர், 

வாயும் அங்கையும் நகமுமுள் ளடிகளும் வனப்புறு சிவப்பில்லோர், 

மேய சின்மயிர் பரந்திடு பதத்தினர் மென்சிறை எகினம்போல், 

தூய நன்னடை இல்லவர் அங்குலி தொல்புவி தோயாதோர்.        71

 

இனைய தன்மைய ராகிய மாதர்கள் ஏனையர் இவர்யாவரும், 

புனையு மங்கல மாகிய கடிவினை புரிதர வரையாதோர், 

அனைய ரேயெனின் வேண்டலன் முழுவதும் அவரியல் அணுகாத, 

வனிதை யுண்டெனின் வேண்டுவன் தேர்ந்தனை மரபினில் தருகென்றான்.    72

 

காட்டில் நின்றிடு குற்றியின் நோற்புறு கவுச்சிகன் இவைகூறக், 

கேட்டு மூரலும் உவகையுங் கிடைத்தனன் கேடில்சீர் உலகுள்ள, 

நாட்ட கந்தனில் நாடிநல் லியல்புள நங்கையை நின்பாலிற், 

கூட்டுகின்றனன் மானுதல் ஒழிகெனக் குச்சகன் உரைசெய்தான்.                   73

 

உரைத்த குச்சகன் மைந்தனை நிறுவியே ஒல்லைசென் றகிலத்தில், 

திருத்த குஞ்சுடர் மலிதரு செம்பொனிற் செய்ததோர் அணிநாப்பண், 

அருத்தி சேர்தரக் குயிற்றிட வேண்டியோர் அருமணி தனைக்கொள்வான், 

கருத்தி லுன்னுபு தெரிபவன் போல்ஒரு கன்னியைத் தேர்கின்றான்.         74

 

        வேறு

 

அன்னவன் தன்னேர் முனிவரர் சிலர்வந் தணுகலும் அவரொடும் வினாவிச், 

சென்னிதன் தேயத் தநாமயம் என்னுஞ் செயிரிலா வனத்துசத் தியன்பால், 

கன்னிகை யிருத்தல் உணர்ந்துமற் றவன்பாற் கதுமெனச் சேறலுங் காணூஉத்,

தன்னடி வணங்க வெதிருறத் தொழுது தழுவியே அவனொடுஞ் சாரா.              75

 

மாசற வியன்ற உறையுளிற் கொடுபோய் வரன்முறை வழாமலே அமைத்த, 

ஆசனத் திருத்திக் கன்னிகை யொடுதன் பன்னியை யாயிடை அழைத்துத், 

தேசிக னுற்றான் பணிமின்நீர் என்னாச் சென்னியால் இறைஞ்சுவித் துரிய, 

பூசனை புரிந்து நகையொடு முகமன் புகன்றள வளாயினன் புனிதன்.                       76

 

அறுசுவை கெழுவும் நறியசிற் றுண்டி அமுதினில் தூயன அருத்திக், 

குறைவறும் அடிகட் கென்னிடை வேண்டுங் கொள்கைய தென்னெனக் கூற, 

மறுவறு தவத்துக் குச்சக முனிவன் மகிழ்ந்துநீ மாதவம் புரிந்து, 

ருமகள் தன்னை யெனதொரு மகற்குப் பேசுவான் பெயர்ந்தனன் என்றான்.          77

 

இனையசொல் வினவி முனிவரன் மகிழா என்மகள் விருத்தையை இயல்சேர்,

உனதுமைந் தற்கு நல்கமுன் செய்த உயர்தவம் என்கொலென் றுரைத்து,

மனமுற நகையும் உவகையுங் கிளர மணவினை இசைந்துமா தவத்துப், 

புனிதனை அங்கட் சிலபகல் இருத்திப் போற்றிசெய் தொழுகுறும் பொழுதின்.        78

 

வேறு

 

பங்கமில் உசத்தியன் பன்னி யாகிய

மங்கலை விடுத்திட மகள்வி ருத்தைதான்

அங்குள இகுளையர் ஆயந் தன்னுடன்

செங்கயல் பாய்புனல் திளைப்பப் போயினாள்.                    79

 

காடுற வந்திடு கலுழி மாண்புனல்

ஆடினள் மகிழ்சிறந் தணங்க னாரொடு

மாடுறு பொதும்பர்போய் மலர்கொய் தன்னவை

சூடினள் இருந்தனள் தொடலை ஆற்றியே.                       80

 

பாசிழை மங்கையர் பண்ணை யோடெழீஇ

ஆசறு பொதும்பினும் அணங்கை யன்னவள்

மாசறு தாரகை மரபிற் சூழ்தருந்

தேசுறு மதியெனத் திரும்பவும் வேலையே.                      81

 

உருகெழு கனையொலி உருமுக் கான்றிடுங்

கருமுகில் இ•தெனக் கனன்று காய்கனல்

சொரிதரும் விழியது சூர்த்த மெய்யது

பெருமத நதியொடு பெயரு கின்றதே.                            82

 

தாழுறு கரத்தது தடத்தின் சால்பெனக்

காழுறும் எயிற்றத கறைகொள் காலதால்

ஏழுகியர் குறும்பொறை இபமொன் றேற்றெதிர்

பாழிய வரைதுகள் படுத்துச் சென்றதே.                  83

 

காண்டலும் வெருவினர் கவன்றவ் வாறுசெல்

ஆண்டகை யோர்களும் அகன்று சிந்தினார்

நீண்டிடு கடலிடை நிமிர்ந்த வெவ்விடம்

ஈண்டலும் இரிந்தபுத் தேளிர் என்னவே.                  84

 

கன்னிகை விருத்தையாள் கண்டு துன்புறா

அன்னமென் னடையினர் அகன்று சிந்தலும்

என்னினி இழைப்பதென் றிரங்கி யேங்கியே

உன்னருங் கடுப்பினில் உஞற்றி யோடலும்.                      85

 

கீழ்ந்தறை போகிய கிளைஞ ராமெனத்

தாழ்ந்திடு பசும்புதல் செறியத் தான்மறைந்

தாழ்ந்திடு கூவலொன் றணுக அன்னதில்

வீழ்ந்தனள் அழுந்தினள் விளிவுற் றாளரோ.                      86

 

முடங்களை அலங்குறு முதிய பூநுதல்

மடங்கலின் ஏறெதிர் வரினும் மாறுகொள்

கடங்கலுழ் மால்கரி கல்லென் ஆர்ப்பொடு 

நடந்தது மலையமா னாடு சாரவே.                              87

 

இரிந்திடு மாதரார் யாண்டு மாகியே

விரிந்திடு வோர்குழீஇ வியர்க்கு மேனியர்

சரிந்திடு கூந்தலர் தளரும் நெஞ்சினர்

பிரிந்திடும் உவகையர் பெயர்ந்து நாடினார்.                      88

 

தண்டம தெங்கணுந் தானஞ் சிந்திடக்

கொண்டலின் எய்திய கோட்டு மாதிரங்

கண்டிலர் கன்னிகை தனையுங் காண்கிலர்

உண்டிலை யெனவுயிர் உயிர்ப்பு நீங்கினார்.                      89

 

மண்ணிடை யாறென வழிக்கொண் டேகவே

கண்ணிணை புனலுகக் கலுழ்ந்து சோர்வுறாத்

துண்ணென உணர்வுறத் துளங்கிச் சூழ்கனல்

புண்ணுறு வோரெனப் புலம்பல் மேயினார்.                       90

 

வேறு

 

பெண்ணுக் கணிகலமே பேராகுக் கோருருவே

கண்ணுக் கணியே கமலத்துச் செந்திருவே

மண்ணிற் புனல்படிந்தாய் வானதியும் ஆடுவதற்

கெண்ணித் துணிந்தோ எமைவிட்டுப் போயினையே.                      91

 

வன்னப் புனலாட்டி வல்லே புறங்காத்தென்

மின்னைத் தருதி ரெனவே விடைகொடுத்த

அன்னைக்கென் சொல்வேம் அடுகளிற்றின் முன்னாக

உன்னைத் தனிவிட் டுயிர்கொண்டு போந்தனமே.                 92

 

ஐயர் உசத்தியரும் அன்னையெனும் மங்கலையும்

வையம் பரவுகின்ற மாதுலராங் குச்சகருங்

கையறவின் மூழ்கக் கரந்தாய் இனியொருகால்

செய்ய முகமுந் திருநகையுங் காட்டாயோ.                              93

 

என்னப் பலவும் புலம்பி இரங்குற்றே

உன்னற் கருஞ்சீர் உசத்தியன்றான் நற்றவத்தின்

மன்னுற்ற தெய்வ வனத்தின் மலைவாழக்கைப்

பன்னிக் கிவையுரைத்துப் பாவைநல்லார் ஆவலித்தார்.            94

 

கேட்டிடலும் அன்னை வயிறதுக்கிக் கேழ்கிளர்தீ

ஊட்டரக்கே யென்ன உருகி மனமறுகி

வாட்டடங்கண் நீர்குதிப்ப வாய்வெரீஇத் தன்கணவன்

தாட்டுணையில் வீழ்ந்து புகுந்தபடி சாற்றினளால்.                 95

 

ஒன்றுபுரி காட்சி முனிவன் உவைகேட்டுக்

கன்றுபிரி தாயின் கவன்றரற்றிக் கன்னியொடு

சென்றுபிரி வுற்றோரை நோக்கிச் சினக்களிறு

கொன்றதுவோ அஞ்சாது கூறுமெனச் செப்புதலும்.                96

 

தூயபுன லாடித் துறைபுகுந்து சூழ்பொதும்பில்

ஆயமுடன் ஆடி யகன்றிங்கு வந்திடலுங்

காயுமழல் வெங்கட் கடகளிறு வந்ததுகண்

டோயுமுணர் வெய்தி எல்லோமும் ஓடினமால்.                          97

 

ஓடி யுலையா ஒருவர் நெறியொருவர்

கூடல் இலதா அணியின் குழாஞ்சிந்திச்

சாடு மதகரியில் தப்பி விருத்தைதனைத்

தேடியங்ஙன் காணாது சென்றனம்யாம் என்றிடலும்.                      98

 

சென்றாங்கவ் வெல்லைதனில் தேடித் தியங்குற்று

நின்றான் மகள்தன் நிறங்கிளரும் பொற்கலனோர்

ஒன்றாக வெவ்வே றொருநெறியில் சிந்திடக்கண்

டென்றாய் படர்ந்தநெறி ஈதுகொலென் றேமுற்றான்.                      99

 

பூண்போ கியநெறியே தொட்டுப் புதல்விதனைக்

காண்போ மெனவே கனங்குழையா ரோடேகி

மாண்போய கூவலொன்று வந்தணுக ஆங்கதனில்

சேண்போய தன்மகளைக் கண்டு தெருமந்தான்.                   100

 

வேறு

         

கூவலுறு வதுநோக்கி நெடிதுயிர்த்து விழிவழிநீர் குதிப்பக் குப்புற், 

றாவலியா மகளையெடுத் தகன்கரையின் பாற்படுத்தி அழுங்கலோடும்,

பாவையர்கள் தழீஇக்கொண்டு புலம்பினரால் அதுகேட்டுப் பயந்த நற்றாய், 

காவிலுறு கோகிலம்போல் நெடிதரற்றிப் பெருந்துயரக் கடலுட் பட்டாள்.            101

 

தன்பால்வந் தவதரித்த நங்கைதனைக் கைவிட்டுத் தரியா ளாகி, 

அன்பாலே உயிர்பதைப்ப வயிறதுக்கி ஆகுலியா அரற்றி யேங்கி,

மின்பாலோர் மின்படிந்த தன்மையென அவளாக மிசையே வீழ்ந்து, 

தென்பாலிற் புகுந்தனையோ ஓமகளே யெனப்புலம்பித் தேம்ப லுற்றாள்.            102

 

அன்னேயோ அன்னேயோ ஆகொடிய தறனேயோ அறியேன் அந்தோ, 

முன்னேயோ நெடுங்காலங் குழவியின்றிப் பெரநோன்பு முயன்று பெற்ற,  

மின்னேயோ உயிரிழந்து வௌ¢ளிடையிற் கிடந்திடுமால் விதியார் செய்கை,

இன்னேயோ யானொருத்தி பெண்பிறந்து பெற்றபயன் இதுவே யன்றோ.            103

 

புலிக்கணங்கள் திரிகானில் ஒருமானை வளர்த்ததனைப் போக்கி நின்றே, 

அலக்கணுறு வோரெனவே கைவிட்டுத் தமியேனும் அழுங்கா நின்றேன், 

மலர்க்கமலத் திருவைநிகர் என்மகளைக் கொல்லியமுன் வந்த தந்தக், 

கொலைக்க ளிற்றின் வடிவன்றே கொடியேன் செய் பெரும்பவத்தின் கோல மன்றோ. 104

 

அறங்காட்டிற் சென்றதுவோ தெய்வதமும் இங்கிலையோ அரிதா முத்தித், 

திறங்காட்டுந் தவநெறியும் பொய்த்தனவோ கலியுமினிச் சேர்ந்த தேயோ, 

மறங்காட்டும் வனக்களிறு வந்தடர்க்க ஈண்டெனது மாது மாண்டு, 

புறங்காட்டிற் கிடந்திடுமோ என்னேயென் னேயிதுவோர் புதுமை யாமே.     105

 

               வேறு

 

என்றிவை பலவும் பன்னி இடருழந் தரற்றும் வேலை

மன்றலங் குழலின் மாதர் வளைந்தனர் இரங்கி மாழ்க

ஒன்றிய கேளிர் அல்லா ரியாவரும் உருகி நைந்தார்

அன்றவண் நிகழ்ந்த பூசல் ஆகுலம் அறைதற் பாற்றோ.           106

 

கோட்டமில் சிந்தை யோனாங் குச்சகன் குறுகி யங்கண் 

நாட்டநீர் பனிப்பச் சோரும் நங்கையர் தம்பா லெய்தி

மீட்டினித் தருவன் மாதை விம்மலிர் என்னா வேறோர்

மாட்டுற விருந்த தந்தைக் கினையன வகுத்துச் சொல்வான்.              107

 

மறைமுத லாய நுண்ணூல் மருளற உணரா மாக்கள்

சிறியரே முதியர் பாலர் சேயிழை மகளிர் இன்னோர்

உறுவதோர் அவலஞ் செய்தாய் ஊழ்வினை முறையும் ஓராய்

அறிவநீ  இன்னே யாயின் ஆரிது தணிக்கற் பாலார்.                      108

 

கேளையா மனத்தில் துன்பங் கிளத்தலை கேடு நீங்கி

நீளயா வுயிர்த்தார் போலிந் நேரிழைக் கன்னி தன்னை

நாளையான் விளித்து நின்பால் நல்குவன் நல்க நீநங்

காளையா னவற்குப் பின்னாட் கடிமணம் புரிதி அன்றே.           109

 

ஐயமென் றுளத்தி லுன்னி அழுங்கலை விதியு மற்றே

மெய்யுணர் வதனாற் கண்டாம் ¤வருத்தைதன் யாக்கை தன்னை

மொய்யுறு தயிலத் தோணி மூழ்குவித் திருத்தி யின்றே

ஒய்யென நோற்று மீட்டுத் தருகுவன் உயிரை யென்றான்.         110

 

சாற்றிய துணர்ந்து தாதை தயிலத்தி லிட்டு மாதைப்

போற்றினன் இருப்ப மேலோன் போயொரு பொய்கை மூழ்கிக்

கூற்றுவற் புகழ்ந்து நோற்பக் கொடுங்குழை மடவார் அஞ்சக்

காற்றென முன்னர் வந்த களிறுமீண் டணைந்த தம்மா.           111

 

தடமிகு புனலுட் புக்குத் தாளினால் உலக்கிச் சாடிப்

படவர வனைய செய்கைப் பருவலித் தடக்கை தன்னால்

இடைதொறுந் துழாவி நின்ற இருந்தவ முனிவற் பற்றிப்

பிடர்மிசை யேற்றிக் கொண்டு பெரிதுசேண் பெயர்ந்த தன்றே.      112

 

கோதறு குணத்தின் மேலாங் குச்சகன் என்னுந் தொல்பேர்

மாதவன் உணர்ந்து பின்னர் மதக்களி றதனை நோக்கி

ஈதெனைப் பற்றிச் செல்வ தென்கொல்கா ரணமென் றெண்ணி

ஓதியின் வலியா லன்ன தூழமுறை உன்ன லுற்றான்.                    113

 

வேறு

 

மாவ தத்தினை இழைத்திடும் பூட்கையின் மதநீர்

காவ தத்தினுங் கமழ்தரு கலிங்கநாட் டதன்பால்

ஆவ தத்நேர் மாக்கள்வாழ் அரிபுரம் அதனில்

தேவ தத்தன்என் றுளன்ஒரு வணிகரில் திலகன்.                 114

 

தவத்தின் அன்னவன் பெறுமகன் தருமதத் தன்எனப்

புவிக்கண் மேலவர் புகழ்செய அறம்புரி புகழோன்

கவற்சி யின்றியே மூவகைப் பொருளையுங் காண்போன்

உவப்பு நீடிய இருநிதிக் கிறையினும் உயர்ந்தோன்.                       115

 

தந்தை அன்னையும் இறத்தலுந் தமியனே யாகச்

சிந்தை வெந்துயர் உழந்துபின் ஒருவகை தேற

அந்த வேலையின் அவன்பெருந் திருவினை அகற்ற

வந்து தோன்றினன் மனமருள் செய்வதோர் வாதி.                116

 

முண்டி தப்படு சென்னியன் தாதுவின் முயங்கு

குண்ட லத்தினன் கோலநூல் மார்வினன் நீற்றுப்

புண்ட ரத்தயல் நெற்றியண்¢ கஞ்சுகன் புதியோன்

கண்டி கைக்கலன் புனைந்துளோன் வேத்திரக் கரத்தோள்.          117

 

அவனைக் கண்டனன் அடிமுறை வணங்கின் அருவாஞ்

சிவனைக் கண்டன னாமெனப் பெருமகிழ் சிறந்தான்

புவனிக் குள்ளவர் என்னினுஞ் சாலவும் புதியர் 

தவமிக் கோரிவர் என்றுகொண் டுறையுளிற் சார்ந்தான்.           118

 

பொன்ன ருங்கலந் திருத்துபு குய்யுடைப் பழுக்கல்

நன்ன லம்பெற அருத்தினன் முகமனும் நவின்றான்

பின்னர் அன்னவன் றனையெதிர் நோக்கினன் பெரியோய்

என்னி வண்வந்த தென்றனன் வணிகருக் கிறைவன்.              119

 

ஈசன் தந்திடு விஞ்சையொன் றெமக்குள தெவர்க்கும்

பேசுந் தன்மைய தன்றது குரவர்பாற் பெரிதும்

நேசம் பூண்டவர்க் குரைப்பது நெஞ்சினில் சிறிதும்

மாசின் றாயநிற் குணர்த்துவன் அ•தென வகுத்தான்.              120

 

சரத மேயிது சம்புவின் வந்ததோர் தகைசால்

இரத முண்டது பொன்னெனச் செய்தனம் எமக்கோர்

அரிது மன்றது போல்வன பலவுள அவைதாம்

விரத மாதவர் அல்லதி யார்கொலோ விரும்பார்.                 121

 

காரி ரும்பையும் நாகத்திற் காட்டுதுங் கரிய

சீரி ரும்பினைப் பொன்னென உரைபெறச் செய்வாம்

மேரு வுங்கயி லாயமும் என்றிரு வெற்பை

யாரும் நோக்கவே காட்டுதும் இவைநமக் கரிதோ.                122

 

எய்தும் ஈயமும் இரதமும் வௌ¢ளிய தெனவே

செய்து மன்றியும் வங்கத்திற் செம்பொனுந் தெரிப்பாம்

நொய்தின் அன்னது வலியுறக் காட்டுதும் நுவலுங்

கைத வம்பயில் மாக்களுக் கினையன கழறாம்.                  123

 

இரும்பி னிற்செம்பு வாங்குவம் ஈயமும் அற்றே

வரம்பி லாததோர் தரணியண் டஙகளை மரபின்

அரும்பொன் வண்ணம தாக்குவம் வல்லவா றறைய

விரும்பி னாமெனின் யாண்டுமோர் அளப்பில வேண்டும்.          124

 

ஒன்று கோடிபொன் னாக்குவங் கோடிய துளவேல்

குன்று போலவே கோடியிற் கோடிசெய் குவமால்

நின்ற னக்குள பொருளெலாந் தருதியேல் நினது

மன்றல் மாளிகை நிதிக்கிடம் இல்லென வகுப்பாம்.                       125

 

என்ன வேமொழி சோரனை வணங்கினன் இமைப்பின்

முன்னர் உள்ளதுந் தான்றன துரிமையால் முயலப்

பின்னர் எய்திய நிதியமும் பேழையான் அவற்றின்

மன்னு பூண்களுங் கொணர்ந்தனன் முன்புற வைத்தான்.           126

 

வைத்த மாநிதி நோக்கலும் வணிகரில் திலகர்

உய்த்த செல்வமும் இதுகொலோ ஓவென உரையாக்

கைத்த லங்கொடு கைத்தலம் புடைத்துடுக் கணங்கள்

நத்த வேலையிற் ஒருங்குபட் டாலென நகைத்தான்.                      127

 

இந்த நின்பொருள் நம்முடை விஞ்சையில் இறைக்கும்

வந்தி டாதுநாம் உருக்குறு முகந்தனில் வழுவிச்

சிந்து கின்றதற் கிலையிது நமதுபின் திரியின்

அந்த மில்பொருள் கொடுக்குவம் வைத்தியென் றறைந்தான்.       128

 

முனியல் ஐயநீ வேண்டிய பெருநிதி முழுதும்

இனிது நாடியே கொணருவன் இருத்தியென் றுரைத்துப்

புனையும் ஆடையும் நிலங்களும் மணிகளும் ம்

மனையும் மாக்களும் பகர்ந்தனன் நிகரிலா வணிகன்.                     129

 

பொரும தத்தினை இழைத்திடு மருப்புயர் புழைக்கைப்

பெரும தக்கரி யென்னவே மயங்கினன் பெரிதும்

வரும தத்தமென் றறத்தையும் பர்ந்துமெய் வணிகன்

தரும தத்தனாம் பெயரினை நிறுவினன் தரைமேல்.                      130

 

இத்தி றத்தினில் தேடிய பெருநிதி எனைத்துங்

கைத்த லங்கொடு தாங்கியே கரவன்முன் காண

வைத்து நிற்றலும் மகிழ்ந்தனன் அவையெலாம் வாங்கி

மொய்த்த செங்கணல் தீயிடை உருக்குதல் முயன்றான்.           131

 

திரட்டி யாவையும் ஓருரு வாக்கினன் செழும்பொன்

இரட்டி தூக்கிய இரதமாங் கொருசிலை யிட்டு

மருட்டி ஆடக முழுவதும் உரைத்தவை வலிதா

உருட்டி மட்பெருங் குகையினில் மருந்தையுள் ளுறுத்தான்.               132

 

பண்ணு றுத்திய கனகமுள் ளிட்டதன் பாலும்

எண்ணு றுத்திய மிசைக்கணுங் களங்கமொன் றிட்டு

மண்ணு றுத்திநற் றுகில்கொடு பொதிந்தனன் மருங்கிற்

கண்ணு றுத்திய செந்தழற் புடைமிசை கரந்தான்.                 133

 

நூற்று நான்கொடு நான்குகுக் குடபுடம் நொய்தின்

வீற்று வீற்றதா விட்டது நோக்கினன் மிகவும்

மாற்று வந்தது பழுக்குமோர் வராகியின் மருளேல்

காற்றி லாததோர் உறையுள்காட் டென்றனன் கரவன்.                     134

 

சேமஞ் செய்ததோர் உறையுளைக் காட்டலுஞ் சென்று

வாமஞ் செய்ததோர் இந்தனக் குவான்மிசை மறவோர்

ஈமஞ் செய்தசெந் தழற்கொடு வராகிமே லிட்டுத்

தூமஞ் செய்தனன் அங்கியும் அவனெதிர் துரந்தான்.                      135

 

ஓங்கி நாட்டநீர் பொழிதர ஆருயிர் உலைய

வீங்கு கின்றமெய் வெதும்புற எங்கணும் வியர்ப்ப

மூங்கை யாமென மொழிகிலான் போவது முயலான்

பாங்கி ருந்திடு வணிகர்கோன் பட்டதார் பகர்வார்.                 136

 

எல்லை அன்னதிற் பொதிந்திடு பொற்குறை யெடுத்து

மெல்லெ னத்தன தாடையிற் கரந்தனன் வெய்யோன்

வல்லை யக்குகை போலஒன் றிருந்தது மருங்கில்

செல்ல வைத்தனன் தழற்பெரும் புகையையுந் தீர்த்தான்.          137

 

தந்த இக்குகை நின்கையில் தாங்கினை தழல்மேல்

வைத்தி என்றனன் அவனது புரிதலும் மரபின்

அத்த குஞ்செயற் குரியன யாவையும் அமைத்து

வித்த கம்பெறச் சேமியா ஒருசெயல் விதித்தான்.                 138

 

வேறு

 

உண்டி இகந்துரை யாடலை யாகிப்

பெண்டிரை வெ•கல் பெறாய்பிறர் தம்மைக்

கண்டிடல் இன்று கருத்தினில் என்மைக்

கொண்டிரு முப்பகல் கோதில் குணத்தோர்.                       139

 

நெய்கமழ் செஞ்சடை நீலிதன் முன்னோர்

மொய்கனல் வேள்வி முடித்திடல் உண்டால்

செய்கடன் அன்னது தீர்த்தபின் நாலாம்

வைகலின் ஏகுதும் மற்றிவண் என்றான்.                 140

 

அம்முறை செய்கென ஆங்கவன் அடியை

மும்முறை தாழ்ந்து முதற்பெரு வணிகச்

செம்மல வன்புடை சென்றிலன் நின்றான்

மைம்மலி சிந்தையன் வல்லை அகன்றான்.                      141

 

காவத மோரொரு கன்னலின் ஆகப்

போவது செய்து புறத்துரு மாறி

வாவினன் வேறொர் வளாகம துற்றான்

ஏவலின் வைகினன் இத்தலை வணிகன்.                 142

 

முப்பகல் போதலும் மூதறி வுள்ளோன்

செப்பிய நாள்வரை சென்றுள வன்றே

இப்பகல் வந்திலன் என்னை அவன்சொல்

தப்புவ னோவென வேதளர் கின்றான்.                    143

 

நீடிய தொல்புகழ் நீலி இருக்கை

நாடினன் மேதகு நன்னகர் எங்கும்

தேடினன் மாலுறு சிந்தைய னானான்

வாடினன் மீண்டனன் மாளிகை வந்தான்.                 144

 

அடுத்துமுன் வைத்த அருங்குகை தன்னை

எடுத்தது நோக்க இரும்பது வாக

வடுத்தவிர் சிந்தையன் மாயைகொ லென்னா

விடுத்தனன் அன்னது வீழுமுன் வீழ்ந்தான்.                      145

 

அத்தம் அனைத்தும் அகன்றிட லோடும்

பித்தின் மனத்தொடு பீழை யனாகி

எய்த்தனன் ஆயுளின் எல்லையும் எய்தத்

தத்தனும் விண்ணிடை சார்ந்தனன் அன்றே.                      146

 

அறந்தனை விற்ற அருஞ்செய லாலே

மறந்தரு தந்தனு மால்கரி யாகிப்

பிறந்தனன் முன்னுறு பெற்றிய தெல்லாம்

மறந்தனன் என்று மனத்திடை கொண்டு.                 147

 

மாற்றுவன் இப்பவம் வல்லையி னென்னாச்

சாற்றினன் முன்பு தவம்புரி வேலை

நோற்றிடு மோர்பகல் நோன்பவை தான்இவ்

வாற்றல்இ பத்துழை யாகுக வென்றான்.                 148

 

இப்பரி சங்கண் இயம்புத லோடும்

அப்பொழு தன்னவன் ஆண்டுறு வேழம்

மெய்ப்படி வந்தனை வீட்டினன் யாருஞ்

செப்பரி தாகிய தேவுரு வானான்.                       149

 

அந்தர துந்துபி யார்த்தன வானோர்

சிந்தினர் பூமழை சேணிடை நின்றும்

வந்தது தெய்வத மானம தன்பால்

இந்திர னாமென ஏறினன் அன்றே.                              150

 

பாசிழை மங்கையர் பற்பலர் சுற்றா

வீசினர் சாமரை விண்ணுறை கின்றோர்

ஆசிகள் கூறினர் அங்கவண் நிற்குந்

தேசிக னாரடி செங்கை குவித்தான்.                             151

 

நோக்கினன் மாதவ நோன்மை யுளானை

வாக்கினில் வந்தன வந்தனை செய்தான்

நீக்கரும் வல்வினை நீக்கினை யென்னா

மேக்குயர் புங்கவர் விண்ணுல குற்றான்.                 152

 

விண்ணிடை யேயவன் மேவுத லோடு

மண்ணிடை நின்றிடு மாதவன் முன்போல்

எண்ணரு நோன்ப தியற்றலும் அன்னோன்

கண்ணிய தென்றிசை காவலன் வந்தான்.                153

 

முன்னுறு கூற்றுவன் முப்பகை வென்றோய்

                       உன்னிலை நோக்கி உவந்தனம் நம்பால்

என்னைகொல் வேண்டிய தென்றலும் அன்னோன்

தன்னடி வீழ்ந்திது சாற்றுதல் உற்றான்.                  154

 

உந்திய சீர்த்தி உசத்தியன் மானென்

மைந்தன் மணஞ்செய வந்தனன் அன்னாள்

முந்துறு நென்னல் முடிந்தனள் முன்போல்

தந்தருள் என்றிது சாற்றுத லோடும்.                             155

 

அத்தகு போழ்தினில் அந்தகன் என்போன்

இத்தவன் வேண்டிய ஏந்திழை ஆவி

வைத்தன மேயது வல்லையின் மீட்டிங்

குய்த்திடு வாயென ஒற்றொடு சொற்றான்.                       156

 

கொற்றவன் இங்கிது கூறி மறைந்தான்

சொற்ற துணர்ந்திட தூதுவன் முன்போய்

உற்றிடு மவ்வுயி ரைக்கொடு போந்து

மற்றவள் யாக்கையுள் வந்திடு வித்தான்.                157

 

வேறு

 

உடற்குளுயிர் வந்திடலும் புகுந்ததுமெய் யுணர்வுசிறி துயிர்த்த நாசி, 

துடித்தனகால் பதைத்ததுரந் துளங்கிமுகம் விளங்கியதால் துவண்ட தாகம், 

எடுத்தனகை யசைந்தனதோ ளிமைத்தனகண் விழித்தனவால் இனைய காலை, 

மடக்கொடியுந் துயிலுணர்ந்தாள் போலெழுந்தாள் எல்லோரும் மருங்கிற் சூழ்ந்தார்.  158

 

அன்னையவள் தனைத்தழுவி இரங்குற்றாள் தந்தையெடுத் தணைத்துப் பல்காற், 

சென்னிதனில் உயிர்த்தேதன் இருகுறங்கின் மீமிசையே திகழச் சேர்த்தி, 

என்னடிகள் என்கடவுள் எனதுதவப் பயனாகும் எந்தை நென்னல், 

சொன்னபடி தவமியற்றி உய்வித்தான் இவளை யென்று துணிவிற் சொற்றான்.      159

 

சுற்றுகின்ற கிளைஞர்களும் அல்லோரும் அதிசயிப்பத் தொல்லை ஞாலம், 

பெற்றதிரு அனையாளதன் பெண்ணணங்கை முகநோக்கிப் பேதை நீயீண், 

டுற்றதுவும் இறந்ததுவும் மீண்டதுவும் முறைப்படவே உரைத்தி யென்னப், 

பொற்றொடியாள் அதுவினவிப் புகுந்ததொரு பரிசனைத்தும் புகல லுற்றாள்.        160

 

நீடியமங் கையர்பண்ணை தன்னுடனே போந்ததுவும் நெடுநீர்க் கான்யா, 

றாடியதும் மீண்டதுவுங் கடகளிறு போந்ததுவும் அதனைக் கண்டே, 

ஓடியதுந் தானொருத்தி தனித்ததுவுங் கூவலிடை உலைந்து வீழ்ந்து, 

வீடியதும் மீண்டதுவுந் தென்றிசைக்கண் நிகழ்வனவும் விரித்துச் சொற்றாள்.               161

 

சொன்னமொழ யதுகேளா மிகமகிழும் வேலைதனில் துகளில் தூயோன், 

கொன்னவிலும் முத்தலைவேற் கூற்றுவன்றன் அருள் பெற்றுக் குறுக லோடு, 

முன்னுறவே எதிர்சென்று பெருங்கிளையும் பன்னியுமா முனியும் பெற்ற, 

கன்னியும்வந் தடிவணங்கிப் போற்றி செய வரன்முறையே கருணை செய்தான்.     162

 

என்னுயிரும் பெருங்கிளைஞர் தம்முயிரும் இல்லறத்திற் கியன்ற பன்னி, 

தன்னுயிரும் நட்டோர்கள் தமதுயிரும் நின்றிடயான் தவத்திற் பெற்ற, 

மின்னுயிர்தந் தருளினையால் அரிதோநிற் கிதுவம்மா வேலை ஞாலம், 

மன்னுயிர்காத் தளிப்பவனும் நீயெனவே எனதுள்ளம் மதித்த தன்றே.               163

 

வள்ளலையுன் றிருவுளத்தை யாருணர்வார் கவுச்சிகனா மகற்கியான் பெற்ற, 

தௌ¢ளமிர்த மனையமொழி விருத்தையெனுங் கன்னிகையைத் திசையின் நாடிக், 

கொள்ளுதற்கு வந்தனையோ கூற்றுவனாற் போனவுயிர் குறுகி மீண்டு, 

மௌ¢ளவரும் படியஆ£த்துத் தந்திடுவான் வந்தனையோ விளம்பு கையா.          164

 

எனமுனிவன் தனைநோக்கி முகமன்கள் இவைபலவு மெடுத்துக் கூறி, 

அனையவனை யுடன்கொண்டு கூற்றத்தா ரெல்லாரு மடைந்து சூழ, 

மனைவியொடும் புதல்வியொடும் மடமாதர் தங்களடும் வல்லையேகித், 

தனதுறையுள் இடைப்புகுந்து வீற்றிருந்தான் ஆற்றரிய தவத்தின் மேலோன்.        165

 

பின்புமொரு சிலவைகல் குச்சகனை அவணிருத்திப் பெரியோய் இங்ஙன், 

என்புதல்வி தனையளிப்பன் உன்மதலை தனைக்கொண்டேயேகு கென்னத், 

தன்புதல்வற் கொடுவரலும் விருத்தையெனுங் கன்னிகையைத் தழல்சான் றாக, 

அன்பினொடு நன்னாளி லோரைதனில் விதிமுறையே அருள்செய் தானால்.         166

 

வேறு

 

அருள்புரிந் திடுதலும் அன்பி னான்இயைந்

யூ¤ருவரும் இல்லறம் இயற்றப் பல்பகல்

கருணைசெய் குச்சகன் கண்டு மாதவம்

புரிதர வேவட புலத்திற் போயினான்.                            167

 

போதலும் இருந்திடும் புனித வேதியன்

மாதவ வலியினால் மாதின் நோன்பினால்

மேதினி வியந்திட மிருகண் டென்னவோர்

காதலன் உதித்தனன் கணிப்பில் காட்சியான்.                     168

 

அப்புதல் வற்கியாண் டாறு சென்றுழி

மெய்ப்பிர மச்செயல் விளங்கு பான்மையால்

முப்புரி நூல்வினை முடித்துத் தாதைபோல்

செப்பரு மாதவஞ் செய்யப் போயினான்.                 169

 

ஊற்றமா மிருககண் டூயன் என்றிடும்

ஆற்றன்மா முனிவரன் அகல வன்னவன்

தோற்றமா கியசுதன் தொன்மை நாடியே

போன்றினன் ஆதியிற் புரியுஞ் செய்கடன்.                170

 

சொற்கலை தெரிமருத் துவதி யென்றிடும்

முற்கலன் மகள்தனை முறைவ ழாதுபின்

நற்கலை யணிகலன் நல்கி நீக்கிய

வற்கலை யுடையினான் வதுவை முற்றினான்.                   171

 

இருந்தனன் அநாமயம் என்னும் பேரொடும்

பொருந்திய வனத்திடைப் புதல்வர் இன்றியே

வருந்தினன் தமரொடும் மாது தன்னொடும்

அருந்தன் காசியை அடைதல் மேயினான்.                172

 

அடைந்ததோர் பொழுதினில் அமரர் யாவருங்

கடைந்திடு திரைக்கட லனைய கங்கைநீர்

குடைந்தனன் ஆடினன் குழுமி மாதவர்

மிடைந்திடு மறுகிடை விரைவில் மேவினான்.                   173

 

பொன்றிரண் மாமதில் புடைய தாமணி

கன்றிகை யென்பதோர் கடவுள் ஆலயஞ்

சென்றனன் சூழ்ந்தனன் திங்கள் வேணியான்

மன்றமர் திருவடி வணங்கிப் போற்றினான்.                      174

 

மெய்ப்படு மறையுணர் மிருகண் டென்பவன்

அப்பெருங் கோயிலுக் கணித்தொர் பாங்கரில்

செப்புறும் ஆகமத் தௌ¤வு நாடியே

மைப்பெருங் கண்டனை வழிபட் டானரோ.                       175

 

ஆதவம் பனிமழை அனிலத் தச்சுறாப்

பாதவ மாமெனப் பரவ மாறினும்

பேதைபங் குடையவெம் பிரானை உன்னியே

மாதவம் புரிந்தனன் மதலை வேண்டியே.                176

 

அருந்தவம் ஓரியாண் டாற்றத் தொல்லைநாட்

பொருந்திய மூவெயில் பொடித்த புங்கவன்

வரந்தனை உதவுவான் வந்து தோன்றலும்

இருந்தவ முனிவரன் இறைஞ்சிப் போற்றினான்.          177

 

முந்துறு முனிவரன் முகத்தை நோக்கிநீ

சிந்தையில் விழைந்ததென் செப்பு கென்றலும்

மைந்தனை வேண்டினன் வரத்தை நல்கென

எந்தையும் முறுவல்செய் தினைய கூறுவான்.                    178

 

வேறு

 

தீங்குறு குணமே மிக்குச் சிறிதுமெய் யுணர்வி லாமல்

மூங்கையும் வெதிரு மாகி முடமுமாய் விழியும் இன்றி

ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி யுழப்போ னாகி

ஈங்கொரு புதல்வன் தன்னை யீதுமோ மாத வத்தோய்.            179

 

கோலமெய் வனப்பு மிக்குக் குறைவிலா வடிவ மெய்தி

ஏலுறு பிணிகள் இன்றி எமக்குமன் புடையோ னாகிக்

காலமெண் ணிரண்டே பெற்றுக் கலைபல பயின்று வல்ல

பாலனைத் தருது மோநின் எண்ணமென் பகர்தி யென்றான்.        180

 

மாண்டகு தவத்தின் மேலாம் மறைமுனி அவற்றை யோரா

ஆண்டவை குறுகி னாலும் அறிவுள னாகி யாக்கைக்

கீண்டொரு தவறு மின்றி எம்பிரான் நின்பா லன்பு

பூண்டதோர் புதல்வன் தானே வேண்டினன் புரிக வென்றான்.       181

 

என்றிவை துணிவி னாலே இசைத்தலும் ஈசன் நிற்கு

நன்றிகொள் குமரன் தன்னை நல்கின மென்று சொல்ல

நின்றிட முனிவன் போற்றி நெஞ்சகம் மகிழ்ச்சி யெய்தி

ஒன்றிய கேளி ரோடும் உறைந்தனன் உறையும் நாளில்.           182

 

பூதல இடும்பை நீங்கப் புரைதவிர் தருமம் ஓங்க

மாதவ முனிவர் உய்ய வைதிக சைவம் வாழ

ஆதிதன் னருளி னாலே அந்தகன் மாள அன்னான்

காதலி உதரத் தாங்கோர் கருப்பம்வந் தடைந்த தன்றே.            183

 

அடைதலும் அதனை நோக்கி அறிதரு முனிவன் ஆண்டை

விடையவன் அடியார் யார்க்கும் வேண்டிய வேண்டி யாங்கே

நெடிதுபல் வளனும் ஈந்து நிறைதரு திங்க டோறுங்

கடனியல் மரபு மாற்றிக் காசியின் மேவி னானே.                 184

 

கறையுயிர்த் திலங்கு தந்தக் காய்சின அரவங் கவ்வக்

குறையுயிர்ப் படிவத் திங்கள் அமிர்தினைக் கொடுத்திட் டாங்கு

மறையுயிர்த் தருளுஞ் செவ்வாய் மதலையை வயாவின் மாழ்கிப்

பொறையுயிர்த் தருளில் தந்தாள் பொறைதரு திருவைப் போல்வாள்.       185

 

மீனமும் முடிந்த நாளு மேவுற மிதுனஞ் செல்ல

ஊனமில் வௌ¢ளி தானும் ஒண்பொனும் உச்ச மாகுந்

தானமுற் றினிது மேவத் தபனனே முதலா வுள்ள

ஏனையர் முனிவர் நாகர் இந்தொறும் இருப்ப மன்னோ.           186

 

நன்ணினன் புவியின் மைந்தன் நவமணிக் குலமும் பொன்னுஞ்

சுண்ணமும் மலருந் தாதுந் தூயமென் கலவைச் சாந்தும்

தண்ணுறு நானச் சேறுந் தலைத்தலைக் கொண்ட தாவில்

விண்ணவர் மண்ணு ளோர்கள் வியப்புற வீசி ஆர்த்தார்.           187

 

தேவதுந் துபிகள் ஆர்த்த செய்தவை யோம்பி மாற்றும்

மூவர்கள் அன்றி ஏனோர் முறைமுறை ஆசி செய்தார்

யாவதென் றுணர்தல் தேற்றா திந்நகர் அன்றி நேமி

காவல்செய் உலகம் யாவுங் களிமயக் குற்ற வன்றே.                     188

 

தந்தையும் அதனைக் கேளாத் தடம்புனற் கங்கை மூழ்கி

அந்தணர் முதலோர்க் கெல்லாம் ஆடகம் பலவும் நல்கி

முந்துறு கடன்கள் ஆற்ற முளரிமேல் முனிவன் மேவி

மைந்தனுக் குரிய நாமம் மார்க்கண்டன் என்று செய்தான்.         189

 

மறுப்படாத் திங்கள் போல வளர்தலும் மதியந் தோறும்

உறுப்படை உபநிட் டானம் ஓதனம் பிறவும் முற்ற

நெறிப்படு மோரி யாண்டின் நெடுஞ்சிகை வினையும் ஆற்றிச்

சிறப்புடை இரண்டாம் ஆண்டிற் செவிநெறி புரித லுற்றான்.               190

 

ஏதமில் ஐந்தின் முந்நூல் இலக்கண விதியுஞ் செய்தே

ஓதிடுங் கலைக ளெல்லாம் உள்ளுற வுணர்த்துங் காலை

வேதமும் பிறவுங் கொண்ட வியன்பொருள் தெரிந்து மேலாம்

ஆதியே சிவனென் றெண்ணி அவனடி அரணென் றுற்றான்.        191

 

அரனைமுன் இறைஞ்சி யன்னான் அன்பரைத் தாழ்ந்து தங்கள்

குரவனை வணக்கஞ் செய்து கோதறு முனிவர் தம்மைப்

பரவியே பயந்த மேலோர் பாதபங் கயங்கள் சூடிப்

பிரமமாம் ஒழுக்கம் நாளும் பேணினன் பிறப்பு நீப்போன்.          192

 

இந்தவா றியலுங் காலை எண்ணிரண் டான யாண்டும்

வந்ததால் அதனை நோக்கி மைந்தனை நோக்கி வாளா

தந்தையும் பயந்த தாயுந் தனித்தனி இருந்து சால

வெந்துயர்க் கடலின் மூழ்கி விம்மலுற் றிரங்கி நைந்தார்.          193

 

ஆங்கது மதலை காணா அடியினை வணங்கி அன்னோர்

பாங்குற அணுகி நீவிர் பருவரல் உறுகின் றீரால்

ஈங்கிது வென்னே என்னும் யாதுமொன் றறிதல் தேற்றேன்

நீங்குமின் அவலம் நும்பால் எய்திய நிகழத்து மென்றான்.         194

 

கூறிய மொழியுட் கொண்டு குமரநீ யிருக்க நம்பால்

வேறொரு துயர மெய்தி மெலிவதும் உண்டோ மேனாள்

ஏறுடை அமல மூர்த்தி யாண்டுநின் தனக்கீ ரைந்தும்

ஆறுமென் றளித்தான் அந்நாள் அடைதலின் அவலஞ் செய்தேம்.   195

 

என்றுரை செய்த தாதை இடருறு முகத்தை நோக்கி

ஒன்றுநீர் இரங்கல் வேண்டாம் உயிர்க்குயி ராகி யென்றும்

நின்றிடும் அரனை யேத்தி அருச்சனை நிரப்பிக் கூற்றின்

வன்றிறல் கடந்து நும்பால் வல்லைவந் தடைவன் மன்னோ.              196

 

இருத்திரால் ஈண்டே என்னா ஏதுக்கள் பலவுஞ் செப்பிக்

கருத்துற நெடிது தேற்றிக் கான்முறை வணங்கி நிற்பத்

திருத்தகு குமரற் புல்லிச் சென்னியும் மோந்து முன்னர்

வருத்தமும் நீங்கிச் சிந்தை மகிழ்ந்தனர் பயந்த மேலோர்.         197

 

இருமுது குரவர் தத்தம் ஏவலின் ஈசன் என்னும்

ஒருவன தருளும் அன்பு முடனுறு துணையாய்ச் செல்லப்

பொருவரு மகிழ்ச்சி பொங்கப் பொள்ளெனப் பெயர்ந்து போகித்

திருமணி கன்றி கைப்பேர்ச் செம்பொன்ஆ லயத்திற் புக்கான்.       198

 

என்புநெக் குருகக் கண்ணீர் இழிதர வலஞ்செய் தீசன்

முன்புற வணக்கஞ் செய்து முடிமிசை யடிகள் சூடித்

தென்புலத் தொருசா ரெய்திச் சிவனுருச் செய்து பன்னாள்

அன்புடன் அருச்சித் தேத்தி அருந்தவம் இயற்றி யிட்டான்.         199

 

வேறு

 

ஈசனும் அவ்வழி யெய்தி நற்றவம்

பூசனை அதனொடு புரிதி யாலது

மாசில தாதலின் மகிழ்ந்து நீயினிப்

பேசுக வேண்டிய பெறுதற் கென்னவே.                   200

 

ஐயனே அமலனே அனைத்து மாகிய

மெய்யனே பரமனே விமல னேயழற்

கையனே கையனேன் காலன் கையுறா

துய்யநேர் வந்துநீ உதவென் றோதலும்.                  201

 

அஞ்சலை அஞ்சலை அந்த கற்கெனாச்

செஞ்சரண் இரண்டையுஞ் சென்னி சேர்த்தலும்

உஞ்சனன் இனியென ஓத வொல்லையில்

நஞ்சணி மிடற்றினான் மறைந்து நண்ணினான்.           202

 

நண்ணிய பின்னரே நவையின் மைந்தனுக்

கெண்ணிரண் டாண்டெனும் எல்லை செல்லலும்

விண்ணிவைட முகிலென விசைகொண் டொல்லையில்

துண்ணென வோர்யம தூதன் தோன்றினான்.              203

 

பண்டுமுப் புரமெரி படுத்த புங்கவன்

புண்டரீ கப்பதம் பரவும் பூசனை

கண்டனன் வெருவிமார்க் கண்டன் தன்னையான்

அண்டுவ தரிதென அகன்று போயினான்.                 204

 

தீயெழ நோக்கியே சென்றி டாதுசேண்

போயதோர் வல்லியம் போலுந் தன்மையான்

வேயென வந்துபின் மீண்டு தென்புல

நாயகன் அடிதொழா நவிறல் மேயினான்.                205

 

இந்திரன் புகழ்தரும் இறைவ கேட்டியால்

அந்தியின் நிறமுடை அண்ணல் பாலுறு

சிந்தையன் அவனடி சேருஞ் சென்னியோன்

சந்தத மவன்புகழ் சாற்றும் நோன்மையோன்.                     206

 

ஈசன தருச்சனை இயற்று கின்றனன்

ஆசறு மனத்தினன் அறிவன் அந்தணன்

காசியின் இடத்தன்மார்க் கண்ட னாமெனப்

பேசிய சிறப்புடைப் பெயர்பெற் றோங்குவான்.                    207

 

அன்னதோர் பாலனை அணுக அஞ்சினன்

முன்னரும் ஏகலன் முக்கண் எம்பிரான்

தன்னுழை இருந்தனன் தண்டக நாயக

உன்னுதி இதுவென உணரக் கூறினான்.                  208

 

கூறிய அளவையிற் கூற்றன் துப்பினை

ஆறிய செந்தழற் கருத்தி னாலெனச்

சீறினன் உயிர்த்தனன் சிறுவன் ஆங்கவன்

ஈறில னாகிய இறைவ னோவென்றான்.                  209

 

தருதியென் கணகரை யென்று தணடகன்

உரைசெய நின்றதோர் ஒற்றன் ஓடியே

வருதிர்நும் மழைத்தனன் மன்னன் என்றிடக்

கரணர்கள் வந்தனர் கழல்வ ணங்கினார்.                 210

 

இறையவன் அவ்வழி எவருங் காணொணா

அறைகழல் அண்ணலை யருச்சித் தேத்திய

மறுவறு காட்சியான் மார்க்கண் டப்பெயர்ச்

சிறுவனுக் கிறுவரை செப்பு மென்னவே.                 211

 

சித்திர குத்தரென் றுரைக்குஞ் சீரியோர்

ஒத்திடும் இயற்கையர் உணர்வின் மேலையோர்

கைத்தல மிருந்ததங் கணக்கு நோக்கியே

இத்திறங் கேளென இசைத்தல் மேயினார்.                212

 

கண்ணுதல் இறையவன் கருதி மேலைநாள்

எண்ணிரண் டாண்டென இறுதி கூறினான்

அண்ணலே சென்றதால் அதுவும் ஆங்கவன்

பண்ணிய பூசனை அறத்தின் பாலதே.                           213

 

முதிர்தரு தவமுடை முனிவ ராயினும்

பொதுவறு திருவொடு பொலிவ ராயினும்

மதியின ராயினும் வலிய ராயினும்

விதியினை யாவரே வெல்லும் நீர்மையார்.                      214

 

ஆதலின் அமருல கடைவ தாயினன்

பேதுறு நிரயமும் பிழைத்து நீங்கினான்

ஈதவன் நிலைமையென் றிருவ ருஞ்சொல

மேதகு தண்டகன் வெகுட்சி எய்தினான்.                  215

 

அந்தகன் அத்துணை யமைச்ச னாகிய

வெந்திறற் காலனை விளித்துக் காசியில்

அந்தணன் ஒருமன் அவன தாவியைத்

தந்திடு கென்றலுந் தரணி எய்தினான்.                   216

 

மற்றவன் காசியில் வந்து மாசிலா

நற்றவன் இருந்துழி நணுகி நான்மறைக்

கொற்றவன் பூசையுங் குறிப்பும் நோக்கியே

எற்றிவன் வரவதென் றெண்ணி யேங்கினான்.             217

 

விழியிடைத் தெரிவுற மேவி மைந்தனைத்

தொழுதனன் யாரைநீ சொல்லு கென்றலும்

முழுதுல குயிரெலா முடிக்கும் ஆணையான்

கழலிணை யடிமைசெய் கின்ற காலன்யான்.                      218

 

போந்ததிங் கெவனெனப் புகலு வீரெனின்

ஆய்ந்தது மொழிகுவன் ஆதி நாயகன்

ஈந்திடு காலமெண் ணிரண்டு நென்னலே

தேய்ந்தது தென்புலஞ் சேர்தல் வேண்டுநீர்.                       219

 

வேறு

 

தடுக்குந் தன்மைய தன்றிது சதுர்முகத் தவற்கும்

அடுக்குந் தன்மையே புதுவது புகுந்ததோ அன்றே

கொடுக்குந் தன்மைபோற் காத்திடுந் தன்மைபோற் கூற்றன்

படுக்குந் தன்மையுங் கறைமிடற் றிறையருட் பணியே.                   220

 

ஆத லால்உமை விளித்தனன் அன்றியும் அமலன்

பாத மாமலர் அருச்சனை புரிவது பலரும்

ஓத வேமன மகிழ்ந்துமைக் காணிய வுன்னிக்

காத லாகியே நின்றனன் தென்றிசைக் கடவுள்.                    221

 

அடுத லோம்பிய செய்கையன் என்பதால் அவனைக்

கொடியன் என்பரால் அறிவிலார் செய்வினை குறித்து

முடிவில் ஆருயிர் எவற்றிற்கும் முறைபுரிந் திடலால்

நடுவன் என்கின்ற தவன்பெயர் உலகெலாம் நவிலும்.                     222

 

சிந்தை மீதினில் யாவதும் எண்ணலீர் தென்பால்

அந்த கன்புரம் அடைதிரேல் அவனெதிர் அணுகி

வந்து கைதொழு தேத்தியே நயமொழி வழங்கி

இந்தி ரன்பதம் நல்குவன் வருதிரென் றிசைத்தான்.                223

 

மாற்ற மிங்கிது கேட்டலும் மதிமுடி அரனைப்

போற்று மன்பர்கள் இந்திரன் உலகினும் போகார்

கூற்று வன்றன துலகினும் நும்மொடு குறுகார்

ஏற்ற மாகிய சிவபதம் அடைந்தினி திருப்பார்.                            224

 

நாத னார்தம தடியவர்க் கடியவன் நானும்

ஆத லான்நும தந்தகன் புரந்தனக் கணுகேன்

வேதன் மாலமர் பதங்களும் வெ•கலன் விரைவில்

போதி போதியென் றுரைத்தலும் நன்றெனப் போனான்.            225

 

போன காலனும் மறலியை வணங்கியே புகுந்த

பான்மை யாவையும் உரைத்தலும் உளம்பதை பதைப்ப

மேனி மார்பகம் வியர்ப்புற விழிகனல் பொழியக்

கூனல் வார்புரு வக்கடை நிமிர்ந்திடக் கொதித்தான்.                      226

 

அழைத்திர் மேதியை யென்னலும் போந்ததால் அதன்மேல்

புழைக்கை மால்கரி யாமென வெரிநிடைப் புகுந்து

நிழற்று கின்றதோர் கவிகையுந் துவசமும் நிவப்ப

வழுத்தி வீரர்கள் சுற்றிட அந்தகன் வந்தான்.                             227

 

போந்து காசியின் முனிமகன் இருந்துழிப் போகிச்

சேந்த குஞ்சியும் முகில்புரை மேனியுஞ் சினத்திற்

காந்து கண்களும் பிடித்ததோர் பாசமுங் கரத்தில்

ஏந்து தண்டமுஞ் சூலமு மாகியே எதிர்ந்தான்.                    228

 

வேறு

 

வந்து தோன்றலும் மார்க்கண்ட னென்பவன்

அந்த கன்வந் தணுகின னாமெனச்

சிந்தை செய்தவன் செய்கையை நோக்கியே

எந்தை யாரடி யேத்தி இறைஞ்சினான்.                   229

 

அன்ன வேலையில் அந்தகன் மைந்தநீ

என்நி னைந்தனை யாவ தியற்றினை

முன்னை யூழின் முறைமையும் முக்கணான்

சொன்ன வாறுந் துடைத்திட லாகுமோ.                  230

 

சிறிதும் ஊழ்வினைத் திண்மையுந் தேர்கிலாய்

உறுதி யொன்றும் உணர்கிலை போலுமால்

இறுதி யேபிறப் பென்றிவை யாவரும்

பெறுவர் அன்னது பேசுதல் வேண்டுமோ.                 231

 

பீடு சாலும் பெருந்தவர்க் காயினுங்

கூடு றாவிது கூடுமென் றுன்னியே

நாடி யின்னணம் நண்ணுதல் கற்றுணர்

ஆட வர்க்கும் இயற்கைய தாகுமோ.                            232

 

ஈச னார்தம் இணையடி மீமிசை

நேச செஞ்சினை நித்தலும் நீபுரி

பூசை வெம்பவம் போக்குவ தன்றியான்

வீசு பாசம் விலக்கவும் வல்லதோ.                              233

 

சிந்து வின்கட் செறிமணல் எண்ணினும்

உந்து வானத் துடுவினை எண்ணினும்

அந்த மின்றியென் ஆணையின் மாண்டிடும்

இந்தி ரன்றனை எண்ணிட லாகுமோ.                            234

 

இற்ற வானவர் தம்மையும் என்னின்நீ

றுற்ற தானவ ராகியுள் ளோரையும்

முற்ற ஓதில் முடிவில தாதலால்

மற்றை யோரை வகுத்திடல் வேண்டுமோ.                       235

 

கனக்கு முண்டகக் காமரு கண்ணினான்

தனக்கு முண்டு சதுர்முகற் குண்டுமற்

றெனக்கு முண்டு பிறப்பிறப் பென்றிடின்

உனக்கு முண்டென றுரைத்திடல் வேண்டுமோ.           236

 

வாச மாமல ரிட்டு வழிபட

ஈச னார்முன் எனக்கருள் செய்தன

ஆசி லாவிவ் வரசியல் ஏந்திய

பாச சூலம் படைமழுத் தண்டமே.                               237

 

தேவர் காப்பினுஞ் செய்தளித் தீறுசெய்

மூவர் காப்பினும் மொய்ம்பின ராயினோர்

ஏவர் காப்பினுங் காத்திட இன்றுநின்

ஆவி கொண்டன்றி மீண்டும் அகல்வனோ.                       238

 

துன்ப மென்பது கொள்ளலை சூலிதன்

அன்ப ராயினும் அந்தம்வந் தெய்திடில்

தென்பு லந்தனிற் சேர்த்துவன் திண்ணமே

என்பின் நீயினி யேகென் றியம்பலும்.                           239

 

மைந்தன் ஆங்கது கேட்டு மறலிகேள்

எந்தை யாரடி யார்தமக் கில்லையால்

அந்தம் என்பதுண் டாயினும் நின்புரம்

வந்தி டார்வௌ¢ளி மால்வரை ஏகுவார்.                 240

 

அனையர் தன்மை அறைகுவன் ஆங்கவர்

புனித மாதவ ராயினும் பொற்புடை

மனையின் வாழ்க்கையின் மல்கின ராயினும்

வினையின் நீங்கிய வீட்டின்பம் எய்துவார்.                       241

 

ஏதந் தீர்சுடர் தன்னையும் எண்ணும்ஐம்

பூதந் தன்னையும் போதிகன் தன்னையும்

பேதஞ் செய்வர் பிறப்பொழித் தோரவர்

பாதஞ் சேர்தல் பரபதஞ் சேர்வதே.                              242

 

உன்னை எண்ணலர் உம்பரை எண்ணலர்

மன்னை எண்ணலர் மாமலர்ப் பண்ணவன்

தன்னை எண்ணலர் தண்டுள வோனையும்

பின்னை எண்ணலர் பிஞ்ஞகன் அன்பினோர்.                     243

 

நாதன் தன்னையும் நாதன தம்புயப்

பாதஞ் சேர்ந்து பரவினர் தம்மையும்

பேதஞ் செய்வது பேதைமை நீரென

வேதங் கூறும் விழுப்பொருள் பொய்க்குமோ.                    244

 

செம்மை யாகிய சிந்தையர் சீரியோர்

வெம்மை என்பதை வீட்டி விளங்கினோர்

தம்மை யுந்துறந் தேதலை நின்றவர்

இம்மை தன்னினும் இன்பத்தை வேவுவார்.                      245

 

இன்மை யாவதி யாண்டுமில் லாதவர்

நன்மை என்ப தியல்பென நண்ணினோர்

புன்மை யான பொருள்விரும் பார்அவர்

தன்மை யாவரே சாற்றவல் லார்களே.                           246

 

வேறு

 

அன்னார் தன்மை தேர்கிலை வையத் தவர்போல

உன்னா நின்றாய் ஆங்கவர் தம்பா லுறுகின்ற

என்னா விக்குந் தீங்கு நினைத்தாய் இவையெல்லாம்

உன்னா விக்கும் இத்தலை மைக்கும் ஒழிவன்றோ.                       247

 

தீதா கின்ற வாசகம் என்றன் செவிகேட்க

ஓதா நின்றாய் மேல்வரும் ஊற்ற முணர்கில்லாய்

பேதாய் பேதாய் நீயிவண் நிற்கப் பெறுவாயோ

போதாய் போதாய் என்றுரை செய்தான் புகரில்லான்.                      248

 

கேட்டான் மைந்தன் கூறிய மாற்றங் கிளர்செந்தீ

ஊட்டா நின்ற கண்ணினன் யானச் சுறுமாற்றல்

காட்டா நின்றாய் நம்முயிர் கூற்றன் கைக்கொள்ள

மாட்டான் என்றே எண்ணினை கொல்லோ வலியில்லாய்.         249

 

என்றான் வானத் தேறென ஆர்த்தான் இவன்நேரே

நின்றால் வாரான் என்று நினைந்தே நெடுநீலக்

குன்றா மென்னப் பாலகன் முன்னங் கொலைவேலான்

சென்றான் பாசம் வீசுவ தற்குச் சிந்தித்தான்.                             250

 

எறிந்தான் பாசம் ஈர்த்திடல் உற்றான் இதுபோழ்தில்

அறிந்தான் தானும் ஈசனை ஏத்தி அடிநீழற்

பிறிந்தான் அல்லன் மற்றினி இந்தப் பெருமைந்தன்

மறிந்தான் அன்றோ என்றிமை யோரும் மருளுற்றார்.                     251

 

ஈர்க்கும் பாசங் கந்தர முற்றும் இடரில்லா

மார்க்கண் டன்முன் தோன்றினன் நின்பால் வருதுன்பந்

தீர்க்கின் றாம்நீ அஞ்சலை என்றே திரையாழிக்

கார்க்கண் டத்துக் கண்ணுதல் ஐயன் கழறுற்றான்.                 252

 

மதத்தான் மிக்கான் மற்றிவன் மைந்தன் உயிர்வாங்கப்

பதைத்தான் என்னா உன்னிவெ குண்டான் பதிமூன்றுஞ்

சிதைத்தான் வாமச் சேவடி தன்னால் சிறிதுந்தி

உதைத்தான் கூற்றன் விண்முகில் போல்மண் ணுறவீழ்ந்தான்.     253

 

வீழுங் காலத் தம்புய னாதி விண்ணோர்கள்

வாழுந் தன்மைத் தெவ்வுல கென்னா மறுகுற்றார்

சூழும் வேலை ஆர்த்தில தண்டத் தொகையெல்லாங்

கீழும் மேலும் நெக்கன பாருங் கிழிந்தன்றே.                             254

 

பாங்காய் நின்ற தானையும் ஊரும் பகடுந்தான்

ஏங்கா நின்றே பார்மிசை வீழா இறவுற்ற

தீங்காய் நின்ற செய்னி யாளர் சிதைவாகிப்

போங்கா லத்திற் சேர்ந்தவர் தாமும் போகாரோ.                  255

 

அந்தக் காலத் தெம்முயிர் காப்பான் அரனுண்டால்

வந்தக் கூற்றன் என்செய்வ னென்னா வடதொன்னூல்

சந்தப் பாவிற் போற்றுதல் செய்தே தனிநின்ற

மைந்தற் காணூஉ எம்பெர மானும் மகிழ்வுற்றான்.                       256

 

வேறு

 

மைந்த நீநமை வழுத்தி மாசிலா

முந்து பூசனை முயன்ற தன்மையால்

அந்த மில்லதோர் ஆயுள் நிற்கியாந்

தந்து நல்கினாம் என்று சாற்றினான்.                            257

 

சாற்றும் எல்லையில் தனது தாளிணை

போற்று கின்றவன் பூசை செய்திடும்

ஏற்ற தாணுவுக் கிடைய தாகவே

கூற்றின் கூற்றுவன் குறுகுற் றானரோ.                  258

 

மறைய வன்கணும் மன்னு தென்புலத்

திறைய வன்கணும் இகல்பற் றின்றரோ

அறிவர் தேர்குறின் ஐயன் செய்தன

முறைய தாகுமால் முதன்மைப் பாலதே.                259

 

நின்ற மைந்தனும் நித்தன் மேனியை

ஒன்றும் அன்பினால் உன்னி யேமணி

கன்றி கையெனுங் கடவுள் ஆலயஞ்

சென்று நாதன்றாள் சென்னி சேர்த்தினான்.                       260

 

புந்தி நைந்திடப் புலம்பி நாட்டநீர்

சிந்தும் வேலையில் திளைத்துச் சாம்பிய

தந்தை அன்னைதாள் தழுவித் தாழ்ந்திடா

முந்து மாகுலம் முழுதும் மாற்றினான்.                          261

 

அங்கண் சில்பகல் அமர்ந்து நீங்கியே

செங்கண் ஏறுடைச் செல்வன் மல்கியே

தங்கு கின்றநற் றானம் யாவையும்

பொங்கு காதலிற் போற்றல் மேயினான்.                 262

 

அத்தன் ஆலயம் அனைத்தும் வைகலும்

பத்தி யோடுமுன் பரவி யேமிகுஞ்

சுத்த னாகியே தொலைவில் ஆருயிர்

முத்தி யெய்தினான் முழுது ணர்ந்துளான்.                263

 

விண்ணின் பாலுளன் விரும்பிப் போற்றுவோர்

கண்ணின் பாலுளன் கருத்தின் பாலுளன்

மண்ணின் பாலுளன் மற்ற வன்செயல்

எண்ணின் பாலதோ இசையின் பாலதோ.                264

 

முண்ட கத்திடை முளைத்த வன்துயில்

கொண்ட வெல்லையைக் குணிக்கி லாவதென்

அண்டம் நல்கியோன் துஞ்ச ஆங்கவன்

கண்ட கற்பமோ கணக்கி லாதவே.                              265

 

அன்ன வன்றனை அலக்ண் செய்திடுந்

தென்ன வன்உயிர் சிதைந்து போதலால்

பன்ன கத்திறை பரித்த பார்மிசை

மன்னு பல்லுயிர் வளர்ந்து மல்கிற்றே.                          266

 

முடிவின் றாமுயிர் முற்றும் பற்பகல்

மடிவின் றாகியே மலியும் பான்மையால்

படியின் மங்கையும் பரம்பொ றாதுமால்

அடியின் வீழ்ந்துதன் அயர்வு கூறினாள்.                 267

 

கொண்டல் வண்ணனுங் குலச பாணியும்

புண்ட ரீகமேற் பொலிந்த போதனும்

அண்டர் யாவரும் அணுகி ஆலமார்

கண்டன் மேவுறுங் கயிலை மேவினார்.                  268

 

காவி யம்மலர் கடுத்த கந்தரத்

தேவு பொற்பதஞ் சென்னி சேர்த்தியே

தாவில் பங்கயச் சதுர்மு கத்தனும்

பூவை வண்ணனும் போற்றல் மேயினார்.                269

 

நீல கண்டனாம் நிமலன் முன்னரே

சாலும் அன்பொடுந் தாழ்ந்து போற்றலும்

மாலை நோக்கிநீர் வந்த தென்னென

ஏலு மாற்றினால் இதனைக் கூறுவான்.                  270

 

வேறு

 

பங்கய மிசைவரு பகவன் ஆதியா

இங்குள தலைவர்கள் எவரும் இத்துணைத்

தங்கள்தம் அரசியல் தவாது போற்றினர்

அங்கவர் தமக்குநீ அளித்த வண்ணமே.                  271

 

ஐயநீ எனக்குமுன் அளித்த காப்பினைத்

துய்யநின் திருவருள் துணைய தாகவே

வைகலும் புரிகுவன் வழாது மற்றதற்

கெய்திய தோர்குறை இசைப்பன் கேட்டிநீ.                272

 

நின்பெருந் திருவருள் நினைகி லாமையால்

தென்புலக் கோமகன் சிதைந்து போயினான்

மன்பதைக் குலம்பிற வளர்ந்து மிக்கன

துன்பமுற் றனள்அவை சுமக்கும் பூமகள்.                273

 

தன்புடை எவற்றையுந் தாங்கு கின்றவள்

துன்புற உயிரெலாந் தோன்றித் தோன்றியே

பின்பிற வாமலே பெருகி வைகுமேல்

என்படும் என்படும் எனது காவலே.                              274

 

இறுத்திடும் அரசினுக் கெவரு மில்லைநீ

செறுத்திடல் அந்தகன் செய்த தீமையைப்

பொறுத்தருள் அவன்றனைப் புரிதி ஈங்கிது

மறுத்திடல் என்றடி வணங்கி வேண்டவே.                275

 

அந்தக எழுகென அமல நாயகன்

முந்தருள் புரிதலும் முடிந்த கூற்றுவன்

வந்தனன் தொழுதனன் வணங்கித் தாள்பட

உய்ந்தனன் அடியனென் றுணர்ந்து போற்றினான்.          276

 

போற்றிடு தருமனைப் புராரி நோக்கியே

சாற்றிடு கின்றனன் தயங்கு கண்டிகை

நீற்றொடு புனைந்தெமை நினையும் நீரர்பால்

கூற்றுவன் யானெனக் குறுகு வாயலை.                  277

 

நண்ணருங் கதிபெறு நமது தொண்டரை

மண்ணுல கத்தவர் மனித ரேயென

எண்ணலை அவர்தமை யாமென் றெண்ணுதி

கண்ணுறின் அன்னவர் கழலின் வீழ்தியால்.                      278

 

கண்ணிய மனமொழி காயம் ஈறதா

எண்ணிய கருவிகள் இடைய தாகவே

புண்ணிய மொடுபவம் புரியும் ஏனையர்

விண்ணொடு நிரயமேல் மேவச் செய்திநீ.                279

 

என்றருள் புரிந்துநின் படையொ டேகென

மன்றமர் அடிமிசை வணங்கி முன்னரே

பொன்றிய பகட்டொடும் பொருநர் தம்மொடும்

தென்றிசை புகுந்துதன் செயலின் மேவினான்.             280

 

சித்தசற் புரிதரு செங்கண் மான்முதல்

மொய்த்திடு கடவுளர் முனிவர் மும்முறை

நித்தனை வணங்கினர் கயிலை நீங்கினர்

தத்தம துறையுளில் சார்தல் மேயினார்.                  281

 

கொன்னவில் அடுபடைக் கூற்றன் பண்டுபோல்

இன்னமும் விளைகுவ தென்கொ லோவெனா

மன்னருள் பெற்றமார்க் கண்டன் மாக்கதை

பன்னினர் முன்னமும் படர்தற் கஞ்சுமால்.                       282

 

ஆதலிற் குச்சகன் அருந்த வத்திலோர்

மாதுயிர் அளித்தனன் மால்க ளிற்றினைக்

காதுகை நீக்கியொன் கடவு ளாக்கியே

மேதகு விண்ணிடை மேவச் செய்தனன்.                 283

 

உதவிய மிருககண் டூயன் மால்அயன்

முதலவர் புகழ்தரு முதன்மை பெற்றனன்

விதிமுறை அவனருள் மிருகண் டொப்பிலோர்

புதல்வனைப் பெற்றனன் புரிந்த நோன்மையால்.          284

 

அப்பெருந் திருமகன் ஆற்றும் நோன்பினால்

தப்பரும் விதியினைத் தணந்து கூற்றுவன்

துப்பினை அகற்றியே தொலைவு கண்டுபின்

எப்பொழு தத்தினும் இறப்பின் றாயினான்.                       285

 

ஆகத் திருவிருத்தம் - 846

    - - -

 


·  முந்தையது : உற்பத்திக் காண்டம்...

·  அடுத்தது : அசுர காண்டம் - பகுதி 2...

 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்