நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க! சொரி, படை, மேகம், அம்மை போன்ற தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் விட்டோட. காஞ்சியில் விழியொளி பெற்று ஆரூர் நோக்கி நடக்கும் சுந்தரரை மற்றொரு சோதனை சூழ்கிறது. அவர் உடலெங்கும் ஒருவகை சருமநோய் ஏற்பட்டுத் தாளாத வேதனையில் ஆழ்கிறார் சுந்தரர். ஆயினும் விடாமல் ஆருரானைத் தரிசிக்கும் ஆவலில் பைய நடப்பவர் திருத்துருத்தியை வந்தடைகிறார். இங்கு நடந்த அதிசயத்தை சேக்கிழார் பெருமான்தம் திருவாக்கால் காண்போம். திருப்பதிகங் கொடுபரவிப் பணிந்துதிரு அருளாற்போய் விருப்பினொடுந் திருத்துருத்தி தனைமேவி விமலர்கழல் அருத்தியினாற் புக்கிறைஞ்சி 'அடியேன்மேல் உற்றபிணி வருத்தம் எனை ஒழித்தருள வேண்டும்' என வணங்குவார்; பரவியே பணிந்தவர்க்குப் பரமர்திரு அருள்புரிவார் விரவியஇப் பிணிஅடையத் தவிர்ப்பதற்கு வேறாக வரமலர்வண் டறைதீர்த்த வடகுளத்துக் குளி என்னக் கரவில்திருத் தொண்டர்தாங் கைதொழுது புறப்பட்டார்; மிக்கபுனல் தீர்த்தத்தின் முன்அணைந்து வேதமெலாம் தொக்கவடி வாயிருந்த துருத்தியார் தமைத்தொழுது புக்கதனில் மூழ்குதலும் புதியபிணி அதுநீங்கி அக்கணமே மணியொளிசேர் திருமேனி ஆயினார். கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து மண்டுபெருங் காதலினாற் கோயிலினை வந்தடைந்து தொண்டர்எதிர் 'மின்னுமா மேகம்' எனுஞ் சொற்பதிகம் எண்டிசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்திசைத்தார். திருத்துருத்தியில் உறை அம்மையப்பன் அருள்வாக்கால் திருக்குளத்தில் குளித்தெழுந்தவுடன் அவரைச் சூழ்ந்திருந்த சருமநோய் அகன்று மின்னும் பொன்மேனி மீண்டும் பெற்றார் சுந்தரர். கண்டவர் அதிசயித்து நிற்க அருட்பதிகம் ஒன்று எழுந்ததங்கே:
முழுப்பதிகம்- மின்னுமா மேகங்கள்
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்