logo

|

Home >

prayers-for-specific-ailments >

prayer-for-cure-to-poisoning-snake-bite

Prayer for cure to poisoning/ snake bite

நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! விடம் தீர்க்கும் பதிகம் திருப்பழனத்திலிருந்து திங்களூர் புகுந்த திருநாவுக்கரசர் திகைத்து நின்றார். தண்ணீர்ப் பந்தல், சத்திரம், சாலை, குளமென்று அவ்வூரில் எம்மருங்கும் அவர் பெயர் வரையப் பட்டிருந்தது. யார் செய்துவரும் திருத்தொண்டிது! அருகிருந்த பந்தலொன்றில் அமுதமெனத் தண்ணீர் அளித்து விடாய் தீர்த்த அன்பரிடம் வினவினார். 'தம்மை ஆண்டிருக்கும் பெருந்தகை நாவரசின் மீது கொண்ட பேரன்பால் இவையனைத்தும் எங்களூர் வேதியர் தலைவர் அப்பூதி அடிகளார் அமைத்திருப்பது. தம் மக்களுக்கே மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றுதான் பெயர் வைத்துள்ளார். அருகில்தான் அவர் மனை' என்றவர் சுட்ட ஆவல்மிக அவரில்லம் தேடிச் சென்றார் நாவுக்கரசர். ஈசனடியார் ஒருவர் தம்மில்லம் வரக்கண்டு ஓடிவந்தவர் கழல் பணிந்தார் அப்பூதியார். 'அன்பரே, அடியேன் திருப்பழனத்திலிருந்து வருகிறேன். அடியார்க்குத் தொண்டு செய்ய வேண்டி வழியில் தாங்கள் அமைத்திருக்கும் தண்ணீர்ப் பந்தரொன்றில் தங்களைப் பற்றி அறிந்தோம். அங்கே தங்களின் பெயரைப் பொறிக்காமல் வேறொருபேர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல், கூறும்' என்ற நாவரசரின் வினாவில் தொக்கி நின்ற குறும்பு விளங்காமல் வெதும்பி எழுந்தார் அப்பூதியார். 'என்ன வேறொரு பேரா! அமணருடன் ஒன்றிய மன்னன் செய்த கொடுமையெல்லாம் திருத் தொண்டின் உறைப்பால் வென்றவர்தம் திருப்பேரோ வேறொரு பேர்? யார் நீர்? எங்குறைவீர்? ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரானை அறியாமல் ஏன் அடியார்போல் திருக்கோலம் பூண்டீர்? என்றவர் கழல் பணிந்து உய்வதென்று யாம் தொழுதிருக்கும் திருநாவுக்கரசர் எனும் திருநாமத்தை அறியாமல் யாது சொன்னீர்!' என வெகுண்டு தொடுத்தார் வினாக்களை. புலம்பிக் கொண்டே போன அன்புத் தொண்டரின் நிலைபொறுக்காது 'பரசமயம் சேர்ந்துழன்றவனை அருளுபெருஞ்சூலையினால் ஆட்கொண்டதால் உய்ந்த, தெருளும் உணர்விலாத சிறுமையேன் யான்' என்று தம்மை வெளிப்படுத்தினார் வாகீசர். அம்மட்டில், 'உய்ந்தேன் யான்' என்று கதறிக் கண்ணருவி பொழிந்திழிய உரைகுழறிப் புளகம் பொலிய மண்ணில் வீழ்ந்து சென்னியில் அவர் பாதம்பூண்டார் அப்பூதியார். உற்றாரும் சுற்றாரும் ஓடிவந்து பணிய, அவர் மனையில் எழுந்தருளினார் திருநாவுக்கரசர். அமுது செய்தருள வேண்டி வாழையிலை அரிந்து வருமாறு தம் மகன் மூத்த திருநாவுக்கரசை ஏவினார் அப்பூதியார். அதற்காகவே காத்திருந்தது போல் தோட்டத்துக்கு ஓடிச் சென்றான் அச்சிறுவன். பெரிய இலையாகத் தேடிக் குருத்தை ஈரும் போதில் அவன் கையைத் தீண்டியது அங்கிருந்த அரவம் ஒன்று. விடம் தலைக்கேற மயக்கம் சூழினும் விடாமல் ஓடிவந்து அன்னையிடம் இலையைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வாயில் நுரைபெருகச் சமையல் அறையில் வீழ்ந்து மாண்டான் அக்குழந்தை. அப்பூதியார் செய்தி கேட்டு உட்புறம் ஓடிவந்தார். அவன் மேனியில் குறிகண்டு விடத்தால் வீழ்ந்தான் என்று புரிந்து அலமந்து நின்றனர் கணவனும் மனைவியும். யாதாயினும் நம்மில்லம் எழுந்தருளியுள்ள பெருந்தவர்க்கு அமுது செய்வித்தல் நம் கடன் என்ற முடிவில் அருமை மகனைப் பாயொன்றில் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு திருநாவுக்கரசரை 'அமுது செய்து எம் குடி முழுதுய்யக் கொள்வீர்' என்றழைத்து நின்றார் அப்பூதியார். நின்றவர் முகத்தை உற்று நோக்கினார் நாவுக்கரசர். யாவும் சொல்லாமலே விளங்கியது அவருக்கு. அமுது கொள்ள ஆசனத்தில் அமர்ந்தவர் எதிரில் நின்ற இளைய திருநாவுக்கரசை அழைத்து நீறு பூசினார். 'எங்கே இவனுக்கு மூத்தவன், அவனுக்கும் நீறிட வேண்டும்' என்றழைக்கக் கலங்கி நின்ற அப்பூதியாருக்கு 'இப்போது இங்கவன் உதவான்' என்பதற்கு மேல் நா எழும்பவில்லை. 'என்ன சொல்கிறீர்? விளங்குமாறு கூறும்! மெய் விரித்துரையும்' என்று மேலும் கேட்க வெடித்தழுது மகன் அரவம் தீண்டி மாண்டதைச் சொல்லி, பின்புறம் அவனைப் பாயில் சுருட்டி வைத்திருப்பதைக் காட்டினார் அப்பூதியார். 'நன்று நீர் புரிந்த வண்ணம்! யாவர் இத்தன்மை செய்தார்!' என்று தாளாக் கருணையால் கசிந்து நின்றார் திருநாவுக்கரசர். விடத்தை மிடங்கொண்ட அண்ணலின் மேல் அருட்பதிகம் எழுந்ததங்கே. சேக்கிழார் பெருமான் பாடக் கேட்போம்: தீவிடம் நீங்க உய்ந்த திருமறையவர்தம் சேயும் மேவிய உறக்கம் நீங்கி விரைந்தெழுவானைப் போன்று சேவுகைத் தவர் ஆட்கொண்ட திருநாவுக்கரசர் செய்ய பூவடி வணங்கக் கண்டு புனித நீறளித்தார் அன்றே. உறக்கம் கலைந்து எழுவது போல் உயிர் பெற்றேழுந்தான் அச்சிறுவன். அரன் நாமம் ஓங்கிச் சூழ்ந்தது.  

முழுப்பதிகம்- ஒன்று கொலாம் 

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

Related Content

Vendukol padhikangal - Win destiny through thirumurai

For getting blessed with children

For Prosperity and Good life

For smooth delivery of child

For getting out of Coma & good health of children