logo

|

Home >

prayers-for-specific-ailments >

for-getting-out-of-coma-good-health-of-children

For getting out of Coma & good health of children

நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! குழந்தைகள் நோயின்றி நலமுடன் வாழ. 'திருப்பாச்சிலாசிரமத்துறை எந்தையே! வைத்தியநாதனான நின்னை மறந்து நாயேன் எங்கெங்கோ என் மகவின் பிணிதீர வேண்டி மருத்துவரைத் தேடி அலைந்து கொண்டிருந்தேனே! இதோ என் மகளை உன் முன்னே கிடத்தியுள்ளேன். அவள் நலம் பெற்றெழும்வரை நாங்கள் இனித் திரும்பப் போவதில்லை! இனி நீயே கதி எம்பெருமானே!' குழந்தையை எதிரில் கிடத்திவிட்டுக் கதறி அழுது கொண்டிருந்தார் கொல்லி மழவனார். 'முயலகன்' என்னும் ஒருவகை வலிப்புநோய் (பாலாரிஷ்டம் என்றும் சொல்வர்) தாக்கி இனி ஏதும் செய்வதற்கில்லை என்று மருத்துவர் யாவரும் கைவிரித்துவிட திருவாசிப் பெருமானிடம் சரண்புகுந்து அழுதிருந்தார் அம்மன்னர். அதே நேரம் காவிரியின் வடகரைத் தலங்களைத் தரிசிக்கும் ஆவலில் இறைத்தூதாய் அப்பதி நோக்கி வந்து கொண்டிருந்தார் ஞானசம்பந்தப்பெருமான். பதிஞானப் பாலுண்ட ஆளுடைப்பிள்ளை திருஞானசம்பந்தர் வருகிறார் என்னும் செய்தி தீப்போல் பரவ ஊரே உவகையில் திரண்டெழுந்தது. தம் துயரத்தை மறைத்த மன்னரும் 'மாநகரம் அலங்கரிமின், மகரதோரணம் நாட்டும், பூரணகும்பம் சோதி மணிவிளக்கினொடு தூபம் ஏந்தும்!' என்று வரிசையாக ஏவித் தாமும் பிள்ளையாரை எதிர் கொண்டு காத்து நின்றார். ஞானசம்பந்தப்பெருமான் வந்திறங்கப் பணிந்து வரவேற்று ஆலயத்துள் அழைத்துச் சென்றார். வலம்வந்து திருமுன்னர் வணங்கச் சாருங்காலை, உணர்வின்றிக் கிடக்கும் குழந்தையைக் கண்ட சம்பந்தர் மன்னரை நோக்கி 'என் இது!' என்று வினவ மழவனார் எதிர்இறைஞ்சி 'அடியேன் பெற்ற பொன் இவளை முயலகன் என்னும் மீளாப்பிணி சூழ புனிதர்கோயில் முன்அணையக் கொணர்வித்தேன்' என்று தம் மகளின் நிலை விரித்தார். பொறுக்குமா அருளாளருக்கு! தம்பெருந்துயர் மறைத்து என்னை வரவேற்ற இம்மன்னரின் மாண்பென்னே! உன்னைச் சரண்புகுந்தபின் அறியாச் சிறுமியிவள் இனியும் பிணியில் உழலத் தகுமோ! ஆலாலவிடத் தகிப்பில் தம்மில் ஒடுங்கியோர் நிலைகண்டு தாளாது அதைத் தாமருந்திய தியாகேசர் மணிவளர்கண்டர் எம் எந்தை, இனியிவள் வாடப் பொறுப்பரோ! பொங்கிய கருணையில் அங்கே கசிவான தண்டமிழ்ப் பதிகம் எழுந்தது. சேக்கிழார் பெருமான் பாடக் கேட்போம்: அணிகிளர்தாரவன் சொன்ன மாற்றம் அருளொடுங் கேட்டந் நிலையின் நின்றே பணிவளர் செஞ்சடைப் பாச்சின்மேய பரம்பொருளாயினாரைப் பணிந்து 'மணிவளர் கண்டரோ மங்கைவாட மயல்செய்வதோ இவர் மாண்ப'தென்று தணிவில் பிணிதவிர்க்கும் பதிகத் தண்டமிழ் பாடினார் சண்பைநாதர். பன்னு தமிழ்மறையாம் பதிகம் பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி மன்னுங் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலைமென்சொல் கன்னியுறு பிணி விட்டு நீங்கக் கதுமெனப் பார்மிசை நின்றெழுந்து பொன்னின் கொடி என ஒல்தி வந்து பொருவலித் தாதை புடையணைந்தாள். வன்பிணி நீங்கு மகளைக் கண்ட மழவன் பெருகு மகிழ்ச்சி பொங்கத் தன்தனிப்பாவையுந் தானுங்கூடச் சண்பையர் காவலர் தாளில் வீழ நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீரணி வேணி நிமலர்பாதம் ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார். தண்டமிழ்ப் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்திய மாத்திரத்தில் உணர்வு பெற்றெழுந்த அச்சிறுமி தன் அருமைத் தந்தையிடம் ஓடிச்சென்று கட்டிக்கொள்ள, அவர்கள் நன்றிப்பெருக்கில் கரைந்தழுது ஞானசம்பந்தப் பெருமானவர் அடிபணிய, நிலவுலாவிய நீர்மலி வேணியன் பாதம் ஒன்றிய சிந்தையுடன் பணிகிறார் அவர். அரன் நாமம் ஆர்த்தெழுந்தது. இனி அதிசயம் நிகழ்த்திய அந்த அருட்பதிகத்தைப் பாடுவோம்:   

முழுப்பதிகம்- துணிவளர் திங்கள்  

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்  
தண்டமிழ்ப் பதிகமிதை ஓதுவோர்தமைவிட்டு முன்செய்த தீவினையால் வந்த துன்பமெல்லாம் நீங்கும் என்பது ஆளுடைப்பிள்ளையார் அருள்வாக்கு.

Related Content

Vendukol padhikangal - Win destiny through thirumurai

For getting blessed with children

For Prosperity and Good life

For smooth delivery of child

Prayer for cure to poisoning/ snake bite