பெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்
தொகுப்பு பற்றிய குறிப்புகள்
தெய்வச் சேக்கிழார் மூவர் தேவாரங்களை அடியொற்றி மூவர் தம் வரலாறுகளைப் போற்றுவது வெளிப்படையாகக் காணத்தக்கது.
தேவாரங்களைக் குறிப்பதோடு அல்லாமல் அவற்றின் மையக் கருத்துக்களைச், சொற்றொடர்களை பலவாகச் சிரமேற்கொண்டு பெரிய புராணத்தில் போற்றியுள்ளார்.
இத்தொகுப்பு கீழ்க்காணும் முறையைப் பின்பற்றித் தொகுக்கப்பட்டது.
பெரிய புராணத்தில் தேவாரத்தில் காணும் சொற்றொடர்களே காணப்படுவது. (உ-ம். தோடுடைய செவியன்)
புராணத்தில் தேவாரத்தில் கூறப்பட்ட மையக் கருத்து வெளிப்படுத்தப்படுவது. (உ-ம். நமிநந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை .. பாடி)
இத்தொகுப்பின் நோக்கம் தேவாரப் பாடல்களோடு அவற்றைக் குறிக்கும் பெரிய புராணப் பாடல்களையும் அடியவர்கள் அதே இசையில் பாடித் திருவருள் பெற வேண்டும் என்பதே.
இத்தொகுப்பு பலமுறை பெரிய புராணத்தில் மீண்டும் மீண்டும் சரி பார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. எனினும் பிழைகள் இன்னும் இருக்கக்கூடும். செம்மலர் நோன்தாளைத் தொழும் அடியவர்கள் அன்பு கூர்ந்து பொறுத்தல் கோருகின்றோம்.
இத்தொகுப்பு பாட்டே விரும்பும் அருச்சனையாகக் கொள்ளும் இசை விரும்பும் கூத்தனார் திருவடிகளுக்கு அஞ்சலி.
திருச்சிற்றம்பலம்
1. திருவெண்ணெய்நல்லூர் பண் ஆ- இந்தளம்
கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாய்அடி யவர்பால்
மெய்த்தாயினும் ஆஇனியானைஅவ் வியன் நாவலர் பெருமான்
"பித்தாபிறை சூடி எனப் பெரிதாந்திருப் பதிகம்
ஆஇத்தாரணி முதலாம்உல கெல்லாம்உ(ய்)ய எடுத்தார்.
பித்தாபிறை சூடிபெரு மானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
2. திருத்துறையூர் பண் - தக்கராகம்
சிவனுறையுந் திருத்துறையூர் சென்றணைந்து "தீவினையால்
அவனெறியிற் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத்
தவநெறிதந் தருள்" என்று தம்பிரான் முன்னின்று
பவநெறிக்கு விலக்காகுந் திருப்பதிகம் பாடினார்.
மலையார் அருவித் திரள்மா மணிஉந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கலையார் அல்குற்கன் னியர் ஆடும் துறையூர்த்
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
3. திருவதிகைவீரட்டானம் பண் - கொல்லிக்கௌவாணம்
செம்மாந்திங் கியானறியா தென்செய்தேன் எனத்தெளிந்து
தம்மானை அறியாத சாதியார் உளரேஎன்(று)
அம்மானை திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார்.
தம்மானை அறியாத சாதியார் உளரெ
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடும்என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை ஆஇறைபோது மிகழ்வன்போ லியானே.
4. திருக்கழுமலம் பண் - தக்கேசி
மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித்
தெண் திரை வேலையில் மிதந்த திருத் தேணி புரத் தாரைக்
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று ஆஇருந்த படி என்று
பண்டரும் ஆஇன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார்
சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத்
தன்அருள் தந்தஎம் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் ஆஇரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண்டேனே.
5. திருவாரூர் பண் - காந்தாரம்
வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன் வன்றொண்டர் அஞசலி கூப்பிவந்து
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி
"எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்னும்
சந்த இசைப்பதிகங்கள் பாடித் தம்பெருமான் திருவாயில் சார்ந்தார்.
கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லாம்
அரையனி ருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோகேளீர்.
6. திருத்தொண்டத்தொகை பண் - கொல்லிக்கௌவாணம்
தொல்லைமால் வரைபயந்த தூயாள் திருப்பாகன்
அல்லல்தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால்
"தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்"என்று
"எல்லையில்வண் புகழாரை எடுத்திசைப்பா மொழி"என்றார்.
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.
7. திருக்கோளிலி பண் - நட்டராகம்
ஆளிடவேண் டிக்கொள்வார் அருகுதிருப் பதியான
கோளிலியில் தம்பெருமான் கோயிலினை வந்தெய்தி
"வாளன கண்மடவாள் வருந்தாமே" எனும்பதிகம்
மூளவருங் காதலுடன் முன்தொழுது பாடுதலும்.
நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.
8. திருநாட்டியத்தான்குடி பண் - தக்கராகம்
வென்றி வெள்ளே றுயர்த்தருளும் விமலர் திருக்கோ புரம்இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும்அன்பால் உச்சி குவித்த கரத்தோடும்
சென்று புக்குப் பணிந்துதிருப் பதிகம் "பூணாண்" என்றெடுத்துக்
கொன்றை முடியார் அருளுரிமை சிறப்பித் தார்கோட் புலியாரை.
பூணான் ஆவதொர் அரவங்கண் டஞ்சேன்
புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன்
பிறவே னாகிலும் மறவேன்
காணீ ராகிலுங் காண்பனென் மனத்தால்
கருதீ ராகிலுங் கருதி
நானே லும்மடி பாடுதல் ஒழியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ
9. திருவலிவலம் பண் - தக்கேசி
அங்கு நின்றும் எழுந்தருளி அளவில் அன்பின் உள்மகிழ்ச்
செங்கண் நுதலார் மேவுதிரு வலிவ லத்தைச் சேர்ந்திறைஞ்சி
மங்கை பாகர் தமைப்பதிகம் "வலிவ லத்துக் கண்டேன்"என்(று)
எங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார்.
ஊனங் கத்துபயிர் பாய்உல கெல்லாம்
ஓங்கா ரத்துரு ஆகிநின் றானை
வானங்கத் தவர்க் கும்அளப் பரிய
வள்ள லைஅடி யார்கள்தம் உள்ளத்
தேனங் கத்தமு தாகிஉள் ளூறும்
தேச னைத்திளைத் தற்கினி யானை
மானங் கைத்தலத் தேந்தவல் லானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
10. திருப்புகலூர் பண் - கொல்லி
தொண்டர் உணரமகிழிந்தெழுந்து துணைக்கைக் கமலமுகைதலைமேல்
கொண்டு கோயிலுட்புக்குக் குறிப்பில் அடங்காப் பேரன்பு
மண்டு காதலுறவணங்கி வாய்த்த மதுர மொழிமாலை
பண்டங் கிசையில் "தம்மையே புகழ்ந்" தென் றெடுத்துப் பாடினார்.
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்
சார்வி னுந் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதரும் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே
11. திருப்பனையூர் பண் - சீகாமரம்
செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக்கூத் தொடுங்காட்சி
எய்த அருள எதிர்சென்றங் கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை "அரங்காட வல்லார் அவரே அழகியர்" என்(று)
உய்ய உலகு பெரும்பதிகம் பாடி அருள்பெற் றுடன்போந்தார்.
மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில்
பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த்
தோடுபெய்தொரு காதினிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்(று)
ஆடு மாறுவல்லார் அவரே அழகியரே.
12. திருநன்னிலத்துப்பெருங்கோயில் பண் - பஞ்சமம்
பலநாள் அமர்வார் பரமர்திரு அருளால் அங்கு நின்றும்போய்ச்
சிலைமா மேரு வீரனார் திருநன் னிலத்துச் சென்றெய்தி
வலமா வந்து கோயிலினுள் வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார்கின்ற "தண்ணியல்வெம் மையினான்" என்னுந் தமிழ்மாலை.
தண்ணியல் வெம்மையினான் தலையிற்கடை தோறும்பலி
பண்ணியல் மென்மொழியார் இடக் கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறையால்அடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
13. திருவீழிமிழலை பண் - சீகாமரம்
படங்கொள் அரவில் துயில்வோனும் பதுமத் தோனும் பரவரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளக முடன்பரவி
"அடங்கல் வீழி கொண்டிருந்தீர் அடியே னுக்கும் அருளும்" எனத்
தடங்கொள் செஞ்சொற் றமிழ்மாலை சாத்தி அங்குச் சாருநாள்.
நம்பினார்க்கருள் செய்யு மந்தணர் நான்ம றைக்கிட மாயவேள்வியுள்
செம்பொ னேர்மட வாரணி பெற்ற திருமிழலை
உம்ப ரார்தொழு தேத்த மாமலை யாளோடும் முடனே உறைவிடம்
அம்பொன் வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே.
14. திருவாஞ்சியம் பண் - பியந்தைக்காந்தாரம்
வாசி யறிந்து காசளிக்க வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருவருள்முன் பெற்றுத் திருவாஞ் சியத்தடிகள்
பாச மறுத்தாட் கொள்ளுந்தாள் பணிந்து "பொருவ னார்" என்னும்
மாசில் பதிகம் பாடிஅமர்ந் தரிசிற் கரைப்புத் தூரணைந்தார்.
பொருவ னார்புரி நூலர் புணர்முலை உமையவளோடு
மருவ னார்மரு வார்பால் வருவதும் இல்லைநம் அடிகள்
திருவ னார்பணிந் தேத்தும் திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவ னார் அடியாரை ஊழ்வினை நலியஒட் டாரே.
15. திருவாவடுதுறை பண் - தக்கேசி
விளங்குந் திருவா வடுதுறையில் மேயார்கோயில் புடைவலங்கொண்(டு)
உளங்கொண் டுருகும் அன்பினுடன் உள்புக் கிறைஞ்சி ஏத்துவார்
வளங்கொள் பதிகம் "மறையவன்"என் றெடுத்து வளவன் செங்கணான்
தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத் தமிழ்ச்சொன் மாலை சாத்தினார்.
மறைய வனொரு மாணிவந் தடைய வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மான் என்றெப் போதும் ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
16. திருநாகேச்சரம் பண் - பஞ்சமம்
பெருகும் பதிகம் "பிறையணிவாள் நுதலாள்" பாடிப் பெயர்ந்துநிறை
திருவின் மலியுஞ் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல்வணங்கி
உருகுஞ் சிந்தை யுடன்போந்தே உமையோர் பாகர் தாம்மகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து கலைய நல்லூர் மருங்கணைந்தார்.
பிறையணி வாள்நுதளாள் உமையாளவள் பேழ்கணிக்க
நிறைபணி நெஞ்சனுங்க நீலமால்விடம் உண்டதென்னே
குறைபணி குல்லைமுல்லை அளைந்துகுளிர் மாதவிமேல்
சிறைபணி வண்டுகள்சேர் திருநாகேச் சரத்தானே.
17. திருக்கலயநல்லூர் பண் - தக்கராகம்
செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறஇறைஞ்சி முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை மருவு "குரும்பைமுலை உமையாள்" என்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவுமிகச் சிறப்பித்(து) இசையின் விளம்பினார்.
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே.
18. திருச்சோற்றுத்துறை பண் - கௌசிகம்
"அழல்நீர் ஒழுகி அனைய" எனும் அஞ்சொற் பதிகம் எடுத்தருளிக்
கழல்நீ டியஅன் பினிற்போற்றுங் காதல் கூரப் பரவியபின்
கெழுநீர் மையினில் அருள்பெற்றுப் போந்து பரவை யார்கேள்வர்
முழுநீ றணிவார் அமர்ந்தபதி பலவும் பணிந்து முன்னுவார்
அழல்நீர் ஒழுகி அனைய சடையும்
உழையீர் உரியும் உடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையும்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.
19. திருமழபாடி பண் - நட்டராகம்
அணைந்து திருக்கோ புரம்இறைஞ்சி அன்பர் சூழ உடன்புகுந்து
பணங்கொள் அரவம் அணிந்தார்முன் பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்
குணங்கொள் அருளின் திறம்போற்றிக் கொண்டபுளகத் துடனுருகிப்
புணர்ந்த இசையால் திருப்பதிகம் "பொன்னார் மேனி" என்றெடுத்து.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னெ உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
20. திருவானைக்கா பண் - காந்தாரம்
மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம்
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார்
உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி
மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந்
துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையும் நன்மையு மாய
அறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இஆறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே.
21. திருப்பாச்சிலாச்சிராமம் பண் - தக்கராகம்
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப் புலம் கெழும் பிறப்பால்
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார்
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர்
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்
நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில் ஆ
இவரலா தில்லையோ பிரானார்.
இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருள
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகி
எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள்
ஏசின அல்ல ஆ இகழ்ந்தன அல்ல எம்பெரு மானென்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான் வளவயல் நாவலா ரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில் ஆவரலா தில்லையோ பிரானார்.
22. திருப்பைஞ்ஞீலி பண் - கொல்லி
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி
வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள்
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று
அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார்
காருலாவிய நஞ்சையுண்டிருள் கண்டவெண்டலை யோடுகொண்
டூஆரெலாந்திரிந் தென்செய்வீர்பலிஓரிடத்திலே கொள்ளும்நீர்
பாரெலாம்பணிந் தும்மையேபரவிப்பணியும்பைஞ் ஞீலியீர்
ஆரமாவது நாகமோசொல்லும் ஆரணீய விடங்கரே.
23. திருப்பாண்டிக்கொடுமுடி பண் - பழம்பஞ்சுரம்
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு எழுத்து அறிய எப் பொழுதும்
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடை அறாது இயம்பும் என்றும் இதனைத்
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றுஇலேன் எனச் செழும் தமிழால்
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம்
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
24. திருப்புறம்பயம் பண் - கொல்லி
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில்
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே
அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளிநின்றும்போந்துவந் தின்னம்பர்த்
தங்கினோமையும் இஆன்னதென்றிலர் ஈசனாரெழு நெஞ்சமே
கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள் ஏத்திவானவர் தாந்தொழும்
பொங்குமால்விடை யேறிசெல்வப்புறம்பயந்தொழப் போதுமே.
25. திருக்கூடலையாற்றூர் பண் - புறநீர்மை
கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி
அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று
கொண்டு எழும் விருப்பினேடும் கூடலை யாற்றூர் புக்கார்
வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங்
கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகளிவ் வழிப்போந்த அதிசயம் அறியேனே.
26. திருமுதுகுன்றம் பண் - கொல்லிக்கௌவாணம்
தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில்
புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத்
தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று
நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார்
துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே.
27. நம்பி என்ற திருப்பதிகம் பண் - தக்கேசி
நாதர் பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம்
கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட
மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
28. கோயில் பண் - குறிஞ்சி
மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து மன் உயிர் கட்கு அருளும் ஆற்றல்
அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை சிறப்பித்துத் தனிக் கூத்து என்றும்
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் ஆடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும்
பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
29. திருக்கருப்பறியலூர் பண் - நட்டராகம்
கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப்
போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப் புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி
சாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ் மாலை புனைந்து ஆங்குச் சாரும் நாளில்
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணங்
கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக் கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக் கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாது ஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி
எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாது
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி
30. திருப்பழமண்ணிப்படிக்கரை பண் - நட்டராகம்
முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே.
31. திருவாழ்கொளிபுத்தூர் பண் - தக்கேசி
தலைக்க லன்றலை மேல்தரித் தானைத்
தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்
கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக்
கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை
அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை
ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
32. திருக்கானாட்டுமுள்ளூர் பண் - கொல்லிக்கௌவாணம்
கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது கண் நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டு
தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்று
வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர் கொள் பாடியினை எய்தச் செல்வார்
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர் கொள் பாடியினை அடைவோம் என்னும்
சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி
அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்றுத் திரு வேள்விக் குடியில் எய்தி
முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார்
33. திருஎதிர்கொள்பாடி பண் - இஆந்தளம்
மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் ஆ இல்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
34. திருவேள்விக்குடி பண் - நட்டராகம்
மூப்பதும் இஆல்லை பிறப்பதும் இஆல்லை இஆறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினுமாகச்சிந் திக்கினல்லாற்
காப்பது வேள்விக் குடிதண்டுருத்தியெங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்நாமிவர்க் காட்படோமே.
35. திருமுதுகுன்றம் பண் - நட்டராகம்
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என
மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில்
பொன் செய்த மேனியினீர் எனப் பதிகம் போற்றிசைத்து
பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடியேனிட் டளங்கெடவே.
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும்
காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண் நுதலைக்
கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும்
ஏத்தா திருந்தறியேன் இஆமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே.
36. நமக்கடிகளாகிய - அடிகள் பண் - கொல்லி
பண்ணிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி
உண்ணிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப
கண்ணிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம்
எண்ணிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார்
பாறுதாங்கிய காடரோபடுதலையரோமலைப் பாவையோர்
கூறுதாங்கிய குழகரோகுழைக்காதரோகுறுங் கோட்டிள
ஏறுதாங்கிய கொடியரோசுடுபொடியரோ ஆ இலங் கும்பிறை
ஆறுதாங்கிய சடையரோநமக்கடிகளாகிய அடிகளே.
37. திருக்கடவூர் மயானம் பண் - பழம்பஞ்சுரம்
அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய்
மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித்
திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து
பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி
மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இஆந்திரற்குந்தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
38. திருக்கடவூர்வீரட்டம் பண் - நட்டராகம்
திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின்
பொரு வீரந்தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி
மருஈரத் தமிழ் மாலை புனைந்து ஏத்தி மலை வளர்த்த
பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார்
பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
39. திருவலம்புரம் பண் - காந்தாரம்
வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி
உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம்
நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம்
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார்
எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்
பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே.
40. திருநின்றியூர் பண் - தக்கேசி
நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி
ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு
என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும்
அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார்
திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ்
சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்றனக் களித்த
வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்
திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே.
அணிகொள் ஆடையம் பூண்அணி மாலை
அமுது செய்தமு தம்பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல்
ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.
41. திருநீடூர் பண் - தக்கேசி
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது
விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம்
அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி
உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார்
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக்
கார தார்கறை மாமிடற் றானைக்
கருத லார்புரம் மூன்றெரித் தானை
நீரில் வாளை வரால்குதி கொள்ளும்
நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
பாரு ளார்பர வித்தொழ நின்ற
பரம னைப்பணி யாவிட லாமே.
42. திருக்கோலக்கா பண் - தக்கேசி
திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப்
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி
அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப்
பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார்
புற்றில் வாளர வார்த்த பிரானைப்
பூத நாதனைப் பாதமே தொழுவார்
பற்று வான்துணை எனக்கெளி வந்த
பாவ நாசனை மேவரி யானை
முற்ற லார்திரி புரமொரு மூன்றும்
பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்
கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
நாளும் இஆன்னிசை யாற்றமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந்
தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இஆறைஞ்சுங்
கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
43. திருக்குருகாவூர் பண் - நட்டராகம்
சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர்
அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை
இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து
மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார்
இஆத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
44. திருநாவலூர் பண் - நட்டராகம்
மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை
மூவுலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி
ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக்
கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார்
கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு வித்தவன் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
45. திருக்கச்சூர் ஆலக்கோயில் பண் - கொல்லிக்கௌவாணம்
முதுவாயோரி என்று எடுத்து முதல்வனார் தம் பெரும் கருணை
அதுவாம் என்றுஅதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி
புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து
மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்
முதுவாய் ஓரி கதற முதுகாட்டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர்ஆலக் கோயில் அம்மானே.
46. திருக்கச்சிமேற்றளி பண் - நட்டராகம்
சீரார் காஞ்சி மன்னும் திருக் காமக் கோட்டம் சென்று இறைஞ்சி
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவி
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண்சுடராம்
பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார்
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளியுறையும்
எந்தாய் உன்னையல்லால் ஆ இனியேத்த மாட்டேனே.
47. திருஓணகாந்தன்றளி பண் - இஆந்தளம்
ஓணகாந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன்
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக்
காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் நிதி பெற்று இனிது இருந்தார்
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
ஓண காந்தன் றளியு ளீரே.
48. திருக்கச்சிஅனேகதங்காவதம் பண் - ஆஇந்தளம்
அங்கண் அமர்வார் அனே கதங்கா பதத்தை எய்தி உள்ளணைந்து
செங்கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்ததமிழ்
தங்கும் இடமாம் எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள்
பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்த பதியில் பொருந்தும் நாள்
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெருமானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை யெரித்தெரி யாடி ஆடங்குலவான திடங்குறை யாமறையாம்
மானை ஆ இடத்ததோர் கையனி டம்மதமாறு படப்பொழி யும்மலைபோல்
யானை யுரித்த பிரான திடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
49. திருவன்பார்த்தான்பனங்காட்டூர் பண் - சீகாமரம்
செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரை
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர்
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழப் பதிகம்
நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்
விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானையாவர்க்கும் அறியொண்ணா
மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச்சாராதார் சார்பென்னே.
50. திருக்காளத்தி பண் - நட்டராகம்
வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசை
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்
மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில்
செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே
வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
51. திருவொற்றியூர் பண் - குறிஞ்சி
ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும்
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமலச் சேவடியில்
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோதில் இசை கூடப்
பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார்
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே.
52. திருவாரூர் பண் - பழம்பஞ்சுரம்
மின்னொளிர் செஞ்சடையானை வேத முதல் ஆனானை
மன்னு புகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை மிக நினைந்து
பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்
என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார்
பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுவிதனைப்பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூர் இஆறைவனையே.
53. திருவொற்றியூர் பண் - தக்கேசி
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாதோர் பாகனார் மலர்ப்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பல பல நினைவார்
அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன்
அதுவும் நான்படப் பாலதொன் றானாற்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
54. வடதிருமுல்லைவாயில் பண் - தக்கேசி
அங்கு நாதர் செய் அருளது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே
பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து
திங்கள் வேணியார் திரு முல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்
சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி
திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்களென் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்து
மூடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
55. திருவெண்பாக்கம் பண் - சீகாமரம்
பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்துப் பெண் பாகம்
விழைவடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழை என மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார்
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார்
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற்
பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயிலுளா யோயென்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.
56. திருவாலங்காடு பண் - பழம்பஞ்சுரம்
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளிப்
பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார்
அந் நின்று வணங்கிப் போய்த் திருவூறல் அமர்ந்து இறைஞ்சிக்
கன்னி மதில் மணி மாடக் காஞ்சி மா நகர் அணைந்தார்
முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையா ளுமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
57. திருவேகம்பம் பண் - தக்கேசி
ஞாலந்தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிய அரியார் கண் அளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து
ஆலந்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார்
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
58. திருவாரூர் பண் - புறநீர்மை
அந்தியும் நண் பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால்
எந்தை பிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது என்று
சந்த இசை பாடிப் போய்த் தாங்க அரிய ஆதரவு
வந்து அணைய அன்பர் உடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார்
அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை யென்றுகொல் எய்துவதே.
59. திருநெல்வாயில் அரத்துறை பண் - இஆந்தளம்
அந் நாட்டின் மருங்கு திரு அரத் துறையைச் சென்று எய்தி
மின்னாரும் படை மழுவார் விரை மலர்த்தாள் பணிந்து எழுந்து
சொன்மாலை மலர்க் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி
மன்னார்வத்து திருத்தொண்டர் உடன் மகிழ்ந்து வைகினார்
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
60. திருவாவடுதுறை பண் - தக்கேசி
அங்கணைவார் தமை அடியார் எதிர் கொள்ளப் புக்கு அருளிப்
பொங்கு திருக் கோயிலினைப் புடைவலம் கொண்டுள்ளணைந்து
கங்கை வாழ் சடையாய் ஓர் கண்ணிலேன் எனக் கவல்வார்
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார்
கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
61. திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் பண் - காந்தாரம்
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து
மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம்
எண்திசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார்
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
என்னுடம் படும்பிணி ஆ இடர்கெடுத் தானை.
62. திருவாரூர்ப்பரவையுண்மண்டளி பண் - பஞ்சமம்
பொங்கு திருத்தொண்டருடன் உள்ளணைந்து புக்கு இறைஞ்சி
துங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே
இங்கு எமது துயர் களைந்து கண் காணக் காட்டாய் என்று
அம் கணர் தம் முன் நின்று பாடி அருந்தமிழ் புணைந்தார்
தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயே கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்
காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே.
63. திருவாரூர் பண் - கொல்லி
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கிக்
கோதில் இசையால் குருகுபாய எனக் கோத்து எடுத்தே
ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம்
காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார்
குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா
றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப்
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
64. திருவாரூர் பண் - செந்துருத்தி
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம்
மாளமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானைத்
தாளா தரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று
ஆளாம் திருத் தோழமைத் திறத்தால் அஞ்சொல் பதிகம் பாடினார்
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்றுமுகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.
65. திருப்புன்கூர் பண் - தக்கேசி
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே
பொருவரும் மகிழ்ச்சி பொங்கத் திருபுன் கூர் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார்
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்றமர் நலியின்
ஆ இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்
சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
66. திருநாகைக்காரோணம் பண் - கொல்லிக்கௌவாணம்
நம்பி தாமும் அந் நாள் போய் நாகைக் காரோணம் பாடி
அம் பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா
பைம் பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில்
தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருவாரூரில் சார்ந்து இருந்தார்
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாளிரங்கீர்
முத்தாரம் ஆ இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
67. திருமறைக்காடு பண் - காந்தாரம்
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழைப் பழித்து என்னும்
அறைந்த பதிகத் தமிழ் மாலை நம்பி சாத்த அருள் சேரர்
சிறந்த அந்தாதியில் சிறப்பித்து அனவே ஓதித் திளைத்து எழுந்தார்
யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இஆடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங் குண்ணும்மறைக் காடே.
68. திருக்கோடிக்குழகர் பண் - கொல்லி
கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்
நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்
வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க் கண்ணீர் வாரப்
பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார்
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலே இஆருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக ஆருந்தீரே.
69. திருப்பூவணம் பண் - ஆஇந்தளம்
நீடு திருப் பூவணத்துக் கணித்தாக நேர் செல்ல
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அப் பதிகாட்டத்
தேடு மறைக்கு அரியாரைத் திருவுடையார் என்று எடுத்துப்
பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார்
திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையோர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.
70. திருப்பரங்குன்றம் பண் - இஆந்தளம்
கோத்திட்டை என்று எடுத்துக் கோதில் திருப்பதிக இசை
மூர்த்தியார் தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே
ஏத்திய வண் தமிழ் மாலை இன் இசைப் பாடிப் பரவி
சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில்
கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக்
கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ்
சில்பூத மும்நீ ருந்திசை திசையன
சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும்
அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந்
தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம்
படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்
றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்
படியா இஆவைகற் றுவல்ல அடியார்
பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்
குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
71. திருச்சுழியல் பண் - நட்டபாடை
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலைச் சிலையாரைக்
கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் கடல் விடத்தின்
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்ப்
பருச் சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார்
ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்
வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்
தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்
நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.
72. திருக்கானப்பேர் பண் - புறநீர்மை
கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப்
புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கிப் போய்
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர்
தொண்டர் அடித் தொழலும் எனும் சொல் பதிகத் தொடை புனைவார்
தொண்ட ரடித்தொழலுஞ் சோதி ஆளம்பிறையுஞ்
சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும்
புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள்
பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங்
கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோளுங்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
73. திருப்புனவாயில் பண் - பழம்பஞ்சுரம்
புனல் வாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு
மனம் ஆர்வம் உறச் சித்த நீ நினை என்னொடு என்றே
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில்
சினயானை உரித்து அணிந்தார் திருப்பாதம் தொழுது இருந்தார்
சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.
74. திருவையாறு பண் - காந்தாரபஞ்சமம்
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில்
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும்
பரவும் பரிசொன் றறியேன்நான்
பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும்
எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத்
தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.
75. முடிப்பதுகங்கை பண் - கொல்லிக்கௌவாணம்
இறைவர் கோயில் மணி முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்கு
நிறையும் காதல் உடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர்
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்துப்
பிறை கொள் முடியார் தமைப்பாடி பரவிப் பெருமாளுடன் தொழுதார்
முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார்
கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற்
பிடிப்பது பாம்பன்றி ஆல்லை யோவெம் பிரானுக்கே.
76. திருவாரூர் பண் - தக்கேசி
நாவலர் தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும்
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய்
ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும்
மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்
பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.
77. திருமுருகன்பூண்டி பண் - பழம்பஞ்சுரம்
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம்
மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார்
வெருவுறவேடுவர் பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கு இங்கு
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெஞ்சிலை அஞ்சொற்பதிகம்
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய்
இஆடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
78. திருப்புக்கொளியூர் அவிநாசி பண் - குறிஞ்சி
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியாமுன் உயர்ந்த
வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவாயில் உடலில்சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான்
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற்
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.
உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
79. திருஅஞ்சைக்களம் பண் - ஆஇந்தளம்
கரிய கண்டர் தம் கோயிலை வலம் கொண்டு காதலால் பெருகு அன்பு
புரியும் உள்ளத்தர் உள்ளணைந்து இறைவர் தம் பூம் கழல் இணை போற்றி
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை
சரியவே தலைக்குத் தலை மாலை என்று எடுத்தனர் தமிழ் மாலை
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே
சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே
அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே
அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
80. திருநொடித்தான்மலை பண் - பஞ்சமம்
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும்
தானை முன் செலத் தானெனை முன் படைத்தான் எனும் தமிழ் மாலை
மானவன் தொண்டர் பாடி முன் அணைந்தனரர் மதி நதி பொதி வேணித்
தேன் அலம்பு தண் கொன்றையார் திருமலைத் தென்திசைத் திருவாயில்
தானெனை முன்படைத் தானதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே.
திருச்சிற்றம்பலம்
Please send your comments and corrections
See Also:
1. பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் பதிகங்கள்
2. பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் பதிகங்கள்