logo

|

Home >

panniru-thirumurai >

periyapuranathil-sekkizhar-perumaan-eduthuthantha-appar-tevaram

பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த அப்பர் தேவாரம்

 

பெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள் 
தொகுப்பு பற்றிய குறிப்புகள்
தெய்வச் சேக்கிழார் மூவர் தேவாரங்களை அடியொற்றி மூவர் தம் வரலாறுகளைப் போற்றுவது வெளிப்படையாகக் காணத்தக்கது.
தேவாரங்களைக் குறிப்பதோடு அல்லாமல் அவற்றின் மையக் கருத்துக்களைச், சொற்றொடர்களை பலவாகச் சிரமேற்கொண்டு பெரிய புராணத்தில் போற்றியுள்ளார்.
இத்தொகுப்பு கீழ்க்காணும் முறையைப் பின்பற்றித் தொகுக்கப்பட்டது.
பெரிய புராணத்தில் தேவாரத்தில் காணும் சொற்றொடர்களே காணப்படுவது. (உ-ம். தோடுடைய செவியன்)
புராணத்தில் தேவாரத்தில் கூறப்பட்ட மையக் கருத்து வெளிப்படுத்தப்படுவது. (உ-ம். நமிநந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை .. பாடி)
இத்தொகுப்பின் நோக்கம் தேவாரப் பாடல்களோடு அவற்றைக் குறிக்கும் பெரிய புராணப் பாடல்களையும் அடியவர்கள் அதே இசையில் பாடித் திருவருள் பெற வேண்டும் என்பதே.
இத்தொகுப்பு பலமுறை பெரிய புராணத்தில் மீண்டும் மீண்டும் சரி பார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. எனினும் பிழைகள் இன்னும் இருக்கக்கூடும். செம்மலர் நோன்தாளைத் தொழும் அடியவர்கள் அன்பு கூர்ந்து பொறுத்தல் கோருகின்றோம்.
இத்தொகுப்பு பாட்டே விரும்பும் அருச்சனையாகக் கொள்ளும் இசை விரும்பும் கூத்தனார் திருவடிகளுக்கு அஞ்சலி.
திருச்சிற்றம்பலம்

1. திருவதிகைவீரட்டானம்                பண் - கொல்லி


நீற்றால் நிறைவாகிய மேனியுடன் நிறைஅன்புறு சிந்தையில் நேசமிக
மாற்றார்புரம் மாற்றிய வேதியர் மருளும்பிணி மாயை அறுத்திடுவான்,
"கூற்றாயின வாறுவிலக்ககிலீர்" எனநீடிய கோதில் திருப் பதிகம்,
போற்றாலுல கேழின் வருந்துயரும் போமாறெதிர் நின்று புகன்றனரால்.

இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள் 
சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா 
அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் 
மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே.


    கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
        கொடுமைபல செய்தன நானறியேன்
    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் 
        பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே 
        குடரோடு துடக்கி முடக்கியிட
    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில 
        வீரட்டா னத்துறை அம்மானே.  

    போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் 
          புறங்காடரங் காநட மாடவல்லாய்
    ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் 
          அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
    வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் 
          என்வேதனை யான விலக்கியிடாய்
    ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில 
          வீரட்டா னத்துறை அம்மானே.

2. பொது (மறுமாற்றத் திருத்தாண்டகம்)        திருத்தாண்டகம்


"நாமார்க்கும் குடியல்லோம்" என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத்    
தேமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி
"ஆமாறு நீரழைக்கும் அடைவிலம்" என் றருள் செய்தார். 


    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் 
        நரகத்திலிடர்ப்படோம் நடலை யில்லோம்    
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் 
        இன்பமே எந்நாளு ந்துன்ப மில்லை,
    தாமார்க்குங்  குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் 
        சங்கவெண் குழையோர் காதிற் கோமற்கே 
    நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்சே 
        வடியிணையே குறுகி னோமே.


3. பொது                            திருக்குறுந்தொகை


வெய்யநீற் றறையதுதான்  வீங்கிளவே னிற்பருவம்
தைவருதண் தெண்றல்அணை தண்கழு நீர் தடம்போன்று
மொய்யொளிவெண் ணிலவளர்ந்து முரன்றயாழ் ஒலியினதாய்
ஐயர்திரு வடிநீழல் அருளாகிக் குளிர்ந்ததே


    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தை இணையடி நீழலே.


4. திருநனிபள்ளி                        திருநேரிசை


நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று     
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே     
செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால்     
வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்     


    துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந் திராதே
    அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும்
    வஞ்சனைப் பால்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த
    நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே.


5. திருவதிகை வீரட்டானம்                பண் - காந்தாரம்


அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம்பெரு மானை விடையுகந் தேறும் பிரானைச்
"சுண்ணவெண் சந்தனச் சாந்து" தொடுத்த திருப்பதி கத்தை
மண்ணுல குய்ய எடுத்து மகிழ்வுட னேபாடு கின்றார்.

வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச்     
செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்     
வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம் அடியோம் நாம்     
அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார் 

    சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
    வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
    அண்ணல் அரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
    திண்ணன் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
    அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

6. பொது    (நமச்சிவாயத் திருப்பதிகம்)            பண் - காந்தார பஞ்சமம்


"சொற்றுணை வேதியன்" என்னுந் தூய்மொழி
நற்றமிழ் மாலையா "நமச்சி வாய" என்(று)
அற்றமுன் காக்கும்அஞ் செழுத்தை அன்பொடு
பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.


    
    
    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணை    திருந்தடி பொருந்தக் கைதோழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே.

7. திருப்பாதிரிப் புலியூர்                    திருநேரிசை


"ஈன்றாளு மாயெனக் கெ¨ந்தையு மாகி" எனஎடுத்துத்
"தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்அடி யோங்கட்(கு)" என்று
வான்தாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்கும்
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே.

    ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
    மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
    ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
    தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே

8. திருவதிகை வீரட்டானம்                ஏழைத் திருத்தாண்டகம்


உம்பர்தங் கோனைஉடைய பிரானைஉள் புக்கிறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலி னால்திளைத்தே
எம்பெரு மான்தனை ஏழையேன் நான்பண் டிகழ்ந்த"தென்று
தம்பரி வால்திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.

    
    வெறிவிரவு கூவிளனல் தொங்க வானை 
        வீரட்டத் தானை வெள்ளேற்றி னைப்,
    பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப் 
        பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை,
    அறிதற் கரியசீ ரம்மான் தன்னை 
        அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை,
    எறிகெடிலத்தானை இறைவன் தன்னை 
        ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.

9. திருத்தூங்கானை மாடம்                திருவிருத்தம்


"பொன்னார்ந்த திருவடிக்கென் விண்ணப்பம்" என்றெடுத்து
முன்னாகி எப்பொருட்கும் முடிவாகி நின்றானைத்
தன்னாகத் துமைபாகங் கொண்டானைச் சங்கரனை
நன்னாமத் திருவிருத்தம் நலஞ்சிறக்கப் பாடுதலும்.

    பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
    என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல
    மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்
    துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே

10. கோயில்                        திருவிருத்தம்


இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ "என்றெய்தினை" எனமன்றாடும்,
அத்தன் திருவருள் பொழியுங் கருணையின் அருள்பெற்றிடவரும் ஆனந்தம்,
மெய்த்தன்மையினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேன்மேலும்,
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திருநே ரிசைமொழி பகர்கின்றார்.

    ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக்
    கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
    சென்று தொழுமின்கள் தில்லயுட் சிற்றம் பலத்துநட்டம்
    என்றுவந் தாய்என்னும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே

11. கோயில்                        திருநேரிசை


"பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்றுமுன் னெடுத்துப் பண்ணால்
"அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வா"றென்(று)
இத்திறம் போற்றி நின்றே இன்றமிழ் மாலை பாடிக்
கைத்திருத் தொண்டு செய்யுங் காதலிற் பணிந்து போந்தார்.

    பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனெ பரம யோகி
    எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டாம்
    முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
    அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே

12. கோயில்                        திருக்குறுந்தொகை


அருட்பெரு மகிழ்ச்சிபொங்க "அன்னம்பா லிக்கும்" என்னும்,
திருக்குறுந் தொகைகள் பாடித்திருவுழ வாரங்கொண்டு,
பெருத்தெழு காதலொடும் பெருந்திருத்தொண்டு செய்து,
விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட.

    அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
    பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
    என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
    இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே

13. திருக்கழிப்பாலை                    பண் – காந்தாரம்


    
சினவிடையே றுகைத்தேறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து
வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே! என்கின்றாள்" என்
றனையதிருப் பதிகமுடன் அன்புறுவண்டமிழ்பாடி அங்குவைகி
நினைவரியார் தமைப்போற்றி நீடுதிருப் புலியூரை நினைந்து மீள்வார்.


    
    வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே என்கின்றாளா
    சினபவளத் திண்தோள்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின் றாளால்,
    அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலான் என்கின்றாளால்,
    கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

14. கோயில்                        திருக்குறுந்தொகை


மனைப்படப்பிற் கடற்கொழு ந்து வளைசொரியுங் கழிப்பாலை மருங்குநீங்கி, 
நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு வழிக்கொண்டு நண்ணும் போதில்,
"நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளும் அம்பலத்து நிருத்த னாரைத்,
தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ" எனப்பாடித் தில்லை சார்ந்தார்.

    பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
    நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
    அனைத்தும் வேடமாம் அம்பலத் கூத்தனைத்
    தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.

15. கோயில்                        பெரிய திருத்தாண்டகம்


"அரியானை" என்றெடுத்தே அடியவருக் கெளியானை அவர்தஞ் சிந்தை,
பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந் தமிழ்பாடிப் பிறங்குசோதி,
விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன்னம்பலத்து மேவி ஆடல்,
புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமிழாற்பின்னும் போற்றல் செய்வார்.

    அரியானை அந்தணர்தம் சிந்தை யானை 
        அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்,
    தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் 
        திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்,
    கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் 
        கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
    பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் 
        பேசாத நளெல்லாம் பிறவா நாளே.

16. கோயில்                        திருநேரிசை


"செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்கும்" எனுஞ்சிறந்த வாய்மை,
அருஞ்சொல்வளத் தமிழ்மாலை அதிசயமாம் படிபாடி அன்பு சூழ்ந்த, 
நெஞ்சுருகப் பொழிபுனல்வார்  கண்ணிணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்,
தஞ்செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில்.


    
    
    செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி
    நஞ்சடை கண்ட னாரைக் காணலா நறவ நாறும்
    மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற்றம்ப லத்தே
    துஞ்சடை இருள்கிழியத் துளங்கெரி யாடு மாறே.


    
17. திருக்கழுமலம்                        திருவிருத்தம்


பெரியபெரு மாட்டியுடன் தோணி மீது பேணிவீற்றிருந்தருளும் பிரான்முன் நின்று
பரிவுறுசெந் தமிழ்மாலை பத்தியோடும் "பார்கொண்டு மூடி"எனுப் பதிகம் போற்றி
அரியவகை புறம்போந்து பிள்ளை யார்தம் திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்து
மருவியநண் புருவியநண் புறுகேண்மை அற்றை  நாள்போல் வளர்ந்தோங்க உடன்பலநாள் வைகும் நாளில்.

    பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம்    
    நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர்மதியம்
    கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க்
    காளன்றி மற்றுமுண் டோஅந்த ணாழி அகலிடமே.

18. திருவாவடுதுறை                    திருத்தாண்டகம்


"ஆவடுதண் டுறையாரை அடைந்துய்ந் தேன்"என் றளவில் திருத்தாண்டகமுன் அருளிச்செய்து,
மேவுதிருக் குறுந்தோகைநே ரிசையுஞ் சந்த விருத்தங்க ளானவையும் வேறு வேறு,
பாவலர்செந் தமிழ்த் தொடையாற் பள்ளித் தாமம் பலசாத்தி மிக்கெழுந்த பரிவினோடும்,
பூவலயத் தவர்பரவப் பலநாள் தங்கிப் புரிவுறுகைத் திருத்தோண்டு போற்றிச் செய்வார்.

    நம்பனை நால்வேதங் கரைகண் டானை 
        ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்
    கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக் 
        கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்,
    செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத் 
        திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை,
    அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய 
        அரனடியே அடிநாயேன் அடை ந்துய்ந் தேனே.

19. திருச்சத்திமுற்றம்                    திருவிருத்தம்


"கோவாய் முடுகி" என்றெடுத்துக் "கூற்றம் வந்து குமைப்பதன்முன்
பூவா ரடிகள் என்றலைமேல் பொறித்து வைப்பாய்" எனப்புகன்று
நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் "நல்லூரில்
வாவா" என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.

    கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்
    பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடில்
    மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழுங் குந்தழற்கைத்
    தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.


    
20. திருநல்லூர்                    திருத்தாண்டகம்


"நனைந்தனைய திருவடிஎன் தலைமேல்வைத் தார்"என்று
புனைந்ததிருத் தாண்டகத்தால் போற்றிசைத்துப் புனிதரருள்
நினைந்துருகி விழுந்தெழுந்து நிறைந்துமலர்ந்(து) ஒழியாத
தனம்பெரிதும் பெற்றுவந்த வறியோன்போல் மனந்தழைத்தார்.

    நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் 
        நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்,
    சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் 
        செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்,
    இனந்துருவி மணிமுகுடத் தேறத் துற்ற 
        இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி,
    நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார் 
        நல்லூரெம் பெருமானார் நல்ல வாறெ.

21. பொது (விடந்தீர்த்த திருப்பதிகம்)        பண் – இந்தளம்


அன்றவர்கள் மறைத்தனுக் களவிறந்த கருணையராய்க்
கொன்றைநறுஞ் சடையார்தம் கோயிலின்முன் கொணர்வித்தே
"ஒன்றுகொலாம்" எனப்பதிகம் எடுத்துடையான் சீர்பாடப்
பின்றைவிடம் போய்நீங்கிப் பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான்.

    ஓன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
    ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
    ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
    ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.

22. திருப்பழனம்                    பண் – பழந்தக்கராகம்


புடைமாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொற்கழற்கீழ்
அடைமாலைச் சீலமுடை அப்பூதி அடிகள்தமை
நடைமாணச் சிறப்பித்து நன்மைபுரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச் "சொன்மாலை" பாடினார்.

    சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
    பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
    முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
    பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.

    வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும் 
    பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான் 
    அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி 
    குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.

23. திருவாரூர்                        திருவிருத்தம்


பற்றொன் றிலாவரும் பாதக ராகும் அமணர்தம்பால்
உற்ற பிணியொழிந் துய்யப்போந் தேன்பெற லாவ(து)ஒன்றே?
புற்றிடங் கொண்டான்தன் தொண்டர்க்துத் தோண்டராம் புண்ணிய"மென்று
உற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள்ளணைந்தார்.

    குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ
    அலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
    சிலம்பலம் பாவரு சேவடி யான்திரு மூலட்டானம்
    புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

24. திருவாரூர்                        போற்றித் திருத்தாண்டகம்


கண்டு தொழுது விழுந்து கரசர ணாதி அங்கம் 
கொண்ட புளகங்க ளாக எழுந்தன்பு கூரக்கண்கள்
தண்டுளி மாரி பொழியத் திருமூலட் டானர்தம்மைப்
புண்டரி கக்கழல் போற்றித் திருத்தாண் டகம்புனைந்து.

    கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி 
        கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி 
    அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி 
        அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி 
    மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி 
        வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி 
    செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி 
        திருமூலட் டானனே போற்றி போற்றி. 

25. திருவாரூர்                        பண் - சீகாமரம்


"காண்ட லேகருத் தாய் நினைந்(து)" என்னுங் கலைப்பதிகம்-
தூண்டா விளக்கன்ன சோதிமுன் நின்று துதித்துருகி
ஈண்டு மணிக்கோயில் சூழ வலஞ்செய் திறைஞ்சி அன்பு
பூண்ட மனத்தொடு நீள்திரு வாயிற் புறத்தணைந்தார்.

    காண்டலேகருத் தாய் நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்கழலடி
    பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயி னாலறையோ,
    ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை மேலெழுகொடி வானிளம்மதி,
    தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.

26. திருவாரூர்    (பழமொழி)                பண் - காந்தாரம்


செய்யமா மணிஒளிசூழ் திருமுன்றில் முன்தேவா சிரியன் சார்ந்து,
"கொய்யுமா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக்,
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேன்" என்று,
எய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்தங் கிருந்தார் அன்றே.


    மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே,
    உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி யுழிதந்தென் உள்ளம் விட்டுக், 
    கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக்,
    கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்தகள்வ னேனே.

27. திருவாரூர்                        பண் - காந்தாரம்


நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப் புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக்,
கூடியஅன் பொடுகாலங் களில்அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்,
"பாடிளம் பூதத்தினான்" எனும்பதிகம் முதலான பலவும் பாடி, 
நாடியஆர் வம்பெருக நைந்துமனங் கரைந்துருகி நயந்து செல்வார்.

    பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்
    கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்
    ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்
    ஆடிளம் பாம்பசைத் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.

28. திருவாரூர்                        திருவிருத்தம்


நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி அடிகள்திருத் தொண்டின் நன்மைப்,
பான்மைனிலை யால் அவரைப் பரமர்திரு விருத்தத்துள் வைத்துப் பாடித்,
தேன்மருவும் கொன்றையார் திருவாரூர் அரனெறியில் திகழுந் தன்மை,
ஆனதிற மும்போற்றி அணிவீதிப் பணிசெய்தங் கமரும் நாளில்.

    ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
    பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா
    னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
    நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே. 

29. திருவாரூர்                        பண் – குறிஞ்சி


சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும்     
மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்     
இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார்     
முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை 

    முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே 
    பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே 
    வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள் 
    அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

30. திருவீழிமிழலை                    திருத்தாண்டகம்


கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியுங் கண்ணருவி விரவப் பரவுஞ் சொன்மாலை
"செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறிசேர் கின்றார்" என்(று)
உய்யு நெறித்தாண் டகமொழிந்தங் கொழியாக் காதல் சிறந்தோங்க.

    போரானை ஈருரிவைப் போர்வை யானைப் 
        புலியதளே யுடையாடை போற்றி னானைப்
    பாரானை மதியானைப் பகலானானைப் 
        பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற,
    நீரானைக் காற்றானைத் தீயா னானை 
        நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
    தேரானை திருவீழி மிழலை யானைச் 
        சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரெ.

31. திருமறைக்காடு                    திருக்குறுந்தொகை


உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே     
பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான்     
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு     
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும்.

    பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரொ
    மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
    கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
    திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

    அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
    இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே
    சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
    சரக்க இக்கத வந்திறப் பிம்மினே.

32. திருவாய்மூர்                        திருக்குறுந்தொகை


போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி     
ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து     
வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே     
ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள.

அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து 
பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால்     
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த     
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என 

    எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்
    டங்கே வந்தடை யாளம் அருளினார்
    தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
    அங்கே வாவென்று போனார தென்கொலோ.

    திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
    உறைப்புப் பாடி அடைப்பித்தார் உண்ணின்றார்
    மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
    பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.

33. திருவாய்மூர்                        திருத்தாண்டகம்


மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும்     
நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள     
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும்     
பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார்

    பாட வடியார் பரவக் கண்டேன் 
        பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம் 
    ஆடல் முழவம் அதிரக் கண்டேன் 
        அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக் 
    கோட லரவார் சடையிற் கண்டேன் 
        கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன் 
    வாடல் தலையொன்று கையிற் கண்டேன் 
        வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 

34. திருவாவடுதுறை                    திருநேரிசை


பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த     
ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி     
நாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும்     
பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார் 

    மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும்
    பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங்
    காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
    ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.  

35. திருப்பழையாறை வடதளி                திருக்குறுந்தொகை


தலையின் மயிரைப் பறித்து உண்ணூம் சாதி அமணர் மறைத்தாலும்     
நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும்     
விலை இல் வாய்மைக்குறும் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே     
இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார்     

    தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் 
    நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே  
    அலையி னார்பொழி லாறை வடதளி  
    நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.   

36. திருக்கச்சி ஏகம்பம்                    பண் - காந்தாரம்


கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப்     
பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின்     
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்     
அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார் 

    கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் 
    விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை 
    அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி 
    இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.

37. திருக்கச்சி ஏகம்பம்                    திருத்தாண்டகம்


ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப்     
பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை     
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின்     
ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் 

    
    கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண் 
        குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண் 
    காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண் 
        கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை 
    நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண் 
        நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல் 
    ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி 
        ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.     

38. திருவொற்றியூர்                    திருத்தாண்டகம்


வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப்     
பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார்     
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம்     
கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார் 

    வண்டோங்கு செங்கமலக் கழுநீர் மல்கு 
        மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித் 
    திண்டோள்க ளாயிரமும் வீசி நின்று 
        திசைசேர நடமாடிச் சிவலோ கனார் 
    உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி 
        ஒற்றியூர் மேய ஒளிவண் ணனார் 
    கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன் 
        கடும்பிணியுஞ் சுடுதொழிலுங் கைவிட் டவே.


    
39. திருப்பாசூர்                        திருக்குறுந்தொகை


மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச் 
சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும்     
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி     
எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர் 

    முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
    சிந்திப் பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
    அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர்
    பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே. 

40. திருவாலங்காடு                    திருத்தாண்டகம்


திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின்     
ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப் 
பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும் 
மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார் 

    ஒன்றா வுலகனைத்து மானார் தாமே 
        ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே 
    நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே 
        நீர்வளிதீ யாகாச மானார் தாமே 
    கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே 
        கோலப் பழனை யுடையார் தாமே 
    சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே 
        திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. 

41. திருக்காளத்தி                        திருத்தாண்டகம்


காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை     
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் 
காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய்     
நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார்

    விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண் 
        வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால் 
    மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண் 
        மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப் 
    பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண் 
        பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற 
    கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட 
        கணநாதன் காணவனென் கண்ணு ளானே.

42. திருக்கயிலாயம்                    திருத்தாண்டகம்


ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி     
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி     
ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப்     
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்

    வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி 
        மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி 
    ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி 
        ஓவாத சத்தத் தொலியே போற்றி 
    ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி 
        ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி 
    காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி 
        கயிலை மலையானே போற்றி போற்றி.

43. திருவையாறு                        பண் - காந்தாரம்


மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும் 
கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்     
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்     
காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார்     

கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக்     
கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின்     
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே     
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர் 


    
    மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் 
    போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் 
    யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது 
    காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் 
    கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். 

44, 45. திருப்பூந்துருத்தி                    திருத்தாண்டகம்


திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப்     
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று     
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப     
இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி 

    எனக்கென்று மினியானை எம்மான் றன்னை 
        எழிலாரு மேகம்பம் மேயான் றன்னை 
    மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில்  
        நில்லானை நின்றியூர் மேயான் றன்னைத்
    தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட  
        சங்கரனைச் சங்கவார் குழையான் றன்னைப் 
    புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் றன்னைப் 
        பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே

திருப்பூந்துருத்தி                    திருக்குறுந்தொகை


    கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்
    கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்
    பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
    அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே. 

46. திருப்பூந்துருத்தி                திருவிருத்தம்


அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று     
பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து     
தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத்     
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் 

    மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடைய 
    பாலனைப் பால்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேற்
    போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திமகிழும்
    ஆலனை ஆதிபு ராணனை நானடி போற்றுவதே.

47. திருவாலவாய்                    திருத்தாண்டகம்


எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி     
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச்     
செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்     
கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார் 

    முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி 
        முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள் 
    வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் 
        வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் 
    துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத் 
        தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித் 
    திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
        சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

48. திருப்பூவணம்                        திருத்தாண்டகம்


கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள்     
நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி     
வடிவேறு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்     
பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார்

    வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் 
        வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந்தோன்றும்
    கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் 
        காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் 
    இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் 
        எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் 
    பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் 
        பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. 

49. திருவாரூர்                        திருத்தாண்டகம்


இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி     
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர்     
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று     
பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார்

    பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற 
        புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் 
    இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க் 
        கில்லையே கிடந்துதான் யானேல் வானோர் 
    தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த் 
        தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும் 
    எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன் 
        இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே

50. திருப்புகலூர்                        திருவிருத்தம்


மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால்     
தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன்     
என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற     
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார்

    தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் அடியடையப்
    புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோ
    என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத்        
    தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே. 

51. திருப்புகலூர்                        திருத்தாண்டகம்


மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப்     
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று     
நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி     
அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் 

    எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ 
        எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற் 
    கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன் 
        கழலடியே கைதொழுது காணி னல்லால் 
    ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் 
        ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் 
    புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் 
        பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.


திருச்சிற்றம்பலம்

Please send your comments and corrections

See Also:
1. பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் பதிகங்கள்
2. பெரியபுராணத்தில் சுந்தரர் பதிகங்கள்

 

Related Content

Scaleless Luminance

Definition of Devotion 1

Definition of Devotion 2

Definition of Devotion 3

Moorggar