logo

|

Home >

hindu-shaivaite-festivals-and-vratas >

shula-vrata

Om symbol

சூல விரத மகிமை (தை அமாவாசை) - shula vrata

Om symbol

shUla vratam is one of the eight maha vratam. The day when the Sun shines in the makara rAsi that is the thai(pushya) month new moon day is called the shUla vratam day. On that day the observer of the austerity should pray the Lord holding three headed spear (shUla) accompanied by Goddess shakti, after getting up. Then the worship of the God with anointment (abhishekam) and offerings (naivedyam) etc should be done with devotion. Then should worship in the abode of Lord shiva. Donating to the devotees of Lord shiva who wear rudrAxa beads should be done. Only one time meal should be taken along with the devotees.

Observing this shUla vratam would get one the victory over all the enemies, free from the terrific diseases, boon of having offspring and the prosperities. Finally the devotee would get the union in shiva. By observing this vratam mahA vishNu killed the cruel daemon kAla nemiparashu rAma killed kArta vIryArjuna after observing this vratam. mahA vishNu got rid of a worst head ache because of glory of this vratam. brahma got relieved from his highly painful stomach pain. The highly powerful Lord vIrabhadra(2) explained the greatness of this vratam to bhanu kambha.


சூல விரத மகிமை (ஸ்காந்த புராணத்திலிருந்து)

"சகல விதமான சௌபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல விரதம். சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும்போது அதாவது தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.

அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் வணங்கி, வழிபட்டு, வெளியே சென்று, சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய சிவபெருமானின் விக்கிரகத்தை வைத்துக்கொண்டு, அபிஷேகமும், நைவேத்தியமும் செய்ய வேண்டும். பிறகு மத்தியான வேளையில் திருநீறு, ருத்திராக்ஷ மாலைகளைத் தரித்த சிவபக்தர்களுக்குத் தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறு தானதர்மங்கள் செய்ய வேண்டும். அதன்பின் சிவாலயத்திற்குச் சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து, திருக்கோயிலுக்கு நம்மால் முடிந்த காணிக்கையும் செலுத்தி இறைவரை வணங்க வேண்டும். பிறகு சிவ பக்தர்களுடன் அமர்ந்து ஒரே ஒருமுறை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும்.

இப்படியாக இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய விரோதிகள் அனைவரையும் வென்று, தீராத கொடிய நோய்களிலிருந்தும் விடுபட்டு தீர்க்காயுள், புத்திரச் செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களையெல்லாம் அடைந்து, சகல போக பாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள். முடிவில் சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள்.

மகாவிஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து, தனக்கு ஏற்பட்ட பொல்லாத தலைவலியை நீங்கப் பெற்றார். மேலும் கொடிய அசுரனான காலநேமியைச் சம்ஹாரம் செய்தார். ஜமதக்னி முனிவரின் புதல்வனும், மிக பலசாலியுமான பரசுராமரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து அதன் மகிமையால் தன் விரோதியும் இராவணனையும் மிஞ்சும் பராக்கிரமசாலியான கார்த்தவீர்யார்ஜுனனைக் கொன்றார். பிரம்மனும் சூல விரதத்தை அனுஷ்டித்து தனக்கு ஏற்பட்டிருந்த கொடிய வயிற்றுவலி நீங்கப்பெற்றான். சுதர்மன் என்பவன் இவ்விரத மகிமையால் மரணத்தையே வென்று ஜயமடைந்தான். மேகாங்கன் என்னும் அரசனும் இவ்விரதத்தை கடைபிடித்து அதன் பயனாக வித்வான்களான ஆயிரம் புத்திர, பௌத்திரர்களைப் பெற்றெடுத்து, அளவற்ற போகங்களையும் அனுபவித்து இறுதியில் சிவலோகத்தை அடைந்தான். இவர்களைப் போலவே இன்னும் பலர் இவ்விரதத்தை அனுஷ்டித்து தாங்கள் விரும்பியவற்றை அடையப்பெற்று இறுதியில் திருக்கயிலாயத்தையும் அடைந்தார்கள்.

ஆகையினால் மேலான இந்த சூல விரதத்தை எவர்கள் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் தம் பகைவர்களை வென்றும், கொடிய நோய்களிலிருந்து நீங்கியும் மேலான நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.; தோஷ நிவர்த்திப் பெறுவார்கள் இன்னும் ஏனைய பாபங்களிலிருந்தும் விடுபட்டு, பரமேஸ்வரரின் திருவருளால் சகல ஐஸ்வர்யங்களையும் அடைவார்கள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த இச்சூல விரதத்தின் மகிமையைப் பற்றி மகாபலட்டரான வீரபத்திரர், சிறந்த கணத் தலைவரான பானுகம்பனுக்குக் கூறியருளினார் என்று எனக்கு வியாச முனிவர் அறிவித்திருக்குறார். ஆகையால் தவசீலர்களே! சகல பாபங்களையும் வேரோடு அழிக்கவல்ல இந்த சூல விரதத்தின் சிறப்பைப் பற்றி விளக்கும் இந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்களுக்கு ம்ருத்யுவின் (மரணத்தின்) பயமே இராது." - சூதமாமுனிவர்.

Ref.: 
1. Skandha puranam  
2. Veerabhadrar

சூலம் பற்றிய திருமுறைப் பாடல்கள்:

சலசல சந்தகி லோடும்உந்திச்
  சந்தன மேகரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை யார்த்துமண்டிப்
  பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்க்
கலகல நின்றதி ருங்கழலான் 
  காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற 
  சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.  1.005.5

நாலுங்குலைக்கமு கோங்குகாழி    
         ஞானசம் பந்தன் நலந்திகழும்    
மாலின் மதிதவழ் மாடமோங்கும்    
         மருகலின் மற்றதன் மேல்மொழிந்த    
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்    
         சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்    
சூலம்வல் லான்கழ லேத்துபாடல்    
        சொல்லவல் லார்வினை யில்லையாமே. 1.006.11

அறையார்கழல் அந்தன்றனை 
அயில்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை 
யேற்றானிடங் கருதில்
மறையாயின பலசொல்லியொண் 
மலர்சாந்தவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழும் 
முதுகுன்றடை வோமே.  1.012.5 

 சுடுநீறணி யண்ணல்சுடர் 
   சூலம்மன லேந்தி
நடுநள்ளிருள் நடமாடிய 
   நம்பன் னுறையிடமாம்1
கடுவாளிள அரவாடுமிழ் 
   கடல்நஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் 
  நெய்த்தானமெ னீரே.  1.015.4

சூலம்படை சுண்ணப்பொடி 
  சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை 
  முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு 
  போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி 
  யூரின்நிலை யோர்க்கே.  1.018.1 

பையார் அரவே ரல்கு லாளொடும்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார் சூல மேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே.  1.025.7

சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்
காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே.  1.031.3 

ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார் 
 அமுத மமரர்க் கருளிச் 
சூழ்தரு பாம்பரை யார்த்துச் 
 சூலமோ டொண்மழு வேந்தித்  
தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்           
 தண்மதி யம்மய லேததும்ப 
வீழ்தரு கங்கை கரந்தார் 
 வேட்கள நன்னக ராரே.  1.039.8 

கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
 கரைபொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின்
 நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
 வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார்
 துயர்கெடு தல்எளி தாமே.  1.040.11

பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
 பொருகடல் வேலி இலங்கை
மன்னன் ஒல்க மால்வரை யூன்றி
 மாமுரண் ஆகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
 மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடையொ டாடி
 யணவு பெருந்துறை யாரே.  1.042.8 

குண்டுந் தேருங் கூறை களைந்துங்
 கூப்பி லர்செப் பிலராகி
மிண்டும் மிண்டர் மிண்ட வைகண்டு
 மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
 தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
 மல்கு பெருந்துறை யாரே.  1.042.10

கடையார் மாடம் நன்கெழு வீதிக்
 கழுமல வூரன் கலந்து
நடையார் இன்சொல் ஞானசம் பந்தன்
 நல்ல பெருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம்
 பரவிய பத்திவை வல்லார்
உடையா ராகி உள்ளமும் ஒன்றி
 உலகினில் மன்னுவர் தாமே. 1.042.11

ஆன்முறையா லாற்றவெண்ணீ 
 றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் 
 பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் 
 சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் 
 மேயது நள்ளாறே.  1.049.3

கொன்னவின்ற மூவிலைவேற் 
 கூர்மழுவாட் படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை 
 சூடும்பொற்பென் னைகொலாம்
அன்னமன்ன மெல்நடையாள் 
 பாகம்அமர்ந் தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் 
 சோபுரமே யவனே.  1.051.6 

கன்னவிலு மால்வரையான் 
 கார்திகழு மாமிடற்றான்
சொன்னவிலும் மாமறையான் 
 தோத்திரஞ்செய்2 வாயினுளான்
மின்னவிலுஞ் செஞ்சடையான் 
 வெண்பொடியான் அங்கையினில்
கொன்னவிலும் சூலத்தான் 
 கோளிலியெம் பெருமானே. 1.062.7

மாவினுரிவை மங்கைவெருவ 
 மூடி முடிதன்மேல்
மேவுமதியும் நதியும்வைத்த 
 இறைவர் கழலுன்னும்
தேவர்தேவர் திரிசூலத்தர் 
 திரங்கல் முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் 
 கயிலை மலையாரே.  1.068.3 

சூலப்படையொன் றேந்திஇரவிற் 
 சுடுகா டிடமாகக்
கோலச்சடைகள் தாழக்குழல்யாழ் 
 மொந்தை கொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண 
 ஆடும் பரமனார்
ஏலத்தொடுநல் இலவங்கமழும் 
 ஈங்கோய் மலையாரே.  1.072.2 

ஞாலத்து உயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே. 1.080.11

கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே.  1.083.8 

இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.  1.089.2 

மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்துங் குற்றாலம்
இலையார் சூலம் ஏந்திய கையான் எயிலெய்த
சிலையான் மேய நன்னகர் போலுஞ் சிறுதொண்டீர்.  1.099.5 

நீல நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீள்சோலைக்
கோல மஞ்ஞை பேடையொ டாடுங் குற்றாலம்
காலன்தன்னைக் காலாற் காய்ந்த கடவுள்ளெம்
சூல பாணி நன்னகர் போலுந் தொழுவீர்காள்.  1.099.7 

கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினன்அந்திச் சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.  1.100.6 

பாடலன் நான்மறையன் படிபட்ட 
 கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய 
 சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் 
 கூரெரிகொண் டெல்லி
ஆடலன் ஆதிரையன் 
 ஆரூர் அமர்ந்தானே.  1.105.1

நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு 
 வும்மனலும் அன்று
கையணி கொள்கையினான் 
 கடவுள் ளிடம்வினவின்
மையணி கண்மடவார் பலர்வந் 
 திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் 
 திருவூறலை உள்குதுமே.  1.106.4 

ஓங்கிய மூவிலைநற் சூல 
 மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு 
 மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் 
 செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் 
 வினையாய பற்றறுமே.  1.107.6  

அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் 
 புகலிந்நகர் பேணுந்
தலைமக னாகிநின்ற 
 தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் 
 செங்குன்றூ ரேத்தும்
நலம்மலி பாடல்வல்லார் 
 வினையான நாசமே.  1.107.11

சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான்
அத்திய கையினில் அழகுசூலம்
வைத்தவன் இராமன தீச்சரமே.  1.115.4

முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் 
 றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை 
 யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் 
 மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ
 றாதிரு நீலகண்டம்.  1.116.3 

உரித்தது பாம்பை யுடல்மிசை 
 இட்டதோர் ஒண்களிற்றை 
எரித்ததொ ராமையை இன்புறப் 
 பூண்டது முப்புரத்தைச் 
செருத்தது சூலத்தை யேந்திற்றுத் 
 தக்கனை வேள்விபன்னூல் 
விரித்தவர் வாழ்தரு வெங்குருவில் 
 வீற்றிருந் தவரே.  1.117.4 

கையது வெண்குழை காதது 
 சூலம் அமணர்புத்தர் 
எய்துவர் தம்மை யடியவர் 
 எய்தாரோர் ஏனக்கொம்பு 
மெய்திகழ் கோவணம்பூண்ப 
 துடுப்பது மேதகைய 
கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுள் 
 மேவிய கொற்றவரே.  1.117.11 

….
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்   நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம்
ஏந்தினை
….   1.128

கங்காளர் கயிலாய மலையாளர் 
 கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் 
 விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் 
 இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் 
 இரைதேருந் திருவையாறே.  1.130.3 

தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல் 
 குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர் 
 கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்
 கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
 கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.  1.136.8 

வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர் 
 வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை 
 குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம் 
 மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
 தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.  1.136.9 

சூல முண்டுமழு வுண்டவர்
 தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன்
 அனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை
 பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை
 குலாவிய கொள்கையே.  2.002.2

சூல மேந்திவளர் கையினர்
 மெய்சுவண் டாகவே
சால நல்லபொடிப் பூசுவர்
 பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு
 குந்திரு வாஞ்சியம்
ஆல முண்டஅடி கள்ளிட
 மாக அமர்ந்ததே.  2.007.4

மழுவாளோ டெழில்கொள்சூ
 லப்படை வல்லார்தம்
கெழுவாளோ ரிமையாருச்
 சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ
 ரால்வள ரேகம்பம்
தொழுவாரே விழுமியார்
 மேல்வினை துன்னாவே.  2.012.6 

முத்தன்மிகு மூவிலைநல்
 வேலன்விரி நூலன் 
அத்தன்எமை யாளுடைய
 அண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின்
 வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில்
 கின்றபழு வூரே.  2.034.1 

பழகும் வினைதீர்ப்
 பவன்பார்ப் பதியோடும்
முழவம் குழல்மொந்தை
 முழங் கெரியாடும்
அழகன் னயில்மூ
 விலைவேல் வலனேந்துங்
குழகன் நகர்போல்
 குரங்கா டுதுறையே.  2.035.7 

பாடல் நெறிநின்றான்
 பைங்கொன்றைத் தண்டாரே
சூடல் நெறிநின்றான்
 சூலஞ்சேர் கையினான்
ஆடல் நெறிநின்றான்
 ஆமாத்தூர் அம்மான்றன்
வேட நெறிநில்லா
 வேடமும் வேடமே.  2.044.5 

தையலோர் கூறுடையான்
 தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றன்
 மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவே
 லேந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை
 கோயில் கைச்சினமே.  2.045.1 

கோலத்தார் கொன்றையான்
 கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான்
 நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்து
 நாலூர் மயானத்தில்
சூலத்தா னென்பார்பால்
 சூழாவாந் தொல்வினையே.  2.046.4

சூலஞ்சேர் கையினீர்
 சுண்ணவெண்ணீ றாடலீர்  
நீலஞ்சேர் கண்டத்தீர்
 நீண்டசடைமேல் நீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கானல்
 அன்னமன்னுந் தலைச்சங்கைக்  
கோலஞ்சேர் கோயிலே
 கோயிலாகக் கொண்டீரே  2.055.5  

நிணங்கவரும் மூவிலையும்
 அனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோ
 டாடல்மேவும் அழகினீர்
திணங்கவரும் ஆடரவும்
 பிறையுஞ்சூடித் திருநல்லூர்
மணங்கமழுங் கோயி லே
 கோயிலாக மகிழ்ந்தீரே  2.057.5 

இழையார்ந்த கோவணமுங்
 கீளும்எழிலார் உடையாகப்
பிழையாத சூலம்பெய்
 தாடல்பாடல் பேணினீர்
குழையாரும் பைம்பொழிலும்
 வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே
 கோயிலாக மிக்கீரே  2.058.5 

தோடு செவிக்கிலர் போலும் 
 சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய 
 ஆனை உரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலும் 
 ஒள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப் பிரம
 புரம்அமர்ந் தாரே.  2.065.5 

எயிலது வட்டது நீறு
 விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு
 பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு
 சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்
 தாலவா யான் திருநீறே.  2.066.7

சடையமர் கொன்றையி னாருஞ்
 சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும்
 பொறிகிளர் பாம்பசைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும்
 வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும்
 பாண்டிக் கொடுமுடி யாரே.  2.069.3 

ஞாலமல் குந்தமிழ்
 ஞானசம்பந்தன் மாமயில்
ஆலுஞ்சோலை புடைசூழ்
 அகத்தியான் பள்ளியுள்
சூல நல்லபடையான்
 அடிதொழு தேத்திய
மாலைவல்லா ரவர்தங்கள்
 மேல்வினை மாயுமே. 2.076.11

இலையினார்சூலம் ஏறுகந்
 தேறியேயிமை யோர்தொழ
நிலையினாலொரு காலுறச்
 சிலையினால்மதி லெய்தவன்
அலையினார்புனல்சூடிய அண்ணலார்அறை
 யணிநல்லூர்
தலையினால்தொழு தோங்குவார்
 நீங்குவார்தடு மாற்றமே.  2.077.2

என்பினார்கனல் சூலத்தார்
 இலங்குமாமதி யுச்சியான்
பின்பினாற்பிறங் குஞ்சடைப்
 பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
முன்பினார்மூவர் தாந்தொழு
 முக்கண்மூர்த்திதன் தாள்களுக்
கன்பினார்அறை யணிநல்லூர்
 அங்கையால்தொழு வார்களே.  2.077.3 

தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்            
 கொடுகொட்டி வீணை முரல            
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த           
 பெருமான் உகந்த நகர்தான்         
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல்          
 பணிவார்கள் பாடல் பெருகி         
நகைமலி முத்திலங்கு மணல் சூழ் கிடக்கை        
 நனிபள்ளி போலும் நமர்காள்.  2.084.7

பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்            
 விரிதரு கரத்தேந்தும்            
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்            
 மறிகடல் மாதோட்டத்            
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்            
 பரிந்தசிந் தையராகி            
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்            
 மொய்த்தெழும் வினைபோமே.  2.107.4 

நீல மார்தரு கண்டனே நெற்றியோர்            
 கண்ணனே யொற்றைவிடைச்            
சூல மார்தரு கையனே துன்றுபைம்            
 பொழில்கள்சூழ்ந் தழகாய            
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்            
 கொழுந்தேயென் றெழுவார்கள்            
சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத்            
 தாங்குவர் பாங்காலே..  2.109.1 

கூர்விலங்குந் திருசூல
 வேலர்குழைக் காதினர்
மார்விலங்கும் புரிநூ
 லுகந்தம்மண வாளனூர்
நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்
 நெடுந் தாரைவாய்க்
கார்விலங்கல் லெனக்கலந்
 தொழுகுங் கடற் காழியே.  2.113.3

வார்கொள்கோலம் முலைமங்கை
 நல்லார்மகிழ்ந் தேத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடு
 வெண்டிங்கள் நிகழ்வெய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு
 கையார்க் கிடமாவது
கார்கொளோதங் கழிசூழ்
 கடல்நாகைக் காரோணமே.  2.116.5 

ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற
 துங்கூற்றை யுதைத்ததும்
கூர்க்குநன்மூ விலைவேல்வல
 னேந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன்னுரத்
 தைந்நெரித் தவ்வடல்
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள்
 செய்யாநின்ற மொய்ம்பதே.  2.120.8 

நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல 
 நெற்றிமேலுற்ற கண்ணி னார்பற்று 
சூலத்தார் சுடலைப்பொடி நீறணிவார் சடையார் 
சீலத்தார்தொழு தேத்துசிற் றம்பலஞ் 
 சேர்தலாற்கழற் சேவடி கைதொழக் 
கோலத்தாயருளா யுனகாரணங் கூறுதுமே.  3.001.3

நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண்
 டந்தக னைச்செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர்
 வீழிமி ழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர்
 கங்கையங் காடிய
மஞ்சனச் செஞ்சடை யாரென
 வல்வினை மாயுமே.  3.009.3

கலையிலங் கும்மழு கட்டங்கம்
 கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர்
 வீழிமி ழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ்
 சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க்
 கும்மடி யார்க்குமே.  3.009.4 

இலைமல்கு சூலமொன் றேந்தினா
 னும்இமை யோர்தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனா
 யம்மணி கண்டனுங்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ
 கார்திருக் கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை யேற்றுகந்
 தஅழ கனன்றே.  3.012.3

பணங்கொள்நா கம்மரைக்
 கார்ப்பது பல்பலி
உணங்கலோ டுண்கலன்
 உறைவது காட்டிடைக்
கணங்கள்கூ டித்தொழு
 தேத்துகா ட்டுப்பள்ளி
நிணங்கொள்சூ லப்படை
 நிமலர்தந் நீர்மையே.  3.029.4

மறையர்வா யின்மொழி
 மானொடு வெண்மழுக்
கறைகொள்சூ லம்முடைக்
 கையர்கா ரார்தரும்
நறைகொள்கொன் றைநயந்
 தார்தருஞ் சென்னிமேல்
பிறையர்கோ யில்லர
 தைப்பெரும் பாழியே.  3.030.5 

உண்டுடுக்கைவிட் டார்களும்உயர் 
 கஞ்சிமண்டைகொள் தேரரும்
பண்டடக்குசொற் பேசுமப்பரி 
 வொன்றிலார்கள்சொல் கொள்ளன்மின்
தண்டொடக்குவன் சூலமுந்தழல் 
 மாமழுப்படை தன்கையிற்
கொண்டொடுக்கிய மைந்தன்எம்பிர 
 மாபுரத்துறை கூத்தனே.  3.037.9 

நமரெழுபிறப் பறுக்குமாந்தர்கள் 
 நவிலுமின்உமைக் கேட்கின்றேன்
கமரழிவயல் சூழுந்தண்புனற் 
 கண்டியூருறை வீரட்டன்
தமரழிந்தெழு சாக்கியச்சமண் 
 ஆதரோது மதுகொளா
தமரரானவர் ஏத்தஅந்தகன் 
 றன்னைச்சூலத்தி லாய்ந்ததே.  3.038.10

விண்ணினண்ணு புல்கிய
 வீரமாய மால்விடைச்
சுண்ணவெண்ணீ றாடினான்
 சூலமேந்து கையினான்
அண்ணல்கண்ணொர் மூன்றினான்
 ஆனைக்காவு கைதொழ
எண்ணும்வண்ணம் வல்லவர்க்
 கேதமொன்றும் இல்லையே.  3.053.4 

பெற்றியாற் பித்தனொப்பான்
 பெருமான்கரு மானுரிதோல்
சுற்றியான் சுத்திசூலஞ்
 சுடர்க்கண்ணுதல் மேல்விளங்கத்
தெற்றியாற் செற்றரக்கன்
 னுடலைச்செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றுமாள்வான்
 உறையும்மிடம் ஒற்றியூரே.  3.057.8

மலைமலி மங்கைபாகம்
 மகிழ்ந்தானெழில் வையமுய்யச்
சிலைமலி வெங்கணையாற்
 சிதைத்தான்புர மூன்றினையுங்
குலைமலி தண்பலவின்
 பழம்வீழ்குட மூக்கிடமா
இலைமலி சூலமேந்தி
 இருந்தானவன் எம்மிறையே.  3.059.7 

நெய்யணி சூலமோடு
 நிறைவெண்மழு வும்மரவுங்
கையணி கொள்கையினான்
 கனல்மேவிய ஆடலினான்
மெய்யணி வெண்பொடியான்
 விரிகோவண ஆடையின்மேல்
மையணி மாமிடற்றான்
 உறையும்மிடம் வக்கரையே.  3.060.4

இலங்கையர் மன்னனாகி
 எழில்பெற்றஇ ராவணனைக்
கலங்கவொர் கால்விரலாற்
 கதிர்பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனாய்
 அருள்பெற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல்
 உடையானிடம் வக்கரையே.  3.060.8 

கடந்திகழ் கருங்களி றுரித்துமையும்
 அஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழும் மூவிலைநல் வேலுடைய
 வேதியர் விரும்புமிடமாந்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு
 தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக
 நாறுமயி லாடுதுறையே.  3.070.6 

நிணந்தரும யானநில வானமதி
 யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக
 வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம்
 பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய்
 வார்பெறுவர் பொன்னுலகமே.  3.070.11

கலையினொலி மங்கையர்கள் பாடலொலி
 யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள்
 வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன்
 ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை
 யேத்தவினை யகலுமிகவே.  3.072.2

நீரின்மலி புன்சடையர் நீளரவு
 கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது ஏந்தியுடை
 கோவணமும் மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
 காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர
 மேத்தவினை பற்றழியுமே.  3.073.2

மாசில்மனம் நேசர்தம தாசைவளர்
 சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு
 பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும்
 மாதரவர் பூவைமொழியுந்
தேசவொலி வீணையொடு கீதமது
 வீதிநிறை தேவூரதுவே.  3.074.4

சூலமோ டொண்மழு நின்றிலங்கச்
 சுடுகா டிடமாகக்
கோலநன் மாதுடன் பாடஆடுங்
 குணமே குறித்துணர்வார்
ஏலந றும்பொழில் வண்டுபாடும்
 இராமேச் சுரமேய
நீலமார் கண்ட முடையவெங்கள்
 நிமலர் செயுஞ்செயலே.  3.101.5

தண்டொடு சூலந் தழையவேந்தித் 
 தைய லொருபாகங்
கண்டிடு பெய்பலி பேணிநாணார் 
 கரியின் உரிதோலர்
வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட 
 வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்துநின்ற 
 தொடர்பைத் தொடர்வோமே.  3.106.6

சடையணிந்ததும் வெண்டலை மாலையே 
 தம்முடம்பிலும் வெண்டலை மாலையே
படையிலங்கையிற் சூலம தென்பதே 
 பரந்திலங்கையிற் சூலம தென்பதே
புடைபரப்பன பூத கணங்களே 
 போற்றிசைப்பன பூத கணங்களே
கடைகடோ று மிரப்பது மிச்சையே 
 கம்பமேவி யிருப்பது மிச்சையே.  3.114.2

செய்யதா மரைமேல் அன்னமே யனைய
 சேயிழை திருநுதற் செல்வி
பையர வல்குற் பாண்டிமா தேவி
 நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான்
 விரிகதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோ டின்புறு கின்ற
 ஆலவா யாவதும் இதுவே.    3.120.5 

நலமில ராக நலமதுண் டாக
 நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத்
 தவம்பணி குலச்சிறை பரவுங்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன்
 கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல்
 ஆலவா யாவதும் இதுவே.   3.120.6 

எற்றினார் ஏதும் இடைகொள்வா ரில்லை                        
 இருநிலம் வானுல கெல்லை                        
தெற்றினார் தங்கள் காரண மாகச்                        
 செருமலைந் தடியிணை சேர்வான்                        
முற்றினார் வாழும் மும்மதில் வேவ                        
 மூவிலைச் சூலமும் மழுவும்                        
பற்றினார் போலும் பந்தணை நல்லூர்                        
 நின்றஎம் பசுபதி யாரே.  3.121.7 

ஒத்த வடத்திள நாகம் 
 உருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையும் 
 முளைத்தெழு மூவிலை வேலுஞ்
*சித்த வடமும் அதிகைச் 
 சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிலப் புனலும் 
 உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை.  4.002.3

பாடிளம் பூதத்தி னானும் 
 பவளச்செவ் வாய்வண்ணத் தானுங்
கூடிள மென்முலை யாளைக் 
 கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும் 
 ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானும் 
 ஆரூ ரமர்ந்தஅம் மானே.  4.004.1 

இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர் 
 வெண்மழுவன் என்கின் றாளாற்
சுரும்பார் மலர்க்கொன்றைச் சுண்ணவெண் 
 ணீற்றவனே என்கின் றாளாற்
பெரும்பால னாகியோர் பிஞ்ஞக 
 வேடத்தன் என்கின் றாளாற்
கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச் 
 சேர்வானைக் கண்டாள் கொல்லோ.  4.006.4

கோலக் காவிற் குருமணியைக் 
 குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை 
 அமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப் 
 பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத் 
 தோளைக் குளிரத் தொழுதேனே. 4.015.5

எத்தீ புகினும்
 எமக்கொரு தீதிலை
தெத்தே யெனமுரன்
 றெம்முள் உழிதர்வர்
முத்தீ யனையதொர்
 மூவிலை வேல்பிடித்
தத்தீ நிறத்தார்
 அரநெறி யாரே.  4.017.1

மூன்றுகொ லாமவர்
 கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர்
 சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை
 கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர
 மெய்தன தாமே.  4.018.3 

சூலப் படையானைச்
 சூழாக வீழருவிக்
கோலத்தோட் குங்குமஞ்சேர்
 குன்றெட் டுடையானைப்
பாலொத்த மென்மொழியாள்
 பங்கனைப் பாங்காய
ஆலத்தின் கீழானை
 நான்கண்ட தாரூரே.  4.019.1 

சூலங்கொப் பளித்த கையர் 
 சுடர்விடு மழுவாள் வீசி
நூலுங்கொப் பளித்த மார்பில் 
 நுண்பொறி யரவஞ் சேர்த்தி
மாலுங்கொப் பளித்த பாகர் 
 வண்டுபண் பாடுங் கொன்றை
ஆலங்கொப் பளித்த கண்டத் 
 ததிகைவீ ரட்ட னாரே.  4.024.7

மலையினார் மகளோர் பாக 
 மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றுந் 
 தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூலம் ஏந்தி 
 ஏகம்பம் மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார் 
 தலைவர்க்குந் தலைவர் தாமே.  4.044.3 

மையரி மதர்த்த ஒண்கண் 
 மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங் 
 கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே 
 அடைக்கும்போ தாவி யார்தாஞ்
செய்வதொன் றறிய மாட்டேன் 
 திருப்புக லூர னீரே.  4.054.2

விரித்தபல் கதிர்கொள் சூலம் 
 வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல காலப் 
 பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு 
 ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் 
 செந்நெறிச் செல்வ னாரே.  4.073.6

தரியா வெகுளிய னாய்த்தக்கன் 
 வேள்வி தகர்த்துகந்த
எரியார் இலங்கிய சூலத்தி 
 னான்இமை யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப் 
 பானென்றுந் தன்பிறப்பை
அரியான் அடிநிழற் கீழதன் 
 றோவென்றன் ஆருயிரே.  4.084.3 

ஆய்ந்தகை வாளர வத்தொடு 
 மால்விடை யேறியெங்கும்
பேர்ந்தகை மானட மாடுவர் 
 பின்னு சடையிடையே
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய 
 சோற்றுத் துறையுறைவார்
ஏந்துகைச் சூல மழுவெம் 
 பிரானுக் கழகியதே.  4.085.4

பற்றின பாம்பன் படுத்த 
 புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை 
 மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன் 
 சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் 
 தானத் திருந்தவனே.  4.089.7  

கையது காலெரி நாகங் 
 கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட 
 விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம 
 ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை 
 நாமடைந் தாடுதுமே.  4.090.1

தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் 
 சுற்றியும் பத்திமையான்
மேற்பட்ட அந்தணர் வீழியும் 
 என்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தேன் 
 இறக்க நமன்தமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினும் 
 என்னைக் குறிக்கொண்மினே.  4.095.5 

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு 
 விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் 
 டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் 
 மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை 
 மாடச் சுடர்க்கொழுந்தே.  4.109.1

மாலும் நான்முக
 னும்மறி கிற்கிலார்
கால னாய
 அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு
 வேந்திய கையினார்
ஆலம் உண்டழ
 காயஆ ரூரரே. 5.006.10

மையு லாவிய
 கண்டத்தன் அண்டத்தன்
கையு லாவிய
 சூலத்தன் கண்ணுதல்
ஐயன் ஆரூர்
 அடிதொழு வார்க்கெலாம்
உய்ய லாமல்லல்
 ஒன்றிலை காண்மினே. 5.007.12

புனைபொற் சூலத்தன்
 போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன்
 வெண்மழு வாளினான்
நினைய நின்றவன்
 ஈசனை யேயெனா
வினையி லார்தொழும்
 வீழி மிழலையே.  5.012.3

சூல வஞ்சனை
 வல்லவெஞ் சுந்தரன்
கோல மாவருள்
 செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச
 வுதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக்
 கண்டது வெண்ணியே.  5.017.10

கனலுங் கண்ணியுந்
 தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ்
 சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும்
 மான்மறிக் கையினர்
எனலும் என்மனத்
 தின்னம்பர் ஈசனே.  5.021.3 

நாறு கொன்றையும்
 நாகமுந் திங்களும்
ஆறுஞ் செஞ்சடை
 வைத்த அழகனார்
காறு கண்டத்தர்
 கையதோர் சூலத்தர்
பாறி னோட்டினர்
 பாசூ ரடிகளே.  5.025.3

சிந்தை வாய்தலு
 ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால்
 வெண்டலைக் கையினன்
முந்தி வாயதோர்
 மூவிலை வேல்பிடித்
தந்தி வாயதோர்
 பாம்பர்ஐ யாறரே.  5.027.1 

கைகொள் சூலத்தர்
 கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த
 ராகி இருசுடர்
செய்ய மேனிவெண்
 ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோர்
 ஐந்தலை நாகமே.  5.036.7 

சூல மேந்துவர்
 தோலுடை ஆடையர்
ஆல முண்டமு
 தேமிகத் தேக்குவர்
கால காலர்
 கடவூர் மயானத்தார்
மாலை மார்பர்
 பெருமா னடிகளே.  5.038.3 

விழுது சூலத்தன்
 வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருட்
 காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப்பைஞ்
 ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர்
 தம்வினை தூளியே.  5.041.3

நீல மாமணி
 கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி
 கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு
 வேந்திச் சுடர்முடிப்
பால்நெய் யாடுவர்
 பாலைத் துறையரே.  5.051.1 

சூலம் மல்கிய
 கையுஞ் சுடரொடு
பாலும் நெய்தயி
 ராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய
 நாரையூர் நம்பனுக்(கு)
ஆல நீழலும்
 அம்ம அழகிதே.  5.055.6 

மூல மாகிய
 மூவர்க்கு மூர்த்தியைக்
கால னாகிய
 காலற்குங் காலனைக்
கோல மாம்பொழில்
 சூழ்திருக் கோளிலிச்
சூல பாணிதன்
 பாதந் தொழுமினே.  5.057.5

தென்றல் நன்னெடுந்
 தேருடை யானுடல்
பொன்ற வெங்கனல்
 பொங்க விழித்தவன்
அன்ற வந்தக
 னையயிற் சூலத்தாற்
கொன்ற வன்குரங்
 காடு துறையனே.  5.063.9  

நீர்ப ரந்த
 நிமிர்புன் சடையின்மேல்
ஊர்ப ரந்த
 உரகம் அணிபவர்
சீர்ப ரந்த
 திருமணஞ் சேரியார்
ஏர்ப ரந்தங்
 கிலங்குசூ லத்தரே.  5.087.6 

மூன்று மூர்த்தியுள்
 நின்றிய லுந்தொழில்
மூன்று மாயின
 மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன்
 தீத்தொழில் மூன்றினன்
மூன்று போதுமென்
 சிந்தையுள் மூழ்குமே.  5.089.3 

ஞாலத் தானைநல்
 லானைவல் லார்தொழுங்
கோலத் தானைக்
 குணப்பெருங் குன்றினை
மூலத் தானை
 முதல்வனை மூவிலைச்
சூலத் தானைக்கண்
 டீர்தொழற் பாலதே.  5.094.7

பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத் 
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே 
ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே. 6.02.11

செய்யனே கரியனே கண்டம் பைங்கண் 
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச் 
சடையனே விளங்குமழுச் சூல மேந்துங்
கையனே காலங்கள் மூன்றா னானே
கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
அவனாகி லதிகைவீ ரட்ட னாமே.  6.004.4 

பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப் 
பேதப் படுகின்ற பேதை மீர்காள்
நிணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
எண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.  6.012.7 

இயல்பாய ஈசனை எந்தை தந்தை
என்சிந்தை மேவி யுறைகின் றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான 
தியம்பகன் திரிசூலத் தன்ன கையன்
கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக் 
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க 
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.  6.012.8 

படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாமை நின்றான் றானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் 
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகம் 
அசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகுங்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற் 
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.  6.015.5 

சூலப் படையுடையார் தாமே போலுஞ்
சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.  6.016.1 

வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.  6.018.1 

கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்
கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்
சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்
சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப்
பல்கணமுந் தாமும் பரந்த காட்டில்
நட்டங்க மாடியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.  6.020.4 

மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
நெய்யார் திரிசூலங் கையார் போலும்
நீறேறு தோளெட் டுடையார் போலும்
வையார் மழுவாட் படையார் போலும்
வளர்ஞாயி றன்ன ஒளியார் போலும்
ஐவா யரவமொன் றார்த்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.  6.021.3 

பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப்
புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச்
சின்மணிய மூவிலைய சூலத் தானைத்
தென்சிராப் பள்ளிச் சிவலோ கனை
மன்மணியை வான்சுடலை யூராப் பேணி 
வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக்
கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக் 
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.  6.022.7

கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்
அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்
எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
செம்மானத் தொளியன்ன மேனி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  6.024.1 

ஏவணத்த சிலையான்முப் புரமெய் தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் றான்காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
அனலாடி காண்அடியார்க் கமிர்தா னான்காண்
தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  6.024.3 

காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
போரேறு நெடுங்கொடிமே லுயர்த்தி னான்காண்
புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்
நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்
நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்
சீரேறு திருமாலோர் பாகத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  6.024.5 

மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்
மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்
இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்
இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்
கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்
கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்
சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  6.024.9 

பொன்னலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்
புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்
வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்
கோலமா நீறணிந்த மேனி யான்காண்
செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.  6.030.8 

மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி
ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.  6.032.3

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.  6.035.1 

தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச்
சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்
பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார்
பார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாராற்
கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக் 
கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.  6.035.6

மாறின் மதின்மூன்று மெய்தார் தாமே
வரியரவங் கச்சாக ஆர்த்தார் தாமே
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே
நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
ஏறு கொடுஞ்சூலக் கையார் தாமே
என்பா பரண மணிந்தார் தாமே
பாறுண் தலையிற் பலியார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.  6.036.4  

ஆர்ந்தவனே யுலகெலாம் நீயே யாகி
யமைந்தவனே யளவிலாப் பெருமை யானே
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா
கொடுமூ விலையதோர் சூல மேந்திப்
பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய
பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற்
சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.  6.044.6 

மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை
வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே கடியிலங்கைக் கோனை யன்று
கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற
மெய்யவனே யடியார்கள் வேண்டிற் றீயும்
விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ்
செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.  6.044.10

வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை
விசயனைமுன் னசைவித்த வேடன் தன்னைத்
தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச்
சூலப் படையானைக் காலன் வாழ்நாள்
மாண்டோட வுதைசெய்த மைந்தன் தன்னை
மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்
ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.  6.046.9 

மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண்
விண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும்
முன்னளந்த மூவர்க்கும் முதலா னான்காண்
மூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண்
எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண்
ஏவலன்காண் இமையோர்க ளேத்த நின்று
மண்ணளந்த மாலறியா மாயத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.  6.049.7 

மைவான மிடற்றானை அவ்வான் மின்போல்
வளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும்
பெய்வானைப் பிச்சாட லாடு வானைப்
பிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம்
பொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப்
பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை
செய்வானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  6.050.6

கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் 
கந்தமா தனத்துளார் காளத் தியார்
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்
வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபா லமும்
அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழி மிழலையே மேவி னாரே.  6.051.1 

கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக் 
கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலுங்
குயிலாய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் 
கூத்தாட வல்ல குழகர் போலும்
வெயிலாய சோதிவிளக் கானார் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அயிலாய மூவிலைவேற் படையார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.  6.053.11

அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை 
அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா 
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  6.054.6

பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப் 
புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்
குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்
திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.  6.059.10

இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே
எவ்விடத்தும் நீயல்லா தில்லை யென்று
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே
தழல்மடுத்த மாமேரு கையில் வைத்த
சிலையானே திருவானைக் காவுள் மேய 
தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.  6.062.8 

முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் 
வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்
பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்
முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி 
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  6.064.8

முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத் 
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச் 
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி 
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  6.065.9 

விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்
சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத்
தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க
அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்
படையானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.  6.069.2 

நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணிபுரந் துருத்தி சோமீச் சரம்
உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்
ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்
கயிலாய நாதனையே காண லாமே.  6.070.10 

சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.  6.075.1

அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன்
அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்
முடியார் சடைமேல் அரவ மூழ்க
மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்
கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்
கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்
வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.  6.077.6 

கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை
என்னானைத் தென்னானைக் காவான் றன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.  6.079.8 

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்
வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்
ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.  6.081.3 

வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்
புகலூரை யகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்
நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.  6.081.5 

ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை
நான்முகனு மறியாத நெறியான் கையிற்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்
தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்
காலத்தா லுதைசெய்து காதல் செய்த
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.  6.083.9 

நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை
வியன்கெடில வீரட்டம் மேவி னானை
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்
செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.  6.084.5 

ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை
அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை
எழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை
ஊராரும் படநாக மாட்டு வானை
உயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்
சீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.  6.088.1 

மூவிலைநற் சூலம்வல னேந்தி னானை
மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை
நால்வேத மாறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை
அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.  6.090.1 

பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.  6.091.5 

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  6.092.1  

அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்
அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்
சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்
மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்
மாகாளன் வாசற்காப் பாகக் கொண்டார்
தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்
சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.  6.096.5 

அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்
ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்
காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்
மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்
சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே.  6.096.7

எரிகின்ற இளஞாயி றன்ன மேனி
இலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ 
விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ 
வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ 
வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ 
அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ 
சொரிகின்ற புனலுண்டோ சூல முண்டோ 
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.  6.097.2 

விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆடை யுண்டு
வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டு
இமையோர் பெருமா னிலாத தென்னே.  6.097.9 

அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத்
 தீரழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப்
 பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறை வாநிறை
 வாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழி
 லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.  7.009.2 

செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன்
  தீவினை செற்றிடு மென்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்
  ஆவதும் அறிவரெம் மடிகள்
படைத்தலைச் சூலம் பற்றிய கையர்
  பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிடித்தவெண் ணீறே பூசுவ தானால்
  இவரலா தில்லையோ பிரானார்.  7.014.6

செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
 செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
இருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி
 இந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவில் 
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்
 பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக் 
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
 களிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே.  7.016.2 

அங்கையின் மூவிலை வேலர்
 அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்
 தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையோர் பாகர் மகிழ்ந்த
 இடம்வள மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலி
 யுந்திரு நின்றியூரே.  7.019.3

அண்ட கபாலஞ்சென்னி
 அடிமேலல ரிட்டுநல்ல
தொண்டங் கடிபரவித்
 தொழுதேத்திநின் றாடுமிடம்
வெண்டிங்கள் வெண்மழுவன்
 விரையார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம்
 பழமண்ணிப் படிக்கரையே.  7.022.2

உங்கைக ளாற்கூப்பி
 உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர்
மங்கையோர் கூறுடையான்
 வானோர்முத லாயபிரான்
அங்கையில் வெண்மழுவன்
 அலையார்கதிர் மூவிலைய
பங்கய பாதனிடம்
 பழமண்ணிப் படிக்கரையே.  7.022.5

செய்யார் மேனியனே
 திருநீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா
 மதயானை உரித்தவனே
கையார் சூலத்தினாய்
 திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான்
 அடியேனையும் அஞ்சலென்னே.  7.027.4 

பொடியார் மேனியனே
 புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல்
 வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே
 கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே
 எனக்கார்துணை நீயலதே.  7.028.1 

மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக்
 கிசையுமாநினைந் தேத்துவீர்
கையிற்சூலம துடையரோகரி
 காடரோகறைக் கண்டரோ
வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை
 ஏறரோகடை தோறுஞ்சென்
றையங்கொள்ளுமவ் வடிகளோநமக்
 கடிகளாகிய அடிகளே.  7.033.7 

இலைகொள்சோ லைத்தலை
 இருக்கும்வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை
 அடிகளா ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதுங்
 கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும்
 மொழியவல் லீர்களே.  7.037.5 

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
  இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
  சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
  அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
  கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.  7.040.3 

கொல்லும் மூவிலை வேலுடை யானைக் 
 கொடிய காலனை யுங்குமைத் தானை 
நல்ல வாநெறி காட்டுவிப் பானை 
 நாளும் நாம்உகக் கின்ற பிரானை 
அல்ல லில்லரு ளேபுரி வானை 
 ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க் 
கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக் 
 கூறி நாம்பணி யாவிட லாமே.  7.056.3 

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
 பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
 காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
 தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர்
 மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.  7.057.2 

புலைகள் தீரத் தொழுமின்
 புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன்
 எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவிக்
 குட்டி யொடுமுசுக்
கலைகள் பாயும் புறவில்
 தண்கழுக் குன்றமே.  7.081.5 

இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் 
 பொத்து நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் 
 டாய்வியன் மூவுலகுக்கு
ஒருதலை வாமன்னும் உத்தர
 கோசமங் கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வல 
 னேந்திப் பொலிபவனே.  8.006.9 

தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
 சிவபுரம் பாடித் திருச்சடைமேல் 
வானக மாமதிப் பிள்ளைபாடி
 மால்விடை பாடி வலக்கையேந்தும்
ஊனக மாமழுச் சூலம்பாடி
 உம்பரும் இம்பரும் உய்யஅன்று
போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.  8.009.17 

தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.  8.010.18

சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே.  8.039.2

மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன் தோன்றும்நன் னீணகரே.   8K.016.29

நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலுந் திருநுதலே.   8K.022.2

தனதன்நல் தோழா சங்கரா ! சூல
 பாணியே! தாணுவே சிவனே !
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே
 கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே குமர விநாயக சனக
 அம்பலத்து அமரசே கரனே !
நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
 தொண்டனேன் நுகருமா நுகரே.  9.001.7

துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
 சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
 கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம்
 கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள்நின் றாடும்
 மைந்தன்என் மனங்கலந் தானே.  9.010.2

 

See Also : 

Related Content

Narration of the Beauty

அகோராஸ்த்ர மூர்த்தி

அமாவாசை சிறப்பு