இறைவர் திருப்பெயர்: கிருத்திவாகேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: அலங்காரவல்லி.
தல மரம்:
தீர்த்தம் : சூலதீர்த்தம்
வழிபட்டோர்:அஸ்திரதேவர்,
Sthala Puranam
கஜாசுரனை சிவபெருமான் வென்று,அவனது (யானைத்) தோலைப் போர்த்ததால் அவருக்குக் கிருத்திவாசர் என்ற பெயர் ஏற்பட்டது. இவரிடம் சூலதேவர் வரம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அஸ்திரதேவர் வழிபட்டு, திருவிழாக் காலங்களிலும், தீர்த்த வாரியிலும் தான் முதன்மையாக விளங்கத்தக்க வரத்தை இறைவனிடம் பெற்ற தலம்.
சப்தமங்கையரில் சூலமங்கை வழிபட்டதனால் சூலமங்கை என்றாயிற்று என்றும் சொல்லப்படுகின்றது.
தேவர்களுக்கு கஜ சம்ஹாரமூர்த்தியாக காட்சியளித்த தலம்
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நறையூரிற் சித்தீச் (6-70-10).
Specialities
ஊரின் பெயருக்கேற்றவாறு, வெளி வாயிலின் புறத்தில் - சூலம் தலைமீது ஏந்திய மங்கையொருத்தியின் உருவம் கைகளைக் கட்டிக் கொண்டு உள்ளது. ஊர்ப் பெயரும் சூலம் ஏந்திய மங்கை - சூலமங்கை என்றாயிருக்க வேண்டும்.
திருவிழாக்களில் முக்கிய அங்கம் வகிக்கும் அஸ்திர தேவர் இங்கு சிலாரூபத்தில் சுமார் 4 ½ அடி உயரத்தோடு நுழைவாயில் அருகில் காட்சி அளிக்கிறார். பின்னால் சூலம் பொலியக் கைகூப்பியவராகக் காட்சியளிக்கிறார் அஸ்திர தேவர்.
இங்கு கோஷ்டத்திலுள்ள தக்ஷிணாமூர்த்தி ஆலமரம் இல்லாமல் ஜடாமுடியுடன் தரிசனம் தருகிறார்.
தை அமாவாசையன்று வரும் சூலவிரதம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்து, மகாவிஷ்ணுவானவர் , காலநேமி என்ற அசுரனை வென்றார். பிரமன் தனது கடுமையான வயிற்றுவலி நீங்கப்பெற்றான்.சூல விரதம் மேற்கொள்வதால், எதிரிகளின் தொல்லைகளும், நோய்களும், வறுமையும், தோஷங்களும் நீங்கப்பெறலாம்.
தேவாரத் திருப்பதிகம் இத்தலத்திற்குக் கிடைக்காவிடினும், அப்பர் பெருமான் வாக்கில் இத்தலப்பெயர் எடுத்தாளப்பட்டுள்ளதால், இதனைத் தேவார வைப்புத்தலம் என்பர்.
சூல விரத சிறப்பு பூஜை
நாள் : 31-01-2022 திங்கட்கிழமை
சிறப்பு அபிஷேகம் : காலை 08.00 மணிமுதல் 10.00 மணிக்குள்
அருள்மிகு ஸ்ரீகிருத்திவாசேஸ்வரர் திருக்கோயில் சூலமங்கலம்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
சகல விதமான சௌபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல விரதம். இச்சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும்போது, அதாவது தை அமாவாசைத் தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.
அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் தியானித்து-வழிபட்டு, வெளியே சென்று, சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய சிவபெருமானின் விக்ரகத்திற்கு அபிஷேகித்து நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு மத்தியான வேளையில் திருநீறு, உருத்திராக்க மாலைகளைத் தரித்த சிவபக்தர்களுக்குத் தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறு தான-தர்மங்களை செய்ய வேண்டும். அதன்பின் சிவாலயத்திற்குச் சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து, திருக்கோயிலுக்கு தம்மால் முடிந்த காணிக்கைகளையும் கொடுத்து, இறைவனை வழிபட வேண்டும். பிறகு சிவபக்தர்களுடன் அமர்ந்து ஒரே ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும்.
இப்படியாக இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் தங்களுடைய விரோதிகளை வென்று, தீராத கொடிய நோய்களிலிருந்தும் விடுபட்டு, தீர்க்காயுள், புத்திரச் செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களையெல்லாம் அடைந்து, சகல போக சௌபாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள்; முடிவில் சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். சகல பாவங்களையும் வேரோடு அழிக்கவல்ல இந்த சூல விரதத்தின் சிறப்பைப் பற்றி விளக்கும் இந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்களுக்கு மிருத்யுவின் (மரணத்தின்) பயமே இராது” என்று கந்தபுராணம் விளம்புகிறது.
தஞ்சாவூர் - கும்பகோணம் பேருந்துப் பாதையில் ஐயம்பேட்டை மாற்றுப்பாதையில் வந்து இரயில்வே நிலையச் சாலையில் திரும்பிச் சென்றால் வெகு சமீபத்தில் உள்ளது சூலமங்கலம் (சூலமங்கை) என்னும் இவ்வூர். ஸ்ரீஅலங்காரவல்லி சமேத ஸ்ரீகிருத்திவாசேஸ்வரர் திருக்கோயிலே சூலமங்கை என்பதாகும். சூலமங்கை என்னும் இக்கோயிலின் பெயரே இவ்வூரின் பெயராக வழங்கலாயிற்று; இஃது மருவி தற்போது சூலமங்கலம் என்று இவ்வூர் விளங்குகின்றது.
அஸ்திரதேவர் (சூலதேவர்) வழிபட்டு, திருவிழாக் காலங்களிலும், தீர்த்தவாரியிலும் தான் முதன்மையாக விளங்கத்தக்க வரத்தைப் பெற்ற தலமாகும். ஊரின் பெயருக்கேற்ப, கோயில் உள்வாயிலின் புறத்தில் சூலத்தை தலைமீது ஏந்தியவாறு சூலதேவர் உள்ளார். சப்த மங்கையரில் சூலமங்கை வழிபட்டதால் இத்தலம் சூலமங்கை என்றாயிற்று என்போரும் உளர். அப்பர் தம் திருவாக்கில் இடம்பெற்ற வைப்புத் தலமுமாகும் (6.70.10).
இத்தலத்தில் பல ஆண்டுகளாக நின்று போயிருந்த தீர்த்தவாரி விழாவானது, திருவருளின் துணை கொண்டு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து சூலவிரத நன்னாளில் ஊர்ப் பொதுமக்களின் ஆதரவுடன் நமது Shaivam.org தீர்த்தவாரி விழாவை நடத்தி வருகின்றது (கொரோனா என்கின்ற பெருந்தொற்று காரணமாக இவ்வாண்டு 2022 தீர்த்தவாரி விழாவானது நடைபெறவில்லை) சூல விரத சிறப்பு பூஜைகள் மட்டும் திருக்கோயிலில் நடைபெற உள்ளது. மேலும், இவ்விழா பற்றிய நிகழ்வுகளை அனைவரும் பயன்பெறும் வகையில் Shaivam.org Mobile App-லும் வெளியிடுகின்றது. அரசின் அறிவுறுத்தலின்படி முகக் கவசம் முதலிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீகிருத்திவாசேஸ்வரர் திருவருளுக்குப் பாத்திரராகும்படி வேண்டப்படுகின்றது.
- அரன்நாமமே சூழ்க வையகமும்துயர் தீர்கவே -
Contact Address