இறைவர் திருப்பெயர்: அமிர்தகலசநாதர், அமிர்தகலேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அமிர்தவல்லி.
தல மரம்:
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார்
Sthala Puranam
மக்கள் வழக்கில் சாக்கோட்டை என்ற பெயரில் வழங்குகிறது.
ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் பெற்றதாக தலவரலாறு சொல்லப்படுகிறது.
ஞானசம்பந்தர் தம் பதிகத்தில் இப்பகுதியில் சாக்கியர் (பௌத்தர்) வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளதால் 'சாக்கியர் கோட்டை' என்று பெயர் வழங்கி அதுவே பின்பு சாக்கோட்டையாக மாறி வழங்கிற்று என்பர்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. குரும்பைமுலை மலர்க்குழலி (7.16); பாடல்கள் : சேக்கிழார் - செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் (12.29.67) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
மக்கள் இக்கோயிலை "கோட்டைச் சிவன்கோயில்" என்று சொல்கின்றனர். ஒரு காலத்தில் கோயிலைச் சுற்றிக் கோட்டை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்று அதன் இடிபாடுகளே மேடாகக் காணப்படுகின்றன. கோயிலுக்கு வெளியிலும் உள்ளுமாக இரு அகழிகள் உள்ளன. இதனால் பண்டை நாளில் இது சோழ மன்னர்களின் முக்கிய இடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள சப்தமாதர் சிற்பங்கள் ஒரே கல்லில் புடைச்சிற்பமாகவுள்ளன; தரிசிக்கத்தக்கது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி - புதிய திருமேனி அதிசயமான அமைப்புடையது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராக்ஷ மாலையும், இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாகி விளங்குகின்றது.
லிங்கோற்பவர் - பச்சைக்கல்லால் ஆனது. இதன் பாதத்தில் திருமால் மகுடமணிந்த வராகமாகவும், மேலே அன்னமும் பக்கத்தில் திருமாலும், பிரமனும் (சுமார் 2 அடி உயரத்தில்) வணங்கி நிற்கின்றனர்.
இங்குள்ள அர்த்தநாரி வடிவமும், தபஸ்வியம்மன் வடிவமும் புடைப்புச் சிற்பங்களே.
இக்கோயில் இராசராசனுக்கு முன்பே கற்கோயிலாகக் கட்டப்பட்டது. எனினும் 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் குலோத்துங்க மன்னனாலும், மீண்டும் 16 (அ) 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்க மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
(இக்கோயில் கீழ்ப் பகுதியில் உள்ள மண்டபத் தூணில் உள்ள மனித வடிவம் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.)
Contact Address