இறைவர் திருப்பெயர்: மாகாளேச்வரர்.
இறைவியார் திருப்பெயர்: குயில்மொழிநாயகி, மதுரசுந்தரநாயகி
தல மரம்:
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
வழிபட்டோர்:மாகாளர், சம்பந்தர் - மண்டுகங்கை சடையிற், சேக்கிழார்
- சிவபெருமானிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து, தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் ஏற்பட்ட தோஷம் தீர அம்பாள், இத்தலத்தில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள்.
- மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறை, பூந்தோட்டத்திற்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் மேலும் இத்தலம் வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். மாகாளரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவனும் "மகாகாளநாதர்" என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயர் இரும்பை.
- குலோத்துங்க சோழன் ஆண்ட காலம்,'கடுவெளிச்சித்தர்" என்பவர் இங்குத் தவஞ்செய்து வந்தார், நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மன்னன் பஞ்சத்திற்கான காரணம் தெரிந்து அறிவிப்பவர்க்குப் பரிசு தருவதாக
அறிவித்தான். பழுத்த அரசு இலையினையே உணவாக உண்டு தவஞ்செய்து வந்த இச்சித்தரைக் கண்டு கேட்க அவ்வூரிலிருந்த வள்ளி என்னும் பெயருடைய தாசி எண்ணினாள். அவர் தவம் செய்யுமிடத்திற்கு
வந்தாள், தவத்திலிருந்த சித்தர் பழுப்பிலையை உண்ணக் கையை நீட்டியபோது அவள், அவர் கையில் உணவை இட்டாள், அதைப்பெற்று உண்டமையால் உணர்வு வர, சித்தர் கண் விழித்துப் பார்க்க, அவளும் நாட்டில் பஞ்சம் நீங்கிச் செழுமை உண்டாக அவரிடம் வேண்டினாள். அதன்பின் நாட்டில் நல்ல மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவபெருமானுக்கு திருவிழா எடுத்தனர். கோவில் திருவிழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். ஆடும்போது அவள் காற்சிலம்பொன்று அவிழ்ந்து விழ அதைக்கண்ட கடுவெளிச்சித்தர் அச்சிலம்பை அவள் காலிற் பூட்டிவிட, மக்கள் இதைக்கண்டு பரிகாசஞ் செய்தனர். மனமுதிர்ச்சியடையாத மக்கள் ஏளனஞ் செய்ததைக் கண்ட சித்தர் மனம் பொறாது, இறைவனை நோக்கிப் பாட, இறைவனின் திருமேனி மூன்று சில்லுகளாக (பிளவுகளாக) வெடித்தது. சிவலிங்கத் திருமேனி வெடித்ததறிந்து மக்கள் பயந்து திகைத்தனர். சித்தரின் திருவடிகளில் வீழ்ந்து தங்கள் பிழைபொறுக்க வேண்டினர். மனமிரங்கிய கடுவெளிச்சித்தர் மீண்டுமொரு பாடலைப் பாடினார். ஒட்டப்பாடியதும் வெடித்து விழுந்த 3 சில்லுகளுள் 2 சில்லுகள் வந்து பழையபடியே ஒட்டிக்கொண்டன. ஒன்றுமட்டும் வெளியேபோய் விழுந்தது. அச்சில்லு விழுந்த இடம் 'கழுவெளி' என்னும் பெயரில் சிறு கிராமமாகப் பக்கத்தில் உள்ளது. சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி அரசன் வழிபட்டான். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.
திருமுறைப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. மண்டுகங்கை சடையிற் (2.117);
பாடல்கள் : சேக்கிழார் - வக்கரைப் பெருமான் (12.28.964) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : பாண்டிச்சேரி
திண்டிவனம் - பாண்டிச்சேரி (NH-66-ல்) மார்க்கத்தில் கிளியனூர் வழியாக திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை அடைந்து அங்கிருந்து ஆலங்குப்பம் செல்லும் பாதையில் 2-கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.
தொடர்பு :
0413 - 2688943, 09843526601.