logo

|

Home >

hindu-hub >

temples

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் (அச்சரப்பாக்கம்) தல புராணம்

இறைவர் திருப்பெயர்: பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்.

இறைவியார் திருப்பெயர்: இளங்கிளியம்மை, சுந்தரநாயகி, பாலசுகாம்பிகை, அதிசுந்தரமின்னாள்.

தல மரம்:

தீர்த்தம் : வேத தீர்த்தம், சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம்.

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சேக்கிழார் , கௌதமர், கண்வர், முதலியோர்.

Sthala Puranam

achiruppakkam temple
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் 
  • திரிபுரம் எரிக்கச் சிவபெருமான் புறப்பட்டபோது தேவர்கள் எல்லாம் அவருக்குத் தேராக - தேரில் உள்ள பொருட்களாக வந்தனர். தாங்கள் தான் சிவபெருமானைத் தாங்கப் போகிறோம் என்ற செருக்குடன் இருந்தனர். அதனை உணர்ந்த சிவபெருமான் தனது திருவடியை தேரின் மீது வைத்த உடன் அதனைக் கூடத் தாங்க இயலாமல் அச்சு முறிந்தது. தேவர்கள் தம் பிழையை உணர்ந்தனர். இடர் களையும் கணபதியிடம் வேண்ட அவர் திருவருளால் தேர் சீரானது. திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு + இறு + பாக்கம்) ஆதலின் இப்பெயர் பெற்றது. இறைவன் இத்தலத்தில் விநாயகருக்கு அருள் புரிந்து, தொடர்ந்து சென்று திருவதிகையில் அசுரரை (திரிபுராதிகளை) வென்றதாக வரலாறு.
  • கௌதமர், கண்வர் முதலியோர் வழிபட்ட தலம். 
  • முன்பொருமுறை இவ்வூர் வழியே சென்ற பாண்டிய மன்னன் ஒருவன் காட்டு முல்லைக் கொடிகள் சூழ்ந்த காட்டைக் கண்டான். பொன்நிறமான உடும்பு ஒன்று ஓடுவது கண்டு அவன் துரத்திச் செல்ல அது ஓடிச்சென்று சரக்கொன்றை மரத்தின் பொந்தில் புகுந்து கொண்டது. அரசன் ஆணைப்படி ஏவலர்கள் அம்மரத்தை வெட்ட- குருதி வெளிப்பட - சிவலிங்கம் வெளிப்பட்டது. வெட்டிய தழும்புப்பட்ட இறைவனுக்கு, அரசன் "திரிநேத்திரதாரி " என்னும் முனிவரிடம் செல்வத்தைத் தந்து கோயில் கட்டச் செய்தான். அவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரைக் கேட்க, அவர் அரசே! உம்மை ஆட்கொண்டவர் "உமையாட்சீஸ்வரர் "; எமையாட்கொண்டவர் "ஆட்சீஸ்வரர் " என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது. (உமையாட்சீஸ்வரர் சந்நிதி, வாயிலுக்கு நேரே உள் அடங்கி, பிராகாரத்தில் உள்ளது.)
  • நித்தசுதானந்த சுவாமிகள் என்பவரால் (1) ஆட்சீஸ்வரர் அருட்குறிமாலை (2) இளங்கிளியம்மை அருட்குறிமாலை (3) ஆட்சீஸ்வரர் அருளிரத்தமாலை (4) அருமருந்திரத்த மாலை என்னும் நூல்கள் பாடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்   -   1. பொன்றிரண் டன்ன புரிசடை (1.77); பாடல்கள்    :   அப்பர்      -      எச்சில் இளமர் (6.70.4);                 சேக்கிழார்    -      இன்புற்று அங்கு (12.28.1132) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

Specialities

achiruppakkam temple
  • மக்கள் வழக்கில் அச்சரப்பாக்கம் என்று வழங்குகிறது.
  • பிரமகபால மாலையுடன் பைரவர் காட்சித் தருகிறார்.
  • மூலவர் - ஆட்சீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி. தாழ அமைந்த சதுரமான ஆவுடையார். திருமேனி சொரசொரப்பாகவுள்ளது. 
  • பெருமானுக்கு முன்பு நாம் நின்று வழிபடுமிடத்தில் கீழே கிணறுள்ளதாம். கருங்கற்கள் போட்டு மூடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் கற்களின் இடுக்கு வழியாகப் பார்த்தால் நீர் இருப்பது நன்கு தெரியுமாம்.
  • கோஷ்ட மூர்த்த சோமாஸ்கந்தருக்குக் கீழே, நாகமொன்று சிவலிங்கத்தை வழிபடுவது, காரைக்காலம்மை தலையால் நடப்பது, கண்ணப்பர் கண்ணைப் பெயர்க்கும்போது இறைவனின் கைவெளிப்பட்டுத் தடுப்பது, ஒரு தலையுடன் இருமான்கள் போன்ற சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தளிப்பதுடன் மனத்திற்கும் அமைதியைத் தருகின்றனவாக உள்ளன.
  • வெளிப்பிராகாரத்தில் தலமரமாகிய சரக்கொன்றை உள்ளது. 
    இம்மரத்தினடியில் சிவலிங்கம், அம்பாள், எதிரில் நந்தி, பக்கவாட்டில் நின்று கைகுவித்து வணங்கும் 
    நிலையில் திரிநேத்திரதாரி முனிவரின் உருவம் முதலியவை உள்ளன. 
  • இறைவன், 'திரிநேத்திரதாரி" முனிவருக்குக் காட்சி தந்த நினைவாக இன்றும் பெருவிழாவில் 
    ஏழாம் நாள் மாலை கொன்றையடி சேவை விழா நடைபெறுகின்றது. சித்திரைத் பெருவிழாவில் 11-ஆம் நாள் சுவாமி 'பெரும்பேறு கண்டிகை' கிராமத்திற்கு எழுந்தருளி, அகத்தியருக்குக் காட்சிதரும் ஐதீகம் நடைபெறுகிறது. 
  • கருவறைச் சுவரில் நிரம்பக் கல்வெட்டுக்கள் உள்ளன.
  • 'மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்துத் தென்பால் தனியூர் அச்சிறுபாக்கம்' என்பது கல்வெட்டுக் குறிப்பு.
  • இத்தலம் இராஜேந்திர சோழவளநாட்டைச் சேர்ந்ததாகக் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக் கூறுகிறது. இத்தலத்திறைவன் கல்வெட்டுக்களில் அச்சுக்கொண்டருளிய தேவர்(241 of 1901) என வழங்கப்படுகிறார்.
  • திரிபுவனசக்கரவர்த்தி கோனேரின்மை கண்டான் காலத்தில் ஆட்கொண்ட நாயகன் சேதிராயனால் ஒருசிலை தயாரிக்கப்பட்டது. இது இன்னார் சிலை என்று அறியக்கூட வில்லை.(235 of 1901) இராஜகேசரிவர்மன் குலோத்துங்கன் I 5ஆம் ஆண்டில் குலோத்துங்கன் உருவச்சிலை செய்து வைக்கப்பெற்றது.(247 of 1901) 
  • ஏனைய கல்வெட்டுக்கள் கோயிலுக்கு விளக்கிற்காக ஆடுகளும், பொன்னும், திருவமுதிற்காக நிலமும்விட்ட செய்தியை அறிவிப்பன, குலோத்துங்கசோழன் III ஆட்சி 12ஆம் ஆண்டில் பாண்டியநாட்டைக் கைக்கொண்டசேங்கணி அம்மையப்பன் வைரங்கள் வழங்கினான். (239 of 190) கங்கன் என்பவனால் அர்ச்சனாபோகமாக நிலம் அளிக்கப்பெற்றுள்ளது. (108 of 1934)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை அடுத்து இவ்வூர் உள்ளது. புகைவண்டி நிலையம். செங்கற்பட்டிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது. தொடர்பு : 044 - 27523019 09842309534.

Related Content

திருக்கச்சூர் (கச்சூர்) ஆலக்கோயில், மருந்தீசர் தல வரலாறு

திருஇடைச்சுரம் - (திருவடிசூலம்) ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் த

திருக்கழுக்குன்றம் திருக்கோயில் தல வரலாறு