இறைவர் திருப்பெயர்: | விருந்திட்டஈஸ்வரர், விருந்திட்டவரதர், கச்சபேஸ்வரர். (மருந்தீசர் கோயிலில் - மருந்தீசர்). |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | அஞ்சனாக்ஷியம்மை. (மருந்தீசர் கோயிலில் - அந்தகநிவாரணிஅம்பாள், இருள்நீக்கித்தயார்.) |
தல மரம்: | |
தீர்த்தம் : | கூர்ம (ஆமை) தீர்த்தம். |
வழிபட்டோர்: | சுந்தரர், அப்பர், சேக்கிழார், திருமால் முதலியோர் |
இங்குள்ள தியாகேசர் 'அமுதத் தியாகர் ' எனும் பெயருடையவர். அமுதம் திரண்டு வருவதற்காகத் திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து இறைவனை இத்தலத்தில் வழிபட்டதாக வரலாறு. இக்கோயில் ஆலக்கோயிலாகும்; ஆதலின் 'கச்சபவூர் ' என்னும் பெயர் நாளடைவில் மருவி மக்கள் வழக்கில் 'கச்சூர் ' என்றாயிற்று என்பர்.
சுந்தரர் திருக்கழுக்குன்றம் வழிபட்டுத் திருக்கச்சூரை அடைந்து பெருமானை - ஆலக்கோயில் அமுதனைத் தொழுது, மதிற்புறத்தே பசியுடன் அமர்ந்திருக்க; இறைவன் அந்தணர் வடிவில் வந்து, சுந்தரை அங்கேயே இருக்கச் செய்து; இவ்வூரிலுள்ள அடியார்கள் வீடுதோறும் சென்று, உணவு பெற்று வந்து, சுந்தரருக்கு இட்டு, அவர் பசியை போக்கினாராம். பசி நீங்கப் பெற்ற சுந்தரர், இறையருள் கருணையை வியந்து, 'முதுவாயோரி ' என்னும் பதிகம் பாடிப் போற்றினார்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. முதுவாய் ஓரி கதற (7.41); பாடல்கள் : அப்பர் - எச்சில் இளமர் (6.70.4); சேக்கிழார் - பாடிய அப்பதியின் (12.29.174 & 177) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
கோயிலுக்கு எதிரில் உள்ள பதினாறு கால் மண்டபத்தூண்களில் அநுமந்தசேவை, கூர்மாவதாரம், காளிங்க நர்த்தனம், கல்கி அவதாரம், துர்க்கை, ஆதிசேஷன், ஊர்த்த தாண்டவம், காளி முதலிய பல சிற்பங்களும், பக்க (தெற்கு) வாயில் முன்னால் மண்டபத் தூண் ஒன்றில் திருமால் ஆமை வடிவில் இறைவனை வழிபடும் சிற்பமும் உள்ளன.
மூலவர் சிவலிங்கத்திருமேனி; சுயம்பு மூர்த்தி - சிறிய பாணம்; கருவறை அகழி அமைப்புடையது.
சித்திரையில் நடைபெறும் பெருவிழாவில் 9-ம் நாளன்று இறைவன் சனகாதி முனிவர்களுக்கு அருளிய சின்முத்திரை உபதேச ஐதீகம் நடைபெறுகின்றது.
இக்கோயிலுள் (மருந்தீசர் கோயில்) சென்றதும் உள்ள சிறிய மண்டபத் தூண்களில் உள்ள சிற்பங்களில், இறைவன் அமுதுடன் சுந்தரை நோக்கியவாறு உள்ள சிற்பம் - கண்டு மகிழத்தக்கது.
இக்கோயிலில், படிகளில் இறங்கி நீர் அருந்தும் அமைப்புடைய 'நடைபாதைக் கிணறு ' உள்ளது.
இக்கோயில் மூலவர், உயர்ந்த திருமேனி - கோமுகம் மாறியுள்ளது.
கோஷ்டமூர்த்தமாகவுள்ள பிரம்மாவுக்கு எதிரே, "சண்டேஸ்வரர் நான்கு முகங்களுடன் (சதுர்முக சண்டேசுவரராக) காட்சித் தருகின்றார் ". இந்த அமைப்பு இக்கோயிலில் உள்ள ஓர் அரிய உருவ அமைப்பாகும்.
மாசி மாத திருவிழாவின் 9-ம் நாளில், இறைவன் பிச்சையெடுத்துச் சுந்தரருக்கு அமுதிட்ட ஐதீகம் நடைபெறுகிறது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னைக்குப் பக்கத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பேருந்து சாலையில் 1-1/2-கி. மீ. சென்று, "தியாகராஜபுரம் - திருக்கச்சூர்" என்று பெயர்ப்பலகையுள்ள இடத்தில் வலப்புறமாக பிரிந்து செல்லும் சாலையில் சென்று திருக்கச்சூரை அடையலாம். (ஊருள் சென்றதும் வலப்பால் திரும்பிச் சென்றால் [கச்சூர்] ஆலக்கோயிலையும் இடப்பால் சென்றால் மலையடிக் கோயிலான மருந்தீசர் கோயிலையும் அடையலாம்.) தொடர்பு : 044 - 27464325, 09381186389