logo

|

Home >

hindu-hub >

temples

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கொடையிடைநாயகி திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: லதாமத்யாம்பாள், கொடையிடைநாயகி, கொடியிடையம்மை.

தல மரம்:

தீர்த்தம் : கல்யாண தீர்த்தம். சுப்பிரமண்ய தீர்த்தம்

வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

vada_mullaivAyil temple
வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
  • இது தொண்டை நாட்டுத் தலம்; (வட) திருமுல்லைவாயில் ஆகும்; சோழநாட்டில் - தஞ்சை மாவட்டத்தில் (தென்) திருமுல்லைவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இத்தலம், கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், விளங்கி கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்ந்தது. தொண்டைமான் காஞ்சியிலிருந்து ஆண்டு வந்தான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான். புழல்கோட்டையிலிருந்து கொண்டு, ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள்; எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத்தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர். (இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அத்திருக்கோயிலே ஓணகாந்தன்தளி ஆகும்.) இவர்களைக் காணத் தொண்டைமான் வந்தான்; வரும் வழியில் 'கோழம்பேடு' என்னும் கிராமத்தில் தங்கி இரவு உறங்கும்போது வெங்கல மணியோசை சேட்டது. அங்குச் சிவத்தலம் இருக்கவேண்டும் என்றறிந்து, மன்னன் மறுநாள் காலை யானைமீதேறி வந்தான். அவன் வருவதைக் கண்ட அசுரர்களின் குறு நில மன்னன் ஒருவன் தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிக்கலானான். தனியே வந்த தொண்டைமான், போர் செய்வதற்குச் சேனைகளைக்கொண்டுவரத் திரும்பினான். அவ்வாறு திரும்பி இம்முல்லைப்புதர் வழியாக வரும்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக்கொள்ள, மன்னன் யானைமீதிருந்தவாறே தன் உடைவாளால் வெட்ட, ரத்தம் வெளிப்பட்டது. திகைத்த மன்னன் கீழிறங்கிப் பார்க்க அங்குச் சிவலிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டான். தன் பிழைக்கு வருந்தி, அவ்வாளால் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றான், அப்போது இறைவன் காட்சி தந்து, "மன்னனே! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை, நான் மாசு இல்லா மணியே! வருந்தற்க, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வெற்றிப் பெற்று வருவாயாக" என்று அருள்புரிந்தார். (இதனால்தான் இத்தலத்தில் நந்தி கிழக்கு நோக்கியுள்ளது என்கின்றனர்.) தொண்டைமான் (நந்தியம்பெருமானுடன்) வருவதையறிந்து, ஓணன், காந்தன் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்தூண்களே இன்றும் சுவாமி சந்நிதியின் முன்னால் உள்ளன. வெங்கலக்கதவம், பவழத்தூண்களும் திருவொற்றியூரில் வைக்கப்பட்டதாகவும் அவை காலப்போக்கில் வெள்ளத்தின் வாய்ப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சுந்தரர்    -    1. திருவுமெய்ப் பொருளுஞ் (7.69); பாடல்கள்      :  சேக்கிழார்  -        மங்கையர்க்கு (12.19.18) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்,                                         அங்கு நாதர் செய்அருளது ஆக (12.29.277) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

Specialities

  • தொண்டைமான் கட்டிய திருக்கோயில்; சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது.
  • நந்தி கிழக்கு நோக்கியுள்ளது. (தல வரலாறு காரணமாக)
  • பிரசன்ன விநாயகருக்குப் பின்னால் மதில்மீது தல வரலாற்றுச் சிற்பங்கள் சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.
  • மூலவர் அற்புதமான சுயம்பு மூர்த்தி; உயரமான லிங்கம். மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. வாளால் வெட்டுப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது; ஆவுடையாருக்கு மட்டும் தான். வருடத்திற்கொருமுறை - சித்திரை சதயத்தில் சந்தனக் காப்பு களையப்பட்டு மீண்டும் சார்த்தப்படுகிறது. அது அடுத்த சித்திரை சதயம் வரை அப்படியே சுவாமி மீது இருக்கும். சுவாமிக்கு, வெந்நீர் அபிஷேகம். அபிஷேக காலங்களில் மேன்மேலும் சந்தனம் சார்த்தப்படும்; ஆனால் களையப்படுவதில்லை. இதனால் சுவாமிமீது எப்போதும் சந்தனக் காப்பு இருந்து கொண்டே இருக்கும்.
  • சுவாமிக்கு முன்னால் இரு எருக்கந்தூண்கள் பூண்கள் இடப்பட்டு உள்ளன. (தொண்டைமான் அசுரர்களிடமிருந்து எடுத்து வந்தது.)
  • சுவாமிக்கு முன்பு வெளியில் ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலவை - இது பிற்காலத்தில் பிரதிஷ்டையானது) உள்ளது.
  • யானை மீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது -சிவலிங்கம் - தன் கழுத்தை 
    அரிவது- காட்சி தருவது,  சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.
  • இத்தலத்தில்தான் சிறப்புமிக்க வைஷ்ணவி ஆலயமும், பிரார்த்தனைக் கோயிலாகிய 'பச்சையம்மன் கோயிலும்' உள்ளன. இக்கோயில் தொடர்பாகச் சொல்லப்படும் செவிவழிச் செய்தியொன்று வருமாறு :- சென்னைப் பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை; சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை; இத்தலத்து கொடியிடை அம்மை - ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டவை என்றும்; வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது.
  • சுந்தரர், இத்தலத்துப் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் "அடியேன் படுதுயர்களையாய் பாசுபதா பரஞ்சுடரே " என்னும் தொடரை இறுதியில் வைத்துப் பாடுந்திறம் நெஞ்சை நெகிழ வைக்கவல்லன.
  • வைகாசி பிரமோற்சவம்
  • மாசி தெப்பத் திருவிழா
  • ஆனியில் வசந்தோற்சவம்
  • இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில், பரகேசரிவர்மன் உத்தமசோழன், முதலாம் இராசேந்திர சோழன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பாண்டியதேவன் காலத்திலும்; விஜயநகர வேந்தர்களில் ஹரிஹரராயர் II, இரண்டாம் தேவராயருடைய தம்பி பிரதாப தேவராயர், வீரப்பிரதாபபுக்க ராயர், வீரப்பிரதாப மல்லிகார்ச்சுன தேவமகாராயர் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி, பார்த்திவேந்திரவர்மன் காலத்திலும் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் உண்டு.
  • மழவரையர் மகளாரும், கண்டராதித்த பெருமாள் தேவியாரும், ஆகிய செம்பியன்மாதேவியார், புழற்கோட்டத்து அம்பத்தூர் நாட்டு அம்பத்தூர் ஊராரிடமிருந்து நிலம் வாங்கி, இத்திருமுல்லை வாயில் கோயிலுக்கு உத்தமசோழ தேவரின் பதினான்காம் ஆட்சியாண்டில் கொடுத்துள்ளனர். மண்டபத்துத் தூணில் உள்ள முதலாம் இராசேந்திரசோழ தேவன் கல்வெட்டு, அந்த மண்டபம் கட்டப் பட்டதைக் குறிப்பிடுகின்றது. வட திருமுல்லைவாயில் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துக் கானப்பேரூர் நாட்டுக்கு உட்பட்டிருந்தது என்பதை ஜடாவர்மன் சுந்தரபாண்டிய தேவனின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. அம் மன்னனது 18ஆம் ஆண்டுக் கல்வெட்டு புழற்கோட்டம் விக்கிரம சோழவளநாடு என்னும் பெயர் எய்தியதைப் புலப்படுத்துகின்றது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னை - ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் உள்ளது. பூந்தமல்லியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயிலை அடைந்து 1-கி. மீ. சென்று கோயிலை அடையலாம். மெட்ரோ ட்ரெயின் மார்க்கமும் உள்ளது. தொடர்பு : 044 - 26376151

Related Content

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடைநாயகி திருக்கோயில் தல

திருவலிதாயம் பாடி வல்லீஸ்வரர் ஸ்தலபுராணம் (சென்னை)

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு

திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தல புராணம்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தல வரலாறு