இறைவர் திருப்பெயர்: பிரமபுரீஸ்வரர், பிரமபுரிநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பூங்குழல்நாயகி, சுகந்தகுந்தளாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : பிரம தீர்த்தம், அரிசிலாறு, அன்னமாம் பொய்கை, இந்திர தீர்த்தம், சூல தீர்த்தம்
வழிபட்டோர்: சம்பந்தர்,பிரமன்.
Sthala Puranam
திருக்கோயிலின் உள்ளே "அன்னமாம் பொய்கை" என்று வழங்கப்படும் கிணறு உள்ளது; பிரமன் இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடி, கிணற்றருகே உள்ள சிவலிங்க மூர்த்தியை வழிபட்டு அன்ன வடிவம் பெற்ற சாபம் நீங்கப் பெற்றான் என்பது தலவரலாறு.
சிவ புராணங்களைக் கேட்பதில் பெரிதும் விருப்பம் கொண்ட நைமிசாரண்ய முனிவர்கள் , எல்லாப் பெருமைகளையும் உடையதும், முக்தி தருவதுமான தலம் ஒன்றின் பெருமையைக் கூறுமாறு சூத முனிவரிடம் கேட்க, மிக்க மகிழ்ச்சியடைந்த சூதர், கைகளைச் சிரத்தின் மீது கூப்பி, ஆனந்தக் கண்ணீர் பெருகியவராக பிரமபுரி எனப்படும் அம்பர் தலத்தின் பெருமைகளைக் கூறலானார்.
இத்தலத்தின் பெருமையை சிவபெருமான் மட்டுமே கூற வல்லவர். வேண்டுவோர் வேண்டுவன யாவற்றையும் அளிக்கும் இத்தலம், கற்பக விருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும் ஒத்தது. இங்கு சிறிது நேரம் தங்கினாலும் காசியில் தங்கி தருமங்கள் செய்வதற்கு நிகராகும். இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் சிவலோகப் பதவி பெறுவது நிச்சயம். இதன் அருகில் ஓடும் அரிசிலாறு காவிரியே. அதிலும், கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையிலும் நீராடினால் பெறும் பயன் அளவிடற்கரியது. நீராடுவோர் கொடிய பாவங்களில் இருந்து நீங்கப்பெறுவர்.
பிரமன் அருள் பெற்றது: ஒரு சமயம் பிரமனும் திருமாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று நீண்ட காலம் போரிட்டுக் கொண்டபின்னர் அப்போர் முடிவுபெறா ததால், நான்கு வேதங்களையும், காயத்ரி மந்திரத்தையும், பிரணவ மந்திரத்தையும் நேரில் வரவழைத்து முடிவு கூறுமாறு கேட்டனர். அத்தேவதைகள் ஒருமித்தவர்களாகப் பரமசிவனே பிரமம் என்று திடமாகக் கூறியும், பிரமனும் மாலும் அதனைக் கேளாது மீண்டும் போர் புரியத் துவங்கினர். அப்போது அவ்விருவரிடையே முதலும் முடிவும் அறியமாட்டாத சோதி வடிவாகச் சிவபெருமான் தோன்றினான். அச்சோதியின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என இறைவன் கூறவே, திருமால் வராக வடிவெடுத்து திருவடியைக் காண்பதற்காக நிலத்தை அகழ்ந்து பாதாளம் வரை சென்றும் முடியாதுபோகவே இறைவனைத் தொழுது, " நீயே பரம்" எனக் கூற, பிரமன் அன்னப்பறவை வடிவில் முடி காணச் சென்றான். அது முடியாது போகவே, இறைவனது முடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சி சொல்லுமாறு கூறி விட்டுத் தான் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தான். அன்னப்பறவை வடிவிலேயே இருப்பாயாக என்று பிரமனைப் பெருமான் சபித்து விட்டு, இனித் தாழம்பூவை சிவபூஜைக்கு உதவாதவாறும் சபித்தான்.
பிழையை உணர்ந்த பிரமன்,அன்னவடிவம் நீங்குவதற்காகக் காவிரியின் தேகரையிலுள்ள புன்னாக வனத்தை அடைந்து கடும் தவம் மேற்கொண்டான். அத்தவத்தால் ஏற்பட்ட புகையும் அனலும் யாவரையும் வாட்டியது. திருமாலின் வேண்டுகோளுக்கு இரங்கிய கயிலாயநாதன், பிரமனுக்குக் காட்சி அளித்து, அவன் வேண்டியபடியே, அண்ணா உருவம் நீங்கிப் பழைய வடிவு பெறுமாறும், கயிலையின் ஒரு கூரான இக்கிரி , பிரம கிரி எனப் பெயர்பெருமாறும் , அங்கு காட்சி அளிக்கும் இறைவன் பிரமபுரீசுவரர் என வழங்கப்படுமாறும், தவம் செய்த பொய்கை, " அன்னமாம் பொய்கை" எனப்படுமாறும், அருள் பெற்ற மாசி மகத்தன்று அதில் நீராடுவோர் தேவ பதவி பெறுவர் என்றும் பல வரங்களை அளித்தருளினான்.
காளி வழிபட்டது: துர்வாச முனிவருக்கும் மதலோலா என்ற தேவ கன்னிகைக்கும் பிறந்த அம்பன்,அம்பரன் என்ற அசுரர்கள் புன்னாக வனத்தை அடைந்து தவம் செய்து யாவரையும் வெல்லும் ஆற்றலை வரமாகப் பெற்றனர். ஊரின் பெயரும் அம்பர் என்றாயிற்று. யாவரையும் அடிமையாகக் கொண்டு அகந்தையுடன் திரிந்த இருவரையும் கண்டு தேவர்களும் அஞ்சினர். அனைவரையும் காத்தருளுமாறு திருமால் முதலிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்போது பெருமான் தனது இடப்பாகத்திளிருந்த அம்பிகையை நோக்கிச் சிறிது முறுவல் செய்யவே, குறிப்புணர்ந்த தேவியானவள் காளியை அங்கு வருமாறு பணித்தாள். அக்கணமே அங்கு தோன்றி, அடிபணிந்த காளியை நோக்கி அவ்விரு அசுரர்களையும் அழித்து வருமாறு கட்டளை இட்டாள். அழகிய கன்னிகை வடிவத்துடன் காளியும், வயோதிக மறையோனாகத் திருமாலும் அங்கிருந்து புறப்பட்டு, அசுரைகளது அரண்மனையை அடைந்தனர்.
கன்னிகையின் அழகில் மயங்கிய இருவரும் தாம் அவளை மணக்க இருப்பதாகக் கூறியதும் முதியவராக வந்த திருமால், உங்களிருவரில் யார் வலிமையானவரோ அவரை என் பெண் மணப்பாள் என்றார். உடனே இரு சகோதரர்களுக்குமிடையில் ஏற்பட்ட போரில் அம்பன் கொல்லப்பட்டான். இனித் தானே அக்கன்னிகையை மணப்பெண் எனக் கருதி,அவளிடம் சென்ரான் அம்பரன். அப்போது அக்கன்னி ,அனைவரும் அஞ்சும் வண்ணம் பேருருவம் கொண்டு, அவனது மார்பில் உதைத்தாள். காளியானவள் அவனது குடலை மாலையாகப் பூண்டு அனைவரது துயரத்தையும் அகற்றி அருளினாள். விண்ணோரும் மண்ணோரும் அவளைத் துதித்தனர். அவ்வாறு அம்பரனை மாய்த்த இடம் அம்பகரத்தூர் எனப் பட்டது. அசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதர்காகக் காளி, அம்பர் மாகாளத்தில் சிவபெருமானைப் பூசித்து அருள் பெற்றாள்.
சம்கார சீலனை அழித்தது:புலத்திய முனிவர் வம்சத்தில் தோன்றிய சம்கார சீலன் என்பவன் பிரமனைக் குறித்துத் தவம் செய்து யாவரையும் வெல்லும் வரம் பெற்றான். இந்திரனையும் பிற தேவர்களையும் வென்றான். அதனால் கலங்கிய இந்திரனைப் பார்த்துப் பிரமதேவன், " நீ புன்னாக வன ஈசனை நோக்கித் தவம் செய்தால் அப்பெருமான் பைரவ மூர்த்தியைக் கொண்டு அந்த அசுரனை அழித்தருளுவார்" எனக் கூறினார்.அவ்வாறே தவம் செய்து கொண்டிருந்த இந்திரனைத் தேடி அசுரன் அம்பருக்கும் வந்து விடவே, இறைவன் கால பைரவரை அனுப்பி அவ்வசுரனை மாய்வித்தருளினார்.
விமலன் அருள் பெற்றது: காசியைச் சேர்ந்த விமலன் என்ற அந்தணன் தன் மனைவியோடும் பல தலங்களை வணங்கி விட்டு அம்பரை வந்தடைந்து, பெருமானையும் அம்பிகையையும் பல்லாண்டுகள் வழிபட்டுப் பணி செய்து வந்தான். இறைவன் அவன் முன்னர் காட்சி அளித்து அவன் வேண்டிய வரங்களைத் தந்து,அன்னமாம் பொய்கையில் கங்கையை வச்சிரத் தூண் போல் எழுமாறு செய்யவே, விமலனும் தன் துணைவியுடன் அதில் நீராடி மகிழ்ந்தான். மாதேவன் என்ற என்ற மகனைப் பெற்றுப் பின்னர் இறைவனடி சேர்ந்தான். மாதேவனும் தந்தையைப் போலவே அத்தலத்து ஈசனுக்குப் பணிகள் பல செய்து நிறைவாகச் சிவலோக பதவி பெற்றான்.
மன்மதன் வழிபட்டது: தேவலோக மாதர்களால் தனது தவம் வீணானதால் மன்மதன் மீது சினந்த விசுவாமித்திரர் இனி அவனது பாணங்கள் எவரிடமும் பலிக்காமல் போகக் கடவது என்று சபித்தார். அதனால் வருந்திய மன்மதன், பிரமனது சொற்படி புன்னாக வனத்திற்கு வந்து பிரமபுரீசனைப் பன்னாள் வழிபாட்டு சாபம் நீங்கப்பெற்றான்.
நந்தன் பிரமஹத்தி நீங்கியது: காம்போஜ தேச அரசனான நந்தன் என்பவன் ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது புலித் தோலால் தன உடலை மறைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த பிங்கலாக்கன் என்ற முனிவரைப் புலி என்று எண்ணி அம்பி எய்தான். அவ்வம்பினால் முனிவன் அக்கணமே மாண்டான். அரசனைப் பிரமஹத்தி பற்றியது. அப்பழி தீர வேண்டிப் பல தலங்களுக்கும் யாத்திரை செய்தான். அப்படியும் அது அவனை நீங்கவில்லை. அம்பர் எல்லைக்கு வந்தபோது பிரமஹத்தி அவனைப் பின் தொடர அஞ்சி ஊர்ப் புறத்திலேயே நின்றுவிட்டது. அங்கிருந்த முனிவர்கள் சொற்படி பிரப்ரீசுவரர் கோயிலுக்குச் சென்று பெருமானைத் தரிசித்துத் தனது பழி தீர்த்தருளுமாறு வேண்டினான். அத்தலத்திலேயே தங்கி, கோயிலைத் திருப்பணி செய்வித்தான். பிரமஹத்தி அவனை விட்டு நீங்கியது. இறைவனது திருவருள் பெற்ற அரசன் மீண்டும் தன்னாட்டிற்குச் சென்றான். பின்னர் உத்தமன் என்ற தனது மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டு மீண்டும் அம்பரை வந்தடைந்து பணிகள் பல செய்தான். கயிலாயநாதர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்றையும் ஸ்தாபித்து ஆலயம் அமைத்தான்.
அப்போது கடும் பஞ்சம் ஏற்பட்டு எல்லா உயிர்களும் வருத்தமுறவே, தன் கையிலுள்ள எல்லாப் பொருள்களையும் அளித்துப் பசிப்பிணி தீர்த்து வந்தான். கைப்பொருள்கள் முற்றும் செலவானதும் பெருமானது சன்னதியை அடைந்து, உயிர்கள் வருந்துவதைக் கண்ட பின்னரும் தான் வாழ்வதை விரும்பவில்லை என்றும் பெருமானே வழி காட்ட வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அவனுக்கு இரங்கிய பெருமான் விநாயகப் பெருமான் மூலம் நாள்தோறும் படிக்காசு பெறச் செய்து பஞ்சம் தீர்த்தருளினான். சின்னாட்களில் பஞ்சம் தீர்ந்து உயிர்கள் மகிழ்ச்சியுற்றன. திருவருளைக் கண்டு வியந்த மன்னனும் பெருமானது மலரடிகளை வழுவாது வழிபட்டுப் பேரின்பமுற்றான்.
சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த மறையவர். பெருமானது மலரடிகளை மறவாதவர். திருவாரூர் சென்று தம்பிரான் தோழரான சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதற்கு உடன்பட்ட சுந்தரர், கூப்பிட்ட நாளன்று மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும் நீச வடிவம் கொண்டு கணபதியும் கந்தனும் நீச உருவில் உடன் வர யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் யாகம் வீணானது எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார்.
திருமுறைப் பாடல் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. எரிதர அனல்கையில் (3.19);
பாடல்கள் : சேக்கிழார் - பொருவு இலாத (12.28.532) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
அவதாரத் தலம் : அம்பல் / அம்பர். வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : திருவாரூர். குருபூசை நாள் : வைகாசி - ஆயில்யம்.
Contact Address