logo

|

Home >

hindu-hub >

temples

திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)

இறைவர் திருப்பெயர்: ரத்னகீரீசர், அரதனாசலேஸ்வரர், மாணிக்கஈசர், முடித்தழும்பர்.

இறைவியார் திருப்பெயர்: சுரும்பார்குழலி.

தல மரம்:

தீர்த்தம் : காவிரி.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், முதலியோர்.

Sthala Puranam

 

Vatpokki temple

  • இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது.

     

  • மாணிக்கம் வேண்டிவந்த ஆரிய மன்னன் ஒருவனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நிரால் நிரப்பச் சொன்னார், அது எப்படியும் நிரம்பால் இருக்கக் கண்டு, கோபங் கொண்ட அரசன், உடைவாளை ஓச்ச, இறைவனும் மாணிக்கத்தைத் தந்து அருளினார். மனம் திருந்திய அரசன் அதை விரும்பாது, சிவப்பணி செய்து முக்தி பெற்றான் என்பது வரலாறு. அம்மன்னன் வெட்டியதால் சுவாமிக்கு முடித்தழும்பர் என்றும் பெயர் பெறலாயிற்று. இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டப்பட்ட வடுவைக் காணலாம்.

     

  • இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம் எரிந்து போனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது செவிவழிச்செய்தி. "காகம் அணுகாமலை" என்பர். "காகம் மேவுறில் கடுந்தழல் வீசிடும் பரம்பு " என்பது நாகைக் காரோணப் புராணத் தொடர்.

     

  • அருகில் உள்ள கடம்பர் கோயில், வாட்போக்கி, ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் முறையே காலை, நண்பகல், அந்தியில் தரிசித்தல் சிறப்பு என்பது மரபு.

  • ஒரு சமயம், நைமிசாரண்யத்தில் தவத்தில் சிறந்த முனிவர்கள் சிவபெருமானைக் குறித்துத் தியானித்துக் கொண்டு இருக்கும்போது  தவசிரேஷ்டராகிய சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய முனிவர்கள், " முனிவர் பெருமானே, தாங்கள் இங்கு எழுந்தருளிய போதெல்லாம் பல ஸ்தலங்களின் வரலாறுகளைக் கூறி அருளினீர்கள். ஒரு காலத்தில் ஆதி சேஷனுக்கும் வாயுவுக்கும் நிகழ்ந்த போரில் மேரு மலையின் சிகரங்கள் பலவிடங்களில் வீழ்ததாகக் கூறினீர்கள். அவ்வாறு அவை வீழ்ந்த இடங்கள் என்ன என்பதையும் அவற்றின் சிறப்பையும் எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் " என்று பிரார்த்தித்தார்கள். இதைக் கேட்டு மகிழ்ந்த சூத முனிவர், " யாராலும் சொல்ல முடியாத பெருமையை உடைய அத்தலங்களைப் பற்றி யான் அறிந்த வரை உங்களுக்குச் சொல்கிறேன் " என்றார். 

    " பாண்டிய நாட்டில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அகஸ்தியரால் வழிபடப்பெற்ற நீலாசலம் என்ற தலம் உள்ளது. அங்கு வில்வ மர  நீழலில் எழுந்தருளியிருக்கும் பரமேசுவரனுக்கு ஈசான திசையில் ஓர் மலை இருக்கிறது.  காவிரியின் மேற்கரையில் பூமிக்குள் ஒரு பாகம் அழுந்தியபடி சுவேதாசலம் என்ற மலை உள்ளது. அங்கு தேவ தீர்த்தமும் வன்னி வ்ருக்ஷமும் உள்ளன. இங்கிருந்து மூன்று யோசனை தொலைவில் காவிரியின் தென்புறத்தில் இரத்தின கிரி என்ற மலை உள்ளது. அங்கு மகிமை வாய்ந்த வேப்ப விருக்ஷமும் உள்ளது. தேவேந்திரனுக்கு  சாபம் நிவர்த்தி ஆன தலம் அது. மேலும் காவிரியின் வடகரையில் புளிய விருக்ஷத்தொடு கூடிய மரகதாசலம் என்ற மலையும் இருக்கிறது. இவையன்றிக் கந்த நதிக் கரையில் குண்டிகாசலத்தில் வன்னிகர்ப்பம் என்ற ஸ்தலம் இருக்கிறது. இவற்றுள் இப்போது உங்களுக்கு,  நினைத்த மாத்திரத்தில் எல்லாப் பாவங்களையும் நீக்கும் இரத்தினாசலத்தின் பெருமைகளை ஒருவாறு சொல்கிறேன் " என்றார். 

    " இரத்தினகிரீசுவரரைத் தரிசித்த அளவில் எல்லாப் பாவங்களும் விலகும்.இம்மலை பூமியில் விழுந்த வேகத்தால் தரைக்கு உள்ளே ஒரு பாகம் அமிழ்ந்து இருக்கிறது.இது பதிராறு யோசனை உயரமும் மூன்று யோசனை அகலமும் கொண்டது. இங்கு மகிமை வாய்ந்த தேவ தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் உள்ளன. இரத்தின லிங்கம் உமா தேவியால் பூஜிக்கப்பட்டது. இங்கு எட்டு தீர்த்தங்கள் உள்ளன. மலை உச்சியில் தேவ தீர்த்தம் உள்ளது. என் போன்றவர்களால் அதன் பெருமை சொல்லுவது மிகக் கடினம். முனிவர்கள் பலர் இங்குக் கடும் தம் செய்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாக்ஷரமே இம்மலை வடிவு என்பார்கள். வேதப் பொருளாய் விளங்கும் பரமன் இங்கு வீற்றிருக்கிறான். பல்வேறு பிறவிகளிலும் புண்ணியம் செய்தோருக்கே இத்தலத்தின் காட்சி கிடைக்கும் என்பது உண்மை. முறைப்படி தேவ தீர்த்தமாடி, மலைக் கொழுந்தாய்  எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும் சுரும்பார் குழலி அம்பிகையையும் வணகித் தொழுது விட்டு அங்குள்ள வேப்ப விருக்ஷத்தடியில் பஞ்சாக்ஷரஜபம் செய்தால் எல்லாத் தீங்குகளும் நீங்கும். வறுமை, கொடிய நோய்கள் ஆகியவை நீங்கும். ஞானமும் சித்தியும் கைகூடும். " 

  • இந்திரன் வழிபட்டது: அகலிகையை விரும்பிய பாவம் தீர, வியாழ பகவானின் அறிவுரைப்படி, இந்திரன் இரத்தினாசலத்தை அடைந்துதேவியின் சன்னதியில் வேப்ப மர பிரதிஷ்டை செய்தான். மலை உச்சியில்,தனது வஜ்ஜிராயுதத்தால் ஒரு தீர்த்தமும் உண்டாக்கிதினமும் காலையில் திரியம்பக மந்திரத்தை உச்சரித்து அதில் நீராடி, சுவாமிக்கும் அம்பிகைக்கும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த மணம் மிக்க மலர்களால் அர்ச்சித்து வணங்கினான். தான் ஸ்தாபித்த தீர்த்தத்தின் அருகிலுள்ள குகையில் அமர்ந்து பஞ்சாக்ஷர ஜபம் செய்து வந்தான். இதனால் அவனது பாவம் நீங்கிற்று. இந்திரனது பூஜையால் மகிழ்ந்த பரமசிவனும், தேவர்கள் சூழ முடியில் சந்திரனைத் தரித்தவராகவும், வெண்ணீறு அணிந்தவராகவும் அம்பிகையோடு ரிஷப வாகனத்தில் எழுந்தருளி  அவனுக்குக் காட்சி அளித்தார். ரத்தினகிரியில் தவம் செய்வோர் அனைவருக்கும் இஷ்ட சித்திகள் நிறைவேறும் என்ற வரத்தையும் அளித்தருளினார். அப்போது இந்திரன் சுவாமியைத் தோத்திரம் செய்தான். அத்தோத்திரத்தை சிவபூஜை முடிவில் படிப்பவர்கள் அஷ்ட ஐசுவர்யங்களையும் பெறுவர். எவ்வித நோய்க்கும் ஆளாக மாட்டார்கள். அரசனாக இருந்தால் போரில் வெற்றி கிட்டும். பக்தர்களுக்கு முக்தி கிடைக்கும். சந்தேகமே  வேண்டாம் என்று சுவாமியே திருவாய் மலர்ந்து அருளினார். 

    "தக்ஷிணாயணம்.உத்தராயணம் , விஷு , சூரிய-சந்திர கிரகணம் அமாவாசை, சோமவாரம், ஜன்ம நக்ஷத்திரம், ஸ்ராத்த தினம் ஆகிய புண்ணிய காலங்களில் தேவ தீர்த்தத்தில்  ஆயாகி என்னும் மந்திரத்தை மும்முறை உச்சரித்து நீராடி விட்டு, வேம்புக்கு அபிஷேகம் செய்து,சுவாமி அம்பாளைத்   தரிசித்து விட்டு, அந்தணர்களுக்குத் தானம் செய்தால் கயா  ஸ்ராத்த பலனைப் பெறலாம். வேம்பினடியில் கன்னிகா தானம் செய்தால் சிவலோகம் சித்திக்கும். 

    இரத்தினாசலத்தைச் சுற்றி உள்ள ஐந்து குரோச இடத்திற்குள் அந்தணர்க்கு வீடும் விளைநிலங்களும் தானம் செய்யும் அரசன் சிவரூபம் பெறுவான். ஒரு மாத காலம் இங்குத் தங்கி, தேவ தீர்த்தத்தில் நீராடி, வேம்பைப் பூஜித்தால், குஷ்டம், வாதம் குன்மம் போன்ற கொடு நோய்கள் விலகி விடும். தானே உதிர்ந்த வேம்பின் இலைகளைப் புசித்தால் குருடர்கள் கண் பெறுவர். செவிடர்கள்  கேட்கும் திறனையும், ஊமைகள் பேசும் வன்மையையும் பேச்சு திக்குபவர்களுக்குப் பேச்சும், நல்ல கல்வியும் அங்கக்  குறைவு உள்ளவர்களுக்கு அழகிய சரீரமும் பிள்ளை இல்லாதோருக்குப்   புத்திர பாக்கியமும் வாய்க்கும் . வேம்பின் பெருமையை சிவசன்னதியில் படிப்போர் முக்தி வரம் பெறுவர்." 

  • வாயு வழிபட்டது: நைமிசாரண்ய முனிவர்கள் கேட்குமாறு சூத மாமுனிவர் கூறலுற்றார்: "  முன்னாளில் வாயு பகவான் தன் வலிமையால் மேரு மலைச் சிகரங்களைப் பிடுங்கிய குற்றம் நீங்குவதற்காக இரத்தின கிரியை அடைந்து, தன் பெயரினால் ஒரு தீர்த்தம் அமைத்து, நாள் தோறும், மல்லிகை, ஜாதி, மகிழ்,குருந்தம், குவளை, ஆகிய புஷ்பங்களாலும், சண்பகம்,வில்வம் ஆகியவற்றாலும் இரத்தினகிரீசுவரருக்கு அர்ச்சனைகள் செய்து வந்தான்.  " தபோவாய "  என்று தொடங்கும் மந்திரத்தை உச்சரித்தபடி வாயு தீர்த்தத்தில் நீராடி, சிவபிரானையும், தேவியையும் வழிபட்டு வந்தான். அவ்வாறு வழிபட்டது துலா மாத பௌர்ணமி தினமாகும். ஒருநாள் பூஜை முடிவில் கைகளைச்  சிரத்தின் மீது கூப்பியவாறு, ஆனந்தக்கண்ணீர் மல்க, " தேவேச சம்போ, கங்காதரா,சங்கரா, தேவரீரது திருவடிகளை ஒருபோதும் மறவேன். வேதப்பொருளே, க்ஷேத்ரங்களுக்கு அதிபதீ , எனது பிழை பொறுத்து நற்கதி தர வேண்டும் " என்று பிரார்த்தித்தான். அவனது பக்திக்கு இரங்கிய பெருமானும் உமாதேவியுடன் காட்சி அளித்து, வாயு தேவன் உலகெங்கும் வியாபித்து, ஒவ்வொரு சரீரத்திலும் பிராணன்,அபானன், வியானன், உதானன், சமானன், நாகன்,கூர்மன், கிருகரன், தேவதத்தன் ,தனஞ்சயன் என்ற பத்துப் பெயர்களோடு இருக்குமாறு அருள் பாலித்தார். ஐப்பசிப் பூரணையில் வாயு தீர்த்தத்தில் நீராடுவோர் பாவங்கள் யாவும் நீங்கப்பெற்று நற்கதி பெறுவர். எனவும் வரமளித்தருளினார். 

  • ஆதிசேஷன் வழிபட்டது: வாயு பகவான் பழி நீங்கப்பெற்ற வரலாற்றை நாரத முனிவர் மூலம் அறிந்த ஆதிசேஷன், தானும் மேருவை அசைத்த குற்றத்தில் ஈடுபட்ட பாவம் நீங்குமாறு, பூலோகத்தை அடைந்து, மேற்குக் கடலோரம் உள்ள கோகரணம், சங்குகரணம், பிரபாசம்,அனந்த சயிலம், சோமேசுவரம் , கபிலேசுவரம் ,கேரள நாட்டைச் சார்ந்த சகிய மலை,ஸ்ரீ கண்டம், வில்வாரண்யம், தர்மேசுவரம், வியாசாசிரமம்,சுசீந்திரம் , அவினாசி,பவானி கூடல், வராகி கூடல், சுவேதாசலம், கருவூர், வாலீசுவரம் , அகஸ்தீசுவரம், திருவையாறு, அறப்பளீசுவரம், அனலேசுவரம், ஈங்கோய் மலை, கதம்ப வனம், சங்கராசலம் ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர்  இரத்தினகிரியை அடைந்து அங்கு தவம் செய்து கொண்டிருந்த வியாசர்,அத்திரி, பாரத்துவாஜர், ஜமதக்கினி, காத்தியாயனர், அதிசிருங்கர், மயூரமுகர், ஆகிய முனிவர்களை வணங்கி, குங்கிலிய மரம் ஸ்தாபித்து அதனருகில் தன பெயரால் ஒரு தடாகத்தையும்  ஏற்படுத்தி, " நமோஸ்து ஸர்பேப்யோ " எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்து, தீர்த்தத்தின் நடுவில் சங்கநிதி முதலாகிய நதிகளை ஆவாகித்து,  "ப்ரம்மஜக்ஞானம் : எனத் துவங்கும் மந்திரத்தையும், பஞ்சாக்ஷரத்தையும் ஆயிரத்தெட்டு முறை ஜபித்து, சூரியன் ஸ்தாபித்த கங்காசல  தீர்த்தத்தில் நூற்றெட்டுக் குடங்கள் கொண்டுவந்து பெருமானுக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை,நிவேதனம் ஆகியன செய்து, பலமுறை நமஸ்கரித்து  கரங்களைக் கூப்பியவாறு, " உலக நாயகனே, யானை உரி போர்த்த பரம்பொருளே, பிறை சூடிய பெருமானே, அர்த்தநாரீசப் பெருமானே, சிறியேனது குற்றம் பொறுத்தருளுவீராக. " என்று பிரார்த்தனைகள் செய்தான். இதனால் மகிழ்ந்த ஈசனும், " ஆதிசேஷனே, உனது குற்றத்தை நாம் நீக்கி அருளினோம். நீ பரிசுத்தனாவாய் " எனத் திருவாய் மலர்ந்து அருளினார். 

    சூதர் மேலும் கூறினார் " சிவத்துரோகமானது இத்தலத்தில் மாத்திரமே நீங்கும். மந்திரங்களில் காயத்திரி போன்று , மேருவின் ஐந்து முடிகளுள் இரத்தினகிரி சிறந்ததாகும். பிற இடங்களில் செய்த பாவங்கள் இங்கு வந்தால் நீங்கும். ஆனால் இங்கு செய்யும் பாவம் இங்கு மட்டுமே நீங்கும். இங்கு நந்தவனம் அமைப்போரும், விளக்கிடுவோரும், சிவசாரூப்பியம் பெறுவர். இத்தலத்தைச் சிந்தித்தாலே,முக்தி பெறலாம். புரட்டாசி சுக்கில பக்ஷ சதுர்த்தசியில் நாக தீர்த்தமாடினால்  சிவாபராதம் நீங்கலாம். சூரிய கிரகண காலத்தில் சூரிய புஷ்கரணியில் ஸ்நானம் செய்தால் குஷ்டம்,அபஸ்மாரம் போன்ற நோய்கள் நீங்கும். இங்கு தில தர்ப்பணம் செய்தால் நீண்ட காலம் கயிலையில் வாழலாம் ." என்றார். 

  • சூரிய பூஜை: உதயாசலம் அருகில் மந்தேகம் என்ற தீவில் இருந்த தவ வலிமை பெற்ற அரக்கர்கள், உதயத்தில் சூரியனோடு போர் புரியும்போது சூரியனால் அவர்களை வெல்ல இயலவில்லை. அசரீரி வாக்கின்படி, தேவர்,கருடர், காந்தருவர்,கின்னரர்,கிம்புருஷர், முனிவர்கள் ஆகியோர் வழிபடும் இரத்தினாசலத்திற்குச்  சென்று வழிபட வேண்டி, அசனி என்பவனை சூரியன் அங்கு அனுப்பித்  தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சுவாமிக்கு பூஜைகள் நடத்துவித்தான். அதற்கு மகிழ்ந்த இறைவனும், அவ்வரக்கர்களை வெல்லும் வலிமையை சூரியனுக்கு அளித்தருளினார். சூரியனால் உண்டாக்கப்பெற்ற சூரிய தீர்த்தத்தில் சித்திரை பௌர்ணமியன்று காலையில்" சசித்திரம் " எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்து நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறலாம்.  அந்த தினத்தில் சூரியன் உச்சி வேளையில் சுவாமியை பூஜை செய்வது ஆண்டு தோறும் நடை பெறுகிறது. சூரியதீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தால் எல்லா நலன்களும் பெற்று இறுதியில் சிவபிரானது திருவடி நீழலை அடையலாம். அயனம், விஷு, கிரகண புண்ணிய காலங்களில் இதில் நீராடினாலும் சிவ சன்னதியில் தூப தீபம் இட்டாலும் எல்லா ஐசுவர்யங்களையும் பெறலாம். அங்கு செய்யப்படும் பித்ரு காரியங்களால் பித்ருக்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள். 
     

  • அகத்தியர் வழிபட்டது: இமயமலையின் வடபுறம் உள்ள புஷ்ப பத்திரா நதிக் கரையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்திய முனிவரைத்  தன்னுடன் தீர்த்த யாத்திரைக்கு வருமாறு நாரதர் வேண்டவே , இருவருமாக புறப்பட்டு, காஷ்மீரம்,பிரபாசம்,வில்வாரண்யம்,கேதாரம்,காசி, பிரயாகை,அவந்தி,கோமதி ஆகிய தலங்களைத் தரிசித்தனர். பின்னர் குசல க்ஷேத்திரத்தைத் தரிசிக்க வேண்டி நாரதர் அகத்தியரிடம் விடை பெற்றுச் சென்றார். பின்னர்  பல சிவக்ஷேத்திரங்களையும் தரிசித்து விட்டு , விந்திய பர்வதத்தில் ஒரு பிரேதத்தைக்கண்டு அதன் வரலாறை அறிந்து கருணை கொண்டவராய், நற்கதி உண்டாக்க வேண்டும் என்று அப்பிரேதத்துடன் அகத்திய முனிவர் கடம்ப வனம் அடைந்தார். அங்குக் காவிரி நீரால் அதன் மீது தெளித்தவுடன், அப்பிரேதம் திவ்விய சரீரம் பெற்று, முனிவரை வணங்கிவிட்டுக் கடம்பவன நாதரையும் அம்பிகையையும் துதித்துப் பின்னர் விமானமேறிக் கயிலாயத்தை அடைந்தது. 

    கடம்ப வனத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபிரானை  அகத்தியர் இடைவிடாமல்  சூரிய அஸ்தமனத்திலிருந்து பூஜை செய்து வந்தார். மறு நாள் காலை உதயத்தின்போது அவருக்கு அருள் செய்யும்பொருட்டு அவர் முன் காட்சி அளித்தார். அதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்த முனிவர் பெருமானைப் பலவாறு தோத்திரம் செய்தார். பிறகு இரத்தினகிரியை அடைந்து, மேற்புறத்தில் தனது பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கி, கங்கை முதலிய எல்லாத் தீர்த்தங்களையும் அதில் ஆவாகனம் செய்தார். அதில் தானும் ஸ்நானம் செய்துவிட்டு மத்தியான காலத்தில் வேத மந்திரங்களால் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நிவேதனங்கள் செய்தார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு,    " கருணைக் கடலே, சர்வலோக நாயகா, இரத்தின கிரீசனே, உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம். " என்று துதித்தார். அப்போது கோடி சூரிய பிரகாசத்துடன் சுவாமி அவருக்குக் காட்சி அளித்தவுடன், முனிவர் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி, " பிரபோ, வேத ரகசியமான ஸ்ரீ  பஞ்சாக்ஷர மகா மந்திரத்தை அடியேனுக்கு உபதேசித்து அருள வேண்டும். " என்று பிரார்த்தனை செய்தார். 


    அராளகேசி அம்பிகையோடு சர்வாலங்கார சுந்தரராகக் காட்சி அளித்த பெருமான், அகஸ்தியரின் சிரத்தின் மீது தனது திருக் கரங்களை வைத்து, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளினார். அன்று முதல் அகத்தியர் ஜீவன் முக்தரானார். பின்னர் பெருமானை வணங்கி, " தேவரீர் மத்தியான காலத்தில் அடியேனுக்குத் தரிசனனம் தந்ததால் தங்களுக்கு மத்தியான சுந்தரர் என்ற திருநாமம் வழங்கப்பெற வேண்டும். இன்று முதல் பகலில் தரிசனம் செய்வோர் முக்தி பெற வேண்டும். "  என்ற வரம் வேண்டவே சுவாமியும் அவ்வாறே ஆகுக என வரமளித்தருளினார். கார்த்திகை ஞாயிறுகளில் அகஸ்திய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, " உதித்தம் " எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்தால் கொடு நோய்கள் அனைத்தும் நீங்கும். அம்மாதத்து செவ்வைக் கிழமைகளில் உதயத்தில் கோமயத்தைச் சிரத்திலிட்டு, : "அக்கினி முர்தா " என்ற மந்திரத்தை உச்சரித்து இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் வறுமை நீங்கிப் பெரும் செல்வம் பெறலாம். 

     

  • வீரசேனன் என்ற சூரிய குலத்து அரசன் செங்கோல் செலுத்தி வந்த காலத்தில் அவனைக் காண ஒரு கபாலிகன் வந்தான். அரசனை  உலோகாயுத மார்க்கத்தில் செலுத்தினான். அதன் விளைவாக வைதீகர்களையும்,அறிவுரை சொல்லும் மந்திரிககையும் புறக்கணித்தும்,ஆலய பூஜைகள் நடத்தத் தவறியும் அக்கிரமங்கள் செய்ததால் நாட்டில் மழை பெய்யவில்லை. வேதங்களும்,சத்தியமும், தவமும், அச்சமும்,கற்பும் இருந்தால் தானே நாடு வளமடையும் ! இறைவனது பூஜை இல்லாது போகவே நாடு சுடுகாடு போல் ஆயிற்று. அரசனும் சின்னாட்களில் நோயால் வருந்தி இறந்தொழிந்தான். அவனை யமதூதர்கள் யமனது சொற்படி நரகத்தில் தள்ளினார்கள். அதன்பிறகு கண்டோர் அஞ்சும்படிப் பிரேத வடிவில் விந்திய மலையில் பசியோடு கிடந்தான். 

    தனது தீவினையால் இது விளைந்ததே என துக்கப்பட்டான். அப்போது அங்கு உரோமச முனிவர் வருகை தந்தார். அவரைக் கொன்று தின்னும் எண்ணத்துடன் அவரை நோக்கி விரைந்து ஓடினான். ஆனால் முனிவரது தவத் தீ அவனை அருகில் செல்ல முடியாதபடி தடுத்தது. பிழைக்கு வருந்திய அவன்பால் கருணை கொண்ட முனிவர், " கண்டவுடனே பாவங்கள் நீங்கும் இரத்தின கிரிக்குச் சென்றால் உனது பிரேத வடிவம் நீங்கப் பெறுவாய் " என்றார். அதன்படி அவனும் அங்கு சென்று உரோமச தீர்த்தத்தில் மூழ்கி, " யோ ப்ரம்ம "  எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்தான். பின்னர் இரத்தினாசலப் பெருமானையும், சுரும்பார்குழலி அம்பிகையையும் தரிசித்தான். நிவேதனங்கள் செய்து, உள்ளன்புடன் பஞ்சாக்ஷர ஜபம் செய்தான். அப்போது அவனுக்கு இரங்கிய இறைவன், அவன் முன்னே காட்சி அளித்தருளினார். உடனே மன்மதனுக்குஒப்பான சரீரம் பெற்றான். அதுமுதல் அந்த தீர்த்தம் பிரேத மோக்ஷ தீர்த்தம் எனப்பட்டது. இதில் ஸ்நானம் செய்தால் பிரேதத்தன்மை ஒருபோதும்  ஏற்படாது. அவனது வம்சத்தவர்களும் மோக்ஷம் பெறுவர். 
     
  • பாரத்வாஜ முனிவரும் இங்குத் தவம் செய்து தீர்த்தம் உண்டாக்கினார். வராக வடிவெடுத்த விஷ்ணுவும் அக்னி திசையில் தீர்த்தம் ஏற்படுத்தினார். அந்த விஷு தீர்த்தத்தில் " விஷ்ணோர் லலாட " எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்து ஸ்நானம் செய்பவரது பிருக்கள் திருப்தி அடைவார்கள். இம்மலையின் வடபுறம் துர்க்கா தேவி உண்டாக்கிய கன்யா தீர்த்தம் உள்ளது. அங்கு அவள் ,மகிஷனைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றாள் .  மகா நவமியில் அதில் நீராடினால் சர்வ சித்தி உண்டாகும். சிவபெருமான் அருளிய வாளால் மகிஷனது உயிரைத் துர்க்கா தேவி போக்கியதால் வாட் போக்கி என்று பெயர் வந்தது என்று கூறுவதும்  உண்டு. 
     
  • ஆரிய தேசத்து மன்னன் ஒருவன் தனது மணிமுடி காணாமல் போகவே அதைத் தேடிப் பல ஊர்களுக்கும் போய்விட்டு முடிவாக இங்கு வந்தான். அப்போது வயதான வேதியன் ஒருவன் இரத்தினகிரிப் பெருமானிடம் அது இருக்கிறது  எனக் கூற, மன்னனும் மலை மீதேறி சன்னதியை அடைந்தான். அப்போது ஒரு அந்தணன் வடிவில் தோன்றிய இறைவன், காவிரி நீரால் இங்குள்ள கொப்பரையை நிரப்பினால் மணி முடி கிடைக்கும் என்று கூறவே அவ்வாறு செய்யலானான். ஆனால் எவ்வளவு முயன்றும் கொப்பரை நிரம்பவில்லை. கோபமுற்ற மன்னன் அவ்வந்தணன் மீது வாளை  வீசவே, அந்தணன் சிவலிங்கத்தில் மறைந்து விட்டான். இலிங்கமூர்த்தியில் இருந்து  இரத்தம் பெருகியதைக் கண்ட மன்னன் வாளால் தன உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டான். அப்போது இறைவன் அங்குத் தோன்றி அரசனது வாளை விலக்கி (போக்கி )மணிமுடியைத்  தந்து  அருளினான். இதனால் ஏற்பட்ட தழும்பு சுவாமியின் திருமுடியில் இன்றும் உள்ளது. ஆரிய மன்னனின் உருவச் சிலையையும் கோயிலில் காணலாம். 
     
  • காஞ்சியைச் சேர்ந்த ஆயர் ஒருவர் தன் தங்கைக்கு மகப்பேறு வேண்டி இத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை நிறைவேறியவுடன்  தன்  தலையைக்  காணிக்கையாக்கினார். அவரது வைராக்கியம் காரணமாக அவரை வைரப் பெருமாள் என்கின்றனர். மலைக்குச் செல்லும் வழியில் இவரது சன்னதியும் அதனருகில் வேப்ப மரமும் உள்ளன. மலைக்காவல் தெய்வமான இவருக்கு இரத்தினகிரீசுவரருக்குத் தீபாராதனை ஆனவுடன், தீபாராதனை செய்கிறார்கள். 
     
  • குளித்தலையிலிருந்து இடையர் ஒருவர் தினமும் இங்கு வந்து ஒரு குடம் பசும் பாலை அபிஷேகத்திற்கு அளித்து வந்தார். ஒருநாள் அப்பால் குடத்தை ஒரு காக்கை கவிழ்த்து விடவே, இந்த இடையர் மனம் வருந்தி, உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். அப்போது இறைவன் அங்குத் தோன்றி, " அன்பனே, வருந்த வேண்டாம். இம்மலை எனது வடிவே யாகும். அதன் மீது சிந்திய பால் என்னை அபிஷேகித்தது போலாகும் " என்றருளி அக்காக்கையை எரித்தார். அது முதல் இங்குக் காக்கைகள் பறப்பதில்லை. காகம் அணுகா மலை என்றும் பெயர் வந்தது.
    சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் ஜோதிர் லிங்கமாகவும், மலை  முழுவதும்  மாணிக்க மயமாகவும் காட்சி அளித்து ஒரு பாறையின் மீது பொன்னை அளித்தான் என்று தல வரலாறு கூறுகிறது. அப்பாறை, " பொன்னிடும் பாறை " எனப்படுகிறது. சித்திரை பிரமோற்சவத்தில் ஐந்தாம் நாள் விழாவில் இவ்வரலாறு இடம் பெறுகிறது

     

  • துர்க்கைக்கு தோஷம் நீங்கியதால் இரு பாறைப் பிளவுகளும், அருகில் வாள் போன்ற பாறையும்,சப்த கன்னிகைகளும் இருப்பதை மலையில் பார்க்கலாம். கன்னியர் எழுவர் பலத்த மழைக்கு ஒதுங்க இடமின்றித் தவித்தபோது இறைவன் இங்கு பாறை இடையே குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தித் தஞ்சம் அளித்தார் என்றும் கூறுவர். 

  • பூம்புகாரை நீங்கிய பதினோரு செட்டிமார்கள் இங்கு வந்து பொன்னிடும் பாறையருகே அமர்ந்து அதனைப் பிரிக்க முற்பட்டபோது அது பன்னிரண்டு பங்காகப் பிரியக் கண்டு அதிசயித்து அப்பன்னிரண்டாவது பங்கை இறைவனுக்கே அளித்தனர். எனவே பன்னிரெண்டாம் செட்டியார் என்று இறைவனை வழங்குவர். 

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    அப்பர்    -    1. கால பாசம் பிடித்தெழு (5.86); 

பாடல்கள்      :  சம்பந்தர்   -       அண்ணாமலை (2.39.2); 

                    அப்பர்    -       பார்முழுதாய் (6.86.4);

 

தல மரம் : வேம்பு

 

Specialities

  • இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும். 

 

  • அகத்தியர் இங்குச் சுவாமியை நண்பகலில் தரிசித்து அருள் பெற்றமையால் இங்கு நண்பகல் தரிசனம் விசேஷம். இதனால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார்.

     

  • மூலவர் சுயம்பு மூர்த்தி. கோயில் மலைமேல் மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.

     

  • சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாள்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது.

     

  • சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.

     

  • இப்பெருமானுக்கு நாடொறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம் செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)

  • மன்னர் வழிபட்டதால் சுவாமிக்கு இராஜ லிங்க மூர்த்தி எனப் பெயர் வந்தது.

  • இம்மலையில் பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறாது என்பர்.

  • வறண்ட காலங்களில் சகுனக் குன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் மழை பெய்வதாகக் கூறுவர். 

  • சிவலிங்கப்பெருமான் மீது அபிஷேகித்த பால் சில மணிகளில் தயிராக மாறி விடுகிறது. பிற தெய்வங்களுக்கு அபிஷேகிக்கப்படும் பால் அவ்வாறு தயிராவதில்லை. 
     

  • சித்திரையில் சுவாமிக்கு நேர் எதிரில் உள்ள நவத்  துவாரங்கள் வழியாக சூரியன் தனது கிரணங்களால் பெருமானை வழிபடுகின்றான். 
     

  • மாதந்தோறும் பௌர்ணமியன்று பக்தர்கள் மூலிகைகள் நிறைந்த இந்த கிரியை வலம் செய்கின்றனர்.  . அவ்வாறு வலம் வரும்போது காட்டுப் பிள்ளையார் கோயிலருகில் நின்று கொண்டு மாணிக்க மலையனே என்று உரக்க அழைத்தால் எதிரொலி கேட்கிறது. 

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் இத்தலம் உள்ளது. தொடர்பு : 04323 - 245522

Related Content

திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)

சேய்ஞலூர் (சேங்கனூர்)

திருஇன்னம்பர் கோயில் தலவரலாறு

திருவிசயமங்கை (திருவிஜயமங்கை) கோயில் தலவரலாறு

திருவைகாவூர் கோயில் தலவரலாறு