இறைவர் திருப்பெயர்: | அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | கனககுஜாம்பிகை, கோடேந்து முலையம்மை. |
தல மரம்: | வில்வம் , மல்லிகை, பவளமல்லி(பாரிசாதம்) |
தீர்த்தம் : | மல்லிகை தீர்த்தம். சந்திர தீர்த்தம் |
வழிபட்டோர்: | அரம்பை, சம்பந்தர் - மலையினார் பருப்பதந், சேக்கிழார் |
![]() |
![]() |
இத்தலம் மக்கள் வழக்கில் 'எலுமியன்கோட்டூர் ' என்று வழங்கப்படுகிறது.
அரம்பை வழிபட்டத் தலம்; ரம்பையங்கோட்டூர் என்பதே பிற்காலத்தில் இலம்பையங்கோட்டூர் என்றாயிற்று என்பர்.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. மலையினார் பருப்பதந் (1.76); பாடல்கள் : சேக்கிழார் - அங்கு உள்ள பிற பதியில் (12.28.1004) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
மூலவர் தீண்டாத் திருமேனி; சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய, செம்மண் நிறத்தில் உள்ளது. பெரிய ஆவுடையார்; அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் உள்ளது.
ஞானசம்பந்தர் இப்பக்கத்தே வருங்காலத்து, இறைவன் ஒரு சிறு பிள்ளை போலவும், பின் ஒரு முதியவர் போலவும் வழிமறித்து இக்கோயிலை உணர்த்த, உடன் வந்த அடியார்கள் உணர்ந்து கொள்ளவில்லையாம், பின்பு வெள்ளைப் பசு வடிவில் வந்து ஞானசம்பந்தரின் சிவியை முட்டிநிற்க, அப்போது சம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் வழி செல்ல, தலத்தினருகில் வந்ததும் பசு மறைந்ததாம். அப்போதுதான் இறைவனே வந்து வணர்த்தியதை உணர்ந்த ஞானசம்பந்தர் இத்திருக்கோயிலைத் தெரிந்து கொண்டு வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. இக்குறிப்பே இத்தலத்துப் பதிகத்தில் 3-வது பாடலில் சொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தலத்துப் பதிகத்தில்தான் ஞானசம்பந்தர் "எனதுரை தனதுரையாக" என்ற தொடரை, பாடல் தொறும் அமைத்துப் பாடியுள்ளார்.
கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி - யோக தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பு; அற்புதமாக உள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னையிலிருந்தும், காஞ்சியிலிருந்தும் 'செல்லம்பட்டிடை' செல்லும் நகரப் பேருந்தில் சென்று, இறங்கி செல்லம்பட்டிடையிலிருந்து 1-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தொடர்பு : 044 - 27692412, 09444865714