logo

|

Home >

hindu-hub >

temples

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)

இறைவர் திருப்பெயர்: தாலபுரீசுவரர் (அகத்தியர் வழிபட்டது - சுயம்பு.), கிருபாநாதேசுவரர் (புலஸ்தியர் வழிபட்டது)

இறைவியார் திருப்பெயர்: அமிர்தவல்லி (அகத்தியர் வழிபட்டது.), கிருபாநாயகி (புலஸ்தியர் வழிபட்டது).

தல மரம்:

தீர்த்தம் : சடாகங்கை. அக்கினி தீர்த்தம்

வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார், அகஸ்தியர், புலஸ்தியர் முதலியோர்

Sthala Puranam

Vanparthan Panangattur temple

  • சுந்தரரிடம் இறைவன், 'நான் பனங்காட்டிற்கும் வன்பாக்கத்துக்குமாய் இருப்பவன்', என்றருளியமையாலும், புறவார் பனங்காட்டூரினின்றும் வேறுபாடறியவும் இத்தலத்தை 'வன்பார்த்தான் பனங்காட்டூர் ' என்று சுந்தர் பாடியுள்ளார். பனைமரக்காடாக இருந்தமையால் 'பனங்காடு' (தாலவனம்) என்று பெயர் பெற்றது.
  • வன்பாக்கம் என்னும் ஊர் - இவ்வூருக்குப் பக்கத்தில் உள்ளது. அதுவே இன்று வெண்பாக்கம், வெம்பாக்கம் என்று வழங்குகின்றது. (இது பாடல் பெற்ற தலமன்று. திருப்பனங்காடு தான் பாடல் பெற்றது.)
  • கோயிலுக்கு எதிரில் உள்ள பெரிய குளம் "சடாகங்கை" எனப்படுகிறது. அகத்தியர் பூசித்தபோது, இறைவன் சடாமுடியிலுள்ள கங்கை, தீர்த்தமாக வெளிப்பட்டதே இந்த சடாகங்கை என்று சொல்லப்படுகிறது.
  • இத்தலத்தில் கண்வ முனிவர் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
  • ஊருக்குப் சற்றுத் தொலைவில் 'ஊற்று தீர்த்தம்' உள்ளது; சுந்தரருக்கு இறைவன் (கட்டமுது) உணவளித்த வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. இது செவி வழிச் செய்தியே. பெரியபுராணத்தில் இல்லை. இறைவன் அப்போது தன் பாதத்தால் கிளறி உண்டாக்கிய தீர்த்தமே 'ஊற்று தீர்த்தம்' (ஊற்றங்குழி) என்று பெயர் பெற்றதென்று சொல்லப்படுகிறது.
  • இக்கோயிலில் முதலில் அகத்தியர் வழிபட்ட மூர்த்தியைத் தரிசிக்க வேண்டும்.
  • அகத்தியர் பூசித்தபோது, கோட்டை முனீஸ்வரர் பனைக் கனிகளை உதிரச் செய்ய, அகத்தியர் அதையும் இறைவனுக்கு படைத்தமையால், இன்றும் பனைக்கனி, (பனம்பழம்) கிடைக்குங் காலங்களில் சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
  • புலஸ்தியர் வழிபட்ட தலம்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சுந்தரர்    -    1. விடையின்மேல் வருவானை (7.86); பாடல்கள்      :  சேக்கிழார்   -       பாடல் இசையும் பாணியினால் (12.29.193) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

Specialities

  • மக்கள் வழக்கில் திருப்பனங்காடு என்று வழங்குகிறது.
  • "சடாகங்கை" கரையில் கங்காதேவி சிலை உள்ளது; மாசிமகத்தில் தீர்த்தவாரியும், தெப்பமும் இதில் சிறப்பு.
  • வடலூர் வள்ளற்பெருமானின் வாக்கிலும், பட்டினத்தடிகளின் திருவேகம்பர் திருவந்தாதியிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது.
  • இக்கோயிலில் இரண்டு சுவாமி (கொடிமரம், பலபீடம், நந்தியுடன்) சந்நிதிகளும், இரண்டு அம்பாள் சந்நிதிகளும் உள்ளன. ஒன்று அகத்தியர் வழிபட்டது; மற்றொன்று புலஸ்திய மகரிஷி வழிபட்டதாகும்.
  • இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன் விளங்குகின்றன.
  • கோயில் முகப்பு வாயிலின் வெளியில் நிற்கவைத்துள்ள ஒரு கல்வெட்டு, ஒவ்வொரு 2 தேசாந்திரிகளுக்கு அன்னதானம் செய்வதற்காக ஓர் அன்பரால் நிலம் விடப்பட்டுள்ள செய்தியைத் தெரிவிக்கின்றது.
  • முருகப்பெருமான் தரிசனம் - வள்ளி தெய்வானையுடன் கூடி, மயிலின் முகம் திசை மாறி உள்ளது.
  • தாலபுரீசுவரர் சந்நிதியின் சண்டேசுவரர் இல்லை; அடுத்துள்ள சந்நிதியில் மட்டுமே (தனி விமானத்துடன்) உள்ளார்.
  • கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது; வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலை உயர்த்திக் குத்துக் காலிட்டு, சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார்.
  • மாசிமகத்தில் தாலபுரீசுவரருக்கும், கார்த்திகை சோமவாரத்தில் கிருபாநாதேசுவரருக்கும் விசேஷம்.
  • கோயிலுள் பக்கத்திற்கு ஒன்றாக இருபுறமும் இரு பனைமரங்கள் உள்ளன; ஒரு மரத்தின் விதையிலிருந்து முளைத்தபோதிலும் இவ்விரண்டினுள் ஒன்று ஆண் பனையாகவும், மற்றொன்று பெண் பனையாகவும் உள்ளது.
  • இக்கோயிலின் உள் மண்டபத்தில் கல் தூண்களில் மிக அரிய சிற்பகங்கள் உள்ளன. அவற்றுள் சில: நாகலிங்கம் சிற்பம், ராமர் சிற்பம், வாலி - சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது; ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்தின் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. இதுபோன்ற இன்னும் அரிய சிற்பங்கள் நிறைய உள்ளன.
  • கோயிலுக்கு வெளியில் கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது.
  • விஜயநகர மன்னர்கள், முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து 22 கல்வெட்டுக்கள் அரசால் படையெடுக்கப்பட்டுள்ளன.

 

கல்வெட்டில் இறைவன் 'திருப்பனங்காடுடைய நாயனார் ' என்றும்; ஊர்ப்பெயர் 'காலியூர்க் கோட்டத்து கழுமலநாட்டுத் திருப்பனங்காடு' என்றும் குறிக்கப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்திலிருந்து கலவை, பெருங்கட்டூர் செல்லும் பேருந்தில் சென்று திருப்பனங்காடு கூட்ரோடில் இறங்கி (திருப்பனங்காடு செல்லும் பாதையில்) 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தனி வாகனத்தில் வருவோர் கோயில் வரை செல்லலாம். தொடர்பு : 044 - 24312807, 9843568742

Related Content

திருப்புறவார்பனங்காட்டூர் தலவரலாறு (பனையபுரம்)

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருக்குரங்கணில்முட்டம் தலவரலாறு

திருமாகறல்

திருவோத்தூர் கோயில் தலவரலாறு (திருவத்திபுரம், செய்யாறு)