logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கச்சிமேற்றளி (திருமேற்றளீஸ்வரர் கோயில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்) ஸ்தலபுராணம்

இறைவர் திருப்பெயர்: திருமேற்றளீஸ்வரர், திருமேற்றளிநாதர்.

இறைவியார் திருப்பெயர்: திருமேற்றளிநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : விட்டுணு தீர்த்தம்

வழிபட்டோர்:அப்பர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

kaccimetrali temple
கச்சி மேற்றளி ஓத உருகீசர் மேற்றளிநாதர் திருக்கோயில்
  • காஞ்சியில் 'பிள்ளையார் பாளையம்' என்னும் பகுதியில் இக்கோயில் உள்ளது; இதன் பெயரால் அவ்வீதி திருமேற்றளித் தெரு என வழங்கப்படுகிறது.
  • திருமால் சிவ சாரூப நிலையைப் பெற வேண்டி இறைவனை வழிபட்ட திருத்தலம்; இறைவன் காட்சி தந்து நின்றபோது திருமால் சிவசாரூப நிலையை வேண்ட, ஞானசம்பந்தர் இங்கு வருகைதந்து பதிகம் பாடும்போது அது கிடைக்கும் என்றும், அதுவரை இங்கிருந்து தவஞ்செய்யுமாறும் இறைவன் வரமளித்தார். அதன்படியே ஞானசம்பந்தர் வந்து பாடியபோது திருமால் சிவசாரூபம் பெற்றார் என்பது தல வரலாறு.

(ஓங்கினஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம்

பாங்கினில் நின்றது அரியுறை பாடகம்  - 11.30.83

  • கோயில் உள்ள இத்தெருவின் நடுவில் 'உற்றுக்கேட்ட முத்தீசர் ' ஆலயம் உள்ளது; ஞானசம்பந்தர் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாகவும் - கேட்டதாகவும் வரலாறு. (வீதியின் மேற்கோடியில் திருமேற்றளிக் கோயில் உள்ளது.)
  • உள்ளே உள்ள (கர்ப்பக்கிருகத்துள்) சந்நிதி 'ஓத உருகீசர் ' என்று வழங்கப்படுகின்றது; ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு உருகியவர் (திருமால்) இவர் எனப்படுகிறது. இதற்கு அடையாளமாக சிவலிங்கத் திருமேனியின் முன்பு இருதிருவடிகள் உள்ளன.
  • நூற்றெட்டு ருத்ரர்கள் பூசித்தது. ஆனந்த ருத்ரேசம், மகா ருத்ரேசம் முதலிய பெயர்களில் இப்பகுதியில் கோயில்கள் உள்ளன.
  • தனிக்கோயிலாக விளங்குவது மேற்றளிநாதர் சந்நிதியாகும். இதுவே அப்பர் சுந்தரரால் பாடல் பெற்ற பதியாகும்.
  • அம்பாள் சந்நிதி - (மூல திருவுருவம்) நின்ற கோலம் - காஞ்சி மண்டலம் முழுமைக்கும் அம்பாள் காமாட்சியேயாதலின், இம்மூர்த்தம் பிற்காலப் பிரதிஷ்டையாகும்.

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர்   - 1. மறையது பாடிப் பிச்சைக் (4.43);              சுந்தரர்  - 2. நொந்தா ஒண்சுடரே நுனையே (7.21); பாடல்கள்  : அப்பர்   -         அலைத்தோடு புனற்கங்கை (6.97.7);           சேக்கிழார்  -         சீர் வளரும் மதில் கச்சி நகர்த் (12.21.326) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                   சீரார் காஞ்சி (12.29.190) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம். 

 

Specialities

  • கோயில் உள்ள இத்தெருவின் கீழ்க்கோடியில் திருஞானசம்பந்தரின் ஆலயம் உள்ளது.
  • தனிக் கோயிலாக விளங்குவது மேற்றளிநாதர் சந்நிதியாகும்; மேற்கு நோக்கியது.
  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • தலப்பதிகம் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.
  • சம்புவராய மன்னர்களில், சகலபுவனச் சக்கரவர்த்தி இராச நாராயண மல்லிநாதன் சம்புவராயரின் 16ஆம் ஆட்சி ஆண்டிலும், விசயநகர வேந்தர்களில், மகா மண்டலேசுவரன் சதாசிவ தேவ மகாராயர் (சகம் 1484) காலத்திலும், பல்லவ மன்னர்களில், தந்திவிக்கிரமவர்மன் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.இவைகளில் இறைவரின் திருப்பெயர் திருமேற்றளி உடைய நாயனார் என்றும், இறைவரின் திருக்கோயில் திருமேற்றளித் திருக்கோயில் என்றும் குறிக்கப் பெற்றுள்ளன.
  • இராசநாராயணமல்லிநாதன் சம்புவராயரின் கல்வெட்டு, எயிற்கோட்டத்துத் தேவதானம் நந்தவன்சுதர்விளாகம் என்னும் ஊரில் இருவேலி நிலத்தைத் திருமேற்றளி உடைய நாயனார்க்குக் கொடுத்ததையும், சதாசிவ தேவமகாராயர் கல்வெட்டு, தறி ஒன்றுக்கு ஐந்தரை பணத்தைச் செங்குந்தர்களிடமிருந்து வசூலித்து இறைவனுக்கு நாள் வழிபாட்டிற்கும்விளக்குக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, கொண்ட மய்யராசையா என்பவர் கட்டளையிட்டதையும், தந்திவிக்கரமவர்மன் கல்வெட்டு, ஒரு முத்தரையர் திருமேற்றளிக்கோயிலுக்கு அறச் செயல்கள் புரிந்ததையும், கோயிலைச் சார்ந்து திருமடம் ஒன்று இருந்ததையும் குறிப்பிடுகின்றன.
  • பிள்ளையார் பாளையத்தின் தெருக்களில் உள்ள துண்டுக் கல்வெட்டுக்கள் திரு வேகம்பன்தெரு என்று காஞ்சிபுரத்தில் ஒரு தெருவிற்குப் பெயர் வைக்கப்பட்டிருந்ததையும் சந்திரகிரியில் அப்பராச உடையார் என்னும் கவிஞர் ஒருவர் இருந்ததையும், ஏகாம்பரநாதர் கோயிலுக்குப் பழுது பார்ப்பதற்கு இரண்டு ஊர்களின் வரிகளைக் கொடுத்ததையும் உணர்த்துகின்றன.

Contact Address

அமைவிடம் காஞ்சியில் 'பிள்ளையார் பாளையம்' என்னும் பகுதியில் இக்கோயில் உள்ளது. மாநிலம் : தமிழ் நாடு சென்னை, கடலூர், விழுப்புரம் மற்றும் பல இடங்களிலிருந்து பேருந்து நிரம்ப உள்ளன. தொடர்பு : 09865355572, 09994585006

Related Content

திருக்கச்சியேகம்பம் தல புராணம் (காஞ்சிபுரம்)

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

திருக்கச்சிஅனேகதங்காவதம் (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருமாற்பேறு தலவரலாறு (திருமால்பூர்)