இறைவர் திருப்பெயர்: வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், மாணிக்கவரதர்.
இறைவியார் திருப்பெயர்: அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி.
தல மரம்:
தீர்த்தம் : சுவேத தீர்த்தம், கெடிலநதி.
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர்,சேக்கிழார், திருமால்.
- திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடிமண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து வழிபட்டாராதலின் இக்கோயில் 'மாணிகுழி ' என்று பெயர் பெற்றது. (மாணி - பிரம்மசாரி)
- சுவாமி எப்போதும் இறைவியுடன் இருப்பதாக மரபாதலின், மூலவர் சந்நிதியில் எப்போதும் திரைப்போடப்பட்டுள்ளது. (இத்திரையின் மேற்புறத்தில் ஏகாதச ருத்திரர்களில் ஒருவராகிய பீமருத்திரர் உருவம் எழுதப்பட்டுள்ளது.) இந்தத் திரைக்கே அர்ச்சனை, பூஜை வழிபாடு
- மகாவிஷ்ணு மாணியாக - பிரம்மசாரியாக வழிபடுவதற்குக் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
- இத்தலம் தேவாரப் பாடல்களில் "உதவிமாணிக்குழி" என்று குறிக்கப்படுகிறது. இதனால் 'உதவி ' என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் 'மாணிகுழி' என்னும் கோயில் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றச்செய்கிறது. (இதற்கேற்ப தலபுராணத்தில் வரும் செய்தி வருமாறு:-)
- வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, இறைவன் அவ்வணிகனைத் திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார்; இதனால் இத்தலம் 'உதவி ' என்றும் இறைவன் 'உதவிநாயகர் ' இறைவி 'உதவி நாயகி ' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
- கல்வெட்டிலும் சான்றாக, இத்தலம் 'உதவி ' என்றே குறிக்கப்பெறுகின்றது.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. பொன்னியல் (3.77);
பாடல்கள் : சேக்கிழார் - அங்கணரை அடி போற்றி (12.05.90) தடுத்தாட்கொண்ட புராணம்;
தேவர் பிரான் திரு மாணிக்குழியும் (12.21.136) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
செல்வம் மல்கிய (12.28.962) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து, திருவகீந்திபுரம் வழியாகப் பானூர், பண்ருட்டி செல்லும் பாதையில் திருவகீந்திபுரம் சென்று, அடுத்து, 'சுந்தரர்பாடி' என்னுமிடத்திற்கு அருகில் சாத்தாங்குப்பம் என்னும் வழிகாட்டி காட்டும் வழியில் சென்று, கெடிலநதிப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலேயே கெடிலநதியின் தென்கரையில் கேபர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள இத்தலத்தை அடையலாம். கடலூர் - குமணங்குளம் நகரப் பேருந்து திருமாணிக்குழி வழியாகச் செல்கிறது.
தொடர்பு :
04142 - 224328