இறைவர் திருப்பெயர்: | வேதபுரிசுவரர், அத்யாபகேசர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சௌந்தரியாம்பிகை |
தல மரம்: | |
தீர்த்தம் : | வேத தீர்த்தம், வேதாமிர்த தீர்த்தம் |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், வேதங்கள், தேவர்கள், திக்குப்பாலகர்கள் முதலியோர் |
![]() |
இவ்வூர் தற்போது தேரழுந்தூர், தேரழந்தூர் என்றெல்லாம் மக்களால் வழங்கப்படுகிறது.
அகத்தியர் இத்தல இறைவனைப் பூஜிப்பதை அறியாது ஊர்த்துவ ரதன் என்னும் அரசன் ஆகாயத்தில் செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய காரணத்தினால் இத்தலம் தேர்-அழுந்தூர் = தேரழுந்தூர் என்று வழங்குகிறது என்னும் வழக்குள்ளது.
வேதங்கள், தேவர்கள், திசைப்பாலகர்கள் வழிபட்டத் திருத்தலம். இத்தலம் "சந்தனவனம்" என்றும் விளங்கியுள்ளது.
கற்கசன் என்ற திருடனை அரசசேவகர்கள் அரசனிடம் கொண்டு செல்ல இழுத்து சென்றார்கள். அன்று சோம வாரமாக இருந்த காரணத்தால் வேதபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தீப ஆரத்தி நடந்து கொண்டு இருந்தபடியால் எங்கும் ஹர ஹர என்று ஒலித்துக் கொண்டிருந்தது. ஹர ஹர ஒலி கற்கசன் காதில் விழுந்த காரணத்தால் இந்த ஒலியிலேயே லயித்து சமாதி நிலையை அடைந்து இதை அறியாத சேவகர்கள் கற்கசனை மிகவம் துன்புறுத்தி விட்டார்கள். எம தூதர்கள் அவன் உயிரைக் கொண்டு செல்ல கால பாசத்தோடு வந்திருந்தனர். சிவன் தூதர்கள் உடன் தோன்றி அவன் மரிக்கும்போது வேதபுரீஸ்வரனைத் தியானித்து விட்டான். ஆகவே அவனைக் கயிலாயம் அழைத்துச் செல்ல வேண்டுமென அழைத்துச் சென்றனர். ஆகையால் இங்கு சோமவாரதினத்தில் வேதபுரீஸ்வரனைத் தொழுவது சாலச் சிறந்தது என கருதப்பட்டுவருகின்றது.
![]() |
![]() |
திருமுறை பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. தொழுமா றுவல்லார் (2.20);
பாடல்கள் : அப்பர் - அஞ்சைக் களத்துள்ளார் (6.51.8);
எச்சில் இளமர் (6.70.4);
சுந்தரர் - காட்டூர்க் கடலே (7.47.1);
பட்டினத்துப் பிள்ளையார் - சென்றேறி விண்ணுறும் (11.30.63);
சேக்கிழார் - நிலவு மாளிகைத் (12.28.434) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கிய சந்நிதி. இராஜகோபுரத்தைக் கடந்தவுடன் இடதுபுறம் ஸ்ரீமடேஸ்வரர் ஆலயம் உள்ளது.
சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், ஆருத்ரா, கந்தசஷ்டி முதலிய சிறப்பு விழாக்களும் நடைபெறுகின்றன. மாசியில் நடைபெறும் புனர்வசு விழா சிறப்பானது. மாசி மாதம் 23, 24, 25 தேதிகளில், சூரிய பூஜை விழா
இங்கு அகத்தியருக்கும், காவிரிக்கும் சந்நிதி உள்ளது.
இது கம்பர் அவதரித்த ஊராகும். அவர் வாழ்ந்த இடம் "கம்பர் மேடு" என்று வழங்குகிறது.
இரும்பிடர்த் தலையார் என்னும் தமிழ்ச் சான்றோரும் வாழ்ந்த பதி.
ஆறு கல்வெட்டுகள் உள்ளன. யாவும் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவை. இக்கல்வெட்டுக்களில் இத்தலம் "ஜயங்கொண்ட சோழவள நாட்டுத் திருவழுந்தூர்" என்றும்; இறைவனின் திருநாமம் "திருவழுந்தூர் உடையார்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டுக்கள், சுவாமிக்கு நாள்தோறும் காவிரியிலிருந்து திருமஞ்சனத்திற்கு புனித நீர் கொண்டு வருவதற்குக் கட்டளை வைத்துள்ள செய்தியையும் கூறுகின்றது.
ஒரே வீதியின் ஒருமுனையில் இத்தலமும், எதிர்முனையில் பாடல் பெற்ற விஷ்ணுஸ்தலமும் உள்ளன.
அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் தேரழுந்தூர் நிலையத்திலிருந்து 3-கி.மீ. தூரத்தில் இத்திருக்கோயில் உள்ளது. அ/மி. ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழந்தூர் & அஞ்சல், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் - 609 808. தொடர்பு : 04364-237650.