இறைவர் திருப்பெயர்: வீரட்டேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : தென் பெண்ணையாறு (தட்சிண பிநாகினி).
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், மெய்ப்பொருள் நாயனார், நரசிங்கமுனையரையர் (சுந்தரரை வளர்த்தவர்) முதலியோர்
- ஊர் பெயர் திருக்கோவலூர்; தலத்தின் பெயர் வீரட்டம்.
- இது, அந்தகாசூரனைச் சம்ஹரித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.
- பார்வதி தேவி ஒரு முறை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட, சிவபெருமானின் திருக்கண்கள் சூரிய சந்திரர் ஆகையால் உலகம் முழுமையும் இருள் சூழ்ந்தது. அப்போது சிவபெருமான் தனது மூன்றாவது விழியாகிய அக்னிஸ்வரூபமான கண்ணின் மூலமாக உலகிற்கு ஒளி காட்டினார். அன்னை கண்களை மூடிய போது சூழ்ந்த இருளானது ஒரு அசுர வடிவம் கொண்டு இருளினால் கண்கள் தெரியாத அந்தகாசுரன் என்ற அசுரனாக உருவானது. அந்த அசுரன் தன்னுடைய தவவலிமையினால் பல வரங்கள் பெற்று தேவர்களையெல்லாம் வென்று தான் உருவாவதற்கு காரணமான அன்னை தந்தையாராகவும் உலகுக்கே இறைவனாகவும் உள்ள சிவ பார்வதிரை வணங்கி மகிழாமல் தவறான சிந்தையுடன் பார்வதி தேவி இருக்கின்ற திருக்கயிலாய மலைக்கு போர் புரிய வந்தான். சலனம் இல்லாத மூர்த்தியாக இருக்கின்ற சிவபெருமான் அந்தகனை புத்தி புகட்டக் கோவமான ஒரு உரு எடுத்துத் தன்னுடைய சூலத்தினால் அந்தகனை வாட்டினார். சூலத்தில் குத்தப்பட்ட அந்தகன் அந்த சூலத்தில் இருந்தே சிவபெருமானை வழிபட்டு உந்தன். இந்த வீரச்சம்பவம் நடந்த வீர ஸ்தானமே கோவலூர் வீரட்டானம் ஆகும். இறைவன் கோவ உருக் கொண்டதனால் ஊர் கோவலூர் எனப் பெயர் பெற்றது.
- சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய, விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. படைகொள் கூற்றம் (2.100); அப்பர் - 1. செத்தையேன் சிதம்பநாயேன் (4.69); பாடல்கள் : அப்பர் - கொண்டலுள்ளார் (6.51.9); சுந்தரர் - வீழக் காலனைக் (7.12.1); கபிலதேவ நாயனார் - கொடிக்குல வும் (11.22.34) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை; சேக்கிழார் - சென்று அணைந்து (12.28.967 & 968) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், திருவதிகைப் பதி (12.21.148) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.
அமைவிடம்
அ/மி. வீரட்டேசுவரர் திருக்கோயில்,
திருக்கோயிலூர் - 605 757.
விழுப்புரம் மாவட்டம்.
தொலைபேசி : 04153 - 224036, +91-93448 79787.
மாநிலம் : தமிழ் நாடு
விழுப்புரம் - திருவண்ணாமலை இரயில் பாதையில் உள்ள நிலையம். நிலையத்திலிருந்து வடக்கே 5-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கவேண்டும். திருவண்ணாமலை, பண்ணுருட்டி தலங்களிலிருந்து, ஏராளமான பேருந்து வசதி உள்ளது.