logo

|

Home >

hindu-hub >

temples

திருநெல்வெண்ணெய் (நெய்வெணை) தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: சொர்ணகடேஸ்வரர், வெண்ணெய்யப்பர், நெல்வெண்ணெய்நாதர்.

இறைவியார் திருப்பெயர்: பிருஹந்நாயகி, நீலமலர்க்கண்ணி.

தல மரம்:

தீர்த்தம் : பெண்ணையாறு.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், சனகாதியோர் நால்வரும்

Sthala Puranam

nelvennai temple

  • சனகாதி முனிவர்கள் நால்வரும் சுவாமியை பூஜித்து வணங்கியுள்ளனர்.
  • திருத்தல யாத்திரை திருஞானசம்பந்தர் தளத்திற்கு வந்தபோது  இருட்டி விட்டதாகவும்,  அப்போது  சிவபெருமான் கட்டளைப்படி  அம்பாள்  சம்பந்தருக்கு  வழிகாட்டியதாகவும்,  சிவபெருமானை வணங்கி அற்புத தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் சம்பந்தர்  நடனம் ஆடிக்கொண்டு  பதிகம் பாடியதாகவும் ஒரு செய்தி உள்ளது.
  • ஒரு காலத்தில் வயல்கள் நிறைந்த இப்பகுதி  மக்கள் செல்வச் செருக்கினால் இறை வழிபாட்டைப்  புறக்கணித்து  இருந்தனர். அவர்களுக்கு உணர்த்த இவ்விடத்தில்  பெருமழை பெய்விக்க  ஏரி குளங்கள் நிரம்பி வழிந்தன. ஏரி உடைந்து தண்ணீர்  வெள்ளமாக  ஊருக்குள் வர  மக்கள் இறைவனிடம்  தஞ்சமடைந்தனர். இறைவன் ஒரு வாலிப வடிவில்  நெல் மூட்டைகளை  அணையாக அடுக்கி  வெள்ளத்தைத்  தடுத்து  அவர்களைக் காத்தான்.  மக்கள் அந்த  வாலிபனைப்  போற்ற,  வாலிபனாக வந்த அந்த சிவபெருமான் இறைவனே சிறந்த காப்பு என்பதை அவர்களுக்கு எடுத்த்துரைத்து அவர்கள் இழந்த பொருள் பெற தங்கக் குடத்தைக் கொடுத்து மறைந்தார். அதனால் இறைவனுக்குச் சொர்ணகடேஸ்வரர் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள்    : பதிகங்கள்     :     சம்பந்தர்    -    1. நல்வெணெய் விழுதுபெய் (3.96); பாடல்கள்      :      அப்பர்      -       சீரார் புனற்கெடில (6.007.9);                     சேக்கிழார்    -       தேவர் தம்பிரான் (12.28.229) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • மூவர் முதலிகள் - சுந்தரர் நடுவிலும் இருபுறங்களிலும் அப்பரும் சம்பந்தரும் உள்ளனர்; சம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையிலும், சுந்தரர், நடன சுந்தரராகவும் காட்சி தருகின்றனர்.
  • மகாசிவராத்திரியன்று அதிகாலையில் இறைவன் திருமேனி மீது சூரிய ஒளி விழுகிறது.
  • வாயிலின் வெளிச் சுவரில் தலப்பதிகம் கல்வெட்டில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது.
  • இவ்வூர்க் கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் குலோத்துங்கசோழன், விக்கிரமசோழன் இவர்கள் காலங்களிலும், பல்லவமன்னரில் சகலபுவனசக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கதேவர், விசயநகர பரம்பரையில் வீரப்பிரதாபகிருட்டிணதேவ மகாராயர் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
  • இக்கல்வெட்டுக்களில் இறைவர் `பொற்குடங் கொடுத் தருளிய நாயனார்` என்னும் பெயரால் குறிக்கப்பெற்றுள்ளனர்.
  • கல்வெட்டில் இறைவனின் பெயர் பொற்குடம்கொடுத்தருளிய நாயனார் என்றுள்ளது. கல்வெட்டில் வரும் பெயரும், வழக்கில் சம்ஸ்கிருதத்தில் வழங்கும் பெயரும் ஒன்றாகவுள்ளன.
  • இத்திருக்கோயிலில் கூத்தாடுந் தேவரை (நடராசப் பெருமானை) எழுந்தருளுவித்தவர் கங்கைகொண்ட சோழவள நாட்டுத் திருமுனைப்பாடிநாட்டுக் கீழையூரில் இருந்த இராஜேந்திர சோழசேதி ராயர் ஆவர். அத்திருமேனி எழுந்தருளுவிக்கப்பெற்ற காலம் முதற் குலோத்துங்கசோழதேவரின் நாற்பத்தெட்டாம் ஆண்டாகும். இக் கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர் மிலாடு ஆகிய சனனாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்திற்கு உட்பட்ட ஊராகக் குறிக்கப் பெற்றுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு உளுந்தூர்பேட்டை - திருக்கோயிலூர் (வழி) எலவானாசூர்கோட்டை நெடுஞ்சாலையில் வந்து "எறையூர்" அடைந்து அங்கிருந்து பிரியும் பாதையில் வந்து (வடகுரும்பூர் வழியாக) 4-கி. மீ. தொலைவில் உள்ள நெய்வெணையை அடையலாம். எறையூர் - நெய்வெணை நகரப் பேருந்து செல்கிறது. தொடர்பு : 04149-291786, 09486282952.

Related Content

திருநெல்வாயில் அரத்துறை தலவரலாறு

திருத்தூங்கானைமாடம் (பெண்ணாகடம்) தலவரலாறு

திருக்கூடலையாற்றூர்

திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டணம்) தலவரலாறு

திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) தலவரலாறு