இறைவர் திருப்பெயர்: வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்.
இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி.
தல மரம்:
தீர்த்தம் : கெடிலநதி (தென்கங்கை). ஆல கங்கை, சக்கரத் தீர்த்தம்.
வழிபட்டோர்:திலகவதியார், சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, திருமூலர், சேக்கிழார் முதலியோர்
- அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். இச்சமயம் ஒவ்வொரு தேவரும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கினர். இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார். திருவருளின்றி இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து, தேவர்களின் செருக்கு அடங்கப் புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் சிவபெருமான் செய்தார். அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை வீரட்டானம்.
- அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம். திலகவதியார் தன் தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுரைத்த பதி.
- சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கி "நாவுக்கரசு" என்ற பட்டம் பெற்ற அற்புதத்தலம்.
- ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.
- திருநாவக்கரசர் உழவாரப்பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கி இத்தலப் பெருமானை வழிபட்டார். சுந்தரர் இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரின் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து சுந்தரர் நகர்ந்து படுத்தார். மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுக்க, சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச, பின் இறைவன் தான் திருவடி தீட்சை அளித்துள்ளார் என்பதை உணர்ந்து புளகாங்கிதம் அடைந்து அவரைப் போற்றிப் பதிகம் பாடினார்.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. குண்டைக் குறட்பூதங் (1.46); அப்பர் - 1. கூற்றாயின வாறு (4.1), 2. சுண்ணவெண் சந்தனச் (4.2), 3. முளைக்கதிர் இளம்பிறை (4.10), 4. இரும்புகொப் பளித்த (4.24), 5. வெண்ணிலா மதியந் (4.25), 6. நம்பனே எங்கள் (4.26), 7. மடக்கினார் புலியின் (4.27), 8. முன்பெலாம் இளைய (4.28), 9. மாசிலொள் வாள்போல் (4.104), 10. கோணன் மாமதி (5.53), 11. எட்டு நாண்மலர் (5.54), 12. வெறிவிரவு கூவிளநற் (6.3), 13. சந்திரனை மாகங்கைத் (6.4), 14. எல்லாஞ் சிவனென்ன (6.5), 15. அரவணையான் சிந்தித் (6.6), 16. செல்வப் புனற்கெடில (6.7); சுந்தரர் - 1. தம்மானை அறியாத (7.38); பாடல்கள் : அப்பர் - மதியங் கண்ணி (4.15.3), பூதியணி பொன்னிறத்தர் (6.51.2), திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6.70.9), ஆமயந்தீர்த் தடியேனை (6.96.1); சுந்தரர் - வஞ்சங்கொண்டார் (7.19.5); கபிலதேவ நாயனார் - மதிமயங்கப் (11.22.12); பட்டினத்துப் பிள்ளையார் - நினைவார்க் கருளும் (11.30.61); நம்பியாண்டார் நம்பி - பதிகமே ழெழுநூறு (11.41.7); சேக்கிழார் - மலை வளர் (12.5.82 & 88) தடுத்தாட்கொண்ட புராணம், பேராத பாசப் பிணிப்பு (12.21.42,56,60,61,62,91,135,137,144,146,148 & 318) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், வக்கரைப் பெருமான் (12.28.964) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், நற்பதி அங்கு (12.30.6) திருமூல நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய இடங்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது. பண்ருட்டி இருப்புப் பாதை நிலையம்.
தொடர்பு :
09443988779
09442780111
09841962089