logo

|

Home >

hindu-hub >

temples

திருச்சோபுரம் (தியாகவல்லி) தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: மங்களபுரீஸ்வரர், திருச்சோபுரநாதர்.

இறைவியார் திருப்பெயர்: தியாகவல்லியம்மை, சத்யதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி.

தல மரம்:

தீர்த்தம் : பரம தீர்த்தம், கோயிலுள் உள்ள கிணறும், கோயிலுக்குப் பின்னால் உள்ள குளமுமே.

வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், அகத்தியர், காகபுஜண்டரிஷி ஆகியோர்.

Sthala Puranam

thirusopuram temple

  • கோயில் உள்ள பகுதி 'திருச்சோபுரம்' என்றும், பக்கத்தில் உள்ள பகுதி 'தியாகவல்லி' என்றும் சொல்லப்படுகிறது.
  • இங்குள்ள மூர்த்தி அகத்தியர் பிரதிஷ்டை செய்தது. இலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்த போது ஏற்பட்ட கைத்தடமும் இருக்கிறது. 
  • திருமுறைப் பெயர் 'சோபுரம்' என்பது. 'சோழபுரம்' என்பது மருவி 'சோபுரம்' என்றாயிற்று என்றும்; திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவியான தியாகவல்லி அம்மையார் இங்குத் திருப்பணி செய்த காரணத்தால் 'தியாகவல்லி' என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
  • இப்பகுதி ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்ததாம். இங்கு வந்த 'மதுரை இராமலிங்க சிவயோகி ' என்பவர் இம்மேட்டைக் கண்டு, மணலில் புதைந்திருந்த கோயிலின் விமானக்கலசம் மட்டும் மேலே தெரிய; அவர் உடனே அப்போது கடலூரிலிருந்த சேஷாசல நாயுடு, இராமாநுஜலு நாயுடு, ஆயிரங்காத்த முதலியார், நஞ்சலிங்க செட்டியார் ஆகியோரை அணுகி; செய்தி சொல்லி, அவர்களின் ஆதரவோடு, மணல் மேட்டைத் தோண்டிக் கோயிலை கண்டுபிடித்துக் கட்டுவித்தார் என்றொரு செய்தி சொல்லப்படுகிறது. இது தொடர்பாக; இன்னும் அம்பாள் கோயில் தெற்குப் பகுதியில் மண்மேடிட்டுப் புதைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். இதனால் இக்கோயிலுக்கு 'தம்பிரான் கண்ட கோயில்' என்ற பெயரும் மக்களால் வழங்கப்படுகிறது.
  • இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள ஆலப்பாக்கத்தில் இருந்து 'காகபுஜண்டரிஷி' இறைவனை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்    -    1. வெங்கண்ஆனை யீருரிவை (1.51); பாடல்கள்     :   சம்பந்தர்    -       வரந்தையான் சோபுரத்தான் (1.61.3);                     சுந்தரர்     -       சுற்றுமூர் சுழியல் (7.31.2);                   சேக்கிழார்    -      அரசிலியை அமர்ந்து அருளும் (12.28.1135) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • கோயிலுக்குப் பின்னால் அண்மையில் கடல் உள்ளது.
  • மணற்பாங்கான பகுதி விசாலமான இடப்பரப்பு.
  • திரிபுர சக்கரவர்த்தி, அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள் கோயிலுள் உள்ளன.
  • கோஷ்ட மூர்த்தத்தில் லிங்கோற்பருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர்.
  • சுந்தரரின் 'திருவிடையாறு' தலப்பதிகத்தில் - ஊர்த்தொகையில் இத்தலம் குறிக்கப்படுகிறது.
  • பங்குனி உத்திரப் பெருவிழா 10 நாள்களுக்கு நடைபெறுகிறது . 
  • கல்வெட்டுக்கள் ஐந்து உள்ளன. இங்கே நர்த்தனகணபதி கோயில் இருந்ததாகவும், அதற்குச் சுந்தர பாண்டியன் நிலம் அளித்த தாகவும் அறியப்படுகிறது (114 of 1904). இராஜராஜ தேவர், சாரிபுத்த பண்டிதர், மாறவர்மன் சுந்தரபாண்டியன் I, கோநேரின்மைகண்டான், சுந்தர பாண்டிய தேவர் இவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பெறுகின்றன.
  • சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு நிலம் விட்ட செய்தியையும்; தொண்டைமாநல்லூரைக் கோயிலுக்குத் தானமாக அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றன.
  • “கடலுக்கு மேற்கில், தொண்டமாநத்தத்திற்கு கிழக்கில் பெண்ணையாற்றுக்குத் தெற்கில் வெள்ளாற்றுக்கு வடக்கில் உள்ள நிலங்கள் இக்கோயிலுக்குரிய பட்டா நிலங்களாக இருந்தனவென்றும், அவைகளை அரசு எடுத்துக்கொண்டு அதற்குரியதாக ஆண்டுதோறும் கோயிலுக்கு ரூ.600/- (ரூபாய் அறுநூறு மட்டும்) தருவதாகவும் தெரிகிறது.”
  • பிற்காலத்தில், தொண்டை மாநத்தத்தைச் சேர்ந்த மு. துரைசாமி ரெட்டியார் என்பவர் கோயிலில் ஆராதனைக்காக, வீடுகளை விட்டு அதன் வருமானத்தில் ஆராதனை நடத்துமாறு உயில் சாசனம் எழுதி அதை 26 - 08 - 1912-ல் ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்துள்ள கல்வெட்டு ஒன்று கோயிலில் உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கடலூர் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் புகை வண்டி நிலையம், என்று கைகாட்டி உள்ள பாதையில் (இடதுபுறம்) திரும்பிச் (மங்களபுரீஸ்வரர் - தியாகவல்லி என்று பெயர்ப் பலகை உள்ளது) சென்று, 'இரயில்வே' கேட்டைக் கடந்து நேரே மேலும், சென்று உப்பங்கழியின் மேல்கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக அக்கரையை அடைந்து கோயிலை அடையலாம். (கோயிலுக்குச் செல்லும் வழி நொய்ம்மணலாக இருப்பதால் காலையில் 10 மணிக்குள்ளும், மாலையில் 4 மணிக்குப் பிறகும் செல்வது நலம்.) தொடர்பு : 09442585845

Related Content

திருநெல்வாயில் அரத்துறை தலவரலாறு

திருத்தூங்கானைமாடம் (பெண்ணாகடம்) தலவரலாறு

திருக்கூடலையாற்றூர்

திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டணம்) தலவரலாறு

திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) தலவரலாறு