இறைவர் திருப்பெயர்: சிவக்கொழுந்தீசர், சிவாகங்கரேஸ்வரர், திருந்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: நீலாயதாக்ஷி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்.
தல மரம்:
தீர்த்தம் : 1 கௌரி தீர்த்தம்: பிராகாரத்தில் கிணற்று வடிவிலுள்ளது. சிவபூஜைக்காக அம்பிகையால் உண்டாக்கப்பட்டது. 2 ஜாம்பவான் தீர்த்தம் (சாம்புவ தடாகம்): ஜாம்பவானால் ஏற்படுத்தப்பட்ட இத்தீர்த்தம் தற்போது தாமரைக் குளமாகக் கோயிலின் வடபுறம் அமைந்துள்ளது. 3 கருட தீர்த்தம்: ஏரி வடிவிலுள்ள இத்தீர்த்தத்தின் அருகில் கருட லிங்கக் கோயில் உள்ளது. 4 தேவ தீர்த்தம்: அருகிலுள்ள கடல், தேவ தீர்த்தம் எனப்படுகிறது. 5 சக்கர தீர்த்தம் : ஊரின் மூலையில் உள்ள மற்றொரு தீர்த்தம்
வழிபட்டோர்: சுந்தரர், சேக்கிழார், வீரசேன மன்னன்
- ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவபெருமான் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன் பின்பு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவபெருமான் அவர்களது பக்தியை உலகுக்குக் காட்ட எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, விவசாயி வீட்டிற்குச் சென்று உணவு எடுத்து வருவதாகக் கூறினான். அடியவராக வந்து இறைவன் அவனிடம் "நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்" என்றார். விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். இறைவன் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் அன்று விதைக்கப்பட்டிருந்த தினைப் பயிர்கள் அனைத்தும் நன்கு விளைந்து, கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே அடியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் அன்னமிட்டான். அடியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி? எனத் தன் சந்தேகத்தைக் கேட்டான். அடியவராக வந்த முதியவர் மறைந்து, சிவபெருமானாக அவனுக்குக் காட்சி தந்து, தானே அடியவராக வந்ததை உணர்த்தினார். சிவதரிசனம் கண்டு மகிழ்ந்த விவசாயி இறைவனை அங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். இறைவனும் சுயம்பு லிங்கமாக அவ்விடத்தில் எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது. சிவபெருமான் உணவு சாப்பிட்ட கொன்றை பிரகாரத்தில் உள்ளது.
- வீரசேன மன்னனுக்கு இத்தீர்த்தத்தில் மூழ்கி, வெண்குஷ்டம் தீர்ந்தமையால் அவனே இக்கோயிலைக் கட்டினான் என்பது வரலாறு.
- இத்தலத்துப் பெருமானை திருமாலானவர் மூன்று தினங்கள் வழிபாட்டு, முராசுரனை வதைத்ததால் முராரி என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
- ஜாம்பவான் இங்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நீண்ட ஆயுள் பெற்று, ராம பிரானுடன் ராவணனைத் தேடும் வானர சேனைகளுக்குத் துணை புரிந்தார். அம்பாள் சன்னதியில் இவர் பூஜித்த சிவ லிங்கம் உள்ளது. தீர்த்தம் ஒன்றும் இவர் பெயரில் அமைந்துள்ளது.
- ஸ்தல விருக்ஷமான கொன்றை மரத்தடியில் நந்திதேவர் இறைவனை வழிபட்டுள்ளார். பிராகாரத்தில் உள்ள கொன்றை மரத்தடியில் சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் காணலாம்.
- பதஞ்சலி,வியாக்கிரபாதர் ஆகியோரும் இங்கு வந்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றனர்.
- வங்க தேசத்து மன்னனான விசுவ நிருபன் என்பவன் பிரமஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு ஒவ்வொரு சிவத்தலமாகத் தரிசனம் செய்து கொண்டு வரும்போது திருத்தினை நகரை அடைந்து அங்கிருந்த தாமரைத் தடாகத்தில் விதிப்படி ஸ்நானம் செய்து இறைவனைக் காலந்தோறும் தொழுது வந்தான். அதனால் அவனது சரும நோயும், பிரமஹத்தி தோஷமும் நீங்கின. அவனது மகனான வீர சேனன் என்பவன் இங்கு மூன்று ஆண்டுகள் தங்கித் திருப்பணிகள் செய்வித்தான். இவனது வில்லேந்திய உருவச்சிலையை நால்வர் சன்னதியில் காணலாம்.
- சிவரகசியத்தில் இத்தல மகாத்மியம் கூறப்பட்டுள்ளது. இதனைத் தமிழில் குமார மைய மருந்தார் என்பவர் 854 விருத்தங்களால் இயற்றியுள்ளார்.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சுந்தரர் - 1. நீறு தாங்கிய திருநுத (7.64);
பாடல்கள் : சுந்தரர் - திருத்தினை நகர்உறை (7.58.3);
சேக்கிழார் - பரம் பொருளைப் பணிந்து (12.5.91) தடுத்தாட்கொண்ட புராணம்,
தேவர் பிரான் (12.21.136) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
செல்வம் மல்கிய தில்லை (12.28.962) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
(தனிப் பேருந்தில் செல்வோர்) கடலூர் - சிதம்பரம் பிரதான பாதையில் சிதம்பரத்திலிருந்து 45-ஆவது கி. மீ.ல் ஆலப்பாக்கம் - புதுச்சத்திரம் இவற்றிற்கு இடையில் மேட்டுப்பாளையம் என்னும் இடத்தில் தீர்த்தனகிரி என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 5-கி. மீ. சென்று; தானூர் என்று பெயர்ப் பலகையுள்ள சாலையில் சென்று, தானூரையடைந்து, தெருக்கோடியில் இடப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் சென்று இவ்வூரையடையலாம்.
தொடர்பு :
09443434024