இறைவர் திருப்பெயர்: சுடர்க்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: ஆமோதனம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி.
தல மரம்:
தீர்த்தம் : கெடில நதி, வெள்ளாறு , கயிலைத்தீர்த்தம், பார்வதிதீர்த்தம் (பரமானந்ததீர்த்தம்), இந்திரதீர்த்தம், முக்குளம், வெள்ளாறு.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், தேவகன்னியர், காமதேனு, வெள்ளையானை, இந்திரன், பார்வதி ஆகியோர்.
- இவ்வூரில் ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் 'கடந்தை நகர் ' எனப் பெயர் பெற்றதென்பர்.
- இத்தலத்திற்கு, ஐராவதம் வழிபட்டதால் 'தயராசபதி' என்றும், ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் 'புஷ்பவனம், புஷ்பாரண்யம்' என்றும் இந்திரன் வழிபட்டதால் 'மகேந்திரபுரி' என்றும், பார்வதி வழிபட்டதால் 'பார்வதிபுரம்' என்றும், நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் 'சோகநாசனம்' என்றும், சிவனுக்குகந்த பதியாதலின் 'சிவவாசம்' என்றும் வேறு பெயர்கள் உள்ளன.
- ஆழிபுரண்டக்கால் அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம். எனவே இங்குள்ள இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
- இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடியற்றி வாழ்ந்தனர். மலர் வராமைக் கண்ட இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவை தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை கண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து, பெருமானை வழிபட்டான் என்பது வரலாறு. எனவே மேற்சொல்லிய மூவரும் (பெண் + ஆ + கடம்) வழிபட்டதலம் - பெண்ணாகடம் எனப் பெயர் பெற்றதென்பர்.
- இக்கோயிலுக்கு 'தூங்கானைமாடம்' (கஜப் பிரஷ்டம்) என்பது பெயர்.
- காமதேனு பூசை செய்யும்போது வழிந்தோடிய பால் கயிலை தீர்த்தத்தில் நிரம்பி குளமாகியது என்பர்.
- அப்பர் - சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.
- மூலஸ்தானத்திற்கு வடபால் கட்டு மலைமேல் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப இக்கோயில் கட்டப்பட்டதென்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது.
- வெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்தினை வழிபட வந்த சோழ மன்னன், ஆற்றில் வெள்ளம் வந்தமையால் அக்கரையில் இருந்தவாறே தவஞ்செய்ய, அவனுக்கு அருள்புரியவேண்டி, இறைவன் அவன் காணுமளவுக்கு உயர்ந்து காட்சி தந்தார்; அதுவே இம்மலைக் கோயிலாகும் என்ற செவிவழிச் செய்தியொன்றும் சொல்லப்படுகிறது.
- கலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான் ஆதலின் இறைவனுக்கு 'கைவழங்கீசர் ' என்ற பெயரும் உண்டு.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஒடுங்கும் பிணிபிறவி (1.59); அப்பர் - 1. பொன்னார் திருவடிக்கு (4.109); பாடல்கள் : அப்பர் - சுடர்ப்பவளத் திருமேனி (6.33.5); சேக்கிழார் - கார் வளரும் (12.21.149 & 154) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், ஆங்கு நாதரைப் பணிந்து (12.28.184) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம்
அ/மி. பிரளயகாலேசுவரர் திருக்கோயில்,
பெண்ணாகடம் & அஞ்சல்,
விருத்தாச்சலம் வழி,
திட்டக்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் - 608 105.
மாநிலம் : தமிழ் நாடு
விழுப்புரம் - திருச்சி பாதையில் விருத்தாச்சலத்திற்கு அருகிலுள்ள புகைவண்டி நிலையம். விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் பாதையில் (விருத்தாசலத்திலிருந்த 17-கி. மீ. தொலைவில்) உள்ளது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தொழுதூரிலிருந்து 15-கி. மீ. தொலைவில் உள்ளது.
தொடர்பு :
04143 - 222788, 098425 64768.