logo

|

Home >

devotees >

umapati-sivachariyar-tamil

Om symbol

உமாபதி சிவாச்சாரியார் வரலாறு

Om symbol

தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார், சைவ சித்தாந்த சந்தானக் குரவர்களுள் ஒருவர். தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். அவரின் அறிவுத் திறனை உணர்ந்த சோழ மன்னன் அவருக்கு முத்துப்பல்லக்கு, நாகரா போன்றவற்றை அளித்திருந்தான். ஒரு நாள் இவர் நடராஜரைத் தரிசித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது சைவ சித்தாந்த சந்தானக் குரவரான மறைஞானசம்பந்தர் அவர் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். உமாபதி சிவாசாரியார் தெருவைக் கடந்து செல்லுவதை மறைஞானசம்பந்தரின் சீடர்கள் கூறினர். உடனே மறைஞானசம்பந்தர், "பட்ட கட்டையில் பகற்குருடன் போகிறது!" என்றார். இதைக் கேட்ட உமாபதி சிவாசாரியாருக்கு அச்சொற்களின் ஆழ்ந்த கருத்து புலப்பட உடனே மறைஞானசம்பந்தரின் காலில் விழுந்து அவரைத் தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். மறைஞானசம்பந்தரும் மிகுந்த கல்வியுடைய பக்குவமுடையவரான உமாபதி சிவத்தைத் தன் சீடராக ஏற்றார்.  
ஒருநாள் தன் ஞானகுருவான மறைஞானசம்பந்தருடன் நெசவாளர் தெருவழியாக நடந்து செல்லுகையில் துணிக்குப் போடும் கஞ்சியை எடுத்துக் குடித்தார் மறைஞானசம்பந்தர். அந்தக் கஞ்சியானது அவரின் முழங்கை வழியே வழிந்தது. வழிந்த கஞ்சியை ஒரு பிரசாதமாய்க் கருதித் தானும் பருகினார் உமாபதி சிவாச்சாரியார். எச்சில் உண்டதால் ஆசாரத்திலிருந்து நீங்கியதாகத் தில்லை தீக்ஷிதர்கள் அவரைத் தங்கள் குழுவில் இருந்து விலக்கி வைத்தனர். அன்றிலிருந்து தில்லைக்கு வெளியே கொற்றவன் குடி என்னும் இடத்திலே தங்கி இருந்து வந்தார் உமாபதி சிவாசாரியார்.  இவர் தம் குரு மறைஞானசம்பந்தரிடம் சைவ சித்தாந்தம் பயின்றார். 

ஒரு முறை கோயிலின் உற்சவத்தில் கொடியேற்றும் உரிமை இவருடையதாய் இருந்த போதிலும் இவரை விடுத்து இன்னொரு தீட்சிதருக்கு அந்த உரிமை அளிக்கப் பட்டது, ஆனால் கொடி மேலே ஏறவே இல்லை. பின்னர் உமாபதி சிவாசாரியாரின் பக்தியின் பெருமையை உணர்ந்த மற்ற சில தீட்சிதர்களால் அவர் வரவழைக்கப் பட்டார். உமாபதி சிவாசாரியார் கொடிக்கவி என்னும் நூலை ஒவ்வொரு பாடலாகப் பாடப் பாடக் கொடியும் மேலே ஏறி, ஐந்தாவது பாடலில் முழுதும் மேலே ஏறியது. தில்லை வாழந்தணரும் பிறரும் இவர்தம் பெருமை கண்டு வியந்தனர்.

அக்காலத்தில், பெற்றான் சாம்பான் என்ற சிவனடியார் ஒருவர் இருந்தார். தில்லைத் திருக்கோயில் மடைப்பள்ளிக்கு, நாள்தோறும் விறகு கொடுக்கும் திருப்பணியை மேற்கொண்டிருந்தார். பற்றற்று, பலன் ஏதும் கருதாமல், சிவபரம்பொருளை சிந்தித்துப் பணிபுரிந்த அவர் தம் பக்குவ நிலையின் காரணமாக ஈசன் அவர் தம் கனவில் எழுந்தருளி, 
""அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங் 
குடியார்க்கெழுதிய கைச் சீட்டு - படியின் மிசைப் 
பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து 
முத்தி கொடுக்க முறை'' 
என்ற வெண்பாவைத் திருமுகமாகத் தந்து, உமாபதியாரிடம் கொடுக்கும் வண்ணம் பணித்தார். கனவில் கண்டபடி, திருமுக ஓலை பெற்றான் சாம்பானின் கையில் இருந்தது. உமாபதியாரின் திருமடத்திற்கும் பெற்றான் சாம்பான் விறகு உதவத் தொடங்கினார். ஒருநாள் உமாபதி சிவாச்சாரியரைக் கண்ட பெற்றான் சாம்பான், சிற்றம்பலவன் தந்தருளிய திருமுகத்தைப் பணிவுடன் தந்து வணங்கி நின்றார். தம் வழிபடு தெய்வமாகிய ஆடலரசன் அனுப்பிய திருமுகத்தைப் படித்த உமாபதியார், பெற்றான் சாம்பானுக்கு, "சத்தியோ நிர்வாண' தீட்சையை செய்து முத்தியளித்தார். பெற்றான் சாம்பான் உடலோடு முத்தி பெற்றார்.

பெற்றான் சாம்பான் முத்தி பெற்றதை உணர முடியாத சாம்பானின் மனைவி, உமாபதியார், ஏதோ மந்திரத்தால், தம் கணவனை எரித்துவிட்டதாக மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் உமாபதியார் மடத்துக்கு வந்து விசாரித்தான். சிவபரம்பொருளின் அடியவரான உமாபதியாரும் உண்மையைக் கூறி விளக்கினார். வேந்தன் உணர்ந்தபோதும், பெற்றான் சாம்பான் மனைவியும் பிறரும் கண்டுணரும் வண்ணம் மற்றொரு முறை அவ்வற்புதத்தைச் செய்தருள வேண்டும் என்றான் மன்னன். அதற்கு உடன்பட்ட உமாபதி சிவாசாரியார், அப்போது, அவ்விடத்தில் முத்திப்பேறு அடையும் பக்குவமுடையவர் எவரும் இல்லாத காரணத்தால், தாம், நாள்தோறும் சிவனார்க்குப் பூசை செய்யும்போது விழும் திருமஞ்சன நீரால், புண்ணியம் மிக்கு வளர்ந்திருந்த முள்ளிச் செடியைக் காட்டி, அதற்கு முத்தியளிப்பதாகக் கூறி, அம் முள்ளிச் செடிக்கு தீட்சையளித்தார். முள்ளிச் செடியும் பேரொளியோடு முத்தி பெற்றது. அவ்வற்புதத்தை வேந்தனும் பிறரும் கண்டு வியந்தனர்.

சைவ சித்தாந்த சந்தான நூல்களில் இவர் இயற்றிய நூல்கள் எட்டு ஆகும். அவை சித்தாந்த அட்டகம் எனப் போற்றப்படுபவை. கோயிற்புராணம் என்ற பெயரில் சிதம்பரத்தின் தல வரலாற்றையும் எழுதி இருக்கின்றார் இவர். சேக்கிழாரின் வரலாற்றையும் சேக்கிழார் புராணம் என்ற பெயரில் இவர் எழுதி இருக்கின்றார். தமிழைப் போலவே வடமொழியிலும் புலமை பெற்றிருந்த இவர், பௌஷ்கர ஆகமம் என்னும் நூலுக்கு பாஷ்யமும் எழுதி இருக்கின்றார். 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் உமாபதி சிவாச்சாரியார். இவருடைய சீடர் அருள் நமச்சிவாயர் - திருவாவடுதுறை மடத்தை நிறுவியவர். உமாபதி சிவம் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறைவனோடு கலந்தவர்.

சித்தாந்த அட்டகம்:

  • சிவப்பிரகாசம் 
  • திருவருட்பயன் 
  • வினா வெண்பா 
  • போற்றி பஃறொடை 
  • கொடிக்கவி 
  • நெஞ்சு விடு தூது 
  • உண்மை நெறி விளக்கம் 
  • சங்கற்ப நிராகரணம் 

இவை தவிர அவர் பல நூல்களும் எழுதியுள்ளார் (இவை உமாபதியார் திருமுறை மீது கொண்டிருந்த உயர்ந்த மரியாதையைக் காட்டுகின்றன)

உமாபதிசிவம் இயற்றிய வடமொழி நூல்கள்:

  • சதரத்னசங்கிரஹம் (சதரத்ன உல்லேக  என்ற உரை இந்நூலுக்கு உள்ளது.)
  • பாதஞ்சல சூத்ரம் (சிதம்பரம் வழிபாடு மற்றும் விழாக்கள் பற்றி)
  • நடராஜ ஸஹஸ்ரநாமம் 
  • நடராஜ த்வனி மந்த்ர ஸ்தவம் 
  • குஞ்சிதாங்க்ரிஸ்தவம் 
  • யந்த்ர விதான டீகா 
  • ஸ்ரீ ருத்ர பாஷ்யம் 
  • சமக பாஷ்யம் 
  • வாயுஸம்ஹிதா பாஷ்யம் 
  • பௌஷ்கர ஆகம வ்ருத்தி

Related Content

Oh parrot, tell my Lord's name

தில்லைத் திருப்பதிகங்கள்

Koyilpuranam Lectures

தில்லைவாழ் அந்தணர் யார்?

Crystal Needs Light; We Need Grace!