கொந்தலர்பூம் பொழிற்கச்சிநகரே காலிக் குலத்தலைவர் தவர்குறிப்புக் குறித்து ளார்பால் வந்திறைவர் நமக்கின்று தாரீ ராகின் வருந்துமுட லெனவாங்கி மாசு நீத்த கந்தைபுல ராதொழிய மழையு மாலைக் கடும்பொழுதும் வரக்கண்டு கலங்கிக் கன்மேற் சிந்தமுடி புடைப்பளவிற் றிருவே கம்பர் திருக்கைகொடு பிடித்துயர்வான் சேர்த்தி னாரே.
தொண்டைமண்டலத்திலே, காஞ்சீபுரத்திலே, ஏகாலியர் குலத்திலே, சிவனடியார்களுடைய திருக்குறிப்பையறிந்து அவர்களுக்குத் தொண்டு செய்கின்றமையால் திருக்குறிப்பையறிந்து அவர்களுக்கு தொண்டு செய்கின்றமையால் திருக்குறிப்புத்தொண்டர் எனப்பெயர் பெற்ற ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகுந்த விருப்பத்தோடு சிவபத்தர்களுக்கு வஸ்திரம் ஒலித்துக் கொடுத்து வருங்காலத்திலே, ஏகாம்பர நாதசுவாமி குளிர்காலத்தில் ஒரு சிவபத்தர் வேடங்கொண்டு மெலிந்த சரீரத்தையுடைய ஒரு வறியவர் போலாகி, அழுக்கடைந்த கந்தையுடன் அவரிடத்திற் சென்றார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் அவரைக் கண்டு எதிர் கொண்டு வணங்கி, பல உபசார வார்த்தைகளைச் சொல்லி அவருடைய குறிப்பையறிந்து, "உந்தக் கந்தையைத் தந்தருளும்; ஒலித்துத் தருகின்றேன்" என்றார் சிவபத்தர் வேடங்கொண்ட கடவுள். "இந்தக் கந்தை அழுக்கு அதிகமாக ஏறப்பெற்றுத் தகுதியில்லாத தாயிருந்தாலும், குளிர் மிகுதியினால் வருத்த முறுகின்ற படியால் கைவிடுதல் கூடாது. அஸ்தமயனத்திற்கு முன் தருவீராகில், கொண்போய்ச் சீக்கிரம் ஒலித்துக்கொண்டு வாரும்" என்றார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் 'அடியேன் தாழ்க்காமல் ஒலித்து அஸ்தமயனத்திற்கு முன் கொண்டுவந்து தருகின்றேன்; தந்தருளும்" என்று சொல்ல; சுவாமி "விரைவிலே ஒலித்து உலர்த்தித் தராதொழிவீராயில், இந்தத் தேகத்துக்குத் துன்பஞ்செய்தீர்" என்று சொல்லி, அக்கந்தையை அவர் கையிற் கொடுத்தார்.
திருக்குறிப்புத்தெகண்டநாயனார் அதை வாங்கிக்கொண்டு ஒரு குளத்திற்சென்று, முன் சிறிதழுக்குப் போக்கி வெள்ளாவியில் வைத்து, பின் ஒலிக்கப்புகுந்தார். அப்பொழுது பரமசிவனுடைதி திருவருளினாலே நண்பக லொழிந்து பின்பகல்போலத் தோன்றும் படி மேகங்கள் இருண்டு ஆகாயவெளியெல்லாம் மறைத்து மழைபெய்தன. அது கண்டு, திருக்குறிப்புத்தொண்டர் சிவபத்தருக்குத் தாம் வாக்குச் செய்ததை நினைந்து, "இனி நான் யாதுசெய்வேன்" என்று கவலையுற்று. விரைவிலே மழைவிடவுங் கூடுமென்று அங்கே தானே நின்றார். அது விடவில்லை. பின் இராக்காலம் வர, திருக்குறிப்புத்தொண்டர் "குளிரினாலே திருமேனி நடுங்குகின்ற சிவபத்தருக்கு நான்செய்யவிரும்பிய பணிவிடை, ஐயையோ! தவறிப்போயிற்றே" என்று கீழே விழுந்தார். மழைவிடாது; சிவபத்தர் சுட்டிய காலமோ நீங்கிற்று. முன்னேயே ஒலித்தது வீட்டிலே காற்றினல் உலரும்படி கட்டிவிட்டேனுமில்லை. சிவபத்தரது திருமேனி குளிரினால் வருந்தும்படி தீங்குசெய்த சிறியேனுக்கு இனியதுவே செயல்" என்று எழுந்தார். "வஸ்திரங்களைப் புடைக்கின்ற கற்பாறையிலே எனது தலையைச் சிந்தும்படி சர்வவியாபகராகிய பரமசிவனுடைய திருக்கரம் அந்தக் கற்பாறையின் பக்கத்திலே தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது ஆகாயத்தினின்று சொரிந்த நீர்மழை நீங்கிப் பூமழை பொழிந்தது. பரமசிவன் உமாதேவியாரோடும் இடபாரூடராய்க் காட்சி கொடுத்தருளினார். திருக்குறிப்புத்தொண்டநாயனார் மிகுந்த அன்பினோடு விழுந்து நமஸ்கரித்து எழுந்து, அஞ்சலி செய்துகொண்டு நின்றார். பரமசிவன் அவரை நோக்கி, "உனது பத்திவலிமையை மூவுலத்தர்களுக்குந் தெரிவித்தோம். இனி நீ நம்முடைய உலகத்தையடைந்து பேரின்பம் பெற்று வாழ்ந்திரு" என்று திருவருள் புரிந்து சென்றருளினார்.
திருச்சிற்றம்பலம்
பசுபதியாகிய சிவனே தமக்கு உறவு எனத் துணிந்த மெய்யுணர்வுடையோர் குடும்பத்தோடு கூடி இருப்பினும் உயிர்ச்சார்பு பொருட்சார்புகளினும் சரீரத்தினும் சிறிதும், பற்றுவையாது, சிவனிடத்தே இடையறாத மெய்யன்புடையவராகி, தமது மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றும் அவருக்குத் திருத்தொண்டு செய்தற்பொருட்டே கிடைத்தமையால், அம்மூன்றையும் அவரது தொண்டிற்கே ஆக்கி ஒழுகுவர். ஆசை அற்றாரே முத்தி பெறுவர் என்பது "மண்ணினுந் தனத்தினு மனைக்கு வாய்த்தநர் - பெண்ணினு மகவினும் பெரிய பேரினுந் - துண்ணென விழைவினைத் துறந்த தூயரே - விண்ணினு மின்புடன் விளங்கி மேவுவார்." "ஆக்கையிற் றுயர்பெரி தற்ப மின்பமென் - றாக்கையை யறவெறுத் தார்வங் கூர்வரே - லாக்கையினநாதியே முத்தனுக்கவ - னாக்கையுந் துயரமு மறுப்பனாணையால்" என்னும் சிவதருமோத்தரச் செய்யுள்களால் உணர்க. மனம் முதலிய மூன்றும் சிவனுக்குத் தொண்டு செய்தற் பொருட்டே கிடைத்தன என்பது "வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சுந் - தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் - சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே - வீழ்த்த வாவினையே னெடுங் காலமே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தான் அறிக. இவ்வாறு ஒழுகும் பெருந்தன்மையினர் சிவனடியாரைச் சிவன் எனவே கண்டு, வணங்கி, அவர் குறிப்பறிந்து, அவருக்குத் தம்மால் இயலும் தொண்டை வழுவாது செய்தலே தமக்குச் செல்வம் எனக் கொள்வர். "சிவநேசர் பாதம் வணங்கிச் சிறக்க - வவரேவல் செய்க வறிந்து" என்னும் சைவசமயநெறித் திருக்குறளானும் உணர்க.
இவ்வாறு பிரபஞ்ச வைராக்கியமும் சிவபத்தியும் உடையராய், சிவனடியார்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்தமையான் மிகச் சிறப்புற்றவர் இத்திருக்குறிப்புத் தொண்டநாயனார். இவர் மனம் முதலிய மூன்றும் சிவன் பணிக்கே ஆக்கினார் என்பது "மண்ணின் மிசை வந்ததற் பின் மனமுதலா யினமூன்று - மண்ணலார் சேவடியின் சார்வாக வணைவிப்பார்" என்பதனாலும், சிவனடியார்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்தார் என்பது "புண்ணிய மெய்த்தொண்டர்திருக் குறிப்பறிந்து போற்று நிலைத் - திண்மையினாற் றிருக்குறிப்புத் தொண்டரெனுஞ் சிறப்பினார்" என்பதனாலும், இங்கே உணர்த்தப்பட்டன. இந்நாயனார், தாம் ஏகாலியராதலின், சிவனடியார்களுக்குச் சிரத்தையோடு வஸ்திரம் ஒலித்துக் கொடுத்தலே முக்கியத் தொண்டாகக் கொண்டனர். இவர் இத்தொண்டைச் சிரத்தையோடு செய்தார் என்பதும், குடும்பத்தோடு கூடியிருந்தும் வாசனை மாண்டு நின்றார் என்பதும், இவர் அடியார் வேடங் கொண்டு வந்த பரமசிவனுக்குத் தாம் குறித்த காலத்தில் கந்தை ஒலித்து உலர்த்திக் கொடுக்க இயலாமையாற் பதைப்புற்று, வஸ்திரங்களைப் புடைக்கும் கற்பாறையிலே தமது தலையை எற்றினமையாலே, செவ்விதிற்றுணியப்படும். இவரது மெய்யன்பினாலாகிய இச்செயற்கருஞ் செயலைத் தரிக்கலாற்றாமையனன்றோ, கிருபா சமுத்திரமாகிய சிவன் அக்கற்பாறையின் பக்கத்திலே தமது திருக்கரத்தைத் தோற்றுவித்து, இவரைப் பிடித்தருளி, பின் இவருக்கு இடபாரூடராய் வெளிப்பட்டு,
முத்தி கொடுத்தருளினார். சர்வான்மாக்களும் தம்மாட்டு மெய்யன்பு செய்து உய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையினாலன்றோ, சிவன் இவரது அன்பின் செயலை மூவுலகத்திற்கும் அறிவித்தார், ஐயையோ! இது கண்டும், சிவனிடத்தே சிறிதும் அன்பு செய்யாது வாணாளை வீணாளாகப் போக்கும் எம்போலிகளது அறியாமை இருந்தபடி என்னை!
திருச்சிற்றம்பலம்
See Also:
1. திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் (தமிழ் மூலம்)
2. thirukkuRipputh thoNda nAyanAr purANam in English prose
3. Tiru-k-Kurippu-th-Tonda Nayanar Puranam in English Poetry