logo

|

Home >

devotees >

siruthonda-nayanar-puranam

சிறுத்தொண்ட நாயனார் புராணம்

 

Siruthonda Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


பல்குமருத் துவரதிபர் செங்காட்டங் குடிவாழ்
    படைத்தலைவ ரமுதளிக்கும் பரஞ்சோதி யார்மெய்ச்
செல்வமிகு சிறுத்தொண்டர் காழி நாடன்
    றிருவருள் சேர்ந் தவர்வளருஞ் சீராளன் றன்னை
நல்குதிரு வெண்காட்டு நங்கைசமைத் திடப்பின்
    னன்மதிச்சந் தனத்தாதி தலைக்கறியிட் டுதவப்
புல்கவரும் வயிரவர்தா மகிழ்ந்துமக வருளப்
    போற்றியவர் சிவனருளே பொருந்தினாரே.

சோழமண்டலத்திலே, திருச்செங்காட்டங்குடியிலே, மகாமாத்திரர் குலத்திலே, பரஞ்சோதியாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஆயுள் வேதங்களிலும், படைக்கலத் தொழில்களிலும், குதிரை யேற்றம், யானையேற்றங்களிலும் மிகச் சிறந்தவர். வேதமுதலிய நூல்களை மெய்ப்பொருளை அறிதல் வேண்டுமென்னும் அவாவினோடு திருவருளை முன்னிட்டு ஓதியுணர்ந்தமையால், பரமசிவனே மெய்க்கடவுள் என்றும், அவருடைய திருவடிகளை அடைதலே முத்தி நெறியென்றுந் தெளிந்து, அவருடைய திருவடிகளை அகோராத்திரம் இடைவிடாது அன்பினோடு தியானிப்பவராயினார். சிவனடியார்களுக்கு எக்காலமுந் திருத்தொண்டு செய்பவர்.

அவர் அரசனிடத்திலே அணுக்கராகி, அவன்பொருட்டு யானை செலுத்திக் கொண்டு சென்று, அவனோடு மாறுபட்ட பலவரசர்களை வென்று, அவர்களை தேசங்களைக் கைப்பற்றி, அவனால் நன்கு மதிக்கப்பட்டவர். ஒருமுறை உத்தரதேசத்திலே வாதாவியென்னும் நகரத்திற்சென்று, அதனை வென்று, பலவகையிரத்தினங்களும், நிதிக்குவைகளும் யானைக்கூட்டங்களும், குதிரைக்கூட்டங்களும் அரசனுக்கு முன்கொண்டுவந்தார். அது கண்டு, அரசன் அவருடைய யானையேற்றத்தின் வலிமையை அதிசயித்துப் புகழ்ந்து பேச, அவரை அறிந்த மந்திரிகள் அரசனை நோக்கி "மகாராஜாவே! இவர் பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்கையால் இவ்வுலகத்திலே இவருக்கு எதிராவார் ஒருவருமில்லை" என்றார்கள். அரசன் அதைக் கேட்டு அஞ்சி நடுநடுங்கி, இரண்டு கண்களினின்றுஞ் சோகபாஷ்பஞ் சொரிய, 'இவர் நமது கடவுளாகிய பரமசிவனுடைய திருத்தொண்டர் என்பதை உணராது, கொடிய போர்முனையிலே விட்டிருந்தேன், ஐயையோ! இது எவ்வளவு கொடிய பாவம்" என்று சொல்லி, பின்பு பரஞ்சோதியாரை நோக்கி "சுவாமீ! இக்குற்றத்தைப் பொறுத்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்து நமஸ்கரித்தான். பரஞ்சோதியார் அரசன் தம்மை நமஸ்கரித்தற்கு முன் தாம் அவனை நமஸ்கரித்து, "மகாராஜாவே! நான் எனது உரிமைத் தொழிற்கு அடுத்த திறத்தைச் செய்வேன். அதனாலே என்ன தீங்கு" என்றார். அரசன் அவருக்கு நிறைந்த நிதிக்குவைகளையும் விருத்திகளையுங்கொடுத்து, "நீர் உம்முடைய நிலைமையை நான் அறியாவண்ணம் நடத்திக்கொண்டு வந்தீர். இனி என் மனக்கருத்துக்கு இசைந்து, எனக்குப் பணிசெய்தலை ஒழிந்து, நீர் விரும்பியவாறே சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் வெளிப்படத்ட் திருத்தொண்டு செய்யும்" என்று விடைகொடுத்தான். பரஞ்சோதியார் விடைபெற்றுக் கொண்டு, தம்முடைய திருப்பதியிற்சென்று, கணபதீச் சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வணங்கி, அவருக்குத் திருத்தொண்டுகளை வழுவாது செய்வாராயினார். திருவெண்காட்டுநங்கையாரென்னும் மங்கையாரோடு கூடி இல்லறத்தில் வாழ்ந்திருந்து, நாடோறும் முன்னே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து, பின் தாம் உண்பார் சிவனடியார்களை மிகுந்த அன்பினோடு வழிபட்டு, அவர்கள் திருமுன்பே மிகச்சிறியராய் ஒழுகுகின்றமையால், அவருக்குச் சிறுத்தொண்டரென்னும் பெயர் கொடுக்கப்பட்டது கணபதீச்சுரருடைய திருவருளினாலே அவருக்குத் திருவெண்காட்டுநங்கையாரிடத்த்லே, சீராள தேவரென்னும் புத்திரர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயசிலே வித்தியாரம்பஞ் செய்வித்தார். அந்நாளிலே அத்திருப்பதிக்கு எழுந்தருளி வந்த திருஞானசம்பந்தப்பிள்ளையாரை எதிர்கொண்டு அழைத்து, அவரை வணங்கித் துதித்து, அவராலே திருப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடியருளப்பட்டார்.

சிவபெருமான் சிறுத்தொண்டநாயனாருடைய மெய்யன்பை நுகர்ந்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, உட்சமயங்களாறனுள் ஒன்றாகிய வைரவத்துக்கு உரிய திருவேடங்கொண்டு, திருக்கைலாசத்தினின்றும் நீங்கி, திருச்செங்காட்டங்குடியை அடைந்து சிறுத்தொண்டநாயனாருடைய வீட்டுவாயிலிற்சென்று, "சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கின்றாரோ" என்று வினாவ; தாதியாராகிய சந்தனநங்கையார் முன் வந்து வணங்கி, "சுவாமீ! அவர் சிவனடியார்களைத் தேடிப் புறத்தே போய்விட்டார். தேவரீர் உள்ளே எழுந்தருளும்" என்றார். அதற்கு வைரவர் "பெண்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகோம்" என்று அருளிச்செய்ய; திருவெண்காட்டுநங்கையார் அதைக்கேட்டு, "இவ்வடியவர் போய்விடுவார் போலும்" என்று பயந்து, விரைந்து வந்து, "சுவாமீ! அடியேனுடைய நாயகர் எப்போதும் சிவனடியாரைத் திருவமுது செய்விப்பவர். இன்றைக்கு ஒருவரையுங் காணாமையால் தேடிப்போயினார். தேவரீருடைய திருவேடத்தைக் கண்டாராயின் மிகமகிழ்வர். இனித்தாழ்க்கார் இப்பொழுதே வந்து விடுவார் எழுந்தருளியிரும்" என்று விண்ணப்பஞ் செய்தார். வைரவர் "நாம் உத்தரதேசத்திலுள்ளேம். சிறுத்தொண்டரைக் காண வந்தேம். எப்படியும் அவர் இல்லாத போது நாம் இங்கே இரேம். கணபதீச்சரத்தில் உள்ள திருவாத்தி மரத்தின் கீழ் இருக்கின்றாம். அவர் வந்தமாத்திரத்திலே அவருக்குத் தெரிவியுங்கள்" என்று சொல்லித் திருவாத்தியை அணைந்து அதன்கீழ் இருந்தருளினார்.

சிறுத்தொண்டநாயனார் சிவனடியார்களைத் தேடி எங்குங் காணாது, வீட்டுக்குத் திரும்பிவந்து, மனைவியாருக்குச் சொல்லித் துக்கித்தார். மனைவியார் "உத்தரதேசவாசியாகிய ஒரு வைரவர் இங்கு வந்து, தாங்கள் இங்கே எழுந்தருளியிருக்கும்படி சொல்ல, அது கேளாது கணபதீச்சரத்தில் உள்ள திருவாத்தியின் கீழே போய் இருக்கின்றனர்" என்றார். உடனே சிறுத்தொண்ட நாயனார் மிகுந்த விருப்பத்தினோடு விரைந்து சென்று, அவரைக் கண்டு வணங்கி நிற்க, அவர் "பெரியசிறுத் தொண்டர் நீரோ" என்று திருவாய்மலர்ந்தருளினார். சிறுத்தொண்டநாயனார் அவரை வணங்கி, "சுவாமீ! சிவனடியார்கள் தங்கள் கருணை மேலீட்டினாலே அடியேனையே அப்படி அருளிச்செய்வார்கள். அது நிற்க. இன்றைக்குத் திருவமுதுசெய்யவேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். வைரவர் "அன்பரே! நாம் உத்தர தேசத்தில் உள்ளேம் உம்மைக் காண வந்தோம். நம்மை அமுது செய்வித்தல் உம்மால் முடியாது. அது மிக அருமை" என்றார். சிறுத்தொண்டநாயனார் "தேவரீர் திருவமுது செய்தருளும் இயல்பை அருளிச்செய்யும். சீக்கிரம் பாகம் பண்ணுவிப்பேன். சிவனடியார்கள் தலைப்பட்டால் தேடுதற்கு அரியனவும் எளியனவாம்" என்று விண்ணப்பஞ் செய்ய; வைரவர் "நாம் ஆறு மாசத்துக்கு ஒருமுறை பசுவைக் கொன்று உண்போம். அதற்கு உரிய நாளும் இந்நாளேயாம். அப்படியூட்டுதல் உம்மாலியலாது" என்றார். சிறுத்தொண்டநாயனார் "மிகநன்று, அடியேன் அநேக பசுக்களையுடையேன். தேவரீருக்குப் பிரீதியாகிய பசு இன்னது என்று அருளிச் செய்வீராகில், அடியேன் விரைந்து சென்று பாகம் பண்ணுவித்துக் காலந்தாழ்க்காமல் வருவேன்" என்று சொல்ல; "வைரவர் நாம் உண்பது நரபசு, அது ஐந்து வயசினையுடையதாயும், அவயவப் பழுதில்லாததாயும், ஒரு குடிக்குத் தான் ஒன்றேயாயும் இருக்க வேண்டும். அவ்வியல்புடைய சிறுவனை மனமகிழ்ச்சியோடு தாய் பிடிக்கத் தந்தை அரிதல் வேண்டும். இப்படிச் சமைக்கப்பட்ட கறியே நாம் இங்கு உண்போம்" என்றார் சிறுத்தொண்டநாயனார் "தேவரீர் திருவமுது செய்வீராகில், அடியேனுக்கு இதுவும் அரிதன்று" என்று சொல்லி, அவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போயினார்.

சிறுத்தொண்டநாயனாருடைய வரவை நோக்கி நின்ற மனைவியார் அவருடைய மலர்ந்த முகத்தைக் கண்டு அவரை வணங்கி, அடியாருடைய செய்கையை வினாவ; அவர் மனைவியாரை நோக்கி "ஒருகுடிக்கு ஒரே சிறுவனாகி ஐந்து வயசுடையனுமாய் அவயவப் பழுதில்லாதவனுமாய் இருக்கும் பிள்ளையை மனமகிழ்ச்சியோடு தாய்பிடிக்கத் தந்தையரிந்து சமைத்தால் திருவமுதுசெய்தற்கு உடன்பட்டருளினர்" என்றார் அப்பொழுது மனைவியார் "அவ்வடியவரை அவர் விரும்பியபடி திருவமுது செய்விக்கும்பொருட்டு ஒரு குடிக்கு ஒருவனாஞ் சிறுவனைப் பெறுவது எப்படி" என்று சொல்ல; சிறுத்தொண்டநாயனார் "என்பிராணநாயகியே! இத்திறத்துச் சிறுவனை வேண்டிய திரவியங்களைக் கொடுத்தால் தருவாருளராயினும், நேர்நின்று அச்சிறுவனை அரியத்துணியுந் தந்தை தாயாரோ இல்லை. இனித் தாழ்க்காது நாம் பெற்ற சிறுவனையே அழைப்போம்" என்றார். மனைவியார் அதற்கு இசைந்து, "நம்மைக் காக்கும் பொருட்டு அவதரித்த புதல்வனைப் பள்ளிக்கூடத்தினின்றும் அழைத்துக் கொண்டு வாரும்" என்று சொல்ல; சிறுத்தொண்ட நாயனார் மனமகிழ்ச்சியோடு பள்ளிக்கூடத்துக்கு விரைந்து சென்று, தம்முடைய புதல்வராகிய சீராள்தேவரை எடுத்துத் தோண் மேல் வைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பி வந்தார். மனைவியார் எதிர்வந்து புதல்வரை வாங்கி, திருமஞ்சன மாட்டி, கோலஞ்செய்து, நாயகர்கையிற் கொடுத்தார். அவர் அடுக்களையிற் செல்லாது உலகத்தவர்கள் அறியாவண்ணம் ஓர் மறைவிடத்திற் கொண்டு போனார். அப்பிள்ளையைப் பெற்ற தாயார் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டு வந்தார். தந்தையார் புதல்வரை எடுத்து அவருடைய தலையைப் பிடிக்க; தாயார் அப்புதல்வருடைய இரண்டு கால்களையுந் தம்முடைய மடியிலே இடுக்கி, அவர் கைகள் இரண்டையும் தம்முடைய கைகளினாலே பிடிக்க, அப்புதல்வர் தம்முடைய தந்தை தாயார் மிக மகிழ்கின்றனரென்று மகிழ்ந்து நகை செய்ய, தந்தையார் மனமகிழ்ச்சியோடு ஆயுதத்தினாலே அவருடைய தலையை அரிதலாகிய அரிய செய்கையைச் செய்தார். திருவெண்காட்டு தங்கையார் அறுத்த தலையின் இறைச்சி திருவமுதுக்கு ஆகாது என்று கழித்து, அதனை மறைத்து நீக்கும்பொருட்டுச் சந்தனநங்கையார் கையிற் கொடுத்துவிட்டு, மற்றையுறுப்புக்களின் இறைச்சிகளெல்லாவற்றையும் அறுத்துப் பாகம்பண்ணி, வேறுகறிகளும் அமைத்து, சோறுஞ் சமைத்துக்கொண்டு, நாயகனாருக்குத் தெரிவித்தார்.

நாயகராகிய, சிறுத்தொண்டநாயனார் பெருங்களிப்புடையராகி, விரைந்து சென்று, திருவாத்தியின்கீழ் இருந்த வைரவரை வணங்கி, "சுவாமி! தேவரீர் பிரீதிப்படி பாகம் பண்ணுவித்தேன் எழுந்தருளிவந்து திருவமுது செய்தருளல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்து, அவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய், ஆசனத்தில் இருத்தி, அவருடைய திருவடிகளை ஜலத்தினால் விளக்கி, அந்தத் தீர்த்தத்தைத் தங்கள் சிரசின் மேலே தெளித்து, வீடெங்கும் புரோக்ஷித்து, அவரைப் புஷ்பங்களினால் அருச்சித்துத் தூபதீபங்காட்டி வணங்கினார். வணங்கியபின், நாயனாரும் மனைவியாரும் வைரவரை நோக்கி, "சுவாமீ! திருவமுது படைக்கும் வகை எப்படி" என்று கேட்க; வைரவர் "அன்னத்துடன் கறிகளெல்லாம் ஒருங்கே படைக்கவேண்டும்" என்றார். மனைவியாராகிய திருவெண்காட்டுநங்கையார் பரிகலந்திருத்தி, அன்னமுங் கறியமுதும் படைத்தார். வைரவர் அதைப் பார்த்து, "நாஞ் சொல்லியமுறையே கொன்ற பசுவினது உறுப்புக்களெல்லாவற்றையும் பாகம்பண்ணினீரா" என்று வினாவ; திருவெண்காட்டுநங்கையார் "தலையிறைச்சி மாத்திரம் திருவமுதுக்கு ஆகாது என்று கழித்துவிட்டோம்" என்றார். வைரவர் "அதுவும் நாம் உண்பது" என்றார். அதுகேட்டுச் சிறுத்தொண்டநாயனார் மனைவியாரோடுந் திகைத்து அயர; சந்தனநங்கையார் "நான் அத்தலை யிறைச்சியை அடியவர் திருவமுதுசெய்யும்பொழுது நினைக்கவரும் என்று முன்னமே பாகம் பண்ணி வைத்தேன்" என்று சொல்லி எடுத்துக் கொடுக்க; திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து, வாங்கிப் படைத்தார். அதன்பின் வைரவர் சிறுத்தொண்டநாயனாரை நோக்கி, "நாந்தனியே உண்ணோம். சிவனடியார்களைக் கொண்டுவாரும்" என்று அருளிச்செய்ய; சிறுத்தொண்டநாயனார் ஏங்கி, "ஐயோ அடியவர் திருவமுது செய்தற்கு இடையூறு இதுவோ" என்று நினைந்து, வீட்டுக்குப் புறத்திலே போய் சிவனடியார்களைத்ட் தேடிக் காணாது துக்கத்தோடு திரும்பிவந்து, வைரவரை வணங்கி, "சுவாமீ! சிவனடியார்களைக் காணேன். அடியேனும் திருநீறிடுவாரைக் கண்டு அன்னங்கொடுப்பேன்" என்று விண்ணப்பஞ்செய்ய; வைரவர் சிறுத்தொண்டநாயனாரை நோக்கி, "உம்மைப்போலத் திருநீறிட்டார் உளரோ? நீர் இருந்து உண்ணும்" என்று சொல்லி பின் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, "இவருக்கு வேறொரு பரிகலத்திருத்தி, அன்னமும் இறைச்சியும் நமக்குப் படைத்ததில் எடுத்துப் படையும்" என்று அருளிச்செய்ய; அவரும் அப்படியே எடுத்துப் படைத்தார். சிறுத்தொண்டநாயனார் வைரவரை ஊட்டவேண்டி, உண்ணப்புகலும், வைரவர் தடுத்தருளி; "ஆறுமாசத்துக்கு ஒருமுறை உண்ணுகின்ற நீர் முன் உண்பது என்னை! நம்முடன் உண்ணும்பொருட்டு உமக்குப் புத்திரன் உண்டேல் அழையும்" என்றார் சிறுத்தொண்டநாயனார் "இப்போது அவன் உதவான்" என்று சொல்ல; வைரவர் " அவன் வந்தாற்றான் நாம் உண்போம் தேடி அழையும்" என்றார். சிறுத்தொண்டநாயனார் தரியாது எழுந்து மனைவியாரோடு விரைந்து வீட்டுக்குப் புறத்திலே போய், "புதல்வனே வா" என்று அழைக்க; மனைவியாரும் நாயகரது பணியில் நிற்பாராகி, "சீராளனே! சிவனடியார் அடியேங்கள் உய்யும்பொருட்டு உடனுண்ண உன்னை அழைக்கின்றார் வா" என்று அழைத்தார். அப்பொழுது அப்புதல்வர் பரமசிவனது திருவருளினாலே பள்ளிக் கூடத்தினின்றும் ஓடி வருவார்போல வந்தார். தாயார் அவரை எடுத்துத் தழுவி நாயகர் கையிற்கொடுக்க; அவர் "இனிச் சிவனடியார் திருவமுது செய்யப்பெற்றோம்" என்று மனமிகமகிழ்ந்து, அப்புதல்வரை விரைவிற்கொண்டு அடியவரைத் திருவமுது செய்வித்தற்கு உள்ளே வந்தார். அதற்கு முன் வைரவர் மறைந்தருள; சிறுத்தொண்டநாயனார் அவரைக்காணாமையால் மனங்கலங்கித் திகைத்து விழுந்தார். கலத்திலே இறைச்சிக்கறியமுதைக் காணாமையால் அச்ச முற்றார். "வைரவர் அடியேங்கள் உய்யும் பொருட்டுத் திருவமுது செய்யாமல் எங்கே ஒளித்தனரோ" என்று தேடி மயக்கங்கொண்டு, புறத்திற்செல்ல; அச்சிறுத்தொண்ட நாயனார் செய்தது நிஷித்தானுட்டானமாயினும், அவர் சிவானந்தானுபவமேலிட்டு நிற்கையால் கருவிகரணங்கள் தற்போதச்சீவிப்பாய் நின்று செய்யாது சிவபோதச் சீவிப்பாய் எழுந்து செய்தமைபற்றி அதனை விகிதானுட்டமாகவே கொண்டருளிய சிவபெருமான். அரிபிரமேந்திராதிதேவர்கள் முனிவர்கள் முதலாயினோர் சேவிக்க, உமாதேவியாரோடும் சுப்பிரமணியசுவாமியோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருளினார். சிறுத்தொண்டநாயனாரும் மனைவியாரும் புதல்வரும் தாதியாருமாகிய நால்வரும் அவர்களைத் தரிசித்து ஆனந்தவருவி சொரிய, எலும்பும் மனமும் நெக்கு நெக்குருக, பரவசர்களாய் விழுந்து நமஸ்கரித்து, எழுந்து அஞ்சலியஸ்தர்களாகி நின்று, தோத்திரம் பண்ணினார்கள் பின்பு பரமசிவனும் பார்வதியம்மையாரும் சுப்பிரமணிய சுவாமியும், அவர்கள் நால்வரையும், தங்களை எக்காலமும் பிரியாது வணங்கிப் பேரின்பத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் பொருட்டு உடன் கொண்டு திருக்கைலாசத்தை அடைந்தார்கள்.

திருச்சிற்றம்பலம்.

 


சிறுத்தொண்ட நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

1. திருத்தொண்டில் வல்வினையும் நல்வினை ஆதல்

பொதுவான ஆய்வியல் தரவுகளுக்கு அப்பாற்பட்ட திருத்தொண்டர் தொண்டுகளின் யதார்த்தத்தன்மையைத் துப்புத்துலக்கும் ஞானாநுபவ நூலாகிய திருக்களிற்றுப்படியார் அவர் செயல்களின் தன்மை நோக்கில் அவற்றை மெல்வினை வல்வினை என வகைப்படுத்தி விளக்கும். அவற்றுள், ஏறுமாறானது என்று குறிப்பிடத்தகும் அம்சம் எதுவுமில்லாமல் எவருஞ் செய்யலாம் போலிருக்குஞ் சரியை கிரியைத் தொண்டுகள் மெல்லினை யெனவும் நினைக்கவே அச்சமும் பதற்றமுந் தருவனவாய் இரண்டாமவர் ஒருவராற் செய்ய முடியாதனவாய் உள்ள தொண்டுகள் வல்வினை எனவும் அந்நூலில் வந்துள்ளன. அவற்றுள் மெல்வினையை இலக்கண வகையாலுரைத்த திருக்களிற்றுப்படியார் வல்வினையை உதாரணங்கள் மூலமே காட்டியிருத்தல் குறிப்பிடத்தகும். அது பற்றி ஒரே தொடர்பில் வருஞ்செய்யுள் மூன்றில் முதற்செய்யுள், "வரங்கள் தருஞ்செய்ய வியிரவர்க்குத் தங்கள் கரங்களினாலன்று கறியாக்க இரங்காதே கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை வல்வினையே யென்றதுநாம் மற்று" என வரும். கொலைத் தொழில், இரங்காதே செய்த தொழில், தாமே, தங்கரங்களினாற் செய்த தொழில் என அச்செயலின் குரூரத் தன்மையும் செயற்கருந் தன்மையும் இவ்வெண்பாவில் அழுத்தம் பெற்றுள்ளமை கருதத் தகும். அடுத்த வெண்பாவில் இடம் பெறும் சண்டீசர் செய்தியும் அதற்கடுத்ததில் இடம்பெறும் அரிவாட்டாயனார் செய்தியுங் கூட இவ்வாறுதாரண வகையாற் கூறப்பட்டனவேயன்றி இலக்கண வகையாற் கூறப்பட்டில. அதன் காரணம் விளக்கும் அந்நூல் உரையாசிரியர், இம் மூன்று திருவெண்பாக்களாலும் சாத்திரங்களிற் சொன்னவழியன்றியே, அளவற்ற அன்பின் பெருமையினாலே, உலகத்தியற்கைவிட்டு யாவராலுஞ் செய்ய வொண்ணாத செயல்களைச் செய்தமையாலும் இவற்றை ஒருபிரமாண நூலாலுஞ் சொல்ல அரிதாகையாலும் வல்வினைகள் என்று சொல்லப்பட்டன என்றுள்ளார்.

இனி, இவ்வகை வன் செயல் செய்வோருஞ் சிவனது கருணைக்காளாகி முத்திப்பேறும் பெறுவாராதல் யாங்ஙனம் என்றெழக் கூடும் ஆசங்கைக்கு விடையாம் பாங்கில் அடுத்த வெண்பா கூறுவதுங்கருதத்தகும். இவ்வல்வினையாளர் தாமாந் தன்மையிழந்து தமது அறிவிச்சை செயல்கள் சிவனது அறிவிச்சை செயல்களாம்படி ஒன்றிச் சிவமயமாய் நிற்பது போலத் தாம் வேறு செயல்வேறென் பதின்றி ஒன்றுபட்டுச் செயல்மயமாகவும் அமைந்து, "சிவனவனது என்செயலது" என உணர்வுபூர்வமாக அழுந்தி நின்று செய்வதுடன் அச்செயல் வழியே தம்மை முற்று முழுதாகச் சிவனுக்கே கொடுத்தும் விடுகின்றா ராதலின் சிவனளிக்குங் கருணைப் பிரசாதமான முத்திப்பேற்றுக்குரியோராகின்றார்கள். உழவுந் தனுசும் ஒருமுகமேயாதல்போல, இதிற் செயலுஞ் சிவன் செயலேயாய்ச் செயற் பலனுஞ் சிவனுக்கேயாய் விடுகையினால் அவர்களுக்கு ஆக்கமின்றி இழப்பு நிகழ்தற்கேது இல்லையே என்கின்றது அவ்வெண்பா. அது "செய்யுஞ் செயலே செயலாகச் செய்து தமைப் பையக்கொடுத்தார் பரங்கெட்டார் ஐயா உழவுந் தனுசும் ஒருமுகமே யானால் இழவுண்டோ சொல்லாயினி" எனவரும்.

2. பெரிய சிறுத்தொண்டர்

மேற்கண்ட வல்வினையாளரில் முதல்வரான சிறுத்தொண்ட நாயனார் லௌகிக ரீதியிலும் ஆத்மிக ரீதியிலும் அளவிறந்த பெருமையாளர் என்பது பின்வருமாற்றார் பெறப்படும். அவர் வடமொழி தென்மொழி இரண்டிலும் புலமைத்தரம் பெற்றவர். திருஞானசம்பந்தப் பிள்ளையார் தேவாரத்தில், "சிறப்புலவன் சிறுத்தொண்டன்" என்றே அவர் குறிக்கப்பட்டுள்ளார். திருத்தொண்டர் புராணசாரம் எடுத்த வாக்கிலேயே, "மருத்துவர், தலைவர்" என்பதன் மூலம் அவர் மருத்துவக்கல்வி நிபுணர் என்கின்றது. இது அவர் கல்விநிலை. திருத்தொண்டர் புராணசாரம், "செல்வமிகு சிறுத்தொண்டன்" என்பதனாலும் திருஞான சம்பந்தப்பிள்ளையார் தேவாரம் "சீராளன் சிறுத்தொண்டன்" என்பதனாலும் அவர் செல்வநிலை அறியவரும். மஹாமருத்துவர், தொண்டானா ரெல்லார்க்குஞ் சோறளிக்குஞ் சிறுத்தொண்டர். அரச உயர்மட்ட ஆலோசகர், அரசசேனாபதி என அவர்க்கு வழங்கினவாக அறியப்படும் புகழுரைகள் அவர்தம் சமூக அரசியற் செல்வாக்குகள் இருந்தவாறுணர்த்தும். அவர் மாமாத்திரர் என்பது அவர்தம் குலநல மேன்மை தெரிவிக்கும். மாமாத்திரர் என்போர் பலகலைகளில் வல்லுநராகவும் சிறந்த போர்வீரராகவும் உயர்குலப் பிறப்பினராகவும், இருத்தல் வேண்டும் எனும் மநுஸ்மிருதி அதற்காதாரமாம். சேக்கிழார் இவர் கல்வியறிவு பற்றி விமர்சிக்கையில் ஆயுர் வேதக்கலை, வடநூற்கலை, ஆயுதப்பயிற்சிக் கலை போன்ற லௌகிகக் கலைகளை ஒரு பகுதியாகவும் "உள்ளநிறை கலைத்துறைகள்" என ஆத்மிகக் கலைகளை ஒரு பகுதியாகவும் குறிப்பிட்டு, இக்கலைகளால், "தெள்ளி வடித்தறிந்த பொருள் சிவன்கழலிற்றெளிவு" என்ற ஞானவிலாசமும் அவ்வுணர்வினால் நேரும் உள்ளுருக்கமாகிய பக்தியும் மேற்கொண்டு அவர் திருத்தொண்டி லீடுபட்டொழுகிய வாற்றையுந் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நாயனார், திருஞானசம்பந்தசுவாமிகள் தம் பதிக்கு எழுந்தருளக் கேட்டு விரைந்தோடிப்போய் வரவேற்றுபசரித்து மகேசுரபூசையும் நிகழ்த்திப் பேறு பெற்றவர். சுவாமிகள் திருப்புகலூரில் சிலநாள் தங்கியிருக்கையில், அவரைச் சார்ந்து உடனுறைவின் பயன்பெற்ற நாயன்மாரில் இவருமொருவர், சுவாமிகள், திருச்செங்காட்டங்குடியிற் பாடியருளிய, "பைங்கோட்டு மலர்ப்புன்னை ---" என்ற பதிகத்திற் பாடல் தோறும் இவர் பெருமை இடம்பெற்றுள்ளது. செங்காட்டங் குடியிற் சிவபெருமான், "சிறுத்தொண்டர்க்காக இருந்த பெருமான்" என்றே சுவாமிகள் வர்ணித்திருக்கிறார். அதுவொன்றே நாயனார் பெருமையின் உச்சவரம்பைத் தொட்டுக் காட்டுதல் கண்கூடு.

இங்ஙனம், எத்துறையிலும் பெருமை நிலைக்குரியராகிய இந்த நாயனார் திருநாமத்திற் பொருந்தியுள்ள "சிறுமை" என்பதும் அவர் பெருமை யொன்றைக் குறித்தே அமைந்திருத்தல் சுவாரஸ்யமானதாகும்.

தன் பெருமை தானறியாமை சிவபெருமானின் திவ்விய பண்பாதல், "எம்பெருமான் ஏதுடுத்தங்கேதமுது செய்திடினுந் தம்பெருமை தானறியாத்தன் மையன்காண் சாழலோ" என்ற திருவாசத்தாற் புலனாகும். சிவன் தன்னைச் சார்ந்தார்க்குந் தன் பண்புகள் பலவற்றை அளிப்பான் என்ற உண்மைப்படி, சிவனோடொற்றித்து நின்றே எப்பணியுஞ் செய்யும் உயர்நிலையினரான இந்த நாயனார்க்கும் சிவன் பண்பாகிய அது வாஸ்தவமாகக் கைவந் திருத்தல், தம்மன்னனுக்காகப் படைநடத்திச் சென்று வாதாபிப் போரில் இவர் நிகழ்த்திய அசகாய சூரத்தனத்தையும் அதனால் விளைந்த பெரு வெற்றியையும் அறிந்து நயந்த மன்னவன் வெற்றிக்குக் காரணமாயிருந்திருக்கக் கூடிய இவரின் தகைமை விசேடங்களை ஆராய்கையில் இவர் துணிவுமிக்க போர் வீரர் மட்டுமன்று சிறந்த சிவனடியாருமாம் எனப் பிறர் வாயிலாக அறிந்தபோது, ஆ! பாவம், அரசியலறப்படி தொண்டரை இனங்கண்டு தொண்டு நெறியில், நிறுத்தியிருக்கவேண்டியதான அஃதின்றிப் பழிவிளைக்கும் போர்முனைக்கனுப்பியது அபசாரமாயிற்றே எனப் பச்சாத்தாப முற்று இவரை மன்னிப்புக்கோரிக் கொண்டபோது, இவர் அதை ஏற்காது அவனுக்குரைத்ததாக உள்ள அடக்கச் செறிவான உரையினாலும், மேல், இவரைத் தேடிக் காணவந்த உத்தராபதியார் தமது முதல், தரிசனத்தின் போது, "நீரோ பெரிய சிறுத்தொண்டர் என்றுரைத்த வியப்புரைக்குப் பதிலாக இவர் தெரிவித்ததாகவுள்ள விநயபரமான பணிவுரையினாலும் இனிது புலப்படும். அதுபற்றிய விபரம் சேக்கிழார் வாக்கில், "தம்பெருமான் திருத்தொண்டர் எனக்கேட்ட தார்வேந்தன் உம்பர்பிரா னடியாரை உணராதே கெட்டொழிந்தேன் வெம்புகொடும் போர்முனையில் விட்டிருந்தேன் என வெருவுற் றெம்பெருமான் இது பொறுக்க வேண்டுமென இறைஞ்சினான்" - "இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி என்னுரிமைத் தொழிற் கடுத்ததிறம்புரிவேன் அதற்கென்னோ தீங்கென்ன ஆங்கவர்க்கு நிறைந்தநிதிக் குவைகளுடன் நீடுவிருத்திகளளித்தே அறம்புரிசெங் கோலரசன் அஞ்சலி செய்துரைக்கின்றான்" - "உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டுய்த்தீர் எம்முடைய மனக்கருத்துக்கினிதாக இசைந்துமது மெய்ம்மைபுரி செயல் விளங்கவேண்டியவாறே சரித்துச் செம்மை நெறித் திருத்தொண்டு செய்யுமென விடைகொடுக்தான்" எனவும் "என்று மனைவியாரியம்ப எழுந்த விருப்பால் விரைந்தெய்திச் சென்று கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர் நின்ற தொண்டர் தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர் என்று திருவாய் மலர்ந்தருள இறைவர் தம்மைத் தொழுதுரைப்பார்" - "பூதி அணிசா தனத்தவர்முன் போற்றப்போதே னாயிடினும் நாதனடியார் கருணையினால் அருளிச்செய்வர் நானென்று கோதிலன்பர், தமையமுது செய்விப்பதற்குக் குலப்பதியில் காதலாலே தேடியுமுன் காணேன் தவத்தாலுமைக் கண்டேன்" எனவும் வருவனவற்றால் முறையேயறியப்படும். இந்நிகழ்வுகளில் நாயனார் பதிலுரைகளாக வந்தவையன்றியும் முன்னையநிகழ்வில், "உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டுய்த்தீர்" என அரசன் வாக்காகவும் பின்னையதில் தன்னைப் பெயர்சூட்டக் கூசி "நான்" என்பர் எனும் இவர் வாக்காகவும் வருவனவும் கூட, குறித்த உண்மைக் காதாரமாம். இங்கு, "பணியுமாம் என்றும் பெருமை" என்று திருக்குறல் குறிக்கும் பெருமையிலக்கணத்துக்கு நாயனார் பண்பு முற்றிலும் ஒத்திருத்தலாலும் "சிறுமை அணியுமாந் தன்னை வியந்து" என அது கூறுஞ் சிறுமையிலக்கணத்துக்கு நேர்விரோதமாயிருத்தலாலும் நாயனார் திருப்பெயரில் உள்ள சிறுமையும் பெருமையே குறித்ததாதல் துணியப்படும். ஆயின், அச்சிறுமை விசேடணமே வழக்காறாக வந்துவிட்ட தென்னையெனின், எவரெனினும் சிவனடியாரைக் கண்டதுமே, உகந்தடிமைத் திறம் நினைந்தங்குணர்வே மிக்கு இவர் தேவரவர் தேவரென்று பேசி யிரண்டாட் டாதொழிந்தீசன் திறமே பேணி" வழிபடுகையில், அவர் அரியர் எனவும் அவர் முன்னிலையில் தான் எத்தனையும் எளியார் எனவும் கொள்ளுகையினாலே அவர் தம்பாற் சிறுமைப் பண்பே மிக்கு விளங்கத் திகழ்ந்தார் ஆதலின் என்க. அது சேக்கிழார் வாக்கில் "சீதமதி அரவினுமின் செஞ்சடைமேற் செறிவித்த நாதனடியார் தம்மை நயப்பாட்டு வழிபாட்டால் மேதகையாரவர் முன்பு மிகச் சிறியராயடைந்தார் ஆதலினாற் சிறுத்தொண்டராய் நிகழ்ந்தா ரவனியின் மேல்" என வந்திருத்தல் காணலாம்.

3. திருவுளச் சோதனைக்கொடூரத்திலும் நாயனார் சலிக்காமை

திருத்தொண்டர்கள் தத்தம் திருத்தொண்டில் தாம் தாம் பெற்றிருக்கும் உணர்வழுத்தமாகிய உறைப்பு விசேடத்தினாலே திருத்தொண்டுக்கு எதிரிடையாக நேரும் எவ்வித சோதனைக்குஞ் சலிக்காது நிற்கும் அசாமானிய பக்குவநிலை யெய்துந் தருணம் பார்த்திருந்து சிவபரம் பொருள் தாமே அவரை அணுகி எதிர்பாரா வகையிற் சில சோதனை நியமங்களைப் புகுத்தி அவற்றின் சார்பில் அவர்கள் ஆத்மிக வீறும் விறலுஞ் சொரூபித்தெழக் கண்டு உலகறியக் காட்டும் பாங்கு சிவனது பரத்துவ விசேடப் பண்பாகும். அது, திருத்தொண்டர் புராணத்தில், "மன்றுளே திருக்கூத்தாடி அடியவர் மனைகள் தோறுஞ் சென்றவர் நிலைமை காட்டுந் தேவர்கள் தேவர்" எனவும் "பொன்னிமயப் பொருப்பரையன் பயந்தருளும் பூங்கொடிதன் நன்னிலைமை அன்றளக்க எழுந்தருளும் நம்பெருமான் தன்னுடைய அடியவர்தந் தனித்தொண்டர் தம்முடைய அந்நிலைமை கண்டன்பர்க்கருள் புரிவான் வந்தணைந்தார்" எனவும் "மாயவண்ணமே கொண்டு தம்மன்பர் மறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்" எனவும் வருவனவற்றாற் பெறப்படும். அவரவர்பால் நிகழவிருக்கும் பரிசோதனைத் தகுதிக்கும் தரத்திற்குமேற்ப அவ்வவ் வேளைகளிற் சிவபெருமான் தாங்கி வருந்திரு வேடங்களுந் தனித்துவப் பண்பினவாய் அமையும், அவ்வகையில், சிறுத்தொண்ட நாயனாரின் மகேசுர பூசைத்தொண்டுறுதியைப் பரிசோதிக்க எழுந்தருளுகையில், சிவபெருமான், அவ்விஷயத்தில் தாம் கையாளவிருக்கும் உத்திக்குப் பொருத்தமாம் வகையில், பைரவத் திருக் கோலங் கொண்டெழுந்தருளுவாராயினர். அச்சந்தரும் ஆடம்பரமான கோலம்; கடுமையுங் கனிவுங் கலந்த பிரமாணிக்யமான பேச்சு; நாயனார் மகேசுரபூசையிற் கொண்டிருக்கும் அதிசிரத்தையை எவ்வளவுக்குப் பதம்பார்க்க முடியுமோ அவ்வளவுக்குக் கடுமையான நிபந்தனைகள்; பசுமாமிசம் வேண்டும்; அதுவும் நரபசுவாதல் வேண்டும்; அதுவும் அஞ்சு பிராயத்ததாய் உறுப்பில் மறுவற்றதாதல் வேண்டும்; அதுமட்டுமன்று, தாயுந் தந்தையுந்தான் அரியவேண்டும். அரிகையில் இருவரும் ஒரேதரமான உள்ளக் களிப்புடன் இருக்க வேண்டும். இவ்விதத்தில் நிபந்தனைகள் ஆயின. கஷ்ட சாத்தியம் என்று கூடக் கணிக்க முடியாத நிபந்தனைக்கடூரம் அது. ஆனால், "எம்பெருமான் அமுதுசெய்யப் பெறில் ஏது மெனக்கொன்றரிய தில்லை" என அநாயாசமாகப் பதிலளித்து விட்ட நாயனார் உறுதிக்குமுன் இவை எம்மாத்திரம்! ஒன்றொழியாமற் சர்வ நிபந்தனைகளுக்கு மிணங்கி உணவுதயாராயிற்று. எப்படியோ மகேசுர பூசைக்குமுகஞ் செய்தாயிற்று. மேலும் நிபந்தனைக்குமேல் நிபந்தனை ஆகிறது. அமுது கறிபடைத்து முடிந்ததும் எங்கே தலைக்கறி? என்பது கேள்வி. அதுவும் வந்தபின், இங்கெமக்குத் தனித்துண்ண வொண்ணாது; சிவனடியாரொருவரைக் கொண்டுவாரும் உடனுண்ண என்பது மொன்று. சிவனடியார் ஒருவர் தேடியுங் கிடைக்கப் பெறாமையால், தானும் சிவனடியார் நீறணியக்கண்டு நீறணிபவன் என நாயனார் உரைத்தமை, தன்னைச் சிவனடியார்க்குப் பதிலாக அநுமதிக்கக் கோரிய விண்ணப்பமாக ஏற்கப்பட்டுச் சம்மதிக்கப்பட்டு மாயிற்று. ஆனால், இன்னுந்தான் நிபந்தனை யொன்று, நாமுண்ணத் தொடங்குமுன் நீர் உண்ணத் தொடங்கிய தன் மூலம் நீர் உடனுண்ணுந் தகுதியை இழந்துள்ளீராதலின் மகனைப் பெற்றிருந்தீராயின் அவனை அழையும் உடனுண்ண; அவன் வந்தால் தான் நாம் உண்பது என்ற வற்புறை. இதற்குக் கூட அசைந்துவிட வில்லை நாயனார். தன் அறிவிச்சை செயல்மூன்றுஞ் சிவன் அறிவிச்சை செயல்களாகவே யிருக்கவைத்துப் பயின்று கொண்டவராதலின், சற்றுமுன் நடந்த தன் நினைவிலுந் தரிக்க விடாது தம்மை மேவிநிற்கும் அதே உபாயத்தின் மூலம் தன் மனைவியையும் உடனழைத்துப் போய் வீட்டின் புறத்தே நின்று மகனை அழைத்தே விட்டார். மகனும் வந்தே விட்டான் எப்படியோ தன் திருத்தொண்டுறுதி காக்கப்பட்டாயிற்று என்னும் பெருமகிழ்ச்சியில், திளைக்கின்றார் நாயனார். (சோதனையின் நோக்கம் நிறை வேறக்கண்டதும் உத்தராபதியார் சட்டென மறைந்து விட்டார்) இவ்விறுதி நிகழ்வு சேக்கிழார் வாக்கில், "வையநிகழுஞ் சிறுத்தொண்டர் மைந்தாவருக எனவழைத்தார் தையலாருந் தலைவர்பணி தலைநிற் பாராய்த் தாமழைத்தார் செய்ய மணியே சீராளா வாராய் சிவனாரடியார் யாம் உய்யும் வகையால் உடனுண்ண ஓடி வாவென்றோலமிட" - "பரமனருளாற் பள்ளியினின்றோடி வருவான் போல்வந்த தரமில் வனப்பில் தனிப்புதல்வன் தன்னை எடுத்துத் தழுவித் தங்கரமுன் னணைத்துக் கணவனார் கரத்திற் கொடுப்பக் களி கூர்ந்தார் புரமூன்றெரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம் எனும் பொலிவால்" எனவரும்.

திருத்தொண்டியற்றும் மஹான்களுக்குத் தம் குறிக்கோளின் வெற்றியே பொருளாவதன்றி அதை அணுகுமுறையில் நேரும் இடைஞ்சல்கள் பொருளல்ல வாதல் இதில்வைத்துணரப்படும்.

4. நாயனார் இறைபணிநிற்றல் மாண்பு

ஆன்மாவானது இறைவனை அறியாநிலையாகிய பெத்தநிலையினுஞ்சரி அறியும் நிலையாகிய சுத்தநிலையினுஞ்சரி அதன் செயலெதுவும் இறைவனாலன்றி ஆவதில்லை என்பது சித்தாந்த மாதலின் செயற்பலனாகிய வினைத்தாக்கத்திலிருந்து விடுபடவிரும்பும் ஆன்மா தன் அறிவிச்சை செயல்களைச் சிவனாரின் அறிவிச்சை செயல்களுக்குள் அடங்கக் கொடுத்து நிற்க வேண்டிய அவசியமுண்டு. அதுவே இறை பணிநிற்றல் எனப்படும். அது, தன்செயலாஞ்சார்பை முற்றாக நீத்து நிற்கும் இலக்கணத்த தாகலின் தான் பணியை நீத்தல் என்றும் ஆம். இதுபற்றிய விளக்கம் பல வேறு பிரகாரமாக முன்னைய சூசனங்களிலும் வந்ததுண்டு; நம் சிறுத்தொண்ட நாயனார் வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் இவ்விறை பணிநிற்றல்களே எனினும் இறுதிநிகழ்வாகிய மகனை அழைத்தல் என்பது இறைபணி நிற்றற் பண்பின் உச்சவரம்பைத் தொட்டுநிற்கும் அருமையும் அவர்மட்டிலன்றி, அவரது இறைபணி நிற்றல் அவரது குடும்பம் முழுவதையும் அளாவும் அளவுக்கு விரிவடைந்திருந்த அதன் பெருமையும் போற்றத்தகும். உத்தராபதியார் இச்சைக்குத் தமது அறிவிச்சை செயல்களை அடங்கக்கொடுத்துச் சிறுத்தொண்டர் மகனை அழைத்தது அவர்க்கு இறைபணி நிற்றல் ஆனமை போலக் கணவரின் அறிவிச்சை செயல்களுக்குத் தன் அறிவிச்சை செயல்களை அடங்கக் கொடுத்து நின்று அவரழைத்தது போலத் தானுமழைத்தமையால் அவர் மனைவிக்கும் அது இறைபணி நிற்றல் ஆயிற்று. இனி இவ்விருவர் அறிவிச்சை செயல்களுக்குத் தன் அறிவிச்சை செயல்களை அடங்கக் கொடுத்து நின்று அவர்கள் பணி இனிது நிறைவுற உதவிய தாதியார்க்கும் அது இறைபணி நிற்றலேயாயிற்று. இறைபணி நிற்குந் தந்தைதாயரால் சிவனுக்கு யாக பசுவாக்கப்பட நின்ற பேற்றினால் மகன் சீராள தேவனுக்கும் அது இறைபணிநிற்றலே ஆயிற்று. அன்றேல் நாயனார், மனைவியார், தாதியார், புதல்வர் எனும் நால்வரும் ஒருங்கொக்கச் சிவபதப் பேறுற்றிருத்தல் இயலாதாகுமன்றோ, நாயனார் இறைபணி நிற்றல் மாண்பு இவ்வாற்றானறியப்படும். இதன்விபரம் நாயனார் புராணத்தில், "செய்ய மேனிக்கருங் குஞ்சிச் செழுங் கஞ்சுகத்துப்பயிரவர் யாம் உய்ய அமுது செய்யாதே ஒளித்ததெங்கே எனத்தேடி மையல்கொண்டு புறத்தணையமறைந்த அவர்தாம் மலைபயந்த தையலோடுஞ் சரவணத்துத் தனயரோடுந்தாமணைவார்" - "தனிவெள்விடைமேல் நெடுவிசும்பில் தலைவர் பூதகணநாதர் முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாயுள்ளோர் போற்றிசைப்ப இனிய கறியுந் திருவமுதும் அமைத்தார் காணஎழுந்தருளிப் பனிவெண்திங்கள் முடிதுளங்கப் பரந்த கருணை நோக்களித்தார்" - "கொன்றை வேணியார் தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும் வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக்கீழ் நின்ற தொண்டர் மனைவியார் நீடுமகனார் தாதியார் என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டேகினார்" எனத் தொடர்ந்து வருஞ் செய்யுள்களா லினிதறியப்படும்.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. சிறுத்தொண்ட நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. chiRuththoNda nAyanAr purANam in English prose 
3. Siruthonda Nayanar Puranam in English Poetry 

Related Content

63 Nayanmar Drama- உலகை வென்ற தாதையார் - சிறுத்தொண்டர் - தமி

The Puranam of Siruthonda Nayanar

The history of Chiruthonda Nayanar

திருமுறைகளில் சிறுத்தொண்ட நாயனார் பற்றிய குறிப்புகள்