தெய்வச் சேக்கிழார் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றப்படும் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியர் புராணத்தை அருளியவர்.
12-ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் சேக்கிழார் பிறந்தார். இவருக்குப் இயற்பெயர் அருண்மொழித்தேவர் என்பதாகும். இவருக்குப் பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.
சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் என்ற அநபாயசோழன் அருண்மொழித்தேவரின் மதிநுட்பத்தை மெச்சி உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்புப் பட்டத்துடன் அமைச்சர் பதவியை அளித்தார். சேக்கிழார் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பேரன்பு கொண்டிருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார்.
இரண்டாம் குலோத்துங்க சோழன் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாத சீவகசிந்தாமணி எனும் சமண முனிவரால் எழுதப்பட்ட நூலில் மூழ்கி அதனினும் சிறந்த இலக்கியம் இல்லை என்று மையல் உற்றிருந்தான். அரசனுக்கு நல்வழி கூறும் உற்ற அமைச்சராக இருந்த சேக்கிழார் மறுமைக்குத் துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றைச் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்குச் சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கும்படி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாகச் திருத்தொண்டத் தொகையில் பாடப்பெற்ற சிவத்தொண்டர்களின் வரலாற்றை திருத்தொண்டர் புராணமாகப் பாட எண்ணினார்.
புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்குச் சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.
சேக்கிழார் பெரியபுராணத்தினைத் திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரைத் தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறிச் சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். பெரியபுராணம் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைக்கப்பெற்றது. பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதின்மூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன.
நாயன்மார் பெருமக்களின் வரலாற்றையும் அவர்கள் அடைந்த பெருநிலையினையும் நமக்குக் காட்டி ஆற்றுப்படுத்தும் அற்புத இலக்கியத்தினை அருளிய சேக்கிழார் பெருமான் தொண்டர் சீர் பரவுவார் என்று அழைக்கப்படுகிறார். இவர் தம் வரலாற்றினை சேக்கிழார் புராணம் விரித்துரைக்கும்.
சேக்கிழார் நாயன்மார் பெருமக்களின் அடியொற்றி வழிபாட்டு தில்லைக் கூத்தப்பெருமான் திருவடி சேர்ந்தமைந்தார்.