logo

|

Home >

devotees >

sekkizhar-araichi-nool-rasamanikkanar

சேக்கிழார் - ஆராய்ச்சி நூல்


டாக்டர். மா. இராசமாணிக்கனார்

Sekkizhar - Araichi Nool

of  Dr. M. Rasamanikanar



Acknowledgements: 
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image 
version of this work as PDF for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
We thank the following for their assistance: 
Karthika Mukundh, R. Navaneethakrishnan, S. Karthikeyan,
A. sezhian, Anbu Jaya, C. Tamizharasu, P. Sukumar, R. Aravind
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

 

© Project Madurai, 1998-2016.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation 
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
Details of Project Madurai are available at the website 
https://www.projectmadurai.org/ 
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 


Source: 

"சேக்கிழார் : ஆராய்ச்சி நூல்"
டாக்டர். இராசமாணிக்கனார்

பூரம் பதிப்பகம், சென்னை - 33
முதற் பதிப்பு - 1968 மறு பதிப்பு - 1996.
அச்சுக்கோர்வை: 
ஜெய் லஷ்மி கம்பியூட்டர் கிராபிக்ஸ், சென்னை - 600 09:3.
விலை ரூ. 25.

அச்சிட்டோர்:
SRI ESES PRINT HOUSE, 24 Hours Service 
26, V.N. DOSS ROAD, MOUNT ROAD, MADRAS - 600 002, 
Phone : 833231, 833259, Fax : 91-44-833259
--
அனைத்து நூல்களும் கிடைக்கும்
நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்
79-80,மேலகோபுரத் தெரு, மதுரை-625 001. Ph:750271,744106
பூரம் பதிப்பகம் 59, ராஜு நாயக்கர் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை -33.
------------


முகவுரை

 

சேக்கிழார் என்னும் திருப்பெயருடன் வெளிவரும் இவ்வாராய்ச்சி நூல், யான் எனது M.O.L. பட்டத்திற்காகத் தயாரித்த ஆங்கில ஆராய்ச்சி நூலின் ஒரு பகுதியாகும். 'சேக்கிழார்,(ஜெர்மன் வரலாற்று ஆசிரியரான வான் ராங்கோ (Van Rankey)சென்ற ஆராய்ச்சி முறைப்படி) (1) நாயன்மார் வாழ்ந்திருந்த தலங்களை எல்லாம் பார்வையிட்டுத் தமிழகம் முழுவதும் கற்றினவர் (2) நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளை வல்லார் வாயிலாகவும், பழைய நூல்கள் மூலமாகவும், கல்வெட்டுகள் வழியாகவும் தயாரித்தவர்; (3) பழைய நூல்களைப் பழுதறப் பரிசோதித்துப் (Internal and External Criticism) பொருத்தமான குறிப்புகளை மட்டும் ஏற்றுக் கொண்டவர்; (4) தம் காலத்திருந்த ஒவியங்கள் சிற்பங்கள் - படிமங்கள் - கோவில்கள் முதலியவற்றை நன்றாக பார்வையிட்டுத் தமக்குத் தேவையான குறிப்புகளை மேற்கொண்டவர்' என்னும் செய்திகள் ஆராய்ச்சி வல்லார்க்கு நன்கு புலனாகும். கருங்கக் கூறின் இன்று மேனாட்டார் கூறும் சாத்திரீய ஆராய்ச்சி (Scientific Research) முறையின் பல அம்சங்களை, கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமானிடம் கண்டு களிக்கலாம் என்று கூறல் தவறாகாது. இந்நூலின் இக்குறிப்புகள் அனைத்தையும் சுருக்கமாகக் காணலாம். 

 

யான் 1941-ஆம் ஆண்டு முதல் செய்து வந்த "பெரியபுராண ஆராய்ச்சி" சம்மந்தமான குறிப்புகள் பல இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாராய்ச்சிக்குறிப்புகள் 1942 முதல் யான் செய்து வந்த பெரியபுராண ஆராய்ச்சிச் சொற்பொழிவுகளில் குறிக்கப் பெற்றுத் தமிழ்ப் பெரும் புலவர் பலரிடம் பாராட்டுப் பெற்றனவாகும். யான், சிவக்கவிமணி கோ.க.சுப்பிரமணி முதலியார் B.A. (1942) தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் (1942)தமிழ் ஆராய்ச்சி விரிவுரையாளர்-ரா.பி.சேதுபிள்ளை,B.A.,B.L.,(1943), தமிழ்ப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை B.A.,L.T. (1942) வித்வான் S. ஆறுமுக முதலியார் M.A.,B.O.L.L.T. (1944) தமிழ்ப் பெரியார் T.M.நாராயணசாமிப்பிள்ளை, M.A.,B.L., முதுபெரும் புலவராய மறைமலையடிகள் (1944) முதலிய தமிழ்ப் பெரும் புலவர் தலைமையின் கீழ் முறையே இராசமன்னார்குடி, சென்னை, வேலூர்,பழனி, சேலம் முதலிய இடங்களில் பேசிய சொற்பொழிவுகளின் சுருக்கமே இந்நூற் பொருளாகும். யான் M.O.L.பட்டத்திற்குத் தயாரித்த இந்த ஆராய்ச்சிக் குறிப்புகளை நன்கு சோதித்து முறைப்படுத்தி ஒழுங்கு பெறச் செய்த பெரியார் சென்னை பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராக உள்ள இராவ்சாகிப் S.வையாபுரிப் பிள்ளை, B.A.B.L. அவர்கள் ஆவர். என்னை இவ்வாராய்ச்சித் துறையில் ஊக்கிவந்த இப்பெரியார் அனைவர்க்கும் எனது உளமார்ந்த நன்றியும் வணக்கமும் உரியவாகுக.

 

இச்சிறு நூல் கல்லூரி மாணவர்க்கும் தமிழ்ப் பொது மக்கட்கும் பயன்பட வேண்டும் என்னும் கருத்தினால் மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. ஆராய்ச்சித் துறையில் ஆர்வமுள்ள பெருமக்கள் எனது முயற்சியினை ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன்.

 

சேக்கிழார் அகம்., சென்னை.    மா.இராசமாணிக்கம். 
-----------------

உள்ளுறை
1.    தொண்டைநாடு - குன்றத்தூர்    
2.    சேக்கிழார் - முதல் அமைச்சர்    
3.    சைவசமய வரலாறு – சங்ககாலம்    
4.    பல்லவர் காலச் சைவசமயம்    
5.    சோழர் காலத்துச் சைவசமய நிலை    
6.    பெரிய புராணம் பாடின வரலாறு    
7.    சேக்கிழார் தல யாத்திரை    
8.    சேக்கிழாரும் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகளும் 
9.    சேக்கிழார் பெரும் புலமை    
-------

 

சேக்கிழார்

 

1. தொண்டை நாடு - குன்றத்தூர்

 

தமிழகம் என்பது வேங்கடம் முதல் குமரிவரையுள்ள நிலப்பகுதியாகும். அது சேர, சோழ, பாண்டிய நாடுகளையும் நடு நாட்டையும் தொண்டை நாட்டையும் தன் அகத்தே கொண்டது. 

 

சேர நாடு என்பது திருவாங்கூர், கொச்சி, சமஸ்தானங்களும் மலையாள மாவட்டமும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் வஞ்சி மாநகரம் என்பது. முசிறி, தொண்டி என்பன சிறந்த துறைமுகப் பட்டினங்கள். இந்நாட்டை 'வானவர்' எனப்பட்ட சேரர் பல நூற்றாண்டுகளாக ஆண்டு வந்தனர்.

 

சோழ நாடு என்பது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களும் கீழ்க்கடற்கரை வெளியும் சேர்ந்துள்ள பரப்பாகும். இந்நாட்டைச் சோழர் என்பவர்கள் நெடுங் காலமாக ஆண்டு வந்தனர். இவர் தலைநகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. காவிரிப் பூம்பட்டினம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது.

 

பாண்டிய நாடு என்பது மதுரை. இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களும் கீழ்க்கோடிக்கரை சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் ஆலவாய் எனப்பட்ட மதுரை. காயல், கொற்கை, தொண்டி என்பன இதன் துறைமுகப் பட்டினங்கள். கொற்கை முத்துக்குப் பெயர் பெற்ற பண்டைத் துறைமுக நகரம். இந்நாட்டை நீண்ட காலமாக ஆண்டு வந்தவர் பாண்டியர் என்பவர்.

 

நடு நாடு. சோழ நாட்டிற்கு வடக்கே உள்ள தென் ஆர்க்காடு மாவட்டத்தின் பெரும் பகுதி 'நடு நாடு' எனப் பெயர் பெற்றிருந்தது. அந்நாட்டில் பல சிற்றரசர் இருந்து, திருக்கோவலூர், திருநாவலூர் முதலிய ஊர்களைச் சூழவுள்ள நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். அந்நாடுகள் திருமுனைப்பாடி நாடு, மலையமானாடு எனப் பெயர்கள் பெற்றிருந்தன.

 

தொண்டை நாடு. இது செங்கற்பட்டு, வடஆர்க்காடு, சித்தூர் முதலிய மாவட்டங்களையும் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியையும் தன் அகத்தே கொண்டது. இதில் சிறப்புற்று விளங்கிய தலைநகரம் காஞ்சிபுரம் என்பது. இதன் சிறந்த துறைமுகப் பட்டினம் மல்லை (மகாபலிபுரம்) என்பது. இந்நாட்டிற் சிறப்புடைய பெரிய ஆறு பாலாறு என்பது. இந்நாட்டில் மலைகள் மிகுதியாக உண்டு. வேங்கடம், காளத்தி, நகரி, நாகலாபுரம், இராமகிரி, வேலூர், செங்கற்பட்டு, சோழ சிங்கபுரம் முதலிய பல இடங்களிலும் மலைத் தொடர்கள், தனி மலைகள் குன்றுகள் இவற்றைக் காணலாம். இந்நாட்டின் பல பகுதிகளில் பெருங் காடுகளும் சிறிய காடுகளும் இருக்கின்றன. ஆங்காங்கு ஒன்றும் விளையாத பாலை நிலங்கள் காண்கின்றன. இவற்றுக்கு இடையே கண்ணுக்கு விருந்தளிக்கும் பசிய வயல்கள் காட்சி அளிக்கின்றன. சுருங்க கூறின் தொண்டை நாட்டில் நானிலத்து ஐந்திணை வளங்களையும் கண்டு களிக்கலாம். 

 

பெயர்க் காரணங்கள்: 

 

1."தொண்டை நாடு முதலில் 'குறும்பர் நிலம் எனப் பெயர் பெற்றிருந்தது. குறும்பர் தம் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு அங்கு பொழுது போக்கினர். அவர்களே தங்கள் நாட்டை இருபத்து நான்கு கோட்டங்களாக வகுத்துக் கொண்டார்கள். அக்குறும்பர் காவிரிப்பூம்பட்டினத்து வணிகருடன் கடல் வாணிபம் நடத்தினர். பிற்காலத்தில் ஆதொண்ட சக்கரவர்த்தி என்பவன் குறும்பரை வென்று நாட்டைக் கவர்ந்தான். அன்று முதல் அந்நாடு அவன் பெயரால் 'தொண்ட நாடு' என வழங்கலாயிற்று"1 என்பது செவிவழிச் செய்தியாகும்.
------------

1. R. Gopalan's Pallavas of Kanchi, pp. 26 - 27

 

2. "கரிகாற்சோழன் தொண்டை நாட்டைக் கைப் பற்றிக் காடு கெடுத்து நாடாக்கினான். பிறகு தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டுக் கடல் வழிவந்த (நாகர் மகளுக்கும் சோழ மன்னனுக்கும் பிறந்த) இளந்திரையன் என்பவன் ஆண்டதால், குறும்பர் நாடு 'தொண்டை நாடு' எனப் பெயர் பெற்றது" என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.

 

கரிகாலன் – இளந்திரையன்: 'தொண்டை நாடு' என்ற பெயர் எக்காரணம் புற்றி வந்தது என்பது இப்பொழுது திட்டமாகக் கூறுதற்கில்லை. ஆனால் சங்க காலத்தில் அந்நாடு சோழர் ஆட்சியில் இருந்தது என்பதை மட்டும் திட்டமாகக் கூறலாம். கி.பி. முதல் நூற்றாண்டினன் என்று கருதத்தகும் "கரிகாலன் இமயம் செல்லும்பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக் காஞ்சி நகரத்தின் சிறப்பைக் கூற, அச்சோழர் பெருமான் காஞ்சி நகரைத் தனதாக்கிக் குன்றுபோன்ற மதிலை எழுப்பினான். .தொண்டை நாட்டில் பலரைக் குடியேற்றினான்" என்பது பெரிய புராணக் கூற்றாகும். "இளந்திரையன் என்பவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்டு வந்தான். அவன் பாண்டவரைப் போலப் பகைவரை வென்றவன் தொண்டையர் குடியிற் பிறந்தவன். பகைவர் அரண்களை அழித்தவன். நான்கு குதிரைகள் பூட்டிய தேரை உடையவன். சிறந்த கொடையாளி" என்று பெரும்பாண் ஆற்றுப்படை குறிக்கிறது. 

 

இளங்கிள்ளி: 'மணிமேகலை' என்ற காவிய காலத்தில் (ஏறத்தாழ கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்) தொண்டை நாட்டை இளங்கிள்ளி என்பவன் ஆண்டு வந்தான். அவன் தமையனான நெடுமுடிக்கிள்ளி சோணாட்டை ஆண்டு வந்தான். இளங்கிள்ளி தொண்டை நாட்டை எதிர்க்கவந்த சேர, பாண்டியரைக் காரிக்கரை (இராமகிரி) என்ற இடத்தில் முறியடித்தான். இளங்கிள்ளி காலத்திற்றான் மணிமேகலை என்ற மாதவி மகள் பெளத்த பிக்குணியாகிக் காஞ்சியை அடைந்தாள். இளங்கிள்ளியின் உதவி கொண்டு புத்த பீடிகையையும் மணிமேகலா தெய்வத்தையும் வழிபடக் கோட்டங்கள் அமைத்தாள் பின்னர், அந்நகரத்திலேயே தங்கி அறவண அடிகளிடம் உபதேசம் பெற்றுத் தவம் கிடந்தாள். எனவே தொண்டை நாடு சங்க காலத்தில் சோழராட்சியில் இருந்தது என்பதற்குப் பண்டை நூல்களே சான்றாகும். 

 

காஞ்சி மாநகரம்: இது வடமொழிப் புராணங்களில் பெயர் பெற்றதாகும் முத்தி தரும் நகரங்கள் ஏழனுள் ஒன்று. இயூன்-சங் கூற்றுப்படி, புத்தர் கி.மு. ஐந்தாம் நூறறாண்டில் காஞ்சிபுரத்தில் வந்து சமய போதனை செய்தார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் அங்குப் பல துாபிகளை நாட்டிப் பெளத்த சமயப் பிரசாரம் செய்வித்தான். அசோகன் நாட்டிய தூபிகளில் ஒன்று இயூன்-சங் காலம்வரை (கி.பி. 640-41) அங்கு இருந்ததாகத் தெரிகிறது. கி.மு. 150இல் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் தமது விருத்தியுரையில் காஞ்சி நகரைக் குறிப்பிட்டுள்ளார் எனின். காஞ்சி அப்பழங்காலத்திலேயே சிறந்த கலைப் பீடமாக விளங்கினதை அறியலாம். காஞ்சி புரம் சங்ககாலத்திற் 'கச்சி' எனப்பட்டது. "அப்பெருநகரம் தேரோடும் தெருக்களைக் கொண்டிருந்தது. பழங்குடிகளையும் மதிலையும் பெற்றிருந்தது" என்று பெரும் பாண் ஆற்றுப்படை கூறுகின்றது.

 

பல்லவர் காலம்: பல்லவர் தொண்டை நாட்டைக் கைப்பற்றி ஏறத்தாழ 600 ஆண்டுகள் (கி.பி. 300-900) ஆண்டனர். அவர்கள் காலத்தில் தொண்டை நாடு பல துறைகளிலும் சிறப்புற்றது. காஞ்சி பல்கலைத் துறைகளிற் பெயர் பெற்று விளங்கியது. பிறநாட்டு மாணவரும் விரும்பி வந்து கற்குமாறு காஞ்சி வடமொழிக் கல்லூரி கல்வியிற் சிறப்புற்று விளங்கியது. "கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர்" என்று திருநாவுக்கரசரும் தமது தேவாரத்திற் பாராட்டுவாராயினர். பல்லவர் நாட்டை வளப்படுத்தப் பல ஏரிகளை எடுப்பித்தனர். பாலாற்றிருந்து பல கால்களைப் பெருக்கினர். அவர்கள் ஆட்சியில், தொண்டை நாட்டில் சைவமும் வைணவமும் செழித்து வளர்ந்தன.

 

பிற்காலச் சோழர் காலம்: பல்லவப் பெரு நாட்டிற்கு நடு நாயகமாக இருந்த தொண்டை நாடு, கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதித்த சோழனாற் கைப்பற்றப்பட்டுச் சோழப் பெருநாட்டுடன் இணைக்கப் பட்டுவிட்டது. அது முதல் தொண்டை நாடு ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் சோழர் ஆட்சியில் இருந்தது. சோழர் ஆட்சி வடக்கே கோதாவரி வரை பரவி இருந்தமையால் ஆந்திரப் பகுதியைக் கவனிக்கக் காஞ்சி ஒரு தலைநகரமாக இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. காஞ்சியில் அழகுக்கு இருப்பிடமான அரண்மனை ஒன்று 'பொன் மாளிகை' என்ற பெயருடன் இருந்தது. சோழர் ஆட்சியிலும் காஞ்சிமா நகரம் வடமொழிக் கல்விக்கு நிலைக்களமாக விளங்கியது. 

 

தொண்டை நாட்டுச் சிவத்தலங்கள்: காஞ்சி, திருமுல்லைவாயில், திருமயிலை, திருவான்மியூர், திருவொற்றியூர், திருஇடைச்சுரம், திருமாற்பேறு, திரு ஒத்தூர், திரு ஆலங்காடு, திருவூறல் போன்ற சிவத் தலங்கள் அப்பர் காலமாகிய கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே உயர்நிலையில் இருந்தன. அவை நாயன்மார் காலமான பல்லவர் காலத்தில் பின்னும் சிறப்புற்றன. ஆதித்த சோழன் மரபினர் காலத்தில் கற்றளிகளாக மாறிவிட்டன. பூசை, விழாக்கள் முதலிய சிறப்புகளில் செம்மையுற்றன. பாடல் பெற்ற கோவில்களைப் போலவே தொண்டை நாட்டுப் பிற (பல்லவர் - சோழர் கால)க் கோவில்களும் வர வரச் சிறப்புப் பெற்றுப் பொது மக்கட்குச் சமய உணர்ச்சியை ஊட்டி வந்தன.

 

தொண்டை நாட்டுக் கோட்டங்கள்: தொண்டை நாடு எப்பொழுது-யாரால் 24 கோட்டங்களாகப் பிரிக்கப் பட்டது என்பது திட்டமாக கூறமுடியாது. இருபத்து நான்கு கோட்டங்களின் பெயர்களும் பல்லவர் காலத்தில் வழங்கியவாறே பிற்காலச் சோழர் காலத்திலும் வழங்கி வந்தன. அவ்விருபத்து நான்கு பிரிவுகளாவன:-
1. புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவிற் கோட்டம் 4. செங்காட்டுக் கோட்டம் 5. பையூர்க் கோட்டம் 6. எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 9. களத்தூர்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம் 11 ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 13. பல்குன்றக்கோட்டம் 14. இலங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16. செங்கரைக் கோட்டம் 17. படுவூர்க் கோட்டம் 18. கடிகூர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 20. குன்ற வட்டானக் கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேத்தூர்க் கோட்டம் 24. புலியூர்க் கோட்டம் என்பன. 

 

புலியூர்க் கோட்டம்: இப்பகுதிக்குத் தலைநகரம் புலியூர் என்பது. அது சென்னைக்கடுத்த கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து அரைக்கல் தொலைவில் உள்ள சிற்றூர். அதனைச் சுற்றியுள்ள கோவூர், பூவிருந்த வல்லி, குன்றத்தூர் முதலிய ஊர்களைக் கொண்ட நிலப் பகுதி 'புலியூர்க் கோட்டம்' எனப்பட்டது.

 

குன்றத்தூர்: இது சென்னைக்கடுத்த பல்லாவரம் (பல்லவபுரம்) புகைவண்டி நிலையத்திலிருந்து நான்கு கல் தொலைவில் உள்ள சிற்றூர் ஆகும். இதற்குச் சென்னையிலிருந்து நேரே பேருந்து போகின்றது. இவ்வூர், சோழர் காலத்தில் - சிறப்பாகச் சேக்கிழார் காலத்தில் சிறந்த நிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை அதன் பழுதுபட்ட தோற்றம் கொண்டு கூறக்கூடும். இன்றைய குன்றத்தூர்-'திருநாகேச்சரம், நத்தம்' என்னும் இரண்டு சிற்றூர்களாக இருக்கின்றது. இரண்டையும் ஏறத்தாழ அரைக்கல் நீளமுள்ள பழுதுபட்ட பாதை ஒன்றுபடுத்துகிறது. அப்பாதையின் இரண்டு பக்கங்களிலும் அங்கங்கே இரண்டொரு தெருக்களும் வீடுகளும் பசிய வயல்களும் காண்கின்றன. நத்தம் எனப்படும் சிற்றூரிற்றான் சேக்கிழார் கோவில் இருக்கின்றது. அக்கோவில் உள்ள இடத்திற்றான் சேக்கிழார் வாழ்ந்த இல்லம் இருந்தது என்று அங்குள்ள அவர் மரபினர் கூறி வருகின்றனர். நத்தம் பழமையான இடம் என்பதில் ஐயமில்லை. சில இடங்களில் நீண்ட மதிற்சுவரின் பழுதுபட்ட பகுதிகள் காண்கின்றன. அங்குள்ள சைவ-வைணவக் கோவில்கள் பழுதுபட்டுவிட்டன. சில பகுதிகள் அழிந்து கிடக்கின்றன. கல்வெட்டுகள் சிதைந்து காண்கின்றன. நத்தத்தில் உள்ள பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள திருமாலின் பெயர் திருவூரகப் பெருமாள் என்பது, அதற்கு அண்மையில் உள்ள சிவன் கோவில் மிகவும். பழுதுபட்டுக் கிடக்கிறது. அது சேக்கிழார் கோவிலுக்கு நேர் எதிரில் இருக்கின்றது. இவ்விரண்டு கோவில்களிலும் மூன்றாம் இராச ராசன் கல்வெட்டுகளும் பிற்கால நாயக்க மன்னர் கல்வெட்டுகளும் காண்கின்றன.*
--------
* Inscriptions 177 to 179; 183 and 184 of 1929 - 30

 

நத்தத்தின் உள்ள தெருக்களும் இல்லங்களும் பள்ளங்களும் மேடுகளும் தம் பழைமையைப் புன்முறுவலோடு உணர்த்திநிற்றலை ஆராய்ச்சியாளர்தாம் அறிதல் கூடும். சேக்கிழார் கோவிலுக்கு அண்மையில் ஒரு குளம் இருக்கின்றது. வயல்கள் செம்பரம்பாக்கத்து ஏரிப் பாய்ச்சலைப் பெற்றுச் செழித்துள்ளன. நத்தம் மலை மீதுள்ள முருகர் கோவில் சொக்கநாத நாயக்கர் காலத்தது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிற் கட்டப்பட்டது. எனவே, சேக்கிழார் காலத்தது அன்று.

 

ஊரின் பண்டை நிலைமை: நத்தம் கல்வெட்டுகளைக் கொண்டும் சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் திருநாகேச்சரம் கோவிற் கல்வெட்டுகளைக் கொண்டும் காண்கையில் அப்பதி, சோழர் காலத்தில் பெரிய நகரமாக இருந்தது; சைவ வைணவக் கோவில்கள் நன்னிலையில் இருந்தன; கோவில் காரியங்களைக் கவனிக்கச் சபையார் இருந்தனர்; ஊர் ஆட்சியை நடத்த 'ஊரவர்' எனப்பட்ட 'ஊர் அவையார்' இருந்தனர் என்பன போன்ற செய்திகளை நன்கறியலாம்.
----------- 

 

2. சேக்கிழார் - முதல் அமைச்சர்

 

சேக்கிழார் குடி: தொண்டை நாட்டை வளப்படுத்தி நாற்பத்தெண்ணாயிரம் குடிகளை அந்நாட்டிற் குடிபுகச் செய்த முயற்சி சோழன் கரிகாலனுக்கு உரியது என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியுள்ளார். அக்குடிகளுள் கூடல் கிழான், புரசைகிழான், வெண்குளப்பாக்க கிழான், சேக்கிழான் என்பவர் குடிகள் சிறந்தவை. இவற்றுள் முதல் மூன்றும் கூடலூர், புரிசை, குளப் பாக்கம் என்னும் ஊர்ப் பெயர்களை முதலாகக் கொண்டவை. சேக்கிழான்' என்பது அப்படியன்று. சே-காளை; சேக்கிழான்-காளைக்குரியவன் எனக் கொள்ளின், எருதுகளைக் கொண்டு வயல் வேலை செய்யும் வேளாளனைக் குறிக்கும்; காளையை வாகனமாகக் கொண்ட உரிமையாளன் எனப் பொருள் கொள்ளின், சிவபெருமானைக் குறிக்கும். இரண்டாம் பொருளே சிறப்புடையதாகும். "சேக்கிழான் என்ற பெயர்கொண்டு தொண்டை நாட்டில் முதல் முதற் குடியேறிய வேளாளன் மரபில் வந்தவர் 'சேக்கிழான் குடியினர்' எனப்பட்டனர். அக்குடியில் வந்த ஒவ்வொருவரும் 'சேக்கிழான்' என்ற குடிப் பெயரை முன்னும், தம் இயற்பெயரைப் பின்னும் பெற்றுச் 'சேக்கிழான்-இராமதேவன்.' 'சேக்கிழான்-பாலறாவாயன்' என்றாற்போலப் பெயர்பெற்று விளங்கினர்" என்பது சோழர் காலக் கல்வெட்டுகளால் தெரிகின்றது. இச் சேக்கிழார் குடியினர் தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களுட் பலவற்றிற் குடியேறி வாழ்ந்தனர் என்பது.

 

1. மணவிற் கோட்டத்து மேலப்பழுவூர்ச் சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் அரையன் சங்கர நாராயணன்…..#
2. மேலூர்க் கோட்டத்துக் காவனூர்ச் சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சத்திமலையன்….@
3. புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் ஆடவல்லான்….& என வரும் கல்வெட்டுச் செய்திகளால் நன்கறியலாம். மேலும் இச்செய்திகளால், சேக்கிழார் குடியினர் சோழ மன்னரால் 'சோழ முத்தரையன்' முதலிய பட்டங்கள் தரப் பெற்று உயர் நிலையில் வாழ்ந்தவர் என்பதும் புலனாதல் காண்க.
-----------------------
# : 585 of 1920    @: 183 of 1931    &: 208 of 1930

 

குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியினர்: இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுகளைக் காண்கையில், குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் இரண்டாம் குலோத்துங்கன் (பெரியபுராண ஆசிரியர்) காலமுதலே விளக்கம் பெறலாயினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. சேக்கிழார் புராண ஆசிரியரும் இதனையே குறித்து, 'அநபாயன் காலமுதல் சேக்கிழார் குடியினர் அரசியலில் உயர்ந்த பதவிகள் வகித்து வந்தனர்; இன்றும் வகித்து வருகின்றனர்' என்று தம் காலம் வரை சேக்கிழார் மரபினர் சிறப்பைக் குறித்துள்ளார். அவரது இக்கூற்று உண்மை என்பதைக் கீழ்வரும் கல்வெட்டுச்செய்திகளால் அறியலாம்:
 

அரசன் பெயர்                                   கல்வெட்டுக் காலம்                       சேக்கிழார் குடியினர்
1. இராசராசன் II
(கி.பி. 1116-1173)                                       கி. பி.1162                         சயங்கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச்                                                                                                                   சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவன் என்ற உத்தமசோழப் பல்லவராயன்.
2. "                                                            கி.பி. 1164                           குன்றத்தூர் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன்.
3. குலோத்துங்கன் III
(கி.பி 1178-1218)                                        கி.பி. 1179                           குன்றத்தூர்ச் சேக்கிழான் பாலறா வாயன் களப்பாள ராயன்.
4.      "                                                       கி.பி. 1181                           குன்றத்தூர்ச் சேக்கிழான் அம்மையப்பன் பராந்தகதேவன் என்ற கரிகால சோழப் பல்லவராயன்.
5.      "                                                               "                                  குன்றத்தூர்ச் சேக்கிழான் புவனப் பெருமாள் என்ற துண்டக நாடு உடையன்.
6. இராசராசன் III
( கி.பி. 1216-1246)                                      கி.பி. 1225                          குன்றத்தூர்ச் சேக்கிழான் பட்டியதேவன் ஆட்கொண்டான்.
7. இராசராசன் III
(கி.பி.1216-1246).                                       கி.பி. 1226                          குன்றத்தூர்ச் சேக்கிழான் அரையன் ஆட்கொண்ட தேவன் என்ற முனையதரையன்.
8.     "                                                        கி.பி. 1240                           குன்றத்தூர்ச் சேக்கிழான், வரந்தரு பெருமான் என்ற திருவூரகப் பெருமாள்.
9. மாறவர்கள் குலசேகர பாண்டியன்   கி.பி. 1300                          குன்றத்தூர்ச் சேக்கிழான் ஆடவல்லான்.

(கி.பி. 1270-1305)
---------

 

குன்றத்தூர் சேக்கிழார் மரபினர், சேக்கிழார் புராண ஆசிரியர் அறிவித்தபடி, நீண்ட காலம் அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது, அவர்கள் பெற்றிருந்த 'உத்தம சோழப் பல்லவராயர், துண்டக நாடு உடையான், அரையன், முனையதரையன்' என்னும் பட்டங்களால் விளக்கமாகிறது. இம்மரபினர் தமிழ்நாட்டுச் சிவன் கோவில்கள் பலவற்றுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர் என்பது மேற்குறித்த கல்வெட்டுகள் குறிக்கும் செய்தியாகும். 

 

பெரியபுராண ஆசிரியர் யாவர்? மேற்கண்ட சேக்கிழார் ஒன்பதின்மருள் முதல்வரே-சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவன் என்ற உத்தமசோழப் பல்லவராயன் என்பவரே-பெரியபுராணம் பாடிய நம் சேக்கிழாராக இருக்கலாம் என்பது அறிஞர் [4] கருதுகின்றனர். சேக்கிழார் காலம் இரண்டாம் குலோத்துங்கன் காலமாகும் என்பது கல்வெட்டு அறிஞர்-வரலாற்று அறிஞர் இவர்தம் முடிபாகும். அவன் காலம் கி.பி. 1133-1150. அவன்மகன் இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1173) என்பவன். சேக்கிழார் புராணப்படி, இந்த இராசராசன், சேக்கிழார் முதல் அமைச்சராக இருந்தபொழுது இளவரசனாக இருந்தவன். இவனது 17 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற்றான் சேக்கிழார் பெயர் குறிக்கபட்டுள்ளது. இராசராசன் காலத்தில் அவர் ஒய்வுபெற்றுச் சிவனடியாராக இருந்தார் என்பது அக் கல்வெட்டால் தெரிகிறது. சேக்கிழார் புராண ஆசிரியர் குறிந்த 'உத்தம சோழப் பல்லவராயர்' என்ற பட்டமும் அவர் ஒருவருக்குத்தான் காணப்படுகிறது. இவை அனைத்தையும் ஒரு சேர நோக்க, முதற் கல்வெட்டிற் கண்ட இராமதேவன் என்பவரே பெரிய புராணம் பாடிய சேக்கிழார் என்பதை நம்பலாம்.
----------------------

 

[4] மு. இராகவையங்கார் 'சாஸனத் தமிழ்க்கவி சரிதம்'

 

இராமதேவன். 'இவ்வைணவப் பெயர் சைவமரபில் வந்தவர்க்குப் பெயராக இருந்திருக்குமா?' என்று சிலர் ஐயுறலாம். அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவராகிய முனையரையர்க்கு 'நரசிங்கர்' என்ற வைணவப் பெயர் இருந்தமையும், ஒன்பதாந்திருமுறைப் பாக்களைப் பாடிய சிவனடியாருள் ஒருவர்க்குப் புருஷோத்தம நம்பி என்ற பெயர் இருந்தமையும் நோக்கினால், இவ்வையம் எழ இடம் இராது. சேக்கிழார் மரபினர் வைணவப் பெயர் தாங்கல் பண்டை வழக்கம் என்பதை எட்டாம் கல்வெட்டைக் கொண்டும் உணரலாம்.

 

மாதேவடிகள்: சேக்கிழாரது பக்திச் சிறப்பை நோக்கியும் பெரிய புராணம் ஆகிய அருள்நூலைப் பாடிய தகுதி நோக்கியும் அவரைக் 'குன்றை முனி சேக்கிழார்', 'அருந்தவந்தனில் இருந்தவர்' என்றெல்லாம் சேக்கிழார் புராண ஆசிரியர் செப்பியுள்ளார். இஃதுண்மை என்பதை 'மாதேவடிகள்' என்ற அடையால் கல்வெட்டு வற்புறுத்துகிறது. 'மகா தேவனுக்கு அடிமை பூண்டவர்' என்பது இதன் பொருள். இச்சிறப்புடைய அடை, சேக்கிழார் பெரிய புராணம் பாடிய பிறகு வழக்கிற்கு வந்திருக்கலாம்.

 

அருள்மொழித் தேவர்: இது சேக்கிழாரது இயற்பெயர் என்று புராண ஆசிரியர் கூறுகிறார். இப் பெயரும் 'மாதேவடிகள்' என்றாற் போன்ற சிறப்புப் பெயர்- பெரியபுராணச் சிறப்பு நோக்கி அறிஞர் இட்ட தகுதிப் பெயர் எனக் கோடலே பொருத்தமாகும்.

 

உத்தம சோழப் பல்லவராயர்: இதனை 'அநபாயன் எனப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் சேக்கிழார்க்கு வழங்கினான்' என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியுள்ளார். இப்பட்டம் முதற் கல்வெட்டிலும் காணப்படுதல் இக்கூற்றை உறுதிப்படுத்துவதாகும்.

 

பாலறாவாயர்: 'சேக்கிழார் இளவல் பாலறாவாயர் என்பவர்; அவர், சேக்கிழார் அமைச்சர் பதவியிலிருந்து ஒய்வுபெற்ற பிறகு சோழ அரசியலில் உயர்ந்த அதிகாரியாக்கபட்டார்' என்பது சேக்கிழார் புராணச் செய்தி ஆகும். இதனை உறுதிப்படுத்துவது போல இராசராசன் காலத்துக் கல்வெட்டும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டும் காண்கின்றன. அவ்விரண்டிலும் 'சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன்' என்பது காணப்படுகிறது. இப்பெயர் கொண்டவர் திரு அரத்துறை (தென் ஆர்க்காடு மாவட்டம்) கோட்டுர்க் (தஞ்சாவூர் மாவட்டம்) கோவில்கட்குச் *நிலதானங்கள் செய்த சிவ பக்தர் என்பது அக் கல்வெட்டுகளால் தெரிகிறது. இவர், திரு அரத்துறையிலிருந்து மாசி, வைகாசி விழாக் காலங்களில் ஆளுடைய பிள்ளையார் திருமேனியைத் திருமாறன்பாடிக்கு எடுத்துச் செல்கையில் நடைபெறும் பூசை முதலியவற்றுக்காக வரியிலியாக நிலதானம் செய்தார்; கோட்டுர்க் கோவிலில் விளக்கெரிக்கப் பணம் உதவி செய்தார்.

 

அநபாயன்: இவன் சிறந்த சிவபக்தன் என்று கல்வெட்டுகளும், ஒட்டக்கூத்தர் இவன்மீது பாடிய உலாவும் உரைக்கின்றன. இவன் காலத்தில் சிதம்பரம் ஒப்புயர்வற்ற சிறப்பைப் பெற்றது. 'இவன், புவன முழுதுடையாள் என்று தன் அரசமாதேவியுடன் தில்லைக்குச் சென்று கூத்தப் பெருமானைப் பணிந்தான்; கோபுரங்கள், சிற்றம்பலம், பல பல மண்டபம், திருச்சுற்று மாளிகை, அம்மன் கோவில் இவற்றைப் பொன் மயமாக்கினான்; பேரம்பலத்தைப் பொன்வேய்ந்தான்; நான்கு திருவீதிகளையும் அமராவதியில் உள்ள பெரு வீதிகளும் நாணுமாறு சிறப்பித்தான்; மறையவர்க்குத் தானம் செய்தான்; பட்டம் பெற்றவுடன், சிறைப்பட்டிருந்த பகை மன்னரை விடுதலை செய்தான்' என்று குலோத்துங்கன் உலா, இராசராசன் உலா, தக்கயாகப் பரணி என்பன எடுத்தியம்புகின்றன. இவன், தந்தையான விக்கிரம சோழனால் தொடங்கப்பெற்று அரைகுறையாக விடப்பட்ட தில்லைத் திருப்பணிகள் அனைத்தையும் நிறைவுபெறச் செய்தான் என்னலாம். 

 

அமைதியான அரசியல்: இவனது ஆட்சிக்காலத்தில் போர்கள் இல்லை. சோழப் பெருநாட்டில் அமைதியே நிலவி இருந்தது. இவன் காலத்தில் சோழப் பெருநாடு வடக்கே கிருஷ்ணையாறு முதல் தெற்கே பாண்டிய நாடுவரை பரவி இருந்தது. நாடு முழுவதும் அமைதியும் சமயத் திருப்பணிகளும் குடிகொண்டிருந்தன. கங்கைகொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது. பழையாறையில் இருந்த அரண்மனையிலும் அரசன் சென்று தங்குவது வழக்கம். தில்லையிலும் ஒர் அரண்மனை பொலிவுற்று விளங்கினது, 

 

குடும்பம்: அரசனது கோப்பெருந்தேவி தியாகவல்லி என்ற புவனம் முழுதுடையாள்; மற்றொரு மனைவி கோவலூர் மலையமான் மரபினள். அவள் பெயர் முக்கோக்கிழாள் என்பது. மகன் இரண்டாம் இராசராசன். 

 

'அநபாயன்' - சிறப்புப் பெயர்: குலோத்துங்கன் பெற்றிருந்த பட்டப் பெயர்களுட் சிறந்தது, 'அநபாயன்' என்பதே ஆகும். இதனையே குலோத்துங்கன் உலாவும் கல்வெட்டுகளும் குறிக்கின்றன. சேக்கிழார் இஃதொன்றையே அவனைக் குறிக்கும் பத்து இடங்களிலும் வைத்துப் பாடியுள்ளார். இப்பெயரையே இவன் காலத்திற் செய்யப்பட்ட தண்டியலங்கார உதாரணப் பாக்களிலும் காணலாம். இவனது அரசியல் செயலாளன் 'அநபாய மூவேந்த வேளான்' எனப்பட்டான். இவன் காலத்துச் சிற்றரசருள் ஒருவன் 'அநபாய காடவராயன்' எனப் பெயர் பெற்றான். இவன் காலத்தில் கோவில்கட்கு விடப்பட்ட நிலங்கள் 'அநபாய நல்லூர்', "அநபாய மங்கலம்" எனப் பெயர் பெற்றன. இவை அனைத்தையும் நோக்க, இரண்டாம் குலோத்துங்கனுக்கு அநபாயன் என்பதே சிறப்புப் பெயராக விளக்கமுற்றிருந்தது என்பது நன்கு புலனாகும்.

 

இவன் காலத்துச் சிற்றரசர்: 

 

1. பல்லவப் பேரரசர் மரபில் வந்தவர் சோழப் பேரரசில் உத்யோகமுடையவராக இருந்துவந்தனர். அவருள் மோகன் ஆட்கொல்லி என்பவன் குறிப்பிடத் தக்கவன். அவனுக்குக் "குலோத்துங்க சோழக் காடவராயன்' என்ற பெயரும் உண்டு. அவன், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருமாணிக்குழி என்ற பாடல்பெற்ற தலத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குத் தலைவனாக இருந்தான். பின்னர்ப் படிப்படியாகப் பல உயர்ந்த பதவிகளை வகிக்கலானான். திருநாவலூர், திருவதிகை, விருத்தாசலம் போன்ற பெரிய கோவில்கட்கு அவன் செய்துள்ள அறங்கள் பலவாகும். சிறப்பாகத் திருவதிகைக் கோவிலுக்கு அவன் செய்த அறங்கள் மிகப் பலவாகும்.
2. திருக்கோவலூர் உள்ளிட்ட மலைநாட்டை ஆண்ட மலையமான்கள் 'சேதிராயர்' என்ற பட்டத்துடன் சோழராட்சியில் குறுநில மன்னராக இருந்தனர். அவருள் சேக்கிழார் காலத்தவர் இருவராவர். அவர் - விக்கிரமசோழச் சேதிராயன், குலோத்துங்கசோழச் சேதிராயன் என்பவர்.
3. கர்நூல், சித்துர், நெல்லூர் முதலிய பகுதிகளை ஆண்ட தெலுங்குச் சோழர் (சோடர்), ரேநாண்டுச் சோழர் மரபினர் ஆவர். "இவர்கள் கரிகாலன் மரபினர்" என்று பட்டயங்கள் பகர்கின்றன. அவர்கள் திருக்காளத்திக் கோவிலுக்குச் செய்துள்ள திருப்பணிகள் எண்ணிறந்தன. அவருள், சேக்கிழார் காலத்தில் குலோத்துங்க சோழ கொங்கன் என்பவன் சிற்றரசனாக இருந்தான்.
4. கடப்பை ஜில்லாவில் பொத்தப்பி நாட்டை ஆண்டவரும் சோழ மரபினரே ஆவர். பொத்தப்பி நாடு கண்ணப்பர் பிறந்த நாடாகும். சேக்கிழார் காலத்தில் பொத்தப்பி நாட்டை யாண்ட சிற்றரசன் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழ சித்தரசன் என்பவன்.
குறிப்பிடத்தக்க இச்சிற்றரசர்களைத் தவிர வேறு பலரும் சோழப் பெருநாட்டின் பல பகுதிகளை ஆண்டு வந்தனர். இவர் அனைவரையும் உள்ளடக்கிய சோழப் பெருநாட்டின் முதல் அமைச்சராகத்தான் சேக்கிழார் இருந்து வந்தார்.[5]
---------------
[5] சேக்கிழார் புராணம். செ - 18 

 

அநபாயன் காலத்துச் சைவத் திருப்பணிகள்: இரண்டாம் குலோத்துங்கனது ஆட்சி கி.பி. 1133 முதல் 1150 வரை இருந்தது. இப் பதினேழு ஆண்டுகளில் எந்த ஆண்டில் சேக்கிழார் சோழ முதல் அமைச்சர் ஆனார் - எந்த ஆண்டில் பெரிய புராணம் பாடினார் என்பன துணிந்துரைக்கக் கூடவில்லை. அதனால், பெரியபுராணம் பாடப்பெற்ற பிறகுதான் பல கோவில்களும் அநபாயன் ஆட்சியில் சிறப்புப் பெற்றன என்று கூறுதற்கில்லை. அவனது குறுகிய ஆட்சியில் திருமழபாடி, திருஆமாத்துர், திருமறைக்காடு, காஞ்சிபுரம், திருப்பழுவூர், திருநெல்வெண்ணெய். பெண்ணாகடம், சீகாழி, திருக்கோவலூர், திருமாணிக்குழி, திருவையாறு, திருவொற்றியூர், அச்சிறுபாக்கம், திருவைகாவூர், திருக்காளத்தி, திருக்கழுக்குன்றம், திருஒத்தூர், திருநாவலூர், திருப்புறம்பயம், திருவாரூர், திருவதிகை, திருவெண்ணெய்நல்லூர், திருப்புகலூர், திருவிடைமருதூர், திருவல்லம், திருஆவடுதுறை, திருமுதுகுன்றம் என்ற பாடல்பெற்ற கோவில்கள் சிறப்புற்றன என்பதைக் கல்வெட்டுகளால் அறிகிறோம்.

 

திருவாரூர்க் கல்வெட்டுகள்: 

 

1. "அநபாயன், தில்லைப் பொன்னம்பலத்துள் ஆடல் கொண்டுள்ள பெருமானது பாத செந்தாமரையில் உள்ள தேனைப் பருகும் வண்டு போன்றவன். அவன் அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்பவர் திருமேனிகட்குப் பல ஆடை அணிகளும் பூசைக்குரிய பொருள் வசதியும் அளித்தான்" என்று திருவாரூர்க் கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. இதனால் அவனது பக்திப் பெருமதிப்பும் தேவார ஆசிரியரிடம் அவன் வைத்திருந்த பெருமதிப்பும் நன்கு விளங்கலாம்.

 

2. "சுந்தரர் தாயாரான இசைஞானியார், திருவாரூர் ஞான சிவாசாரியார் மகளார் ஆவர். அநபாயன்- சடையனார், இசைஞானியார், சுந்தரர் இவர்தம் திருவுருவச் சிலைகளைப் பூங்கோவிலில் எழுந்தருளச் செய்தான்" என்று மற்றொரு கல்வெட்டு கூறுகிறது. 

 

இங்ஙனம் பரம சிவபக்தனாக விளங்கியவன் அநபாய சோழன். அவன் வழிவழியாகவே சைவராக இருந்து வந்த சோழர் மரபில் பிறந்த வழுவிலா மன்னவன். அவனது நற்காலமோ அன்றித் தமிழ்நாடு செய்த நற்றவமோ, அறியோம் வழிவழிச் சைவராக வந்த சேக்கிழார் மரபில் வந்த பெரிய புராண ஆசிரியர் அநபாயனிடம் முதல் அமைச்சராக அமர்ந்தார். அரசனும் அமைச்சரும் பழுத்த சைவப் பெருமக்களாக விளங்கியதால், சோழப் பெருநாடே சைவ சமய வுணர்ச்சியில் வீறு பெற்றிருந்தது என்னல் மிகையாகாது. 

 

சோழநாட்டுத் திருநாகேச்சரம்: சேக்கிழார் அநபாயனிடம் முதல் அமைச்சராக இருந்த பொழுது சோழநாட்டுத் திருநாகேச்சரம் என்ற கோவிற் பெருமானிடம் கரைகடந்த பக்தி கொண்டிருந்தார். அத்தகைய கோவில் ஒன்றைத் தமது குன்றத்துரில் எடுப்பித்தல் வேண்டும் என்று எண்ணங்கொண்டார்: அவ்வாறே புதிய கோவிலை எடுப்பித்தார். அதற்குத் திருநாகேச்சரம் எனப் பெயரிட்டார் என்பது சேக்கிழார் புராண ஆசிரியர் கூற்று. 

 

சோழநாட்டுச் திருநாகேச்சரம் என்ற கோவிற் பெயர் அஃதுள்ள இடத்திற்கே பெயராகிவிட்டாற் போலவே, குன்றத்தூர்த் திருநாகேச்சரம் என்ற கோவிற் பெயரும் அஃதுள்ள இடத்தையே குறிக்கத் தொடங்கி இன்றளவும் வழக்காறு பெற்றுவிட்டது. சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் சேக்கிழார், அவர் தாயார், தம்பி பாலறாவாயர் இவர்தம் உருவச்சிலைகள் இன்றளவும் இருந்துவருகின்றன. சேக்கிழார் குடும்பத்தினர் அக்கோவிற் பெருமானிடம் அன்பு செலுத்தினவராவர் என்பதற்கு அவ்வுருவச்சிலைகளே சான்றாகுமன்றே?

 

குன்றத்தூர்த் திருநாகேச்சரம். இது முன்னதைப் போலப் பெரிய அளவில் அமைந்ததில்லை. ஆயினும், அழகும் அமைதியும் கெழுமிய இடத்தில் அமைந்துள்ளது. இது சோழர் காலத்திய கோவில் என்பதைப் பல சான்றுகள் கொண்டு உணரலாம். வெளிச் சுற்றில் சேக்கிழாருக்குச் சிறிய கோவில் இருக்கின்றது. ஆண்டு தோறும் ஜூன் மாதத் தொடக்கத்தில் சேக்கிழார் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. பத்தாம் நாள் சேக்கிழார் திருவுருவம் மிக்க சிறப்பாக அணி செய்யப்பட்டு ஊர்வலம் வருதல் காணத்தக்க ஒரு காட்சியாகும். 

 

கல்வெட்டுகள்: அக்கோவிற் கல்வெட்டுகள் 44 ஆகும்.4 அவை யாவும் இரண்டாம் இராசராசன் மூன்றாம் குலோத்துங்கன் என்ற திரிபுவன வீரதேவன் காலத்துக் கல்வெட்டுகளும் விசயநகர ஆட்சிக் காலத்து கல்வெட்டுகளுமாக இருக்கின்றன. அக்கோவிலில் திருவுண்ணாழிகைச் சபையார் இருந்தனர். கோவிற் பூசைகள் நாள்தோறும் குறைவின்றி நடந்து வந்தன. கோவிலை அடுத்த மடம் ஒன்று இருந்தது. அதனில் ஆலாலசுந்தரர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். நாற்பத்தெண்ணாயிர மாணிக்கம், சித்திரமேழி ஈங்கை, தேவப்பிள்ளை என்ற திருவுண்ணாழிகை நங்கை, உய்யவந்தாள் என்ற திருவுண்ணாழிகை நங்கை முதலிய தேவரடியார் பலர் இருந்தனர். கோவிலுக்குச் சேக்கிழார் மரபினரும் பிறரும் திருப்பணிகள் பல செய்துள்ளனர்.
---------------
[4] Ins 187, 231 of 1929 – 30 

 

பெரிய புராணத்திற்கு அடிப்படை: இங்ஙனம் சேக்கிழார் அநபாயனிடம் முதல் அமைச்சர் வேலை பார்த்துக்கொண்டே சிவபக்தியிற் சிறந்த செம்மலாய் விளங்கிவந்தார். அவர் முதல் அமைச்சராதலின், சோழப் பெருநாடு முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டிய கடமை உடையவர். சிறந்த புலவரும் சிவபக்தரும் அரசியல் அறிஞரும் ஆகிய அவர் தமது தமிழ்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தை மிக்க பயனுடையதாகச் செய்திருப்பார் அல்லரோ? அவர் காலத்தில் சைவ சமயம் நன்றாக வளர்ச்சியுற்று இருந்தது. அது (1) சங்க காலத்தில் எப்படி இருந்தது, (2) நாயன்மார் காலமான பல்லவ மன்னர் காலத்தில் எவ்வாறு இருந்தது, (3) பிறகு சோழ வேந்தர் காலத்தில் எவ்விதம் வளர்ச்சியுற்றிருந்தது, - இவ்வளர்ச்சி அவர் பெரிய புராணம் பாட எந்த அளவு துணைபுரிந்தது என்னும் செய்திகளை இனி அடுத்துவரும் பகுதிகளிற் காண்போம்.
--------- 

 

3. சைவ சமய வரலாறு
(சங்க காலம்)

 

முன்னுரை. உலகச் சமயங்களுட் பழைமையானவை சில. அச் சிலவற்றுள் ஒன்று சைவ சமயம் என்பது சர். ஜான் மார்ஷல் போன்ற புதைபொருள் ஆராய்ச்சியாளர் கருத்து. ரிக்வேத காலத்துக்கும் முற்பட்டது சைவ சமயம் என்பது மொஹெஞ்சொ-தரோ, மெசோபொடேமியா, கிரீட், எகிப்து, மால்ட்டா முதலிய இடங்களிற் கிடைத்த சிவலிங்கங்களால் வெளியாகிறது என்பதும் அன்னோர் கருத்தாகும். இச்சைவ சமயம் வேத காலத்தில் விளக்க முற்றிருந்தது என்பது வேதங்களால் விளங்குகிறது. பின்னர் மகாபாரதம் - இராமாயணம் போன்ற இதிகாச காலத்தில் மேலும் வளர்ச்சியுற்றிருந்தது என்பதற்குரிய சான்றுகள் இதிகாசங்களிற் காணலாகும். இவ்வளர்ச்சி, படிப்படியாக முதிர்ந்தமைக்கு உரிய சான்றுகள் வடமொழிப் புராணங்களிற் புலனாகின்றன. அப் பண்டைக் காலத்திலேயே நம் நாட்டில் சிவ வணக்கத் துக்குரிய கோவில்கள் பல இருந்தன; தீர்த்தங்கள் இருந்தன. மக்கள் இவ்விரண்டிற்கும் யாத்திரை செய்தனர். சிவபிரான் ஏனைய தேவர்க்கும் மேலானவன் என்ற பொருளில் 'மகா தேவன்' என்று வழிபடப்பட்டான். காசியிலிருந்து இராமேச்வரம் வரை கோவில்கள் இருந்தன. இஃது உண்மையாயின், இத்தமிழகத்திலும் இராமேச்வரம் உட்படச் சில கோவில்களேனும் அப் பண்டைக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் அல்லவா? காஞ்சி - ஏகாம்பரநாதர் கோவில், மதுரை - மீனாட்சியம்மன் கோவில் முதலியன எக்காலத்தில் உண்டாயின என்பது இன்று கூறக் கூடவில்லை.

 

சங்க காலக் கோவில்கள். சங்கத்தின் இறுதிக் காலம் ஏறத்தாழ கி.பி. 400 என்னலாம். அதன் தொடக்கம் கூறக்கூடவில்லை. இச்சங்க காலத்து மிகப் பழைய நூல் தொல்காப்பியம் என்பர். அதனைக் கொண்டு, வீரர் வணக்கத்துக்கு உரிய கோவில்களும் முருகன்-திருமால் துர்க்கை முதலிய தெய்வங்கட்க்குக் கோவில்களும் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகிக்கலாம். புறநானூறு முதலிய தொகை நூல்களில் சிவபெருமான் - முருகன் - துர்க்கை - திருமால் - பலராமன் முதலிய கடவுளர் சிறப்புடைக் கடவுளராகக் கூறப்பட்டுள்ளனர். அதனால் அவர்கட்குக் கோயில் உண்மையை அறியலாம். ஆலமர் செல்வனான சிவபிரானுக்கு நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆய்வேள் அளித்தனன் என்பதனால், கோவிலும் இலிங்கமும் (சிவனைக் குறிக்கும் மூலத்தான அடையாளம்) இருந்தன என்பது தெளிவு அன்றோ?

 

சிலப்பதிகாரம். சிலப்பதிகார காலத்தில் வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார், இவர்க்குக் கோவில்கள் இருந்தன. சிவன் - முருகன் - திருமால் - பலராமன் இவர்கட்கும் கோவில்கள் இருந்தன என்பது,

 

'பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும் 
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும் 
வால்வளை மேனி வாவியோன் கோவிலும் 
நீலமேனி நெடியோன் கோவிலும்......" 
எனவரும் சிலப்பதிகார அடிகளால் அறியப்படும்.

 

கோவில்கள். இக் கோவில்கள் சில இடங்களில் 'மாளிகை' எனவும் பெயர் பெறும். தெய்வக் கோவிலிலும் அரசன் கோவிலிலும் மண்டபங்கள் உண்டு. இவை யாவும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து, நேரறி கயிறிட்டுத் திசைகளையும் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன என்பது,

 

"ஒருதிறம் சாரா வரைநாள் அமையத்து 
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் 
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து" 
-- நெடுநல்வாடை
என வரும் அடிகளாலும்,
"அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி 
சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று 
மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள் 
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம்" 
- சிலப்பதிகாரம் 
என வரும் அடிகளாலும்,
"பைஞ்சேறு மெழுகாப்பசும் பொன்மண்டபம்" 
என வரும் மணிமேகலை அடியாலும் நன்குணரலாம். கடைசியிற் கூறிய மண்டபம் பல நாட்டுக் கட்டடத்திறனாளருடன் தண்டமிழ் வினைஞர் சேர்ந்து சமைத்த அற்புத மண்டபம் என்று மணிமேகலை குறிக்கின்றது. அவ்வற்புத மண்டபத் தூண்கள்மீது பன்மணிப் போதிகைகள் இருந்தன. அவற்றின்மேற் பொன் விதானங்கள் இருந்தன. தரை சாந்தினால் மெழுகப்பட்டு இருந்தது.

 

இக்கோவில்கள் சுற்றுமதிலை உடையன; உயர்ந்த வாயில்களை உடையன. அவ் வாயில்கள் மீது உயர்ந்த மண்ணீடுகள் (கோபுரங்கள்) இருந்தன. அவற்றில் வண்ணம் தீட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பனவும் மணிமேகலை முதலிய நூல்களிலிருந்து தெளியலாம்.

 

இக்கோவில்கள் அனைத்தும் சுடுமண்ணால் (செங்கற்களால்) ஆகியவை. மேற்புறம் உலோகத் தகடுகளும் மரப் பலகையும் சாந்தும் வேயப்பட்டிருந்தன. இவ்வாறே உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன. இக் கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களையுடைய வாயில்களும், அவ்வாயில்கட்குத் துருப்பிடியாதிருக்கச் செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்களும் பொருத்தப் பட்டிருந்தன. 

 

சிதம்பரம். சிதம்பரத்தின் பழைமை கூறுதற்கில்லை. பதஞ்சலி முனிவர் கூத்தப்பெருமான் நடனத்தைக் கண்டு களித்தார் என்பது புராணச் செய்தி. பதஞ்சலி காலம் கி.மு. 150 என ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். எனவே, கோவில் எனச் சிறப்புப் பெயர்பெற்ற சிதம்பரத்தில் உள்ள கூத்தப்பிரான் திருக்கோவில் ஏறத்தாழ, கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது விளங்கும். அது படிப்படியாகச் சிறப்பினைப் பெற்று அப்பர் காலத்தில் பெருஞ் சிறப்புற்று விளங்கியது. அவர் காலத்திலேயே சிற்றம்பலம் சிறந்திருந்தது. சிற்றம்பலம் என்ற துணையானே 'பேரம்பலம்' உண்மையும் பெறப்பட்டது. அப்பர் காலத்திலேயே "பொன்னம்பலம்' பொலிவுற்றது என்பதற்கு அவர் பதிகமே சான்றாகும். அப்பர்க்கு முற்பட்ட 'சிம்மவர்மன் என்ற பல்லவன். தன்னைப் பீடித்த உடல் நோயைப் போக்கிக்கொள்ளத் தில்லையை அடைந்தான், வாவியில் மூழ்கினான்; பொன் நிறம் பெற்றான். அதனால் ஹிரண்ய வர்மன் (பொன்னிறம் பெற்றவன்) எனப்பட்டான்' என்று கோயிற்புராணம் குறிக்கிறது. அவனே சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று அறிஞர் கருதுகின்றனர்.

 

பாடல் பெற்ற கோவில்கள்: ஏறத்தாழ கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கோச்செங்கட்சோழன் [1] என்ற பேரரசன் 70 சிவன் கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் அருளியுள்ளார். தமது காலத்திற்கு பெருங் கோவில்கள் 78 இருந்தன என்று அப்பர் அருளிப் போந்தார். கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் இடையில் சம்பந்தர் மட்டும் ஏறக்குறைய 220 கோவில்களைத் தரிசித்துப் பதிகம் பாடினார் எனின், அவற்றுள் ஒன்றேனும் அவர் காலத்தில் உண்டானது என்ற குறிப்புக் காணப்படவில்லை எனின், அப்பர்-சம்பந்தர் காலத்திற்கு முன்பே இத்தமிழகத்தில் இருநூற்றுக்கு மேற்பட்ட சிவன் கோவில்கள் இருந்தமை உண்மை அன்றோ? அக் கோவில்களில் ஆடல்-பாடல், நாளும் பலமுறை வழிபாடு, மக்கள் தவறாது கோவில் வழிபாடு செய்தல் முதலியன சிறப்புற இருந்தன; அவை அப்பர் சம்பந்தர் காலத்திற் புதியவையாக உண்டாக வில்லை என்பதை நோக்க. பல நூற்றாண்டுகளாகவே இக்கோவில்கள் தத்தம் இடம் - பொருள்கட்கு ஏற்ப ஏற்றமடைந்து விளங்கின என்பது தேற்றமன்றோ?
----
[1] திரிகடுகம் – பல்கலைக் கழகப் பதிப்பு – பக். 10-11. 75.

 

கோவில் வகைகள்: தமிழ் நாட்டுக் கோவில்கள் (1) பெருங் கோவில், (2) இளங்கோவில், (3) மணிக் கோவில், (4) கரக் கோவில், (5) தூங்கானை மாடம், (6) மாடக் கோவில் எனப் பலவகைப்படும். இவற்றுள் பெருங்கோவில் என்பது தில்லை, மதுரை. திருவாரூர் போன்ற சிறந்த இடங்களிற் கட்டப்பட்ட பெரிய கோபுரங்கொண்ட கோவில்கள் ஆகும். இளங்கோவில் என்பது பெரிய கோவிலைப் பழுது பார்க்குங்கால் மூர்த்தங்களை எழுந்தருளச் செய்து வழிபாடு நடைபெற்று வந்த சிறு கோவில் ஆகும். அது பெருங்கோவில் பிராகாரத்திற்கு உள்ளேயே இருக்கும். ஒரே ஊரில் இரண்டு கோவில்கள் இருந்தால், அளவுநோக்கி, ஒன்று பெருங்கோவில் என்றும் மற்றது இளங்கோவில் என்றும் கூறப்படலும் உண்டு. மாடக் கோவில் என்பது கட்டு மலையையும் யானை செல்லக்கூடாத திருமுன்பையும் உடையது. நன்னிலம், சாய்க்காடு முதலிய இடங்களில் உள்ள கோவில்கள் மாடக் கோவில்கள் ஆகும். மூலத்தானத்திற்கு மேலே உள்ள விமானம் (படுத்து) தூங்குகின்ற யானை வடிவில் அமையப்பெற்ற கோவில் துங்கானை மாடம் எனப்பட்டது. பெண்ணாகடம், திருத்தணிகை முதலிய இடங்களில் இத்தகைய கோவில்களைக் காணலாம். திருவதிகைக் கோவில், திருக்கடம்பூர்க் கோவில்களின் உள்ளறைகள் தேர் போன்ற அமைப்புடையவை; உருளைகளையும் குதிரைகளையும் கொண்டவை. இங்ஙனம் பலவாறு அமைந்த இக்கோவில்கள் இன்று-நேற்று உண்டானவை அல்ல. அவை அப்பர் காலத்திற்கும் முற்பட்டவை.

 

பலவகை அடியார்: சிவத் தலங்களில் பலவகை அடியார்கள் இருந்தனர். திருவாரூரில் விரிசடை அந்தணர், மாவிரதியர், காபாலிகர், பாசுபதர் முதலியோர் வாழ்ந்தனர் என்று அப்பர் கூறியுள்ளார். அவர்கள் திடீரென்று அப்பர் காலத்தில் கடவுளாற் படைக்கப்பட்டவர். அல்லர் அல்லவா? என்வே மேற் சொன்ன பலவகைச் சிவனடியார்கள் அப்பர்க்கு முன்னமே இந்நாட்டில் வாழையடி வாழையாக வாழ்ந்தனராதல் வேண்டும். என்று சைவம் உண்டாயிற்றோ, என்று சிவன் கோவில் உண்டானதோ - அன்று தொட்டே இந்நாட்டில் சிவனடியார்கள் இருந்து வந்தனர் என்பது அங்கைக் கனியாகும்.

 

முடிவுரை: இதுகாறும் கூறிவந்த செய்திகளால், சங்க காலத் தமிழகத்திலும் அப்பர்க்கு முற்பட்ட தமிழகத்திலும் பல சிவன் கோவில்கள் சீரிய நிலையில் இருந்தன: பலவகைச் சிவனடியார் இருந்தனர். கோவில்களில் ஆடல், பாடல், விழா, வழிபாடு முதலியன சிறப்புற நடைபெற்றன. கோவில் கட்டும் கலையில் நம்மவர் பண்பட்டிருந்தனர். சைவசமயம் அரசராற் பேணி வளர்க்கப்பட்டது என்பன போன்ற செய்திகளை அறியலாம்.
------------ 

 

4. பல்லவர் காலச் சைவ சமயம்
(கி.பி. 400 - 900) [1]

 

பல்லவர் காலம்: சங்ககாலத்தின் இறுதி எல்லை ஏறத்தாழ.கி.பி. 400 எனச் சென்ற பகுதியிற் கூறப் பட்டதன்றோ? அந்தக் காலமுதல் பல்லவப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலம் (ஏறத்தாழ கி.பி.900) வரை 'பல்லவர் காலம்' என்னலாம்.
----------

 

[1] பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியது கி.பி.400-க்கு முன்பே எனினும், சைவத்தொண்டு செய்த முதல் பல்லவன் கந்த சிஷ்யனே (கி.பி. 400-436) ஆதலின், சைவ சமய வளர்ச்சிக்காக, இவன் காலமே பல்லவர் கால முதலாகக் கொள்ளப்பட்டது. 

 

இக்கால அரசியல் நிலை. இப்பல்லவரது பரந்து பட்ட காலத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற்பகுதி கி.பி. 400 முதல் 600. இரண்டாம் பகுதி 600 முதல் 900 வரை என்னலாம். முதற் பகுதியில் தமிழகம் களப்பிரர், பல்லவர் என்ற புதிய அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டு அல்லற்பட்டது. காஞ்சி நகரம் பல்லவர் கைப்பட்டது. சோழ நாடும் பாண்டிய நாடும் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டது. இந்நாடுகளை வென்ற முதல் களப்பிரன் அச்சுத விக்கந்தன் என்பவன். அவன் காலம் கி.பி. 550 என்று கூறப்படுகிறது.[2] பாண்டியநாடு ஏறத்தாழ, கி.பி. 500இல் களிப்பிரர் ஆட்சியிலிருந்து விடுபட்டுப் பாண்டியர் ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆயின், சோழ நாடு களப்பிரர் கையிலிருந்து பல்லவர் கைக்கு மாறிவிட்டது. அஃது ஏறத்தாழ, கி.பி. 600 முதல் 900 வரை பல்லவர் வசமே இருந்தது. 
------

 

[2] History of Pali Literature, Vol. п, pp. 384, 385 & 389.

 

சோழர் கும்ப கோணத்தை அடுத்த பழையாறை, திருவாரூர் முதலிய நகரங்களைத் தன்னகத்தே பெற்ற மிகச் சிறிய நிலப்பகுதியைச் சிற்றரசராக இருந்து ஆண்டு வந்தனர். அவர்கள் வடக்கே பல்லவப் பேரரசுக்கும் தெற்கே பாண்டியப் பேரரசுக்கும் இடையில் இருந்து வாழ வேண்டியவர் ஆயினர். ஆயினும், பல்லவர் தம் நாட்டைக் கவர்ந்தனர் ஆதலாலும் தமிழகத்துக்கே புதியவர் ஆதலாலும் சோழர், அவர்கள் வலியை ஒடுக்கப் பாண்டியருடன் உறவுகொண்டு வாழ்ந்து வந்தனர். எனினும், பல்லவர் பகைமையை விரும்பாமல், அவர்கள் அரசியலில் உயர்ந்த அலுவலாளராகவும் இருந்து பணியாற்றி வந்தனர் போர்க் காலங்களில், சமயத்துக்கு ஏற்றபடி ஒருகால் பல்லவருடனும் பிறிதொருகால் பாண்டியருடனும் சேர்ந்து போரிட்டனர். கி.பி. 600-க்கு முன்வரை பல்லவர் காஞ்சியில் நிலையாக இருந்து ஆட்சி செய்யக்கூடவில்லை ஆயினும், கி.பி. 600 முதல் 900 வரை அவர்கள் பேரரசு தமிழகத்தில் வன்மையுற்று விளங்கியது. பல்லவர் அரசு தொடர்ச்சியாக இருந்து வந்தது. அங்ஙனமே கி.பி. 600 முதல் பாண்டிய அரசும் தொடர்பாக விளக்க முற்றிருந்தது.

 

நாயன்மார் காலம். சங்க (கி.பி.400-க்கு முற்பட்ட) நூல்களில் நாயன்மார் ஒருவரேனும் குறிக்கப்பட்டிலர்: நாயன்மார் பெயர்களைக் குறிப்பிட்டுத் தொகை பாடிய சுந்தரர் காலம் ஏறத்தாழ கி.பி. 840-865 என்னலாம். அப்பர் - சம்பந்தர் காலம் ஏறத்தாழ கி.பி.580-661, இவ்விருவரும் தமக்கு முற்பட்டவராக நாயன்மார் பலரைத் தம் பதிகங்களிற் குறிப்பிட்டுள்ளனர். இவ்விருவராற் குறிக்கப்படாமல் சுந்தரரால் மட்டும் அவரது திருமுறையில் சிறப்பாகக் குறிக்கப்பட்ட அடியார் பலர். எனவே, (1) அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்டவர் (கி.பி. 400-600) (2) அப்பர் - சம்பந்தர் காலத்தவர் (கி.பி.600-661), (3) அப்பர் - சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்பட்ட (கி.பி. 661-840) காலத்தவர், (4) சுந்தரர் காலத்தவர் (கி.பி.840-865) என நாயன்மார் நான்கு கால எல்லைக்கு உட்பட்டவர் ஆவர். எங்ஙனம் பார்ப்பினும், நாயன்மார் அறுபத்து மூவரும் பல்லவர் ஆட்சிக்காலத்தில் தோன்றிச் சைவத்தை வளர்த்து மறைந்த பெருமக்களே ஆவர் என்னலாம்.

 

அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்ட காலம் (கி.பி. 400 - 600) 

 

அப்பர், சம்பந்தர் பாக்களைக்கொண்டு அவர்க்கு முற்பட்டவராகக் கூறத்தக்கவர் பதின்மர் ஆவர். வரலாற்றுக் கண்கொண்டு முற்பட்டவராகக் கூறத்தக்கவர் எழுவர் ஆவர். எனவே, இக்காலத்தில் 17 நாயன்மார் வாழ்ந்தனர் எனக் கூறலாம். அவர் (1) கண்ணப்பர், (2) கணம்புல்லர், (3) அரிவாள் தாயர், (4) நமிநந்தி அடிகள், (5) தண்டியடிகள், (6) கோச்செங்கணான், (7) கூற்றுவ நாயனார், (8) புகழ்ச்சோழர், (9) எறிபத்தர்.(10) புகழ்த்துணை நாயனார். (11) காரைக்கால் அம்மையார் (12) மூர்த்தி நாயனார், (13) ஐயடிகள் காடவர்கோன், (14) சண்டேச்வரர் (15) திருமூலர், (16) சாக்கிய நாயனார். (17) அமர்நீதி நாயனார் என்பவராவர்.

 

இவருள், காரைக்கால் அம்மையாரும் காடவர்கோனும் பாடியுள்ள பாக்களை ஆராய்ந்தால், அக்காலத் தமிழகத்திற் பல ஊர்களில் சிவன் கோயில்கள் இருந்தன என்பது தெளிவாகத் தெரிகிறது. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை உறையூர், சேய்ஞலூர், கருவூர், காஞ்சி, தண்டலை, ஆப்பாடி, ஆலங்காடு, ஆவடுதுறை, காளத்தி, ஆலவாய் (மதுரை), தில்லை, ஆரூர், பழையாறை என்னும் ஊர்களில் உள்ளவை ஆகும். அவை அல்லாமல் கோச் செங்கட்சோழன் சாய்க்காடு, நன்னிலம் முதலிய எழுபது இடங்களில் புதியனவாக எடுப்பித்த கோவில்களும் குறிக்கத்தக்கவை. இவையாவும் கோச்செங்கணான் போன்ற பெரிய அரசர்களால் போற்றிப் பாராட்டப்பட்டமையின், சிறந்த நிலையில் இருந்தன என்னலாம். 

 

'ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவ மன்னர் பாடிய 'க்ஷேத்திர வெண்பா' என்பது அழிந்த நிலையில் கிடைத்துள்ளது. அதில் 23 சிவத் தலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. நூல் முழுவதும் கிடைத்திருக்குமாயின். மேலும் பல தலங்களின் பெயர்களை அறியக்கூடும். ஐயடிகள் [3] சிவத்தலயாத்திரை செய்தவர். சிவன்கோவில் கட்குப் பல திருப்பணிகள் செய்தவர். ஆதலால், அவர் காலத்தில் (கி.பி. 6-ஆம் நூற்றாண்டில்) சிவத்தலங்கள் சிறப்புற்று இருந்தன. என்பதை நன்கு அறியலாம்.
-------

[3] ஐயடிகள் - பஞ்சபாத சிம்ஹன் அஃதாவது, மூன்றாம் சிம்மவர்மன் (சிம்ம விஷ்ணுவின் தந்தை) என்பர் ஆராய்ச்சியாளர். 

 

அப்பர்-சம்பந்தர் காலம் (கி.பி 600-661) 

 

மகேந்திர வர்மன். இவன் அப்பர் காலத்தவன் சமண சமயத்திலிருந்து சைவராக மாறின அப்பரைச் சமண முனிவர் யோசனைப்படி நீற்றறையில் இட்டவன். விடங்கலந்த உணவை உண்ணச் செய்தவன். யானையைக் கொண்டு அப்பரைக் கொல்ல முயன்றவன். இறுதியில் அவரைக் கல்லிற்கட்டிக் கடலிற் பாய்ச்சினவன். இத்துன்பங்களிலிருந்து அப்பர் தப்பியதும் தானும் சமணப்பற்றை விட்டுச் சைவத்தைத் தழுவினவன். இவன் இங்ஙனம் சைவனாக மாறியவுடன் திருச்சிராப்பள்ளி மலைமீது ஒரு கோவிலைக் குடைவித்து சிவலிங்கத்தை எழுதருளச் செய்தான். வேற்றுத்துறையில் இருந்த எனது அறிவை நன்னிலைக்குத் திருப்பிய இந்த லிங்கத்தின் புகழ் உலகெலாம் பரவட்டும் என்ற தன் கருத்தைக் கல்வெட்டுமூலம் வெளிப்படுத்தியுள்ளான். இவனுடைய விருதுப் பெயர்கள் பலவற்றுள் குணபரன் என்பது ஒன்று. இவன் பாடலிபுரத்திலிருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அச்சிதைவுகளைக் கொண்டு 'குணபர ஈச்சரம்' என்ற சிவன் கோவிலைத் திருவதிகையிற் கட்டினான். இவன் சிவபெருமானுக்காகச் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் கோவில்களைக் குடைந்தமைத்தான். காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் மண்டபம் ஒன்றைக் கட்டுவித்தான். இவனே தமிழகத்தில் முதன் முதல் கற்கோவில் கண்ட காவலன் ஆவன். இவன் காலத்தில் இருந்த தமிழகத்துக் கோவில்கள் அனைத்தும் செங்கல், மண் மரம், உலோகம் சுண்ணாம்பு முதலியன கொண்டு கட்டப்பட்டவை. அதனாற்றான் அப்பழங்காலத்துக் கோவில்கள் நாளடைவில் அழிந்துபட்டன. மகேந்திர வர்மன் இசையிலும் நடனத்திலும் நாடகத்திலும் சிறந்த புலவனாக இருந்தான். இவன் காலத்தில் தமிழ்நாட்டுச் சைவ சமயம் சிறந்த நிலையில் இருந்தது என்பது அப்பர், சம்பந்தர் பாடல்களால் அறியலாம்.

 

அப்பர் - சம்பந்தர் திருமுறைகள் அறிவிப்பன. மகேந்திரவர்மன் காலத்தும் அவன் மகனான நரசிம்மவர்மன். காலத்தும் வாழ்ந்த அப்பர், சம்பந்தர் பாடிய திருமுறைகள் ஆராயத்தக்கன. அவற்றுள் அப்பர் பாடிய தலங்கள் 126 சம்பந்தர் பாடியன ஏறத்தாழ 220. வைப்புத் தலங்கள் உட்படப் பாடல் பெற்ற தலங்கள் 300 என்னலாம். இக்கோவில்கள் எல்லாம் அழிந்துவிடத் தக்க மண், மரம், செங்கல், உலோகம், சுண்ணாம்பு இவற்றால் கட்டப்பட்டவையே ஆகும். இவை இமயம் முதல் கன்னியாகுமரி முனைவரை பரந்திருந்தன. இக் கோவில்கள் பலவற்றில் இசை, நடனம் வளர்க்கப்பட்டன. பல கோவில்கள் பெரியன. கோபுரங்கொண்டன. பலவற்றில் விழாக்கள் சிறப்புற நடந்தன. பல தலங்களில் அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்ட நாயன்மார் வரலாறுகள் வழக்கில் இருந்தன. பலலவ அரசர்கள் புதியனவாகக் கட்டிய கோவில்களும் பாடப்பெற்றன. அவை பல்லவன் ஈச்வரம், மகேந்திரப்பள்ளி என்பன. பலவகையான சைவ அடியார்கள் தலங்கள் தோறும் இருந்தனர். யாத்திரை செய்தனர். தில்லை, திருவாரூர், காளத்தி, ஆலவாய் முதலியன சிறந்த சிவத்தலங்களாக விளங்கின. பழைய நாயன்மார்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் உள்ள கோவில்களில் அவர்களுடைய நினைவுக்கு அறிகுறியாகக் கற்சிலைகள் எழுப்பபட்டிருந்தன போலும்! அவற்றுக்குப் பூசை முதலியன நடைபெற்று வந்திருக்கலாம். என்னை? அவ்வத்தலத்துப் பதிகத்தில் அப்பரும் சம்பந்தரும் அவ்வந் நாயன்மார் பக்தியைப் பாராட்டிப் பாடியிருத்தலால் என்க. 

 

அப்பரது திருத்தொண்டின் உறைப்பால் பல்லவநாடு சைவ சமயத்திற்கு ஆட்பட்டாற்போலச் சம்பந்தர் திருத்தொண்டால் பாண்டிய நாடு சமணத்திலிருந்து சைவசமயத்தை ஏற்றுக் கொண்டது. சம்பந்தர் பாண்டிய நாட்டில் இருந்த சமணமுனிவரை அனல்வாதம், புனல்வாதம் முதலியவற்றில் வென்றார். பாண்டியனது வெப்பு நோயை அகற்றினார். சம்பந்தர்க்கு உதவியாகப் பாண்டியன் மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரும் - அமைச்சராகிய குலச்சிரை நாயனாரும் இருந்து தொண்டு செய்தனர். சமணனாக இருந்த பாண்டியன் நெடுமாறன் சைவன் ஆனான். சம்பந்தருடன் பாண்டி நாட்டுச் சிவத்தல யாத்திரை செய்தான். சமணரது ஆதிக்கத்தைத் தன் நாட்டிலிருந்து ஒழித்தான். சம்பந்தரது இச்செயற்கரிய திருத்தொண்டால் பாண்டி நாட்டுச் சிவத்தலங்கள் சிறப்புற்றன. மக்கள் பழையபடி சைவத்தைத் தழுவி வளர்க்கலாயினர்.

 

அப்பர். சம்பந்தர் பாடிய பதிகங்கள் அவ்வத்தலத்து அடியாரால் எழுதப்பட்டு மனப்பாடம் செய்யப்பட்டிருக்கலாம். அவை அவ்வக் கோவில்களிலும் ஒதப்பெற்றனவாகலாம். அப்பர். சம்பந்தருடன் தல யாத்திரை சென்ற அடியார்கள். தலந்தோறும் அவர்கள் பாடிய பதிகங்களை எழுதி வந்தனர் என்னலாம். அப்பர். சம்பந்தருடன் அடியார் பலர் கூடித் தலயாத்திரை செய்து நாடெங்கும்.பக்தியைப் பரப்பி வந்தனர்.

 

பல்லவர் ஆட்சியில் கோவில்கள் சிறப்புற்று விளங்கினமையின், அப்பர்க்கும் சம்பந்தர்க்கும் கோவில்களில் வரவேற்பும் பிறசிறப்புகளும் நடைபெற்றன. கோவில்களை அடுத்திருந்த மடங்களில் சமய போதனை, அடியார்க்கு உணவு வசதி, தங்கல் வசதி முதலியன சிறப்பாக அளிக்கப்பட்டன. கோவில்களை அடுத்து மடங்கள் இருத்தல், சமணப் பள்ளிகளை அடுத்துப் 'பாழிகள்' இருந்தமை போலாகும். நாயன்மார் ஆங்காங்குத் தண்ணீர்ப்பந்தர். உணவுச்சாலை முதலியன வைத்துப் பொது மக்கட்குத் தொண்டு செய்து அவர்களைச் சைவத்தில் பற்றுள்ளம் கொள்ளச் செய்தனர். அக்காலச் சைவ அடியார்களுக்குள் மேல் வகுப்பு - கீழ் வகுப்பு, முதலாளி - தொழிலாளி, அரசன் – ஆண்டி, கற்றவன் - கல்லாதவன் என்ற வேறுபாடுகள் காட்டப்பட்டில. பக்தி ஒன்றையே சமய அடிப்படையாகக் கொண்டு எல்லாத் தமிழ் மக்களும் ஒன்றுபட்ட உள்ளத்தவராய்ச் சைவப் பயிர் தழைக்க உழைத்தனர். இளஞ் சிறுவராகிய சம்பந்தர் என்ற மறையவர். முதுமையும் பக்தியின் மேன்மையும் கொண்ட வேளாளராகிய, திருநாவுக்கரசரை, அப்பரே! (தந்தையே) என அழைத்தமையும், அப்பூதி அடிகள் என்ற மறையவர் திருநாவுக்கரசரைப் பணிந்து பாத பூசை செய்து உடனிருந்து உண்டமையும், திருநீல நக்கர் என்ற மறையவர் தமது இல்லத்தில் வேள்விக் குழியண்டைப் பாணர் வகுப்பினரான திருநீலகண்டரையும் அவர் மனைவியாரையும் தங்கியிருக்க விட்டமையும் மேற்கூறியதற்குத் தக்க சான்றுகள் ஆகும். இங்ஙனம் அப்பர்-சம்பந்தர் காலத்தில் பல்லவ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் சைவ சமயம் வளர்க்கப்பட்டதற்கு அடியார்களின் ஒத்தகருத்தும் அரசர் காட்டிய ஆதரவுமே சிறப்புடைக் காரணங்கள் ஆகும்.

 

இக்கால நாயன்மார். (1) திருநாவுக்கரசர், (2) திருஞான சம்பந்தர், (3) சிறுத்தொண்டர், (4) திருநீலகண்ட யாழ்ப்பாணர், (5) முருக நாயனார், (6) குங்கிலியக்கலயர், (7) நீலநக்கர், (8) நெடுமாறர், (9) மங்கையர்க் கரசியார், (10) குலச்சிறையார், (11) அப்பூதி அடிகள் என்ற பதினொரு வரும் இக்காலத்தில் வாழ்ந்த நாயன்மார் ஆவர்.

 

அப்பர் - சம்பந்தர்க்கும் சுந்தரர்க்கும் இடைப்பட்ட காலம் (கி.பி. 661 - 840) 

 

பரமேச்வர வர்மன் (கி.பி. 670-685). இக்காலப் பல்லவ அரசருள் முதல்வன் பரமேச்வர வர்மன். இவன் சிறந்த சிவபக்தன் உருத்திராக்கம் கொண்டு சிவலிங்க வடிவமாகச் செய்யப்பட்ட முடியை அணிந்த பெரும் பக்தன். கற்களை உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கற்கோவில் கட்டிய முதற் பல்லவன் இவன். இவன் இங்ஙனம் சிவன் கோயில் ஒன்றைக் கூரத்திற் கட்டிப் பட்டயம் விடுத்தவன். மகாபலிபுரத்து ஒற்றைக் கல் கோவில்களில் உள்ள மேல் அடுக்கு இவன் காலத்திற் குடையப்பட்டது. இவன் சிறந்த வடமொழிப் புலவன்.

 

இராச சிம்மன் (கி.பி.685-720). இவன் பரமேச்வரன் மகன்; தந்தையைவிடச் சிறந்த சிவபக்தன்; உலகப் புகழ்பெற்ற காஞ்சி-கயிலாசநாதர் கோவிலைக் கட்டிப் புகழ்பெற்றவன்; திருநின்றவூரில் மனக்கோவில் கட்டிய பூசலார் காலத்தவன். 'சிவ சூடாமணி, சங்கரபக்தன். ரிஷபலாஞ்சனன்' என்ற தொடர்களால் இவனது சைவப்பற்றை விளக்கமாக அறியலாம். இவன் 'ஆகமப் பிரியன்' என்று கல்வெட்டுகளிற் கூறப்படலால், சைவ ஆகமங்களில் பற்றுடையவன் என்பது அறியப்படும். இப்பல்லவ வேந்தன் சிறந்த இசைப்புலவன். இசைக் கருவிகளை மீட்டுவதில் இணையற்றவன். நடனக்கலையில் சீரிய புலமை உடையவன். இக்கலியுகத்தில் வான் ஒலி (அசரீரி) கேட்டவன். இவன் காஞ்சியில் ஐராவதேசர் கோவில், மதங்கிசர் கோவில், கயிலாசநாதர் கோவில் என்பனவும், மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரமாகவுள்ள கோவில், பன்மலைக் கோவில் என்பவற்றையும் கட்டியவன். இவன் கட்டிய கயிலாசநாதர் கோவிலில் இவன் காலத்துச் சிறந்த நடன வகைகள் சிற்பவடிவிற் காட்டப்பட்டுள்ளன. சிவபிரான் ஆடிய உயர்தர நடன வகைகள் வியக்கத் தக்கவாறு விளக்கப்பட்டுள்ளன. சிவபெருமானுடைய திருக்கூத்தின் சிறப்பைத் திருநாவுக்கரசர் தேவாரத்திற் படித்து இன்புறலாம். ஆனால், அவ்விவரங்களைக் கயிலாசநாதர் கோவிற் சிற்பங்களில் கண்களாரக் கண்டு களிக்கலாம்.

 

பல்லவ மல்லன் (கி.பி. 725-790). இவன் சிறந்த வைணவன். திருமங்கை ஆழ்வார் காலத்தவன். இவன் வைணவன் ஆயினும், இவன் காலத்திற் சிவன் கோவில்கள் சிறப்புற்று விளங்கின. காஞ்சியில் உள்ள முத்தீசர் கோவில் திருக்குறிப்புத்தொண்டர் பூசித்தாகும். அஃது இவன் காலத்தில் 'தர்ம மகா தேவீச்வரம்' என்ற பெயருடன் விளங்கியது. அதனில் 44 தேவரடியார் இருந்து இசை, நடனக் கலைகளை வளர்த்தனர். சிற்றரசர் பலரும் குடிமக்கள் பலரும் நாடெங்கும் இருந்த கோவில்கட்குப் பல தானங்கள் செய்துள்ளனர். இப்பல்லவ வேந்தன் வேதங்களில் வல்ல மறையவர்க்குப் பிரமதேயமாகப் பல ஊர்களை விட்டவன். சுருங்கக்கூறின், இவன் காலத்தில் சைவமும் வைணவமும் ஒருங்கே வளர்க்கப்பட்டன என்னல் தவறாகாது.

 

நந்திவர்மன் (790-840). இவன் பல்லவ மல்லன் மகன். பரம பாகவதன். எனினும், இவன் காலத்தில் சிவன்கோவிற் பணிகள் நடந்தவண்ணம் இருந்தன. இவன் காலத்துப் பணிகளுட் சிறப்பாகக் குறிக்கத் தக்கது கச்சித் திருமேற்றளிக் கோவிலுக்கும் அதனைச் சார்ந்த மடத்திற்கும் முத்தரையன் ஒருவன் பொருள் உதவி செய்ததாகும். இதனால், தமிழ் நாட்டில் தேவார காலத்திற்றானே கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன என்பது உண்மையாதல் காணலாம். 

 

இக்கால நாயன்மார். அப்பர்-சம்பந்தர்க்கு முற்பட்ட நாயன்மார் 17பேர். அப்பர்-சம்பந்தர் காலத்தவர் 11 பேர். சுந்தரர் காலத்தவர் 13 பேர். எனவே, அப்பர்-சம்பந்தர் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட நாயன்மார் 22 பேர் ஆவர். அவராவார் - (1) பூசலார் நாயனார், (2) காரி நாயனார், (3) அதிபத்த நாயனார், (4) கலிக்கம்ப நாயனார், (5) கலிய நாயனார், (6) சத்தி நாயனார், (7) வாயிலார் நாயனார், (8) முனையடுவார் நாயனார் (9) இடங்கழி நாயனார், (10) இயற்பகை நாயனார், (11) நேச நாயனார், (12) இளையான்குடி மாற நாயனார், (13) மெய்ப்பொருள் நாயனார், (14) திருநாளைப்போவார் நாயனார், (15) ஏனாதிநாத நாயனார், (16) ஆனாய நாயனார், (17) உருத்திரபசுபதி நாயனார், (18) திருக்குறிப்புத்தொண்ட நாயனார், (19) மூர்க்க நாயனார், (20) சிறப்புலி நாயனார், (21) கணநாத நாயனார், (22) திருநீலகண்ட நாயனார் என்பவர். 

 

சுந்தரர் காலம்

 

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 840-865). இவன், 
"கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின் பெருமான் 
காடவர்கோன் கழற்சிங்கன்"
என்று சுந்தரரால் ஏத்தெடுக்கப்பெற்ற பெருமையுடைய சிவபக்தன் என்று அறிஞர் கருதுகின்றனர் [4]. இவன் 'சிவனை முழுதும் மறவாத சிந்தையன்'. இவன் திருவொற்றியூர், திருவதிகை, திருவிடைமருதூர், திரு நெய்த்தானம் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் திருத்தொண்டு செய்தவன். இவன் விருதுப் பெயர்களுட் 'குமார மார்த்தாண்டன்' என்பது ஒன்று. இவன், அப்பெயரால் விளக்கொன்று செய்து திருவிடைமருதூர்க் கோவிலுக்கு அளித்தான். இவன் காலத்தில், திரு ஆதிரைநாள் பல இடங்களிற் கொண்டாடப்பட்டது. இவன் மனைவியான மாறன் பாவையார் என்பவள் சிறந்த சிவபக்தி உடையவள். அவள் பல கோவில்கட்குத் திருப்பணிகள் செய்தவள். இப்பல்லவ வேந்தன் காலத்துக் கல்வெட்டில்தான் திருக்கோவில்களில் திருப்பதிகம் ஒதப்பெற்ற செய்தி அறியக் கிடக்கிறது. 
------

4இவன் கழர்சிங்கன் என்பதற்குரிய சான்றுகளை எனது "பெரிய புராண ஆராய்ச்சி" என்னும் விரிவான நூலிற் கண்டு கொள்க. Vide also Dr.C. Minakkshi's 'Administration & Social life under the Pallavas', pp.299-304

 

சுந்தரர் இவனிடத்திற் கரைகடந்த அன்பு கொண்டவர் என்பதற்கு, இவனை ஒரு நாயனாராகக் கொண்டு மேற்காட்டிய அடிகளிற் பாராட்டினமையே சிறந்த சான்றாகும். 

 

சுந்தரர் தேவாரம். சுந்தரர் திருப்பதிகங்களால் அறியத் தக்க செய்திகள்: 
1.    பாடல்பெற்ற பல கோவில்களில் இசை வளர்க்கப்பட்டது.
2. பல கோவில்களில் நடனக்கலை கவனிக்கப்பட்டது.
3. கோவில்களில் விழாக்கள் நடைபெற்றன. 
4. சைவ சமய நூல்கள் பல இருந்தன. வேறு பல கலைகளைப்பற்றிய நூல்களும் இருந்தன.
5. கோவில்களில், பண்டாரம் (பொக்கிஷ சாலை) இருந்தது.
6. பல தலங்களில் சுந்தரர் தமக்கு முற்பட்ட நாயன்மார்களைப் பாடியுள்ளனர். அதனால் அவ்வத்தலத்துக் கோவிலில் அவ்வந் நாயன்மார் உருவச் சிலைகள் இருந்திருத்தல் கூடியதே.
7. கோவில்களில் பாடியும் ஆடியும் பக்திசெலுத்திய அடியார் பலர் தலந்தோறும் இருந்தனர்.

 

இக்கால நாயன்மார். (1) சுந்தரர், (2) சடையனார், (3) இசைஞானியார், (4) நரசிங்க முனையரையர், (5) ஏயர்கோன் கலிக்காம நாயனார், (6) மானக்கஞ்சாறர், (7) பெருமிழலைக் குறும்பர், (8) கோட்புலி நாயனார், (9) கழற்சிங்கர், (10) செருத்துணை நாயனார், (11) சேரமான் பெருமாள், (12) விறல்மிண்டர், (13) சோமாசிமாற நாயனார் என்போர் சுந்தரர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் ஆவர்.

 

திருமுறை ஓதல்: சுந்தரர் காலத்திலேயே வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருவல்லம் சிவன் கோவிலில் திருப்பதிகம் ஒதப்பட்டது என்பது கல்வெட்டால் தெரிகிறது. சுந்தரர் காலத்தவரான மானக்கஞ்சாற நாயனார் திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) சிவன் கோவிலில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்தார் என்று அக்கோவில் கல்வெட்டு கூறுகிறது. திருமுறைகள் நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டதற்கு முன்பே எறும்பியூர், பழவூர், ஆவடுதுறை, தவத்துறை (லால்குடி) முதலிய இடத்துச் கோவில்களில் திருப்பதிகங்கள் ஒதப்பட்டன என்பது கல்வெட்டுகளால் அறியக்கிடக்கிறது. இவற்றை நோக்க, நாயன்மார் காலமாகிய பல்லவர் காலத்திலேயே பல கோவில்களில் திருப்பதிகங்கள் ஒதப்பெற்று வந்தன என்பதை எளிதில் உணரலாம்.

 

நாயன்மார் உருவச்சிலைகள். அப்பர்-சம்பந்தர் காலத்திலேயே, அவர்க்கு முற்பட்ட நாயன்மார் உருவச் சிலைகள் அவர்கள் வாழ்ந்த பதிகளில் இருந்த கோவில்களில் எடுப்பித்துப் பூசை முதலியன வழக்கில் இருந்திருத்தல் வேண்டும் என்று முன் சொல்லப்பட்ட தன்றோ? அதனை உறுதிப்படுத்துவனபோலச் சுந்தரர் காலத்தில் திருநாகேச்வரத்தில மிலாடுடையார்க்குக் (மெய்ப்பொருள் நாயனார்) கோவில் இருந்தமையும், காஞ்சியில் திருக்குறிப்புத் தொண்டர் பூசித்த முத்தீசர் கோவில் உண்மையும் கல்வெட்டுகளால் அறிகிறோம். இவற்றால், பல்லவர் காலத்தில் 63 நாயன்மார்களுட் பெரும்பாலார்க்குப் பல கோவில்களில் உருவச்சிலைகள் இருந்திருத்தல் வேண்டும் என்று கோடல் தவறாகாது. இந்தக் கருத்தைச் சுந்தரர் திருத்தொண்டத்தொகை உறுதிப் படுத்தல் காணத்தக்கது: 

 

'சுந்தரர் திருவாரூரில் உள்ள தேவாசிரிய மண்டபத்தின் முன் திருத்தொண்டத்-தொகையைப் பாடினார். அம்மண்டபத்திற் கூடியிருந்த நாயன்மாரைத் தனித்தனியே வணங்கிச் சுந்தரர் பாடினார்' என்பது சேக்கிழார் கூற்று. 63 நாயன்மாருள் சுந்தரர் காலத்தில் உயிரோடு இருந்தவர் 13 பேர். ஏனைய 50 பேரும் அவருக்குக்காலத்தால் முற்பட்டவர் ஆவர். காலத்தால் முற்பட்ட அவருள் பலர் இரண்டு, மூன்று நூற்றாண்டுகட்கு முற்பட்டவர் அவர்களைச் சுந்தரர் தேவாசிரிய மண்டபத்திற் கண்டு தனித்தனி வணங்கினார் எனின், அந்நாயன்மார்களுடைய உருவச்சிலைகளைக் கண்டு வணங்கினார் என்பதுதானே நுட்பமாகக் கொள்ளத்தக்க பொருளாகும்? ஆகவே, ஆரூர்க் கோவிலில், சுந்தரர் காலத்தில், ஏறத்தாழ நாயன்மார் ஐம்பதின்மர் உருவச்சிலைகளேனும் எழுந்தருளப் பெற்றிருந்தன என்று நினைத்தல் பொருத்தமாகும் அல்லவா?

 

பிற்பட்ட பல்லவர். கழற்சிங்கன் மகனான நிருபதுங்க வர்மன் காலத்தில் சைவ சமயம் மேலும் வளர்ச்சி பெற்றது. பாடல் பெற்ற கோவில்களுக்குப் பலர் நிபந்தங்கள் விட்டனர். நிருபதுங்கன் மனைவியான வீரமகாதேவி திருக்கோடிகாவில் ஹிரண்யகர்ப்பமும், துலாபாரமும் புகுந்தனள். நிருபதுங்கன் மகனான அபராசித வர்மன் சிறந்த சிவபக்தன். அவன் காலத்தில் திருத்தணிகை வீரட்டானேசர் கோவில் கட்டப்பட்டது. அவன் காலத்தில் மாங்காடு, திருவொற்றியூர், சத்தியவேடு முதலிய இடத்துக் கோவில்கள் சிறப்புற்றன. அவன் மனைவியான மாதேவி அடிகள் சிறந்த சைவப்பற்று உடையவள். பின்வந்த கம்பவர்மன் காலத்துக் கல்வெட்டால் திருவொற்றியூர்க் கோவிலை அடுத்து மடம் இருந்தது தெரிகிறது.

 

தளிப் பரிவாரம். பல்லவர் காலத்துக் கோவில்கள் ஒழுங்கான முறையில் நடைபெற்று வந்தன. பெரிய கோவில் நடைமுறைகளைக் கவனித்து ஆட்சிபுரிய அமிர்த கணத்தார், தளி ஆள்வார் என்போர் இருந்தனர். மடங்களைக் கவனிக்க மடத்துப் பெருமக்கள் என்பவர் இருந்தனர். பூசை செய்பவரும், வாத்தியங்கள் வாசிப்பவரும், ஆடுமகளிரும், பாடுமகளிரும், ஓதுவார்களும், கோவில்களைத் தூய்மை செய்பவரும், தவசிகளும் (சமையல் செய்பவர்) வேறு பல பணி செய்பவரும் எனப் பலவகையினர் இருந்தனர். தேவரடியார் 'அடிகள்மார்' என்றும், நடனமாதர் 'மாணிக்கத்தார்' என்றும் பெயர் பெற்றிருந்தனர். பல கோவில்கள் ஊர் அவையார் ஆட்சியில் இருந்தன. 

 

மக்களுக்கு வழங்கிய நாயன்மார் பெயர்கள். நாயன்மார் பெயர்கள் அக்கால இயற்பெயர்களாகவும், காரணப் பெயர்களாகவும் காண்கின்றன. அப்பெயர்கள், அக்கால மக்கள் வழக்கில் இருந்தனவாதல் வேண்டும் அல்லவா? அம்மக்கள் நாயன்மார் நினைவுக்கு அறிகுறியாக அப்பெயர்களை வைத்துக்கொண்டனரா, அல்லது அக்கால வழக்கப்படி அப்பெயர்கள் இடப்பட்டனவா என்பது திட்டமாகத் தெரியவில்லை. பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் நிரம்பக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ளவை மிகச் சிலவே. அவற்றிற் காணப்படும் சில பெயர்கள் நாயன்மார் பெயர்களுடன் ஒரளவு ஒப்புமை உடையனவாகக் காண்கின்றன. அவற்றைக் கால முறைப்படி காண்க. (அட்டவணை காண்க.) 

 

முடிவுரை. இதுகாறும் கூறிப்போந்த விவரங்களால் பல்லவர் காலத்தில் -
1. பாடல்பெற்ற கோவில்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தன.
2. கோவில்<களை அடுத்துப் பல பகுதிகளில் மடங்கள் தோன்றிச் சமயக் கல்வியைப் புகட்டி வந்தன.
3. கோவில்களில் திருப்பதிகங்கள் ஓரளவு ஓதப்பெற்று வந்தன.
4. நாயன்மார் வாழ்ந்த பதிகளில் இருந்த கோவில்களில் அவர்தம் உருவச்சிலை எழுதருளப்பெற்று வழிபாடு நடைபெற்று வந்தது. ஆரூர்க் கோவில் போன்ற பெரிய கோவில்களில் நாயன்மார் பலருடைய உருவச் சிலைகள் எடுப்பிக்கப்பெற்றன.
5. பல கோவில்களில் விழாக்கள் சிறப்புற நடந்தன.
6. நாயன்மார் பெயர்கள் பல்லவர் கால மக்கள் கொண்டிருந்த பெயர்களோடு ஏறத்தாழ ஒன்று பட்டனவேயாகும். நாயன்மார்க்குக் காலத்தார் பிற்பட்ட மக்கள், அப் பெருமக்கள் பெயர்களைத் தாங்கி இருந்தமைக்கு அந்நாயன்மாரிடம் அவர்கள் கொண்டிருந்த சைவப்பற்றே சிறந்த காரணம் என்னலாம்.

      மக்கள் பெயர்                                                      நாயன்மார் பெயர்
1. மானி                                                                     இது மங்கயர்க்கரசியாரது இயற் பெயர்
2. தண்டி                                                                    தண்டியடிகள்
3. கலிப்பகை                                                             திலகவதியார் கணவன் பெயர்.
4. புகழ்த்துணை வரிசையரசன்                               புகழ்த்துணை நாயனார்.
5. நம்பி                                                                      நம்பி ஆரூரர்.
6. கம்பன்                                                                   கலிக் கம்ப(ன்) நாயனார்
7. கலிமூர்க்க இளவரையன் மூர்க்க நாயனார்       கலிக் கம்ப நாயனார்.
8. சடையன் பள்ளி                                                   சடையனார் (சுந்தரர் தந்தையர்)
9. சிறு நங்கை, பெருநங்கை, போற்றிநங்கை        நங்கை பரவையார். வெண்காட்டு நங்கை (சிறுத் தொண்டர் மனைவி)
10. பூதி கண்டன்                                                        அப்பூதி அடிகள்,
11. நந்தி நிறைமதி                                                    நமி நந்தி அடிகள்
12. பாதிரிகிழார் சிங்கன்                                           கழற்சிங்கன்
13. குறும்ப கோளரி                                                 பரசமய கோளரி (சம்பந்தர் பெயர்)
14. கஞ்சாறன் அமர்நீதி                                           மானக் கஞ்சாற நாயனார், அமர்நீதி நாயனார்
15. சக்திப் பல்லவன்                                                சக்தி நாயனார்.

 

இங்ஙனம் நாயன்மார் காலத்தில் வளர்ந்து வந்த சைவ சமயம், பல்லவர்க்குப் பிற்பட்ட சோழர் காலத்தில் (சேக்கிழார் காலம்வரை) எங்ஙனம் தளர்ச்சியடைந்தது, நாயன்மார் வரலாறுகள் - வழிபாட்டு முறைகள் - விழாக்கள் முதலியன எங்ஙனம் பலர் அறியச் சிறப்புப் பெற்றன. இவை அனைத்தும் எங்ஙனம் பெரியபுராணம் பாடச் சேக்கிழார்க்குப் பெருந்துணைபுரிந்தன என்பதை அடுத்த பகுதியிற் காண்போம்.
-------- 

5. சோழர் காலத்துச் சைவ சமய நிலை (கி.பி. 900-1133)

 

முன்னுரை: பல்லவப் பேரரசை ஒழித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்தின ஆதித்த சோழன் காலம் முதல் சேக்கிழார் காலத்து அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் காலம் வரை - சைவ சமய நிலையை ஆராய்வதே இப்பகுதியின் நோக்கம். பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் வரலாறுகள், அவர்கள் பாடிய திருப்பதிகங்கள் முதலியன நன்றாகப் பரவி வளர்ந்த காலம் இச்சோழர் காலமே ஆகும். பல்லவ அரசருள் சைவர் பலர், வைணவர் பலர், பெளத்தர் சிலர், சமணர் மிகச் சிலர். பாண்டிய மன்னருட் சைவர் பலர், வைணவர் சிலர், சமணர் மிகச் சிலர். ஆயின் சோழர் அனைவரும் சைவரே. மத மாற்றம் என்பது சோழ வரலாற்றிற் காண்டல் அரிது. பல்லவர்க்கு அடங்கிய் சிற்றரசராக இருந்தபொழுதும் சோழர் தம்மால் இயன்ற சிவத் தொண்டைச் செய்துதாம் வந்தனர். அவர்கள் பல்லவப் பேரரசை ஒழித்துச் சோழப் பேரரசை ஏற்படுத்தினவுடன், நாடெங்கும் சைவ சமய வளர்ச்சிக்கு முழுக் கவனத்துடன் பாடுபட்டனர். அவர்கள் காலத்தில் உண்டான புதிய கோவில்கள் பல; பாடல் பெற்ற பழைய கோவில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டன; கோவில்கட்கு ஏராளமான நிபந்தங்கள் விடப்பட்டன. விழாக்கள் சிறப்புற நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

 

புதிய கற்றளிகள்: சோழப் பேரரசை உண்டாக்கின ஆதித்த சோழன், முதற் பராந்தகன் முதலிய சோழ வேந்தர் தத்தம் பெயர்களைக்கொண்ட புதிய கற்கோவில்களைக் கட்டினர் பழைய கோவில்களைப் புதிக்கினர்.

 

இராசராச சோழன் பல ஆண்டுகள் உழைத்து எடுத்த தஞ்சைப் பெரிய் கோவிலை அறியாதார் உளரோ? அவன் அக்கோவிலுக்கு விடுத்த மானியம் அளவிடற் கரியது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்த கோவில்களிலிருந்து ஆடல் பாடல் வல்ல மகளிர் நானுற்றுவரைத் தஞ்சைப் பெரிய கோவிலில் அமர்ந்தினான். ஒவ்வொரு மகளுக்கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் மானியமாக விட்டான். 48 பேரை அமர்த்தித் திருப்பதிகம் ஓதச் செய்தான். இங்ஙனம் சோழர் கோநகரான தஞ்சாபுரியில் இராசராசன் எடுப்பித்த பெரிய கோவில் நடுநாயகமாக விளக்கமுற்று இருந்தது. இவ்வரசன் இலங்கை, பழையாறை, திருவலஞ்சுழி முதலிய இடங்களில் புதிய கோவில்களைக் கட்டினான். இவன் மனைவியரும் மக்களும் தமக்கையும் நாடெங்கும் செய்துள்ள சிவப் பணிகள் மிகப் பல ஆகும்.

 

இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரத்தை உண்டாக்கினான். அதில் கங்கைகொண்ட சோழீச்வரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினான். அக்கோவில் வியக்கதகும் வேலைப்பாடு கொண்ட மிகப்பெரிய கோவில். இராசேந்திரன் மகனான இராசாதிராசன் பல கோவில்களைக் கட்டினான். முதல் குலோத்துங்க சோழன் வேம்பற்றுார், கோட்டாறு, சூரியனார் கோவில் முதலிய இடங்களிற் கோவில்களை எடுப்பித்தான். இவன் மகனான விக்கிரம சோழன் திருமங்கலம், குற்றாலம், உத்தமசோழபுரம் முதலிய பகுதிகளிற் சிவன் கோவில்களை எடுப்பித்தான். சோழ மன்னரைப் பின்பற்றி அவர்தம் பேரரசில் இருந்த சிற்றரசரும் பிரபுக்களும் எடுப்பித்த புதிய கோவில்கள் பலவாகும். இவை அல்லாமல், பாடல் பெறாதனவும் சோழர் காலத்தில் புதியனவாகக் கட்டப் பெறாதனவுமாக இருந்து சோழர் ஆட்சியில் புதுப்பிக்கப்பெற்ற கோவில்கள் பலவாகும்.

 

பாடல் பெற்ற கோவில்கள்: பாடல் பெற்ற கோவில்கள் பல முழுவதும் கற்கட்டடங்களாக மாற்றப் பட்டன. வேறு சில கோவில்களில் விமானம் மட்டும் கற்கட்டடங்களாக மாற்றப்பட்டது. சிலவற்றில் கோபுரம், திருச்சுற்று (பிராகாரம்) என்பவை புதுப்பிக்கப் பட்டன. இராசராசன் பாட்டியாரான செம்பியன் மாதேவியார் சிறந்த சைவப் பெண்மணி ஆவர். அவரது பொருள் உதவியால் திருத்துருத்தி (தஞ்சை ஜில்லா குற்றாலம்). திருக்கோடிகா, திருவாரூர் அரநெறி, திருவக்கரை, திருமுதுகுன்றம் முதலிய கோவில்கள் கற்றளிகள் ஆயின. திருவையாறு, திருவெண்காடு முதலிய முப்பதுக்கு.மேற்பட்ட தலங்களில் உள்ள கோவில்கள் பொன்தானம், நிலதானம், பொன், வெள்ளிப் பாத்திரங்கள் முதலியவற்றைப் பெற்றனவாகும். பாடல்பெற்ற கோவில்கள் பலவற்றில் சித்திரை, வைகாசி, ஆணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன என்பது பல கோவில் கல்வெட்டுகளாற் புலனாகிறது. இவ்விழாக்கள் புதியனவாகச் சோழர் காலத்தில் உண்டாக்கப்பட்டவை என்பது அக்கல்வெட்டுகளிற் காணப்படாமையால், இவை அனைத்தும் நீண்ட காலமாகவே வழக்கில் இருந்தவை என்று கொள்ளத் தடை இல்லை. 

 

மடங்கள். சோழர் காலத்திற் புதிய மடங்கள் பல தோற்றுவிக்கப்பட்டன. ஆயின் சோழர் கல்வெட்டுகளிற் புதியன என்று கூறப்படாமல் சிறந்த நிலையில் இருந்த பழைய மடங்களும் பலவாகும். அவற்றுட் சிறப்பாகக் குறிக்கத் தக்கவை இவையாகும்.
(1) திருப்புகலூர் - நம்பி திருமுருகன் திருமடம்; (2) திரு ஆவடுதுறை - திருவீதி மடம், திருநீலவிடங்கன் மடம் முதலியன. (3) திருக்கழுக்குன்றம் - நமிநந்தி அடிகள் மடம்,; (4) திருவதிகை-வாகீசன் மடம், திருநாவுக்கரசன் திருமடம்; (5) திருமுதுகுன்றத்து மடம், (6) திருமங்கலம் - பரஞ்சோதி மடம்; (7) திருமணஞ்சேரி - பரசமய கோளரி மடம், (8) திருவையாற்று மடம்.

 

இம்மடங்கள் பலவற்றில் சிவயோகியர், மாவிரதியர், மாகேச்வரர், அடியார், வேதியர், ஆண்டார் முதலியவரை உண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவை பல கலைகளில் வல்ல சமயத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தன. இம்மடங்கள் தலயாத்திரை செய்யும் அடியவர் தங்கும் இடங்களாகவும், உள்ளதை இறைவன்பால் நிறுத்தி வீடுபேற்றை விரும்பும் முனிவர் தங்கும் அமைதி நிலவிய இடங்களாகவும், மக்கட்குச் சமயக் கல்வி புகட்டும் சமயப் பள்ளிகளாகவும் இருந்து சைவ சமயத் தொண்டாற்றி வந்தன. இவை கோவில்களை அடுத்து இத்தகைய நற்பணிகளில் ஈடுபட்டு இருந்தமையால் சைவ சமயப் பிரசாரம், சமண - பெளத்த சமயப் பிரசாரத்தை விஞ்சி விட்டது. சைவ சமயம் மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. 

 

பலவகை அடியார்கள். 

 

1. மடங்களில் உணவு கொண்ட அடியவருட் சிவயோகியர் ஒரு சாரார். அவர்கள் சிவபெருமானைச் சிந்தித்தபடியே இருப்பவர். இறக்குந் தறுவாயில் உடம்பு முழுவதும் நீற்றைப்பூசிச் சிவமந்திரங்களைச் சொல்லிக்கொண்டே தங்கள் மார்பில் உள்ள லிங்கத்தைப் பூசிப்பவர். இவர்களை உண்பித்த கோவில்கள் பலவாகும்.
2. காலாமுகச் சைவருள் கடுமையான நோன்பினர் "மாவீரதியர்' எனப்பட்டனர். இவர்கள் மண்டை ஒட்டில் உண்பவர் பிணச் சாம்பலை உடலில் பூசிக் கொள்பவர். அப்பிணச் சாம்பலை உண்பர் தண்டு ஏந்தி இருப்பர். மதுப்பாத்திரம் கையில் வைத்திருப்பர். அம்மதுவில் கடவுள் இருப்பதாக எண்ணி வழிபடுவர், நரபலி இடுவர். இம்மாவிரதியர் ஆட்சியில் சில கோவில்களும் மடங்களும் இருந்தன. 
3. மாகேச்வரர் லிங்கதாரணம் உடையவர்; சிறந்த பக்திமான்கள்; ஒழுக்கம் உடையவர்; துறவிகள். பல கோவில்கள் இவர்கள் மேற்பார்வையில் இருந்தன.
4. அடியார் என்பவர் சிவனுக்குத் தொண்டு பூண்ட பக்திமான்கள்.
5. வேதியர் என்பவர் வேதங்களில் வல்ல பிராமணர். 
6. ஆண்டார் என்பவர் திருமுறை ஒதுபவர்; திருநந்தவனம் அமைப்பவர்; மலர் பறிப்பவர்; அடியார்க்கு அடியவர்; கோவிலிலும் திருவீதியிலும் பணி செய்பவர்; மடங்களில் குற்றமற்ற முறையில் வாழ்பவர். இவர்கள் அனைவரையும் உண்பித்த மடங்களும் திருக் கோவில்களும் பலவாகும்.

 

நாயன்மார் உருவச்சிலைகள். நாயன்மார் உருவச் சிலைகளைக் கோவில்களில் வைத்து வழிபடல் அப்பர், சம்பந்தர்க்கு முன்பிருந்தே வந்த வழக்கமாதல் வேண்டும் என்பது சென்ற பகுதியிற் கூறப்பட்டதன்றோ? இவ்வாறு கோவில்களில் நாயன்மார் உருவச் சிலைகளை எடுப்பித்தல் சோழர் காலத்தில் மிகுதிப் பட்டது. 

 

1. திருவதிகைக் கோவிலில் திருநாவுக்கரசர்க்குத் தனிக் கோவில் ஒன்று 'வாகீச்வரம்' என்ற பெயருடன் இருந்தது. 
2. குகூர்க் கோவிலில் சுந்தரர்க்குக் கோவில் இருந்தது. அங்குச் சித்திரைத் திருவிழா நடந்தது.
3. செங்காட்டங் குடியில் சிறுத்தொண்ட நம்பி விழா நடைபெற்றது.
4. தஞ்சைப் பெரிய கோவிலில் சண்டீசர்க்குத் தனிக் கோவில் ஏற்பட்டது; பூசை சிறப்பாக நடைபெற்றது. 
5. சண்டீசர் சிவலிங்க பூசை செய்தல் - அவர் தந்தையின் கால் வெட்டுண்டு கீழே விழுதல் - அம்மையப்பர் தோன்றிச் சண்டீகர்க்குச் 'சண்டீசப் பதம்' தருதல் - இவற்றை விளக்கும் செப்பு உருவச் சிலைகள் தஞ்சைப் பெரிய கோவிவில் எடுப்பிக்கப் பெற்றன.
6. அதே கோவிலில் சுந்தரர், நங்கை பரவையார், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இவருடைய செப்பு உருவச்சிலைகள் எடுப்பிக்கப்பெற்றன. அவற்றுக்குப் பல ஆடை அணிகள் வழங்கப் பெற்றன.
7. [14] 'தத்தா! நமரே காண்' என்ற மிலாடுடையார் படிமம் ஒன்று அதே கோவிலில் எழுந்தருளப் பெற்றது. 
-----

 

[14] 'தத்தா! நமரே காண்' என்ற தொடர் மெய்ப்பொருள் நாயனார்
வரலாற்றில் உயிர் நாடியாகும். இதன் விளக்கம் பெரிய புராணத்திற் காண்க

8. அப்பெரிய கோவிலில் பைரவர், சிறுத்தொண்ட நம்பி, வெண்காட்டு நங்கை, சீராள தேவருடைய செப்பு உருவச்சிலைகள் எடுக்கப் பெற்றன. பல ஆடை அணிகள் வழங்கப்பட்டன.
9. திருமழபாடிக் கோவிலில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் திருமேனிகள் வைத்துப் பூசிக்கப்பெற்றன.
10. திருவொற்றியூர்க் கோவிலில் 63 நாயன்மார் உருவச்சிலைகள் எழுந்தருளப் பெற்றன. நாள்தோறும் பூசை செய்வதற்காக 75 கலம் நெல் தரப்பட்டது.
11. திருவாரூர்ப் பூங்கோவிலில் ஆளுடைய நம்பி, பரவை நாச்சியார் இவர்தம் உருவச்சிலைகள் இருந்தன. அவற்றின் பூசைக்காகச் சிற்றுார் ஒன்று தானமாக விடப்பட்டது.
12. திருவாமூர்க் கோவிலில் அப்பர் உருவச் சிலையும் சீகாழிக் கோவிலில் சம்பந்தர் உருவச்சிலையும் வைத்தும் பூசிக்கப்பெற்றன.

 

இங்ஙனம் பல கோவில்களில் நாயன்மார் உருவச் சிலைகள் விளக்கமுற்றன. இவற்றுக்கு நாளும் பூசை நடந்தது; உரிய காலங்களில் விழாக்கள் நடைபெற்றன. இவை கல்வெட்டுகளால் அறியப்படும் செய்திகள். இப்பூசையாலும் விழாக்களாலும் நாயன்மார் வரலாறுகள் தலங்கள்தோறும் பொதுமக்கள் பால் பரவி வந்தன என்பது தெளிவாகின்றதன்றோ?

 

திருப்பதிகம் ஓதுதல். கோவில்களில் திருப்பதிகம் ஓதுதல் நாயன்மார் காலத்திலேயே இருந்து வந்தது என்பதைச் சென்ற பகுதியிற் குறிப்பிட்டோம் அல்லவா? அப்பழக்கம் சோழர் காலத்தில் மிகுதிப் பட்டது என்பதைப் பல கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. திரு எறும்பியூர், திருப்பழுவூர், திரு ஆவடுதுறை, திருத்தவத்துறை, திருமுது குன்றம், திருவீழிமிழலை, திருநல்லம் திருச்சோற்றுத்துறை, திருமறைக்காடு, திருஆமாத்துார், தில்லை, திருவாரூர் முதலிய பாடல்பெற்ற கோவில்களிலும், பாடப் பெறாத பல கோவில்களிலும் திருப்பதிகம் ஓதப்பெற்றது. பிராமணர் முதலிய பல வகுப்பாரும் திருப்பதிகம் ஓதலில் ஈடுப்பட்டிருந்தனர் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. திருஆமாத்துர்க் கோவிலில் குருடர் பதினாறு பேர் நாளும் மும்முறை திருப்பதிகம் ஓதிவந்தனர். திருவொற்றியூர்க் கோவிலில் திருப்பதிகம் ஓதப் பதினாறு தேவரடியார் இருந்தனர். தில்லையில் மாசி மாதத் திருவிழாவில் திருத்தொண்டத் தொகை பாடப் பெற்றது. இராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் 'தேவார நாயகம்' என்றோர் அரசியல் உத்தியோகஸ்தன் இருந்தான். அவன் சோழ நாட்டுத் தேவாரப் பள்ளிகளையோ அல்லது கோவில்களில் தேவாரம் ஓதுவார்களையோ கவனிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான் போலும்!

 

ஆடல் - பாடல். தஞ்சைப் பெரிய கோவிலில் இசைக் கலையையும் நடனக் கலையையும் வளர்க்க 400 பதியிலார் இருந்தனர். அவர் அனைவரும் தமிழ்நாட்டுப் பல கோவில்களிலிருந்து வரவழைக்கப்பட்டனர் என்று இராசராசன் கல்வெட்டு கூறுகிறது. இதனால் தமிழ் நாட்டுக் கோவில்கள் பெரும்பாலானவற்றுள் இசை-நடனக் கலைகள் நன்முறையில் வளர்ச்சி பெற்று வந்தன என்பது வெள்ளிடை மலைபோல விளக்கமாகிறதன்றோ?

 

கோவில்களில் படிக்கப்பெற்ற நூல்கள். பல்லவர் காலத்தில் பாரதம் சில கோவில்களிற் படித்து மக்கட்கு விளக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அங்ஙனமே சோழர் காலத்தில் பாரதம், இராமாயணம், பிரபாகரம், சிவ தருமம், இராசராச விசயம் என்பன கோவில்களில் படித்து விளக்கப் பெற்றன. நீடுர்க் கோவிலில் 'புராண நூல் விரிக்கும் புரசை மாளிகை' என்று ஒரு மாளிகை இருந்ததை நோக்கக் கோவில்களில் புராண நூல்களும் படித்து விளக்கப்பட்டன என்பதை அறியலாம். 

 

நரலோகவீரன் செய்த திருப்பணிகள். நரலோக வீரன் என்பவன் முதல் குலோத்துங்கன் தானைத் தலைவருள் ஒருவன் தொண்டைநாட்டு மணவிற் கோட்டத்து அரும்பாக்கம் என்ற ஊரினன். இவன் சிறந்த சிவபக்தன். இவன் பல கோவில்களுக்குப் பலவகை அறங்கள் செய்துள்ளான். அவற்றுள் சிதம்பரம் கோவிலுக்கும் திருவதிகைக் கோவிலுக்கும் இவன் செய்த திருப்பணிகள் குறிக்கத்தக்கவை. இவன் சிதம்பரத்திற் செய்த பல திருப்பணிகளில் சிறந்தவை- (1) தில்லைவாழ் அந்தணர்க்கு ஏராளமாகப் பொருள் உதவிசெய்தமை, (2) சம்பந்தர் தேவாரத்தை ஓதுவதற்கென்று அழகிய மண்டபம் ஒன்றை அமைத்தமை, (3) மூவர் தேவாரத்தையும் செப்பேடுகளில் எழுது வித்தமை என்பன. இப்பெருமகன் (1) திருவதிகை வீரட்டானத்தில் திருநாவுக்கரசர்க்குத் தனிக்கோவில் கட்டினான். (2) திருநாவுக்கரசர் திருமடத்திற்கு 48 ஆயிரம் குழி நிலத்தைத் தானம் செய்தான்.

 

திருக்கைக்கோட்டி. இது கோவிலில் உள்ள ஒரு மண்டபம். இதனில் தேவார ஏடுகள் படிக்கப்படும்; எழுதப்படும்; புதுப்பிக்கப்படும்; திருமுறைகள் பூசிக்கப் பெறும். இப் பணிகளைச் செய்து வந்தவர் தமிழ் விரகர் என்பவர். இவர்க்கு மானியம் உண்டு. இத்தகைய மண்டபங்கள் தில்லை, சீகாழி முதலிய இடத்துக் கோவில்களில் இருந்தன என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. இக்கல்வெட்டுச் செய்திகளைக் காண்கையில், சேக்கிழார்க்கு முன்பே தேவாரப் பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டுவிட்டன; திருக்கோவில்களில் தேவார ஏடுகள் வைத்துப் பூசித்துப் பாதுகாக்கப் பெற்றன என்பன வெளியாகின்றன அல்லவா? 

 

சிவனடியார் சிற்பங்கள். சோழர்கள் கற்றளிகளாக மாற்றிய பாடல்பெற்ற கோவில்கள் சிலவற்றிலும் நாயன்மார் வரலாற்றுச் சிற்பங்கள் காண்கின்றன. அவற்றுள் குறிக்கத் தக்கவை: (1) சிதம்பரத்திற்கு அடுத்த மேலக் கடம்பூர்க் கோவிற் சிற்பங்கள்; 

(2) கீழ்க் கடம்பூர்ச் சிற்பங்கள். (3) கங்கைகொண்ட சோழீச் சரத்துச் சிற்பங்கள் ஆகும்.

 

1. மேலக் கடம்பூர்க் கோவில் பல்லவர் காலத்தது. அதன் கருவறையின் புறச்சுவர்கள் மூன்றில் இரண்டு வரிசைகளில் நாயன்மார் அறுபத்து மூவர் வரலாற்று நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள், காரைக்கால் அம்மையார் தலைகீழே நடந்து செல்வதுபோன்ற காட்சி ஒன்று. நாயன்மார் சிறப்பு நிகழ்ச்சிகளைக் குறிக்கும் இச்சிற்பங்கள் பல்லவர் காலத்தனவாகலாம். அல்லது இராசராசன் காலத்தன (திருத்தொண்டர் திருவந்ததாதி உண்டான காலத்தன) வாகவோ, சிறிது பிற்பட்டனவாகவோ இருக்கலாம். உண்மை எதுவாயினும், இவை சேக்கிழார்க்கு முற்பட்டவை என்பதில் ஐயமில்லை.

 

2. கீழ்க் கடம்பூர்க் கோவில் இன்று இடிந்து சிதைந்து கிடக்கிறது. அதன் கருவறைப் புறச்சுவர்கள் மூன்று மட்டும் நின்றவண்ணம் இருக்கின்றன. அவற்றில் பெரியனவும் சிறியனவுமான புரைகள் காண்கின்றன. பெரிய புரைகளில் சிவனுடைய பலவகை உருவச் சிலைகளும் சிறிய புரைகளில் நாயன்மார் உருவச் சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. புரைகட்கு அடியில் அம்மூர்த்தங்களின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இன்று தெளிவாகக் காணத்தக்க நிலையில் இருக்கும் நாயன்மார் பெயர்கள்-உலகாண்ட மூர்த்தி [2] (மூர்த்தி நாயனார்), முருகாண்டார் (முருக நாயனார்). திருக்குறிப்புத் தொண்டர், தண்டிப்பெருமாள் என்பன. இக்கல்வெட்டு எழுத்துகள் முதல் இராசராசன் காலத்தனவாகக் காண்கின்றமையால், இந்நாயன்மார் உருவச் சிலைகளும் ஏறத்தாழ இராசராசன் காலத்தன என்று கொள்ளலாம்.
-------
[2] 'மும்மையால் உலகாண்ட மூர்த்தி' என்பது திருத்தொண்டத்தொகை.

 

3. கங்கைகொண்ட சோழபுரம். அதன்கண் உள்ள வியத்தகு பெரிய கோவிலும் இராசேந்திரன் காலத்தன என்பது முன்பே குறிக்கப்பட்ட செய்தியாகும். அப்பெரிய கோவிலில் நடுமண்டபத்திற்குச் செல்லும் வடக்கு வாயிற்படி ஓரம் காணப்படும் சண்டீசர் உருவம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கத் தக்கது. சிவபெருமான் உமையம்மையுடன் இருந்து சண்டீசர் முடியில் தம் கொன்றை மாலை சூட்டி, அவருக்குச் சண்டீசப்பதம் தருகின்ற காட்சியை விளக்கும் அச்சிற்பம் கண்டு களிக்கத்தக்கது. அதனைப் படத்திற் கண்டு மகிழ்க. இஃதன்றி, நடு மண்டபச்சுவரில் நான்கு வரிசைகளிற் சண்டீசர் வரலாறு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

 

இச்சிற்பங்களும் அக்கோவிலில் உள்ள ஏனைய சிற்பங்களும் ஒரே காலத்தனவாகக் காண்கின்றன. எல்லாச் சிற்பங்களும் கோவில் கட்டப்பெற்ற காலத்திலேயே செய்யப்பட்டனவாகவே காண்கின்றன. ஆகவே, இச்சிற்பங்கள் சேக்கிழார்க்கு ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் . முற்பட்டவை என்னலாம்.

 

சிவனடியார் சித்திரங்கள். இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் புறச்சுவர் ஒன்றில் காணப்படும் ஓவியங்கள் கவனிக்கத் தக்கவை. அவை சுந்தரர் வரலாற்றை விளக்குவன.

 

1. ஒரு சித்திரம் சிவபெருமான் கயிலையில் இருப்பதைக் குறிக்கிறது. அவர் மான்தோல் மீது யோக நிலையில் இருக்கிறார். அவரைச் சூழ அடியவரும் கணங்களும் காண்கின்றனர்.
2. சிவபிரான் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட வரலாற்றை விளக்கும் சித்திரம் அழகானது. மணத்திற்கு வந்த மறையவர் ஒரு மண்டபத்தில் கூடியுள்ளனர். அவர்கட்கு இடையில் இருவர் எதிர் எதிராக நிற்கின்றனர். ஒருவர் கிழவர் மற்றொருவர் குமரர். கிழவருடைய ஒரு கையில் தாளங்குடை இருக்கிறது; மற்றொரு கையில் பனையோலை காணப்படுகிறது. இளைஞர் அடக்கமாக நிற்கின்றார். கூட்டத்தினர் முகத்தில் திகைப்பும் வியப்பும் மாறி மாறிக் காண்கின்றன. அவர்கட்கு வலப்புறம் ஒரு கோவில் காண்கிறது. கூட்டத்தினர் அதற்குள் விரைவாக நுழைகின்றனர். 
3. அடுத்த ஒவியம் சுந்தரரும் சேரமானும் கயிலை செல்வதைக் காட்டுவதாகும். வெள்ளையானை நான்கு கோடுகளுடன் தெரிகிறது. அதன் கோடுகளிர் பூண்கள் இடப்பட்டுள்ளன. அந்த யானைமீது இளைஞர் ஒருவர் இவர்ந்து செல்கிறார். அந்த இளைஞர் தாடியுடையவராகக் காண்கிறார். அவர் கைகளில் தாளம் இருக்கிறது. அது விரைந்து செல்வதாகத் தெரிகிறது. அதன்மீது கட்டமைந்த உடல்வளம் கொண்ட ஒருவர் அமர்ந்து அதனைச் செலுத்துகிறார். யானையும் குதிரையும் ஒரே திசை நோக்கிச் செல்கின்றன. யானைமீது செல்பவர் சுந்தரர். குதிரை மீது செல்பவர் சேரமான் பெருமாள் நாயனார்.
4. இவ்விரண்டு பக்த சிரோமணிகட்கு மேற்புறமாகக் கந்தர்வர் பலர் காண்கின்றனர். அவர்களுள் சிலர் சுந்தரர் மீதும் சேரமான்மீதும் மலர்மாரி பெய்கின்றனர். வேறு சிலர் பலவகை இசைக் கருவிகளை இசைக்கின்றனர்.

 

தஞ்சாவூர், இராசராசன் காலம்வரை சோழப்பேரரசின் தலைநகரமாக இருந்தது. அவனுக்குப் பின் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராக இறுதிவரை விளங்கினது. அதனால், இராசராசனுக்குப் பிறகு தஞ்சாவூர் சிறப்பிழந்து விட்டதென்னல் தவறாகாது. இராசராசன் பெரிய கோவிலைக் கட்டினவன். அக்கோவிலில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் உருவச்சிலைகள் அவன் காலத்திற்றான் எடுப்பிக்கப் பெற்றுச் சிறப்படைந்தன. அப்பேரரசன் காலத்திற்றான் திருமுறைகள் வகுக்கப்பட்டன; மூவர் சிறப்பு மிகுதியாகத் தமிழ்நாடு அறிய வாய்ப்பு உண்டானது. இவை அனைத்தையும் நோக்க, மேற்சொன்ன ஒவியங்களும் இராசராசன் காலத்தனவாக இருத்தல் வேண்டும் என்று கொள்ளலே பொருத்தமுடையது. இம்முடிவு பொருத்தமாயின், இச்சித்திரங்கள் சேக்கிழார்க்கு ஏறத்தாழ நூறு ஆண்டுகள் முற்பட்டன என்று கூறலாம். 

 

மக்கள் வழங்கிய நாயன்மார் பெயர்கள். பல்லவர் காலத்திலேயே மக்கள் நாயன்மார் பெயர்களை இட்டு வழங்கினர் என்பது சென்ற பகுதியிற் கூறப்பட்ட தன்றோ? அப்பெயர்களைச் சோழர் கால மக்கள் மிகுதியாக இட்டு வழங்கினர் என்பது எண்ணிறந்த கல்வெட்டுகளால் அறியக் கிடக்கிறது. அவை அனைத்தையும் கூற இடமில்லை. ஆதலின், இன்றியமையாத சில பெயர்களை மட்டும் இங்குக் கூறுவோம்: (அட்டவணையில் காண்க).
         

  மக்கள் பெயர்                                                                     நாயன்மார் பெயர்


1. மூர்க்கன் ஐயாறன்                                                                                     முர்க்க நாயனார்
2. நங்கை வரகுணப் பெருமானார், நக்கன் பரவையார்    நங்கை பரவையார்
3. திருவெண்காட்டு நங்கை                                                 வெண்காட்டு நங்கை
4. நீல கங்கன், புலியூர் நக்கன்                                              நீல நக்கன்
5. பூதி மாதேவடிகள்                                                             அப்பூதியடிகள்
6. புகழ்த்துணை அடிகள்                                                       புகழ்த்துணை நாயனார்
7. ஏனாதி கிழான்                                                                   ஏனாதிநாத நாயனார்
8. காரி வேளார்                                                                           காரி நாயனார்
9. இராச நாராயண முனையதரையன்                                நரசிங்க முனையரையர்
10. அமரபுயங்கனான கோட்புலி                                           கோட்புலி நாயனார்
11. ஐ(யாற்று) அடிகள்                                                                    ஐயடிகள் காடவர்கோன்
12. கலிச் சிங்கன்                                                                          கழற் சிங்கன்
13. காமன் தாயன்                                                                        அரிவாள் தாயன்
14. நாவலூர் உடையான் ஆரூரன். நம்பி ஆருரன், 
உடைய நம்பி. தம்பிரான் தோழன் ஆலால சுந்தரன்        இவை அனைத்தும் சுந்தரர் பெயர்கள்
15. குமர நந்தி                                                                                        நமி நந்தி அடிகள்
16. அதிகாரி திருநீலகண்டன்                                               திருநீலகண்ட நாயனார்
17. இளையான்குடி கிழவன்                                                 இளையான்குடி மாறன்
18. கலியான் மன்றாடி                                                           கலிய நாயனார்
19. திருஞான சம்பந்தர்                                                         திருஞான சம்பந்தர்
20. கலயன் மாணிக்கம்                                                         குங்கிலியக் கலயன்

 

இங்ஙனம் நாயன்மார் வரலாறுகள் - சிற்பம், ஓவியம், மக்கட் பெயர்கள், விழாக்கள், திருமுறை ஒதல் இவற்றின் வாயிலாகச் சோழர் காலத் தமிழகம் முழுவதும் சேக்கிழார்க்கு முன்னரே பேரளவு பரவியிருந்தன என்பதைச் சோழர் காலக் கல்வெட்டுகள் வாயிலாக நன்கறியலாம். இனி, நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளை நல்கிய சோழர் கால இலக்கிய நூல்களைக் காண்போம்.
------------- 

சோழர் கால இலக்கியம்

 

சென்ற பகுதியிற் பல்லவர் கால இலக்கியமாகிய தேவாரத் திருமுறைகளைப்பற்றி ஆராயப்பட்டது. அவை நாயன்மார் வரலாறுகள் அறியப் பேருதவியாக இருப்பவை என்பது விளக்கப்பட்டது. அவை போலவே சோழர் காலத் திருமுறைகளாக விளங்குபவை - நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டனவாகக் கருதப்படும் 8,9,10, 11-ஆம் திருமுறைகள் - முதல் இடம் பெறத்தக்கவை.

 

எட்டாந் திருமுறையாகிய திருவாசகம் கண்ணப்பர், சண்டீசர் இவ்விருவரது பக்திச் சிறப்பையே விதந்து பேசுகிறது. ஒன்பதாந் திருமுறையில் சண்டீசர், கண்ணப்பர், கணம்புல்லர், அப்பர், சம்பந்தர். தில்லைவாழ் அந்தணர் இவர்தம் சிறப்புகள் குறிக்கப்பட்டுள. பத்தாந்திருமுறையில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆயினும், கோவில் அமைப்பு முதலிய பக்தி மார்க்கத்தின் இயல்கள் அனைத்தும் மூவாயிரம் பாக்களில் விளக்கப்பட்டுள்ளன. பதினோராந் திருமுறையில் (1) காரைக்கால் அம்மையார் பாடிய பாக்களில் அவரைப்பற்றிய குறிப்புகள் சில கிடைக்கின்றன. (2) இன்று 24 வெண்பாக்களுடன் சிதைந்த நூலாகவுள்ள ஐயடிகள் காடவர்கோன் பாடிய க்ஷேத்திர வெண்பா, சேக்கிழார் காலத்தில் முழு நூலாக இருந்திருக்கலாம். அதிலிருந்து அந்நாயனார் வரலாறு, கோவில்களின் சிறப்பியல்புகள் முதலியன சேக்கிழார் அறிய வசதி இருந்தது என்னலாம். (3) சேரமான் பாடிய பொன்வண்ணத்து அந்தாதியின் ஈற்று வெண்பாவில் (i) சுந்தரர் வெள்ளானை மீது கயிலை சென்றமை, (ii) சேரமான் குதிரைமீது கயிலை சென்றமை, (iii) சேரமான் கயிலையில் ஆதியுலாவை அரங்கேற்றினமை, தில்லையில் பொன் வண்ணத்து அந்தாதியைப் பாடினமை என்ற குறிப்புகள் காண்கின்றன. (4) நக்கீரர் பாடிய பாக்களில் சண்டீசர், சாக்கியர், கோச்செங்கணான், கண்ணப்பர் வரலாறு விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. (5) கல்லாடர் பாட்டில் கண்ணப்பர் வரலாறு தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. (6) பட்டினத்தடிகள் பாக்களில் சண்டீசர், சிறுத்தொண்டர், சம்பந்தர், சாக்கியர், சுந்தரர் இவர்தம் பக்திச் சிறப்பு பாராட்டப்பட்டுள்ளது. (7) இவை யாவற்றினும் மேலாகத் திருமுறைகள் தொகுத்த நம்பியாண்டார் நம்பி பாடிய நூல்களே சேக்கிழார்க்குப் பெருந்துணை புரிந்தன என்று துணிந்து கூறலாம். நம்பி, சம்பந்தரைப்பற்றி ஆறு நூல்கள் பாடியுள்ளார். அவற்றிற் சம்பந்தர் வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் தெளிவாகக் குறித்திருக்கிறார். அப்பரைப் பற்றி ஒரு நூல் பாடியுள்ளார். அதனில், அப்பரைப் பற்றிப் பல செய்திகளை விளக்கியுள்ளார். இவர் நாயன்மார் அறுபத்துமூவர் மீதும் பாடிய 'திருத்தொண்டர் திருவந்தாதி'யே மிகவும் இன்றியமையாதது. அது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதலாகக்கொண்டு ஒரளவு விளக்கமாகப் பாடப்பட்டது. அதனில் சுந்தரர் வரலாறு 18 பாக்களிற் குறிக்கப்பட்டுள்ளது. ஆதலின், இது பெரிய புராணத்திற்குப் பேருதவி புரிந்த மூல நூல்களில் முதல் இடம் பெற்றது என்னலாம்.

 

கல்வெட்டுகளிற் கண்ட நூல்கள் 

 

சேக்கிழார்க்குக் காலத்தால் முற்பட்ட சோழர் காலத்து நூல்கள் சில, சமயத் தொண்டிற்காகச் செய்யப்பட்டன என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவற்றுட் சிறந்தவை - (1) இராசராச விசயம், (2) இராச இராசேச்வர நாடகம், (3) கன்னிவன புரணம், பூம்புலியூர் நாடகம் என்பன.

 

1. இராசராச விசயம்: இந்நூல் திருப்பூந்துருத்திக் கோவிலிற் படித்துக் குடிமக்களுக்கு விளக்கப்பட்டது. இதனில், இராசராசன் பெற்ற வெற்றிகள் சமயத் திருப்பணிகள் என்பன குறிக்கப்பட்டிருக்கலாம். சமயப் பணிகளில், அவன் நம்பியைக் கொண்டு திருமுறைகள் வகுத்தமையும் அவன் பெரிய கோவிலில் எடுப்பித்த நாயன்மார் உருவச்சிலைகள் பற்றிய குறிப்புகளும் தக்க அளவு இடம் பெற்றிருக்கலாம்.

2. இராசராசேச்வர நாடகம்: இந் நூலில் தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்ட விவரம், அதனில் நாயன்மார் உருவச் சிலைகள். எடுக்கப்பட்ட விவரம் முதலியன இடம்பெற்றிருக்கும் என்பது அறிஞர் கருத்து. அஃது உண்மையாயின், அந்நூலிற் கண்ட நாயன்மார்களைப் பற்றிய குறிப்புகள் சேக்கிழார்க்கு ஓரளவு பயன்பட்டன. என்னலாம்.

3. கன்னிவனம் என்பது திருப்பாதிரிப்புலியூர் ஆகும். அதுபற்றிய புராணம், நாடகம் என்ற இரண்டும் அவ்வூரினரான புலவர் ஒருவராற் செய்யப்பட்டவை. இவை முதற் குலோத்துங்கன் காலத்தில் இயன்றவை. திருப்பாதிரிப்புலியூரைப் பற்றிய வரலாறு யாதாக இருத்தல் கூடும்? நாம் அறிந்த அளவில், அவ்வூரில் புகழ்பெற்ற சமணப் பள்ளியும் பாழிகளும் இருந்தன: பெயர்பெற்ற சமண முனிவர் பலர் அங்கு இருந்து சமய நூல்கள் பலவற்றைச் செய்தனர், மொழிபெயர்த்தனர். சமண மடத்திற்குப் பல்லவ வேந்தர் ஆதரவு காட்டினர். அங்குத்தான் அப்பர் சமணராகித் தருமசேனர் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகள் சமணத் தொண்டு செய்து வந்தார். பிறகு அவர்க்குச் சூலைநோய் காணச் சமணரோடு மாறுபட்டுத் திருவதிகை சென்று சைவரானார் சமண அரசனான பல்லவனால் பல இடர்பாடுகளை அடைந்தார்; முடிவில், கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்து திருப்பாதிரிப்புலியூர்க் கரை ஓரம் கரையேறினார்; கரையேறி, அவ்வூர்ச் சிவன் கோவிலை அடைந்து பதிகம் பாடினார்.

 

அரசன் அப்பரது திருத்தொண்டின் உறைப்பை உள்ளபடி அறிந்து சைவன் ஆனான். பாதிரிப்புலியூரில் இருந்த சமணக் கட்டடங்களை இடித்தான்; அச்சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் தன் பெயரால் 'குணபர ஈச்வரம்' என்ற கோவிலைக் கட்டினான்.

 

இவ்வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் திருப்பாதிரிப்புலியூரை நடுநாயகமாகக் கொண்டு நிகழ்ந்தவை. ஆதலின், இவை கன்னிவன புராணத்துள் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டு விரிவாகக் கூறப்பட்டிருக்கலாம். . இங்ஙனமே பூம்புலியூர் நாடகத்துள்ளும் இவை பல காட்சிகளாக விளக்கம் பெற்றிருக்கலாம் என்று நினைத்தல் தவறாகாது.

 

4. புராண நூல்கள்: கோவில்களில் புராணங்கள் படித்துக் குடிகட்கு விளக்கிக் கூறும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்தது. 'புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை' ஒன்று நீடூர்க் கோவிலில் இருந்தது என்பதை நோக்க, இவ்வுண்மை நன்கு புலனாகும். இதனால், இந்நாட்டில் சேக்கிழார்க்கு முன்பே, சைவ சமய சம்பந்தமான புராணங்கள் சிலவேனும் இருந்திருத்தல் வேண்டும்; அவை சிவன் கோவில்களிற் படித்து விளக்கப்பட்டனவாதல் வேண்டும் என்ற செய்தி தெளிவுறத் தெரிகிறதன்றோ? 

 

தில்லை உலா. இது சேக்கிழார்க்கு முற்பட்டதாகக் கருதத் தக்கது. இது முழுவதும் கிடைக்கவில்லை. கிடைத்த அளவு "தமிழ்ப் பொழில்' மாத வெளியீட்டில் வந்தது. இதனை வெளியிட பெரியார் பண்டிதர் – உலகநாத பிள்ளை ஆவர். இதனில் 'திருநீற்றுச் சோழன்' எனப்பட்ட முதற். குலோத்துங்கன் படிமம் நடராசப் பெருமானது உலாவிற் கலந்து கொண்டது என்பதால், அவனுக்குப் பின் செய்யப்பட்ட நூல் என்று திட்டமாகக் கூறலாம். ஆயின், தில்லையில் விக்கிரம சோழனோ, இரண்டாம் குலோத்துங்கனோ செய்த திருப்பணிகள் சிறப்பிடம் பெறாமையாலும், சைவ உலகம் போற்றும் பெரிய புராணம் தில்லையிற் செய்யப்பட்டதைக் கூறாமையானும் - இந்நூல் சேக்கிழார்க்கு முற்பட்ட தெனத் திண்ணமாகக் கூறலாம். 

 

இதனிற் கூறப்பெற்ற செய்திகள். கூத்தப் பெருமான் உலாப்போகையில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், மாணிக்கவாசகர், வரகுண பாண்டியன், சண்டீசர் இவர்தம் உருவச்சிலைகளைக் கொண்ட தேர்கள் உடன் சென்றன. இவர்கட்குமுன், திருமுறை ஏடுகள் கொண்டு செல்லப்பட்டன. இந்நூலில் (1) சிவன், சுந்தரர்க்கும் பரவையார்க்கும் இடையே தூது சென்றமை, (2) கோட்புலி நாயனார் பிள்ளையை வாளால் துணித்தமை, (3) சிறுத்தொண்டர் பிள்ளையைக் கொன்று விருந்திட்ட முழு விவரம், (4) சம்பந்தர் சைவத்தைப் பரப்பப் பாண்டிய நாடு சென்றமை என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் முதல் மூன்று விவரங்களும் இன்று கிடைத்துள்ள வேறு நூல்களிற் கூறப்படாதவை. எனவே, இவை பெரிய புராணத்திலும் காணப்படுகின்றன எனின், சேக்கிழார் இவ்வுலா நூலையும் இதுபோன்ற தம் காலத்து வேறு நூல்களையும் பார்த்திருத்தல் வேண்டும் என்று கொள்ளுதல் பொருத்தமே அன்றோ?

 

சோழர் காலத்திற் சமண சமய நிலை. சமண சமயக் கொள்கைகளை நன்கு விளக்கிக் கூறும் நூல்களான நீலகேசி, சிந்தாமணி என்ற இரண்டில் முன்னது சோழர்க்கு முற்பட்டது. பின்னது சோழர் காலத்தது. சம்பந்தர் மதுரையில் இருந்த சமணருடன் வாதிட்ட விவரத்தைச் சேக்கிழார் தமது நூலில் விரிவாகக் கூறியிருத்தலையும், பிற புராணங்களில் ஆங்காங்குச் சமணர் பழக்க வழக்கங்களைச் சுட்டியிருத்தலையும் நோக்க, அவர் தம் காலம் வரை நாட்டில் இருந்த சமண நூல்களைச் செவ்வையாகப் படித்தவர் என்பதை எளிதில் உணரலாம். இதனுடன், அவர் தம் காலச் சமணப் பெரு மக்களுடன் அளவளாவி, அவர்களுடைய கொள்கைகளையும் பிறவற்றையும் நன்கு விசாரித்தறிந்தவராகவும் இருத்தல் கூடும் என்று நம்ப இடமுண்டு. சேக்கிழார் காலத்துச் சோழப் பெரு நாட்டில் சமணர் இருந்தனரா? எனின், ஆம் இருந்தனர். சமணப் பள்ளிகளும் பாழிகளும் இருந்தன. சமண சமய நூல்கள் இருந்தன. அவை சமணர் கோவில்களில் படித்து விளக்கப்பட்டன. வெடால் [3], சிற்றாமூர்[4], ஆனந்த மங்கலம் [5], விளாப்பாக்கம் [6], திருப்பருத்திக்குன்றம் [7] முதலிய இடங்களில் சமணர் கோவில்களும் மடங்களும் இருந்தன. அவற்றில் 'குரத்திமார்' என்றும், அடிகள் என்றும் கூறப்பெற்ற சமணப் பெண் துறவிகள் பலராக இருந்து சமயத் தொண்டு செய்து வந்தனர். சமணத் துறவிகள் 'ரிஷி சமுதாயம்' என்ற பெயரால் விளங்கினர். எனவே, சேக்கிழாரது சமண சமயப் புலமை, சமண நூல்களாலும் சமணப் பெருமக்களாலும் உண்டாகி இருத்தல் வேண்டும் எனக் கூறல் தவறாகாது.
-------

[3] வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது
[4] தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது.
[5] செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது.
[6] செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது.
[7] செங்கற்பட்டு மாவட்டத்தில் உன்ளது.

 

பெளத்த சமய நிலை. மணிமேகலை, வளையாபதி என்ற இரு நூல்களும் சேக்கிழார்க்கு முற்பட்ட பெளத்த நூல்கள். அவற்றில் பெளத்த சமயக் குறிப்புகள் அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டுள. சேக்கிழார் காலத்தில் நாகப்பட்டினம் சிறந்த துறைமுகப் பட்டினமாகவும் பெளத்த சமயத்தவரான சீன வணிகர் குடியேறியிருக்கத் தக்கதாகவும் விளங்கியது. சேக்கிழார் சோழப் பேரரசின் முதல் அமைச்சர் என்ற முறையில் கடல் வாணிகத்திற் கவின்பெற்று விளங்கிய நாகப்பட்டினம் சென்றிருத்தல் இயல்பே அங்கிருந்த பெளத்த வாணிகருடன் அளவளாவி அவர்தம் சமய நுட்பங்களை நேரிற் கேட்டறிந்திருந்தலும் இயல்பே. 

 

முடிவுரை. இதுவரை கூறப்பெற்ற பலவகை விவரங்களால், சேக்கிழார்:பெரிய புராணம் பாடுவதற்கு முன்பே இந்நாட்டில நாயன்மாரைப்பற்றிய வரலாறுகள் சுருக்கமாகவும் பெருக்கமாகவும் ஒரளவு பரவி இருந்தன என்பதும் அங்ஙனம் அவை பரவக் காரணமாக இருந்தவை கோவில்கள், சிற்பங்கள், ஒவியங்கள், விழாக்கள், மடங்கள், புராணங்கள் முதலான சமய நூல்கள், சைவத் திருமுறைகள், பிறசமய நூல்கள் என்பதும் இவை அனைத்தையும் பயன்படுத்தியே சேக்கிழார் ஒப்புயர்வற்ற பெரிய புராணத்தைப் பாடியிருத்தல் வேண்டும் என்பதும் அறியக்கிடத்தல் காணலாம். இனி அடுத்த பிரிவில், நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுக்கச் சேக்கிழார் மேற்கொண்ட பெரு முயற்சியைக் கண்டறிவோம்.
------------- 

6. பெரிய புராணம் பாடின வரலாறு

 

புராண வரலாறு. 'சேக்கிழார் புராணம்' என்ற 'திருத்தொண்டர் புராண வரலாறு' என்ற நூலிற் சேக்கிழார் பெரிய புராணம் பாட நேர்ந்த சந்தர்ப்பத்தைப்பற்றிக் கூறப்படும் செய்தி இதுவாகும்:-

 

சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனிடம் முதல் அமைச்சராக இருந்தபொழுது, அரசன் சீவக சிந்தாமணி என்ற சமண காவியம் படிக்கக் கேட்டு மகிழ்ந்து வந்தான். அரசன் இங்ஙனம் சமண காவியத்தில் ஈடுபாடு காட்டி மகிழ்வதைச் சேக்கிழார் கண்டு மனம் வருந்தினார். அவர் ஒருநாள் இளவரசனைத் தனியே கண்டு, "ஒழுக்க மற்ற அமணரது காவியம், நம் அரசரை ஒத்த சீவகன் என்பவனது வரலாறு கூறுவதாகும். அதனைப் படிப்பதனாலோ கேட்பதனாலோ அரசர் பெறத்தக்க நன்மை ஒன்றும் இல்லை. அதனை விடுத்து இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாகும் நாயன்மார் வரலாறுகள் கொண்ட சிவகதை படிக்கக் கேட்பது மிகவும் நல்லது" என்று மொழிந்தனர்.

 

இம்மொழியை இளவரசன் வாயிலாக உணர்ந்த சோழர் பெருமான் சேக்கிழாரை வரவழைத்து, "நீர் மொழிந்த சிவகதை நவகதையோ? புராணமோ? முன்னுால் உண்டோ? நானிலத்திற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்? சிவனடியாருள் இன்றும் உயிருடன் இருப்பவர் உளரோ?"…. எனப் பலவாறு, நாயன்மார்களைச் சிறிதளவேனும் அறியாத - சோழர் மரபுக்கே முற்றும் புதிய ஒர் அரசன் கேட்பதுபோலக் கேள்விகள் கேட்டான். 

 

சேக்கிழார், "அறுபத்துமூன்று நாயன்மார் வரலாறுகளை உள்ளடக்கிச் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடியருளினார்: இராசராசன் காலத்து - நம்பியாண்டார் நம்பி அதனை ஒரளவு வகைப்படுத்தி, நாயனார் வரலாறு ஒன்றுக்குச் செய்யுள் ஒன்று வீதம் 'திருத்தொண்டர் திரு அந்தாதி என்று ஒரு நூல் பாடியுள்ளார். அந்நாயன்மார் வரலாறுகள் இம்மைக்கும் மறுமைக்கும் பற்றாவன. அவற்றைக் கேட்பதும், அந்நாயன்மார் வரலாறுகளிற் பொதிந்துள்ள உயரிய கருத்துகளை உணர்ந்து நடப்பதும் நன்மை பயக்கும்," என்றார். 

 

அரசன். 'அஃதாயின், அந்நாயன்மார் வரலாறுகளை நீரே கூறி அருளுக," என்று வேண்டினான். சேக்கிழார், தொகை-வகை-திருமுறைகள் இவற்றைத் துணையாகக் கொண்டு, நாயன்மார் வரலாறுகளை விரித்து உரைத்தார். சோழர் பெருமான் கேட்டு வியந்தான், "அமைச்சர் ஏறே, இவ்வியத்தகு அடியார்கள் வரலாறுகளைப் பெரியதோர் புராணமாகப் பாடிமுடிக்க நீரே வல்லவர். ஆதலின், அதனைப் பாடியருள்க," என்று கூறி, அவரைத் தில்லைக்கு அனுப்பினான். அவருக்கு வேண்டும் பொருள் வசதி, ஆள்வசதிகளை அளித்தான். 

 

சேக்கிழார் சிதம்பரம் சென்று கூத்தப் பெருமானைப் பணிந்து, "ஐயனே, பெருமை மிக்க நின் அடியார் வரலாறுகளை மிகச் சிறியேனாகிய யான் எங்ஙனம் கூறவல்லேன். நான் பாட இருக்கும் பெரு நூலுக்கு முதல் தந்து ஆசிர்வதித்து அருளுக" என்று சிற்றம்பலத்தின் முன் திரிகரண சுத்தியாக நின்று வேண்டினார். அப்பொழுது "உலகெலாம்" என்ற தொடர் சேக்கிழார் காதிற்பட்டது. அவர் அதனைக் கூத்தப்பிரானது அருள் மொழியாகக்கொண்டு, புராணம் பாடத் தொடங்கி, ஒராண்டில் பாடி முடித்தார். 

 

இவ்வரலாறு பற்றிய ஆராய்ச்சி 

 

சிந்தாமணி. அநபாய சோழன் சீவக சிந்தாமணி என்ற சமண காவியத்தைப் படிக்கக் கேட்டுப் பரவச மடைந்தான் என்பது இப்புராணம் மட்டுமே கூறும் செய்தி. இதனை உறுதிப்படுத்த வேறு சான்று இல்லை. அரசன் மெய்யாகவே அந்நூலைப் படிக்கக் கேட்டான் எனினும், அதனால் இழுக்கொன்றும் இல்லை. சிந்தாமணி படிப்பதாலோ - பிறர் படிக்கத் தான் கேட்பதாலோ அரசன் கெட்டுவிடவோ, சமயம் மாறவோ வழியில்லை. மிகச் சிறந்த தலையாய புலவர் பெருமான் என்று மதிக்கத்தக்க சேக்கிழாரே சிந்தாமணியைச் செவ்வையாகப் படித்தவர் என்பது அவரது பெரிய புராணத்தால் தெளிவாகத் தெரிகிறது. உயர்தரப் புலவர் பெருமக்கள், புலமைபெற எல்லாச் சமயத்தவர் நூல்களையும் படித்தே தீருவர். அவர்கட்குப் புலமை பெரிதே தவிரக் கேவலம் சமய வேறுபாடு பெரிதன்று. அந்த முறையில் சேக்கிழார் சித்தாமணியை நன்றாகப் படித்தவராவர். சிந்தாமணி சோழர் காலத்து முதற் காவிய நூல் ஆகும். பெரிய புராணம் இரண்டாம் காவிய நூலாகும். கம்பராமாயணம் அடுத்துச் செய்யப்பட்ட நூலாகும். சேக்கிழார் சிந்தாமணியை நன்றாய்ப் படித்தார்போலவே, பின்வந்த கம்பர் பெருமான் சிந்தாமணியையும் பெரிய புராணத்தையும் அழுத்தமாகப் படித்தவர் என்பது அவரது இராமாயணம் கொண்டு கூறலாம். 

 

இங்ஙனம் சிந்தாமணியைச் செவ்வையாகப் படித்த பழுதற்ற, புலவராகிய சேக்கிழார், அரசனைமட்டும் படிக்கலாகாது என்றோ, படிக்கக் கேட்கலாகாது என்றோ தடுத்தார் என்பது நம்பத்தக்கதன்று. 'அவர் தடுத்தார். அந்நூலை இழித்துரைத்தார்' என்பது அவரது பெரும் புலமைக்கும் தலைமை அமைச்சர் பதவிக்கும் ஏற்றதாகாது. சிறந்த பெளத்த - சைவ, சமண - சைவ வாதங்களைப் பழுதற்ற சாத்திரீய முறையில் விளக்கமாகப் பாடியுள்ள சேக்கிழார், பெளத்த, சமணச் சார்பான சமய நூல்களை நன்கு கற்ற நவையறு புலவராவர். அப்பெரியார் மீது இத்தகைய சமய வெறுப்புக் குற்றத்தை ஏற்றிக் கூறல் பெருந்தவறு. அக்குற்றம் சேக்கிழார் புராணம் பாடிய ஆசிரியரையே சாரும்.

 

அநபாயன் கேள்விகள். 'சிவகதை கேட்டல் நல்லது' என்று சேக்கிழார் கூறக்கேட்ட சோழ மன்னன், நாயன்மார் பெயர்களைக்கூட அறியாத பாமரனாக இருந்து, 'நவகதையோ? புராணமோ? முன்னுரல் உண்டோ? நானிலத்திற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்?' எனப் பலவாறு வெளிநாட்டான் ஒருவன் கேட்டாற்போலக் கூறப்படும் வினாக்கள் சோழர் வரலாற்றை அறிந்த அறிஞர் நகைக்கத் தக்கனவாகும். 'மெய்யாகவே இக்கேள்விகளை அநபாயன் கேட்டிருத்தல் இயலுமா?' என்பது இங்கு ஆராயத் தக்கது.

 

சோழர் சைவ சமயத் தொண்டு. சோழர் சைவ சமயத்தைத் தம் உயிர்போலக் கருதிப் பாதுகாத்து வளர்த்து வந்தவர் என்பது வரலாறு கூறும் உண்மை. சோழப் பேரரசை ஏற்படுத்திய ஆதித்த சோழன் காவிரியின் பிறப்பிடத்திலிருந்து கடல்புகும் வரை அதன் இருகரைகளிலும் சிவன்கோவில்களைப் புதியனவாகக் கட்டியும், பழையவற்றைப் புதுக்கியும் அழியாப் புகழ் பெற்றான். அவன் மகனான பராந்தகச் சோழன் அளப்பரிய சிவப்பணிகள் செய்தான்; கூத்தப் பெருமான் அம்பலத்தைப் பொன்மயமாக்கினான். உலகப் புகழ்பெற்ற இராசராசன் செய்த சைவப் பணிகள் அளவிடற் கரியன. நம்பியைக் கொண்டு சைவத் திருமுறைகளை வகுத்து ஒழுங்குபடுத்தியவன் அப்பெருமகன் அல்லனோ? சிறப்புடைய நாயன்மார் உருவச்சிலைகளை எழுப்பி அவற்றுக்குப் பூசை, விழாக்கள் குறைவற நடக்க ஏற்பாடு செய்தவன் அப்பெருந்தகை அல்லனோ? அவன் மகனான பெருவீரன் இராசேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழீச்சரம் வியத்தகு பெருங்கோவில் அல்லவா? தேவார நாயகம் என்ற தேவாரத் திருமுறைகளை வளம்பெற வளர்த்த பேரரசன் இராசேந்திரன் எனின், அவனது சைவச் சமயப் பற்றை என்னெனக் கூறி வியப்பது!

 

சோழ - சாளுக்கிய மரபில் வந்த முதல் குலோத்துங்கன் பெரிய சிவபக்தன். இவன் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து சிறப்புப் பெற்றவன். தில்லைக் கூத்தப்பிரானைத் தன் குலநாயகமாகக் கொண்டவன். அவன் மகனான விக்கிரம சோழன் அவனினும் சிறந்த சிவபக்தன். அவன் கூத்தப்பிரான் கோவில் முழுவதையும் பொன்மயமாக்க முயன்றவன் சிதம்பரம் கோவிலுக்குத் திருப்பணிகள் பல செய்தவன். 

 

அவனது அமைச்சனும் தானைத்தலைவனுமான நரலோக வீரன் சிதம்பரத்திலும் திருவதிகையிலும் செய்த திருப்பணிகள் எண்ணிறந்தன; பாராட்டத்தக்கன; வியக்கத் தக்கன. 

 

சோழ மாதேவியர் செய்த சைவத் திருப்பணிகள் தாம் எண்ணத் தொலையுமோ? கண்டராதித்தரது மனைவியாரும் இராசராசன் பாட்டியாருமாகிய செம்பியன் மாதேவியார் கட்டிய புதிய சிவன்கோவில்கள் பல; புதுப்பித்த பாடல்பெற்ற கோவில்கள் பல; பொன் வெள்ளிப் பாத்திரங்கள் அளிக்கப்பெற்ற கோவில்கள் பல. இராசராசன் தமக்கையாரான குந்தவையார் செய்த அறப்பணிகள் பலவாகும். இராசராசன் மனைவியாரான உலகமகாதேவியார் திருவையாற்றில் கோவில் கட்டிப்புகழ் பெற்றவர். இராசராசன் மகளிர் செய்த திருப்பணிகள் பல. இங்ஙனமே ஒவ்வொரு சோழ அரசன் மனைவியரும் மகளிரும் செய்துள்ள சைவத் திருப்பணிகள் பலவாகும். 

 

அநபாயன் காலம்: இங்ஙனம் கனவிலும் சிவன் தொண்டை மறவாத சோழ்ர் மரபில் வந்தவன் அநபாயன். கூத்தப்பிரானை நம் குலநாயகம் என்று அழைத்து, அளப்பரிய திருப்பணிகளை அப்பெருமான் கோவிலுக்குச் செய்ய முனைந்த விக்கிரம சோழன் திருமகன் அநபாயன். அவன், தன் தந்தை அரைகுறையாக விட்டுச் சென்ற திருப்பணிகளை முற்றச் செய்து அழியாப் புகழ்பெற்றவன். அவனது சைவப் பற்றைக் குலோத்துங்கன் உலா. இராசராசன் உலா, குலோத்துங்கன் கோவை இவற்றாலும் - எண்ணிறந்த கல்வெட்டுகளாலும் அறியலாம். இராசராசன் காலமுதல் நாயன்மார் உருவச் சிலைகள் ஆங்காங்குப் பேரளவில் எடுப்பித்துப் பூசைகளும் விழாக்களும் நடைபெற்று வந்துள்ளன. அநபாயன் புதுப்பித்த சிதம்பரம் கோவிலிலேயே நரலோகன் விருப்பப்படி திருமுறைகளை ஒத மண்டபம் சமைக்கப்பட்டது. அங்குத் திருமுறைகள் ஒதப்பட்டு வந்தன. அநபாயன் இருந்த சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்துப் பெருங் கோவிலிலேயே சண்டீசர் வரலாறு உணர்த்தும் சிற்பங்கள் இருந்தன. தஞ்சைப் பெரிய கோவிலில் நாயன்மார் உருவச் சிலைகளும் முன் சொன்ன ஒவியங்களும் அழகொழுகக் காட்சி அளித்தன. சுருங்கக் கூறின், அநபாயன் காலத்தில் நாடெங்கும் சைவமணம் நன்றாக வீசிக்கொண்டிருந்தது; நாயன்மார் வரலாறுகள், திருமுறைகள், பூசைகள், விழாக்கள், சிற்பங்கள், ஒவியங்கள் இவற்றின் வாயிலாக நன்கு பரவியிருந்தன. இத்தகைய பொற்காலத்தில் - சைவ நன்மரபில் பிறந்து வளர்ந்த அநபாயன், நாயன்மார் வரலாறுகளை அறியாத முழுமூடனாக இருந்தான் என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியிருத்தல் உண்மைக்கு மாறாகும். இஃது அவ்வாசிரியரது அறியாமையை அறிவிப்பதே அன்றி வேறன்று. சேக்கிழார் பெரிய புராணம் பாடியதற்குக் காரணம் கூறவேண்டும் என்பதற்காக ஆசிரியரே கட்டிச் சொன்ன காரணமாக இது காணப்படுகிறதே தவிர, இக்கூற்றிற் கடுகளவும் உண்மை இருப்பதாக அறிவும் ஆராய்ச்சியும் உடைய பெருமக்கள் கொள்ளார். 

 

சேக்கிழார் புராண ஆசிரியர் யாவர்? 'இங்ஙனம் பொறுப்பற்ற முறையில் புராணம் பாடிய இந்நூலாசிரியர் யாவர்?' என்பது நாம் அறியவேண்டும் ஒன்றாகும். (1) திருமுறைகண்ட புராணம், (2) சேக்கிழார் புராணம், (3) திருத்தொண்டர் புராணசாரம், (4) திருப்பதிகக் கோவை, (5) திருப்பதிக் கோவை என்ற ஐந்து நூல்களையும் பாடியவர் உமாபதி சிவாசாரியார் என்பவர் என்பது நாட்பட்ட கொள்கையாகும். இக்கூற்று சில ஏடுகளில் உள்ளது; சில ஏடுகளில் இல்லை. உமாபதி சிவாசாரியார் என்பவர் சிதம்பரத்தைச் சேர்ந்த "கொற்றவன் குடி' என்னும் நகரப் பிரிவில் வாழ்ந்தவர். சிறந்த சிவபக்தர். இத்தகைய பெரும் புகழ்பெற்ற சைவப் புலவர் ஒருவர் இந்த ஐந்து நூல்கட்கும் ஆசிரியர் என்பது கூறப்படுகிறது. இதன் உண்மையை இங்கு ஆராய்வோம். 

 

உமாபதிசிவம் சேக்கிழார் புராண ஆசிரியரா? சேக்கிழார் புராணத்தில் நாயன்மார் அறுபத்துமூவரைப் பற்றிய குறிப்புகள் காண்கின்றன. 'திருத்தொண்டர் புராணசாரம்' என்ற நூலிலும் அந் நாயன்மார் வரலாறுகள் சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளன. (1) முதல் நூலில் பல்லவப் பேரரசரான கழற்சிங்கர், ஐயடிகள் காடவர்கோன் இவர்கள் சிற்றரசர் என்று கூறப்பட்டுள்ளனர். ஆயின் பின் நூலில் இவ்விருவரும் பல்லவப் பேரரசர் என்பது தெளிவாகக் காண்கிறது. (2) பேரரசர் அறுவர் என்று கூறிச் சிற்றரசரான இடங்கழி நாயனாரும் அந்த அறுவரில் ஒருவராகக் குறிக்கப்பட்டனர். (3) இசையில் வல்லவராக நந்தனார் முதலியோரைக் கூறிய ஆசிரியர் சுந்தரரைக் கூறாது விட்டார். இங்ஙனம் சிறந்த பிழைகள் பல சேக்கிழார் புராணத்துட் காண்கின்றன. மேற்சொன்ன இரண்டு நூல்களையும் செய்தவர் ஒருவராயின், இத்தகைய தவறுகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ள கூற்றுகள் நூலில் இடம் பெற முடியுமா? முடியாது. ஆதலின், முன்னூலைப் பாடியவர் வேறு: பின்னூலைப் பாடியவர் வேறு எனக் கொள்ளலே பொருத்தமாகும். 

 

திருமுறை கண்ட புராணம். நம்பி, இராசராசனைக் கொண்டு திருமுறைகள் தொகுத்த வரலாற்றைக் கூறுவது இப்புராணம். நம்பி, முதல் ஏழு திருமுறைகளைத் தொகுத்தார் என்று கூறி, அவர் மேலுந் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் எட்டாந் திருமுறையாகவும், நம்பிக்கே காலத்தாற் பிற்பட்டவராகக் கருதத்தக்க அடியார் பலர் பாடல்களை ஒன்பதாந் திருமுறையாகவும், அப்பர்-சம்பந்தர்க்கே காலத்தால் முற்பட்டவரான திருமூலர் பாடிய திருமந்திரத்தைப் பத்தாந் திருமுறையாகவும், நாயன்மார் காலத்தவரும் நம்பி காலத்தவருமான கபிலதேவர், பட்டினத்தார் போன்ற அடியார் பாக்களைப் பதினோராந் திருமுறையாகவும் நம்பி தொகுத்தார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. நம்பிக்குப் பிற்பட்டவர் பாக்களை நம்பியே தொகுக்க முடியுமா? காலத்தால் முற்பட்ட அடியார்கள் பாக்களைப் பின்வைக்க இயலுமா? அங்ஙனம் வைப்பதில் ஒருவகைப் பொருத்தமேனும் இருக்கவேண்டும் அல்லவா? இவ் விவரங்களை வரலாற்று முறையிலும் ஆராய்ச்சி முறையிலும் இருந்து கவனிப்பின், 'நம்பி முதல் ஏழு திருமுறைகளையே தொகுத்தனர். பிற்பட்ட திருமுறைகளை அவை கிடைக்கக் கிடைக்கப் பின் வந்த அறிஞர் முறைப்படுத்தினர்' என்று கொள்வதே மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது. [1]
----------

[1] இதனைப்பற்றிய விரிவான ஆராய்ச்சியை எனது 'புராண ஆராய்ச்சி' என்ற பெருநூலிற் கண்டுகொள்க.

 

சேக்கிழார் புராண ஆசிரியர் வேறு; உமாபதி சிவம் வேறு. இவை அனைத்தையும் நடுவுநிலையிலிருந்து ஆராயின், தவறான கருத்துகள் பலவற்றைக் கூறும் சேக்கிழார் புராணமும் திருமுறைகண்ட புராணமும் பாடியவர் - பொறுப்புள்ள சைவப் பெரும் புலவராகிய உமாபதிசிவம் ஆகார்; ஏனைய மூன்றையும் பாடியவர் உமாபதி சிவம் எனக்கொள்ளலாம் என்ற முடிபே ஏற்புடையதாகும். எனவே, முன்னுரல்கள் இரண்டையும் பாடியவர் பெயர் தெரியாத புலவர் ஒருவராவர். அவர் நூல்களை உமாபதிசிவம் பாடினார் எனக் கூறுவதால், புகழ்பெற்ற அச்சைவ சமயப் புலவர்க்குச் சிறுமை உண்டாகுமே தவிரப் பெருமை ஒருபோதும் உண்டாகாது.

 

இத்தகைய பெயர் தெரியாத புலவர் ஒருவர் கூறிய சேக்கிழார் புராண வரலாற்றில் காணப்படும் சிந்தாமணி பற்றிய செய்தியும் அநபாயன் கேள்விகளும் உண்மைக்கு முற்றும் மாறானவை என்பதறிக.


உண்மையாதாக இருக்கலாம்? சைவ நன்மரபில் வந்த அநபாயன், நாயன்மார் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றை அறிந்திருக்கலாம். அவனுடைய முதல் அமைச்சரான சேக்கிழார் சைவக்குடியிற் பிறந்தவர்; இலக்கண இலக்கியங்களைப் பழுதறப்படித்தவர்; சைவத் திருமுறைகளையும் தம்காலத்துச் சைவ சித்தாந்த நூல்களையும் நன்கு கற்ற விற்பன்னராவர். அவர் சோழர் முதல் அமைச்சரானதும், தமது பதவியின் காரணமாகப் பெருநாடு சுற்றியபொழுது, பல கோவில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு அவர்க்கு இயல்பாகவே ஏற்பட்டது. அப்பொழுது அவர் நாயன்மார் வரலாறு பற்றிய பல குறிப்புகளைத் தொகுத்திருத்தல் கூடும். 

 

இங்ஙனம் நாளடைவில் அவர் நேரிற் கண்டும், வல்லார்வாய்க் கேட்டும், தம்காலத்து இருந்து இன்று இறந்துபட்ட பல நூல்களைப் படித்தும் நாயன்மார் வரலாற்று உண்மைகளை ஒருவாறு செப்பஞ் செய்து வைத்திருத்தல் கூடும். அக்குறிப்புகளை வாழையடி வாழையாகச் சைவ நன்மரபில்வந்த அநபாய சோழன், இளவரசனான இராசராசன் வாயிலாக அறிந்து, சேக்கிழாரைக்கொண்டே நாயன்மார் வரலாறுகளைக் கேட்டு அறிந்திருக்கலாம். அங்ஙனம் கேட்டு அறிந்து மகிழ்ந்த அப்பரம பக்தன், அடியார் வரலாற்றுக் குறிப்புகளை அரும்பாடுபட்டுத் தொகுத்துவந்த சேக்கிழாரே அவற்றை விரிவான முறையில் ஒரு புராணமாகப் பாடத்தக்கவர் என்று எண்ணி, அங்ஙனமே புராணம் பாடித் தருமாறு அவரை வேண்டியிருத்தல் இயல்பே.

 

சேக்கிழார் அவ்வேண்டுகோளுக்கு இணங்கிக் கூத்தப்பிரான் எழுந்தருளியுள்ள சிதம்பரத்தை அடைந்து, அப்பெருமானை வேண்டி 'உலகெலாம்' என்று விண்வழி எழுந்த தொடரையே தமது நூலுக்கு முதலாகக்கொண்டு, நூல் பாடத் தொடங்கியிருக்கலாம். இடையிடையே உண்டான ஐயங்களை அவ்வத்தலம் சம்பந்தமான உத்யோகஸ்தர் வாயிலாகவும் சிற்றரசர் வாயிலகாவும் ஆங்காங்கு இருந்த பெரும் சைவப்புலவர் வாயிலாகவும் போக்கிக்கொண்டு, தமது நூலைப் பாடி முடித்திருக்கலாம். இவ்வாறின்றி, அரசன் வேண்டுகோள்மீதே சேக்கிழார் பல இடங்களையும் சுற்றிப்பார்த்து ஆராய்ந்து, தம் ஆராய்ச்சியிற் போந்த முடிவுகளையும் நூல்களிற் கண்ட செய்திகளையும் சேர்த்துப் புராணம் பாடி முடித்தார் எனக்கொள்வதும் தவறாகாது.

 

அவரது பெரியபுராணத்தைக் கூர்ந்து கவனிப்பின், அவர் (1) தமிழ்நாடு முழுவதும் சுற்றி நாயன்மார் பற்றிய குறிப்புகளைத் தயாரித்தவர் என்பதும், (2) ஆங்காங்கு இருந்த சிற்றரசர், அறிஞர் முதலியோரைக் கேட்டும் கல்வெட்டுகளைப் படித்தும் குறிப்புகளைத் தயாரித்தவர் என்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகின்ற உண்மைகள் ஆகும். இவை இரண்டையும் பற்றிய குறிப்புகளைச் சுருக்கமாக அடுத்த இரு பிரிவுகளிற் காண்போம்.
------------

7. சேக்கிழார் தல யாத்திரை

 

முன்னுரை. சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் செய்த தல யாத்திரை விவரங்களும் நாயன்மார் பிறந்த பதிகளைப் பற்றிய விவரங்களும், ஒவ்வொரு பதியின் அமைப்பு, இயற்கை வளம் முதலியனவும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இன்றளவும் உண்மையாக இருத்தலைக் காண, சேக்கிழார் நாயன்மார் சம்பந்தப்பட்ட பதிகளையும் சிவத்தலங்களையும் பிற இடங்களையும் நேரிற் சென்று கண்டவராவர் என்பது தெள்ளிதிற் புலனாகும். அவர் அமைச்சரான பிறகே இத்தகைய யாத்திரை எளிதாக இருந்திருத்தல் கூடும். அமைச்சர் தமது ஆணைக்கு உட்பட்ட நாடு முழுவதும் சுற்றிப் பார்க்கக் கடமைப்பட்டவராவர். அங்ஙனம் சுற்றுகையில், இயல்பாகவே சைவப் பிறப்பும் சைவ சமயப் பற்றும் பேரளவுகொண்டு, திருமுறைகளை நன்கு பயின்ற சிறந்த இலக்கண - இலக்கியப் புலவரான சேக்கிழார், நாயன்மாருடன் தொடர்பு கொண்ட பதிகளையும் இடங்களையும் அவர்களுடைய யாத்திரை வழிகளையும் பிற செய்திகளையும் மிகவும் நுட்பமாகக் கண்டும் ஆங்காங்கு இருந்த வல்லார்வாய்க்கேட்டும் குறிப்புகள் தொகுத்திருத்தல் வேண்டும் என்று நினைத்தல் பொருத்தமே ஆகும். இங்ஙனம் சேக்கிழார் தல யாத்திரை செய்து, போதிய செய்திகள் அனைத்தும் தொகுத்த பின்னரே பெரிய புராணம் பாடியிருத்தல் வேண்டும். இவ்வாறு சேக்கிழார் தல யாத்திரை செய்தனர் என்பதைப் பல சான்றுகள் கொண்டு காட்டலாமாயினும் இடமஞ்சிச் சில காட்டுவோம்.

 

உடுப்பூரிலிருந்து காளத்திவரை. கண்ணப்பரது வரலாற்றைக் கூறிய முன்னூல் ஆசிரியர்கள் கூறாது விட்ட உடுப்பூர் வருணனை, வேடச்சேரி வருணனை, உடுப்பூர்க்கும் காளத்திக்கும் இடைப்பட்ட நில அமைப்பு, மலைத்தொடர் வருணனை முதலிய விவரங்கள் இன்றளவும் ஒத்திருத்தல் வியப்பினை ஊட்டுவதாகும். அவ்விடங்களை நேரிற்சென்று கண்டு, சைவத் திருவாளர் இராவ்பகதூர் சி.எம். இராமச்சந்திர செட்டியார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் கடப்பை, சித்தூர் மாவட்டங்களின் விளக்க நூல்களிற் (District Manuals & Gazetteers) காணப்படும் விவரங்களும் சேக்கிழார் கூற்றோடு ஒத்திருத்தல் படித்து இன்புறத்தக்கது. 

 

அப்பரது தொண்டைநாட்டு யாத்திரை. 'அப்பர் தொண்டை நாட்டு யாத்திரை செய்யும்பொழுது திருவாலங்காடு பணிந்தார். பிறகு பல பதிகளையும் நெடுங்கிரிகளையும் படர்வனங்களையும் கடந்து, காரிக்கரை அடைந்தார். அங்கிருந்து காளத்தி சென்றார்' என்பது சேக்கிழார் கூற்று. காரிக்கரை என்பது இக்காலத்தில் இராமகிரி என வழங்குகிறது. அங்கு இராமகிரி என்ற மலையும் அதன் அடிவாரத்தில் சிறிய சிவன் கோவிலும் உண்டு. அக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளால் அவ்விடத்திற்குக் காரிக்கரை என்பது பழைய பெயர் என்பது தெரிகிறது. திருவாலங்காட்டிற்கும் காரிக்கரைக்கும் இடையில் மலைகளும், காடுகளும், இவற்றை அடுத்துப் பல ஊர்களும் இருத்தலை இன்றும் காணலாம். சென்னையிலிருந்து நகரி-நாகலாபுரம் செல்லும் பேருந்தில் பிரயாணம் செய்பவர் காரிக் கரையில் இறங்கலாம்: வழிநெடுகவுள்ள குறிஞ்சி நிலக் காட்சிகளைக் கண்டு செல்லலாம். அங்ஙனமே காளத்திவரை பேருந்தில் யாத்திரை செய்யின் அவ்வழி அமைப்பும் வழி நெடுகவுள்ள காட்சிகளும் சேக்கிழார் கூற்றோடு பெரும்பாலும் ஒத்திருத்தலைக் காணலாம். "சேக்கிழார் கூறியுள்ள யாத்திரை வழி அவர் காலத்திருந்த வழியாகும். ஆனால், அவ்வழியே ஏறத்தாழ, கி.பி.7ஆம் நூற்றாண்டில் அப்பர் காலத்திலும் இருந்ததெனக் கோடலில் தவறில்லை. 'வடுக வழி மேற்கு, வடுக வழி கிழக்கு' என்ற பெரிய பாதைகள் தமிழ் நாட்டிற்கும் ஆந்திர நாட்டிற்கும் தொடர்பை உண்டாக்கி இருந்தன. அப்பர் போன்ற யாத்திரிகர்க்குரிய பெருஞ்சாலைகள் நாடெங்கும் இருந்திருத்தல் வேண்டும் என்பது 7, 8ஆம் நூற்றாண்டுகளிற் செய்யப்பட்ட நூல்களைக் கொண்டும் ஊகிக்கலாம் [1]." 
-----

[1. "Dr. S.K. Aiyangar – 'Manimekalai in its Historical Setting', p.46

 

3. திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திற் கூறப் பட்டுள்ள குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் திணைகளைப்பெற்ற தொண்டை நாட்டு வருணனை கூர்ந்து கவனிக்கத் தக்கது. குறஞ்சியும் முல்லையும் மயங்குதல், முல்லையும், மருதமும் மயங்குதல், குறிஞ்சியும் நெய்தலும் மயங்குதல் போன்ற திணைமயக்க வகைகள், ஒவ்வொரு நிலத்திலும் அமைந்துள்ள சிறப்புடைய கோவில்கள், ஊர்கள், அவ்வூர்களைப்பற்றிய வரலாற்றுச் செய்திகள் முதலியன ஏறக்குறைய 46 செய்யுட்களில் விளக்கப்பட்டுள்ளன. காட்டுப்பாடி, மகாபலிபுரம், திருமுல்லைவாயில் போன்ற இடங்களை நேரிற் கண்டவர் இவ்வருணனையைப் படிப்பாராயின், சேக்கிழார் தொண்டை நாடு முழுவதும் நன்கு சுற்றி மூலை முடுக்குகளையும் கவனித்த நில அமைப்பு நிபுணர் என்பதை எளிதில் அறிதல் கூடும்.

 

சம்பந்தர் யாத்திரை. அப்பர், சம்பந்தர், சுந்தரருடைய தல யாத்திரைகளைக் குறிக்கும் இடங்களில், 'இவர் இன்ன வூரில் உள்ள கோவிலைப் பணிந்த பிறகு இன்ன வழியே சென்று இன்னவூர்க் கோவிலை அடைந்து பதிகம் பாடினார்: பிறகு இன்ன இன்ன கோவில்களைத் தரிசித்து இன்ன பதியை அடைந்தார்' என்று சேக்கிழார் கூறியுள்ளார். அந்தந்த யாத்திரையில் கூறப்படும் தல முறைவைப்பு ஊன்றி நோக்கத்தக்கது. அஃது இன்றளவும் ஒத்திருத்தலைக் காணக் காண, அவ்விடங்களை எல்லாம் காணச் சேக்கிழார் மேற்கொண்ட உழைப்பை எண்ணி எண்ணி நாம் மகிழ வேண்டுபவராகிறோம். சான்றாகச் சில குறிப்புகளைக் காண்க.

1. தலையாலங்காடு என்பது திருவாரூர்க்கு வடக்கே எட்டுக்கல் தொலைவில் இருக்கும் சிவத்தலமாகும். அங்கிருந்து திருவாரூர்க்கு வரும் பெருவழியில் பெருவேளூர், சாத்தங்குடி, கரவீரம், விளமர் என்ற தலங்கள் இருக்கின்றன. சம்பந்தர் தமது யாத்திரையில் இத்தலங்களை முறையே சென்று தரிசித்துத் திருவாரூரை அடைந்தார் என்று சேக்கிழார் செப்பியிருத்தல் உண்மைக்கு எத்துணைப் பொருத்தமாக உள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

 

2. சம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து மதுரை சென்ற வழியைக் கூறுதல் கவனிக்கத் தக்கது. அவர், திருமறைக்காட்டிலிருந்து தெற்கு நோக்கிச்சென்று அகத்தியன் பள்ளி, கோடிக்கரை இவற்றைத் தரிசித்து மேற்கு நோக்கிச் சென்று இடும்பாவனம் முதலிய தலங்களைப் பணிந்து முல்லையும் நெய்தலும் கூடிய வழியே சென்று பிரான்மலை முதலியவற்றைப் பாடி, மதுரை அடைந்தார் என்பது - தஞ்சை, இராமநாதபுரம், மதுரை மாவட்டப் படங்களைக் கொண்டு கவனித்து இன்புறத் தக்கது.

 

3. 'சம்பந்தர் பாண்டிய நாட்டிலிருந்து மீண்டு சோழநாட்டு வழியே வருகையில் திருக்களர், பாதாளிச்வரம் இவற்றைப் பணிந்து முள்ளியாற்றைக் கடந்தார்; கொள்ளம்பூதூரை அடைந்தார்; பின்னர்ப் பல தலங்களைப் பணிந்து திருநள்ளாறு சென்றார்; பிறகு தெளிச்சேரி பணிந்தார்; அங்கிருந்து திருக்கடவூர் பிரயாணமானார்; வழியில் போதிமங்கை என்ற பதியில் புத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்றார்' என்பது சேக்கிழார் கூற்று. இத்தலங்கள் முறையே தெற்கிலிருநது வடக்கு நோக்கி இருத்தலும், போதி மங்கை இருக்கும் இட அமைப்பும், முள்ளியாற்று நிலையும் பிறவும் இன்றளவும் உண்மையாகக் காண்கின்றன. 

 

தங்கும் தலைமை இடங்கள். அப்பர் தமது யாத்திரையில் சில முக்கியமான தலங்களில் தங்கி, அங்கிருந்து நாற்புறங்களிலும் அண்மையில் உள்ள கோவில்களைத் தரிசித்துக்கொண்டு மீட்டும் தாம் தங்கிய தலைமைத் தலத்திற்கே வந்து சேர்ந்தனர். இங்ஙனமே சம்பந்தரும் சுந்தரரும் தமது தல யாத்திரையின்போது பல பதிகளைத் தங்கும் தலைமை இடங்களாகக் கொண்டனர்' என்பது சேக்கிழார் கூறும் விவரம் ஆகும். இங்ஙனம் சேக்கிழார் செப்பியுள்ள ஒவ்வொரு தலைமை இடமும் அதனைச் சுற்றியுள்ள பதிகளும் இன்றளவும் எவ்வித மாறுதலும் இல்லாமல் இருத்தல் கவனித்து மகிழத் தக்கது. 

 

யாத்திரை வழிகள். அப்பர், சம்பந்தர், சுந்தரர் யாத்திரைசெய்த வழிகளைச் சேக்கிழார் குறித்துள்ளார். 'அப்பர் திருப்பழனத்திலிருந்து காவிரித் தென்கரையே சென்று திருநல்லூரை அடைந்தார். சம்பந்தர் தில்லையிலிருந்து திருமுதுகுன்றம் போகும்பொழுது நிவாநதிக்கரைமீது மேற்கு நோக்கிச் சென்றார்; வடகரை மாந்துறை பணிந்து பிற தலங்களையும் தரிசித்தார்; பின்னர் மழநாட்டுப் பொன்னி வடகரைமீது போய்த் திருப்பாச்சில் ஆச்சிரமம் அடைந்தார்; திருஈங்கோய் மலையைப் பணிந்த பிறகு கொங்குநாட்டு மேற்குப் பகுதி நோக்கிச் சென்றார். சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் சேரநாடு செல்லப் புறப்பட்டு ஆரூரிலிருந்து மேற்குப் பக்கம் சென்றார் காவிரித் தென்கரை வழி போய்ச் சிவபிரான் கோவில்களைப் பணிந்து திருக்கண்டியூரை அடைந்தார்; வட கரையில் திருவையாறு எதிர்ப்பட்டது.

 

இங்ஙனம் நாயன்மார் யாத்திரை செய்த ஆற்றின் பெயர்களையும், கரைகளையும், அக்கரைகளில் அவர்கள் தரிசித்த கோவில்களையும், அக்கரைகளின் வழியே அவர்கள் சென்ற நாடுகளையும் சேக்கிழார் மிகவும் தெளிவாகக் கூறியிருத்தலைக் காண, அப்புலவர் பெருமானது தமிழகத்து நில அமைப்பு அறிவு எந்த அளவு தெளிவாக இருந்தது என்பதும், அத்தகைய தெளிந்த அறிவிற்கு அவரது தல யாத்திரையே சிறந்த காரணம் என்பதும் நன்கறியலாம். 

 

நாயன்மார் பதிகள் 

 

ஆதனுர்: நந்தனார் ஆதனூரைச் சேர்ந்தவர். அவரது ஆதனுர் இன்னது என்று சேக்கிழார் குறிக்க வேண்டும். ஆயின் தமிழ் நாட்டில் ஆதனூர்கள் பல சேக்கிழார் காலத்திலேயே இருந்தன என்பது கல்வெட்டுகளாற் புலனாகின்றது. திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தென் ஆர்க்காடு, தஞ்சாவூர் முதலிய மாவட்டங்களில் ஆதனுர்கள் இருக்கின்றன. நந்தனார் திருப்பணி செய்த திருப்புன்கூருக்குப் பக்கத்திலேயே ஆதனூர் ஒன்று உண்டு. தமது நூலைப் படிப்பவர் இடமறியாது மயங்குவர் என்ற நோக்கத்துடன் சேக்கிழார்,
"கொள்ளிடத்தின் அலைகள் மோதும் இடத்தில் உள்ளது ஆதனூர். அது கொள்ளிடத்தின் வடகரையில் இருக்கின்ற்து. அது மேல்-கானாடு என்ற பெரும் பிரிவைச் சேர்ந்த பகுதியாகும்."
என்று மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். அவர் நேரே சென்று கண்டிராவிடில், இவ்வளவு தெளிவாக இடங் குறித்தல் இயலுமா?

 

மிழலை: பெருமிழலைக் குறும்பர் என்ற நாயனார் 'பெருமிழலை' என்ற ஊரினர். தமிழ் நாட்டில் இப்பெயர் கொண்ட பதிகள் சில உண்டு. சிறப்பாகச் சுந்தரர் தமது தேவாரத்துள் 'மிழலை நாட்டு மிழலை என்றும்', 'வெண்ணி நாட்டு மிழலை' என்றும் இரு வேறு நாடுகளில் இரு வேறு மிழலைகள் இருத்தலைச் சுட்டியுள்ளார். இவை அனைத்தையும் கவனித்த சேக்கிழார், குறும்பரது பதி 'மிழலை நாட்டில் உள்ள பெருமிழலை' என்று தெளிவாகக் குறித்துச் சென்றனர். மிழலை நாடு என்பது கும்பகோணத்தை அடுத்த நிலப்பகுதி. அங்கு மிழலை என்ற பெயருடன் அழிந்த நிலையில் ஒர் ஊர் இருக்கின்றது. அங்கு அழிந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. அதன் ஒர் அறையில் வைக்கப்பட்டுள்ள உருவச் சிலைகளில் குறும்ப நாயனாரது சிலையும் காணப்படுகிறது. இங்ஙனம் குழப்பத்திற்கு இடமாகவுள்ள பதிகளைச் சேக்கிழார் மிகவும் தெளிவாகக் கூறியிருத்தலைக் காண, அவர் தமது யாத்திரையிற் கொண்ட பேருழைப்பை நாம் நன்கறியக்கூடுமன்றோ?

 

செருத்துணை நாயனார் என்பவர் பிறந்த பதி தஞ்சாவூர் என்பது. அது மருகல் நாட்டைச் சேர்ந்தது என்று நம்பியாண்டார் நம்பி குறித்தார். 'மருகல் நாடு எந்தப் பெருநாட்டைச் சேர்ந்தது?' என்ற ஐயம் நூலைப் படிப்பவர்க்கு உண்டாகுமன்றோ? சேக்கிழார் அக்குறையைப் போக்க, "பொன்னி நீர் நாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்" என்று கூறுமுகத்தான், மருகல் நாடு சோழ நாட்டைச் சேர்ந்தது என்பதைத் தெளியவைத்தார். இம் மருகல் நாட்டின் தலைநகரான மருகல், பாடல் பெற்ற 'திருமருகல்' என்னும் பழம் பதியாகும். அது நன்னிலம் தாலுகாவில் உள்ள ஊராகும். அதற்கு ஐந்து கல் தொலைவில் தஞ்சாவூர் இருக்கின்றது. இஃது இராசராசன் காலத்துத் தலைநகரான தஞ்சாவூரினும் வேறுபட்டதாகும்.

 

திருப்பெருமங்கலம்: இது கலிக்காம நாயனார் பிறந்த ஊராகும். இதனைச் சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையிற் குறிக்கவில்லை. நம்பியாண்டார் நம்பியும் தமது திருத்தொண்டர் திருவந்தாதியிற் குறிக்கவில்லை. ஆயின், சேக்கிழார் ஒருவரே இவ்வூரின் பெயரையும் இதன் வளத்தையும் விளக்கமாகத் தமது நூலிற் கூறியுள்ளார்.

 

"சோழ நாட்டில் பொன் கொழிக்கும் காவிரியின் வடகரைக்குக் கிழக்குப் பக்கம் உள்ளது திருப்பெருபுமங்கலம். அஃது ஆடும் கொடிகளைக் கொண்ட உயர்ந்த மாடங்களையுடைய பெரிய நகரம். அதுவே சொழர் சேனைத் தலைவராய கலிக்காம நாயனார் வாழ்ந்த திருப்பதி." என்பது சேக்கிழார் வாக்கு. இப்பழம்பதி காவிரி வடகரைக்குக் கிழக்கே திருப் புன்கூருக்கு பக்கத்தில் சிற்றூராக இருக்கின்றது.

 

கஞ்சாறூர்: இவ்வூரைப்பற்றிச் சுந்தரரும் நம்பியும் ஒன்றுமே குறிக்கவில்லை. ஆயின், சேக்கிழார் இவ்வூரின் பெயர், வளம் இவைபற்றி ஆறு பாக்களைப் பாடியுள்ளார். "வயற் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறுர்" என்பது சேக்கிழார் வாக்கு இப்பதி சீகாழியை அடுத்துள்ள ஆனந்ததாண்டவபுரம் என்பது. மானக்கஞ்சாறர் வரலாற்றில் கூறப்பட்ட பஞ்சவடி ஈசர், மாவிரதியார், மானக்கஞ்சாறர், அவர் திருமகளார், இவர்களுடைய உருவச்சிலைகள் அங்குள்ள கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் மேற்கில் கரும்புப் பயிர் செழித்து வளர்கிறது. இக்கரும்பு வளத்தாற்றான் சேக்கிழார், மேற்சொன்ன தொடரைக் குறித்தார் போலும்!

 

செங்குன்றூர் : விறல்மிண்ட நாயனார் வாழ்ந்த பதி 'செங்குன்றம்' என்பது நம்பி கூற்று அவ்வளவே. அது சேரநாட்டுச் செங்குன்றுாரா? கொங்கு நாட்டுச் செங்குன்றுாரா (திருச்செங்கோடா)? என்று அந்தாதி படிப்போர்க்கு ஐயமுண்டாதல் கூடும். சேக்கிழார், இவ்வையத்தை அறவே அகற்ற விரும்பி சேரநாட்டில் உள்ள பதிகளில் முன் வைத்து எண்ணத்தக்கது, விறல்மிண்டர் பிறந்த செங்குன்றூர் என்று தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

இவ்வாறு மயங்கத்தக்க இடங்களை எல்லாம் தெளிவாகக் கூறிச்சென்ற சேக்கிழார், சிவத்தல அறிவும் தமிழ்நாட்டு அறிவும் நிரம்பப் பெற்றவர். அங்ஙனம் நிரம்பிய அறிவைப் பெற்றமைக்கு அவர் செய்த தல யாத்திரையே காரணம் என்பன இதுகாறும் கூறிய பல சான்றுகளைக் கொண்டு நன்கு உணரலாம். 

 

நாயன்மார் மரபுகள்: நம்பியாண்டார் நம்பி தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் ஏறத்தாழ 35 நாயன்மார்க்கு மரபு குறித்திலர். ஆயின், சேக்கிழார் அவருள் ஏறக்குறைய 27 நாயன்மார்க்கு மரபு குறித்துச் சென்றனர். இஃது அவரால் எங்ஙனம் இயன்றது? அவர் தமது தலயாத்திரையில் அந்தந்தத் தலத்தில் வாழ்ந்த வல்லார்வாய்க் கேட்டுணர்ந்த குறிப்புகள் கொண்டே இது கூற முடிந்தது எனக் கோடல் பொருத்தமே ஆகும். 

 

புதிய செய்திகள். பதினொரு திருமுறைகளிலும் பிற நூல்களிலும் கூறப்பெறாத பல செய்திகள் பெரிய புராணத்துட் காண்கின்றன. அவற்றுட் சிறப்பாகத் (1) திருநீலகண்டர் இளமை துறந்த வரலாறு, (2) நந்தனார் செய்த திருப்பணிகள், (3) சாக்கியர் காஞ்சியில் சிவனைப் பூசித்து முத்தி பெற்றமை; (4) சுந்தரர் - சங்கிலியார் திருமணம் என்பன குறிக்கத் தக்கவை. இத்தகைய செய்திகள் பலவற்றை நோக்கச் சேக்கிழார் தமது தல யாத்திரையின்போது இவற்றைத் தக்கார் வாயிலாகக் கேட்டறிந்தனராதல் வேண்டும் என்று நினைக்க இடமுண்டாகிறது. 

 

சண்டீசப் பதம். இதனைக் குறிக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பத்தைப்பற்றிச் சென்ற பகுதியிற் கூறப்பட்டதன்றோ? இறைவன், உமையம்மை யாருடன் அமர்ந்து, தமது மடித்து ஊன்றிய வலக்காலின் அடியில் சண்டீசரை அமரவைத்து, தாம் சூடியிருந்த கொன்றை மாலையை எடுத்து அவரது முடி மீது சூட்டிச் 'சண்டீசப் பதம்' அருளும் நிலையை உணர்த்தும் இச்சிற்பம் கருத்தூன்றிக் கவனிக்கத் தக்கது. இதற்கு வலப்பக்கம் கணநாதர் ஆடிப்பாடிக் களிக்கின்றனர். இடப்பக்கம் பசுக்கள் (வேதங்களின் அறிகுறி) நிற்கின்றன. இச்சிற்பம் சேக்கிழார்க்கு முற்பட்டதென்பது சென்ற பிரிவில் விளக்கப்பட்டது. இம்மூன்று நிலைகளையும் ஒருங்கே பெற்ற சண்டீசப்பதச் சிற்பம் ஒரு பக்கமும், சண்டீசப் பதத்தை விளக்கும் சேக்கிழார் பாக்களை ஒரு பக்கமும் வைத்துப் பார்ப்பது நல்லது. 
"அண்டர் பிரானும் தொண்டரதமக் கதிப னாக்கி, 'அனைத்து நாம்
உண்ட கலமும் உடுப்பனவும் சூடு வனவும் உனக்காகச்
சண்டீசனுமாம் பதந்தந்தோம்' என்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்."

 

"எல்லா வுலகும் ஆர்பெடுப்ப எங்கும் மலர்மா ரிகள் பொழியப் 
பல்லா விரவர் கணநாதர் பாடி ஆடிக் களிபயிலச் 
சொல்லார் மறைகள் துதிசெய்யச் சூழ்பல் லியங்கள் எழச்சைவ
நல்லா(று) ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுதணைந்தார்."

 

முதற் செய்யுள், இறைவன் சண்டீசர் முடியில் கொன்றை மாலை சூட்டுவதைக் குறிப்பது. இரண்டாம் செய்யுள் சண்டீசப்பதம் கண்ட உலகத்து உயிர்கள் நிலையை விளக்குவது: (1) எல்லா உலகத்தாரும் ஆரவாரித்து, மலர்மாரி பொழிந்தனர்; (2) கணநாதர் பாடி ஆடிக்களித்தனர்; (3) மறைகள் துதி செய்தன (4) பல்லியங்கள் ஒலித்தன. இவற்றுள் கணநாதர் கூத்தும் மறைகளும் (பசுக்கள் வடிவில்) சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. 

 

இராசேந்திரன் காலமுதல் சோழப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை, சோழர் தலைநகரமாக இருந்த சிறப்பு கங்கை கொண்ட சோழபுரத்திற்கே உண்டு. ஆதலின், சேக்கிழார் காலத்திலும் அதுவே தலைநகரமாக இருந்தது என்பது தெளிவு. சோழர் முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார், நாளும் இக்கங்கை கொண்ட சோழீச்சரத்தைத் தரிசித்திருந்தமை இயல்பே. அங்குள்ள சண்டீசப்பதச் சிற்பம் அவருடைய கண்ணையும் கருத்தையும் ஈர்த்தது என்பதில் வியப்பில்லை. எனவே, இவர் இச்சிற்பச் சிறப்பை மேற்சொன்ன இரண்டு பாக்களில் சித்தரித்து விட்டார் போலும்!

 

பழையாறையில் உருவச்சிலைகள். 'இறைவனது கோவணத்துண்டை ஒரு தட்டில் வைத்து, அதற்கு ஈடாக அமர்நீதியார் தம் செல்வங்களை எல்லாம் மற்றொரு தட்டில் வைத்தும் இரண்டும் சமமாக நிற்கவில்லை. ஆதலின் அவரும் மனைவியரும் இறைவனைத் தொழுது மற்றொரு தட்டில் ஏறினர். இரு தட்டுகளும் நேர்நின்றன' என்பது நம்பியாண்டார் நம்பி கூற்று. ஆயின் சேக்கிழார், 'நாயனாரும் மனைவியாரும் இவர் தம் ஒரே புதல்வருடன் தட்டில் ஏறினர்' என்று குறித்தார். சேக்கிழார் கூற்றில் புதிதாகப் 'புத்திரர்' சேர்க்கப்பட்டதேன்? அங்ஙனம் சேர்க்கக் காரணம் என்ன?

 

அமர்நீதி நாயனாரது திருப்பதியாகிய பழையாறையில் உள்ள வடதளியில் - அமர்நீதி நாயனார், அவர் மனைவியார் இவர் தம் உருவச்சிலைகள் உள்ளன. அம்மையார் கைகளில் குழந்தை காண்கிறது. இவை கல் உருவங்கள். இவற்றைத் தவிரச் சேக்கிழார் கூற்றுக்கு வேறு சான்று இருந்ததென்று கூறக்கூடவில்லை. நாயன்மார் வாழ்ந்த இடத்துக் கோவில்களில் அவர் தம் உருவச் சிலைகளை எழுப்பி வழிபடல் பண்டை மரபு என்பது முன்பே குறிக்கப்பட்டதன்றோ? அம்மரபுப்படி பழையாறையில் எழுந்தருளப் பெற்றிருந்த, உருவச்சிலைகளைப் பார்த்தே சேக்கிழார் இப்புதிய செய்தியைச் சேர்த்தனர் என்று கொள்ள வேண்டும். அங்ஙனம் கொண்டால், சேக்கிழார் கேவலம் தலங்களைக் கண்டதோடு திருப்தி கொள்ளாமல், ஒவ்வொரு கோவிலிலும் உள்ள நாயன்மார் உருவச்சிலைகளையும் நன்றாகக் கவனித்துக் குறிப்புகள் தயாரித்தவர் என்பது நன்கு வெளியாகும்.

 

திருமடங்கள். இன்னின்ன ஊர்களில் மடங்கள் இருந்தன என்பது திருமுறைகளில் குறிக்கப்படவில்லை. நாயன்மார் காலத்தில் எங்கெங்கு மடங்கள் இருந்தன என்று கூறத்தக்க வேறு நூலும் இல்லை. ஆனால் சேக்கிழார் காலத்தில் தமிழ் நாட்டில் பழையனவும் புதியனவுமாகப் பல மடங்கள் இருந்தன. திருஆவடுதுறை, திருவதிகை போன்ற சிறந்த பதிகளில் பலமடங்கள் இருந்து சைவப்பணி ஆற்றிக் கொண்டு இருந்தன. சாதாரணப் புலவன் இங்ஙனம் விரவி இருந்த பழைய-புதிய மடங்கள் எல்லாம் நாயன்மார் காலத்தில் இருந்தனவாகக் கொண்டு நூல்பாடி விடுவான். அங்ஙனம் சேக்கிழார் மயங்கிக் கூறியிருப்பினும், அவர் தவறு செய்தார் என்பதைப் பிறர் அறிதலும் அருகை. அங்ஙனம் இருந்தும், பொறுப்பு வாய்ந்த அப்பெரும் புலவர் எல்லாப் பழைய மடங்களைப் பற்றியும் கூறவில்லை; புதிய மடங்களைப் பற்றியும் கூறவில்லை. அவர் திருவதிகை, சித்தவடம், திருநல்லூர், சீகாழி, திருப்புகலூர், திருக்கடவூர், திருமறைக்காடு, திருப்பூந்துருத்தி, திங்களுர், திருமருகல், திருவாரூர், திருவீழிமிழலை, மதுரை, காஞ்சி, காளத்தி, ஒற்றியூர் முதலிய சில இடங்களிற்றாம் நாயன்மார் காலத்தில் மடங்கள் இருந்தன என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார். இவற்றுள், (1) திருவதிகையில் இருந்து சேக்கிழாராற் குறிக்கப்பட்ட திலகவதியார் திருமடம் இன்று அழிந்த நிலையிற் கிடக்கின்றது. (2) திருப்பூந்துருத்தியில் அப்பரால் அமைக்கப்பட்ட திருமடம் என்று சேக்கிழார் குறித்த மடம் ஒன்று இன்று இடிந்து காணப்படுகிறது. (3) இவ்வாறே அமர்நீதி நாயனார் திருமடம் என்று சேக்கிழார் குறித்த மடம் ஒன்று திருநல்லூரில் பாழ்பட்டுக் கிடத்தலைக் காணலாம். காஞ்சியில் திருமேற்றளியை அடுத்து மடம் இருந்தது என்று பல்லவர் காலத்துக் கல்வெட்டே குறித்தலை முன்பு கண்டோம் அல்லவா? அங்ஙனமே திருவொற்றியூரிலும் திருமடம் இருந்ததைப் பல்லவர் கல்வெட்டே உறுதிப்படுத்துகிறது. இவற்றை நோக்கக் கல்வெட்டிற் குறிக்கப்படும் சந்தர்ப்பம் பெறாத மேற்சொன்ன மடங்கள் இருந்தில என்று கூறக் கூடுமா? சேக்கிழார் பெருமான் தமது தல யாத்திரையின்போது, 'இன்னின்ன திருமடம் நாயன்மார் காலத்தது' என்பதை நன்கு விசாரித்து அறிந்தமையாற்றான் பலவற்றையும் குழப்பிக் கூறாது, தெளிவாக மேற்சொன்ன திருமடங்களை மட்டும் குறித்துப் போந்தார் என்று கொள்வதே அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது.

 

கோவில்கள். நாயன்மார் காலத்தில் பாடல் பெற்ற கோவில்களாக இருந்தவற்றின் உண்மையான தொகை நமக்குத் தெரியவில்லை. தேவார ஏடுகள் நம்பிக்கு முன்னும் நம்பிக்குப் பின்னும் பல அழிந்து விட்டன. அவ்வளவோ? சேக்கிழார்க்குப் பிறகும் பல பதிகங்கள் ஒழிந்தன என்பது சேக்கிழார் கூற்றாலேயே அறியலாம். போனவை போக, இன்றுள்ள திருமுறைகளைக் கொண்டு காண்கையில், பாடல் பெற்ற கோவில்கள் ஏறத்தாழ 300 இருந்தன என்பது தெரிகிறது. அவற்றுட் பல சோழர் காலத்திற் பெருஞ் சிறப்பு அடைந்தன. பல கோவில்கள் புதிய கோபுரங்களைக் கொண்டு விளங்கின. அங்ஙனம் இருந்தும் சேக்கிழார், 'மதுரைக் கோவில், திருமுதுகுன்றக் கோவில், காஞ்சி-ஏகாம்பரநாதர் கோவில், தில்லைக்கூத்தப்பிரான் கோவில் போன்ற சிலவே நாயன்மார் காலத்திற் கோபுரத்துடன் விளங்கினவை மற்றவை கோபுரம் அற்றவை' என்று தெளிவாகக் கூறியுள்ளது நோக்கத் தக்கது. அவர், 'எல்லாக் கோவில்கட்கும் கோபுரம் உண்டு' என்று பாடியிருப்பின், 'அது தவறு' என்று கூறத்தக்கவர் ஒருவரும் இல்லை அல்லவா? அங்ஙனம் இருந்தும், 300 கோவில்களில் ஏற்ககுறைய 30 கோவில்களே கோபுரம் கொண்டனவாக இருந்தன என்று அவர் கூறுதல் - அவரது தலயாத்திரை நுட்பத்தை நமக்கு நன்கு அறிவிக்கும் சான்றாகும்.

 

முடிவுரை. தாம் வரையப்புகும் நூலிற் குறிக்கத் தக்க இடங்களைப்பற்றிய செய்திகள் அனைத்தையும் நேரிற் சென்று கண்டு உள்ளவாறு உணர்ந்து வரைதலே சாத்திரீய வரலாற்று ஆசிரியரது சிறப்பியல்பு என்று இன்று மேனாட்டு நிபுணர் குறிக்கும் இலக்கணம், நம் தமிழ்ப் பெரும் புலவராகிய சேக்கிழாரிடம் இன்றைக்கு 800 ஆண்டுகட்கு முன்னரே குடி கொண்டிருந்தது என்பதைக் காட்ட, இதுகாறும் கூறிய ஒவ்வொரு செய்தியும் தக்க சான்றாதல் காணலாம். 
---------- 

 

8. சேக்கிழாரும் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகளும்

 

முன்னுரை. பொறுப்புள்ள பதவியில் இருக்கும் எந்த நூலாசிரியனும் தனது நூலை இயன்றவரை உண்மைக்கு மாறாக வரையத் தலைப்படான்; பொறுப்பற்றவன் வேண்டும் விகற்பங்களைக் கூறி நூலைப் பெரிதாக்கிப் பலவகை அபூத கற்பனைகளைப் புகுத்தி விடுவான். சேக்கிழார் பொறுப்புள்ள தலைமை அமைச்சர் பதவியில் இருந்தமையின், பொறுப்புணர்ச்சியோடு நாயன்மார் வரலாறுகளை எழுத விரும்பினார். அதற்றான் தமிழகம் முழுவதும் சுற்றிக் குறிப்புகள் திரட்டினார். அவர் அமைச்சராக இருந்தமையின், அரசியல் அறிவுடையவராக இருந்தவர் என்று கோடல் முறையே ஆகும். அவர் அவ்வரசியற் கண்கொண்டு 63 நாயன்மாரைக் கவனித்ததில், கிழ்வரும் விவரங்களைக் கண்டனர். 63 நாயன்மாருள். 

1. சேரர் ஒருவர் - சேரமான் பெருமாள் நாயனார்;
2. சோழர் இருவர் - (1) கோச்செங்கட் சோழர், (2) புகழ்ச்சோழர்; 
3. பாண்டியர் ஒருவர் - நின்றசீர் நெடுமாற நாயனார்;
4. மங்கையர்க்கரசியார் - சோழன் மகளும் பாண்டியன் மனைவியுமாவார்;
5. பல்லவர் இருவர் - (1) ஐயடிகள் காடவர்கோன் (2) கழற்சிங்கர்; 
6. களப்பிரர் ஒருவர் - கூற்றுவ நாயனார்; 
7. சிற்றரசர் நால்வர் - (1) திருக்கோவலூரைத் தலைநகராகப் பெற்ற மலைநாட்டை யாண்ட மெய்ப்பொருள் நாயனார், (2) திருநாவலூரைத் தலைநகராகக் கொண்ட திருமுனைப்பாடி நாட்டையாண்ட நரசிங்க முனையரையர், (3) கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்ட கோனாட்டை (புதுக்கோட்டை சீமையை) ஆண்ட இடங்கழி நாயனார், (4) சோழநாட்டின் உட்பகுதிகளுள் ஒன்றான மிழலை நாட்டை ஆண்ட குரும்பநாயனார்;
8. பல்லவர் படைத்தலைவர் - பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர்.
9. சோழர் படைத்தலைவர் மூவர் - (1) கோட்புலி நாயனார், (2) மானக்கஞ்சாற நாயனார், (3) கலிக்காம நாயனார்; 
10. பாண்டிய அமைச்சர் – குலச்சிறையார்; 
11. களப்பிரர் குழப்ப காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மூர்த்தி நாயனார் என்பவராவர்.

 

இவ்வாறு 63 நாயன்மாருள் அரசியல் தொடர்பு கொண்டோர் 18 பேர் ஆவர். இவர்கள் வரலாறுகளை இயன்றவரை அவ்வம் மரபினரைக் கேட்டுக் குறிப்புகள் தொகுத்தல் நல்லதன்றோ? சேக்கிழார் இவ்வரசியல் கண்கொண்டு ஏனைய நாயன்மார் வரலாறுகளை ஆராய்ந்தபொழுது மேலும் பல புதிய அரசர்களைப்பற்றி அறியவேண்டியவர் ஆனார். அவர்கள் - 

 

1. அப்பரது வரலாற்றிற் குறிக்கப்பட்ட மகேந்திரவர்மன் என்ற பல்லவன்; 
2. பூசலார் புராணத்திற் கூறப்பட்ட இராசசிங்கன் என்ற பல்லவன்;
3. தண்டியடிகள் வரலாற்றிற் சொல்லப்பட்ட சோழ அரசன்;
4. அப்பரைக் கண்டு லிங்கத்தை மறைத்த சமணரைத் தண்டித்து லிங்கத்தை வெளிப்படுத்திய சோழ அரசன்;
5. திருப்பனந்தாளில் யானைகளைக் கொண்டு லிங்கத்தை நிமிர்த்த முயன்ற-குங்கிலியக் கலயரைப் பணிந்து பாராட்டிய சோழ அரசன்; 
6. சுந்தரர் காலத்தில் பாண்டியனுடன் இருந்த அவன் மருமகனான சோழ அரசன் என்பவர் ஆவர்.

 

இங்ஙனம் அரசியல் தொடர்புடையார் பலருடைய உண்மை வரலாறுகளை அறியவேண்டிய பொறுப்பு சேக்கிழாரைச் சேர்ந்தது. இவர்களைப் பற்றித் தம் மனம் போனவாறு அவர் நூல் பாடியிருப்பின், இவர்களைச் சேர்ந்த - சேக்கிழார் காலத்தில் இருந்த அரச மரபினர், அவர் நூலை மதிக்க வழியில்லை அல்லவா? ஆதலின், அந்தந்த அரச மரபினரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையில் தமது பெருநூல், உண்மைச் செய்திகள் பொருந்தியதாக இருத்தல் வேண்டும் என்ற கவலை, பொறுப்புள்ள சேக்கிழார்க்கு உண்டாகி இருத்தல் வேண்டும் என்று நாம் நினைப்பதில் தவறில்லை. இனி, இவ்வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார்களைப் பற்றியும், அரசர்களைப் பற்றியும் சேக்கிழார் கூறும் குறிப்புகள் இன்றளவும் நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டுச் செய்தி கட்குப் பொருந்தியனவாக உள்ளனவா என்பதையும், இப்பெரும் புலவர் எந்தச் சான்றுகள் கொண்டு இவர்கள் வரலாறுகளைப் பாடியிருத்தல் கூடும் என்பதையும் ஒருவாறு ஆராய்வோம்.

 

மூர்த்தி நாயனார். 'இவர் காலத்திற்றான் வடுகக் கருநாடர்வேந்தன் ஒருவன் கடல்போன்ற சேனையோடு வந்து பாண்டியனை விரட்டி நாட்டைக் கைக்கொண்டான். அவன் சைவன் அல்லன். ஆதலின், சிவன் கோவில்கட்குத் தீங்கு செய்தான்; நாளும் சொக்கநாதர் கோவிலுக்குச் சந்தனம் அரைத்து உதவி வந்த மூர்த்தி நாயனாருக்குச் சந்தனம் கிடைக்காதவாறு செய்தான்' என்பது சேக்கிழார் குறிப்பாகும்.

 

இங்ஙனம் பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் கைப்பற்றி ஆண்டவன் களப்பிரகுல காவலனான 'அச்சுத விக்கந்தன்' என்பது தமிழ் நாவலர் சரிதை, புத்ததத்தர் கூற்று, வேள்விக்குடிப் பட்டயம் இவற்றால் அறியப்படும் உண்மையாகும். இக்களப்பிரர் காலத்தில், பல நூற்றாண்டுகட்கு முன்னிருந்த பாண்டியனால் விடப்பட்ட பிரம்மதேய உரிமை அழிக்கப்பட்டு விட்டது என்பதை வேள்விக்குடிப் பட்டயத்தால் அறியலாம். மேலும், இக்களப்பிரர் ஆட்சியிற்றான் சமண சங்கம் பாண்டிய நாட்டில் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. எனவே, பாண்டி நாடாண்ட களப்பிரர் சைவ விரோதிகள் - வைதிக விரோதிகள் என்பது வெள்ளிடை மலைபோல் விளக்கமாகும். விளக்கமாகவே, மூர்த்தியார் சிவப்பணி செய்யாவாறு களப்பிர அரசன் இடையூறு விளைத்தான் என்று சேக்கிழார் கூறுதல் வரலாற்றுச் செய்திக்குப் பொருத்தமான தாகவே காணப்படல் காண்க. மூர்த்தியார் காலம் அச்சுத விக்கந்தன் காலமான (ஏறத்தாழ) கி.பி. 450 என்னலாம்.

 

கோச்செங்கட் சோழன். இவன் பொய்கையார் என்ற புலவராற் பாராட்டப் பெற்றவன். அப்பர், சம்பந்தர், சுந்தரரால் ஏத்தெடுக்கப் பெற்றவன். பிறகு திருமங்கையாழ்வாராற் பலபடப் பாராட்டப்பெற்றவன். இவன் சோழராட்சிக்கு உட்பட்ட தொண்டை நாட்டையும் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்ட சோணாட்டையும் வென்ற பெருவீரன் என்று சொல்லாம். இவன் குடகொங்கர், சேரர் முதலியோரையும் வென்றவன். இப்பேரரசன், பல்லவராலும் களப்பிரராலும் சைவ சமய ஆதரவு குறைந்து வருதலைக் கண்டு, எழுபதுக்கு மேற்பட்ட சிவன் கோவில்களைத் தமிழ் நாட்டிற் கட்டுவித்த பெரும் பக்தன். தில்லையைச் சிறப்புடைய சிவத்தலமாக அமைத்த சிறப்புடையான். தில்லைவாழ் அந்தணர்க்கு மாடங்கள் பல சமைத்தவன். இவன், வரலாற்றில் இடம் பெற்ற சோழ வேந்தன். இவனைப்பற்றித் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பெருமையாகப் பேசுகின்றன. சோழர் காலத்து நூல்கள் யாவும் சிறப்பிக்கின்றன. இத்தகைய பேரரசனைப் பற்றிச் சேக்கிழார் கூறும் வரலாற்றுக் குறிப்புகளில் மாறானவை என்று ஒதுக்கத் தக்கவை இல்லை என்னலாம்.

 

பிற சோழ மன்னர்கள். புகழ்ச்சோழர் முதலிய சோழ மன்னர்களைப்பற்றி அறியத்தக்க இலக்கியமோ, பிற சான்றுகளோ இன்று கிடைக்குமாறில்லை. ஆயின், இவர்களைப்பற்றிச் சேக்கிழார் கூறும் விவரங்களோ பலவாகும். சோழர் அமைச்சரான அவர், சோழ அரசர் செய்திகளை அச் சோழர் மரபினரைக் கேட்டே எழுதியிருப்பார் எனக் கொள்ளலே நேர்மையான முடிபாகும். 

 

ஐயடிகள் காடவர்கோன். 'இவர் வடமொழி-தென்மொழிகளில் சிறந்த புலவர்; வடபுலம் கைக் கொண்டவர். தம் மகனிடம் அரசை ஒப்புவித்துச் சிவத்தல யாத்திரை செய்தவர்; ஒவ்வொரு தலம் பற்றியும் ஒரு வெண்பாப் பாடினார்' என்பது சேக்கிழார் கூறும் செய்தியாகும்.

 

இக்குறிப்பு கல்வெட்டைக் கொண்டு மெய்ப்பிக்கக் கூடவில்லை. சேக்கிழார் காலத்தில் இக் காடவர்கோன் மரபில் வந்த பல்லவன்-மோகன் ஆட்கொல்லி என்பவன். அவன் சோழப் பேரரசில் உயர் அலுவலாளனாக இருந்தான். அவனுடைய முன்னோரும் சோழப் பேரரசில் பங்குகொண்டு இருந்தனர். ஆதலின், அவனது மரபினருள் முன்னோரான ஐயடிகள் வரலாற்றுக் குறிப்புகள் அவன் வழியாகச் சேக்கிழார் அறிந்திருத்தல் கூடும், ஐயடிகள் பாடிய க்ஷேத்திர வெண்பா, சேக்கிழார் காலத்தில் முழுவதும் இருந்திருக்கலாம். இதன் பாயிரத்தில் ஐயடிகள் வரலாறு சுட்டப் பெற்றிருக்கலாம். இவ்விரண்டில் ஒன்றன் மூலமாகவே சேக்கிழார் ஐயடிகளைப்பற்றிய குறிப்புகளைத் தொகுத்தார் எனக் கோடலே பொருத்தமானது.

 

மகேந்திரவர்மன். 'இவன் அப்பர் காலத்துப் பல்லவப் பேரரசன். இவன் முதலிற் சமணனாக இருந்தான் பிறகு சைவனாக மாறினான். திருப்பாதிரிப்புலியூரில் இருந்த வரலாற்றுப்புகழ்பெற்ற சமணர் கோவிலையும் மடத்தையும் அழித்தான். அந்தச் சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் குணபர ஈச்வரம் கட்டினான்' என்பது சேக்கிழார் கூற்று. 

 

'குணபரன்' என்பது பல்லவ மகேந்திரவர்மனுடைய விருதுப் பெயர்களுள் ஒன்று. அவன், சமணனாக இருந்து சைவனானதை அவன் வெட்டுவித்த திரிசிரபுரம் மலைக்கோவில் கல்வெட்டே உணர்த்துகிறது. திருப்பாதிரிப்புலியூருக்கு அண்மையில் திருவந்திப்புரம் செல்லும் பெரிய சாலை ஒரம் இடிந்து கிடக்கும் கட்டடச் சிதைவுகளும் அங்குள்ள சமண விக்கிரகமும் புகழ்பெற்ற பாடலிபுரத்துச் சமண மடத்தை நினைப்பூட்டுவனவாகும். திருவதிகையில் - பண்ணுருட்டியிலிருந்து பாதிரிப்புலியூர் செல்லும் பெரிய சாலையில் திருவதிகைக் காவல் நிலையத்திற்கு எதிரில் பழுதுபட்டுக் கிடக்கும் சிவன் கோவிலே குணபர ஈச்வரம் என்பது. மண்மேடிட்டுப் புதையுண்டு கிடந்த அக்கோவில் 30 ஆண்டுகட்கு முன்புதான் கண்டறியப்பட்டு, இன்றைய நிலையிற் காட்சி அளிக்கின்றது. 

 

சிறுத்தொண்டர். (1) 'இவர் மகாமாத்திரர் மரபில் வந்தவர்; வைத்தியக்கலை, வடநூற்கலை, படைக்கலப் பயிற்சி முதலியவற்றிற் சிறந்த புலமை உடையவர். (2) தம் மன்னற்காகப் பல போர்களில் ஈடுபட்டவர். (3) தம் அரசன் பொருட்டு வாதாபியைத் தாக்கி அழித்தவர். (4) திருச்செங்காட்டங்குடியில் கணபதீச் சரத்துக் கடவுளுக்குத் தொண்டு செய்துவந்தவர்' என்பது சேக்கிழார் கூறும் குறிப்பாகும்.

 

1. 'மகாமாத்திரர் என்பவர் அரசியல் மந்திராலோசனைச் சபையினர். அரசர் இவர்களைக் கலந்தே யுத்த யாத்திரை செய்வதும் வேறு செயல்களிற் புகுவதும் வழக்கம்' என்பது சாணக்கியர் பொருள் நூல் புகலும் விளக்கமாகும். 'இம்மகாமாத்திரர் பல கலைகளில் வல்லவராகவும் சிறந்த போர் வீரராகவும் நற்குடிப் பிறப்புடையவராகவும் இருத்தல் வேண்டும்' என்பது மநுதர்ம சாத்திரக் கூற்றாகும். சேக்கிழார் கூறும் சிறுத்தொண்டர் இலக்கணம், சாணக்கியர் பொருள் நூலுக்கும் மநுவின் விதிக்கும் ஒத்திருத்தல் கண்டு மகிழத்தக்கது. 

 

2. வாதாபியைத் தூளாக்கிச் சாளுக்கியரை ஒடுக்கிப் பதின்மூன்று ஆண்டுகள் தன் ஆட்சியில் வாதாபியை வைத்துக்கொண்ட புகழுடையவன், முன் சொன்ன மகேந்திரன் மகனான நரசிம்மவர்மன் ஆவன். எனவே, அவனிடமே சிறுத்தொண்டர் சேனைத் தலைவராக இருத்தனராதல் வேண்டும். நரசிம்ம பல்லவன் வாதாபியைப் பிடித்த காலம் ஏறத்தாழ கி.பி. 642. அவனது ஆட்சியில் அத்தொன்னகரம் இருந்த காலம் கி.பி. 642-655 ஆகும் என்பது வரலாற்று ஆசிரியர் கருத்தாகும். இங்ஙனம் பல்லவரால் தமது பண்டை நகரம் பாழானதால், தங்கள் பெருஞ் சிறப்புக்கு இழுக்கு ஏற்பட்டது என்று சாளுக்கியரே புலம்பினர் என்பதற்கு அவர்தம் பட்டயங்களே போதிய சான்றாகும். இங்ஙனம் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் கொண்டே அறியத் தக்க வாதாபிப் படையெடுப்பைச் சேக்கிழார் பெருமான் சிறுத்தொண்டர் வரலாற்றிற் செருகியுள்ளனர் எனின் அவரது வரலாற்றுப் புலமையையும் நுண்ணிய அறிவையும் என்னெனக் கூறி வியப்பது! 

 

3. கணபதீச்சரம் என்பது திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீசர் கோவிலுக்குள் சிறிய கோவிலாக இருக்கின்றது. இதன் சுவர்களிற்றாம் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இக்கோவிலைத் தன் அகத்தே பெற்ற உத்தராபதீசர் கோவிற் சுவர்களில் சோழர் கல்வெட்டுகள் இல்லை. எனவே, சிறுத்தொண்டர் காலத்தில் இன்றைய பெரிய கோவில் இல்லை என்னலாம். முதல் இராசராசன் காலம் முதல் கணபதீச்சரம் சிறப்புறத் தொடங்கியது. அங்குச் சித்திரை விழா ஆண்டுதோறும் கொண்டாடப் பட்டது. அப்போது அடியாரை உண்பிக்கச் 'சிறுத்தொண்ட நம்பி மடம்' கட்டப்பட்டது. "சிறுத்தொண்டர், 'சிராளதேவர்' என்ற பெயர்கொண்ட சிவபிரானுக்கும் வீரபத்திரர்க்கும் தொண்டு செய்து வந்தவர்," என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. உத்தராபதியார் சிறுத்தொண்டர் மாளிகையில் உபசரிக்கபட்டார்; படவே, அம்மாளிகை இருந்த இடமே நாளடைவில் உத்தராபதீசர் கோவிலாக மாறி இருக்கலாம். 'சிறுத்தொண்டர் வரலாற்றில் உள்ள தெய்வீ*கச் செயல் ஒழிந்த ஏனைய அனைத்தும் இங்ஙனம் கல்வெட்டுச் சான்று கொண்டனவாகக் காண்கின்றன. [1]
--- 
[1] . A.R.E. 1913. II.P.P. 87-88.

 

நெல்வேலி வென்ற நெடுமாறன்: 'சம்பந்தரால் சைவ மதம் புகுந்த நெடுமாறன் நாட்டை நன்னெறியில் ஆண்டுவருங்கால், வடபுலத்துப் பெருமன்னன் ஒருவன் கடல் போன்ற தானையுடன் வந்து பாண்டி நாட்டை எதிர்த்தான். இருதிறத்தார் படைகளும் திறம்படப் போரிட்டன. யானைகள் யானைகளுடன் போரிட்டன. குதிரைகள் குதிரைகளுடன் போரிட்டன. வீரர் வீரருடன் போரிட்டனர். வடபுலத்து முதல் மன்னன் படை நெல்வேலியில் சரிந்தது. பாண்டியன் வெற்றிபெற்றான். இச்செய்தி நெடுமாறன் புராணத்திற் சேக்கிழார் குறித்துள்ளார். இது சம்பந்தமான வரலாற்று உண்மை யாதென இங்குக் காண்போம்.

 

பல்லவர்-சாளுக்கியர் போர் I: 
சிறுத்தொண்டர் வாதாபியை வென்றபொழுது சாளுக்கியப் பேரரசனாக இருந்து அப்போரில் தோற்றவன் இரண்டாம் புலிகேசி என்பவன். அவன் மகன் முதலாம் விக்ரமாதித்தன் என்பவன். அவன் பல்லவனைப் பழிக்குப் பழி வாங்கச் சமயம் பார்த்திருந்தன். அவன் காலம் கி.பி. 654 - 680. அப்பொழுது பல்லவப் பேரரசனாக இருந்தவன் பரமேச்வரவர்மன் (கி.பி. 668-685). அதே காலத்திற் பாண்டிய நாட்டை ஆண்டவன் நெடுமாறன் (கி.பி. 640-680). முதல் விக்கிரமாதித்ன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்துக் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பரமேச்வரவர்மன் ஆந்திரநாட்டை நோக்கி ஓடிவிட்டான். தன்னை எதிர்ப்பவர் இல்லாததால், சாளுக்கியன் பல்லவப் பெருநாட்டின் தென் எல்லையான உறையூர் வரை சென்று அங்குத் தங்கி இருந்தான். அவன் அங்கிருந்த ஆண்டு கி.பி. 674 ஆகும். 

 

சாளுக்கியர் - பாண்டியர் போர்: 
பல்லவ நாட்டைக்கைப்பற்றி அதன் தென் எல்லையில் - பாண்டிய நாட்டின் வட எல்லையில் தங்கிய சாளுக்கியன், தெற்கே இருந்த பாண்டிய நாட்டையும் கைப்பற்ற எண்ணினான் போலும்! அவனது கடல் போன்ற படை பாண்டிய நாட்டைத் தாக்கியது. சிறந்த சிவபக்தனும் பெருவீரனுமான நெடுமாறன் தன் படைகளுடன் சாளுக்கியனை எதிர்த்தான். இருதிறத்தார்க்கும் கொடிய போர் நடந்தது. போர் நடந்த இடம் [2] நெல்வேலி என்பது. பல நாட்களாகப் பல இடங்களில் பல்லவப் படைகளுடன் போர் நடத்திய சாளுக்கியர் படை, பாண்டியர் படைக்கு ஆற்றாது முறிந்தது. இறுதியில் பாண்டியன் வெற்றி பெற்றான்.
------

 

[2] சோழ மண்டலத்துத் தென்கரைப்பனையூர் நாட்டு நெல்வேலி *நாட்டு நெல்வேலி - 276 of 1916

 

பல்லவர் - சாளுக்கியர் போர் II: 
பாண்டியர் - சாளுக்கியர் போர் நடந்து கொண்டிருந்த பொழுதோ அல்லது பாண்டியர் வெற்றிக்குப் பிறகோ அறியோம்; வடக்கு நோக்கி ஓடிய பல்லவன் பெருஞ் சேனையைத் திரட்டிக் கொண்டு வந்து சாளுக்கியனைத் திடீரெனத் தாக்கினான். போர் கடுமையாக நடந்தது. வெற்றி மகள் எவர் பக்கம் சேருவாளோ என்று ஐயுறத்தக்கவாறு ஒருகால் பல்லவர்க்கு வெற்றி, மற்றொருகால் சாளுக்கியர்க்கு வெற்றி கிடைத்து வந்தது. இறுதியில் பெருவள நல்லூர் என்ற இடத்தில் பல்லவன் வெற்றி பெற்றான். சாளுக்கியன் முற்றிலும் முறியடிக்கப்பட்டுக் கந்தையாடையுடன் தப்பி ஒடினான் என்று பரமேச்வரவர்மனது கூரம் பட்டயம் அறிவிக்கின்றது. 

 

நெல்வேலிப் போரில் நெடுமாறனுக்குத் துணையாக அவன் மகன் கோச்சடையன் பங்கெடுத்துக் கொண்டு 'ரண ரசிகன்' என்ற விக்கிரமாதித்தனை வென்றதால், தன்னை 'ரண தீரன்' என்று அழைத்துக்கொண்டான். இங்ஙனமே பரமேச்வரனுக்குத் துணை சென்ற அவன் மகனான இராச சிங்கன், தன்னை 'ரண ஜயன்' என்று அழைத்துக் கொண்டான்.

 

நெல்வேலிப் போரின் முக்கியத்துவம். விக்கிரமாதித்தன் முதலில் பரமேச்வரனைத் தோற்கடித்து அவனது பெருநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்; தெற்கே இருந்த பாண்டிய நாடும் அவன் படைக்கு இரையாகி இருக்குமாயின், விந்தமலை முதல் கன்னிமுனை வரை சாளுக்கியர் பேரரசு நிலைபெற்றுவிடும். சாளுக்கியன் நெடுமாறனைப்போல அழுத்தமான சைவன் என்று கூற முடியாது. ஆதலின் சாளுக்கியன் வெற்றி சைவத்தின் வெற்றியாகாது. சமணத்திலிருந்து பாண்டிய நாட்டை மீட்கச் சம்பந்தர் அரும்பாடுபட வேண்டியவரானார். அங்ஙனம் அரும்பாடுபட்டு நாடும் அரசனும் சைவமயமான பிறகு, இப்பெரும் போர் நிகழ்ந்தது. சைவத்தில் அழுத்தமான நெடுமாறன் வெற்றியே தமிழ்நாட்டில் சைவம் வளரத் துணை செய்யும். மேலும், நெடுமாறன் தமிழன். நெல்வேலிப்போரில் பாண்டியன் சாளுக்கியனை எதிர்த்திராவிடில், பின்னர் நடந்த பெருவள நல்லூர்ப் போரில் சாளுக்கியனைப் பல்லவன் வென்றிருத்தல் இயலாது. எங்ஙனம் பார்ப்பினும், நெல்வேலி வெற்றி தமிழ்நாட்டு உரிமைக்கும் சைவசமய வளர்ச்சிக்கும் உயிர் நாடி போன்றதாயிற்று. இந்த முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் நன்குணர்ந்து 'நெல்வேலி வென்ற நெடுமாறன்' என்று பாண்டியனை வழிவழியாகப் பாராட்டி வந்தனர் போலும். அப்பாராட்டின் பொருட்சிறப்பை நெல்வேலிப் போருக்கு ஏறத்தாழ 170 ஆண்டுகட்குப் பின் வந்த சுந்தரர் நன்குணர்ந்து, தமது திருத்தொண்டத் தொகையில் அவனது பக்திச் சிறப்பைப் பாராட்டாமல், 
"நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற 
நிறன்சிர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்,"
என்று பாண்டியனது போர்ச்சிறப்பு ஒன்றையே பாராட்டி ஏத்தெடுப்பாராயினர் என்பது இங்கு நுட்பமாக உணரத்தக்தது. 

 

சேக்கிழார் வரலாற்று உணர்ச்சி. இக்காலத்தில் கல்வெட்டு, பட்டயம் இவற்றைக் கொண்டே அறியத்தக்க (மேற்சொன்ன) பல்லவர் - சாளுக்கியர் போர்கள், பாண்டியர் - சாளுக்கியர் போர் ஆகியவற்றின் விவரங்களைச் சேக்கிழார் எங்ஙனம் சேகரித்தார்? அவர் பாண்டியர் - சாளுக்கியர் போர் விவரங்களை ஆறு பாக்களில் அழகாக விளக்கியுள்ளார். முதல் விக்கிரமாதித்தனைப் பாண்டியனும் எதிர்த்தான் என்பதனைச் சாளுக்கியர் பட்டயமே ஒப்புக்கொள்ளுகிறது. இங்ஙனம் பட்டயச் செய்திக்கும் இலக்கியச் செய்திக்கும் மிகவும் பொருத்தமாக நெல்வேலிப் போரை விளக்கமாகப் படம் பிடித்துத் தந்த சேக்கிழாரது வரலாற்று உணர்ச்சியை நாம் என்னென்று பாராட்டுவது! நம்பியாண்டார் நம்பி போரின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராகத் தெரியவில்லை. சேக்கிழார் அதன் சிறப்பை நன்கு உணர்ந்து, நெடுமாறர் புராணத்துள் அப்போர் ஒன்றையே பற்றிப் பாடியிருத்தல், அவரது அரசியல் அறிவு நுட்பத்தையும் முதல் நூல் ஆசிரியர் கருத்தை அறியும் ஆற்றலையும் அங்கைக் கனிபோல் அழகுறக் காட்டுவதாகும்.

 

பூசலார் வரலாறு. 'பூசலார் என்பவர் திருநின்றவூரினர்; பிராமணர். இவர் சிவன்கோவில் கட்டப் பொருள் தேட முயன்றார். பொருள் கிடைக்கவில்லை. உடனே மனத்தாற் கோவில் கட்ட முயன்று சில நாட்களிற் கட்டி முடித்தார். கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிப்பிட்டு விட்டார். அதே நாளில் தான் கட்டிய கயிலாசநாதர் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவதாகப் பல்லவ வேந்தனான இராச சிங்கன் தீர்மானித்தான். இறைவன் அரசன் கனவிற்சென்று பூசலார் விருப்பத்தைத் தெரிவித்து வேறொரு நாளைக் குறிக்குமாறு ஆணை இட்டான். அரசன் வியந்து திருநின்றவூருக்கு விரைந்து சென்று பூசலாரைச் சந்தித்து அவரது அகக்கோவிற் சிறப்பை அறிந்து மீண்டான். அப்பல்லவன் தான் கட்டிய கோவிலுக்குப் பெருஞ் செல்வத்தை வைத்தான்.' அது சேக்கிழார் கூறும் புராண விவரமாகும்.

 

அசரீரி கேட்டமை. இராச சிங்கன் கட்டிய கயிலாசநாதர் கோவில் வடமொழிக் கல்வெட்டு ஒன்றில், "சென்ற யுகத்தில் துஷ்யந்தன் அசரீரி கேட்டதாகப் படித்திருக்கிறோம். ஆனால் இந்தக் கொடிய கலியுகத்தில் இராச சிங்கன் அசரீரி கேட்டது வியப்பே' என்ற குறிப்பு காணப்படுகின்றது. இக் கல்வெட்டுச் செய்தியைக் கொண்டே பல்லவன் கனவு கண்டதாகச் சேக்கிழார் கூறியுள்ளார் என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.

 

பூசலார் கோவில். பூசலார் மனத்தில் எடுத்த கோவிலின் அடையாளமாகச் சிவன் கோவில் ஒன்று நின்றவூரில் இருக்கின்றது. அஃது ஆராய்ச்சிக்கு உரியது [3]. அக்கோவிலைச் சுற்றிலும் இராச சிங்கன் காலத்துக் கற்றுாண்கள் சிதைந்து காணப்படுகின்றன. கோவில் பல்லவர் காலத்துக் கோவில். அதன் வெளிமண்டபத்தில் இராசசிங்கன் உருவச்சிலை இருக்கின்றது. மூலத்தானத்தில் லிங்கத்திற்கு எதிரில் பூசலார் உருவச் சிலை இருக்கின்றது. கோவிலில் உள்ள லிங்கத்திற்கு 'மனக்கோவில் கொண்டார்' என்னும் பெயர் வழங்குகிறது.
--------

[3] நான் அதனை நேரிற் சென்று கவனித்தேன்.

 

கச்சிக் கற்றளி. காஞ்சிபுரத்தில் முதற் கற்கோவிலாகக் காட்சியளித்தது இராச சிங்கன் கட்டிய கயிலாசநாதர் கோவிலே ஆகும். அஃது அழிவுற்ற இந்நிலையிலும் பார்ப்பவர் வியக்கத்தக்கவாறு காட்சி அளிக்கின்றது எனின், இராச சிங்கன் காலத்தில் எவ்வளவு சீரும் சிறப்பும் பெற்றதாக இருந்திருத்தல் வேண்டும்! அ*க்கோவிலுக்கு இராச சிங்கன் பெருஞ் செல்வம் வைத்திருந்தான் என்று சேக்கிழார் கூறியுள்ளார். அவர் கூற்று உண்மை என்பதைச் சாளுக்கியர் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

 

1. "இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றிய பிறகு, இராச சிம்மேச்வரத்தின் (கயிலாச நாதர் கோவிலின்) பெருஞ் செல்வத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தான். அதனை அக் கடவுளுக்கே விட்டு மகிழ்ந்தான்" என்று இரண்டாம் விக்கிரமாதித்தனது (கயிலாசநாதர் கோவிலில் உள்ள) கன்னடக் கல்வெட்டு அறிவிக்கிறது. 
2. "காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிர மாதித்தன் இராச சிம்மேச்வரத்துப் பெருஞ் செல்வத்தைக் கண்டு வியந்தான்; அதனை அக்கோவிலுக்கே விட்டு மகிழ்ந்தான்" என்று அவனது தேர்ந்தூர்ப் பட்டயம் குறிக்கின்றது. : -
3. "காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தன் இராச சிம்மேச்வரத்தின் பெருஞ் செல்வத்தைக் கைக்கொள்ளாது, அங்குள்ள விக்கிரகங்களைப் பொன்மயமாக்கி மீண்டான்" என்று வக்கலேரிப் பட்டயம் கூறுகிறது. 

 

வியப்பினும் வியப்பு. இத்தகைய பெருஞ்செல்வம் கொண்டு வியத்தகு முறையில் சிறப்புற்று விளங்கிய கற்றளி, முதற் குலோத்துங்கன் காலத்தில் தன் சிறப்பை இழந்தது. அக்கோவில் மூடப்பட்டது. அதற்குரிய நிலங்கள் விற்கபட்டன. கோவில் திருச்சுற்றுகள், திருமடைவிளாகம் முதலியன பக்கத்தில் உள்ள அனைய பதங்காவுடையார் கோவிலுக்குத் தரப்பட்டன. இவ்வாறு சிறுமையுற்று மூடப்பட்ட கோவில் ஏறக்குறைய 200 ஆண்டுகள் கழிந்த பிறகே விசயநகர ஆட்சியின் போது திறக்கப்பட்டதாக அக்கோவில் கல்வெட்டே கூறுகின்றது. எனவே, சேக்கிழார் காலத்தில் அக்கோவில் மூடப்பட்டுக் கிடந்தது. திருச்சுற்று, திருமடை விளாகம் முதலியன இன்றி இழிநிலையில் இருந்தது என்பது தெளிவு.அங்ங்னம் இருந்தும், கால உணர்ச்சியும் வரலாற்று நுட்பமும் உணர்ந்த சேக்கிழார், அது கட்டப்பட்டபோது இருந்த சிறப்பைக் கல்வெட்டுகளைக் கொண்டு ஆராய்ந்தும், காஞ்சியில் இருந்த சான்றோர் வாயிலாகக் கேட்டும் உண்மையை உணர்ந்த பிறகே,
"காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற 
மாடெலாம் சிவனுக் காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் – செய்தான்" 
என்று தெளிவாக அதன் சிறப்பினைத் தாம் நேரிற் கண்டார்போல அழுகுபடக் கூறியுள்ளார். இங்ங்ணம் அவர் வரலாற்று உண்மை உணர்ந்து பாடியிருத்தல் வியப்பினும் வியப்பே அன்றோ?

 

கழற் சிங்கன். 'இவன் மூன்றாம் நந்திவர்மன்' என்று அறிஞர் ஆராய்ந்து கூறியிருத்தல் பொருத்தமானது [4] இவனைப்பற்றிச் சேக்கிழார் கூறும் செய்திகள் கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் நந்திக் கலம்பகத்தையும் கொண்டே கூறத் தக்கவையாக இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக இங்குக் காண்போம். 
--------

 

[4] இதுபற்றிய விளக்கம் எனது "பெரியபுராண ஆராய்ச்சி" என்னும் பெரிய நூலிற் காண்க.

1. இவன், "சிவனை வழிபட்ட சிறந்த பக்தன்" என்பது பெரிய புராணக் கூற்று. இவன் 'சிவனை முழுதும் மறவாத சிந்தையன்' என்று நந்திக்கலம்பகம் நவில்கின்றது. இவன். "நெற்றியில் நீறு தரித்தவன், பல சிவன் கோவில்கட்குப் 'பல திருப்பணிகள் செய்தவன்" என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன.
2. "இவன் வடபுலத்தைச் சிவபிரான் அருளால் வென்றான்" என்பது பெரியபுராணச் செய்தி. இதனை நந்திக்கலம்பகமும் ஒப்புகிறது. இவனது வேலூர்ப் பாளையப் பட்டயமும் இதனைக் குறிப்பாக உணர்த்துகின்றது.
3. இவன், "நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தான்" என்பது சேக்கிழார் வாக்கு. "நந்திவர்மன் (கழற் சிங்கன்) ஆட்சிக் காலத்தில் - வசந்தகாலம் மிகுதியாக விளக்க முற்றது போலவும், உயர்குடி மக்கள் நற்பண்புகளுடன் விளங்கினாற் போலவும், பெண் மணிகள் கற்பரசிகளாகத் திகழ்ந்தாற் போலவும், செல்வர் ஈகைக் குணத்துடன் வாழ்ந்தார் போலவும், அறிஞர் அடக்கத்துடன் விளங்கினார் போலவும், திருக்குளங்கள் தாமரையுடன் திகழ்ந்தார் போலவும் - நந்திவர்மன் தன் குடிமக்களுடன் விளக்க முற்றிருந்தான்" என்பது வேலூர்ப் பாளையப் பட்டயக் கூற்றாகும். 
4. இவன், "பல கோவில்கட்குத் திருப்பணிகள் செய்தவன்" என்பது சேக்கிழார் கூற்று. இதனையே திருவொற்றியூர், திருவதிகை, திருவிடைமருதூர்க் கல்வெட்டுகளும் வேலூர்ப்பாளையப் பட்டயமும் உறுதிப் படுத்துகின்றன.
5. இவனுக்கு உரிமை மெல்லியலார் (சிலர் அல்லது பலர்) இருந்தனர் என்பது சேக்கிழார் வாக்கு.
இவனுக்கு இரட்ட அரசனான அமோகவர்ஷ நிருபதுங்கன் மகளான சங்கா என்பவள் பட்டத்தரசியாவள்: சிவபக்தி மேற்கொண்டு சிவப்பணிகள் செய்து வந்த மாறன் பாவை என்பவள் ஒருமனைவி என்று பாகூர்ப்பட்டயமும் கல்வெட்டுகளும் கூறுகின்றன.
6. பட்டத்தரசி 'உரை சிறந்து உயர்ந்தவள்’ என்பது பெரிய புராணம். இதனை விளக்க வந்ததுபோல் உள்ள பாகூர்ப்பட்டிய அடிகளைக் காண்க. 'திருமாலுக்கு மனைவியாக அமைந்த இலக்குமி போல் இராஷ்டரகூடம் - குடும்பத்திற் பிறந்த கங்கா என்ற மெல்லியலாள் நந்திவர்ன்மனுக்கு மனைவியாக வாய்த்தாள். அவள் பொறுமையில் நில மகளை ஒத்தவள். குடிமக்களால் தாயாகப் பாராட்டப்பட்டவள். அரசனது புண்ணியமே உருவெடுத்தாற்போல விளங்கினவள் அவள் பேரழகி. அறிவு நுட்பம் வாயந்தவள். பல கலைகளிலும் வல்லவள்." 

 

இந்த விளக்கத்தைப் படித்த பிறகுதான் உரை சிறந்து" என்று சேக்கிழார் தொடர்க்குப் பொருட் சிறப்பு உண்டாகிறது. சேக்கிழார். இத்தகைய தொடரை வேறு பெண்மணிகளைப் பற்றிக் கூறுமிடங்களிற குறிக்கவில்லை. இங்குமட்டும் அவர் குறித்திருத்தலும், அதற்கேற்பப் பாகூர்ப்பட்டய விளக்கம் இருத்தலும், மேற்சொன்னவை அனைத்தும் கல்வெட்டுகளைக் கொண்டே நிரூபிக்க வேண்டி இருத்தலும் நோக்க. சேக்கிழார் பாகூர்ப் பட்டயத்தையும் பார்த்திருப்பார் போலும் என்பது எண்ணி வேண்டுவதாகிறது.

 

நரசிங்க முனையரையர், முனையனையர் அல்லது 'முனையதரையர்' என்பவர் திருமுனிப்பாடி நாடாண்டவர் இவர்கள் முதலிற் பல்லவருக்கு அடங்கியும் பிறகு சோழர்க்கு அடங்கியும் இருக்கலானார் ஆவர். இம்மரபினரைப் பற்றிய கல்வெட்டுகளே ஆகும். இதுவரை கிடைத்த கல்வெட்டுகளிற் பழமையானது சுந்தரர் காலத்துக்குப் (கி.பி 840-865) பதினைந்து ஆண்டுகட்குப் (கி.பி.880) பிற்பட்டதாகும் அதன் 'முனைப்போரையர் மகன் முனையர்கோன் இளவரையன் என்பது காணப்படுகிறது. சுந்தாரை வளர்த்த நாசிங்க முனையரையர் இக்கல்வெட்டிற் குறிக்கப்பட்ட முனைப்பேரையர் ஆகலாம் என்று கோடல் பொருத்தமானது.

 

முனையதரையர். 1. "பல்லவப் பேரரசின் அழிவுக் காலத்தில் முனையதரையன் அபராசிதன் குலமாணிக்கப் பெருமானார்' என்று ஒருவன் இருந்தான்' என்று திருவாரூர்க் கல்வெட்டு குறிக்கிறது. -
2. வீர ராசேந்திரன் ஆட்சியில் வீர ராசேந்திர முனையதரையன்' என்பவன் இருந்தான். 
3. விக்கிரமசோழன் ஆட்சியில், 'முனையதரையன் ஒருவன் அமைச்சனாகவும் சேனைத்தலைவனாகவும் இருந்தான் என்று விக்கிரம சோழன் உலா உரைக்கின்றது 
இங்ஙனம் மும்முனையதரையர் மரபினர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவருள் ஒருவரே சுந்தரரை வளர்த்தவரும் 63 நாயன்மாருள் ஒருவருமாகிய நரசிங்க முனையரையர் என்பவர். அவரைப் பற்றிய பல குறிப்புகளைச் சேக்கிழார் மேற்சொன்ன இறுதி முனையரையன் பால் கேட்டறிந்திருக்கலாம். பொறுப்புள்ள அம்மரபினரைக் கேட்டு அந்நாயனார் புராணம் பாடுதலே சிறப்புடைத்தன்றோ? 

 

திருவாரூர்க் கல்வெட்டு. (1) "சுந்தரர் தாயாரான இசைஞானியார் திருவாரூரிற் பிறந்தவர் இசைஞானியார், திருவாரூர் – ஞான சிவாசாரியார் மகளார் ஆவர். அநபாயன் இசைஞானியார், சடையனார், சுந்தரர் என்ற மூவர் படிமங்களையும் ஆரூர்க் கோவிலில் எழுந்தருளச் செய்தான்." என்பது சேக்கிழார் காலத்துத் திருவாரூர்க் கல்வெட்டுச் செய்தியாகும். இக்குறிப்பை நோக்க, சுந்தரர் பிறந்த சிவாசாரியர் மரபினர் சேக்கிழார் - காலத்தில் திருவாரூரில் இருந்தனர் என்பதை நம்பலாம். சேக்கிழார் அம்மரபினர் வாயிலாக, (1): சுந்தரர் முனையரையரால் வளர்க்கப்பட்டமை, (2) சுந்தரர் - பரவையார் திருமணம், (3) சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடிய சந்தர்ப்பம், (4) பரவையார் ஊடலைத் தீர்க்க இறைவன் தூது சென்றமை போன்ற செய்திகளை - நூல்களைக் கொண்டு அறியப்படாத இத்தகைய செய்திகளைக் கேட்டறிந்திருக்கலாம் என்று கொள்ளுதல் பெரிதும் பொருத்தமே ஆகும். 

 

சிற்றரசரான நரசிங்க முனையரையர் ஆதிசைவராகிய சுந்தரரை மகனாக ஏற்று வளர்த்து வந்தார் என்பதை நமக்கு முதன் முதல் அறிவிப்பவர் சேக்கிழாரே ஆவர். அவர் அதனுடன் விட்டு விடவில்லை. சுந்தரர் திருமணத்திற்கு ஒலை போக்கிய பொழுது,
"கொற்றவர் திருவிற் கேற்பக் குறித்து நாள் இலை விட்டார்"
என்று கூறினர் பரவையாரை மணந்து சுந்தரர். திருக்கோவிற்குச் சென்ற பொழுது அரசகுமாரனைப் போல ஊர்வலச் சிறப்புடன் சென்றார் என்றும் கூறினர். மேலும், பல இடங்களில் சுந்தரரை 'நாவலூர் மன்னன்', 'நாவலூர்க் கோன்' என்றும் சுட்டியுள்ளார். இங்ஙனம் பல இடங்களிலும், சுந்தரர் அரசர் செல்வாக்குப் பெற்றவர் என்பதைச் சேக்கிழார் வற்புறுத்திச் சென்றமைக்குத் தக்க ஆதாரம் இருக்க வேண்டும் அல்லவா? சேக்கிழார், நாம் மேலே குறிப்பிட்ட முனையரையர் மரபினரிடமும் திருவாரூர்ச் சிவாசாரியர் மரபினிரிடமும் கேட்டறிந்த செய்திகளின் வன்மையாற்றான் இங்ங்னம் வற்புறுத்திச் சென்றார் என்று கொள்வதே தக்கது. -

 

மதுச் சோழன் வரலாறு. பெரிய புராணம் - நகரச் சிறப்பில் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட மதுச்சோழன் வரலாறு கூறப்பட்டுள்ளது. 'மதுச்சோழன். தன் மகனது தேர்க்காலில் அகப்பட்டு இறந்த பசுக்கன்றுக்காக, அத்தனி மகனையே தேர்க்காலில் இட்டுக்கொன்றான் என்பது கதைச் சுருக்கம். இந்தச் சுருக்கமே. அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்ட சிலப்பதிகாரத்துள் முதன்முதலாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வரலாறு பிற்பட்ட நூற்றாண்டுகளில் எழுந்த திருமுறைகளிற் குறிக்கப்பட வில்லை. வேறு நூல்களிலும் சிறப்பாகக் காணப்படவில்லை. இவ்வரலாற்றின் முழு நிகழ்ச்சிகளை அறிய இலக்கியச் சான்றில்லை. இங்ஙனம் இருப்பச் சேக்கிழார் இவ்வரலாறு சம்பந்தமான பல விவரங்களைத் தெளிவுற முதன்முறையாகத் தந்துள்ளார். அவை (1) அரசன் இறந்த கன்றுக்காகத் தன் மகனைத் தேர்க்காலிலிட்டுக் கொல்லும்படி அமைச்சனை ஏவுதல், (2) அவன் அதனை செய்ய இசையாது தற்கொலை செய்துகொள்ளல். (3) அரசனே தன் மகனைக் கொன்ற பொழுது சிவனார் அருளால் இறந்த கன்று, அரசகுமரன், அமைச்சன் ஆகிய மூவரும் உயர் பெற்றெழுதல் என்பன இக்குறிப்புகள் சேக்கிழார்க்கு எங்ஙனம் கிடைத்தன?

 

திருவாரூர்க் கல்வெட்டு. திருவாரூர் வீதிவிடங்கல் பெருமான் திருக்கோவில் இரண்டாம் திருச்சுற்றின் சுவரில் கல்வெட்டு காணப்படுகிறது. அநபாயன் தந்தையான விக்கிரமசோழனது இந்த ஆட்சியாண்டில் (கி.பி.1123)ல் வெட்டப்பட்டது. அது திருவாரூர் வீதி விடங்கப் பெருமானே மதுச்சோழன் வரலாற்றைக் கூறுவது போல் வெட்டப்பட்டுள்ளது.

 

"மதுச்சோழன்மகன் பெயர் 'ப்ரியவ்ரதன் அமைச்சன் 'இங்கணாட்டுப் பாலையூர் உடையான் உபயகுலாமலன் என்பவன். அவன் அரசனது கட்டளையை நிறைவேற்ற மனம் வராது தற்கொலை செய்து கொண்டான். இறுதியில் அவ்வமைச்சன், பசுக்கன்று, அரசிளங்குமரன் ஆகிய மூவரும் சிவபிரான் அருளால் உயிர் பெற்று எழுந்தனர். மனு தன் மகனை அரசனாக்கி, அமைச்சன் மகனான சூரியன் என்பவனை அம்மகனுக்கு அமைச்சனாக்கித் தானும் உயிர் பெற்றெழுந்த அமைச்சனும் தவநிலை மேற்கொண்டனர். மனு, தன் அமைச்சனுக்குப் பரிசாகத் தந்த திருவாரூரில் இருந்த மாளிகை ஒன்று. அவன் மரபில் வந்தவனும் விக்கிரமசோழனது அமைச்சனுமான பாலையூர் உடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்கசோழ மகாபலி பாணராயனுக்கு உரியது. அது பழுதுபட்டுக் கிடந்ததால், அதனைப் பழையபடி மாளிகையாக்கிக் குடிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது." இந்த விவரங்கள் எல்லாம் சிவபெருமான் திருவாரூர் மாகேச்வராக்கும் கோவில் ஆதிசைவர்க்கும் அருளியபடி கல்லில் வெட்டப்பட்டனவாம். -

 

சேக்கிழார்க்கு ஏறத்தாழ 12 ஆண்டுகட்கு முற்பட்ட இக்கல்வெட்டு மிகவும் முக்கியமானது. இதனால், விக்கிரம சோழன் காலத்தில், மதுச்சோழன் வரலாறு திருவாரூர் மக்கள் அளவிலேனும் தெரிந்திருந்தது என்னலாம். கல்வெட்டுச் செய்திகள் பழைய காலத்தன. ஆயினும், அதிற் கூறப்பட்டுள்ள 'ப்ரியவ்ரதன் போன்ற பெயர்கள் பிற்காலத்தனவாகும். இந்த உண்மையை உணர்ந்தவர் சேக்கிழார். அதனாற்றான். இக்கல்வெட்டிலிருந்து தமக்கு வேண்டிய முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும்.எடுத்துக் கொண்டாரே யன்றிப் பெயர்களை எடுத்துக் கொள்ளவில்லை. சேக்கிழார் இக்கல்வெட்டைப் படித்திராவிடில், மதுச்சோழன் வரலாற்றை இவ்வளவு விளக்கமாகப் பாடியிருந்தல் இயலாதென்னலாம்.

முடிவுரை: இங்ஙனம் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகள் அனைத்தையும் இலக்கியமும் கல்வெட்டும், நம்பத்தக்க செவிவழிச் செய்தியும் கொண்டு சேக்கிழார் பாடியுள்ளார் என்பதனை ஒவ்வொரு நாயனார் வரலாறாக எடுத்துக் கொண்டு சான்றுகள் காட்டிக் கொண்டே போகலாம். அவ்விரிவிற்கு இஃது இடமன்று. சேக்கிழார் கூறும் பேரரசர், சிற்றரசர் பற்றிய குறிப்புகள், நாயன்மார் காலத்தில் நடந்த பல்லவர் - பாண்டியர் போர், பாண்டியர்-சாளுக்கியர் போர், பல்லவர் -இரட்டர் போர், பல்லவர்- சோழ பாண்டியர் போர் என்பனவும், அப்பர் - சம்பந்தர் காலத்து மிழலைப் பஞ்சம், பூசலார் காலத்துப்பல்லவ நாட்டுப்பஞ்சம், கோட்புலியார் (சுந்தரர்) காலத்துத் தமிழ் நாட்டுப் பஞ்சம் என்பனவும் வரலாற்றுப் புகழ் பெற்றவை. அவை பற்றிச் சேக்கிழார் கூறியுள்ள அனைத்தும் உண்மை என்பதைப் பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் கொண்டு மெய்ப்பிக்கலாம். 

 

இங்ஙனமே நாயன்மார் காலத்துக் கடல் வாணிகம். மறையவர் சிற்றூர்கள் (பிரம்மதேயங்கள்), கிராம நீதி மன்றங்கள், கணவன், அரசன் ஆகிய இவருடன் முறையே மனைவி, மெய்காப்பாளர் இறத்தல், நாயன்மார் காலத்தில் வாழ்ந்த பலவகைச் சிவனடியார், அவர்தம் இலக்கணங்கள் என்பனவும் வரலாற்றுச் சிறப்புடைய பிறவும் இலக்கியமும் கல்வெட்டுகளும் கொண்டு மெய்ப்பிக்கலாம் [5]."
----

[5]. இவை பற்றிய விரிவை என்து"பெரிய புராண ஆராய்ச்சி" என்னும் பெரிய - நூலிற் காண்க. 
------ 

 

அதிகம் அறைவதேன்? சேக்கிழார், சிறுத் தொண்டர் வரலாற்றில் வாதாபிப்போரைக் குறித்திராவிடில், நாம், சம்பந்தர் காலம் அறிந்திருந்தால் இயலாது. அங்ஙனமே, பல்லவன் குணபர ஈச்வரம் எடுத்தான் என்பதைச் சேக்கிழார் குறியாதிருப்பின், அப்பர் காலத்துப் பல்லவன் மகேந்திரவர்மனே என்பதை உறுதி செய்திருக்க முடியாது. சேக்கிழார் சிறந்த வரலாற்று உணர்ச்சி கொண்ட பெரும் புலவர் என்பதை வரலாற்று உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த இரண்டே போதும். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் இத்தகைய வரலாற்று உணர்ச்சியுடைய பெரும் புலவரைப் பெற்றிருந்த தமிழகத்திற்கு நமது வணக்கம் உரியதாகுக.

 

9. சேக்கிழார் பெரும் புலமை

 

பெரியபுராணம் - சுந்தரர் புராணம். நாயன்மார் அறுபத்து மூவர் வரலாறுகள் பெரும்பாலும் தனித்தனியானவை ஒன்றேடொன்று தொடர்புடையன அல்ல. ஆயின், அப்பர் சம்பந்தர் சமகாலத்தவர் பதினொருவர் சந்தரர் சமகாலத்தவர் பதின்மூவர். ஏனையோர் அனைவரும் தனித்தனிக் காலத்தவர் என்று கொள்ளலாம். தம்மை ஒழிந்த 62 நாயன்மார் பெயர்களையும் சிலருடைய சிறப்பியல்புகளையும் தொகுத்துப் பாடித் திருத்தொண்டர் பெயர்ப் பட்டியலைத் தயாரித்துத் தந்தவர் சுந்தரர். சுந்தரர் வரலாறே முக்கியமானது. 

 

(1) அவரது வரலாற்று நிகழ்ச்சிகளில், ஒன்று அவர் பரவையாரை மணந்தமை. அவர் அவ்வம்மையாரை மணந்த பிறகு அக்கோலத்துடன் திருவாரூர் வீதிவிடங்கப் பெருமான் கோவிலுக்கு அரச மரியாதையுடன் ஊர்வலமாகச் சென்றார். தேவாசிரிய மண்டபத்திற் குழுமி இருந்த நாயன்மார்களைக் கண்டார். அவர்களைப் பாட விழைந்தார். இறைவன் ஆணையும் பிறந்தது. சுந்தரர், "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்." என்று தொடங்கித் தனியடியார் அறுபத்து, மூவரையும் தொகை அடியார் ஒன்பதின்மரையும் பாராட்டித் திருதொண்டத் தொகை பாடினார். இது சுந்தரர் வாழ்க்கையிற் சிறப்புடைய நிகழ்ச்சியாகும். 

 

(2) பிறகு சுந்தரர் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவொற்றியூரை அடைந்தார் சங்கிலியாரை மணந்தார். கண் இழந்து தல யாத்திரை செய்து கண் பெற்றார் திருவாரூரை அடைந்து பரவையாரைச் சமாதானப்படுத்தி வாழ்ந்தார் ஏயர்கோன் கலிக்காமனார் தம்மிடம் கொண்டிருந்த வெறுப்டை விருப்பாக மாற்றினார். 

 

(3) சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் நட்பைப் பெறத் திருவாரூரை அடைந்தார். அவருடன் பல தலங்களைத் தரிசித்தார். சுந்தரர் அவருடன் கூடிச் சேரநாட்டை அடைந்தார்; அங்குள்ள சிவத் தலங்களைத் தரிசித்து. மீண்டார். 

 

(4) இறுதியிற் சுந்தரர் சேரநாடு அடைந்து திருவஞ்சைக் களத்திலிருந்து வெள்ளானை மீது புறப்பட்டுக் கயிலை சென்றார் சேரமான் குதிரை மீது அவரைப் பின் தொடர்ந்தார். சுந்தரர் வாழ்க்கைப் பிரிவுகளாகிய இந்த நான்காம் நூலின் முதலில் (1) தடுத்தாட் கொண்ட புராணம் என்ற பகுதியிலும், நூலின் இடையில் (2) ஏயர்கோன் கலிக்காம் நாயனார் புராணம் என்ற தலைப்பிலும், (3) சேரமான் பெருமாள் புராணம் என்ற வரலாற்றிலும், நூலின் இறுதியில் (4) வெள்ளானைச் சருக்கம் என்ற தலைப்பிலும் முறையே கூறப்பட்டுள்ளன. சேக்கிழார். சுந்தரர் புராணத்தை இங்ஙனம் நூலின் முதல், இடை, கடை என்னும் மூன்று பகுதிகளிலும், அவராற் பாராட்டப் பெற்ற நாயன்மார் வரலாறுகளை இந்நான்கு பகுதிகட்கும் இடையிடையே வைத்தும் பாடியிருத்தல். சுந்தரர் புராணமே - திருத்தொண்டர் புராணம் என்ற கொள்கையை வற்புறுத்துவதாகும்.

 

பெரியபுராணத்திற்குத் 'திருத்தொண்டர் புராணம்' என்பது சேக்கிழார் இட்ட பெயர் ஆகும். திருத்தொண்டர் புராணம், சுந்தரர் புராணம் ஆயின், 'திருத்தொண்டர்' என்ற பெயர் சுந்தரர்க்கு உரியதாதல் வேண்டும். இங்ஙனம் சேக்கிழார் உரிமையாக்கினரா? ஆம். அவர், தடுத்தாட்கொண்ட புராணத்தில் சுந்தரரை. "சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி'என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். எனவே, திருத்தொண்டர் புராணம் சுந்தரர் - புராணமே என்பது இதனாலும் அறியப்படும்.

 

பெரிய புராணம் பெருங்காவியமா? பெருங்காவியத்திற்குச் சிறப்பு இலக்கணங்கள் சில உண்டு.
1. நூல் முழுவதும் சிறப்புடைத் தலைவன் ஒருவனைப் பற்றியே பேசப்படல் வேண்டும்.
2. பெருங்காவியம் சருக்கம், படலம், இலம்பகம் என்ற பிரிவுகளில் ஒன்றைப் பெற்றதாக விளக்குதல் வேண்டும். 
3. அஃது அறம், பொருள். இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளை உணர்த்துவதாக இருத்தல் வேண்டும்.
4. மலை, கடல், நாடு, நகர், பருவகாலங்கள் (பெரும் பொழுதுகள்) சிறு பொழுதுகள் ஆகியவை பேசப் பெற்றனவாக இருத்தல் வேண்டும்.
5. பலவகை விளையாட்டுகள் பிள்ளை வளர்ச்சி முதலியன கூறப்பட்டிருத்தல் வேண்டும். 
இவை அனைத்தும் பெரிய புராணத்துள் இடம் பெற்றுள்ளனவா?

 

1. பெரிய புராணம் முழுவதும் சுந்தரர் வரலாறே பேசப்பட்டுள்ளது என்பது மேலே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டதன்றோ? 
2. சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகை பதினொரு செய்யுட்களைக் கொண்டது. சேக்கிழார் அந்தப் பதினொரு செய்யுட்களையும் பதினொரு சருக்கங்களாக அமைத்துக் கொண்டார். ஒவ்வொரு செய்யுளின் தொடக்கத் தொடரையே சருக்கத்தின் பெயராக அமைத்துக் கொண்டார். அச்சருக்கங்களாவன: 
செய்யுள் முதல் வரி                                                                                                                                          சருக்கத்தின் பெயர்
1. தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்                                               தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
2. இலைமலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்-கடியேன்                                                           இலைமலிந்த சருக்கம்
3. மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்                                                     மும்மையால் உலகாண்ட சருக்கம்
4. திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட                                                          திருநின்ற சருக்கம்
5. வம்புறா வரிவண்டு மணம் நாற மலரும்                                                                           வம்புறா வரிவண்டுச் சருக்கம்
6. வார்கொண்டவன                                                                                                                             வார்கொண்ட வன சருக்கம்
7. பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்                                                           பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்
8. கறைக்கண்டன் கழலடியே                                                                                                       கறைக்கண்டன் சருக்கம்
9. கடல் சூழ்ந்த உலகெல்லாம்                                                                                                        கடல் சூழ்ந்த சருக்கம்
10. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்                                                  பத்தராய்ப் பணிவார் சருக்கம்
11. மன்னியசிர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்                                                                மன்னியசிர்ச் சருக்கம்

 

இந்த ஒவ்வொரு சருக்க முடிவிலும் புராணத் தலைவராகிய சுந்தரர் வரலாறு மறவாதிருத்தற்காக அவரைப் பற்றிய செய்யுள் ஒன்றைச் சேக்கிழார் பாடியிருத்தல் கூர்ந்து கவனிக்கத் தக்கது. இங்ஙனம் எல்லாச் சருக்கங்களும் சுந்தரர் வரலாற்றால் இணைப்புண்டு ஒரு தலைவனைப் பற்றியே பேசும் பெருங்காவியமாகப் பெரிய புராணம் திகழ்கின்றது. சேக்கிழார், இக்கருத்துக் கொண்டே சங்கிலி கோத்தாற் போலச் சுந்தரர் வரலாற்றை ஒவ்வொரு சருக்கத்துடனும் இணைத்திருத்தல் கண்டு வியக்கத்தக்க ஒன்றாகும்.

 

3. நாற்பொருள். சுந்தரர் வரலாற்றிலும் அவராற் சுட்டப் பெற்ற நாயன்மார் வரலாறுகளிலும் சத்துப் பொருள்களாக விளங்குபவை அறம், பொருள், இன்பம், வீடேயாகும். 

 

4. மலை, கடல் முதலியன. மலைநாட்டு வளம் கண்ணப்பர் புராணத்துள் பண்படப் பேசப்பட்டுள்ளது. கடல் வளம் அதிபத்தர் புராணத்துள் கூறப்பட்டுள்ளது. திருக்குறிப்புத் தொண்டர் புராணம், சேரமான் பெருமாள் புராணம் முதலிய பல புராணங்களில் சேர, சோழ, பாண்டிய, கொங்கு நாட்டு வளங்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. நகரச்சிறப்பில் திருவாரூரும், திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள் காஞ்சியும், பிற இடங்களிற் பிற நகரங்களும் (மதுரை முதலிய பழம்பதிகள்) பாராட்டப்பட்டுள்ளன. பெரும் பொழுதுகளான கார்காலம். குளிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக்காலம், இளவேனிற் காலம், முதுவேனிற்காலம் என்பன. அப்பர். சம்பந்தர், சுந்தரர் வரலாறுகளிற் குறிக்கப்பட்டுள்ளன. இங்ஙனமே காலை, நண்பகல், மாலை முதலிய சிறு பொழுதுகள் ஆறும் ஆங்காங்குப் பேசப்பட்டிருக்-கின்றன.

 

5. பலவகை விளையாட்டுகள். பெண் மக்கள் விளையாடும் பந்தாட்டம், அம்மானை, கழங்கு, ஊசல், சிற்றில் அமைத்து விளையாடல் போன்ற பலவகை விளையாட்டுகள், மானக்கஞ்சாறர் புராணத்தும் சம்பந்தர் புராணத்தும் காணலாம். ஆண் மக்கள் விளையாட்டுகள் கண்ணப்பர், திருநாளைப் போவார், சம்பந்தர் புராணங்களிற் கண்டு களிக்கலாம். 

 

பிள்ளை வளர்ச்சி. (1) ஆண்பால் வளர்ச்சியைச் சம்பந்தர். கண்ணப்பர் புராணங்களிற் காணலாம். (2) பெண் பால் வளர்ச்சியைச் சம்பந்தர், காரைக்கால் அம்மையார், மானக்கஞ்சாறர் புராணங்களிற் கண்டு இன்புறலாம். இவ்வளர்ச்சி முறைகளை 'பிள்ளைத் தமிழ்' நூல்களிற் கூறப்படும் இலக்கண முறைக்கு ஒத்திருந்தல் படித்து இன்புறத்தக்கது. 

 

இங்ஙனம் ஒரு பெருங்காவியத்திற்கு உரிய இலக்கணங்களை எல்லாம் தன் மாட்டுச் சிறக்கப்பெற்று விளங்குவது சேக்கிழார் பாடியருளிய பெரிய புராணம் ஆதலின். அப்பெருநூல் பெருங்காவியம் என்று தாராளமாகச் சொல்லலாம். இதுவே சேக்கிழார் கருத்துமாகும் என்பதற்கு அவரது பாயிரம் சான்றாதல் காணலாம். சேக்கிழார், 'எடுக்கும் மாக்கதை' என்ற பெரிய புராணத்தைக் குறிக்கின்றார். இதனால் அஃது உதயணன் வரலாறு உரைக்கும் 'பெருங்கதை' என்ற 'கொங்கு வேள் மாக்கதை' போன்றதொரு காவியம் என்பது பொருளாகுமன்றோ? 

 

சேக்கிழார் பல்கலைப் புலவர். இங்ஙனம் பெரியதொரு காவியம் பாடிய சேக்கிழார் பெரும்புலவர் என்பதை அவரது பெருங்காவியம் நன்கு விளக்கி நிற்கின்றது. அவர் (1) தமிழ் நூல்களில் நிரம்பிய புலமை உடையவராக விளங்கினார். (2) சைவசமய நூல்களில் சிறந்த புலமை பெற்றவராகத் திகழ்ந்தார் நாகரிகக் கலைகள் எனப்படும் வானக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, இசைக்கலை, உடல்நூற்கலை, உளநூற்கலை, மருத்துவக்கலை முதலியவற்றிற் சிறந்து விளங்கினார். இப்பலவகைக் கலைப் புலமையையும் விளக்க வகைக்கொரு சான்று இங்குக் காட்டுவோம்.

 

(1) தமிழ் நூற் புலமை 

 

பெருங்காவிய நிலைக்கு ஒத்து விளங்கும் பெரிய புராணத்தைப் பாடிய ஆசிரியர் சேக்கிழார் பெருமான் தமக்குக் காலத்தால் முற்பட்ட புறநானூறு, அகநானூறு. நற்றினை, ஐங்குறுநூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி என்ற பழைய இலக்கியங்களை அழுத்தமாகப் படித்தவர் என்பது அவரது காவியத்தால் நன்கு புலனாகிறது. அப்பெரியார் மேற்சொன்ன நூற் கருத்துக்களை எங்ஙனம் தமது நூலுள் எடுத்து ஆண்டுள்ளனர் என்பதைக் கீழே காண்க. 

 

புறநானூறு. சேக்கிழார் திருநகரச் சிறப்பில் 'அரசன் தன் நாட்டு உயிர்கட்குக் கண்ணும் ஆவியும் போன்றவன் (செ. 14) என்றும் புகழ்ச்சோழர் புராணத்தில் 'மன்னவன் தன் நாட்டு உயிர்கட்கு உயிர் (செ. 33) என்றும் கூறியிருத்தல்.
"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே 
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" 
என்ற புறநானூற்றுச் செய்யுள் (செ.186) அடிகளோடு ஒத்துவரல் காணலாம்.

 

அகநானூறு. கண்ணப்பர் புராணத்தில் இரும்புலி எயிற்றுத் தாலி (செ.9) என்றமை, "புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி" (செ. 7) என்னும் அகநானுற்று அடியுடன் ஒன்றுபடல் உணரலாம். 

 

நற்றிணை. கண்ணப்பருடன் வேட்டையாடச் சென்ற நாய்கள் தம் நாக்களை நீட்டியும் சுருக்கியும் தொங்கவிட்டுக் கொண்டு ஓடின. அக்காட்சி, வேடரது வில்மீது பொருந்தும் வெற்றி மகளது சிவந்த பாதம் முன்போய் நீள்வது போலக் காணப்பட்டது என்ற (செ. 69) கருத்து.
"முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய்
நன்னாப் புரையும் சீறடி" 
என்ற நற்றிணைச் செய்யுள் (252) அடிகளிற் பார்க்கலாம். 

 

ஐங்குறுநூறு. திருநீலகண்ட நாயனார் பரத்தை வீட்டிலிருந்து மீண்டதை உணர்ந்த அவர் மனைவியார், அவரோடு உடனுறைதலை விரும்பாராய்த் தம்மைத் தீண்டலாகாது என்று ஆணையிட்டனர். இக்கருத்து,
"என்னலம் தொலைவதாயினும்
துன்னேம் பெரும, பிறர்த்தோய்ந்த மார்பே."
என்ற ஐங்குறுநூற்றுப் பாவடிகளின் பொருளோடு ஒத்துவருதல் காணத்தக்கது.

 

கலித்தொகை. மானக்கஞ்சாற் நாயனார் புராணத்தில் (செ.11) கூறப்பட்டுள்ள,
"மழைக்குதவும் பெருங்கற்பயின் மனைக்கிழத்தி", 
என்ற தொடரின் கருத்தும் 
"வான்தரு கற்பினாள்."
"அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே"
என்று வரும் கலித்தொகைச் செய்யுட்களில் (16,39) வந்துள்ள கருத்தும் ஒன்றுபடல் ஓர்க,

 

திருக்குறள். சேக்கிழார் உலகப் புகழ்பெற்ற திருக்குறட் பாக்களை அழுத்தந்-திருத்தமாகப் படித்து உணர்ந்தவர் என்பதற்கு ஐம்பதுக்கு மேற்பட்ட சான்றுகள் காட்டலாம். அப்பரை நேரிற் கண்டு பழகாதிருந்தும் அப்பூதியடிகள் அவரிடம் பெருமதிப்புக் கொண்டு அவரையே நினைத்திருந்தார். அவரது திருப்பெயரையே தம் வீட்டில் இருந்த உயர்திணை - அஃறிணைப் பொருள்களுக்குப் பெயராக இட்டு வழங்கினார். அவரது திருநாமத்தையே ஜபித்துக் கொண்டிருந்தார். சேக்கிழார் இதனை விளக்கமாகக் கூறி. இறுதியில், 
"காண்ட கமை இன்றியு(ம்), முன் கலந்தபெருங் கேண்மையினார்". 
என்று (செ. 213) குறித்தார். இக் கருத்தை,
"புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்."
என்று திருக்குறள் தன்னகத்தே பெற்றதன்றோ?

 

பட்டினப்பாலை (பத்துப்பாட்டு). சண்டீசர் வரலாற்றில் காவிரியின் சிறப்பை, 
'பூந்தண் பொன்னி எந்நாளும் பொய்யா தளிக்கும் புனல் நாடு' 
என்று சேக்கிழார் செப்பியது. 
"வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி" 
எனவரும் பட்டினப்பாலை அடிகளை உளங்கொண்டு அன்றோ? .

 

சிலப்பதிகாரம். பெரிய புராணத்துள் இசைபற்றி வரும் இடங்கள் பலவாகும். *அவற்றுள் சிறந்த பகுதி ஆனாய நாயனார் புராணத்தில் உள்ளது. இசைபற்றி வரும் இவ்விடங்களிற் கூறப்படும் செய்திகள் அனைத்தும் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை அடிகளிலும் அவைபற்றிய அடியார்க்கு நல்லார் உரையிலும் விளக்கமாகக் காணலாம். இஃதன்றிக் கரிகாலன் இமயம் சென்று அதன் மீது புலிப்பொறி பொறித்து மீண்ட செய்தியைச் சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திலும், புகழ்ச்சோழர் புராணத்திலும் கூறினமை. சிலப்பதிகார (இந்திரவிழவூர் எடுத்த காதையில் வரும்) அடிகட்கும் அவற்றின் உரைக்கும் பொருத்தமாதல் காணத்தக்கது.

 

மணிமேகலை. பெரிய புராணத்திற் பெளத்த சமயத்தைப்பற்றி வரும் சம்பந்தர் புராணம் முதலிய இடங்களிற் காணப்படும் பெளத்த சமயக் குறிப்புகள் பல. மணிமேகலை என்னும் பெளத்த காவியத்திற் காணக்கிடக்கின்றன. ஆதலின் காலத்தால் முற்பட்ட இதனைச் சேக்கிழார் கவனித்தவர் என்பதில் ஐயமில்லை.

சேக்கிழார் நாட்டுச் சிறப்பில் (செ.2). அகத்திய முனிவன் கமண்டலத்திலிருந்து கவிழ்ந்த நீரே காவிரியாறாகப் பெருக்கெடுத்தது என்று குறிப்பிடும் செய்தியை
"அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை."
எனவரும் மணிமேகலை அடிகளிற் காணலாம்.

 

சிந்தாமணி. சேக்கிழார் சிந்தாமணியைச் சிறக்கப் படித்த சீரிய புலவர் என்பதனை முன்னரே குறிப்பிட்டோம் அல்லவா? அதற்குச் சான்றுகள் பல காட்டலாம். இடமஞ்சி இரண்டு காட்டுதும்.
1. பசிய வயல்களுக்கு இடையில் உள்ள தாமரை மலர்கள்மீது சங்குகள் இருத்தல் - ஊர்கோளால் (பரிவேடம்) சூழப்பட்ட சந்திரனின் தோற்றத்தை ஒத்திருந்தது - திருக்குறிப்புத் தொண்டர் புராணம், செ.26 இந்த உவமை,
"கட்டழற் கதிரை ஊர்கோள் வளைத்தவா வளைத்துக் கொண்டார்" 
என்று சிந்தாமணியில் (செ.1186) ஆளப்பட்டிருத்தல் காண்க 
2. கண்ணப்பர் சிவனைவிட்டு நீங்காமையைக் கண்ட நாணன்,
"வங்கினைப் பற்றிப் போதா வல்லுடு பென்ன நீங்கான்" 
என்று (செ.116) கூறிய உடும்பைப்பற்றிய உவமையே சிந்தாமணியில், 
"தணக்கிறப் பறித்த போதும் தானளை *விடுத்தில் செல்லா
நிணப்புடை உடும்பன்னாரை...."
என்று (செ.2887) கூறப்பட்டிருத்தல் காணத்தக்கது. 

 

தொல்காப்பியம்: முல்லை நிலத்திற்குக் கடவுள் திருமால். இதனைத் தொல்காப்பியர்,
"மாயோன் மேய காடுறை உலகம்" 
என்று கூறிப் போந்தார். இதனையே சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில்,
"முல்லையின் தெய்வமென் றருந்தமிழ் உரைக்கும் செங்கண்மால் " 
என்று விளங்கவுரைத்திருத்தல் காண்க, ஐந்திணைச் சிறப்பு, திணை மயக்கம், பெரும்பொழுது சிறுபொழுதுகள், காதலர் களவு நிலை முதலிய பற்றிவரும் பெரியபுராணச் செய்திகட்கு இலக்கணம் தொல்காப்பியமே என்னலாம்

இறையனார் களவியல் உரை: சேக்கிழார் இறையனார் களவியலையும் அதன் உரையையும் அழுத்தகமாகப் படித்தவர் என்பதற்குப் பல சான்றுகள் காட்டலாம். சடங்கவி சிவாசாரியார் என்பவர் சுந்தரர் குலம் முதலியவற்றை ஆராய்ந்து "ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தார்" என்று சேக்கிழார் குறித்துளர். இஃது, "இவனும் பதினாறாட்டைப் பிராயத்தனாய் இவளும் பன்னீராட்டைப் பிராயத்தளாய் ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடையராய்..." எனவரும் களவியல் உரையுடன் வைத்து ஒப்புநோக்கத் தக்கது.

 

சமய நூற்புலமை 

 

சேக்கிழார் முதல் ஏழு திருமுறைகளையும படிதது அநுபவித்தாற்போல வேறு எவருமே படித்திரார் என்பது, பெரிய புராணத்தைப் பழுதறப் படித்த அறிஞர் அறிவர். அவர், திருப்பதிகங்களைத் தம் பெரியபுராணத்துட் கையாண்டிருத்தலே இதற்குத் தக்க சான்றாகும். அவர் திருப்பதிகங்களைக் கையாண்ட சில முறைகளை இங்குக் காண்போம்.

 

1.சேக்கிழார் பல இடங்களில் பதிக முதற் குறிப்பைக் கூறி... என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார் என்று சொல்லிச் செல்வார்.
"பித்தாபிறை சூடி எனப் பெரிதாந் திருப்பதிகம்
இத்தாரணி முதலாம்உல கெல்லாம்உய எடுத்தார். 

 

2. சில இடங்களில் பதிகத்தின் முதலும் ஈறும் குறிக்கப்படும்.
"ஈன்றாளு மாய் எனக் கெந்தையு மாகி" எனவெடுத்துத் 
"தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யோங்கட்கெ'ன்று 
வான்தாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்கும் 
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே. " 

 

3. நாயன்மார் திருப்பதிகச் செய்யுளே புராணச் செய்யுளில் அமைக்கப்பட்டிருக்கும். 
"செய்யமா மணிஒளிசூழ் திருமுன்றின் முன்தேவா சிரிய்சார்ந்து, 
கொய்யுலா மலர்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூராரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேன்' என்(று) 
எய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள் செய்தங்கிருத்தார் அன்றே.' 

 

4. திருப்பதிகத்தின் கருத்து புராணத்தில் - பல பாக்களில் விளக்கப்பட்டிருக்கும். சம்பந்தர் 'தோடுடைய' என்று தொடங்கிப் பாடிய பதிகத்தின் கருத்தைச் சேக்கிழார் பல செய்யுட்களில் (செ. 75-79) விளக்கிக் கூறியுள்ளார். தாம் இருந்த மடத்திற்குச் சமணர் வைத்த தீயைச் சம்பந்தர், 'பையவே சென்று பாண்டியற்காக' என்று ஏவினர். அவர் 'பையவே' என்று சொன்னதற்குரிய காரணங்களைச் சேக்கிழார் விளக்குதல் நயமுடையது: 
"பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்",[1]
ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும் [2], அரயன் பால் அபராதம் உறுதலாலும், [3]

மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும் [4], வெண்ணீறு 
வெப்பகலப் புகலிவேந்தர் 
தீண்டியிடப் பேறுடையான் ஆதலாலும்[5] தீப்பணியைப் 'பையவே செல்க' என்றார்". 

 

5. சேக்கிழார் நாயன்மார் பதிக வகைகளை அப்படியே தம் பாக்களில் வைத்துப் பாடியுள்ளார் சான்றாக, 'அப்பர் திருப்பூந்திருத்தி மடத்தில் தங்கி இருந்த பொழுது (1) பல்வகைத் தாண்டகம், (2) பரவும் தனித் தாண்டகம், (3) அடைவு திருத்தாண்டகம், (4) திரு அங்கமாலை முதலியவற்றைப் பாடினார்' என்று ஒரே பாட்டில் இவ்வகைகளை அடக்கிப் பாடியிருத்தல் கவனிக்கத்தக்கது.
"பல்வகைத் தாண்டகத் தோடும் பரவுத் தனித்தாண் டகமும் 
அல்லள் அறுப்பவர தானக் தடைவு திருத்தாண் டகமும் 
செல்னதி காட்டிப் போற்றும் திருஅங்கமாலையும் உள்ளிட்(டு) 
எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார்." 

 

6. நாயன்மார் பாடிய பதிகச் சந்தத்திலேயே அப்பதிகங்களைக் குறிக்கும் இடங்களில் சேக்கிழார் பாக்களும் அமைந்திருத்தல் கண்டு இன்புறத்தக்கது. "பித்தா, பிறைசூடி" என்ற திருப்பதிகத்தைச் சுந்தரர் பாடினார் என்று கூறும் சேக்கிழார் பாக்களும் இந்தளப் பண்ணில் அமைந்திருத்தல் படித்துப் பாராட்டத்தக்கது. 
"கொத்தார்மலர்க் குழலாளொடு கூறாய் அடி யவர்பால், 
மொத்தாயனும் இனியானை அவ் வியன்நாவலர் பெருமான் 
'பித்தா, பிறைசூடி, எனப் பெரிதாம்திருப் பதிகம் 
இத்தாரணி முதலாம்உல கெல்லாம்உய எடுத்தார்."

 

7. நாயன்மார் பாடலை கவி கூற்றாக அங்கங்கே அமைக்கும் திறமையும் சேக்கிழார் பெருமானுக்கு உண்டு. சான்றாக ஒன்று கூறுதும்; அப்பர், நமிநந்தி அடிகள் சிறப்பைத் தமது திருவாரூர்ப் பதிகத்தில்,
"ஆராய்ந்த தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கி….." 
என்று தொடங்கிப் பாடிப் பாராட்டியுள்ளனர். சேக்கிழார் இதனை நினைவிற்கொண்டு அந் நமிநந்தி அடிகள் புராணத்தில்,
"நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதியாகவே 
வேறுவேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் 
ஏறு சிறப்பின் மணிப்புற்றில் இருந்தார் தொண்டர்க் காணி யெனும்
பேறு திருநா வுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்."
என்று பாடியுள்ளார்.

 

8. சேக்கிழார் பல இடங்களில் திருப்பதிகங்களின் உட்குறிப்பை எடுத்துக் காட்டுவர். 

 

9. பெரிய புராணம் தேவாரத்திற்கு உரை காணப் பெருந்துணையாக இருப்பது என்னலாம். சேக்கிழார், வையை யாற்றில் எதிர்சென்ற ஏட்டில் அடங்கிய திருநள்ளாற்றுப் பதிகத்தின் பொருளை மிகவும் விரிவாகக் கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது.

 

திருவாசகம். சேக்கிழார் திருவாசகத்திலும் சிறந்த புலமையுடையவர் என்பது தெரிகிறது. மணிவாசகர், சண்டீசர் வரலாற்றைக் கூறி,
"சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்....." 
என்று கூறியுள்ளார். சேக்கிழார் இதனை அதே சண்டீசர் புராணத்தில்,
"...ஈறி. லாதார் தமக்கன்பு தந்த 
அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றுங்கால்"
என்ற அடிகளில் ஆண்டிருத்தல் காண்க.

 

திருமந்திரம், சேக்கிழார் பாடியுள்ள திருமூலர் புராணத்தைக் காணின், அவர், திருமந்திரத்தைத் திறம்பட படித்துணர்ந்தவர் என்பது தெள்ளிதிற் புலனாகும். சேக்கிழார் தில்லைவாழ் அந்தணர் புராணத்தில் இறைவனது இலக்கணத்தை,
"ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவு மாகிச் 
சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய (பொருளுமாகி……
என்று கூறியுள்ளார். இக்கருத்து. 
"யாரறி வாரெங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வாரந்த அகலமும், நீளமும் 
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் 
வேரறி யாமை விளம்புகின் றேனே." 
எனவரும் திருமந்திரச்செய்யுளில் பொதிந்திருத்தல் காணலாம்.

 

சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் சிறந்தனவாகக் கூறப்படும் சிவஞான போதம், சிவஞான சித்தியார் என்பவற்றிற் குறிக்கப்படும் விழுமிய சித்தாந்தக் கருத்துகள், இந்நூல்கள் வெளிவரா காலத்திலேயே சேக்கிழாராற் பெரிய புராணத்துள் கூறப்பட்டுள்ளன.

 

1. சேக்கிழார், மானக்கஞ்சாற நாயனாரது அடியார் பக்தியைப் பாராட்டுமிடத்து. 'அவர் சிவனடியாரை சிவபெருமானாகவே கருதி வழிபட்டவர் என்று குறித்துள்ளார். இக்கருத்து சிவஞான போதம் 12-ஆம் சூத்திரத்தும் அதன் உரையிலும் காணலாம்.
2. சேக்கிழார் அதே புராணத்தில், 'சிவனடியார் ஆதலே பெரும்பேறு' என்று குறிப்பிட்டனர். இதே கருத்து அவர்க்குப் பின்வந்த சிவஞான சித்தியாரில், 
"வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித் 
தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது." 
என்று விளக்கப்பட்டிருத்தல் காணத்தக்கது. 

 

'சைவ சித்தாந்த் சாத்திரங்கள் பதினான்கிற்கு முன் வாழ்ந்த சேக்கிழார் எந்தச் சித்தாந்த நூல்களைப் பயின்றவர்?' என்ற கேள்வி எழும் அன்றோ! இக்கேள்விக்கு விடை. பதினொரு திருமுறைகளும் இராச சிங்கன் கல்வெட்டிற் காணப்பட்ட சைவ சித்தாந்த நூல்களுமே யாம். 'சைவ சித்தாந்தத்தில் வல்லவன் என்று இராசசிங்கன் கூறப்பட்டான் எனின், அவன் காலத்தில், (கி.பி. 690-720) சைவ சித்தாந்த நூல்கள் இத் தமிழ் நாட்டில் இருந்தன என்பது வெள்ளிடை மலையன்றோ? அந் நூல்களிலும் சைவத் திருமுறைகளிலும் பொதிந்துள்ள சைவசித்தாந்தக் கருத்துகளையே சேக்கிழார் தமது பெரிய புராணத்துட் பல இடங்களிற் குறித்துள்ளனர்.

 

இசைக்கலை. சங்க காலத்திலிருந்தே இசை, நடனம் போன்ற நாகரிகக் கலைகள் தமிழர் வாழ்வில் வீறு கொண்டிருந்தன. அவை இடைக்காலத்தில் சமய வளர்ச்சிக்காகப் பெருந்தொண்டாற்றும் கருவிகளாகக் கொள்ளப்பட்டன. திருமுறைகள் சமயாசிரயர் கால முதல் பண்ணோடு பயிலப்பட்டன. அதனால், தமிழிசை பற்றிய நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு. அவ்வாறு இசைப்பற்றிய நூல்கள் மிக்கிருந்தமையாற்றான், அடியார்க்கு நல்லார், அரங்கேற்று காதைக்குச் சிறந்த உரைகாண முடிந்தது. அவ்விசை நூல்களைச் சேக்கிழார் அழுத்தமாகப் படித்தவர் என்பது, இசைபற்றிய அவருடைய பாடல்களிலிருந்து நன்குணரலாம். சான்றாகச் சில இடங்களை காண்க:

 

1. "இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர் திருவெண்ணெய் நல்லூர்க் கோவிலில் பாடிய 'பித்தா, பிறை சூடி' என்று தொடங்கும் முதற் பதிகம் 'இந்தளம்' என்ற பண்ணிற் பாடப்பட்டது. அதனைச் சுந்தரர் இன்ன முறையிற் பாடினார்' என்று சேக்கிழார் விளக்கிக் கூறலைக் காண, அவரது இசைப் புலமை இற்றென இனிது விளங்கும்.
"முறையால்வரு மதுரத்துடன் மொழிஇந்தள முதலில் 
குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினால் 
நிறைபாணியின் இசைகோள் புணர் நீடும்புகழ் வகையால் 
இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகர் இல்லான்.
- தடுத்தாட்கொண்ட புராணம், 75.

 

2. ஆனாயர் புராணத்தில், (1) புல்லாங்குழலுக்குரிய மூங்கிலைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் முறை, (2) அக்குழலை வைத்து ஆனாயர் பாடிய முறை, (3) அக்குழல் இசையால் உயிர்கள் உற்ற இன்பம் முதலியவற்றை மிகவும் தெளிவாகக் கூறியுள்ள முறையை நோக்க, சேக்கிழார் இசைத் துறையிற் பண்பட்ட புலமை உடையவர் என்பதைத் தெளிவாக உணரலாம்.

 

நடனக்கலை. அப்பர் திருப்புகலூரில் தம் இறுதி நாட்களைக் கழித்துக்கொண்டு இருந்தபொழுது அவரது உள்ளத்தைப் பரிசோதிக்கச் சிவபெருமான் ஏவற்படி தேவலோக நடனமங்கையர் வந்து அப்பர்முன் தோன்றினர். ஆடல்பாடல்களை நிகழ்த்தினர் என்ற இடத்தில், சேக்கிழார், ஆடல் பாடல் பற்றிய நுட்பங்களைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
1. "வானகமின் னுக்கொடிகள் வந்திழிந்தால் எனவந்து
தானநிறை சுருதிகளில் தருமலங்கா ரத்தன்மை 
கான்அமு தம்பரக்கும் கனிவாயில் ஒளிபரப்பப் 
பானல்நெடுங் கண்கள்வெளி பரப்பி இசைபாடுவார்." 
2. "கற்பகப்பூந்த தளிரடி போய்க் காமருசா ரிகைசெய்ய 
உற்பலமென் முகிழ்விரல்வட்ட ணையோடுங் கைபெயரப் 
பொற்புறுமக் கையின்வழிப் பொருகயற்கண் புடைபெயர 
அற்புதப்பொற் கொடிநுடங்கி ஆடுவபோல் ஆடுவார்." 
--- அப்பர் புராணம், செ. 419-420

 

வானநூற் புலமை. பெரிய புராணத்துட் கூறப்படும் கார்காலம், பனிக்காலம், இளவேனில் முதலியவற்றைப் பற்றிச் சேக்கிழார் கூறும் இடங்களில் எல்லாம் அவரது வான நூற் புலமையையும் அவ்வப் பருவகால மாற்றங்களை அளந்துகூறும் அறிவு நுட்பத்தையும் நன்குணரலாம். 'குரியன் துணைப்புணர் ஓரையைச் சேர்ந்தான், அதனால் வெங்கதிர் பரப்பினான், பரப்பவே இளவேனில் முதுவேனிலாயிற்று' என்று சேக்கிழார் கூறல் நுட்பம் வாய்ந்ததாகும். 'துணைப்புணர்ஓரை' என்பது மிதுனமாகும். மிதுனம் இரட்டை ஆதலின், துணைப்புணர் ஓரை' என்றார். இதுவன்றோ வானநூற் புலமை நுட்பம்!
'மகிழ்ந்த தன்தலை வாழுமந் நாளிடை வானில் 
திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர் ஓரையுட் சேர்ந்து 
நிகழ்ந்த தன்மையில் நிலவுமேழ் கடல்நீர்மை குன்ற 
வெகுண்டு வெங்கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில்."
-சம்பந்தர் புராணம், செ.384 

 

உடல்நூற் புலமை: "மூர்த்தி நாயனார்க்குச் சந்தனக் கட்டை கிடைக்காமற்போகவே, அவர் சந்தனக்கல் மீது தம் முழங்கையைத் தேய்த்தார். அதனால் புறந்தோல், நரம்பு எலும்பு கரைந்து தேய்ந்தன என்று சேக்கிழார் கூறல் கூர்ந்து நோக்கத் தக்கது. "உள்ளே நின்ற எலும்பு, நரம்பு, தசை, இரத்தம் முதலியவற்றை ஒன்றாகப் பொதிந்து மேலே கட்டிய புறந்தோல் முதலில் தேய்ந்தது, அதனை அடுத்து நரம்பு தேய்ந்தது, பின் எலும்பும் தேய்ந்தது என்பது இதன் பொருள். இம்முறை வைப்பு உடல் நூலுக்கு இயைந்ததே யாகும்.'[2] 
-----------

[2] C.K.S. Mudaliyar - Periyapuranam, Vol II pp. 1276-77

 

1. நட்டம்புரி வாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுத் தேய்க்குங்கை முட்டா தென்று 
வட்டத்திகம் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும்புறத் தோல்தரம் பென்பு கரைந்து தேய."

2. கல்லின்புறத் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்ஙனும் என்பு திறந்து மூளை 
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்ப ரானார் 
அல்லின்கண் எழுந்தது வந்தருள் செய்த வாக்கு"
-- மூர்த்தியார் புராணம். செ. 20-21. 

 

மருத்துவக்கலை. சேக்கிழார் மேற்கூறிய கலைகளிற் புலமை பெற்றாற் போலவே மருத்துவக் கலையிலும் திப்பியப் புலமை சான்றவராக இருந்தனர் என்பது தெரிகிறது. சேக்கிழார், இக்காலத்துச் சிறந்த, மருத்துவ நிபுணர் ஆராய்ந்து வியந்து பாராட்டத்தக்க முறையில் மருத்துவக் கலைநுட்பங்களை ஆங்காங்கு விளக்கியுள்ளார்.
(1) சூலை நோய், (2) கண்ணோய், (3) பாம்புக்கடி, (4) முயலகன் என்ற நோய், (5) பனி நோய், (6) வெப்பு நோய் முதலியவற்றைப் பற்றி அவர் கூறியுள்ள விவரங்கள் படித்து ஆராயத் தக்கவை. இங்குச் சான்றாக இரண்டு காண்போம். 

 

1. வெப்பு நோய். இது சம்பந்தரால் ஏவப்பட்டுப் பாண்டியன் நெடுமாறனைப்பற்றிய கொடிய ஜ்வர நோய் ஆகும். இது வடமொழியில் 'ஆகந்துக ஜ்வரம்' எனப்படும்: ஆகந்துகம் என்பது அடி முதலியன தாக்குவதாலும் சாபம் முதலியவற்றாலும் பூர்வரூபம் இல்லாமல் திடீரென்று உண்டாகும் ஜ்வரம், இது நான்கு வகைப்படும். அவை (1) அபிகாத ஜ்வரம், (2) அபிஷங்க ஜ்வரம், (3) சாப ஜ்வரம், (4) அபிசார ஜ்வரம் என்பன. இவற்றுள் சாப ஜ்வரம் ரிஷிகள், ஆசாரியர், தேவதைகள் முதலியவர்கள் இடும் சாபத்தினால் திடீரென உண்டாவது. இது பொறுக்க முடியாத கொடிய ஜ்வரம். இது வாய் பிதற்றலும் நடுக்கமும் உண்டாக்கும் [3]. 

 

'நெடுமாறனுக்கு உண்டான வெப்பு நோய் சாப ஜ்வரம் ஆகும். அஃது அரசனுக்கு உடல் நடுக்கத்தையும் கொடிய உஷ்ணத்தையும் உண்டுபண்ணியது. அது மருத்துவப் புலவரால் ஒழிக்கப்படவில்லை. அரசன் வாய் பிதற்றலானான்' என்ற விவரங்கள் சேக்கிழார் கூறக் காணலாம். இக் கூற்று மேற்சொன்ன மருத்துவர் கூற்றுடன் ஒன்றுபடல் காண்க.
----------

[3] இதன் விவரங்கள் 'சார்ங்கதர சம்ஹிதை, அஷ்டாங்க ஹிருதயம், மாதவ நிதானம்' என்ற மருத்துவ நூல்களிற் காணலாம்.

 

2. சூலை நோய். 'இஃது ஒருவகைக் கொடிய வயிற்றுவலி. வாதம்-பித்தம்-கபம் என்னும் மூன்றன் நிலை மாறுதல்களால் நிகழ்வது. இது பல துன்பங்களைத் தருவது. சிகிச்சைக்கு வசப்படாதது. வயிற்றுக் குடைச்சல், வயிற்று இறைச்சல், நாவறட்சி, மூர்ச்சை, பொருமல், வயிறு மந்தமாக இருத்தல், வாய் சுவை உணர்வு அற்று இருத்தல், கபம் அதிகரித்தல், பெருமூச்சு விடல், விக்குள் உண்டாதல் முதலிய துன்ப நிலைகள் இந்நோயினால் தோன்றும்' என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.[4]
------------ 

 

[4] இதன் விவரம் மாதவ நிதானம், வைத்ய சார சங்கிரகம் போன்ற மருத்துவ நூல்களிற் காணலாம். 

சூலை நோயினால் வருந்திய அப்பர்க்கு இத்துன்பங்கள் உண்டாயின என்பது அவருடைய வாக்காலும் சேக்கிழார் வாக்காலும் அறியலாம். .

அப்பர் வாக்கு: 
(1) "தோற்றாதென் வயிற்றி னகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்...." 
(2) வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயற்றி னகம்படியே 
பறித்துப்புரட் டியறுத் திடநான் அயர்த்தேன்..... "
(3) "கலித்தேயென் வயிற்றி னகம்படியே
கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேன்...." .
(4) "வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்..... " 

சேக்கிழார் வாக்கு: 
(1) "...கடுங்கனல்போல் அடுங்கொடிய
மண்டுபெருஞ் சூலை அவர் வயிற்றினிடைப் புக்கதால். 
(2) 'அடைவிலமண் புரிதரும சேனர்வயிற் றடையும் அது
வடஅனலும் கொடுவிடமும் வச்சிரமும் பிறவுமாம் 
கொடியஎலாம் ஒன்றாகும் எனக்குடரின் அகங்குடையப் 
படருழந்து நடுங்கிஅமண் பாழியறையிடைவிழுந்தார்.
(3) "உச்சமுற வேதனைநோய் ஓங்கியெழ…. 
(4) "கொல்லாது சூலைநோய் குடர்முடக்கித் தீராமை
எல்லாரும் கைவிட்டார்......"
-    அப்பர் புராணம் செ. 49-51, 57

 

நீதிநூற் புலமை. நீதிநூற் புலமையிலும் சேக்கிழார் சிறந்திருந்தார் என்பதைத் தடுத்தாட்கொண்ட புராணத்தாலும் கண்ணப்பர் புராணத்தாலும் சண்டீசர் புராணத்தாலும் நன்கறியலாம். சான்றாக ஒன்று காண்போம். 

 

சிவபெருமான், சுந்தரர் திருமணத்தைத் தடுக்க மறையவராக வந்தார். சுந்தரர்க்குப் பாட்டனார் தமக்கு வழிவழி அடிமை செய்வதாகப் பத்திரம் ஒன்று எழுதித் தந்தார் என்றும், அதன்படி சுந்தரர் தமக்கு அடிமை என்றும் வாதித்தார். அவர் கையில் ஒரு பத்திரம் இருந்தது. அதன் மூல ஓலை (Original) திருவெண்ணெய் நல்லூர்ச் சபையாரிடம் அரண் தரு காப்பில் (Safe custody) இருந்தது. ஒலையைக் கிராம நீதிபதிகளாகிய ஊரவையார்முன் வாசிக்கக் கரணத்தான் (Clerk of the village court) இருந்தான். வழக்கு விசாரணையில் ஆட்சி (Oral Evidence), ஆவணம் (Documentary Evidence) அயலார் காட்சி (Circumstantial Evidence) என்பன கவனிக்கப்பட்டன. சேக்கிழார் இவை அனைத்தையும் மிகவும் விளக்கமாகக் கூறியுள்ளளமை [5] நோக்க, அவரது நீதிநூற் புலமை எண்ணி எண்ணிக் களிக்கத் தக்கதாகும். 
------------

[5] தடுத்தாட்கொண்ட புராணம், செ. 41-62 

 

சேக்கிழார் செய்யுட் சிறப்பு 

 

1. சேக்கிழார் செய்யுட்கள் பிற புலவர் பாக்களைப் போலக் கரடு முரடானவை அல்ல. அவை எளிய நடையில் அமைந்தவை. செம்பகாமானவை. சான்றாகக் கடவுள் வாழ்த்தையே காண்க. 

"'உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் 
நிலவு லாவிய நீர்மலி வேணியன் 
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் 
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்."

 

2. சேக்கிழாருடைய பெரும்பாலான பாடல் வரிகள் நிறுத்தக்குறிகள் பெய்யப்படின், எளிய, தனித்தனி வாக்கியங்களாக அமைதலைக் காணலாம்.
"சன்னியால் வணங்கிநின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி, 
தன் இது மொழிந்த வாநீ? யான்வைத்த மண்ணோ டன்றிப் 
பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் கொள்ளேன் போற்ற 
என்னை நான் வைத்த ஓடே கொண்டுவா' என்றான் முன்னோன்." 
-    திருநீலகண்டர் புராணம். 24.

 

3. ' பாக்களில் சொற்சிதைவு நேர்தல் பெரும்பாலும் தடுக்கப்படல் வேண்டும்' என்பது இன்றைய தமிழ்ப் புலவர் கொள்கை. இதனைச் சேக்கிழார் அக்காலத்திற் தானே கொண்டிருந்தவர் என்பதை அவர் பாக்கள் சிலவற்றால் அறியலாம்.
"அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல்வணங்கி அருள்முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப் பிணி ஒட்டும் திருவீதி புரண்டுவலம் கொண்டு போந்தே 
எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச் 
செப்பரிய பெருமையினார் திருநாரை யூர் பணிந்து பாடிச் செல்வார்."
-- அப்பர் புராணம் - 179 

 

4. அவ்வத் தலத்தைப் பற்றிக் கூறுகையில் அத்தலத் தொடர்பான பண்டை நிகழ்ச்சிகளை மறவாது கூறும் இயல்பு சேக்கிழாரிடம் உண்டு. இதனைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள் பரக்கக் காணலாம்.

 

5. சேக்கிழார். தன்மை நவிற்சி ஒன்றையே பெரும்பாலும் கையாண்ட சங்ககாலப் புலவரைப் போன்றவர் ஆவர். ஆதனுர்ச்சேரி வருணனை, நாகை-நுளைப்பாடி வருணனை, உடுப்பூர்-வேடர்சேரி வருணனை என்பவற்றைப் படிப்பார்க்கு இவ்வுண்மை விளங்கும்.

 

6. இடத்திற்கு ஏற்பச் சந்தங்கள் அமைத்து பாடுதல் என்பது பெரும் புலவர் வழக்கம். அதனை சேக்கிழாரிடம் சிறப்புறக் காணலாம். கண்ணப்பர் வேட்டைக்குப் புறப்படல், வேட்டையாடல், புகழ் சோழர் படைகள் போரிடல் போன்ற இடங்களில் எல்லாம் அதனதனுக்குரிய சந்தம் அமைத்திருத்தலை காண்க . 

 

7. சேக்கிழார் கடுஞ்சொற்களைக் கூற அஞ்சியவர் என்பது பெரியபுராணத்தை ஊன்றிப் படித்து உணர்ந்த ஒன்றாகும். பகைவன் சிவனடியாரைக் குத்த திரும்பி, அடியார் வேடத்தில் வந்து, அமயம் பார்த்துக் குத்தியதைக் - கூறவந்த சேக்கிழார்,
"பகைவன், நினைந்த அப் பரிசே செய்தான்." 
என்று நயம்படக் கூறல் காணலாம். இங்ஙனமே பிறிதோர் இடத்திலும்,
"பகைவன், தன்கருத்தே முற்றுவித்தான்
என்று தீயதை மறைத்துக் கூறியிருத்தல் காண்க.

சேக்கிழார் செய்யுட்களின் சிறப்பியல்புகள் மேலும் பலவாகும். நீவிர் அவற்றை மூல நூல் கொண்டு படித்துச் சுவைத்தல் வேண்டும். சேக்கிழார் பெருமான் ஒப்பற்ற உயரிய புலவர். எல்லாக் கலைகளிலும் வல்லவர். பிற புலவர் நூல்களிற் பேரளவிற் காணப்பெறாத திணை மயக்கம் முதலியன விளங்கக்கூறி நம்மை வியப்புறுமாறு செய்விக்கும் பேராற்றல் மிக்க பெரும்புலவர். திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் தொண்டைநாட்டு வருணனையில் வரும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருத்தம், நெய்தல் என்ற ஐந்திணைகளின் பொது இலக்கணமும், பின் சிறப்பிலக்கணமும், பிறகு ஒவ்வொரு நிலத்துக் கருப்பொருள் உரிப்பொருள்களும் பிறவும், அவற்றின் பின் திணைமயக்கமும் (நெய்தலும் குறிஞ்சியும் மயங்குதல், மருதமும் குறிஞ்சியும் மயங்குதல், முல்லையும் குறிஞ்சியும் மயங்குதல் போன்றவை) படித்துப் படித்து இன்புறத்தக்கவை. தொல்காப்பியத்துள் குறிப்பாகக் கூறப்பட்ட இத் திணை மயக்க இலக்கணத்திற்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளாகச் சேக்கிழார் பாக்கள் இலங்கக் காணலாம். இத்தகைய வியத்தகு புலமையுணர்வை நன்குணர்ந்தே காஞ்சிப் புராணத்துள் தொண்டை நாட்டு வருணனையைக் கூறப்புகுந்த மாதவச் சிவஞானயோகிகள்,
"திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைத் தினைவளமும் தெரித்துக் காட்ட 
மருத்தொண்டை ஆய்ச்சியர்சூழ் குன்றைநகர்க் குல கவியே வல்லான் அல்லால்
கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு தெரிந்துரைப்பார்!....."
என்று சேக்கிழார் பெருமானைப் பாராட்டியுள்ளார். எனின், அப்பெரும் புலவர் புலமைத்திறனைப் பாராட்டாதார் யாவர்? 

இத்தகைய பெரும் புலவர் காவியங்களைத் தமிழ் மக்கள் படித்து இன்புற்று அப்புலவர் நாட்களை நாட்டவர் அறியச் சிறப்புறக் கொண்டாடி மகிழும் நாளே தமிழ் வளர்ச்சிக்குரிய நன்னாள் ஆகும்.

- - - - - - 


 

Related Content

சைவ சமயம் - கட்டுரை