logo

|

Home >

devotees >

poosalaar-nayanar-puranam

பூசலார் நாயனார் புராணம்

 

Poosalaar Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


பொருவருந்தண் டகநாட்டு நின்ற வூர்வாழ்
    பூசுரர்கோப் பூசலார் பந்தி யாலே
யிருநிதியந் தேடியா லயமு மாக்கி
    யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங் காலை
யரனதனைக் காடவர்கோற் கருள மன்ன
    னந்நகர மணைந்தவ்வா றறிந்து தாழ
விரவுமனக் கோயிலுற விருத்தி யங்கண்
    வேண்டுவகொண் டிறைஞ்சியருண் மேவி னாரே.

தொண்டை மண்டலத்திலே, திருநின்றவூரிலே, பிராமண குலத்திலே, பூசலார்நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றை எப்படியுந் தேடிக் கொடுத்து, பரமசிவனுக்கு ஓராலயங் கட்டுதற்கு விரும்பி, எங்கும் வருந்திப் பொருள்தேடி, அற்பமுங் கிடையாமையால் நைந்து, "இதற்கு யாதுசெய்வேன்" என்று ஆலோசித்து மனோபாவனையினாலே ஆலயங்கட்டத் துணிந்து, மனசினாலே அதற்கு வேண்டுந்திரவியங்களையும் உபகரணங்களையும் சிற்பரையும்தேடி, சுபதினத்திலே அடிநிலை பாரித்து, இரவிலும் நித்திரையின்றி, நெடுநாட்கூடக் கோயில் கட்டி முடித்து, பிரதிட்டை செய்தற்கு உரிய சுபதினத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அது நிற்க.

காடவராஜாவானவர் காஞ்சீபுரத்திலே ஒரு சிவாலயங்கட்டுவித்தார் அதிலே பிரதிட்டை செய்ய நிச்சயித்த சுபதினத்துக்கு முதற்றினத்திலே பரமசிவன் பூசலார்நாயனாருடைய அன்பை விளக்கும் பொருட்டு அவ்வரசருக்குச் சொப்பனத்திலே தோன்றி, 'நின்றவூரில் இருக்கின்ற பூசலென்பவன் நமக்கு ஒரு கோயில் கட்டியிருக்கின்றான். அதிலே நாளைக்கு நாம்போவோம் உன் கோயிலில் பிரதிட்டையை நாளைக்கு ஒழித்து பின் கொள்வாய்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார். காடவராஜா விழித்து எழுந்து அந்தப் பூசலார்நாயனாரை வணங்குதற்கு விரும்பி, திருநின்றவூரை அடைந்து, அங்குவத்தார் சிலரை நோக்கி, "பூசலார்நாயனார் கூட்டிய திருக்கோயில் எவ்விடத்தது " என்று வினாவ; அவர்கள் "அவர் இங்கே கோயில் கட்டிற்றிலர்" என்றார்கள். உடனே காடவராஜா அவ்வூர்ப் பிராமணர்களை அழைப்பித்து "பூசலார் நாயனார் என்பவர் யாவர்" என்று வினாவ; அவர்களெல்லாரும் "அவர் பிராமணர் இவ்வூரார்" என்று சொல்லி அவரை அழைத்தற்குப் புறப்பட்டார்கள். அப்பொழுது காடவராஜா அவரை அழைக்க வொட்டாமல். தாமே அவரிடத்திற்சென்று அவரை வணங்கி "சுவாமீ! நீர் ஒருசிவாலயங்கட்டியிருக்கின்றீர் என்றும், பிரதிட்டைசெய்யும் நாள் இன்று என்றும், சிவபெருமானால் அறிந்து, உம்மைத் தரிசித்து வணங்குதற்கு வந்தேன் அவ்வாலயம் யாது" என்று விண்ணப்பஞ்செய்ய; பூசலார்நாயனார்மருண்டு நோக்கி, "சிவபெருமான் என்னை ஒருபொருளாகக் கொண்டு அருளிச்செயத்து நான் திரவியம் இல்லாமையால் மனோபாவனையிலே கட்டிய கோயிலையே" என்று நினைந்து நிகழ்ந்ததை எடுத்துச்சொன்னார். காடவராஜா அதைக் கேட்டு வியந்து, அவரைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துத் தோத்திரஞ்செய்து அநுமதி பெற்றுக்கொண்டு, தமது ஊருக்குத் திரும்பிவிட்டார். பூசலார் நாயனார் தரம் மனசினாலே கட்டிய திருக்கோயிலிலே சுபமுகூர்த்தத்திலே பரமசிவனைப் பிரதிட்டைசெய்து, நெடுங்காலம் பூசைசெய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

 


பூசலார் நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

மெய்யன்பர்க்கு மானசிகச் செயற்பாடே காரியப் பேறுமாதல்

உலகர் செயலெதுவும் இன்றியமையாமையும் அது கைகூடுதற்காஞ் சாதனங்களும் அவை பிரயோகிக்கப்படுமாறும் பற்றிய மனத் தொழிற்பாட்டை இன்றியமையாதனவாதல் இயல்பே. ஆனால், "சங்கற்ப சதாகதி என்ற தன்னியல்பிற் கொப்ப, ஒருநிலைப்படாது ஒன்றுவிட் டொன்று பற்றிச் சதா அலைந்து கொண்டிருப்பதும் ஐய விபரீதக் குற்றங்களுக்குள்ளாவதும் ஆன மனத்தியல்பானது வாஸ்தவமானதும் ஸ்திரமானதுமான சிந்தனைச் செயற்பாட்டுக்குக் குந்தகமாயமையுந் தன்மையுமொன்றுள்ளதேயாம். அது, "காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட அதன்பிறகே ஓடுந் தொழிலாற் பயனுளதோ" எனுந் தாயுமானவர் பாடலாற் பெறப்படும். ஆகவே, செயல்திட்பம் சரியாக வாய்க்க வேண்டில் நினைவின் ஸ்திரத்தன்மையாகிய மனத்திட்பம் வேண்டுமென்றாகும். அது திருக்குறளில், "எண்ணிய எண்ணியாங் செய்துப எண்ணியார் திண்ணிய ராகப்பெறின்" எனுந் திருக்குறளானமையும். திண்ணியராதல் மனத்திட்பமுடையாராதல்.

இங்ஙனம் மனத்திட்பத்திற் சிறந்தவர்ளென இதிகாச புராணங்களால் அறியப்பட்டவர்களும் பிறர் காணப் புலப்படுஞ் செயல்வகையிற் காரியவடிவாக அன்றி ஒருவர்க்கும் புலப்படற்கரிய நினைவு வகையிற் கருத்து வடிவாகவே காரியம் நிறைவேற்றி அதாவது கருத்து நிலையிலேயே காரிய ஆக்கம் நிகழ்த்திப் பலனுற்றதாக எங்கும் அறியப்பட்டதில்லையாம்.

பூசலார் நாயனார் எனபவர் தம்முடைய நினைவு முயற்சி மாத்திரத் தானே நெடுங்காலமாக முயன்று தமது அகத்திற் பெருஞ் சிற்பக்கோயி லொன் றெழுப்பிச் சிவப்பிரதிஷ்டை செய்து பூசித்துப் பேறுபெற்ற செய்தி அவர் வரலாற்றில் அறியப்படும். அது அவர் புராணத்தில், "அன்றினார் புரமெரித்தார்க் காலயமெடுக்க வெண்ணி ஒன்றுமங் குதவாதாக மனத்தினா லெடுக்கலுற்ற நின்றவூர்ப் பூசலார்" எனவும் "அன்பரு மமைத்த சிந்தை யாலயத்தரனார் தம்மை நன்பெரும் பொழுது சாரத்தாபித்து நலத்தினோடும் பின்பு பூசனைகளெல்லாம் பெருமையிற் பலநாட் பேணிப் பொன்புனை மன்றுளாடும் பொற்கழனீழல் புக்கார்" எனவும் வருவனவற்றினாற் பெறப்படும்.

இந்த வகையில் இவரின் மனத்தியல்பு விளைத்துவிட்ட அற்புதத்தின் மேலுமோர் அற்புதமாகும்படியாக இவர் சமகாலத்தவனாகிய காடவராஜா ஒருவன் காஞ்சியிற் கட்டியெழுப்பிச் சமதினத்திற் சமமுகூர்த்தத்திற் பிரதிஷ்டைக்கு ஏற்பாடு செய்திருந்த கைலாசநாதர் கற்சிற்பக் கோயிலைவிட இந்த நாயனாரது மனக்கோயிலுக்கே சிவபெருமான் முன்னுரிமை கொடுத்து அது பற்றி அரசனுக்கறிவித்த செய்தியும் உளதாம். அது அவர் புராணத்தில், "நின்றவூர்ப் பூசலன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளைநாம் புகுவோம் நீ இங்கொன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாயென்று கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில்கொண்டருளப் போனார்" என வரும்.

இங்ஙனம் அற்புதத்தின்மேல் அற்புதம் விளையும்படியாக இப்பெருந் திருப்பணியைத் தமது நினைவு மாத்திரையானே நிறைவேற்றியுள்ள இப்பூசலார் நாயனாரின் மனத்திட்பத்தின் மகிமை பெரிதுஞ் சிந்தித் துணரற்பாலதாம். இந்த நாயனார் பூர்வ புண்ணியப் பேறாகத் தமது இளமையிலிருந்தே திருத்தொண்டுக்கென அர்ப்பணிக்கப்பட்ட உள்ளச் செவ்வியுடையராயிருந்தமையின், கோயிலெழுப்புதற்கு வேறுவழி காணாநிலையில், அவர் மனக்கோயில் கட்டத் தொடங்கி நன்முகூர்த்தம் வைத்து அத்திவாரமிட்டதிலிருந்து பிரதிஷ்டையாகும் வரை அவர் மனஞ் சற்றும் அசைதலின்றி இராப்பகலாக அதே பணியில் ஒருமுகப்பட்டு உறைப்புற்று நிற்பதாயிற்று. மறவாமை என்ற உயர்பண்போடு கூடிய அவர்தம் மெய்யன்புப் பிரபாவமே அதுவாதல் குறிப்பிடத்தகும். அது சேக்கிழார் திருவாக்கில், "சாதனத்தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி நாதனுக் காலயஞ்செய் நலம்பெறு நன்னாட் கொண்டே ஆதரித் தாகமத்தா லடிநிலை பாரித்தன்பாற் காதலிற் கங்குற்போதுங் கண்படா தெடுக்க லுற்றார்" - "அடிமுத லுபானமாதி ஆகிய படைகளெல்லாம் வடிவுறுந் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான முடிவுறு சிகரந் தானும் முன்னிய முழத்திற் கொண்டு நெடிதுநாள் கூடக் கோயில் நிரம்பிட மனத்தாற் செய்தார்" என வந்திருத்தல் காணலாம்.

இங்ஙனம் அதிசயமான விதமாக மனக்கோயில் சமைத்து முடித்த நாயனாரின் மனத்திட்பத்தின் மாண்பும் கைலாசநாதர் கோயிற்பிரவேசத்தைப் பின்தள்ளிவிட்டுச் சிவபெருமான் இவர் கோயிலினுள்ளேயே முன்வந்து புகுந்தருளிய திருவருளதிசயப் பேறும் நாயனாரின் மெய்யன்புருக்கத்தின் விளைவுகளென்றே துணியப்படும். அது திருமந்திரத்தில், "ஈசன் அறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களைத் தேசுற்றறிந்து செயலற்றிருந்திடில் ஈசன்வந்தெம்மிடை ஈண்டி நின்றானே" என வருவது கொண்டும் நிறுவப்படும்.

இனி, செய்திகளின் யதார்த்தத் தன்மையை நிறுவுதற்காம் அசையாத அத்தாட்சிச் சாதனங்களைப் பெற்றுள்ள திருத்தொண்டர் புராண வரலாறுகளுள் இவ்வரலாறுமொன்றாதல் கருதத் தகும். திருநின்றவூரில் விளங்கும் புராதனமான மனக்கோயில் கொண்டார் கோயிலும் (ஹிருதயாலேஸ்வரர் கோயில்) அதிற் சுவாமி சந்நிதியிற் பூசலார் திருப்படிமம் பிரதிட்டிப்பித்துப் பூசிக்கப்பட்டு வருதலும் அக்கோயில் தூண்கள், சம்பந்தப்பட்ட காடவமன்னன் காலத் திருப்பணியெனப்படத் தக்கவகையிற் சிங்க உருக்கள் பொருந்தியவாயிருப்பதும் கோயில் மண்டபத்தில் அதே மன்னனின் உருவச்சிலையிருப்பதும் ஆகிய தன்மைகள் ஒருபுறமும், காஞ்சியிற் கைலாசமலை மாதிரியான உருவமைப்பிற் கனகச்சிதமான சிற்பாலங்காரங்களுடன் விளங்கும் கைலாசநாதர் கோயில் அதே காடவ மன்னன் அமைத்த கோயிலென்றற்கு வரலாற்றுச் சான்றும் அவன் சார்பான கல்வெட்டுக்களில், "அவன் அசரீரி கேட்டான். அவன் இக்கலியுகத்தில் அசரீரி கேட்டது வியப்பே இவன் கலியுகத்தின் வானொலி கேட்டான்" "அவன் சிறந்த சிவபக்தன்", "ஆகமப்பிரியன்" என்னுங் கீர்த்திகளும் இருத்தல் ஒருபுறமுமாகப் பூசலார் நாயனார் திருத் தொண்டுண்மைக்கு நித்திய வாழ்வளிப்பனவாம்.

சேக்கிழார் கூற்றில் சிவபெருமானால் அறிமுகப்படுத்தப்பட்ட மாத்திரத்தே காடவமன்னன் பூசலாரை வீடு தேடிச் சென்று விசாரித்துச் சிவப்பிரீதியாம்படி அவர் மனக்கோயி லமைத்த மாண்பினை மெச்சிப் போற்றி அவரைச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிச் சென்றான் என வருவதும் நாம் பூசலன்பன் கோயிலிற் புகவிருப்பதால் நாளை உன் கோயிலிற் புகுதல் இயலாதெனச் சிவபெருமான் மன்னனுக் கறிவித்ததாக வருவதும் ஆகிய இரண்டும் உலகமன்னர் சார்பிலுஞ் சிவபெருமான் சார்பிலும் மெய்யடியார் மகிமை பேணுந்திறன் எத்தகைய உயர்நிலையிலிருந்த தெனல் காட்டும். ஆயின், எங்குமுள்ளவர் என்ற சிவபெருமான் இலக்கணத்தோடு அவர் கூற்றாக மேற்கண்டுள்ளது பொருந்துமாறெங்ஙனமெனின் எங்குமுளராதல் அவர் பொதுநிலையியல்பும் பூசை பிரதிட்டைகளின் போது விசேட தரமாக எழுந்தருளும்படி அவரவர் செய்து கொள்ளும் வேண்டுதலை முன்னிட்டு அவரவர் சார்பில் வந்து புகுதல் அவர் சிறப்புநிலையியல்பும் ஆதலிற் பொருந்துமென்க.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. பூசலார் நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. pUchalAr nAyanAr purANam in English prose 
3. Poosalaar Nayanar Puranam in English Poetry 

 


Related Content

The Puranam of Poosalaar Nayanar

The History of Pusalar Nayanar

திருமுறைகளில் பூசலார் புராணம் பற்றிய குறிப்புகள்