அன்றினார் புரம் எரித்தார்க்கு
ஆலயம் எடுக்க எண்ணி
ஒன்றும் அங்கு உதவாது ஆக
உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்று என மனத்தினாலே நல்ல
ஆலயம் தான் செய்த
நின்ற ஊர்ப் பூசலார்தம்
நினைவினை உரைக்கல் உற்றார். 1
உலகினில் ஒழுக்கம் என்றும் உயர்
பெருந் தொண்டை நாட்டு
நலமிகு சிறப்பின் மிக்க நான்
மறை விளங்கும் மூதூர்
குல முதல் சீலம் என்றும்
குறைவிலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வம் மல்கி
நிகழ் திருநின்ற ஊராம். 2
அருமறை மரபு வாழ
அப்பதி வந்து சிந்தை
தரும் உணர்வான எல்லாம்
தம்பிரான் கழல்மேல் சார
வருநெறி மாறா அன்பு வளர்ந்து
எழ வளர்ந்து வாய்மைப்
பொருள் பெறு வேதநீதிக் கலை
உணர் பொலிவின் மிக்கார். 3
அடுப்பது சிவன்பால் அன்பர்க்காம்
பணி செய்தல் என்றே
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர்
கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்து
உறைவதற்கு ஓர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார் இரு
நிதி இன்மை எண்ணார். 4
மனத்தினால் கருதி எங்கும்
மாநிதி வருந்தித் தேடி
எனைத்தும் ஓர் பொருட் பேறு இன்றி
என் செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து
நிகழ்வுறு நிதியம் எல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச்
சிந்தையால் திரட்டிக் கொண்டார். 5
சாதனத் தோடு தச்சர்
தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக்கு ஆலயம் செய் நலம்
பெறு நல் நாள் கொண்டே
ஆதரித்து ஆகமத்தால் அடிநிலை
பாரித்து அன்பால்
காதலில் கங்குல் போதும்
கண்படாது எடுக்கல் உற்றார். 6
அடிமுதல் உபானம் ஆதி
ஆகிய படைகள் எல்லாம்
வடிவுறும் தொழில்கள் முற்ற
மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரம் தானும்
முன்னிய முழத்தில் கொண்டு
நெடிது நாள் கூடக் கோயில்
நிரம்பிட நினைவால் செய்தார். 7
தூபியும் நட்டு மிக்க
சுதையும் நல்வினையும் செய்து
கூவலும் அமைத்து மாடு கோயில்
சூழ் மதிலும் போக்கி
வாவியும் தொட்டு மற்றும்
வேண்டுவ வகுத்து மன்னும்
தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த
நாள் சாரு நாளில். 8
காடவர் கோமான் கச்சிக்
கற்றளி எடுத்து முற்ற
மாடெலாம் சிவனுக்கு ஆகப் பெருஞ்
செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால் அறியாதாரைத் தாபிக்கும்
அந்நாள் முன்னாள்
ஏடலர் கொன்றை வேய்ந்தார்
இரவிடைக் கனவில் எய்தி. 9
நின்றவூர்ப் பூசல் அன்பன்
நெடிதுநாள் நினைந்து செய்த
நன்று நீடு ஆலயத்து நாளை
நாம் புகுவோம் நீ இங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து
பின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில் கொண்டருளப் போந்தார். 10
தொண்டரை விளக்கத் தூயோன் அருள்
செயத் துயிலை நீங்கித்
திண்திறல் மன்னன் அந்தத்
திருப்பணி செய்தார் தம்மை
கண்டு நான் வணங்க வேண்டும்
என்று எழும் காதலோடும்
தண்டலைச் சூழல் சூழ்ந்த
நின்றவூர் வந்து சார்ந்தான். 11
அப்பதி அணைந்து பூசல் அன்பர்
இங்கு அமைத்த கோயில்
எப்புடையது என்று அங்கண்
எய்தினார் தம்மைக் கேட்கச்
செப்பிய பூசல் கோயில் செய்தது
ஒன்று இல்லை என்றார்
மெய்ப் பெரு மறையோர் எல்லாம்
வருக என்று உரைத்தான் வேந்தன். 12
பூசுரர் எல்லாம் வந்து
புரவலன் தன்னைக் காண
மாசிலாப் பூசலார் தாம் யார்
என மறையோர் எல்லாம்
ஆசில் வேதியன் இவ்வூரான் என்று
அவர் அழைக்க ஓட்டான்
ஈசனார் அன்பர் தம்பால்
எய்தினான் வெய்ய வேலான். 13
தொண்டரைச் சென்று கண்ட மன்னவன்
தொழுது நீர் இங்கு
எண் திசை யோரும் ஏத்த எடுத்த
ஆலயம் தான் யாது இங்கு
அண்டர் நாயகரைத் தாபித்து அருளும்
நாள் இன்று என்று உம்மைக்
கண்டடி பணிய வந்தேன் கண்ணுதல்
அருள் பெற்று என்றான். 14
மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர்
தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே
எம்பிரான் அருள் செய்தாரேல்
முன்வரு நிதி இலாமை
மனத்தினால் முயன்ற கோயில்
இன்னதாம் என்று சிந்தித்து எடுத்தா
வாறு எடுத்துச் சொன்னார். 15
அரசனும் அதனைக் கேட்டு அங்கு
அதிசயம் எய்தி என்னே
புரையறு சிந்தை அன்பர் பெருமை
என்று அவரைப் போற்றி
விரை செறி மாலை தாழ
நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசெறி தானை யோடு மீண்டு
தன் மூதூர் புக்கான். 16
அன்பரும் அமைத்த சிந்தை
ஆலயத்து அரனார் தம்மை
நன் பெரும் பொழுது
சாரத் தாபித்து நலத்தினோடும்
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில்
பல நாள் பேணிப்
பொன் புனை மன்றுளாடும்
பொற்கழல் நீழல் புக்கார். 17
நீண்ட செஞ் சடையினார்க்கு
நினைப்பினால் கோயில் ஆக்கி
பூண்ட அன்பிடையறாத பூசலார்
பொற்றாள் போற்றி
ஆண்டகை வளவர் கோமான்
உலகுய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவியார் தம்
பாதங்கள் பரவல் உற்றேன். 18
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - மன்னிய சீர்ச் சருக்கம் - பூசலார் நாயனார் புராணம்