logo

|

Home >

devotees >

ninra-ceer-netumaara-nayanar-puranam

நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்

 

Ninra Ceer Netumaara Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


கன்னன்மலி நெல்வேலிக் கவினார் மாறர்
    கவுரியர்கோ னமணருறு கலக்க மெல்லாம்
பொன்னெயில்சூழ் சிரபுரக்கோ னணைய மாற்றிப்
    புனிதமிகு நீறணிந்து போற்றி செய்து
மன்னுபுகழ் மங்கையருக் கரசி யாரா
    மலர்மாது மணிமார்ப மகிழ்ந்து மாற்றார்
வெந்நிடுதல் கண்டரசு புரிந்து காழி
    வேந்தரருள் சேர்ந்தபெரு விறலி னாரே.

பாண்டிநாட்டிலே, மதுராபுரியிலே, கூன்பாண்டியரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சமணர்களுடைய துர்ப்போதனையினாலே பொய்மார்க்கமாகிய ஆருகதமதத்திலே பிரவேசித்தும், சோழராஜாவுடைய புத்திரியாருஞ் சைவசிகாமணியுமாகிய மங்கையர்க்கரசியாரை மனைவியாராகவும் குலச்சிறைநாயனாரை மந்திரியாராகவும் பெற்றிருந்தமையால், சமயகுரவராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருக்கரத்தினாலே தீண்டி விபூதி சாத்தப்பட்டு, அவர் அருளிய மெய்யுபதேசத்தைப்பெற்று, கூன் நிமிர்ந்து நெடுமாறநாயனாரெனப் பெயர்பெற்றார். தம்மோடு பொர வந்த வடபுலத் தரசர்களோடு திருநெல்வேலிப் போர்க்களத்திலே யுத்தஞ்செய்து வென்று, சைவ சமயம் அபிவிருத்தியாகும்படி நெடுங்காலம் அரசியற்றிக் கொண்டிருந்து, சிவபதம் அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

 


நின்றசீர் நெடுமாற நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

நெடுமாற நாயனார் சீர் நின்ற சீர் ஆதல்

செந்தமிழுஞ் சைவமும் சிறப்புற்று வாழுமாறு சிவநெறி பேணி அரசியற்றிய பாண்டிய மன்னர் நிரலில் முதன்மை பெறுவர் நெடுமாற நாயனார். இவர், திருவாசகம் போற்றுஞ் சிவனடியாரா மளவுக்குத் தன்னைச் சிவனருளுக் காளாக்கவல்ல மாணிக்கவாசக சுவாமிகளை மந்திரியாகக் கொள்ளும் அதிர்ஷ்டப் பேறு பெற்றிருந்த அரிமர்த்தன பாண்டியனைப்போல, திருத்தொண்டர் நிரலில் இடம்பெறு மளவுக்குத் தன்னைத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் கருணைக்காளாக்கவல்ல மங்கையர்க்கரசியாரையுங் குலச்சிறையாரையும் முறையே மனைவியாகவும் மந்திரியாகவுங் கொள்ளும் அதிர்ஷ்டப் பேறு பெற்றிருந்தவர். சிவபெருமானாற் சூலை நோய் ஏவப்பெற்றுப் பின் அவராலேயே அது தீர்க்கப் பெற்றுச் சிவதொண்டிலுயர்வுற்ற திருநாவுக்கரசு நாயனார்போல, திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரால் வெப்புநோய் ஏவப்பெற்றுப் பின் அவராலேயே அது தீர்க்கப்பெற்றுச் சிவதொண்டிலுயர்ந்தவர். நாயனார் திருக்கையால் தீண்டப்பெற்றும் திருநீறு பூசப் பெற்றும் உடலுயிர்ப் பிணிகள் நீங்கி உய்யப் பெற்றதன் மூலம் நாயனார் மகிமையும் திருநீற்று மகிமையும் விளக்கமுறுதற் கிடமாயிருந்தவர். சைவத்தின் சர்வாதிபத்தியத்தன்மை வரலாற்று ரீதியாக நிலைநாட்டப்படும் மேன்மை விளைதற்கு ஏதுவாயிருந்தவர். திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய்மலர்ந்தருளிய திருப்பாசுரத்து முதற்பாடலில், "வேந்தனு மோங்குக" என ஆசீர்வதிக்கப்பெற்றவர். அத்துடன், "நெல்வேலி வென்ற நெடுமாறன்" என்ற மெய்க்கீர்த்திக்கு விளை நிலமாயுமிருந்தவர். அவ்வெற்றியும் அவரது சிவபக்தியின் பிரதிபலிப்பே என்பது, "நெல்வேலிப் போர் நெருக்கிடையில் அவர் சிவனை நினையச் சிவபெருமான் தமது சிவபூதங்களை அவர் சைனியத்திற் சேரச் செய்து வெற்றிநிகழ வைத்தார்" என்ற நெல்வேலித் தலபுராண வரலாற்றாற் பெறப்படும். அது சேக்கிழார் நாயனார் வாக்கிலுங் குறித்துணர நிற்கக் காணலாம். அது, "தீயுமிழும் படைவழங்குஞ் செருக்களத்து முருக்குமுடல் தோயுநெடுங் குருதிமடுக் குளித்துநிணந் துய்த்தாடிப் போயபரு வம்பணிகொள் பூதங்க ளேயன்றிப் பேயுமரும் பணி செய்ய உணவளித்த தெனப்பிறங்க" என்ற செய்யுளில் அமையும்.

இவ்வளவுக்குச் சிவனன்பிற் சிறந்திருந்த நெடுமாற நாயனார் சிவதொண்டுக்குரிய சகல துறைகளும் மேலோங்கத்தக்க வாறாக அரசியற்றி உய்வுற்றார். அது, "வளவர்பிரான் திருமகளார் மங்கையர்க்கரசியார் களபமணி முலைதிளைக்குந் தடமார்பிற் கவுரியனார் இளவர வெண்பிறை யணிந்தார்க் கேற்ற திருத்தொண்டெல்லாம் அளவில்புகழ் பெறவிளக்கி அருள்பெருக அரசளித்தார்" என அவர் புராணத்தில் வரும். ஆகவே, அவர் வரலாறு சார்ந்த இத்தகு மகிமைகளினால் அவர் சீர் சைவவுலகில் என்றைக்கும் நின்ற சீர் ஆதல் பெறப்படும் என்க.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. ninRachIr nedumARa nAyanAr purANam in English prose 
3. Ninra Ceer Netumaara Nayanar Puranam in English Poetry 

 


Related Content

The queen of womenfolk

இறைவனின் எளிய தன்மை

உள்ளம் கவர் கள்வன்

தென்பாண்டி நாட்டானின் பஞ்ச ஆசன தலங்கள்

தென்பாண்டி நாட்டானின் பஞ்ச பீட தலங்கள்