logo

|

Home >

devotees >

nesa-nayanar-puranam

நேச நாயனார் புராணம்

 

Nesa Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


சாலியர்கோக் காம்பீலித் தலைவர் மேன்மை
    தாவாத புகழ்நேசர் தஞ்சொ லென்றுங்
கோலியவைந் தெழுத்தோதிச் சிந்தை யுன்னிக்
    கொண்டபொரு ளன்பர்கொளக் கொடுத்து வாழ்வார்
சீலமிகுந் திருத்தொண்டர்க் குடையுங் கீளுந்
    திருந்தியவொண் கோவணமுஞ் சேர வீந்து
பாலனைய வொளிநீற்றான் பாத மேத்திப்
    பரலோக முழுதாண்ட பான்மை யாரே.

காம்பீலிநகரத்திலே, சாலியர் குலத்துக்குத் தலைவராகிய நேசநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய மனத்தின் செய்கையைப் பரமசிவனுடைய திருவடிக்கு ஆக்கி, வாக்கின் செய்கையை ஸ்ரீ பஞ்சாக்ஷரத்துக்கு ஆக்கி, கையின் செய்கையைச் சிவனடியார்களுக்கு ஆக்குவாராகி, வஸ்திரமுங் கீளுங் கோவணமும் நெய்து, தம்மிடத்தில் வருஞ் சிவனடியார்களுக்கு இடையறாது கொடுத்து நாடோறும் அவர்களை வணங்கித் துதித்துக் கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

 


நேச நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சிவனடியார்க்கு உடைகள் கோவணம் உதவுதல் சிறந்த சிவ தொண்டாதல்

சிவனடி யார்களாவார் சிவனடிமைத்திறமொன்றே கண்ணாயிருப்பதன்றித் தமது உடலுயிர் வாழ்வியல் பற்றிய ஏதொன்றையுங் கருதிப் பேணா நிலையினராவர். அது, "ஆரங் கண்டிகையாடையுங் கந்தையே பார மீசன் பணியல தொன்றிலார்" எனத் திருத்தொண்டர் புராணத்தும், "மாடுண்டு கன்றுண்டு மக்களுண் டென்று மகிழ்வதெலாங் கேடுண் டெனும்படி கேட்டுவிட்டோமினிக் கேள்மனமே ஓடுண்டு கந்தையுண் டுள்ளே எழுந்தைந்து மோதவுண்டு தோடுண்ட கண்டனடியார் நமக்குத் துணையுமுண்டே" எனப் பட்டினத்தார் பாடலினும் வருவனவற்றாற் பெறப்படும். திருவருள் விட்ட வழி, தமது இன்றியமையாத் தேவைகளாகிய உண்டி உடையாதியன எவரேனும் தாமாக வழங்கினாற் கண்டுகொள்வதே அவர்கள் நிலையாதலின் அவர்களின் அத்தேவைகளை எவருந் தாமாக நினைந்து முன்வந்துதவி அவர்களைப் பேணுதல் சிறந்த சிவ புண்ணியமாகும். இச்சிவ புண்ணியத்தாற் சிவப் பேறுற்ற அமர்நீதி நாயனார் செய்தி ஏலவே அறியப்பட்டதொன்றே.

நேசநாயனார் சாலியர் எனப்படும் நெசவுத் தொழிலாளரா யிருந்தமையின் சிவனடியார்க் குதவும் உடை கீள் கோவணம் என்பவற்றைத் தாமே நெய்து அவர்கள் மகிழக் கொடுக்கும் வாய்ப்புடையராயினார். சிவனால் அருளப்பட்டனவாகிய திரிகரணங்களுஞ் சிவன்பணிக்கே அர்ப்பணிக்கப்பட்டாக வேண்டுவன என்னும் ஞான விவேகத்தினால் அவர் தம் மனத்தொழிற் பாடெல்லாம் சிவன் திருவடிகளையே நினைதற்கும் வாக்கின் தொழிற் பாடெல்லாம் அவர் திருநாமமாகிய அஞ்செழுத்தையே ஓதுதற்கும் அர்ப்பணித்துக் கொண்டவராய்க் கையின் தொழிற்பா டெல்லாம் சிவனடியார்க்கு உடை கீள் கோவணம் நெய்வதாகக் கொண்டிருந்த அவரது பத்திமை யொழுக்க மாண்பினை அவர் புராணங் காட்டும். அது, "ஆங்கவர் மனத்தின் செய்கை யரனடிப் போதுக் காக்கி ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக் காக்கித் தாங்கு கைத் தொழிலின் செய்கை தம்பிரானடியார்க்காகப் பாங்குடை உடையுங் கீளும் பழுதில் கோவணமுஞ் செய்வார்" என வரும்.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. நேச நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. nEcha nAyanAr purANam in English prose 
3. Nesa Nayanar Puranam in English Poetry 

 


Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !