logo

|

Home >

devotees >

narasingka-munaiyaraiya-nayanar-puranam

நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

 

Narasingka Munaiyaraiya Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


நாடுபுகழ் முனைப்பாடி நாட்டுண் மேய
    நரசிங்க முனையர்புவி நயத்து மன்று
னாடுமவ ராதிரைநா ளடியார்க்கம்பொ
    னமுதளிப்பா ரொளிவெண்ணீ றணிந்துதூர்த்த
வேடமுடை யவர்க்கிரட்டிச் செம்பொ னீந்து
    விடுத்தழகா ராலயங்கள் விளங்கச் செய்து
தோடலர்தா ருடையபிரா னருளை யாளத்
    தோன்றினா ரெனையருளி னூன்றி னாரே.

திருமுனைப்பாடி நாட்டிலே, குறுநில மன்னர் குலத்திலே நரசிங்கமுனையரையநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார், அவர் தமக்குப் பெருஞ்செல்வமாவது விபூதியே என்னுஞ் சிந்தையுடையவர். சிவனடியார்களது திருவடியை அடைதலே தமக்குப் பெரும்பேறெனத் துணிந்தவர். அநித்தியமுந் துக்கமுமாகிப் அரசியற்கையில் வைத்த விருப்பத்தாலன்று, சர்வான்மாக்களுஞ் சற்சமயமாகிய சைவத்தைக் கைக்கொண்டு முத்தியின்பத்தை அடைதல் வேண்டுமென்னும் பெருங்கருணையினாலே பலசத்துரு முனைகளைக் கடந்து, சைவநெறி வாழும்படி திருவருளை முன்னிட்டு நின்று அரசாள்வார். சிவாலயங்கடோறும் நித்திய நைமித்தியங்களை ஒழுங்குபெற நடத்துவிப்பார். திருவாதிரை நஷத்திரந்தோறும், விசேஷபூசை செய்வித்து, தம்மிடத்தில் எழுந்தருளிவரும் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து, அவர்களுக்குத் தனித்தனியே நூறுபொன் கொடுப்பார்.

ஒரு திருவாதிரை நக்ஷத்திரத்திலே அப்படியே அடியார்களுக்குப் பொன் கொடுக்கும்பொழுது, தூர்த்தவேடமுள்ள ஒருவர் விபூதி அணிந்துகொண்டு வந்தார். அவருடைய வடிவு இருந்தபடியே கண்டு, பக்கத்தில் உள்ளவர்கள் இகழ்ந்து ஒதுங்க; நரசிங்கமுனையரையர் அதுகண்டு, எதிரே சென்று, அவரை அஞ்சலி செய்து, அழைத்து கொண்டு போய், அவரை மிக உபசரித்து, சீலம் இல்லாதவர்களாயினும் விபூதியை அணிந்தவர்கள் உலகத்தார் இகழ்ந்து நரகத்தில் வீழாவண்ணம் அவருக்கு இருநூறு பொன் கொடுத்து, அவரை வணங்கி, இன்சொற்சொல்லி, விடை கொடுத்து அனுப்பினார். இந்தப் பிரகாரம் அருமையாகிய திருத்தொண்டுகள் பலவற்றைச் செய்து சிவபதமடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

 


நரசிங்க முனையரைய நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

1. திருவேடமுடையாரினும் திருவேடமேபெரிதாதல்

மெய்ஞ்ஞான விளக்கிற் சிவக்காட்சி பெற்றநுபவிக்கும் மேலோர் தம்மலம் நீங்கினபின்பந் தம்மை நீங்காதிருக்கத்தகும் மலவாசனை முற்ற அகலுமாறு சிவலிங்கத்தையுஞ் சிவனடியார் திருவேடத்தையுஞ் சிவனெனவே கண்டு வழிபடும் விதியுடையராவர். அது "செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங்கழீஇ அன்பரொடு மரீஇ மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே" எனுஞ் சிவஞானபோத சூத்திரத்தாலமையும். மற்றெங்கிலும் பாலில் நெய்போல் விளங்குஞ் சிவன் இவ்வீரிடங்களில் தயிரில் நெய்போல் விளங்கும் பண்பு அவர்களுக்கு அநுகூலமாம் என்பர். அவ்வகையிற் சிவவேடத்தைச் சிவன் விலங்கும் நிலைக்களமாகக் கண்டு தொழுவோர் அவ்வேடமுடையார் பற்றிய நோக்கு அறவே அற்றிருக்கவேண்டுவதும் அவர்க்காம் ஒரு நெறிப்பாடாகும். அது, "எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறு மஞ்சனமுங் கண்டாலுள்கி உவராதே அவரவரைக் கண்ட போதிலுகந்தடிமைத்திற நினைந்தங்குணர்வே மிக்கு இவர்தேவ ரவர்தேவ ரென்று பேசியிரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" - "அங்கமெலாங் குறைந்தழுகுதொழு நோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே" என அப்பர் சுவாமிகள் தேவாரத்தும் "நலமிலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற குலமில ராகக் குலம துண்டாகத்தலம் பணிகுலச்சிறை" எனச் சம்பந்த சுவாமிகள் தேவாரத்தும் "உலகர் கொள்ளும் நலத்தினராயினும் அலகில் தீமையராயினும் அம்புலி இலகு செஞ்சடையாரடியாரெனில் தலமுறப் பணிந் தேத்துந் தகைமையார்" எனத் திருவேடத்தையே பொருளெனக் கொண்டு போற்றும் நிர்மலமான அன்பில் லயங்கொண்டிருக்கும் அன்பர்கள் மற்றெக்காரணம் பற்றியும் அந்நிலையிலிருந்து வழுவுதலிலர். அது மெய்ப்பொருள் நாயனாரால் மெய்யன்புருகப் பணியப்பெற்ற திருவேடத்தனான முத்தநாதன் தன் கைவாளெடுத்துத் தாக்கிய போதிலும், அவர்தம் உறுதி வழுவுதலின்றி, "வேடமே மெய்ப்பொருளெனத் தொழுது வீழ்ந்தார்" எனச் சேக்கிழார் நாயனார் தெரிவிப்பதனால் விளங்கும்.

மன்னர் நரசிங்கமுனையரையநாயனார் சிவனுக்கினிதாகிய திருவாதிரைத் திருநாளிற் சிவனடியார்களை வரவேற்றுபசரித்து அமுதூட்டி நிதிக்கொடையுஞ் செய்து வழிபடும் நியதியுடையராயிருந்தார். ஒருநாள் அதிற்சம்பந்தப்பட்ட திருவேடத்தார் ஒருவரில் காமக்குறித்தழும்புகள் இருக்கக்கண்டு மற்றைய திருவேடத்தார்கள் கூசியொதுங்கக் கண்டபோது நாயனார் அங்ஙனம் நோக்காது அவர்வேடம் திருவேடமே யாதலை நோக்கி அவரை விசேடதரமாக உபசரித்து நிதியும் இருமடங்கு கொடுத்து உளங்குளிரக் கலந்துரையாடி அவரைக் கௌரவமாக வழியனுப்பி வைத்தார். அது அவர் புராணத்தில், "மற்றவர்தம் வடிவிருந்த படிகண்டு மருங்குள்ளார் உற்ற விகழ்ச்சிய ராகி யொதுங்குவார் தமைக் கண்டு கொற்றவனார் எதிர்சென்று கைகுவித்துக் கொடுபோந்தப் பெற்றியினார் தமை மிகவுங் கொண்டாடிப் பேணுவார்" - "சீலமில ரேயெனினுந் திருநீறு தரித்தாரை ஞாலமிகழ்ந் தருநரகை நண்ணாம லெண்ணுவார் பாவணைந்தார் தமக்களித்த படியிரட்டிப் பொன்கொடுத்து மேலவரைத் தொழுதினிய மொழிவிளம்பி விடைகொடுத்தார்" எனவரும். இந்த நாயனார் திருவேடமே பொருளெனப் போற்றுந் தம் தொண்டுநிலைக்குத் தாம் வேறாகாது ஒன்றித்து உடனாய்நின்ற உறைப்பு நிலை விசேடமே மற்றையோர் காட்சி நிலையிலிருந்து அவர் காட்சிநிலை வேறுபட்டதற்குக் காரணம் என இத்தருணத்திற் சேக்கிழார் தரும்விளக்கமுங் குறிப்பிடத்தகும். அது அவர் வாக்கில், "விடநாக மணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்தநிலை உடனாகும் நரசிங்க முனையரையர்" என வரும்.

2. சிவவேடத்தாரை இகழும் பழிக்குப் பிறர் ஆளாகாமைக் காத்தல்

சிவக்காட்சி பெற்ற சிவஞான சீலமுடையோர் அது சைவரப் பெறாத ஏனையர் நிலைக் கிரங்குதலும் அவர் காருண்யப் பண்பின்பாற்படும். அது, "கள்ளத் தலைவர் துயர் கருதித் தங்கருணைவெள்ளத்தலைவர் மிக" என்ற திருவருட் பயனாற் பெறப்படும். திருவேடத்தின்பாற் கொண்டிருந்த பக்தி லயத்தில் திறம்பாதிருந்த நரசிங்கமுனையரையநாயனார், அந்நிலை நிற்கும் பண்பு கைவரப் பெறாமையால் குறித்த சிவவேடத்தாரை மதிக்காது கூசியொதுங்கிய மற்றையோர்பால் இரக்கமுடையவராயினார். அதனால், அத்தகைய அவமதிப்பிற் பயிலல் மூலம் அவர்கள் சிவாபராதிகளாய் நரகத்துன்ப மெய்தாவகை காப்பதும் அவர் கடனாயிற்று. ஆகவே, அவர்கள் தம்மில் தாமே உண்மையுணர்ந்து உய்தற்கு ஏற்றதொரு முன்மாதிரியாம்படி, அவர் குறித்த அத்திருவேடத்தார்க்கு விசேடவரவேற்பளித்ததும் இரட்டிப்பாக நிதி வழங்கியதும் ஆகிய செயல்களின் ஆந்தரங்கத்தன்மை உற்றுணர்ந்து கடைப்பிடிக்கத்தகும்.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. நரசிங்க முனையரைய நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. narachiNga munaiyaraiya nAyanAr purANam in English prose 
3. Narasingka Munaiyaraiya Nayanar Puranam in English Poetry 

 


Related Content