logo

|

Home >

devotees >

nakkirar-varalaru

நக்கீரர் வரலாறு

பதினொன்றாம் திருமுறையைப் பாடிய பன்னிருவரில் நக்கீரதேவ நாயனார் ஒருவர். வரலாற்றில் நக்கீரன் என்ற பெயரில் பல கவிஞர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இப்பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்துள்ள திரு முருகாற்றுப்படை சங்க நூலாகிய பத்துப் பாட்டில் முதலாவதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று குறிக்கப்பெற்றுள்ளது. நக்கீரர் என்ற பெயரில் கீரன் என்பது இயற்பெயர். நல் கீரன் என்பது நக்கீரன் என ஆயிற்று. பெரும்பற்றப்புலியூர்நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் இயற்றிய திருவிளையாடற் புராணங்களில் நக்கீரர் வரலாறு கூறப்பட்டுள்ளது.

சண்பகமாறன் என்னும் பெயரினனாகிய பாண்டிய மன்னன் தன் தேவியோடு தனித்து உலாவியபோது அவள் கூந்தலிலிருந்து தோன்றிய நறுமணத்தை நுகர்ந்து அம்மணம் பூவொடு இணைந்ததால் உண்டான செயற்கை மணமா அல்லது இயல்பான கூந்தலின் மணமா என ஐயுற்று அவ்வையத்தை வெளிப்படுத்தாது புலவர்களை அழைப்பித்து `என் மனத்திடை எழுந்ததோர் ஐயத்தைத் தெளிவிப்பார்க்கு ஆயிரம் பொன்` என அறிவித்துப் பொற்கிழியைச் சங்கமண்டபத்தே தொங்க விடச் செய்தான். பெரும் புலவர்கள் பலர் முயன்றும் அவ்வையத்தைப் போக்கிப் பொற்கிழியைப் பெற இயலவில்லை.

மதுரைத் திருக்கோயிலில் சிவபிரானை வழிபடும் பிரமசாரியாகிய தருமி என்பவர் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பிப் பெருமானிடம் தன் வறிய நிலையை எடுத் துரைத்துத் தனக்குப் பொருள் அருளுமாறு வேண்டிக் கொண்டார். ஆலவாய் இறைவன் அவரது வேண்டுகோளை நிறைவேற்றக் கருதி, `கொங்குதேர் வாழ்க்கை` என்னும் செய்யுளை இயற்றித் தந்து அதனைச் சங்கப் புலவரிடம் காட்டிப் பொற்கிழியைப் பெற்றுக் கொள்க என உரைத்தருளினார்.

அப்பாடலைப் பெற்றுக்கொண்ட தருமி சங்கப் புலவர்களிடம் காட்டினார். அவர்கள் அதனைப் படித்தறிந்து ஒன்றும் கூறாதிருத் தலைக் கண்டு அதனை வாங்கிச் சென்று பாண்டிய மன்னனிடம் காட்டினார். மன்னன் தன் மனத்தெழுந்த ஐயத்தை அகற்றிய அச் செய்யுளைப் படித்துப் பாராட்டிப் பொற்கிழியை எடுத்துச் செல்லுமாறு கூறினான். நக்கீரர் இப்பாடல் பொருட் குற்றம் உடையது எனத் தருமியைத் தடுத்து நிறுத்தி இப்பாடலைப் பாடி அனுப்பியவரையே அழைத்து வருமாறு கூறித் தருமியை அனுப்பியருளினார். இதனைத் தெரிவிக்கக் கேட்ட ஆலவாய் அவிர்சடைக் கடவுள் தானே தமிழ்ப் புலவராய் வெளிப்பட்டுத் தருமியுடன் சங்க மண்டபத்தை அடைந்து `இப்பாடலில் குற்றம் கண்டவன் யார்?` என வினவியருளினார். நக்கீரர் நானே குற்றம் கூறியவன் எனக் கூறக்கேட்ட இறைவன் பாடலில் என்ன குற்றம் கண்டீர் எனக்  கேட்க நக்கீரர் `மகளிர் கூந்தல் மலர் முதலியவற்றாலும் நறுமணம் ஊட்டுவதாலும் செயற்கையான மணம் பெறுவதேயன்றி இயற்கை யான மணம் உடையதன்று ஆதலின் இச்செய்யுள் பொருட் குற்றம் உடையது என்றார். பெருமான் உமையம்மை முதலானோர் கூந்தலுக்கும் அப்படித்தானோ? எனக் கேட்டார். நக்கீரர் தான் கூறியதையே சாதிக்கும் முறையில் அவையும் அப்படியே என்றார்.

சிவபிரான் தன்னை அடையாளம் காட்டும் குறிப்பில் தன் சடைமுடியை வெளிப்படுத்தினார். நக்கீரர் தமிழ் வல்ல என்னைச் சடைமுடி காட்டி வெருட்ட வேண்டாம் என்றார். பெருமான் சினந்து தன் நெற்றி விழியைத் திறந்தார். அவ்விழி அழலால் வெதுப்புற்ற நிலையிலும் நக்கீரர் நெற்றிவிழி காட்டினும் குற்றம் குற்றமே எனப் பிடிவாதமாகக் கூறக் கேட்ட பெருமான் அவரைத் தன் விழி வெம்மையால் வாடுமாறு செய்ய நக்கீரர் அதனைப் பொறுக்கலாற்றாதவராய்ப் பொற்றாமரைத் தடாகத்தில் வீழ்ந்தார். இறைவன் மறைந்தருளினார்.

தருமி தனக்குரிய பொற்கிழியை மன்னன் பால் பெற்றுச் சென்றான். நக்கீரர் தன் பிழை உணர்ந்து வருந்தி கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதியால் இறைவனைப் போற்ற அதனைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் அவரைக் கரையேற்றி அகத்தியரைக் கொண்டு அவருக்குத் தமிழின் நுட்பங்களை உணர்த்தச் செய்தருளினார். நக்கீரர் கோபப்பிரசாதம் பெருந்தேவபாணி திருஎழு கூற்றிருக்கை முதலிய பிரபந்தங்களால் சிவபிரானைப் போற்றிப் பரவினார்.

நக்கீரர் பாடியனவாகப் பதினொன்றாந் திருமுறையில் இடம் பெற்றுள்ள பத்துப் பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்த திரு முருகாற்றுப்படை, பத்துப்பாட்டில் முதற் பாட்டாக அமைந்து சங்ககால நூலாக விளங்குகிறது.

கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் இரண்டாம் நூற்றாண்டாகும். 
 

See Also: 
1. பதினொன்றாந் திருமுறை 
2. திருவிளையாடல் புராணம் 

Related Content

நமக்கு இசைந்தவாறு நாமும் ஏத்துவோம்

வான மதி தடவும் மந்தி

பொய்யடிமை இல்லாத புலவர் புராணம்

Arduous Path to God Made Easy by Panchakshara

திருவாலவாயுடையார்