செப்பலருந் தவமுடைய செம்மை யாளர் சிறுகாலை மலர்வாவி திகழ மூழ்கி யொப்பிறிரு நீறணிந்து நியதி யாற்றி யோவாமே யைந்தெழுத்து முரைத்து மேன்மை தப்பில்சிவா கமவிதியா லின்பா லன்பாந் தன்மையா னன்மையாந் தகையா ரென்று முப்பொழுதுந் திருமேனி தீண்ட வல்ல முறைமையார் பிறவிதெறுந் திறமை யாரே.
சிருட்டிகாலத்திலே அநாதிசைவராகிய சதாசிவமூர்த்தியுடைய சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்னும் பஞ்சவத்திரத்தினின்றுந் தோன்றிய கெளசிகர், காசிபர், பாரத்துவாசர், கெளதமர், அகத்தியர் என்னும் பஞ்சரிக்ஷி கோத்திரத்திலே ஜனித்த சிவப்பிராமணர்கள் ஆதிசைவரென்று சொல்லப்படுவார்கள். அவர்களுள்ளே சமய தீக்ஷை விசேஷ தீக்ஷை, நிருவாணதீக்ஷை ஆசாரியாபிஷேகங்களைப் பெற்றவர்களே சர்வாதிகாரிகளென்றும், உத்தமோத்தம சிவாசாரியர்களென்றும், சிவாகமங்கள் செப்பும், பரார்த்தப் பிரதிட்டை பரார்த்த பூசைகள் செய்தற்கு அவர்களே உரியவர்கள் மற்றையர்கள் உரியர்களல்லர். அதனால் அவர்களே சிவாகம விற்பன்னர்களாகிக் கிருத கிருத்தியர்களாய் முப்பொழுதினுஞ் சிவலிங்கத்தை அருச்சிப்பார்கள். ஆதலால் அவர்களே முப்பொழுதுந் திருமேனி தீண்டுவாரென்று சொல்லப்படுவார்கள்.
திருச்சிற்றம்பலம்.
பரார்த்த சிவபூசைக்குரிய சிவாலயமூர்த்தியானது விதிமுறைப்படியான மந்திர சாந்நித்திய மேற்றிப் பிராணப் பிரதிஷ்டையுஞ் செய்து ஸ்தாபிக்கப்பட்டு அடிக்கடி நிகழும் ஆகம ரீதியான ஆவாஹன ஸ்தாபனாதி கிரியைகளாலும் அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை, அர்ச்சனை, ஸ்தோத்திரம் என்ற பக்தி உபசரணைக் கிரமங்களாலும் வெறுமனே படிம மாத்திரையினன்றி ஜீவக்களை ததும்பும் சாக்ஷாத் சதாசிவமாகவே என்றென்றைக்கும் இருக்கற் பாலதாகும். அரியதில் அரியதும் தூயதில் தூயதுமாகிய அம்மூர்த்தியை அபிஷேக அலங்காரங்களின் பொருட்டுத் தீண்டுதல் சாமானிய செயல்வகையிலொன்று மன்றாம்; சாமானிய தரத்து வேதியர்க் குரியது மன்றாம். குலப்பிறப் பொழுக்கங்களோடு கூடிய பக்தி ஞானவிளக்கத்தின் மூலம் அதற்கென விசேடதகைமை பெற்ற உயர்தர அந்தணர்க்கே அஃதுரியதாம். அத்தகைமைக் குரியோர் சதாசிவ மூர்த்தியின் ஐம்முகங்களிலிருந்தும் முகத்துக் கொருவராகத் தோன்றிய கௌசிகர், காசிபர், பாரத்துவாஜர், கௌதமர், அகஸ்தியர் என்ற பஞ்ச ரிஷிகளின் கோத்திரத் தார் என்பது ஆகம சம்மதமாம். சிவசம்பந்தம் சைவம் என்பதற்கொப்பச் சிவ மூர்த்தியாகிய சதாசிவரே அநாதி சைவராக அவர்முகத்துதித்த இவரைவரும் ஆதிசைவர் எனப் பெயர் பெறுவா ராயினர். சிவவேதியர் எனும் பெயர்க்கும் உரிமையுள்ள இவர்களே தம் மரபு இடையறாது சந்ததி சந்ததியாகத் தம் வழிவழித் தொண்டென்ற அநுசரணையுடனும் ஆன்மார்த்த பூசைப் பசுமையுடனும் பரார்த்த பூசை யாகிய சிவாலய பூசை புரிதற்பாலர். அது, சுந்தரமூர்த்தி நாயனார் தந்தையாகிய ஆதிசைவர் சடையனாரை அறிமுகஞ் செய்கையில், "மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்துள் தோன்றி மிகுபுகழ்ச்சடையனார்" எனச் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளமை யானும், "சிவன் முகத்திலே செனித்த விப்பிர சைவர் இவரே அருச்சனைக் கென்றெண்" எனச் சைவசமய நெறி விதித்துள்ளமையானும் வலுவுறும். அவருள்ளும் சிவாகம விதிப்படி சமய, விசேட, நிர்வாண தீக்ஷைக்கிரமத்துடன் ஆசார்யாபிஷேகமும் பெற்றுக் கொண்டு கிரியைத் தகுதி மாத்திரமன்றிக் கிரிகைகளைப் பொருள் விளங்கிச் செய்தற்கு இன்றியமையாத ஞானவிளக்கமு முள்ளவர்களே பரார்த்த பூசைக்கு விரும்பித் தேர்ந்து கொள்ளப்படுந் தகையினராவர். பொதுவில் அந்தண ரொழுக்கங்கூறும் திருமூலர் அந்தணர் ஞான விளக்க முள்ளோராயிருக்கவேண்டுதலை வற்புறுத்தி, "நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் நூலுடை அந்தணர் காணும் நுவலிலே" எனக் குறிப்பிட்டிருத்தலும் இங்குக் கருதத்தகும். இவ்வகைத் தகுதி பெறாத ஆதிசைவராயுள்ளோர் ஆன்மார்த்த பூசைக்கு மட்டுமே தகுதியுள்ளோராவர். பிரமாவின் முகத்திலிருந்து தோன்றியோரெனப்படும் ஏனை வேதியரும் ஆன்மார்த்த பூசைத்தகுதி மட்டுமே உள்ளோராவர். அது சைவசமய நெறியில் "அயன்முகத்திற் றோன்றிய அந்தணரர்ச்சித்துப் பயனடைதற் கிட்டலிங்கம் பாங்கு எனவும் பாங்கில்லை தீண்டப் பரார்த்த மிவர் தீண்டில் தீங்குலகுக் காமென்று தேறு" எனவும் வருவனவற்றாற் பெறப்படும்.
இவ்வகை உத்தம இயல்பனைத்தும் வாய்த்தவராய்ப் பரார்த்த பூசை புரிதலைக் கடமை மாத்திரத்தானன்றித் திருத்தொண்டாகவே கொண்டு ஒரு காலைக் கொருகால் மிக்கெழும் ஆர்வத்துடனே அன்புப்பணியாக ஆற்றி இம்மையிற் சிறப்புற்றிருந்து அம்மையிலுஞ் சிவலோகத் தெய்திச் சிவசாரூப்பியப் பேறு பெற்றுச் சிறந்தவர்களே முப்போதுந் திருமேனி தீண்டுவார் என்ற திருக்கூட்டத்தடியார்களாம். அவர்கள் செயற் பண்பும் பெற்ற நற்பேறும் இப்புராணத்தில், "எப்போது மினியபிரானின்னருளா லதிகரித்து மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமல் அப்போதைக் கப்போது மார்வமிகு மன்பினராய் முப்போது மர்ச்சிப்பார் முதற் சைவராம் முனிவர்" எனவும் திருத்தொண்டர் திருவந்தாதியில், "நெறிவார் சடையாரைத் தீண்டிமுப் போதும்நீ டாகமத்தின் அறிவால் வணங்கியர்ச்சிப்பவர் நம்மையு மாண்டமரர்க் கிறையாய்முக் கண்ணு மெண்டோளும் தரித்தீறில் செல்வத்தொடும் உறைவார் சிவபெருமாற் குறைவாய உலகினிலே" எனவும் முறையே வரும்.
முக்கண்ணும் எண்டோளுந் தரித்திருத்தல் சிவ சாரூப்பியமாம்.
திருச்சிற்றம்பலம்.
See Also:
1. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் (தமிழ் மூலம்)
2. muppOthum thirumEni thInduvaar purANam in English prose
3. Muppothum Thirumeni Theenduvaar Puranam in English Poetry