logo

|

Home >

devotees >

gananaatha-nayanar-puranam

கணநாத நாயனார் புராணம்

 

Gananaatha Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


கந்தமலி வயற்காழி மறையோ ரேத்துங்
    கணநாதர் திருத்தோணிக் கடவு ளார்க்கு
நந்தவனம் பலவமைத்து மலருங் கொய்து
    நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி
வந்தவரைத் தொண்டாக்கிப் பணிகள் பூட்டி
    வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப்
புந்திமகிழ்ந் தரனருளாற்கயிலை மேவிப்
    பொருவில்கணத் தவர்காவல் பொருந்தி னாரே.

சோழமண்டலத்திலே, சீர்காழியிலே, பிராமணகுலத்திலே, கணநாதநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருத்தோணியப்பருக்கு மிகுந்த அன்பினோடு தினந்தோறுந் திருப்பணிகள் செய்பவர். தம்மை விரும்பி வந்து, அடைபவர்களை, திருநந்தனவனம் வைத்தல், பூக்கொய்தல், திருமாலைக்கட்டல், திருமஞ்சனமெடுத்தல், திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கேற்றல், திருமுறையெழுதல், திருமுறைவாசித்தல் முதலாகிய திருத்தொண்டுகளுள் அவரவர்க்கு ஏற்ற திருத்தொண்டுகளிலே பயில்வித்து, அவர்களைச் சிவனடியார்களாக்குவார். கிருகதாச்சிரமத்தில் இருந்து சிவனடியார்களை வழிபடுவார். சமய குரவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைத் தினந்தோறும் முப்பொழுதினும் பேராசையோடு விதிப்படி பூசை செய்துகொண்டு வந்தார். அந்தப் பூசாபலத்தினாலே திருக்கைலாசமலையை அடைந்து சிவகணங்களுக்கு நாதராயினார்.

திருச்சிற்றம்பலம்.

 


கணநாத நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சரியைத் தொண்டின் மகிமை பேணல்

எவரொருவர்க்கும் யதார்த்தமான சைவத்தன்மை என்பது பெற்றோர்ப்பேணல் பெரியோர்க்குக் கீழ்ப்படிதல் அறநூல்களைக் கற்றல் அறிவாசார நெறிதழுவுதல், பஞ்சமாபாதகங்களை வெறுத்தல், இயற்கையோடொத்த வாழ்வை விரும்பல், சாத்விக உணவுகொள்ளல், சைவாநுட்டானங்களைக் கடைப்பிடித்தல், தெய்வ வழிபாட்டில் விரும்பி ஈடுபடுதல் ஆகியவற்றிற் பெறும் பயிற்சியினாலேயே வந்து நிறைவுறக் கூடியதாயிருத்தல் போலச் சிவமாந்தன்மையும் உண்மையுணர்வோடு கூடிய சரியை கிரியைத் தொண்டுகளிற் பெறும் பயிற்சினாலேயே வந்து நிறைவுறுவதாகும். அது திருநாவுக்கரசு சுவாமிகள் பிரமன் மால் என்றிருவரைச் சுட்டி அருளியுள்ள "ஆப்பி நீரோ டலகு கைக்கொண்டிமலர் பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர் காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை ஒப்பிக் காணலுற்றாரங்கிருவரே" - "மரங்களேறி மலர்பறித்திட்டிலர் நிரம்பநீர் சுமந்தாட்டி நினைந்திலர் உரம்பொருந்தி ஒளிநிற வண்ணனை நிரம்பக் காணலுற் றாரங்கிருவரே" - "நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர் பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர் ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை மெய்யைக் காணலுற் றாரங் கிருவரே" என்ற தேவாரங்கள் கொண்டறியப்படும். புறக்கரணங்களான உடலுறுப்புகளைத் திருவருட் பணிகளிற் பயிற்றுதல் மூலம் அவற்றைத் திருவருள் நெறி நிற்கச் செய்து கொண்டு அவற்றின் அநுசரணையோடு உட்கரணங்களாகிய மனம் புத்தி ஆதியவற்றைச் சிவபூசையிற் பயிற்றி அவற்றையுந் திருவருள் நெறியில் நிற்கச் செய்து கொண்டு அவ்விரு பகுதியினதும் ஒருங்கொத்த அநுசரணையுடன் யோகஞான நெறிகளிற் பயிலுதலே பரிணாம ரீதியிற் சிவமாந்தன்மை கைவரப்பெறுதற் குகந்த மார்க்கமென்பது சிவாகம சைவ சாத்திர தோத்திர நூல்கள் அனைத்துக்கும் பொருத்தமான நெறியாகும். சரியை சிவமாந்தன்மை அரும்பவைப்பதாகவும் கிரியை முதலாக அடுத்து வரும் மூன்றும் முறையே மலர், காய், கனி என்ற முறையில் விருத்திபெறு வனவாகவுங் கொள்ளப்படும். அது, "விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்பு மலர் காய் கனி போலன்றோ பராபரமே" எனவருந் தாயுமான சுவாமிகள் பாடலாற் புலனாம். (புறக்கரணங்களைத் திருவருள் நெறியில் நிறுத்தல், "தலையே நீவணங்காய்" "செவிகாள் கேண்மின்களோ" "வாயே வாழ்த்து கண்டாய்" என்பன வாதியாகவும் உட்கரணங்களைத் திருவருள் நெறியில் நிறுத்தல், "நெஞ்சே நீநினையாய்" - "இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா" என்பதாதியாகவும் வரும் தேவாரங்களானும் "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே" என்பதாதியாக வருந் திருவாசகத்தானும் விளங்கும்.)

இவற்றுள் முதல்நிலையாகிய சரியையானது சிவமாந்தன்மையாகிய உன்னத மாளிகைக் கிட்டு வைக்கும் உறுதியான அத்திவாரம் எனத்தகும். சரியை நெறி இவ்வுலகில் விளக்கமுறத் தோன்றியருளிய திருநாவுக்கரசு சுவாமிகள் "நிலைபெறுமாறெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலு மெம்பிரானுடைய கோயில்புக்குப் புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்துபாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கராசயபோற்றி போற்றி என்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ என்றும் ஆரூரா என்றென்றே அலறாநில்லே" எனவும் ஞானநெறி விளக்கமுற நின்ற மாணிக்க வாசக சுவாமிகள் தாமும், "ஆமாறுன் திருவடிக்கே யகங்குழையே னன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமான் நின்திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே" எனவும் கூறுமவற்றால் அது அங்ஙனமாதல் காணலாம். கோயிற் சூழலில் தெய்விகத் தூய்மையும் தியான ஒருக்கத்திற் குகந்த சூழ்நிலையும் அமைதற்கேற்ற திருத்தொண்டுகளும் பூசைக்குரிய சாதனங்கள் தயாரித்தல் சார்பானவையும், கோயிலில் நிகழ்தற்கான இசை, பண், புராணபடனம், ஞான நூல் விசாரணை சார்பானவையும் கோயிலையணுகும் அதிதி அநாதை சிவனடியார்கள் சேவை சார்பானவையுமான திருத்தொண்டுகளும் சரியையின் பாற்படும். அது திருமந்திரத்தில், "எளியனல் தீபமிடல் மலர் கொய்தல் அளிதின் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே" எனவும் திருவாதவூரடிகள் புராணத்தில், "ஆவலாலெமக் காமலர் மரங்களாக்க லம்மலர் பறித்த லம்மலரால் தாவிலா வகை தார்பல சமைத்தல் தணப்பிலெம்புகழ் சாற்றலன்புடனாம் மேவுமாலய மலகிடல் மெழுகல் விளங்க நல்விளக்கிடுதல் நம்மடியார்க் கேவலானவை செய்தவிச் சரியை இயற்றவல்லவர்க்கெம்முல களிப்போம். "எனவும் வருவனவற்றாலறியப் படும். இவற்றுள் எதுவொன்றுங் கோயிலிற் செய்யப்படுதல் மாத்திரத்தால் மட்டுஞ் சிவப்பிரீதிக் குரியனவாய் விடுமாறில்லை, செய்பவர் தகுதியுஞ் செய்யப்படுஞ் செயற் செம்பாக முறையும் ஆகியவற்றைப் பொறுத்தே அது சிவப்பிரீதியாவதாம். அதனால், செய்பவர் சார்பில் தன்முனைப்பற்றுப் பாவனை மாத்திரத்தானாவது தான் சிவனாய் நின்று செயற்படுந் தகுதியுஞ், செயற்பாட்டின் சார்பில் சற்றேனுந் தீமை சார்ந்து விடாத்தன்மையும் மங்கல நிறைவும் மனோ ரம்மியம் விளைக்கும் மாட்சியும் இருத்தற்பாலனவாம். அது காரணமாக, அத்தொண்டி லீடுபடுவோர் சார்பில் குறைந்தபட்சம் சைவாநுஷ்டான சந்தியாவந்தனங்களையும் பயபக்தி விருப்பப் பரிமளிப்பும் செயற்பாட்டின் சார்பிற் கால நேரந் தெரிந்து செய்தல், விதி நணுக்க மறிந்து செய்தல் போன்ற நற்பண்புகளும் இன்றியமையாது வேண்டப்படும். எனவே, மற்றெல்லாத் தொழின் முறைகளுக்கும் போல இத்திருத்தொண்டு முறைக்கும் போதிய பயிற்சியிருந்தாக வேண்டும் என்பதும் அதுவும் அநுபவம் வாய்ந்த குரு ஒருவரின் கீழ் நிகழும் பயிற்சியாதல் வேண்டுமென்பதுந் தானே பெறப்படும்.

கணநாத நாயனார் இவ்வகையிற் குருவாயிருந்து சரியைத் திருத்தொண்டு பயிற்றுதலே தம் திருத்தொண்டாகக் கொண்டருளிய அருந்தொண்டராவர். "தொண்டின் நெறி தரவருவார்" எனச் சேக்கிழார் சுவாமிகளால் விதந்தோதப்பெற்ற திருஞான சம்பந்த சுவாமிகளின் ஜன்மபதியாகிய சீகாழியிலே தோன்றி அத்தொண்டு போற்றி உய்வடைந்த இவர் மகிமை போற்றத்தகும். சுவாமிகள் திருவடிகளே சிவப் பேறு பெறுதற்கு மிக இலகுசாதனமாம். அது, "முத்தன்ன வெண்ணகையார் மயன் மாற்றி முறைவழுவா தெத்தனை காலநின் றேத்து மவரினு மென்பணிந்த பித்தனை யெங்கள் பிரானை அணைவதெளிதுகண்டீர் அத்தனை ஞானசம் பந்தனைப் பாதமடைந்தவர்க்கே" எனத் திருத்தொண்டர் திருவந்தாதியில் வரும். கணநாத நாயனார் இவ்வழிபாட்டு நியமத்தோடே குறித்த திருத்தொண்டுமாற்றி முத்திப் பேரின்ப மெய்தினா ராவர். அது, அவர் புராணத்தில், "இப்பெருஞ் சிறப்பெய்திய தொண்டர்தா மேறுசீர் வளர்காழி மெய்ப்பெருந்திருஞான போனகர்கழல் மேவிய விருப்பாலே முப்பெரும் பொழுதருச்சனை வழிபாடு மூளுமன்பொடு நாளும் ஒப்பில் காதல்கூ ருளங்களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல்" என வருமதனா லறியப்படும்.

இந்த நாயனார் பயிற்றிவந்த திருத்தொண்டுகள் நந்தனவனப்பணி, மலர் கொய்தற்பணி, மாலை சமைக்கும் பணி, திருமஞ்சனத் தீர்த்தம் கொணர்ந்து கொடுக்கும் பணி, திருவலகிடும் பணி, திருமெழுக்கிடும் பணி, திருவிளக்கிடும் பணி, திருமுறை எழுதல் வாசித்தற்பணி எனச் சேக்கிழாரால் நிரல் செய்து காட்டப்பட்டுள்ளன. திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல்களுக்கும் பயிற்சி வேண்டுமாறென்னை யெனின் அது வருமாறு:

இவ்விரண்டும் நிலத்தைத் தீண்டி நிகழ்த்தும் பணிகளாதலின் சாமானியமாக நிலத்தில் ஊர்வன, நிலத்தோ டொட்டியிருப்பனவாகிய பிராணிகளுக்குத் தீங்கு நேரா வண்ணம் மிகமுன்னெச்சரிக்கையாகவும் மெத்தெனவாகவும் அவை நடைபெற வேண்டுதலானும் ஊர்வன புறப்பட்டுலாவாது தத்தம் அளைகளில் தங்கியிருக்கும் நேரமாகிய வைகறை நேரக் கூற்றைத் தெரிந்து செய்ய வேண்டுதலானும் திருமெழுக்கிடுதலிற் புள்ளிகள் விரவாமலும் மெழுக்கு ரேகைகள் ஒன்றிலொன்று தீண்டாமலும் இருந்தால் மட்டுமே மெழுக்கில் மங்கலம்பொலியு மாதலானும் இவையனைத்தும் ஏனைய தொண்டுகள் போலவே முழுத்த பக்தி விநயமான அர்ப்பண உணர்வுபூர்வமாக நிகழ்ந்தால் மட்டுமே சிவப்பிரீதியளிப்பன வாயிருக்குமாதலானும் இவற்றுக்கும் உரிய முறையிலான பயிற்சி வேண்டப்படுவதாகும்.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. கணநாத நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. gaNanAtha nAyanAr purANam in English prose 
3. Gananaatha Nayanar Puranam in English Poetry 

 


Related Content

The Puranam of Gananaatha Nayanar

The History of Gananatha Nayanar

திருவாரூர்ப் பிறந்தார்கள் புராணம்

திருமுறைகளில் கணநாத நாயனார் பற்றிய குறிப்புகள்