logo

|

Home >

devotees >

chitthathai-sivanpaale-vaitthaar-nayanar-puranam

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் நாயனார் புராணம்

 

Chitthathai Sivanpaale Vaitthaar Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


பாரணவும் புலனந்தக் கரண மொன்றும்
    படராமே நடுநாடி பயிலு நாதங்
காரணபங் கயன்முதலா மைவர் வாழ்வுங்
    கழியுநெறி வழிபடவுங் கருதி மேலைப்
பூரணமெய்ப் பரஞ்சோதிப் பொலிவு நோக்கிப்
    புணர்ந்தணைந்த சிவாநுபவ போக மேவுஞ்
சீரணவு மவரன்றோ வெம்மை யாளுஞ்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்து ளாரே.

உச்சுவாசம் நிச்சுவாசம் இரண்டையும் அடக்கி, சுழுமுனா மார்க்கத்திலே பிராணவாயுவை நிறுத்தி, விஷயங்களின் வழி மனசைப் போகவொட்டாமல் திருப்பி, ஒரு குறிப்பிலே நிறுத்தி, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை யென்னும் ஆறாதாரங்களின் அந்தர்மாதிருகாக் கிரமத்தை அறிந்து, அவ்வவ்வாதாரங்களின் அதிதேவதைகளைத் தியானித்து, அவ்வாறாதாரங்களினும் அசபாசத்தி சிவான் மிகையாய் நிற்கும் முறைமையைப் பார்த்து, மூலாதாரந் தொடங்கி விநாயகர் முதலாகிய தேவதைகளைப்பொருந்தி அபிமுகம் பண்ணிக்கொண்டு ஆறாதாரத்துக்கும் மேலாகிய பிரமரந்திரமளவும் அசபையுடன் சென்றணைந்து, அந்தப் பிரமரந்திரத்திலே அதோ முகமாய்ச் சகஸ்ரதளமாய் இருக்கிற தாமரை முகையைச் சோதி சோதிபதோச்சாரணத்தாலே உதிக்குஞ் சிவார்க்கனாலே அலரச்செய்து, அந்தத் தாமரைப் பூவின் கேசராக்கிரத்திலே உள்ள சந்திரமண்டலத்தை ஆகுஞ்சனஞ்செய்தலினாலே மூலாக்கினியை அக்கினிபீசாக்கர உச்சாரணத்தினாலே எழுப்பி, நாடிசக்கரத்தைப் பேதித்து, அவ்வக்கினியினாலே சந்திரமண்டலத்தை இளகப்பண்ணி, அந்த அமிர்தத்தைச் சர்வநாடிவழியாக நிரப்பி, அவ்விடத்தில் உண்டாகிய சுகோதயத்தில் அந்தமயமான ஞானாமிதாவத்தையை அடைந்து நின்று, சோம சூரியாக்கினிப்பிரகாசாதிகளாகிய பிரத்தியேகப் பிரகாசங்ளெல்லாஞ் சூரியோதயத்திலே நக்ஷத்திராதிப்பிரகாசங்கள் அடங்கினாற்போலத் தன்னிடத் தடங்கச் சர்வதோமுகமாய் ஸ்வய பரப்பிரகாசமாய் இருக்கின்ற பூரணப்பிரகாசத்தைப் பாவிக்கின்றவர்களே சித்தத்தைச் சிவன்பாலே வைத்தாரென்று சொல்லப்படுவார்கள்.

திருச்சிற்றம்பலம்.

 


சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சித்தஞ் சிவனோ டொன்றல் ஆதாரயோகத்தால் ஆமெனல்

ஆன்மிகப் பேற்றுக்கு இன்றியமையாத சித்த ஒருப்பாட்டுக்கு, ஓவா தலையும் மனஇயல்பும் நித்த விரோதமாயிருத்தலால் அம்மனதைக் கொண்டியக்குஞ் சாதனமாகிய பிராணனை விதிப்படி கட்டுப்படுத்தி ஆளும் நெறியொன்றுளதாகும். அது, "மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத்துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு மன்மனத்துள்ளே மனோலயமாமே" எனுந் திருமந்திரத்தா லறியப்படும். இவ்வகையான மனோலயத்தின் மூலம் மனதின் அடித்தளமாயுள்ள சித்தத்தை நேர்படுத்திச் சூக்கும உடலிற் சூக்கும மாயிருந்து பக்குவ காலத்தில் தாமரைகளாக விரிந்து கொடுக்கும் பண்பினவாகிய மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்ற ஆதாரங்களினும் படிமுறையா னேற்றி அங்கங்குள்ள அதிதெய்வங்களின் அருளாலும் அவற்றை அதிட்டித்து நிற்கும் பராசக்தி அருளாலும் சதா கீழ்நோக்கும் இயல்பினவாகிய சித்தவிருத்திகளை மேல் நோக்கி எழுப்ப அந்நிலையில் மூண்டெழுங் குண்டலியின் உபகாரத்தைப் பெற்று ஆறாவது ஆதாரமாகிய ஆஞ்ஞையையுந் தாண்டிப்போய் அதற்கப்பால் பிராசாத கலைகளில் நாதகலைக்கும் மேலுள்ள சோதி மயமான நாதாந்த கலை முடிவில் விளங்குஞ் சக்தியின் உபகாரத்தினால் அதனோடுடனாய சிவனைச் சாரும் வாய்ப்புளதாகும் என்ப. அது ஆனந்தலகரி எனும் நூலில், "மூலமணி பூரகத்தோடிலிங்க மார்பு முதுகளம்நற் புருவநடு மொழிவதாறு ஞாலமுமென் புனலுமனற் பிழம்புங் காலும் நாதமுறு பெருவெளியும் மனமுமாக மேலணுகிக் குளபதத்தைப் பின்னிட் டப்பால் மென்கமலத் தாயிரத் தோட்டருண பீடத்தாலவிடம்பருகிய தன்கொழுந ரோடும் ஆனந்தமுறும் பொருளை யடையலாமே" என வருவது கொண்டும், திருமந்திரத்தில், "நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவிலே நல்யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டமிருப்பது நாதமுடிவிலே நஞ்சுண்ட கண்டனே" என வருவது கொண்டும் இனிதறியப்படும்.

குறித்த இவ்விலக்கணப்படியே ஆதார சாதனை மூலம் வாய்க்கும் நிட்டையிற் பயின்று சித்தத்தைச் சிவன்பால் வைக்கும் அநுபவத்தின் முதிர்ந்து அதன்முடிநிலைப் பேறாக நடராஜப் பெருமான் வழியடிமைப் பேறெய்திய திருக்கூட்டத்தடியார்களே சித்தத்தைச் சிவன் பாலே வைத்தோராவர். அவர்கள் சாதனை பற்றிய சகலவிபரங்களும் உள்ளடங்க இரத்தினச் சுருக்கமாக அமையும் அவர் புராணச் செய்யுள், "காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதங்கடத்து பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தத் தாரணையாற் சிவத்தடைந்த தன்மையினார் தனிமன்றுள் ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழியடைந்தார் என வரும். ஆயின், "தாரணையாற் சிவத்தடைந்த தன்மையினார்" என இச்செய்யுள் கூறுதற்கும் "கொழுநரோடும் ஆனந்தமுறும் பொருளை யடையலாமே" என ஆனந்த லகரிச் செய்யுள் கூறுதற்கும் விரோதமுண் டன்றோ வெனின், ஆனந்தலஹரியுடையார் தம்மதம் பற்றி அங்ஙனம் சக்தியை யடைதல் எனும் பொருள்படக் கூறினாரேனும் சிவனுக்கு அபின்னா சக்தியாகிய அதனை அடைதல் என்றது சிவனையடைதல் எனவுங் கொள்ளப்படுஞ் சார்புண்மையின் விரோதம் நீக்கிக் கொள்ளப்படுதற் கியைபுண் டென்க.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. chiththaththaich chivanpAlE vaiththAr nAyanAr purANam in English prose 
3. Chitthathai Sivanpaale Vaitthaar Nayanar Puranam in English Poetry 

 


Related Content