logo

|

Home >

devotees >

arunandi-sivachariyar

அருணந்தி சிவாச்சாரியார் வரலாறு

நடுநாட்டில் திருத்துறையூர் என்னுந் திவ்ய தலத்தில் ஆதிசைவப் பிராமணர் குலத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மாமனாராகிய ஸ்ரீ சடங் கவி சிவாசாரியருடைய இருபத்தொன்றாவது பரம்பரையில் சாலி வாகன சகாப்தம் 1175-ல் (1253 ACE) சிவாகமப் பொருள் இனிது விளங்குதற்பொருட்டு ஒருவர் அவதாரஞ் செய்தார். இவர் ஆதிசைவ மரபிற்கேற்றவாறு வேதாகமங்களில் வல்ல பெரியோரால் ஜாதகர்மம், நாமகரணம் முதலியன செய்யப்பெற்று காயத்திரி மந்திரமும் உபதேசிக்கப் பெற்றனர். பின்னர் பொது நூலாகிய வேதத்தின் கன்மகாண்டம், ஞானகாண்டங்களையும் வேதாங்கமாகிய கற்பம், சிக்ஷை முதலியவற்றையுங் கற்று அதன் பின்னர் சிறப்பு நூலாகிய காமிகம் முதலிய இருபத்தெட்டுச் சிவாகமங்களின் சரியை, கிரியை, யோகம், ஞானமென்னும் நான்கு பாதப் பொருள்களையும் நன்கு கற்றனர். தமிழினும் மிக வல்லுநராய்த் தமிழ் நூல்களுங் கற்றனர். இவ்வாறு சகல ஆகமங்களினும் வல்லுநராயிருக்குஞ் சிறப்புநோக்கி இவருக்கு சகலாகம பண்டிதரென்னுந் திருநாமம் பெரியோரால் இட்டு வழங்கப்பெற்றது.

arunandi Sivachariyar

இவ்வாறு சகல கலையினும் வல்லுநராய் விளங்கும் நாளில் பொய்ச்சமயமாகிய புறச்சமய இருள் நீங்கவும் மெய்ச்சமயமாகிய சைவசமய ஒளி மேலிடவுங்கருதி சகல ஆகமங்களையும் சகடத்தின்மேல் ஏற்றிக்கொண்டு சிதம்பரம், திருவண்ணாமலை, காசி, நேபாளம் முதலிய பல இடங்களினுஞ் சென்று தருக்கமுறையில் எவருந் தன் கீழடங்க சைவஸ்தாபனஞ் செய்வாராயினர். செய்யுங்கால் தம்முடைய அருளுபதேசத்தைக் கடைப்பிடித்து சைவ நெறியில் ஒழுக விருப்பமுடையராய் வரும் பக்குவருக்கு சிவாகம விதிப்படி தீட்சைபுரிந்து அவருடைய மும்மல அழுக்கைப் போக்குவர். இவருடைய மாணாக்கர் பலருள் திருப்பெண்ணாகடத்தில் வசிக்கும் பரம்பரைச் சைவவேளாள குல திலகராகிய அச்சுத களப்பாளரும் ஒருவர், இவருக்குப் பிள்ளைப் பேறின்மையால் தம் ஆசிரியரையடை ந்து அக்குறையை விண்ணப்பஞ் செய்தனர். அதனைக் கேட்ட சகலாகம பண்டிதர் தமிழ்வேதமாகிய தேவாரத் திருமுறைபைத் திவ்ய ஆசனத்தில் எழந்தருளச்செய்து அர்ச்சனை தீப தூப ஆராதனைகள் சமர்ப்பித்து அத்திருமுறையில் கயிறு சாத்தும்படி கட்டளையிட்டனர். உத்தரவின்படி அச்சுதகளப்பாளர் திருமுறையை நமஸ்கரித்து கபிறு சாத்தினர். திருஞானசம்பந்த சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய திருவெண்காட்டுப் பதிகத்துள் "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும் வேயன தோளுமை பங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய் வினையாரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே." என்னும் திருப்பாசுரம் உதயமாயிற்று. அப்பாசுரத்தின் பொருளை சகலாகம பண்டிதர் உற்று நோக்கி மிக மகிழ்வெய்தி அச்சுதகளப்பாளரை திருவெண்காட்டில் வசிக்கும்படி உத்தரவு செய்தனர். அவர் அவ்வாறே வசித்து அங்கே உள்ள சோமசூரிய அக்கினி தீர்த்தங்களில் முழுகி சுவேதவனப் பெருமானை வணங்கி ஓர் பிள்ளையைப் பெற்றனர்.

அப்பிள்ளையார் இரண்டு வயதில் பாஞ்சோதி முனிவரால் சிவஞானபோதம் உபதேசிக்கப்பெற்று மெய்கண்டதேவர் என்னுத் தீட்சா நாமத்தையும் ஆசாரியரால் பெற்று பலருக்கும் சிவஞான போத உபதேசஞ் செய்வாராயினர். செய்துவரும் நாளில் சகலாகம பண்டிதர் அதனைக் கேள்வியுற்று தம்முடைய மாணாக்கராகிய இவர் நம்மை வந்து பார்க்கவில்லையே என்றெண்ணித் தாம் அவரைப் பார்ப்போமென்று அவரிருக்குமிடஞ் செல்ல விரும்பி அக்கருத்தை திருவெண்ணெய்நல்லூர் வாசிகளாகிய தம் மாணாக்கர்கட்குத் தெரிவித்தனர். அதனைக்கேட்ட திருவெண்ணெய் நல்லூரார் தம் குலகுருவின் வரவுக்காக மிக மகிழ்வெய்தி நகரமெங்கும் அலங்கரித்தனர். ஆகமங்கள் ஏற்றிய சகடைகளுடனும் விருதுகளுடனும் சகலாகம பண்டிதர் திருவெண்ணெய்நல்லூரை நோக்கிச் சென்றனர். நகரை அடுத்து வரும்பொழுது அங்குள்ள அனைவரும் எதிர்வந்து வணங்கி சிவாகமப்பொருளை உபதேசிப்பதற்காக திரு அவதாரஞ் செய்தருளிய எம் குருநாத! தேவரீரது நல்வரவால் நாங்கள் உய்ந்தோம்' உய்ந்தோம் என்று பலவாறு துதித்து திருவெண்ணெய்நல்லூரு க்கு அழைத்துச் சென்றனர். சென்றதும் வீதிவலம் வந்து திருக் கோயிலையடைந்து சுவாமி தரிசனஞ் செய்து திருமடம் போய்ச்சேர்ந்தனர். சேர்ந்த பின்னர் மாணாக்கர்கள் அனைவரும் வணங்கி திருவமுது செய்வித்தனர். சிவபெருமான் திருவடிக் கமலத்திற் பதிந்த சிந்தையை உடைய மெய்கண்டதேவர் தம் குலகுருவாகிய சகலாகம பண்டிதரைப் பார்க்கவில்லை. சகலாகம பண்டிதர் மெய்கண்டதேவர் வராமையை உணர்ந்து நாமே போய்ப் பார்ப்போம் என்றெண்ணி அவரிருக்குமிடஞ் சென் று உலாவிக்கொண்டு நின்றார். நிற்குங்கால் மெய்கண்டதேவர் தம் மாணாக்கருக்கு சிவஞானபோதம் பாடஞ்சொல்லிக் கொண்டிருக்கின்றார். பாடத்தில் ஆணவ மலத்தின் தன்மையைப் பற்றி ஆராயத் தொடங்குஞ் சமயமாயிருந்தது. உலாவிக்கொண்டிருந்த சகலாகம பண்டிதர் மெய்கண்ட தேவரை நோக்கி ஆணவமலத்தின் இலக்கணம் என்னையென்று வினவினர். மெய்கண்டதேவர் தம்முடைய சுட்டுவிரலால் சகலாகம பண்டிதரைச் சுட்டிக் காட்டினர். உடனே சகலாகமபண்டிதர் நானென்னும் முனைப்போடு வணங்காதிருக்கும்படி செய்ததே ஆணவமலத்தின் இலக்கணமென உணர்ந்து மெய் கண்டதேவரை வணங்கினார். வணங்கவே தம் குருமாபிற்கு முதற்குருவாகிய நந்திதேவர் திருநாமத்தையே இச்சகலாகம பண்டிதருக்குச் சூட்ட வெண்ணி அருணந்தியென தீக்ஷாநாமஞ் சூட்டி சிவஞானபோதத்தையும் உபதேசித்து மனவாசசங் கடந்தார் சிற்றம்பல நாடிகள் முதலான நாற்பத்தொன்பது மாணாக்கருள் முதல் மாணாக்கராக ஏற்றருளப் பெற்றனர்.

இவ்வாறு மெய்கண்ட தேவருடைய அருளுபதேசம் பெற்ற அருணந்தி சிவாசாரியர் திருப்பெண்ணாகடத்தில் வேதியர் குலத்தில் அவதரித்த மறைஞானசம்பந்த, சிவாசாரியாருக்கு சிவஞானபோதப் பொருளை உபதேசித்து சிவஞானபோதத்திற்கு ஓர் விருத்தியுரையாக இனிய தமிழ்ச் செய்யுளால் சிவஞான சித்தியாரென்னும் நூலும், பாச லட்சணங்களைப் பகுத்து வினாவிடையாக இருபா இருபஃது என்னும் நூலும் அருளிச் செய்தனர். இவ்வாறு உலக உபகாரமாக இருபெரும் நூல்களை அருளிச் செய்து நெடுங்காலம் சிவானந்த நிட்டையில் வீற்றிருந்து திருத்துறையூரென்னும் பதியில் புரட்டாசி மாதத்து பூர நட்சத்திரத்தில் சின்மயானந்த சிவசொரூபத்தில் இரண்டறக் கலந்தனர்.

அவதாரத் தலம் - திருத்துறையூர்  
முக்தித் தலம்     - திருத்துறையூர்  
குருபூசை நட்சத்திரம் - புரட்டாசி பூரம்

ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும் 
நீறாக முத்திநிலை நிற்போர்க்குப் – பேறாகப் 
பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே 
ஓர்விருத்தப் பாதி போதும் ’ 
- தருமையாதீன குருமுதல்வர் குருஞான சம்பந்தர் (சிவபோகசாரம்)

” பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்தமாக உண்மை 
சாதித்தார் பொன்னடியைச் சாரும்நாள் எந்நாளோ” 
- தாயுமானவர். 
 

See Also: 
1. மெய்கண்டார்  
2. சிவஞான சித்தியார்  
3. இருபா இருபஃது 

Related Content

சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்) - திருத்துறையூர் - அர

Saiva Siddhanta Lectures Sivagnanasithiyar explanation

சிவஞானசித்தியார் சுபக்கம் - Saiva Siddhanta Lectures Sivagn

சிவஞானசித்தியார் - Dr லம்போதரன்

அருணந்தி சிவாச்சாரியார் அருளிய சிவஞானசித்தியார் - சிந்தனை -