logo

|

Home >

devotees >

appoothi-adikal-nayanar-puranam

அப்பூதி அடிகள் நாயனார் புராணம்

 

Appoothi Adikal Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணமென்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே
யினமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள்பிரா
னனமார் வயற்றிங்க ளுரினில் வேதிய னப்பூதியே.

அந்தமினற் றிங்களுர் வருமப் பூதி
    யருமறையோர் திருநாவுக் கரசி னாமம்
பந்தரிடை யெழுதக்கண் டரக மெய்தப்
    பணிந்துபரி கலநேடிப் படப்பை சேர்ந்த
மைந்தனுயி ருயர்கதலி யிலைமேற் றுஞ்சும்
    வாளரவு கவரவுடன் மறைத்தல் கேட்டுச்
சிந்தைமகிழ்ந் துயர்பதிக மருந்தாற் றீர்த்துத்
    திருவமுது செயவருளைச் சேர்ந்து ளாரே.

சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகளெல்லாவற்றையும் தாங்கினவரும், கிருகஸ்தாச்சிரமத்தையுடையவரும், சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார். இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார்.

இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு பிறதலங்களையும் வணங்கும்பொருட்டு, அந்தத் திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, ஒரு தண்ணீர்ப்பந்தரை அடைந்து, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, "இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர்யாவர்" என்று வினாவ; அவர்கள் "இப்பந்தரைமாத்திரமன்று, இவ்விடத்தெங்கும் உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்களெல்லாவற்றையும் அப்பூதியடிகணாயனாரென்பவர் இத்திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரலேயே செய்தனர்" என்றார்கள். அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு, "இங்ஙனஞ் செய்தற்குக் காரணம் யாதோ" என்று நினைந்து, அவர்களை நோக்கி, "அவர் எவ்விடத்தில், இருக்கின்றவர்" என்று வினாவ; "அவர் இவ்வூரவரே இப்பொழுதுதான் வீட்டுக்குப்போகின்றார், அவ்வீடும் தூரமன்று சமீபமே" என்றார்கள். உடனே திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகணாயனாருடைய வீட்டுத்தலைக்கடைவாயிலிற் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவரும் வணங்கினார். அப்பூதிநாயனார் "சுவாமீ! தேவரீர் இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்" என்று வினாவ; திருநாவுக்கரசு நாயனார் 'நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும் அப்படியே நீர் செய்திருக்கின்ற பிறதருமங்களைக்கேட்டும்' உம்மைக் காண விரும்பி, இங்கே வந்தோம்" என்று சொல்லி, பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது வேறொருபெயரை எழுதியதற்குக் காரணம் யாது" என்று வினாவ; அப்பூதிநாயனார் "நீர் நல்லவார்த்தை அருளிச்செய்திலீர், பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கினங்களைச் சிவபத்தி வலிமையினாலே ஜயித்த பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்" என்று கோபித்து, பின்னும், பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என்போலும் அறிவிலிகளும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசுநாயனாருடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன்னீர். கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்! நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்" என்றார்.

திருநாவுக்கரசுநாயனார் அவ்வப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, "ஆருகதசமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்" என்று அருளிச்செய்தார். உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார். திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப்படைந்து கூத்தாடினார்; பாடினார்; சந்தோஷமேலீட்டினால் செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், பிறசுற்றத்தார்களுக்கும் திருநாவுக்கரசுநாயனார் எழுந்தருளிவந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, நாயனாரை வணங்கும்படி செய்து, அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார். அங்ஙனம் செய்த தீர்த்தத்தை அவர்களெல்லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, "சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார். அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது, ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது. அவர் அதை உதறிவீழ்ந்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினாலே வீழுமுன் கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடி வந்து, விஷம் முறையே ஏறித்தலைக்கொண்ட ஏழாம்வேகத்தினாலே பல்லுங் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார்கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார். அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் "ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை வீட்டுப் புறத்து முற்றத்தின் ஓர்பக்கத்திலே பாயினால் மறைத்து வைத்துவிட்டு அப்பமூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள் அப்பமூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி "நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்" என்றார். அப்பூதிநாயனார் "இப்போது அவன் இங்கே உதவான்" என்றார். அப்பமூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திருவருளினாலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றத் தோன்ற, அப்பூதிநாயனாரை நோக்கி, "அவன் என்செய்தான்? உண்மை சொல்லும்" என்றார். அப்பூதிநாயனார் அஞ்சி நடுங்குற்று, வணங்கி நின்று, நிகழ்ந்த சமாசாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக்கேட்டு, "நீர் செய்தது நன்றாயிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்" என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று சவத்தை அங்கே கொணர்வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன்மேலே திருப்பதிகம்பாடினார். உடனே அப்புத்திரர் உயிர்பெற்று எழுந்து; அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளினார். அப்பூதிநாயனாரும் மனைவியாரும் தங்கள் புத்திரா பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷியாமல், நாயனார் திருவமுதுசெய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள். அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினார்.

அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்

 


அப்பூதி அடிகள் நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

1. திருநாம மகிமை

எம்பரம பதியாகிய சிவபெருமான் அநாதி மலமுத்தராதலால் அவரது திருவுருவும் அவரது திவ்ய குணங்களுந் திருவருளேயாம். அது, சிவஞான சித்தியாரில், 'உருவருள் குணங்க ளோடு முணர்வருள் உருவிற் றோன்றுங் கருமமு மருள்அரன் தன் கரசரணாதி சாங்கந் தருமருள் உபாங்க மெல்லாந்தானருள் தனக்கொன் றின்றி அருளுரு உயிர்கட் கென்றே ஆக்கினன் அசிந்தன் அன்றே' எனவரும். இவை அருளாதல் போலச் சிவபிரான் திருநாமமும் அருளேயாம். அது திருமந்திரத்தில், 'சிவனருளாய சிவன்திருநாமம்' என வருவதனா லறியப்படும். சொல்லுக்கும் பொருளுக்கும் உளதாகிய இயையு பேதாபேதம் என்ற தத்துவஞான உண்மைப்படிக்கும் அது பொருந்துவதேயாம். திருவருளேயாதலால் அத்திருநாமத்தின் மகிமை மிகமேலாகப் போற்றப்பெறும். அது, தேவாரத்தில், 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது வேதநான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே' - 'விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வெழல் உண்ணிய புகிலவை யொன்றுமில்லையாம் பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே' - 'மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே' என்பன முதலாகவும், திருவாசகத்தில் 'நமச்சிவாய வாஅழ்க' - 'போற்றியோம் நமச்சிவாய' என்பன முதலாகவும், திருமந்திரத்தில் 'சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவருமாவர் சிவசிவ என்ன சிவகதிதானே' எனவும் வரும்.

இனி, அச்சிவனால் உலகறியத் தடுத்தாட் கொள்ளப்பட்டும் சிவம் தம்முடன் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நின்றுகொண்டிருக்கும் அந்தரங்க உண்மையைத் தமது அன்றாட நிகழ்வுகளின் மூலம் பகிரங்கப்படுத்திக்கொண்டும் சிவத்துவம் எப்படியிருக்கு மென்பதைத் தமது தெய்விகத் திருவுருவினாலே பாமரரும் அறியப் புலப்படுத்திக்கொண்டும் சிவனால் மட்டும் விளையத்தக்கனவாகிய அருளற்புதங்கள் தம்மால் விளையத்தக்க உயர்நிலை வகித்துக்கொண்டும் நாட்டுமக்கள் மத்தியில் நடமாடுஞ் சிவங்கள் என்னும்படி உலாவித் திவ்வியமான தெய்விகத் திருப்பாடற் பொழிவினாலே சைவ நிலமெங்கும் சிவானந்தத் தேன் பிலிற்றிச் சிவக்களைததும்பவைத்த நமது சமயாசாரிய சுவாமிகளும் தமது சீவகரணங்க ளெல்லாஞ் சிவகரணங்களாகப்பெற்று உள்ளும் புறமுஞ் சிவமாகவே விளங்கியோராவர். அது, திருக்களிற்றுப்படியாரில், 'பாலை நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும் காலனையன்னேவிக் கராங்கொண்ட பாலன் மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங் கரணம்போ வல்லாமை காண்' என வருவதனா லறியப்படும். இத்தகைய இச்சமயாசாரிய சுவாமிகள் உருவுந் திருவும்போல அவர்களின் திருநாமங்களுஞ் சிவன் திருநாமங்களோ டொத்த பிரபாவம் உள்ளனவேயாம்.

2. திருநாம உபாசனை

காதற் கன்னியொருத்தி தன் காதலன் பெயரைத் தான் பலகால் நினைந்து நினைந்து இனிமையுற்றும் பலகாற் சொல்லிச் சொல்லி ஆராமையுற்றும் பலகால் எழுதி எழுதி இன்புற்றும் கிளி, மைனா போன்ற தன் செல்லப்பிராணிகளின் வாயிலிருந்து அப்பெயரை வருவித்துச் செவிகுளிரக் கேட்டு ஆனந்தித்தும் வருதல் போலத் தெய்வக் காதல் வசப்பட்ட ஆன்மாவும் தன் காதலனாகிய சிவன் திருநாமத்தை இவ்விவ் வகைகளி லெல்லாம் பக்தி செய்து உபாசித்து இன்ப ரசனை கொள்ளுதல் இயல்பாகும். அது, தேவாரத்தில் 'சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே' எனவும், திருவாசகத்தில் 'ஏரா ரிளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமந் தேர்ந்துரையாய் ஆரூரன் செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் என்று சிவனெனும் நாமந் தனக்கே யுடைய செம்மேனி யெம்மான் அவனெனை யாட் கொண்டளித்திடு மாகி லவன் தனையான் பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னா ளழைத்தால் இவனெனைப் பன்னாள் அழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே' எனவும், திருமந்திரத்தில், 'சிவபெருமா னென்று நானறிந் தேத்தத் தவபெருமா னென்று தான் வந்து நின்றான்' எனவும், திருவிசைப்பாவில் 'ஏர்கொள் கற்பக மொத்திருசிலைப் புருவம் பெருந்தடங்கண்கள் மூன்றுடையோன் பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்' - 'அற்புதத்தெய்வம் இதனின்மற் றுண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின் சொற்பதத்துள்வைத் துள்ளம் அள்ளூறுந் தொண்டருக்கு' எனவும், தாயுமானவர் பாடலில் 'பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி திரியம்பகி யெழிற்புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள புட்பமிசை வீற்றிருக்கும், நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி யென்றுன் நாமமே யுச்சரித் திடுமடியர் நாமமே நானுச்சரிக்க வசமோ' எனவும் வருவனவற்றால் அறியப்படும்.

இங்ஙனம் நமது சமயாசாரிய சுவாமிகள் திருநாமங்களும் பக்தி உபாசனைக் குரியவாதல், ஆளுடையபிள்ளையார் திருவந்தாதியில், "உறவும் பொருளும் ஒண்போகமுங் கல்வியுங் கல்வியுற்ற துறவுந் துறவிப் பயனு மெனக்குச் சுழிந்த புனற்புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்புந் ததும்ப வண்டின் நறவும் பொழிலெழிற் காழியர் கோன் திருநாமங்களே" எனவும், நாலவர் நான்மணி மாலையில், "உற்றானலன் தவந் தீயினின் றானலன் ஊண்புனலா அற்றா னலன் நுகர்வுந் திருநாவுக்கரசெனுமோர் சொற்றா னெழுதியும் பேசியுமே என்றுந் துன்பில் பதம்பெற்றா னொரு நம்பி அப்பூதியென்னும் பெருந்தகையே" எனவும் வரும்.

3. அப்பூதியடிகள் உபாசனா விசேடம்

குறித்த திருநாவுக்கரசு சுவாமிகள் அகமும் புறமும் அறக்கனிந்த சிவக்கனியாகத் திகழ்ந்தவரெனவும் திருவதிகை என்ற திருத்தலத்தில் வைத்துச் சிவபெருமான் திருவாக்கினாலேயே பெயரிடப்பெற்றவ ரெனவும் சேக்கிழார் சுவாமிகளால் போற்றப்பட்டுள்ளவர். அது, "சிந்தை இடையறா அன்பும் திருமேனி தனில சைவுங் கந்தை மிகையாங் கருத்துங்கை யுழவாரப் படையும் வந்திழி கண்ணீர் மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசு மெதிர் வந்தணைய" எனவும், "தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனியுந் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயு முடையார் புகுந்தனர் வீதியுள்ளே" எனவும், "மேவுற்ற இவ்வேலையில் நீடியசீர் வீரட்டமமர்ந்த பிரானருளால் பாவுற்றலர் செந்தமிழின் சொல்வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் நாவுக்கர சென்றுலகே ழினுநின் நாமம் நயப்புற மன்னுக என் றியாவர்க்கும் வியப்புற மஞ்சுடைவா னிடையே யொர் வாய்மை எழுந்த தன்றே" எனவும் வரும் திருத்தொண்டர்புராணச் செய்யுள்களால் இனிது புலனாம். ஆளைக்காணா முன்னமே கேள்விமாத்திரத்தினால் இதே திருநாவுக்கரசுக்குத் தம்மை அர்ப்பணித்து இதே திருநாமத்தையே தமது உபாசனா மந்திரமாகக் கொள்ளுமளவுக்கமைந்த அதிதீவிர பக்குவ சாலியாகத் திகழ்கின்றார் அப்பூதியடிகளார். இவர் மகிமையன்றோ மகிமை!. சாமானியத்தில், நினைத்தல், உச்சரித்தல், செபித்தல், தியானித்தல் என்ற அளவில் அகவிருத்தி மாத்திரமாக இருக்கற் பாலதாகிய திருநாம உபாசனையானது அடிகள் விஷயத்தில் அகவிருத்திக்குப் பன்மடங்கான புறவிருத்திகளும் பெற்று அவருடைய மாடு, கன்று, மக்கள், வீடு, வீட்டுத் தளவாடங்கள், தொழில் நிலைகள், தர்மஸ்தாபனங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் அனைத்தும் அதே மயமாக விளங்கும் அளவுக்குப் பரந்து வியாபித்து விளங்குவதாயிற்று. அதன் மூலம் அவர்தம் நாளாந்த நடவடிக்கைகள் முழுவதுமே அத்திருநாமத்தை நினைத்தல், உச்சரித்தல், கேட்டல்களுடனன்றி இடம்பெறுதற் கியலாத புதுமைப் பாங்கான ஒரு புனித சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டுள்ளார். அத்துடன், குறித்த அவ்வவற்றுக்குத்தாம் எவ்வெது செய்யும் போதிலும் அவ்வதெல்லாம் திருநாவுக்கரசுவுக்கே அர்ப்பணமாம்படி செய்யும் ஒரு அரிய வாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொண்டார். இவ்வகையில் அடிகளின் பேச்சு மூச்சு அசைவாட்டம் அனைத்திலும் நீக்கமற நிறைந்து பிரகாசிக்குமளவுக்கு விசேட உபாசனை யாயிற்றுத் திருநாவுக்கரசு திருநாம உபாசனை.

4. சிவநிந்தை பொறா உணர்வு

மேற்கண்டவாறான அத்யற்புத உபாசனை செய்யும் உத்தமர் யார் என அறியும் ஆவலுடன் தாமாகவே ஒரு நாள் தம்முன் வந்துவிட்ட திருநாவுக்கரசு சுவாமிகளை இனங்கண்டு கொள்ளா நிலையிலேயே அப்பூதியார் வழிபடுகின்றார். அந்நிலையில் எழுந்த சம்பாஷணையின்போது, "உமதுபேர் எழுதாது வேறொருபேர் எழுவதேன்?" எனச் சுவாமிகள் கிளப்பிய ஆசங்கை நிலைமையை மோசமாக்கி விடுகிறது. அப்பூதியாரின் உள்ள நிலையை அவர் வாயிலாகவே அறிந்து மகிழும் ஒரு தீங்குமற்ற நன்னோக்கில் சுவாமிகள் கிளப்பிய அவ்வாசங்கை அடிகளிடத்தில் ஒரு உணர்வுப் புரட்சியை விளைத்து விடுகிறது. நமது உபாசனா மந்திரமாய் நம்மோடு ஐக்கியப்பட்டுப் போயிருக்கும் அத்திருப்பெயரை இவர் "வேறு" என அந்நியப்படுத்திக் கூறுவதா? நாம் உயர்வினும் உயர்வாக மதித்துப் பேணும் அத்திருநாமத்தைச் சாமானியத்திற் சாமானியமாக்கி அலட்சியப்போக்கான ஒரு பாணியில் "ஒருவர் பேர்" எனக் கூறுவதா? என்றாயிற்று அடிகளாரின் உணர்வுப் புரட்சிநிலை. அது, "நன்றருளிச் செய்திலீர் நாணிலமண் பதகருடன் ஒன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டினுறைப்பாலே வென்றவர்தந் திருப்பெயரோ வேறொருபேர் என வெகுள்வார்" என அப்பூதியார் வாக்காகச் சேக்கிழார் கூறுமாற்றாற் காண்க. அப்பூதியாரின் அத்தகைய நோன்மையான அன்புள்ளச் செல்வி இருந்தவாற்றில் சுவாமிகள் கூற்று அரசுகளின் மகிமையைத் தரமறியாதார் ஒருவர் எளிமைப்படுத்தி யுரைத்த ஏளனக் கூற்றாகவே பட்டிருக்கின்றது. அது அங்ஙனமாதல், "பொங்கு கடற் கன்மிதப்பிற் போந்தேறும் அவர் பெருமை அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யாருளரோ? மங்கலமாந் திருவேடத்துட னின்றிவ்வகை மொழிந்தீர். எங்குறைவீர்? யார்தாம் நீர் இயம்பும் என இயம்பினார்" என அடுத்து வரும் மறு செய்யுளால் பெறப்படும். இச்செய்யுளில் "மங்கலமாந் திருவேடத்துடன் நின்று இவ்வகை மொழிந்தீர்" என வருவதும் முன்னைய செய்யுளில் "நன்றருளிச் செய்திலீர்" என்றதும் "நீர் சிவநிந்தை செய்கிறீர்" என்னுங் குறிப்பினவாதல் அறியத்தகும். அங்ஙனேல் சுவாமிகள் சார்பில் சிவநிந்தையாகிய தீமைச்சார்பு கிஞ்சித்தும் இல்லாதிருந்த விடத்தும் அப்பூதியார் இவ்வளவுக்கு வெறுத்து மறுத்துரைத்தமை அபசாரமாகாதோ வெனின், இந்த அப்பூதியார், களவு பொய் காமங் கோபம் முதலிய குற்றங் காய்ந்தார்" எனச் சரித முகப்பிலேயே சேக்கிழாரால் அறிமுகஞ் செய்யப்பெற்ற தூயோராதலின், மற்றையோரிடத்தில் அவரவர் ஆத்மதோஷங்காரணமாக விளையுங் கோப விளைவுகள் போலாது, இவை அடிகளாரின் மெய்யன்புணர்வின் விளைவுகளாமாதலின் அங்ஙன மாகாதென்க. மேல், சுவாமிகள் தமது உண்மை நிலையைத் தெரிவித்த போது அப்பூதியார் நிலையைச் சேக்கிழார் தெரிவித்துள்ளவாறு, "கரகமலம் மிசைகுவியக் கண்ணருவி பொழிந்திழிய உரைகுழறி உடம்பெல்லாம் உரோம புளகம் பொலியத் தரையின் மிசை வீழ்ந்தவர்தஞ் சரணகமலம் பூண்டார்" ஆகவைத்தது ஏந்த ஒரு மெய்யன்பின் தொழிற்பாடோ அதே மெய்யன்பின் எதிர்முத்தொழிற்பாடே இதுவுமாதல் அறிக. இங்ஙனம் சிவநிந்தை பொறா உணர்வு மெய்யன்பர்களின் திவ்விய பண்பாதல், மறைகள் நிந்தனை, சைவ நிந்தனை பொறாமனமும் தமக்குத் தந்தருளுமாறு திருநந்தி தேவர் சிவபெருமானிடம் வரங்கேட்ட செய்தியானும் உறுதிப்படுத்தப்படுவதாகும்.

5. திருத்தொண்டே யிம்மைக்கும்

திருநாவுக்கரசு சுவாமிகள் கிளப்பிய ஆசங்கையை ஆட்சேபித்துரைக்கையில் அப்பூதியடிகள் தாம் அவர் திருநாமத்தை எங்கும் எழுதிப் போற்ற வந்ததேன் என்பதற்கு விளக்கமுந் தந்துள்ளார். அது அவர் புராணத்தில், "நம்மையுடையவ ரடிக்கீழ் நயந்த திருத்தொண்டாலே இம்மையினும் பிழைப்பதென என்போல்வார்களுந் தெளியச் செம்மைபுரி திருநாவுக்கரசு பெயர் யானெழுத வெம்மைமொழி யான்கேட்க விளம்பினீர்" என வந்திருத்தல் காணலாம். சுவாமிகள் தீயோராகிய சமணர் தமக்கிழைத்த தீங்குகளினின்று எதிர்பாராத வகையில் தப்பிப் பிழைத்தது அவருடைய திருத்தொண்டுறைப்பினாலேயே. அதன் மூலம் இம்மையினும் பிழைத்தற்குபாயம் திருத்தொண்டு நெறியே என்று என் போன்ற அறிவிலிகளும் உணர்ந்து அதைக் கடைப்பிடித்து ஒழுகுமாறு சுவாமிகள் செந்நெறி காட்டியுள்ளார் என்பது அதன் தாற்பரியமாகும்.

இலௌகிகப் பேறும் ஆத்மிகப் பேறும் ஒன்றுக் கொன்று வேறுபட்ட இருதுருவங்கள் என்றும் இலௌகிக விருத்திக்கான ஒழுகலாறு ஒன்று ஆத்மிக விருத்திக்கான ஒழுகலாறு மற்றொன்று என்றும் உள்ள விளக்கம் மனிதரிடையிற் சர்வ சாதாரணமானது. இவ்விளக்கம் விவேகமற்றது. உண்மை நிலைக்கொவ்வாதது. இலௌகிகம் தனியே நம்முயல்வால் வாய்ப்பது. ஆத்மிகத்துக்குத்தான் தெய்வ அருள்வேண்டும் என்ற தவறான கோட்பாடு இவ்விளக்கத்தின் பின்னணியிற் பதிவிருத்தல் கண்கூடு. சாஸ்திர ஞானக் கண்கொண்டு நோக்குஞ் சரியான நோக்கிற் பார்க்கும்போது, நம்முயல்வால் நாம் தேடி யடைவனவாக நமக்குப் புலப்பட்டுக்கொண்டிருக்கும் இலௌகிக அநுகூலங்களும் நம்முயிர்க்குயிரா யிருந்தியக்குஞ் சிவன் செயலாலல்லதில்லை எனல் புலப்படும். எனவே அம்மைப்பேறு போல இம்மைப்பேறும் சிவனாலல்ல தில்லை என்ற திட உணர்விற் பேதலிக்காது நின்று நம்மைச் சிவன் திருவடித்தொண்டுக்கே அர்ப்பணமாக்கி விடுவதே செயற்பாலது. அகஸ்மாத்தாக வரும் ஆபத்துக்களிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கும் அதுவே உபாயம் என்பது அப்பூதியார் திருவுளக்கிடையாகும். இது இவ்வாறாதல், காண்பவன் சிவனேயானால் அவனடிக் கன்பு செய்கை மாண்பறம் அரன் தன் பாதம் மறந்துசெய் அறங்களெல்லாம் வீண் செயல்" என வருஞ் சிவஞான சித்தியார்ச் செய்யுளானும் பெறப்படும்.

6. நித்தியா நித்திய விவேகம்

நமது இலௌகிக வாழ்க்கைக்குதவும் வண்ணம் இடையில் வந்து வந்து இடையில் விட்டுவிட்டுப் போகும் வீடு, பெண்டு, பிள்ளை, பட்டம், பதவி போல்வன எல்லாம் அநித்தியமும் உயிருள்ளதனையும் உயிரைவிட்டுப் பெயராதிருக்குஞ் சிவமும் உடனாயிருந்து என்றும் உபகரிக்குஞ் சிவத்தின் கருணைக்குப் பாத்திரமான உயிரும் அச்சிவத்தின் பிரீதியை வருவித்து முத்திப் பலனளிப்பிக்கும் ஒரேயொரு சாதனமாகிய திருத்தொண்டுமே நித்தியமுமாம். இதனை உணருமா றுணர்ந்து கடைப் பிடிக்குமாறு கடைப்பிடித்தொழுகும் விவேகம் நித்தியாநித்திய விவேகம் எனப்படும். இவ்விவேகங் கைவரப்பெற்றுள்ள திருத்தொண்டர்கள் தாம் மேற்கொள்ளுந் தொண்டினுக்கு இடையூறாக அநித்தியமான இலௌகிக விஷயமொன்று குறுக்கிடுமேல் அதன் சார்பில் தம் தொண்டு நிகழ்வைக் கைவிடக் கருதார். அதற்கெதிர் தொண்டின் மகிமையையே மேலாகக்கொண்டு, வந்த இடையூறு தம் உயிரனைய பெண்டு பிள்ளைகள் சம்பந்தப்பட்டதாயிருந்தாலும் கூட அதை முற்ற முடியப் புறக்கணித்து விட்டுத் தம் தொண்டைத் தொடர்வதில் மிக முனைப்பாயிருப்பர். அப்பூதியடிகள் திருநாவுக்கரசருக்கு மகேசுவர பூசை நடத்த முயன்றபோது வாழையிலை கொணரச் சென்ற அவர் மூத்த மகன் இலைகொணர்ந்த கையோடே இறந்து விட்டபோதும் அதற்காக மகேசுர பூசையைப் பின்போட அவர் நினைத்திலர். அதற்கெதிர் மகேசுரபூசை நிகழ்வுக் கிடைஞ்சலாகா வண்ணம் அவன் சவத்தை மறைத்தொளித்து விட்டுக் கருதியபடி மகேசுரபூசை நடத்தவே முனைந்து நின்றிருக்கின்றார். உலகமட்டத்தில் நினைக்கப்படவுந் தகாத இவ்வரும் பெருஞ்செயலில் அவர் இத்தனைத் துணிச்சலாக முனைந்து நிற்க வைத்தது நித்தியா நித்திய விவேகத்தில் அவர் பெற்றிருந்த முதிர்ச்சியே எனலாம்.

7. வாய்மை

உலகினராற் பொதுவிற் கருதப்படுவது போன்று உள்ளது கூறுதல் மட்டுமன்று; உள்ளது கூறுதல் தீங்கு பயக்குமெனக் காணின் அது கூறாமையும் வாய்மையே என்று திருவள்ளுவர் செப்பிய வாய்மை இலக்கணத்தின் வழி நின்றுள்ளார் அப்பூதியடிகளார். குறித்த மகேசுர பூசை நிகழ்வின் கண், "மூத்த மகனையுங் காட்டுமிங்கே நீறு சாத்த" எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் பணித்தபோது, "இப்பொழுது திங்கவனுதவான்" என்றாரே யன்றி அவன் இறந்திட்டான் என்றிலர் அப்பூதியார். அது வாய்மையாதல் யாங்ஙன மெனின், அடிகளுக்குக் கைவந்திருந்த நித்தியாநித்த விவேக நோக்கில் மகன் காரியமன்று மகேசுரபூசைத் தொண்டே நித்தியத் தரமுள்ள தாகலானும், மகன் இறந்தொழிந்தா னெனில் எப்படியும் அது மகேசுரபூசை நிகழவொட்டாமல் தடுத்தே விடும் என்பதனாலும், அந்நேரம் தமது உள்ளம் எதன்கண் முனைந்து நின்றதோ அதற்குத் தீங்கு வராமற் காப்பதே அவர் பேணி வருந் தொண்டு நிலைக்கேற்ற அறம் ஆகலானும் என்க. அதனாலன்றே இந்நிகழ்வினைச் சித்திரிக்கும் அதே செய்யுளில் அப்பூதியாரைச் சுட்டுஞ் சேக்கிழார் சுவாமிகள் "ஆதிநான்மறை நூல் வாய்மை அப்பூதி அடிகளார்" என்றதூஉம் என்க.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. அப்பூதி அடிகள் நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. appUdhi adikaL nAyanAr purANam in English prose 
3. Appoothi Adikal Nayanar Puranam in English Poetry 

 


Related Content